படக்கவிதைப் போட்டி – 22
பவள சங்கரி
அன்பிற்கினிய நண்பர்களே!
வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?
திரு ரவிச்சந்திரன் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (25.07.2015) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.
புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்த மேகலா இராமமூர்த்தி கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009 ம் ஆண்டுகளில் (ஆர்லாண்டோ & அட்லாண்டா) கவியரங்கம், இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். புறநானூறு, குறுந்தொகைப் பாடல்களில் அதிக நாட்டமும், இலக்கியக் கூட்டங்களில் சுவைபட பேசுவதிலும் வல்லமை பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்
ஆயிரத்தில் ஒரு சேய்
சி. ஜெயபாரதன்
கருச்சிதைவு ஆயிரத்தில் தப்பிய
ஒரு வளர்மதி !
தேன் இனிக்குமா
பால் சுவைக்குமா
சேய் இல்லாத இல்லத்திலே ?
யாழிசை கேட்குமா
புல்லாங் குழலிசை தொனிக்குமா
தவழும் சிசு
இல்லாத வீட்டிலே ?
கோடிப் பணம் இருந்தாலும்
ஓடி விளையாடும்
சேயின்றேல்
வீடு பாலையாய்ப் போகும்மா !
பிறவிப் பயனே
பிறந்த பிள்ளை ஒன்று
தொட்டிலில் அழுவ தம்மா !
பரிசு பெற்றுக்
கிரீடம் அணிந்த
பிரபஞ்சப்
பேரழகியோ, இல்லை
பாரத நாட்டு இளம்
ஊர்வசியோ
சேயொன்று இல்லையேல்
தாய்மை இழந்த
பேயாவாள் !.
++++++++++++++
இவள் மழை
இவள் மழைக்குள்
எனக்கான
குடையை ஒருபோதும்
நான் விரிப்பதில்லை…
இவள் புன்னைகைக்கும்
பொழுதெல்லாம்
புகைப்படம் சுமக்கும் காலத்தின்
இதழில் பால் வாசம்…
இவள் கைகள் விரிக்கும்
அளவுக்குத்தான் வானம்
என்பதில் நான் பறவை
ஆகிறேன்…
மார்பில் ஊரும் தென்றலின்
சாயலில் தெவிட்டாத
வண்ணம் சுமக்கும்
இவள் சிணுங்கல்….
உச்சி முத்தம் பேசும்
நினைவில்
குயில் தேசம் இவள் மடியில்….
சட்டையில்லாத சூட்டுக்குள்
சக்கர பாதம்
இவள் நினைவு…
சர்க்கரை கசக்கும்
என்பதே இவள்
விரல் தொடா இனிப்பின் புனைவு….
ஒரே நேரத்தில் அப்பாவின்
மனதில் அம்மாவையும்
சேர்க்கும் சேயின் தழுவலில்
மீண்டும் நான் குழந்தை ஆகிறேன்….
கவிஜி
கண்களில் விரியும் பெருவியப்பைக்
கைவிரல் ஒன்றே காட்டிவிடும
மண்தல மீதிற் தான்பிறந்த
மாபெரும பிறப்பின் பொருளுணர
தன்மனம் எண்ணும் தனித்துவமாய்
தாங்கிடும் தந்தை தோளினிலே
கொண்டிடும் கேள்விக் கென்னபதில்?
குழந்தைக்கு இங்கே யாதுரைப்பேன்!
வருந்தலை முறைக்கே நாம்செயும்
கெடுதலை எவ்வா றிங்குரைப்பேன்.
உயிர்வளித் தூய்மை காத்தோமா…
உணவினில் இயற்கை சேர்த்தோமா…
பயிர்வளர் முறையைப் பார்த்தோமா…
பரவிடும் வெப்பம் தீர்த்தோமா….
வருந்தலை முறைக்கு என்னசெய்தோம்
வளந்தரும் பூமியைக் கொடுத்தோமா…..
மானிடம் வளர்க்கப் பேசிடுவோம்
மரங்களை வளர்க்க முயன்றோமா….
பேரிடர் தீர்க்கப் புறப்படுவோம்
பெரும்சூழல் காக்க முயன்றோமா…
தேனெனப் பேசச் சொல்லிடுவோம்
சிட்டுக்குருவியையேனும் காத்தோமா….
வானிலும் ஓசோன் திரைகிழித்தோம்
வாயுவின் பிராணன் நாம்தொலைத்தோம்
ஞெகிழிப் பையால் தரைபுதைத்து
மண்வளம் தகர்த்து மலடாக்கி
துகிலுரிந்த பெண்மையைப்போல
தூய்மையொழித்து வன்புணர்ந்தோம்
நெகிழும் நெஞ்சின் அன்பினையும்
நேசம் காட்டும் உறவினையும
சிறிதும் கற்றுக் கொடுத்தோமா….
செய்யும் பணத்தின் பின்தொலைந்தோம்.
வருந்தலை முறைக்கே என்னசெய்தோம்
வளந்தரும் பூமியைக் கொடுத்தோமா…..
சிந்தனை செய்வீர் விடைகாண்பீர்
சிசுவாய் கேள்வி சிலகேட்டேன்
தந்தையர் பூமிஎனும்வண்ணம்
தாங்குக புவியைப் பேணிடுக.
மந்திரச் சொல்லாய்க கொண்டிடுக…
மழலையின் கேள்விக்கு விடையாக
எந்திர வாழ்க்கை வாழாதீர்
இனியொரு பூமிக்கு எங்குசெல்வோம்!
இளவல் ஹரிஹரன், மதுரை
98416 13494
சோன்பப்டி கருப்பு தாடி அப்பா
சோம்பி என்னை தூக்கலை!
மழலை சோக கீதம் வாசிச்சு
ஜோரா காருல ஏறி
நானும் வல்லமைக்கு வந்தேனே!
டோநட் பன் கேட்டா
பாட்டி சுட்ட சீனி வடை
சீக்கிரமா கிடைக்குது!
குத்தி திங்க முள்கரண்டி கேட்டாலோ
பாட்டி விரல்கள் பாய்ந்து
வாய்க்குள் திணிக்குது!
ஃப்ரெஞ்ச் ஃப்ரை ஃபிங்கரோ
உருவம் மாறி சீவலாக நிக்குது!
அப்பா போட்ட கூலிங்கண்ணாடி
எனக்கு மட்டும் இல்லையாம்!
முள்ளுதாடி குத்திக்கூட
முகம்கூட வலிக்கலை!
தாடி வச்ச அப்பாகூட
ஓடி விளையாட முடியலை!
முள்ளுதாடியோட பிள்ளையின்னு
சில்ரன் டீசிங் நடக்குது!
எனக்கிருக்கும் பிரச்னையெல்லாம்
யாருக்கிங்கே புரியுது!
சோன்பப்டி விலைகூட
எக்குதப்பா இருக்குன்னு
ஏங்கி நானும் நிக்கையிலே
அப்பா தாடி எனக்கு வந்து
குடுமி வச்ச புலவராக
பிள்ளைத்தமிழ் பாடினால்
சோன்பப்டி பரிசில்
எந்த ராஜா தருவாரு!
சப்பாணிப் பருவம் நான் பாட
அம்புலிப் பருவம் போட்டிக்கு
யாரிங்கே வருவது?
யோசனையா இருக்கு டாடி
ஒரே யோசனையா இருக்கு டாடி ..!
இந்த ஊரும் மாறிப் போச்சு
மக்கள் பேச்சும் மாறிப் போச்சு ..!
கண்ட காட்சி யாவும்
தாறுமாறா திரும்பிப் போச்சு..!
அதேஇடம் அந்த இடம் என்
நெஞ்சுக்குள்ளே நிக்குமிடம்..!
சுத்து மட்டும் பார்த்தும் கூட
தொலைஞ்சு போச்சே சந்தைமடம்..!
காலச் சுழற்சி பெருஞ்சுழற்சி
கண்டுபிடிக்கத் தனிப் பயிற்சி…!
தேடித் தேடி பார்க்கும் போதே
கண்கள் களைத்து போகுதடி..!
நடந்த இடம் வாழ்ந்த இடம்
உசந்து நிக்குது கட்டிடமா..!
நட்டவிதை தொட்டச்செடி
நிமிர்ந்து நிக்குது வேப்பமரம்…!
உலகம் ரொம்பவும் மாறிபோச்சே
உசந்ததெல்லாம் போயே போச்சா?
உன்னைச் சுமந்த வயிறு தான்
உன்னையே சுற்றிய மனமும் தான்
ஆத்ம சுழற்சி விளையாட்டில்
உனக்கே மகளென மீண்டவள் ..!
உன்னைப் பார்த்த சந்தோஷம்
உன் தோளில் சாய்ந்தால் உல்லாசம்…!
என்னைச் சுமக்கும் வரமிதையும்
உனக்கே தந்தான் எனக்காக..!
காலன் போடும் கணக்கையும் அந்தக்
காலம் போடும் கணக்கையும்
பொய்யாக்கி ஏமாற்றி மாறாமல்
அன்பு மட்டும் வாழுதே..
ஓ…அதுவா பூமி சுற்றலில்
மட்டும் மாற்றமில்லை…!
ஜெயஸ்ரீ ஷங்கர்
கள்ளமறியா கிள்ளை உந்தன்
வெள்ளந்தி முகம் தனில்
தொக்கி நிற்கும் தேடல்
எதை எதிர் பார்க்கிறதோ ?
ஓய்வென்பதையே எண்ணாது
சுழலும் உலகில்
எதைக் கண்டுனக்கு
இத்தனை யோசனை ?
நாடியில் பிஞ்சு விரல்
தாளம் போட
மனதில் அலைமோதும்
எண்ணங்கள் என்னென்னவோ ?
ஆச்சர்யமும் ஆர்வமும்
விரிந்திருக்கும் விழிகளில்
விரவிக் கிடக்க – வார்த்தை
உதிர்க்க உதடு துடிக்கிறதோ ?
சிப்பியென உதடுகள் விரிந்து
உதிர்க்கவிருக்கும் முத்து வார்த்தைகளை
சரமென தொடுத்து கவிதை மாலையாக்கிட
ஆவலுடன் காத்திருக்கிறாரா அன்பு தந்தை ?
பேர் காப்பேன்…
அப்பா அப்பா கேளப்பா
அன்பு தெய்வம் நீயப்பா,
தப்பாய்ச் சொன்னால் நீசிரிப்பாய்
தண்டனை ஏதும் தரமாட்டாய்,
எப்போ அம்மா வந்திடுவாள்
என்ன வெல்லாம் தந்திடுவாள்,
எப்பவும் எனக்குநீ வழிகாட்டி
என்றும் காப்பேன் உன்பெயரே…!
-செண்பக ஜெகதீசன்…
பொன்னைக் கொடுத்தும் பொருளைக் கொடுத்தும்நீ
உன்னதமாய்க் கண்ணைக் கொடுத்தாலும் -புன்னகைக்கும்
இன்னமுதப் பெண்குழந்தை ஈரவிழி சிந்துகின்ற
கன்னலுக்கு ஈடில்லைக் காண்.
என்றும் என் மகளாய்..
பூவொன்று பொன்னேந்தி
பூமியில் வந்தது போல்
பா ஒன்று தமிழேந்தி
பாவாடை அணிந்தது போல்
நிலவொன்று மலர் சூடி
நிலத்தில் வந்தது போல்
நீ வந்தாய் என்மகளாய்
நெஞ்சத்து ஒளிவிளக்காய்
நாளைய உலகில்
நீ நடக்கின்றப் பாதை
அறிவியல் என்றால்
கலாமின் பேத்தியாய்
சாவ்லாவின் சகோதரியாய்
விண்ணிலே தடம் பதித்து
மண்ணை நீ காக்க வேண்டும்
ஆன்மீகமே உன் வழியென்றால்
காரைக்கால் அம்மையாரும்
கன்னித் தமிழ் ஆண்டாளும்
உன் கண்களாய் மாற வேண்டும்
அரசியலே உன் இலக்கு என்றால்
தில்லையாடி வள்ளியம்மையாய்
ஜான்சி ராணியாய் நீ
நாட்டின் நலன் கருதியே
நாளெல்லாம் உழைக்க வேண்டும்!
குடும்பமே உன் குறிக்கோள் என்றால்
உன் அன்னையைப் போல்
அன்பாய் அனைவரையும் அரவணைத்து
இல்லறத்தை நல்லறமாய் காக்க வேண்டும்
எதுவாய் நீ ஆனபோதும்
ஏழேழு பிறவிக்கும்
என் மகளாகவே
நீ இருந்திட வேண்டும்!
செல்லப் பூவே-கார்த்திகா AK
இவள் விரல் தொடும்
தொலைவினில் என் வானம்
அதில் மெல்லத் தலையசைத்து
கிள்ளை மொழி கேட்கையில்
ராகங்கள் தோற்கும்
ஏழு வண்ண வானவில்
உரசிச் சென்றதொரு ஞாபகமாய்
உன்னைத் தழுவிய நொடிகள்
உன் விழித் திறந்த கணமதில்
இமைக்குள் பொத்திய ஈரம்
கனக்காது என்றும்
முளை விடும்
பற்களில் இருந்து
தெறிக்கும் சொற்களில்
கனி மொழி பிறக்குமே
உன் சிரிப்பினில்
பூக்கள் பிறந்திடும்
குறுங் கவிதைகள் பாடிடும்
தத்தி நடக்கும் நீ
நடை பயில
புதிதாய் நிலவொன்று
வாங்க வேண்டுமடி
கைகளில்
நட்சத்திர பூக்கள் கொண்டு
மின்மினிகள் பழக்குவாய் நீ
என் நெஞ்சின் கதகதப்பில்
உன்னை அள்ளியணைத்து
மீண்டுமோர் கருவறை செய்வேனடி!!
”….சேயொன்று இல்லையேல்
தாய்மை இழந்த
பேயாவாள் !….”’
சகோதரர் யெயபரதனுக்கு:
வன்மையாகக் கண்டிக்கிறேன் இவ் வார்த்தைக்கு!.
அப் பெண்ணின் பிழையல்ல கரு உருவாகாதது.
பல காரணங்கள் உண்டு.. (இணைத்தில் மேய்பவர் நீங்கள்..)
உங்கள் மகளிற்கு இந்த நிலையானால் இப்படிக் கூறுவீர்களா?
மிக வருந்துகிறேன் இவ்வார்த்தைக்கு
கண்ணின் மணியே
தந்தை என்னும் தகைமை தந்து
சிந்தை குளிரச் செய்தவளே – உன்
பந்தபாசம் கொண்டே நான்
சொந்தம் கொள்ள வந்தாயே
வாழும் வழிகள் சொல்லி வைத்து
நாளும் உன்னை வளர்த்திடுவேன்
தோளில் சுமந்தே தினந்தோறும் –உன்
ஆளும் திறமை வளர்த்திடுவேன்
கண்ணின் மணியே கவலை விடு
எண்ணம் சிறப்பாய்க் கொண்டு விடு
வண்ணம் போன்ற வாழ்விதனில்
மண்ணில் நன்றே வாழ்ந்து விடு
ஆயிரம் கனவுகள் உனக்காக
உயிராம் உந்தன் உயர்வுக்கு
நேயமாய் நான் கொண்டேன் – என்
சாயலாய் வந்தவளே! ஆருயிரே
அழுகை விட்டுச் சிரித்து விடு !!
புனிதா கணேசன்
24.07.2015
தாய்மையப் போற்றும் நான் சேயில்லாதவரைப் பேயெனச் சொல்லியதற்கு வருந்துகிறேன்.
சி. ஜெயபாரதன்