பதின்ம வயதினர்

நிர்மலா ராகவன்

உனையறிந்தால்

கேள்வி: என் மகளைச் சிறுவயதிலிருந்தே சுதந்திரமாக, அவள் விருப்பப்படியெல்லாம் நடக்கப் பழக்கிவிட்டேன். ஆனால், பதினைந்து வயதிலும் தன் விருப்பப்படிதான் நடப்பேன், நான் எதுவும் கேட்கக்கூடாது என்று பிடிவாதம் பிடிக்கிறாள். டீன் ஏஜ் பிள்ளைகளை எப்படி வழிக்குக் கொண்டுவருவது?

விளக்கம்:

பால்ய விவாகமும், தந்தையின் தொழிலையே கற்று, மகன் பரம்பரைத் தொழிலில் ஈடுபட்டபோதும், `பருவ வயது 13 – 18’ என்றெல்லாம் தனியாகப் பிரிக்கப்படவில்லை. பன்னிரண்டு வயதுக்குட்பட்டவர்கள் மட்டும் குழந்தைகளாகக் கருதப்பட்டார்கள். (ஆனால், அந்தந்த வயதுக்கு மீறிய பொறுப்புகளும் அவர்கள்மீது திணிக்கப்பட்டன).

சுமார் 65 ஆண்டுகளாகத்தான் பதின்ம வயதினர் குழந்தைகளும் இல்லை முதிர்ச்சியுற்ற பெரியவர்களும் இல்லை, இவர்கள் வேறு ஒரு பிரிவினர் என்று ஒப்புக்கொள்ளப்பட்டு, அவர்களுடைய உளவியலைப்பற்றி நிறைய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

இந்த வயதினர், `நியாயம்’, `அநியாயம்’ என்ற முறையில்தான் எந்த பிரச்னையையும் அணுகுவர். எளிதில் உணர்ச்சிவசப்படுவர். உடலிலும், மனதிலும் மாற்றம். ஆனால், இதைச் சரிவர விளக்குவார் யாருமில்லை. `இதையெல்லாமா சொல்லித் தருவார்கள்!’ என்று கூசியபடி விளக்கினால், இந்த விஷயத்தில் வேண்டாத ஆர்வம்தான் வரும். அபாயமான விளைவுகளை உண்டாக்கும் செயல்களில் ஈடுபடத் தூண்டும் துணிச்சலும் இந்தப் பருவத்தினருக்கு இயற்கையிலேயே எழுகிறது.

இதையெல்லாம் புரிந்துகொண்டு, சிறு வயதிலிருந்தே குழந்தைகளையும் ஒரு பொருட்டாக மதித்துப் பெற்றோர் நடக்க வேண்டும்.

குழந்தைகள் பள்ளியிலிருந்து திரும்பும்போது, யாராவது வீட்டில் இருக்க வேண்டுவது அவசியம். எப்போதாவது வெளியில் போகவேண்டிய அவசியம் நேர்ந்தால், அவர்களுக்கு ஒரு சிறு குறிப்பு — எங்கே போயிருக்கிறீர்கள், எப்போது திரும்புவீர்கள், சாப்பிட என்ன, எங்கே வைத்திருக்கிறீர்கள் — இப்படி. இதைப் படிக்கும்போது, பெற்றோர் தம் கூடவே இருப்பதுபோல உணர்வார்கள் குழந்தைகள்.

`என் மகள் (வயது 17) வெளியே போகும்போது, நான் கேட்காவிட்டாலும், போகுமிடத்தைத் தெரிவித்துவிட்டுத்தான் போகிறாள். அவளுடைய சிநேகிதர்களை வீட்டுக்கு அழைத்து வந்து, அறிமுகம் செய்து வைக்கிறாள்!’ என்று என்னிடம் கூறி அதிசயப்பட்டாள் என்னுடன் வேலை பார்த்த ஒரு மாது. என்னைவிட ஏழு வயது பெரியவள். இந்த தாய், மகள் சிறுமியாக இருந்தபோது, இதேபோன்ற கரிசனத்தை (நான் சீக்கிரமே திரும்பி விடுவேன், அனாவசியமாக கவலைப்படக்கூடாது), மரியாதையை அவளுக்கு வழங்கியிருக்கிறாள் என்று ஊகித்துச் சொன்னேன். தான் பெற்றதைத் திருப்பி அளிக்கிறாள் பெண். இதில் அதிசயப்பட என்ன இருக்கிறது?

பெற்றோருக்குத் தம் குழந்தைகளின் நண்பர்களைப்பற்றி ஓரளவாவது தெரிந்திருக்க வேண்டும். பண்டிகை நாட்களின்போது, நண்பர்களை வீட்டுக்கு அழைக்கச் சொல்லுங்கள். ஒரு சிலர், உங்கள் குடும்பத்தில் வழக்கமாக அனுசரிக்கப்படும் மரியாதை, தைரியம், ஒழுக்கம் போன்ற சில கொள்கைகளிலிருந்து மாறுபட்டிருக்கக்கூடும். அவர்களைப்பற்றிப் பிறகு பேசுங்கள். ஆத்திரமின்றி, நட்புணர்வோடு. நாம் கொண்டிருக்கும் அக்கறை குழந்தைகளுக்குப் புரியும்.

உதாரணமாக, ஒரு பெண் பதினைந்து வயதிலேயே கர்ப்பத்தடை மாத்திரையை எடுத்துக் கொள்கிறாள். அவளுடன் ஊர்சுற்றுவதில் ஒத்துப்போகாத தோழியை `பழைய காலம்! அம்மாவின் கட்டுப்பாட்டுக்குப் பணிந்து போகிறவள்!’ என்று பலவாறாகப் பழிக்கிறாள். திரும்பத் திரும்ப இப்படியே செய்தால், எவரையும் தன் வழிக்குக் கொண்டு வந்துவிடலாம் என்று கணக்குப் போட்டிருக்கிறாள்.

அவள் நினைத்தபடியே, பெண்ணும் அம்மாவுடன் சண்டைக்குப் போகிறாள், `என் வயதொத்த பெண்கள் எல்லாம் சுதந்திரமாக இருக்கிறார்கள். நான் சந்தோஷமா இருந்தா ஒங்களுக்குப் பொறுக்காதே! என் சிநேகிதிகளோட அம்மா இவ்வளவு மோசம் இல்லே!’ என்று.

தாய் தானும் உணர்ச்சிவசப்பட்டுக் கத்தினால், காரியம் கெட்டுவிடும். ஏன் தெரியுமா?

பதின்ம வயதுப் பையனாக இருந்தால், முன்பின் யோசியாமல், ஏதோ உணர்ச்சிவசத்தில் தப்பு செய்கிறான். வயது வந்தவர்களோ, நன்றாக யோசித்து, கொஞ்சம் கொஞ்சமாக ஒரு பெண்ணின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகி, நிறையப் புகழ்ந்து, அவளை வசப்படுத்தப் பார்ப்பார்கள்.

பதினைந்து வயதில் ஒரு பெண்ணுக்கு உடல் வளர்ந்திருக்கிற அளவுக்கு உலக விவரம் புரிவதில்லை. மனதளவில் அவள் குழந்தைதான். யாராவது, `ஒன்னைப் பாத்தா சின்னப்பொண்ணா தெரியல. என்னமா வளர்ந்திருக்கே! எவ்வளவு விஷயம் தெரிஞ்சு வெச்சிருக்கே! புத்திசாலி!’ என்றெல்லாம் புகழும்போது, மயங்கிவிடுகிறாள்.

(எத்தனை வயதானாலும், நம்மை முகத்துக்கு நேர் புகழ்கிறவர்கள் ஏதாவது ஆதாயம் எதிர்பார்த்துத்தான் அப்படிச் செய்கிறார்கள். அப்படி யாராவது புகழ்ந்தால், `நன்றி,’ என்றுவிட்டு, போய்க்கொண்டே இருக்க வேண்டும். பத்து வயதிலேயே உங்கள் குழந்தைக்கு இதைச் சொல்லிவைங்கள். அதிகம் ஏமாற மாட்டார்கள்).

இப்படி, உலகத்தின் நடப்புகளைப் பக்குவமாக எடுத்துச் சொன்னால், பெண் யோசிக்க ஆரம்பிக்கிறாள். எப்போதும் நம் நன்மையைத்தான் கோருவாள் தாய் என்ற நம்பிக்கையுடன், `ஓ! அதான் என் ஃப்ரெண்ட் என்னைப் பாத்து பொறாமைப்படுகிறாளா!’ என்று தெளிந்து, எந்தக் குழப்பத்திலும் சிக்காமல் தப்புகிறாள்.

ஆம், `சுதந்திரம்’ என்ற பெயரில் மனம்போன போக்கில் நடப்பவர்கள் எப்போதும், தன்னைக் கட்டுப்படுத்த யாருமில்லையே என்ற ஏக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

எது சரி, எது தவறு என்று விளக்க ஒரு பெண்ணோ, பிள்ளையோ தவறு செய்யும்வரை காத்திருக்க வேண்டாம். உங்களுடன் தனியாகப் பிரயாணம் செய்யும்போதோ, வீட்டு வேலைகளைப் பகிர்ந்து கொள்ளும்போதோ, பொதுவாக இந்த வயதினருக்கு ஏற்படும் மன உளைச்சல்களையும், அவைகளை எப்படித் தவிர்க்கலாம் என்பதையும் பேச்சுவாக்கில் சொல்லுங்கள்.

உதாரணமாக, சிறு வயதிலிருந்தே தாயிடம் அனுமதி கேட்டு விளையாடப் போகும் வழக்கமுடைய பெண், `இருட்டுவதற்குள் வர வேண்டும்,’ என்று தாய் சொன்னபடி நடந்திருக்கிறாள் என்று வைத்துக்கொள்வோம். பதினைந்து வயதிலும், `என் சிநேகிதி வீட்டில் ஒரு பார்ட்டி. டீன் ஏஜ் பையன்களும் வருவார்கள். நான் போகட்டுமா?’ என்று கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள்?

`எங்க காலத்திலே..,’ என்று ஆரம்பித்தால், `போர்!’ என்று முகத்தைச் சுருக்கிக் கொள்வார்கள்.
`ஆண்பிள்ளை,’ என்ற வார்த்தை காதில் விழுந்ததுமே ஏதேதோ கற்பனை செய்து, அதிலேயே பயந்து கத்தும் தாய் தன் மகளின் மதிப்பில் தாழ்ந்து விடுகிறாள்.

`வேண்டாம். அப்பா கோபிப்பார்,’ என்னும் தாயோ தன் பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறாள்.
முன்கூறியபடி விளக்கிவிட்டு, `ஒனக்கு என்மேல வருத்தம். தெரியும். இன்னும் நாலு வருஷம் போனா, நான் ஒன் நன்மைக்குத்தான் சொன்னேன்னு புரியும்!’ என்று, அவளுடைய உணர்வுக்கு ஆதரவு கொடுத்துப் பேசுங்கள். (`உங்கள் மனநிலை எனக்குப் புரிகிறது,’ என்று கூறினால், நம்மை எவ்வளவு எதிர்ப்பவரும் சற்று அடங்கிவிடுவார்).

உணர்ச்சிபூர்வமான இந்த வயதினர் தெரியாத்தனமாக ஏதாவது பிழை புரிந்துவிட்டு, ஆத்திரமும், அவமானமும் அடைவது சகஜம். தவறு செய்வது மனித இயல்பு என்று ஒவ்வொரு முறையும் பக்கபலமும், பாதுகாப்பும் அளியுங்கள். முடிந்தால், அந்த வயதில் நீங்கள் அதேபோல் எதையாவது செய்துவிட்டு, அதை மறைக்கப் பார்த்ததை நகைச்சுவையுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

எனக்குப் பிடித்த தேங்காய் துவையலை கல்லுரலில் அரைக்கச் சொன்னார்கள் என் பாட்டி. அவர்கள் புளி நிறையப் போடுவார்கள். எனக்குப் புளித்தால் பிடிக்காததால், பாதியை எடுத்து, கல்லுரலின் பின் பக்கத்தில், சுவரருகே ஒட்டிவிட்டேன், யாரும் கண்டுபிடிக்க முடியாதபடி. `புளிப்பே இல்லையே! பாதி புளியை ஒளிச்சு வெச்சுட்டியா?’ என்று பாட்டி சந்தேகப்பட்டுக் கேட்டபோது, `இல்லவே இல்லை,’ என்று சாதித்து விட்டேன்!

பொய்தான். என்ன செய்வது!
அது பாட்டிக்கும் புரிந்ததால்தானே சிரித்தார்கள்! என் வயதில் அவர்கள் என்ன தில்லுமுல்லு செய்தார்களோ!

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *