நிர்மலா ராகவன்

மோகன் ஸார்மேல் எல்லா மாணவிகளுக்குமே ஒரு `இது’.

விளையாட்டு வீரரானதால், கட்டுமஸ்தான உடல். எல்லாவற்றையுமே விளையாட்டாக எடுத்துக்  கொள்வதுபோன்ற சிரித்த முகம், அன்பு கலந்த கண்டிப்பு, அசாதாரணமான கனிவு… இவை போதாதா ஒருவர்மீது காதல் கொள்ள!

விளையாட்டுப் பயிற்சிகளால் அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு பிரபாவைத் தேடி வந்தது. அதனால் அத்தனை பேருடைய பொறாமைக்கும் ஆளாகியிருந்ததுபற்றி அவளுக்குக் கொள்ளைப் பெருமை. `நீதான் மாஸ்டரோட செல்லம்!’ என்று அவர்கள் கேலி செய்ததை நம்பி, இரவெல்லாம் கண்விழித்து, ஒரு காதல் கடிதம் எழுதினாளே!

பதிலுக்கு, அவளிடமே அதைக் கொடுத்து, `இதை நான் பெரிசு படுத்தப் போறதில்லே. இன்னும் ரெண்டு வருஷம் போனா, நீ இப்ப செய்திருக்கிற காரியம் எவ்வளவு பைத்தியக்காரத்தனமானதுன்னு ஒனக்கே புரியும்!’ என்று அமைதி குன்றாது அவர் கூறியபோது, அவள் அடைந்த அவமானம் மறக்குமா! அவமானம் ஆத்திரமாக மாறியது.

ஆனால், இப்போது, பழி தீர்த்துக்கொள்ள தாய் ஒரு வழி வகுத்தபோது என்னவோ, அவளுக்குத் தயக்கமாகத்தான் இருந்தது.  பொய் சொல்லலாமோ?

`நல்லொழுக்கம்’ என்று பள்ளியில் சொல்லிக் கொடுப்பது பரீட்சைகளில் தேர்ச்சி பெற மட்டும்தானா?

தன் பக்கத்தில் அமர்ந்து, கவனமாகப் பரிமாறிய தாயை மெல்ல ஏறிட்டாள் பிரபா.

ஒப்பனையற்ற முகம். பருத்திப் புடவை. `நானும் இருக்கிறேன்,’ என்பதுபோல், கண்ணுக்குத் தெரியாத அளவில் ஒரு பொட்டு.

“அம்மா..!” பிரபாவின் குரலில் தயக்கம்.

திருமணமாகாமலே பிறந்த மகள். உண்மை தெரிந்தும், `எப்பவோ நடந்ததைப்பத்தி இப்போ என்ன!’என்று பெரிய மனது காட்டுவதுபோல நடித்து, மணந்தபின், அதையே குத்திக்காட்டி, ஓயாது சந்தேகப்பட்டு வாழ்க்கையை நரகமாக்கிய கணவன். இரு ஆண்டுகளுக்குள்ளேயே திருமண முறிவு.

`பாவம், அம்மா!’  என்று பரிதாபப்பட்டாள் பிரபா. தான் பிறந்ததால்தானே இப்படி ஒரு அவல வாழ்க்கை! அதற்கு ஈடு செய்ய, அம்மா சொற்படி நடந்தால்தான் என்ன?

கடந்த ஐந்தாறு வருடங்களாகவே தனக்குக் கண்ணாமூச்சி காட்டியிருந்த பதவி உயர்வு அந்த ஆண்டு கண்டிப்பாகக் கிடைக்கும் என்று நம்பியிருந்தாள் சீதா. அதற்கேற்ப, கட்டொழுங்கு ஆசிரியையாகவும் ஆக்கப்பட்டிருந்தாள். பள்ளியே அவள் பொறுப்பில்தான் இருந்தது.

அந்தச் சமயம் பார்த்துத்தானா மோகன் அங்கு மாற்றலாகி வரவேண்டும்! தலைமை ஆசிரியை அவன்பக்கம் சாய்ந்தாள்.

புதிய மலேசிய சம்பளத் திட்டத்தின்கீழ், பதவி உயர்வு கிடைப்பது தலைமை ஆசிரியையின் சான்றிதழால்தான் என்று பிரபாவுக்குத் தெரியும். அம்மாவின் இந்தக் கனவு நிறைவேறாமல் போய்விடுமோ என்ற பயம், மோகன் ஸாரால் இப்போது வந்திருக்கிறது. `

அம்மாவை ஏமாற்றிய இரு ஆண்களினால், பிரபாவுக்கும் அந்த வர்க்கத்தின் மேலேயே துவேஷம் இருந்தது சீதாவுக்குச் சாதகமாகப் போயிற்று. என்ன பேசவேண்டும் என்று சொல்லிக்கொடுத்தாள்.

பந்தயத்தில் ஓடியபோது தான் கீழே விழுந்துவிட, மோகன் ஸார் சுளுக்கெடுத்ததை இப்போது நினைத்தாலும் சிலிர்த்தது.

தலைமை ஆசிரியை மிஸ். ராஜசிங்கம் தன்னை அவசரமாகக் கூப்பிட்டு அனுப்பியிருப்பது எதற்காக இருக்கும் என்று குழம்பியவனாக அவளுடைய அறையில் நுழைந்த மோகன், தன்னைக் கண்டதும் அவளுடைய முகத்தில் வழக்கமாகக் காணப்படும் புன்னகைக்குப் பதில் கடுமை படர்ந்திருப்பது கண்டு திகைத்தான்.

“பள்ளி சார்பிலே ஓட்டப் பந்தயத்துக்காக நேத்து மத்தியானம் மூணு பேரை கோலாலம்பூருக்கு — இங்கேயிருந்து ஐம்பது கிலோமீட்டர்– கூட்டிட்டுப் போனீங்க, சரி. மத்த ரெண்டு பெண்களையும் இறக்கி விட்டப்புறம், கார் ரிப்பேருங்கிற சாக்கிலே, நீங்க தகாத முறையிலே நடக்க முயற்சித்ததா பிரபா புகார் பண்ணியிருக்கா”. கோபத்தை உள்ளடக்கிய அந்தக் குற்றச்சாட்டு அவன் முகத்தில், `இது என்ன விந்தை!’ என்ற பாவத்தைத் தோற்றுவித்தது.

ஏதோ சொல்ல வாயெடுத்தவனை ஒரு கையை உயர்த்தி நிறுத்தினாள் மேலதிகாரி. “அப்படி ஏதும் நடக்கலேன்னு சொல்லப்போறீங்க. அதானே? சாயந்திரம் ஆறுமணிக்கு எல்லாப் போட்டியும் முடிஞ்சிருக்கு. இவளை வீட்டுக்குக் கொண்டு விடறப்போ, மணி பத்துக்குமேல ஆயிடுச்சுன்னு இவங்கம்மா, சீதா டீச்சர், புகார் குடுத்திருக்காங்க. விளையாட்டில தோத்துப்போனதுக்கு ஆறுதல் சொல்றமாதிரி, தோளைச் சுத்தி கை போட்டிருக்கீங்க. ராத்திரி வேளையிலே எங்கெங்கேயோ சுத்திட்டு, தொடையைத் தடவ ஆரம்பிச்சிருக்கீங்க. இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்? நல்லவேளை, அந்த சின்னப் பொண்ணுக்கு ஒங்களைத் தடுக்கற பலமும், தைரியமும் இருந்திருக்கு!”

மிஸ். ராஜசிங்கத்தின் பக்கத்திலேயே குனிந்த தலையோடு நின்றிருந்த பிரபாவை அதிர்ச்சியுடன் நோக்கினான் மோகன். விழுந்தவுடனேயே தான் கொடுத்த அவசரச் சிகிச்சைக்கு இந்தத் தண்டனையா!

தற்செயலாக நடந்தவைகளுக்கு வேறுவிதமான பூச்சு கொடுத்து அசிங்கப்படுத்த இவளுக்கு எப்படித் தோன்றியது?

காரைப் பழுது பார்த்தபின், அவள் வீட்டில் கொண்டுவிடும்போது ஒன்பது மணிக்குள்தானே இருக்கும்!

“இப்படி ஏதாவது நடக்கக்கூடாதுன்னுதான் எங்க ஸ்கூலிலே ஆண்களையே வேலைக்கு வைக்கக்கூடாதுன்னு இத்தனை வருஷம் கண்டிப்பா இருந்தேன்”. ஐம்பது வயதை எட்டியிருந்தவளுக்கு, அவனைவிட அதிர்ச்சியும், ஆத்திரமும் எழுந்தன. “சே! ஒங்க சிரிப்பையும், போலிப் பணிவையும் பாத்து, நான்கூட இல்லே ஏமாந்துட்டேன்!”

அந்தக் குளிர்சாதன அறையிலும் வியர்க்க, கரங்கள் தன்னிச்சையாக கழுத்தை இறுக்கியிருந்த டையைத் தளர்த்தப் போயின. இப்போது தான் எது சொன்னாலும் எடுபடப் போவதில்லை என்று புரிந்து, மௌனமாகத் தலையைக் குனிந்து கொண்டான் மோகன்.

“நல்லவேளை, சீதா டீச்சருக்கு நம்ப பள்ளிக்கூடத்தோட பேர் கெட்டுடக் கூடாதுங்கிற அக்கறை இருக்கு. அதான் எங்கிட்ட வந்து சொல்லியிருக்காங்க. அவங்க போலீஸ், கோர்ட்டுன்னு போயிருந்தா..? நெனைக்கவே கூசுது. கூடிய சீக்கிரமே ஒங்களை வேற..”.

“அதுக்கு அவசியம் இருக்காது, மிஸ். ராஜசிங்கம். நாளையோட நானே நின்னுக்கறேன்”. எவரையும் பாராது, அலாதியான அமைதியுடன் அவன் வெளியே நடந்தான்.

“தப்புப் பண்ணறதுக்கு முந்தி யோசிச்சு இருக்கணும். இப்ப ரோஷப்பட்டு என்ன புண்ணியம்?” என்று முணுமுணுத்து, அந்த இறுக்கமான சூழ்நிலையைச் சமாளிக்கப் பார்த்தாள் மிஸ். ராஜசிங்கம்.

அதற்குப்பின், பிரபாவுக்கு எதிலும் அக்கறையும், கவனமும் இல்லாமல் போயிற்று. `என்றாவது இவள் சிரித்திருப்பாளா?’ என்று காண்பவரைச் சிந்திக்க வைப்பதுபோல் ஒரு கடுமை அவள் முகத்தில் குடியேறியது. `ஒரு நல்ல மனிதர்மேல் அபாண்டமாகப் பழி சுமத்தி, அவருடைய எதிர்காலத்தையே நாசமாக்கிவிட்டேனே!’ என்று ஓயாது குமைந்தாள்.

“ஒனக்கும் பதினெட்டு வயசு ஆகிடுச்சு. நிறைய பேர் கேக்கறாங்க,” என்று தாய் அவளுடைய கல்யாணப்பேச்சை எடுத்தபோது, பிரபாவுக்கு அலற வேண்டும்போல இருந்தது.

“ஏம்மா? மோகன் ஸார்தான் என்னை ஏற்கெனவே கெடுத்துட்டாரே! மனசறிஞ்சு, இன்னொரு ஆம்பளையோட நான் எப்படிக் குடித்தனம் நடத்த முடியும்?” என்று தெளிவாகக் கேட்டு, அவள் வாயை அடைத்தாள்.

பதவி உயர்வுக்குப் பதில் சீதாவுக்குக் கிடைத்ததெல்லாம் குறைந்த ஓய்வூதியம்தான்.

`கெட்டதைப் போதிக்க நாவை உபயோகித்தாயே! இப்போது அவசியமானால்கூடப் பேச முடியவில்லை, பார்!’ என்று, பக்கவாதம் கண்ட தாயைக் குத்திக்காட்ட பிரபாவுக்குத் துடிக்கும்.

ஆனால், தாயைப் பார்க்கும்போதெல்லாம், `மிஸ்டர் மோகன் ஒன்னைக் கெடுக்கப் பாத்தாருன்னு சொல்லிடு!” என்ற போதனை இப்போதுதான் அவள் சொல்வதுபோல் ஒலிக்க, தன்னையே மன்னிக்க முடியாது, அவளருகே போவதையே தவிர்த்தாள்.

`வாழ்க்கையில் எதிர்பார்க்க இனி எந்த சுகமும் கிடையாது. இதே இயந்திர கதிதான்!’ என்ற நிதரிசனம் கனத்துப்போகும்போது மனத்தில் வெறுமை சூழும். தையல் இயந்திரத்தோடு இயந்திரமாக இயங்கி வயிற்றுப்பாட்டைக் கவனித்துக்கொண்டதாலோ, என்னவோ, முதுகு வளைந்திருந்தது.

அன்று கடையில் தைத்துக் கொண்டிருந்தபோது, தெரிந்த குரல் ஒன்று ஒலிக்க, நிமிர்ந்தாள் பிரபா.

“நீ.. பிரபா இல்லே?” அருகில் வந்தவரைக் கண்டதும் அவளுக்கு வியர்த்துப் போயிற்று.

ஐயோ! தானிருக்கும் இடத்தை எப்படிக் கண்டுபிடித்தார்?

பதினைந்து வருடங்களுக்குப் பிறகு தன்னை நியாயம் கேட்க வந்திருக்கிறாரா?

“நான்.. மோகன்!” இயல்பாகத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் வந்தவர். “இப்போ ஆஸ்திரேலியாவிலே இருக்கேன். அசிஸ்டண்ட் புரொபசர். அப்பவே அங்கே போயிட்டேன், மேல்படிப்புக்கு,” என்று பேசிக்கொண்டே போனவர், “ஆமா? நீ நல்லாப் படிச்சிட்டு இருந்தியே! மேலே படிக்கலே?” என்று கேட்டபோது, அந்தக் கனிவைத் தாங்க முடியாது, பிரபாவின் உதடுகள் துடித்தன.

அப்போது, “நீ இங்கேயா இருக்கே? ஒன்னை எங்கெல்லாம் தேடறது!” என்று செல்லக் கோபத்துடன் வந்தான் ஒரு வெள்ளைக்காரன்.  உரிமையுடன் மோகனது இடுப்பில் தன் கரத்தைப் படரவிட்டான்.

“ஓ.கே, பாக்கலாம்,” என்றபடி, அவனுடன் நடந்துபோனார் மோகன் ஸார்.

அதிர்ந்து போனவளாக, அவர்கள் சென்ற திக்கையே விறைத்தாள் பிரபா. தான் ஒவ்வொரு கணமும் எண்ணிக் கலங்கியதுபோல, அவருடைய வாழ்வு அழிந்து போகவில்லை! தன்னாலோ, ஏன், வேறு எந்தப் பெண்ணாலுமே அவரை மயக்க முடியாது!

இது புரியாமல், அவரைப் பழி வாங்கவென்று பொய் சொல்லி, அம்மாவை அடியோடு வெறுத்து, இன்னும்..படிப்பை அரைகுறையாக விட்டு..!

தன் முன்னிருந்த இயந்திரத்தின் மேலேயே தலையைக் கவிழ்த்தபடி, குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்தாள் பிரபா, தனது நீண்டகால இழப்புகளை ஈடுகட்ட முடியாதவளாக.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *