உன்னையறிந்தால் …… (6)
நிர்மலா ராகவன்
வெற்றிப்பாதையில் முட்கள்
கேள்வி: எந்தச் சமயத்திலும் பிறரை நோகடிக்கக் கூடாது என்பது சரிதானா? எல்லோரிடமும் சிரித்துப் பேசுவது சிலருக்கு மட்டும் எப்படி கைவருகிறது?
பதில்: இப்படி நடப்பவர்கள் மகிழ்ச்சியானவர்கள் என்று சொல்ல முடியாது. எப்போதும் சிரிப்பது, அதுவும் உரக்கச் சிரிப்பது, மகிழ்ச்சியின் அறிகுறி என்று அர்த்தமாகாது.
சிறு வயதில் தாய், தந்தையர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் ஆகிய எல்லாரிடமும் பாராட்டு பெற விரும்பிய ஒரு பெண் பிறருக்கு என்ன பிடிக்கும் என்று குறிப்பால் அறிந்து, அதன்படி நடக்கிறாள்.
யாரையாவது எதிர்த்தால், அதற்காகத் திட்டு விழும், தன்னை `நல்ல பொண்ணு!’ என்று புகழமாட்டார்கள் என்று புரிந்து போகிறது. அதனால், அவள் செய்யும் ஒவ்வொரு காரியமுமே பிறர் என்ன சொல்வார்களோ என்ற அடிப்படையில்தான் இருக்கும்.
பெரியவளாக ஆன பின்னரும், இதே போக்கு தொடர்கிறது. `எனக்கு எதிரிகளே கிடையாது. எல்லாருக்கும் என்னைப் பிடிக்கும்!’ என்று பெருமையாகச் சொல்லிக் கொள்கிறாள்.
இவளுக்கு எதிரிடையான பெண் ஒருத்தியே எடுத்துக்கொள்வோம். அவளைக் கண்டனம் செய்பவர்கள்தாம் அதிகம்.
1 `உனக்கு ஆனாலும் ரொம்பத்தான் கர்வம்!’
2 `நீ சொன்னது (அல்லது, நடந்துகொண்ட விதம்) என்னை நோகடித்துவிட்டது’.
3 `உன்னால் ஏன் மற்றவர்களுடன் ஒத்துப்போக முடிவதில்லை?’
இந்த மாதிரி கேள்விக் கணைகளைத் தொடுத்து, யாராவது உங்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறார்களா?
கவலையை விடுங்கள். பிரச்னை உங்களிடம் இல்லை. கேட்டவரிடம்தான்.
`ஏன் என்னால் முன்னுக்கு வரவே முடியவில்லை?’ என்று வருந்துபவர்கள், பிறர் தம் முன்னேற்றத்தைத் தடுக்க எந்தெந்த வழிகளை எல்லாம் கையாளுவர் என்பதைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் அவர்களுடைய நைச்சியமான பேச்சால் பாதிப்பு அடையாமல் இருக்க முடியும்.
(1)`கர்வி’ என்று நம்மை ஒருவரைப் பழித்தால், நம்மிடம் ஏதோ சிறப்பு இருக்கிறதென்று எதிராளி உணர்ந்திருக்கிறார் என்று அர்த்தம். அந்தச் சிறப்பே நம் பலமாக, வெற்றிக்கு அடிப்படைக் காரணமாக ஆகவிடாமல் தடுக்கும் முயற்சி இந்த ஏளனம் கலந்த குற்றச்சாட்டு.
பிறரை ஓயாது பழித்துவிட்டு, `ஏனோ ஒருவருக்கும் என்னைக் கண்டால் பிடிப்பதில்லை!’ என்று புலம்புவார்கள் இத்தகையவர். இல்லாவிட்டால், தன்னைப்போன்ற இன்னொருவருடன் நெருங்கிய நட்பு கொண்டு, பிறரைப் பழிப்பதிலேயே நிறைவு கண்டுவிடுவர்.
கதை:
நான் ஒரு புதிய பள்ளிக்கு மாற்றலாகிப் போனேன். இரு சீன ஆசிரியைகள் ஒன்று சேர்ந்து, என்னை மட்டம் தட்டிக்கொண்டே இருந்தார்கள், `நீ புதியவள். உனக்கு ஒன்றும் தெரியாது,’ என்பதுபோல. இத்தனைக்கும் எனக்கு முன் அனுபவம் இருந்தது. நான் பட்டதாரி ஆசிரியை, அவர்களைவிட உயர்ந்த பதவி வரிசையில் இருந்தேன் என்ற ஆத்திரமாக இருக்கலாம்.
பொறுக்கிறவரை பொறுத்துவிட்டு, அதற்கு ஒரு முடிவு கட்ட எண்ணினேன். பின்பு, `என்னையும் உன்னைமாதிரி முட்டாள் என்று நினைத்தாயா?’ (You think I am stupid like you, aah?”) என்று ஒருத்திக்குப் பதிலடி கொடுத்தேன், ஒரு முறை. அவர்கள் பேசும் முறையையே கையாண்டதால், அவர்களுக்கு என் ஏளனம் புரிந்தது.
அவ்விருவர் முகத்திலும் ஒரே ஆத்திரம். ஆனால், அவர்களுக்கு மேலே எதுவும் பேசும் தைரியம் இருக்கவில்லை.
அதன்பின் என்ன! போலியான, திகட்டும் அளவுக்கு பணிவுதான் என்னிடம்!
(2) `நீ சொன்னது (அல்லது, நடந்துகொண்ட விதம்) என்னை நோகடித்துவிட்டது’.
பிறரது எண்ணங்களுக்கும், உணர்ச்சிகளுக்கும் நாம் பொறுப்பில்லை. நாம் சொல்வதையோ, செய்வதையோ பிறர் ஏற்றுக்கொள்ள முடியாதது நம் தப்பா?
பல பெரியவர்கள் இம்மாதிரி பேசி, தம் குழந்தைகளை, `தாம் நொந்தாலும் பரவாயில்லை, பிறரை நோகடிக்கக்கூடாது,’ என்பதுபோல் என்றுமே சுயமாகச் சிந்தித்து நடக்கும் திறனில்லாது பழக்கிவிடுகிறார்கள். அதனால் குழந்தைகளும் பிறருடைய உணர்ச்சிக்கே மதிப்பு கொடுத்து, ஒவ்வொரு வார்த்தையையும் அளந்து பேசப் பழகுகிறார்கள். பிறர் சொல்வது சரியோ, இல்லையோ, அதை ஆமோதித்து ஏற்றால் அவர்களுக்குப் பிடித்தவர்களாக ஆகிவிடுகிறோம் என்பது இவர்களுக்குத் தெரிகிறது.
இக்குழந்தைகள் பெரியவர்களானதும், தாமே ஏதாவது செய்ய முயன்றுவிட்டு, அதுவும் பிழையாகிப் போனால் என்ன ஆகும்?
ஒரேயடியாகக் கூசிப்போய், பிறருடைய பழிக்கும், கேலிக்கும் அஞ்சி, புதிதாக எதிலும் ஈடுபடும் துணிச்சலை இழந்துவிடுகிறார்கள். `நான் போட்டியில் எல்லாம் கலந்துகொள்ள மாட்டேம்பா. வெற்றி பெறாவிட்டால், கேவலம்!’ என்று பெருமை பேசுவார்கள்.
அவர்களைப்போலவே பலரும் இருப்பதால், தாம் செய்வதுதான் சரி என்று திருப்தி அடைந்துவிடுகிறார்கள். வெகு சிலரே வெற்றிப் பாதையில் பீடுநடை போடுவது இதனால்தான்.
தலைமைப் பொறுப்பு வேண்டுமெனில், சுய சிந்தனை அவசியம். எதிர்ப்புக்கு அஞ்சக்கூடாது. நமக்குச் சரியெனப்பட்டதை, அது பிறருக்குத் தீங்கு விளைவிக்காதவரை, துணிந்து செய்ய வேண்டும்.
`எனக்காக இதைச் செய்யக்கூடாதா!’ என்று நமக்கு உடன்பாடில்லாத காரியங்களைச் செய்யத் தூண்டுபவர் நம் நலனிலும், நிம்மதியிலும் அக்கறை கொண்ட நண்பரே அல்லர்.
கதை:
ஒரு பார்ட்டிக்குப் போயிருந்தேன். அதை அளித்தவர் பெரிய அதிகாரி. ஒவ்வொருவரிடமாகப் போய், அவர்களை வற்புறுத்தி, மது குடிக்க வைத்தார். கூட இருந்தவர்களும் குடிக்காதவர்களைக் கேலி செய்தார்கள்.
என்னருகே வந்தார். என்னைவிடப் பத்து வயது பெரியவரான அவர் எதுவும் பேசுமுன், `குடிப்பதை விட்டுவிடுங்கள் என்று நான் சொன்னால் கேட்பீர்களா?’ என்று சாந்தமாக, நான் அவரைக் கேட்டேன்.
`Of course not!’ என்று ஆணித்தரமாகப் பதில் வந்தது.
`நான் மட்டும் நீங்கள் சொல்வதைக் கேட்பேன் என்று நீங்கள் எப்படி எதிர்பார்க்கலாம்?’ என்று நான் கேட்க, அவர் முகம் அதிர்ச்சியைக் காட்டியது. தலையைக் குனிந்துகொண்டு அப்பால் நகர்ந்தார். அதிலிருந்து எனக்கு ரொம்ப மரியாதை!
(3) `உன்னால் ஏன் மற்றவர்களுடன் ஒத்துப்போக முடிவதில்லை?’
தன்னம்பிக்கை இல்லாத எவருக்குமே நாம் வித்தியாசமாக இருந்தால், பயம் உண்டாகும். எப்படியாவது தங்களைப்போல் மாற்றிவிட பெருமுயற்சி செய்கிறார்கள். நாம் செல்லும் பாதை தவறானது என்பதை உணர்த்துவதுபோல, `சுயநலமி,’ `அகம்பாவம் பிடித்தவள்’ என்று பல பெயர்களைச் சூட்டுவர். அவர்களை லட்சியம் செய்யவே கூடாது.
கொஞ்சம் புத்திசாலியான வேறு சிலர், `உங்கள் புத்திசாலித்தனத்துக்கு நீங்கள் இப்படிச் செய்யலாமா?’ என்று, புகழ்வதுபோல் குழி பறிப்பர். ஒரு வேளை, அவர் சொல்வதில் உண்மை இருக்குமோ என்று யோசித்து, அவர்கள் பேச்சுக்கு மதிப்பு கொடுப்பது வீண்.
பழியையும், வருத்தத்தையும் நாம் ஏற்காத பட்சத்தில், அவை சொன்னவரையே போய்ச் சேரும், சுவரில் அடிக்கப்பட்ட பந்துபோல். நாமும் எப்போதும்போல் நிமிர்ந்தே நடக்கலாம்.
அச்சத்தாலோ, பொறாமையாலோ நம்மை முதலில் ஏற்காதவர்களே என்றாவது நம் உதவி தேடி வருவார்கள். `என்னைப் பழித்தாயே!’ என்று குத்திக் காட்டாது உதவலாம்.
தொடரும்