உன்னையறிந்தால் …..! (14)
நிர்மலா ராகவன்
கண்கண்ட தெய்வமா?
கேள்வி: கணவன் எவ்வளவுதான் கொடுமை செய்தாலும், இந்தக் காலத்திலும் சில பெண்கள் பொறுத்துப்போவது ஏன்?
பிறருக்கு அன்பையும், தனது சேவையையும் ஓயாது அளிப்பதே நல்ல பெண்ணுக்கு அடையாளம் என்ற போதனை சமீப காலம்வரை உலகிலுள்ள எல்லா நாடுகளிலும் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.
தமிழ் இலக்கியத்திலும் கணவனுக்குப் பணிவிடை செய்யும் பெண் கல்லையும் வேக வைப்பாள், அவள் `பெய்யெனப் பெய்யும் மழை’ என்றெல்லாம் (ஆண்கள்?) சொல்லி வைத்திருக்கிறார்களே!
இதையெல்லாம் கேட்டும், படித்துமுள்ள அம்மா, அத்தை, பெரியம்மா போன்றோர் தாம் அதைக் கடைப்பிடித்து, இளையவர்களையும் அப்படியே பழக்குகிறார்கள். சிறுமிகள் எதையும் ஆராயும் திறனின்றி, மூத்தவர்கள் சொல்வதை அப்படியே ஏற்கிறார்கள்.
காலங்கடந்து, கொடுமைக்காரரான கணவனால் புழுவுக்கும் கேவலமாக நடத்தப்படும்போது, இவர்களால் தம்மை மாற்றிக்கொள்ள முடிவதில்லை.
ஒரு நீண்ட கதை:
`என் கணவரைக் கொன்றுவிடலாமா என்று பார்க்கிறேன்!’
`என் கணவர்மேல் எனக்கு ஒரே காதல்! என்ன ஆனாலும், அவரை விவாகரத்து செய்ய மாட்டேன். கல்யாணம் என்பது எவ்வளவு புனிதமான ஒன்று!’
முன்னுக்குப்பின் முரணாகப் பேசுகிறாள் சாருமதி (உண்மைப் பெயரல்ல). படித்து, உத்தியோகம் வகித்த இப்பெண்மணி, தமிழும், ஆங்கிலமும் சரளமாகப் பேசுகிறாள். இவளுடைய ஆரோக்கியமான மனநிலை திருமணத்திற்குப்பின் கணவரது வதையால் சீர்குலைந்தது. ஓயாத அழுகை, ஆத்திரம், பயம் என்ற எதிர்மறை உணர்ச்சிகளால் அலைக்கழிக்கப்பட்டதன் விளைவாக, சிகிச்சைக்குப் போய்க்கொண்டிருக்கிறாள்.
`உங்கள் கதை பிற பெண்களுக்குப் பாடமாக இருக்கும்,’ என்று தனது கவுன்சிலர் (COUNSELLOR) கேட்டுக் கொண்டதற்கு இணங்கி, தானே என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டாள்.
`எங்க பெற்றோருடையது பெயர் வாய்ந்த குடும்பம்!’ என்று அடிக்கடி கூறிக்கொண்டாள், தனது புதிரான செய்கைக்கு நியாயம் கற்பிப்பதுபோல்.
சாருமதியின் பிரச்னைதான் என்ன?
தனக்கென ஒரு குடும்பம், குழந்தைகள் என்று பலகாலம் ஏங்கி நின்று, தனது நாற்பத்து நாலாவது வயதில் வருங்காலக் கணவரைச் சந்தித்து இருக்கிறாள்.
கதிர்வேலு முதல் மனைவியால் விவாகரத்து செய்யப்பட்டவர். பத்து வயதில் ஒரு மகள்.
`ஏன் உங்களை விட்டுப் போய்விட்டாள் அந்த மனைவி?’ என்ற சாருமதியின் கேள்விக்கு அவர் பதில்கூறாது மழுப்பினாலும், அவள் மேற்படிப்பு படிக்க விரும்பியதை ஒப்பாது, அடித்துப் புரட்டியதாக அறிந்தாள். அதனால் அவள் மனம் தளரவில்லை.`கல்யாணம் என்று ஒன்று ஆனால் போதும்,’ என்ற நிலைக்கு வந்திருந்தாள் சாருமதி.
`நான் ஆதர்ச மனைவியாக, அவருக்கு விட்டுக் கொடுத்துக்கொண்டு இருந்தால், எங்களுக்குள் ஏன் பூசல் வரப்போகிறது?’ என்ற அசட்டு நம்பிக்கையுடன் கதிர்வேலுவின் கரம்பிடித்தாள்.
ஐந்து வருடங்களுக்குப் பிறகு, `கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் என்ற என் ஆர்வத்தை அவ்வளவு வெளிப்படையாகக் காட்டிக் கொண்டிருக்கக் கூடாதோ?’ என்ற சந்தேகம் எழுந்தது.
ஏன் தெரியுமா?
அன்பும், கனிவுமாக இருந்த காதலர் கணவனானதும் மாறிப்போனார். திருமணமாகி ஒரே வாரத்தில் தன் குரூர விளையாட்டுக்களை ஆரம்பித்தார். எடுத்ததற்கெல்லாம் அடி, உதை. கண்ட கண்ட படங்களைப் பார்த்துவிட்டு, ஒவ்வொரு இரவும் கட்டாய உடலுறவு. முடிந்தவுடனே மனைவியைப் படுக்கையின் கீழே தள்ளி, அடித்து உதைப்பாரென்று சாருமதி விவரித்துக்கொண்டே போக, எனக்கு மூச்சு நின்றுவிடும் போலிருந்தது.
ஒரு நல்ல மனைவிக்கு அடையாளம் கணவனுக்குக் கீழ்ப்படிதல் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை சாருமதிக்கு. ஆனால், மனைவியின் மிரட்சியில் இன்பம் காணும் கணவரை `கண்கண்ட தெய்வம்’ என்று ஏற்றுக்கொள்வதில் புத்திசாலித்தனமோ, நற்பண்போ எங்கே இருக்கிறது?
`நீங்கள் என்ன செய்தாலும், உங்களை விட்டுப்போக மாட்டேன்!’ என்பாளாம் கணவனிடம். அனுதினமும் கணவன் தன்னை நாடுவதில் பெருமை வேறு! அணைப்பவர் அடிப்பதால் என்ன மோசம் என்று எண்ணினாலும், உடலும், மனமும் ஒருங்கே சோர்ந்தன.
முதல் தாரம் தன்னை வெறுத்து ஒதுக்கிவிட்டாளே என்று எல்லாப் பெண்களின்மேலும் ஆத்திரமாக இருந்திருக்க வேண்டும் கதிர்வேலுவுக்கு. ஒரே மகளும் தாயுடன் தங்கவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டதில், எல்லா ஆத்திரமும் அப்பாவியான சாருமதியின்மேல் திரும்பியது.
மகளும் தந்தைபோலவே இருந்தாள். தந்தையின் வீட்டுக்கு வந்து தங்கியபோது, மாற்றாந்தாய் தன்னை மாடியிலிருந்து உருட்டி விட்டுவிட்டாள் என்று அபாண்டமாகக் கூறினாள். எதற்கும் வன்முறையையே கையாண்ட கதிர்வேலுவுக்கு இப்படி ஒரு நல்ல சாக்கு கிடைத்தால் விடுவாரா? மனைவியை மேலும் துன்புறுத்தினார்.
அவளோ, `கடவுளே, என்னை விதவையாக்கி, நிம்மதி கொடேன் என்று தினமும் வேண்டிக்கொள்கிறேன். இல்லாவிட்டால், நான் சாக வேண்டும்,’ என்கிறாள் விரக்தியின் உச்சத்தில். உடனே, `கடவுள் இருக்கிறார்! எல்லாருக்கும் நியாயம் வழங்குவார்!’ என்று தத்துவம் பேசி, தன்னைத்தானே சமாதானம் செய்துகொள்கிறாள்.
விவாகரத்து?
`அப்படிச் செய்தால், பெற்றோருக்குத் தலைகுனிவாகிவிடும், ஆகவே கூடாது,’ என்கிறாள். அவளுடைய உறவினர்கள், `முட்டாள்’ என்று பழிக்கிறார்களாம், அவளுடைய இயலாமையை எள்ளி நகைத்து. நியாயம்தானே?
நடந்ததில் கணவர் மட்டுமா பொறுப்பு? என்ன அக்கிரமம் இழைத்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் வளைந்து கொடுத்த சாருமதிக்கும் பங்கு கிடையாதா. என்ன!
தான் வீட்டிலும், அலுவலகத்திலும் எல்லாருடனும் கலகலப்பாகப் பேசி, அனுசரித்து நடந்துகொள்பவள் என்று பெருமையாகச் சொல்லிக் கொண்டவளின்மேல் எனக்குப் பரிதாபம் எழவில்லை.
`நீங்கள் முதலிலேயே எதிர்த்திருந்தால், இப்படி வருடக்கணக்கில் வதையைத் தாங்கிக்கொள்ள நேர்ந்திருக்குமா?’ என்று கேட்டேன்.
`நான் எதிர்த்துக் கேட்டால், இன்னும் மூர்க்கமாக ஆகிவிடுகிறாரே!’ என்று பதிலளித்தாள், அச்சத்துடன்.
ஆகாத காரியமாகப் பேசுகிறாள்: `யாராவது மூன்றாம் மனிதர் எங்களிருவருடன் உட்கார்ந்து பேசி, நியாயத்தைப் போதித்தால், நான் எவ்வளவு நல்ல மனைவி என்று என் கணவர் உணர்வாரோ!’
சொன்னதையே திரும்பத் திரும்பச் சொன்னாள். ஆனால், தன் வாழ்வில் ஒரு நல்லவிதமான மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ளும் துணிவில்லை. நடந்ததில் தனது தப்பும் இருக்கிறது என்று ஒப்புக்கொள்ளவும் சாருமதியின் தன்மானம் இடங்கொடுக்கவில்லை.
படித்திருந்து என்ன பயன், தன் வாழ்வில் உள்ள சீர்கேட்டை முனைந்து சீர்படுத்திக்கொள்ளாவிட்டால்?
சமூகம் என்ன சொல்லும், பெண்ணின் குணநலன் என்றெல்லாம் சாக்குபோக்குச் சொல்லி எந்த இன்னலையும் பெருமையுடன் தாங்குபவளிடம் என்ன சொல்வது!
`உங்களைப்போன்ற பெண்களுக்கு யாராலும் உதவ முடியாது,’ என்றேன் மனம் வெறுத்துப்போய்..
தானும் ஒரு மனிதப்பிறவி, நிம்மதியும், அமைதியும் நிறைந்த வாழ்வை நாட தனக்கும் உரிமை இருக்கிறது என்று ஒவ்வொரு பெண்ணும் நம்பி, அதன்படி நடந்துகொண்டாலே ஒழிய, கதிர்வேலுக்களை ஒழிக்க முடியாது.
தொடருவோம்