நிர்மலா ராகவன்

காதுகொடுத்துக் கேளுங்கள்

உனையறிந்தால்1-1

 

கேள்வி: : இடைநிலைப் பள்ளியில் பயிலும் சிலரை வீட்டிலோ, பள்ளியிலோ அடக்கவே முடிவதில்லை, ஏன்?

விளக்கம்: வீட்டில் புரிந்துணர்வு இல்லாது, தண்டனை மட்டுமிருந்தால், எழும் ஆத்திரத்தை ஆசிரியர்களிடம் காட்டுவார்கள். அல்லது, சுந்திரம்’ என்ற பெயரில், சிறுவர்கள் என்ன செய்தாலும் பொறுத்துப்போவது.

பொதுவாக மத்திம வர்க்கத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு அவர்கள் வீட்டிலேயே மரியாதை, ஒழுக்கம் என்று தகுந்த குணங்களைப் பழக்கி இருப்பார்கள். பெற்றோரிடம் அன்பு செலுத்தும் பிள்ளைகளுக்கு ஆசிரியர்களிடமும் அதேபோல் அன்பைச் செலுத்த முடியும்.அதனால் அவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பது எளிது. ஆசிரியர்களுக்கும் அவர்களைப் பிடித்துப்போகும்.

மாணவர்களும், ஆசிரியர்களும் வெவ்வேறு சமூக நிலைகளிலிருந்து வந்தவர்களாக இருந்தால், பிரச்னைகள் முளைக்கும். பல்லின நாடாக இருந்தால், பிறரின் கலாசாரம் புரியாது போகலாம். தன் கோணத்திலேயே ஒரு ஆசிரியர் அவர்களைக் கணித்தால், அவர்களது போக்கு எப்படிப் புரியும்? எரிச்சலும், ஆத்திரமும்தான் எழும்.

கதை 1:

நான் வேலை பார்த்த பள்ளியில் ஒரு சதவிகிதத்துக்கும் குறைவான இந்திய (தமிழ்) மாணவர்களே இருந்தார்கள். `கவுன்செலிங்’ என்ற பெயரில் அவர்களுக்கு ஆலோசனை அளிக்கும் வேலை ஒரு மலாய் ஆசிரியரிடம் கொடுக்கப்பட்டிருந்தது.

வயதில் மூத்தவர்கள் ஏதாவது கேட்டால், அவர்கள் முகத்தைப் பார்த்துப் பேச வேண்டும் என்று தமிழ் மாணவர்களுக்குப் போதிக்கப்பட்டிருந்தது. இது புரியாது, எதற்காவது தான் திட்டும்போது அவர்கள் தன்னையே பார்த்தால், `என்ன முறைக்கிறே?’ என்று அவர்களை மூன்று நாட்கள் பள்ளியிலிருந்து இடைநிறுத்தம் (சஸ்பெண்ட்) செய்துவிடுவார்.
தமிழர்கள்தாம் மிக அதிகமாக தண்டிக்கப்படுகிறார்கள் என்றறிந்து, நான் அவடம் நியாயம் கேட்டேன்.

`எனக்கு அவர்களைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை, CIKGU (செகூ. மலாய் மொழியில் ஆசிரியை). இனி நீங்களே அவர்களுக்குப் புத்தி சொல்லுங்கள்!’ என்று பொறுப்பைத் தட்டிக்கழித்தார்.

அடுத்த நாளே நான்கு பேர் என்னிடம் அனுப்பப்பட்டனர்.

`கவுன்செலிங்கா?’ என்று ஒருவரையொருவர் கேட்டுக்கொண்டார்கள், தயக்கத்துடன். மணிக்கணக்காக குற்றம் சாட்டி, புத்தி சொன்னால் யாரால்தான் தாங்க முடியும்! அந்த பயம்தான் அவர்களுக்கு!

கவுன்செலிங்குக்கு வரும் எந்த மாணவரும் தானே விரும்பி வருவதில்லை. பள்ளி விதிமுறைகளைப் பின்பற்றத் தவறிய `குற்றம்’ செய்துவிட்டால், கவுன்செலிங் ஆசிரியரிடம் அனுப்புவார்கள்.

அவரோ, அவர்களது இனம், மதம், கலாசாரம் என்று எல்லாவற்றையும் அலசி, அவர்களைச் சிறுமைப்படுத்துவார். எந்த மதம், எந்த இனம் என்றெல்லாம் கணக்கில்லை. எல்லாவற்றிற்கும் இவைகளிலிருந்து மேற்கோள் காட்டுவார்.

அதிகாரம் செலுத்துவதே இன்பமானதாக, சுயபலத்தைக் கூட்டுவதாக இருக்க, `ஆலோசனை’ என்ற பெயரில் தான் சொல்வதால் மாணவர்கள் பயனடைவார்களா என்றெல்லாம் சிந்திப்பது கிடையாது.

`அவர்களை அழ வைக்கவேண்டும். அதன்பின், நமக்குத்தான் வெற்றி!’ என்று உதவித் தலைமை ஆசிரியை என்னிடம் சொல்ல, அதிர்ந்து போனேன். (இரு காதணிகள் அணிந்து இருந்ததால், ஒரு பெண்ணைப் பலர் சூழ்ந்துகொண்டு, `இது நமது மதத்திற்கு விரோதம்!’ என்று ஒரு மணிக்குமேல் திரும்பத் திரும்பக் கூற, தாக்குப்பிடிக்க முடியாது கதறினாள்).
என்னிடம் வந்த மாணவர்கள் தயங்கியதில் என்ன ஆச்சரியம்!

ஒரு காலி அறையில் எங்கள் உரையாடல் நடந்தது. தமிழில் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். அவர்கள் முகங்கள் சற்றே தெளிந்தன. `நான் எதுவும் சொல்லப் போவதில்லை. நீங்கள் பேசுங்கள். நான் கேட்கிறேன்,’ என்றேன்.

மெள்ள மெள்ள, அவர்கள் ஒவ்வொருவராகப் பேச ஆரம்பித்தார்கள். நடுவில் ஒருவன், `அக்கா,’ என்று அழைத்துவிட்டு, மன்னிப்புக் கேட்டான்! அவர்கள் பிரச்னையைக் கேட்டு நான் சிரிக்காத குறை! ஆனால், அவர்கள் வயதில் அது பெரிது.

பள்ளி வாசலிலேயே இருந்த பஸ் நிறுத்தத்தில் ஒரு பையன் தன்னுடன் படிக்கும் பெண்ணுடன் பேசிக்கொண்டிருந்தானாம். அதைப் பார்த்த இன்னொருவன், `GIRL FRIEND-ஆ ?’ என்று கேலியாகக் கேட்க, இருவருக்குள்ளும் வாக்குவாதம் முற்றிவிட்டது: `ஒண்டிக்கு ஒண்டி சண்டை போடலாமா, இல்லே, கூட ஆள் சேர்த்துக்கிட்டு வர்றியா?’
நாள் குறிக்கப்பட்டது.

இவர்கள் கட்சியை பலப்படுத்த, வேறு பள்ளியில் பயிலும் மாணவர்களும் கைச்சண்டையில் சேர்ந்துகொண்டனர்.
நான் தலையில் கைவைத்துக்கொண்டேன். `உங்களுக்கெல்லாம் என்னப்பா, தமிழ்ப்பட ஹீரோன்னு நினைப்பா?’
பெருமையுடன் புன்னகைத்தார்கள்.

`ஹீரோ சண்டை போட்டா, எட்டு இலக்கத்தில பணம் சம்பாதிக்க முடியும். நீங்க அவங்களைமாதிரி நடந்தா, மாட்டிப்பீங்க!’
அதன்பின், பொதுப்படையாகப் பேசினேன் — கல்வியின் முக்கியத்துவம், சமூக, பொருளாதார நிலையைக் கல்வியால் எப்படி உயர்த்த முடியும் என்று. `ஒங்க இளமையை ஏன் இப்படி வீணாக்கிறீங்க!’ என்று நான் அயர்ந்தபோது, என் முகத்திலிருந்த சோகம் அவர்களிடமும் பிரதிபலித்தது.

அதன்பின், பிற ஆசிரியர்கள் அவர்களிடம் கடுமையாக நடந்துகொள்வதைப்பற்றி, வகுப்பில் எது காணாமல் போனாலும், அவர்கள் புத்தகப்பைகளைச் சோதனை போடுவது என்று பல தகவல்களை நான் கேளாமலே என்னுடன் பகிர்ந்து கொண்டார்கள்.

அவர்களது பெற்றோர் பள்ளியில் தம் பிள்ளைகள் என்ன செய்கிறார்கள், படிப்பின் முக்கியத்துவம் எதுபற்றியும் கலந்து பேசுவதில்லை என்றும் கேட்டறிந்தேன்.

விடைபெற்றபோது, அவர்கள் முகத்தில் நிம்மதி கலந்த சிரிப்பு. நான் திட்டவில்லை, உபதேசம் செய்யவுமில்லை. அவர்களைப் பாதித்த விஷயங்களைக் காதுகொடுத்துக் கேட்டேன். அவ்வளவுதான்.

அதன்பின், அவர்களின் நடத்தையில் நல்ல மாறுதல் தெரிந்தது. நான் எங்காவது போய்க்கொண்டிருந்தால், ஓடி வந்து வணக்கம் தெரிவிப்பார்கள். சில சமயம் நான் முதலில் வணக்கம் தெரிவித்து, அவர்களுடைய ஆச்சரியத்துக்கு அடிகோலி இருக்கிறேன்.

`நல்லாப் படிக்கிறீங்களா? பள்ளி இறுதியாண்டு பரீட்சையில என்ன வாங்குவீங்க?’ என்று நான் சிரிப்புடன் கேட்டபோது, ஒரு மாணவன் செல்லமாக முறைத்தான்.` ஃபர்ஸ்ட் கிளாஸ்தான்!’
கதை 2 : இன்னொரு பள்ளி, மாணவ மாணவிகள் தாமே ஓர் ஆசிரியரைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடம் தம் மனக்குறைகளை வெளியிடலாம் என்று அறிவித்தது.

ஒரு மாணவி தன் தந்தை இன்னொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருப்பதால் குடும்பம் படும் கஷ்டங்களைக் கூறினாள். (முதலில் தாயின் அனுமதி பெற்றிருந்தாள் இந்த மலாய் மாணவி).

எல்லா வகுப்புகளிலும் அடங்காத வேற்றின மாணவன் ஒருவன் தானே வலிய வந்து, அதே போன்ற கதையைச் சொன்னான். அதற்குள் எனக்கு அக்கலாசாரம் பழகிவிட்டிருந்தது.

`அப்பா இன்னொரு பொண்ணோட உறவு வெச்சுக்கிட்டிருந்தா, அது அம்மாவுக்கும், அப்பாவுக்கும் இடையே இருக்கிற பிரச்னை. நீ உருப்படற வழியைப் பாரு!’ என்றேன். `நாளைக்கே கல்யாணமானா, எப்படியோ குழந்தை பிறக்கும். (பதின்ம வயது மாணவர்களுக்கு மிகவும் பிடித்த வாக்கியம் இது!) மனைவியோட சினிமாவுக்குப் போக, டாக்டருக்குப் போக, எல்லாத்துக்கும் பணம் வேண்டாம்? படிச்சாதானே நிறைய காசு சம்பாதிக்கலாம்?’

இந்த மாணவன் அடிக்கடி என்னுடன் வந்து பேசிவிட்டுப் போனான். என் பாடமாகிய பௌதிகத்தில் சிறப்பான தேர்ச்சி பெற முடியவில்லையே என்று வருந்தி அழுதான். (`விடு! நானே நல்ல விதமாக பாசாகி இருக்க மாட்டேன்!’ என நான் ஆறுதல் அளிக்க, அவனுக்குச் சிரிப்பு வந்துவிட்டது).

அந்த ஆண்டின் இறுதியில், `என்னை மரியாதையுடன் நடத்திய ஒரே நபர் நீங்கள்தான்!’ என்ன்று சொல்லிவிட்டுப் போனான்.

பல மாணவ மாணவிகள் தயங்காது என்னிடம் வந்ததற்குக் காரணம் நான் என்னை அவர்கள் நிலையில் பொருத்திப் பார்த்ததால்தான் (EMPATHY) என்று நினைக்கிறேன்.

`அந்த இந்திய ஆசிரியைகிட்ட என்ன ஓயாம பேச்சு? எதுவாக இருந்தாலும், என்கிட்ட வந்து சொல்லேன்!’ என்று ஓர் ஆசிரியை அழைத்ததாகச் சொல்லி, `அவங்ககிட்ட யார் போவாங்க! ஏதாவது சொன்னா, பள்ளிக்கூடம் பூராவும் டமாரம் அடிச்சுடுவாங்க!’ என்று கசப்புடன் தெரிவித்தாள் இன்னொரு மலாய்ப் பெண். நான் வேற்றினமாக இருந்தது அவளைப் பாதிக்கவில்லை. தான் அந்தரங்கமாகச் சொல்வது ரகசியமாகவே வைக்கப்படும் என்ற நம்பிக்கை இருந்திருக்கிறது.

நாம் ஒரு நாட்டுக்குப் போவதற்குமுன், அவர்களுடைய கலாசாரத்தைப்பற்றிக் கொஞ்சமாவது அறிந்திருக்க வேண்டும். இல்லையா? அதே போல், ஆசிரியர்கள் தம் பொறுப்பில் இருக்கும் மாணவர்களின் பின்னணிபற்றியும் தெரிந்திருக்க வேண்டுவது அவசியம்.

ஆசிரியப் பயிற்சியின்போது சொல்லிக் கொடுப்பது பரீட்சை எழுத மட்டுமில்ல. அதை நடைமுறையிலும் கடைப்பிடித்தால்தான் ஆசிரியர், மாணவர் இரு சாராருக்குமே நிறைவு, நீண்டகால நன்மை.

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *