Author: கிரேசி மோகன்

  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    171125 Yashoda’s penance 24x32 cm mixed media lr

    ’’கண்ணனின் வாய்க்குள்ளே கண்டனள்: ஏரார்ந்த
    கண்ணிக்கே கண்ணளித்து கைவல்யம் : -மண்ணோடும்,
    விண்ணோடும் சேர்ந்து விளையாடும் வாமனனை
    தன்னோடு சேர்த்துரைத்தாள் தாங்க்ஸ்(Thanks Kesav)”….!

     
    ”கருத்தவர், ஆனால் கதிரொளி வெண்ணை
    நிறத்தவர், நிர்மால்ய நீலம் -தரித்தவர்,
    வண்ணமவர்,கேசவ்தன் எண்ணமவர், ஆய்ச்சியின்
    கண்ணனை நெஞ்சே கருது’’….!

    கேசவ் , மஹாகவி பாரதியாரின் ‘’குஞ்சென்றும் ,மூப்பென்றும் உண்டோ’’ வரிகள்தான் ‘’அக்கினிக் குஞ்சை’’ அன்னை தாலாட்டும் படம் பார்த்ததும் ஞாபகம் வந்தது….சூப்பர் கேசவ்….!

    ‘’காக்கைச் சிறகினை (ஏரார்ந்த) கண்ணி ,மடியிருத்தி
    பூக்கச்செய் கின்றனள் பொன்குஞ்சாய்: -யாக்கை
    நிறமெது வானாலும் நீலநிறக் கண்ணன்
    பரமது பாகவதப் பிஞ்சு’’….!

     
    ”புதியன எண்ணும் பழைய விரும்பி,
    மதிவழி எல்லாமே மாயை: -பதிநூற்றி(108 திருப்பதி)
    எட்டில் வளர்கண்ணா , என்னத் தவம்செய்தாள்
    எட்டவளை(கண்ணன் -எட்டாவது பிள்ளை) அம்மாவாய் ஏற்பு’’….!

     
    ’’அட்டைக் கரியவர் ,ஆனாரே வெள்ளையாய்
    பெட்டை யசோதையின் பாதுகாப்புத்-தொட்டிலில்
    தன்நினைவு இல்லாது தாலாட்டில் தூங்கிடும்
    கண்ணனை நெஞ்சே கருது’’….கிரேசி மோகன்….!

    Share
  • ’’தாய்’’….!

     

     

    ’’தாயில்லாமல் வீடில்லை
    தானாய் சுத்தம் ஆவதில்லை
    எனக்கொரு தாய் இருக்கின்றாள்
    எங்காத்தை பெருக்கி மொழுகுகின்றாள்’’

    காலங் கார்த்தால வருவாள்-துடப்பம்
    குச்சியால் தூசு தட்டுவாள்-
    பாத்திரம் அலம்பி,பழையதை உண்டு
    காத்திரமாய் துணி தோய்த்திடுவாள்-அந்தத்

    ’’தாயில்லாமல் வீடில்லை
    தானாய் சுத்தம் ஆவதில்லை
    எனக்கொரு தாய் இருக்கின்றாள்
    எங்காத்தை பெருக்கி மொழுகுகின்றாள்’’….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    MANASA SANJARARE….!

    171124 -Vanamali -mixed media - lr Charcoal, conte - 15”x22”

    “வனமாலை சூடி வசுக்களை மேய்க்கும்
    கனவானே மன்னார் குடிசேய், -மனவான்,
    வெளிதனில் சஞ்சாரி ,வேய்ங்குழல் ஊதும்
    களிமிகு கண்ணனே காப்பு “….கிரேசி மோகன் ….!

    ”பராக்பராக் கண்ணன் பரந்தாமன் மன்னன்
    பராக்பராக் கேசவ் பிரஷ்ஷில் -பராக்கெங்கும்
    இன்னாரென்று பாராதே எங்கும் இருக்கின்றான்
    மன்னார் குடிமைனர் மால்”….!

    ”வில்டாப் விஜயனுக்கு வீரம் விளைவித்து
    ஃபுல்ஸ்டாப் நூறுக்குப் போட்டவன் -அல்டாப்பாய்
    கண்ணார்வம் கொண்டிங்கு கோதைக்காய் காத்திருக்கான்
    மன்னார் குடிமைனர் மால்’’….!
    ஓவியப் பிதாமகர் திரு.கோபுலு சார் நமது கேசவ்ஜிக்கு ‘’கிருஷ்ணப் பிரேமி’’ என்ற பட்டத்தை அளித்துள்ளார் என்பதை சந்தோஷத்துடன் பகிர்ந்து கொள்கிறேன்….(கேசவ் வெகு கூச்சத்துடன் என்னிடம் இந்த சந்தோஷத்தைப் பகிர்ந்து கொண்டது அடியேன் செய்த பாக்கியமே)….
    ’’யாரென் றுதெரியுதா! , யாதவன் தானிவன்மன்
    னார்குடி கோபுலு மாடோடு- சாரே!(மலையாள ‘’சாரே’’)
    கிருஷ்ணனை டெய்லி தருகின்ற கேசவ்,
    ‘’கிருஷ்ணப் பிரேமி கரெக்ட்’’….கிரேசி மோகன்….

     

    Share
  • ரமண வசனாம்ருதம்….!

     

    கிரேசி மோகன்
    ————————
    ”தூக்கத் தினிலிருப்போம், துக்கத் தினிலிருப்போம்,
    சாக்காய் படுத்தாலும் சம்சார -ஏக்கத்தால்,
    ஆவது தாகம் அதனைத் தணித்திட
    ஜாவ்அந்த சோணா ஜலம்’’….!

    “ராமா யணத்தைநாம் ராமருக்கே சொன்னாற்போல்
    சாமா னியனென்றே செப்புதுஸத் , -நாமானோம்
    ஆணவ(அகந்தை மனம்) புத்தி அதனால் தடைமுக்தி ;
    வீணவம் மாய விதி “….!

    ‘’உலகமது உண்மையில் உன்னுள் உளது
    அலகிலா ஆனந்த ஆன்மத் -திலகமதை
    இட்டுக்கொள் உந்தன் இதயத்தில், பின்னர்நீர்
    தட்டுங்கள் தாப்பாள் திறப்பு’’…..!

    ‘’தூங்கும் உனக்கில்லை சாங்கியம்(கடமை), சாத்திரங்கள்,
    ஆங்குள்ள ஆளோ அபேதனாய் -ஈங்குளான்:
    இத்தை நினைந்து இயல்பாய் இருந்திடு:
    சொத்தை உடம்பு ஜடம்’’….!

    உலகத் துயரை உனக்கு உணர்த்தும்
    கலக மனமே, கருமம் -பலவகை
    தோற்றுவித்து துன்பமதில் துய்த்திட வைத்திடும்:
    மாற்றியருள் அண்ணா மலை’’….!

    “பொய்நெஸ் விலக பிறந்திடும் ஆனந்த
    ஐநெஸ்(I-ness )ஸாய் ஆன்ம அவதார -” HIGHNESS “,-
    அவரது ஆட்சியில் அல்லியூர் கேணி(கிணறு -திருஅல்லிக் கேணி)
    சுவரில் நுணலாய் (தவளை ) சுகி”….!
    “முன்னாடி யாரோநீ! ,பின்னாடி யார்யோனி!-
    கண்ணாடி பூர்வத்தைக் காட்டாது;-பன்னாடை!-
    செய்ததையே செய்தாய்; சரணடை ஈசரிடம்-
    கைதாவாய் காலன் கரத்து”….!
    “எந்தவேலை ஆனாலும் எந்தவேளை ஆனாலும்,
    சிந்தையில் சித்தை சுகித்திருக்க, -அந்த,
    சமாதி லயமே சகஜமாகும் ,பட்ஷம்,
    சமாதானம் ஆகும் சலிப்பு”….!

    ”அதுவேண் டுமென்றும், இதுவேண் டுமென்றும்
    எதுவேண் டினாலும்நீ ஏழை, -புதுவிதமாய்,
    ஆடுஓ நாய்க்காய் அழுமோ! அதுநனைய!,
    ’’மேடருணை செல்மன மே’’….கிரேசி மோகன்….

     

    சல்லடை போட்டு சலித்து சலித்தேனே
    உள்ளடைந்த நானார் உணர்வதற்கு -பல்லிடை
    மாட்டிய பாக்காய் மனநட்டு வாங்கத்தால்
    நாட்டியம் ஆடுதே ’’நான்’’….!

    ராப்பகலாய் தேடு ரமண உபாயத்தால்
    தோற்பில்லை நீங்கா தெளிவுதான் -ஆப்பகல
    மந்தியே ஆன்ம மயிலேறி வான்புகலாம்
    உந்தியாரில் உள்ளபடி உய்….கிரேசி மோகன்….!

    “இல்லை உரைக்க இருப்பான் மறுப்பவன்
    முல்லையில் வீசும் மணமாக;-தொல்லைக்கு
    முற்றுமெனப் போட்டிட, மீளா உறக்கத்தில்
    பற்றுமனம் இன்றிப் படு “….கிரேசி மோகன் ….!

    ‘’இறந்துவிட்ட ஆட்டின் இருவிழியாய், ஞானி
    திறந்திருந்தும் கொள்ளான் திருஷ்டி, -பிறந்திறக்கும்,
    இவ்வாழ்வு மாயை, இராப்பகல் பேதமற,
    முவ்வாசை தாண்டி முழி’’….கிரேசி மோகன்….!

     

     

    Share
  • ரமண வசனாம்ருதம்….!

     

    கிரேசி மோகன்
    ——————————–

    “முட்டைக்குள் குஞ்சாக ,கொட்டைக்குள்(மாங் கொட்டை) பிஞ்சாக ,
    சட்டைக்குள் (மேனிக்குள் )வாழ்கின்ற ஜீவனே , -பட்டைகள் –
    தீட்டியநீ வைரம் ,திருடன் வரும்வரையில்,
    காட்டி யயிடத்தில் குந்து “….(1)

     
    மாயநான் ஆணவம் மாற்றிடும் கோவணம்
    தூயநான் நிர்வாண தெய்வீகம் -நாயனார்
    யோகி ரமணரின் யோசனையைக் கேட்டுணர்வோர்
    சாகிறதை வென்ற சவம்….(2)

    கண்டேன் திருடனைக் கையும் களவுமாய்
    கொண்டேன் மனச்சிறையில் கைதியாய் -அண்டேன்
    இனியவன் பக்கம் தனிமையே சொர்கம்
    கனிநான் அவன்கள்ளக் காய்….(3)

    ஒப்புக்கு சப்பாணி ஊருக்கு மாங்கொட்டை
    சொப்புக்(கு) ஆடும் சிறுவனெனும் -இப்பக்
    குவம்வந்தால் ஈரேழு கண்டங்கள் ஆண்டும்
    தவம்செய்து வாழ்வோம் தனித்து….(4)

    சமத்துவ வேந்தன் சமர்த்தனுன் ஆன்மா
    அமர்த்தவனை சிந்தையில் ஆள -விமர்சனம்
    செய்யும் மனசாட்சி பொய்யின் அரசாட்சி
    நெய்யெதற்கு வெண்ணை நமக்கு…(5)…. கிரேசி மோகன்….!

     

     

    Share
  • “பாக்கிய லக்ஷ்மி பாரம்மா ’’….!

     

    “பாக்கிய லக்ஷ்மி பாரம்மா -நம்மன்னை
    பாக்கிய லக்ஷ்மி பாரம்மா

    பானை பிடித்தவன் ,தூணை பிடித்தவன்
    சேணம் பிடித்த சாரதியின்
    மேனி பிடித்தவர் மார்பில் பதிந்திடும்
    பாக்கிய லக்ஷ்மி பாரம்மா

    “உச்சியுறியேறும் அச்சுத ரமணன்
    மச்சமாகியே மார்பில் அமர்ந்தவள்
    பாக்கிய லக்ஷ்மி பாரம்மா “….!

    “சிம்ம ராஜனை சாந்தமாக்கிடும்
    நம்ம அன்னையே நடுவில் (மடியில் ) அமர்செள
    பாக்கிய லஷ்மி பாரம்மா”….!….கிரேசி மோகன்….!

    Share
  • ஸ்ரீ ரமண வசனாம்ருதம்….!

     

     

    “பண்ணதையே பண்ணிண்டு , தின்னதையே தின்னுண்டு ,
    சொன்னதையே சொல்லும் சுகபுருஷா (கிளிப்பிள்ளை ) -என்னதைக்-
    கண்டாய் மனமே! கவனிநான் யாரென்று :
    கண்டவர் விண்டிலர் காண்”….!கிரேசி மோகன் ….!

    Share
  • வெண்பூ வெண்பா(மஹாசரஸ்வதி வெண்பாக்கள்….!)

     

    வெண்பூ வெண்பா
    ————————

    (சரஸ்வதி வெண்பாக்கள்)
    ————————————

    சு.ரவியின், ரவிவர்மா(ஆயில் பெயிண்டிங்) ஓவியம் பார்த்து எழுதியது….!

    19-saraswathi-ravi-varma-paintings

    “எண்ணையின் வண்ணத்தில் எண்ணென் கலையாளை
    பண்ணிசைக்கும் கோலம் படுஜோர் – உன்நுதல்
    குங்குமம் கொட்டி கலைமகள் நாசியில்
    தங்கிய மூக்குத்தி தூள்’’….(1)

    நாணல் இடையாளாம், நாவன்மை உடையாளாம்
    பூணல் அயன்மணந்த புண்ணியளாம்-வீணில்
    அலையாதெ நெஞ்சே அறுபத்தி நான்கு
    கலையாளை சேரக் கவி….(2)

    நாக்கில் நரம்பின்றி நாளும் வசைபாடி
    தீக்குள் குளிர்காயா தேநெஞ்சே -வாக்கில்
    கலைவாணி வந்து குடியேறும் வண்ணம்
    அலைபாய்ந் திடா(து) அடங்கு….(3)

    ரவியுடன் சுற்றி ரகசியங்கள் கற்ற
    கவிஅனுமன் கானம் குளிரப் -புவிமிசை
    பாயப் பொழிவாள் படிக நிறத்தாள்
    ஆய கலையாள் அருள்….(4)

    வந்தனம் செய்ய வரமளிக்கும் வாணியால்
    மந்தனும் ஆவானே மாகவி -சிந்தையும்
    வாக்கும் செயலுமவள் போக்கே துதித்திட
    தேக்கும் வடிக்குமே தேன்….(5).

    பலகலைக்கு ஞானி பயில்வோர்க்கு தோணி
    தளைதப்பா தீந்தமிழின் தேனி -நிலைகுலைந்து
    நான்நீ எனப்பேசும் நாநீ நுழையாயே
    வாணி வரமருள் நீ….(6)….கிரேசி மோகன்….!

    தேஜ சொரூபிணீ தேவி சரஸ்வதி
    ராஜ ஷியாமளா ரக்ஷிநீ -பூஜை
    புனஸ்காரம் எந்தன் நமஸ்காரம் தாயே
    மனக்கிலேச யாழினை மீட்டு….(7)

    வேதங்கள் நான்குமவள் காதணியும் குண்டலம்
    நாதப் பரப்பிரமம் நாசிக்காற்று -ஓதும்
    புராணங்கள் மேகலை பாதச் சிலம்பு
    சராசரங்கள் சேரும் சபை….(8)

    கட்டளை போடு கலித்துறைக்கு பாரதி
    கட்டளை கோர்ப்பெனக்கு கைவர -வெட்டவெளி
    வெண்பா களித்துறையில் வாழவைத்த வாணியே
    என்பால் கலித்துறைக்கேன் ஏய்ப்பு….(9)

    சகலகலா வல்லி அகலாதென் வாக்கில்
    பகலிரவாய்க் கொள்வாய்நீ பள்ளி -புகலவரும்
    வெண்பாவாம் வாரிசத்தில் வந்தமர்ந்து நின்புகழை
    பெண்பாவாய் பாடிப் பற….(10)

    நவையூறும் நாவில் சுவையூறச் செய்து
    அவையேறும் வாழ்வை அளிப்பாய் -இவையாவும்
    பெற்றிட வெண்பாக்கள் குற்றம் குறையின்றி
    சொற்றுளியால் சீராய் செதுக்கு….(11)

    மட்டொழுகும் வெண்கமலம் மீதில் தனிவெண்மைப்
    பட்டிழைய சிற்றிடையில் போயமர்ந்து -மொட்டிதழால்
    ஆய கலைகளை ஆன்றோர்(கு) அறிவிக்கும்
    தாயே எனக்குமதைத் தா….(12)….கிரேசி மோகன்….!

     

    சவ்வாது சந்தனம் சத்தியம் அவள்வாக்குக்(கு)
    ஒவ்வாத வாச உபமானம் -இவ்வாத
    உண்மை உணர்ந்தகம்பன் ஓதினன் அந்தாதி
    அம்மை சரஸ்வதிமேல் அன்று….(13)

    வேதம் உபநிடதம் வித்தைகள் எண்ணென்னும்
    பாதம் விளையாடும் பிள்ளைகள் -மாதம்மும்
    மாரியும் பெய்தலாய் மாண்புமிகு கல்வியதி
    காரியின்கண் பார்க்கக் கவி….(14)

    காமுறுவாள் கற்போர்மேல் கைகொடுக்கக் கற்பகமாய்
    நாமருவி நூற்சேலை நெய்திடுவாள் -பூமருவும்
    வாவிவளர் கூத்தனூர் தேவி சரஸ்வதி
    தாவி அளிப்பாள் தமிழ்….(15)

    துமியென்ற கம்பன் தவறில்லை என்று
    சமயத்தில் செய்தாள் சகாயம் -தமிழென்று
    ஆய்ச்சியாய் வந்தன்று பேச்சு வழக்காக்க
    கூச்சலிட்ட கூத்தன் களைப்பு….(16)

    காளிதாச கம்ப குமர குருபரர்கள்
    தோளிலங்க வஸ்த்திரமாய்த் துள்ளிடுவோய் -தாளிரெண்டில்
    கைக்கட்டிக் கேட்கின்றேன் பொய்க்கெட்டா புத்தியை
    கைக்குட்டை யாய்கையில் கட்டு….(OR)
    கைக்குட்டை யாய்கை கொடு….(17)

    படிகமணி மாலை படிப்புணர்த்தும் ஓலை
    மடிதவழும் வீணை, மருங்கின் -பிடிபடாமை
    கோலத்தை நெஞ்சிருத்தி கும்பிடுவோர் முன்வாழ்த்தாம்
    வேலொத்து பாய்ச்சும் வசவு….(18)….கிரேசி மோகன்….!

    (ரவி)வர்மன் வரைந்தாற்போல் வாரிசத்தில் வீற்றிருந்து
    தர்மம் தவம்தானம் தேர்ந்திட -கர்மமாய்
    மோனத்தில் மூழ்கி முனையும் மஹாசக்தி
    ஞானத்தை நானுற நல்கு….(19)

    அற்பனே ஆனாலும் ஆசான் அவளிரெண்டு
    பொற்பதம் போற்ற புழலறிவின் -கற்பனை
    ஊற்றில் குளித்து உவப்பால் துடைத்தணிவர்
    மாற்றுத் துணியாய் மனது….(20)

    கல்வி கலவிடும் செல்வம் சிணுங்கிடும்
    வல்லமை வீரம் வணங்கிடும் -செல்வி
    கலைவாணி யாலுன் கவுரவம் கூடும்
    தலைவானில் நிற்கும் திமிர்ந்து….(21)

    வேறெதையும் எண்ணாது வேண்டி வணங்கிடுவாய்
    சாரதையை நம்பி சிருங்கேரி -ஊரதனில்
    பாரதன்பின் வாழ்வு பரிசுத்தம் ஆகிடும்
    பாரதன்பின் பார்க்கப் பளிங்கு….(22)

    துங்கா நதிக்கரைசத் சங்காய் சிருங்கேரி
    சிங்கா சனத்திருக்கும் சாரதே -சங்காய்
    கிடக்கின்றேன் சும்மா எடுத்தூதி அம்மா
    நடத்தெனது நாடகத்தை நன்கு….(23)

    சங்கரன் முன்செல்ல சாரதை பின்செல்ல
    துங்கையின் தீரத்தில் தேவியின்ச -தங்கையின்
    சத்தம் குறைந்திட சத்குரு பார்த்திட
    வித்தை சிருங்கேரி வாய்த்து….(24)….கிரேசி மோகன்….!.

    கர்ப நுணல்மேல் குடையாய் படம்பிடிக்கும்
    சர்ப சகாய சிருங்கேரி -கர்ப
    கிரகத்து சாரதையை கும்பிடுவோர் முன்பு
    கிரகங்கள் கூப்பும் கரம்….(25)….

    வித்தை, வினயம், விசாரம், விவேகமிவை
    மொத்தமுமென் நெஞ்சில் முளைத்திட -ஸ்ரத்தை
    அளித்திடு சாரதா அம்பிகே, என்னுள்
    முளைத்திடு முண்டக மா….(26)….

    உளம்கொடுக்கும் உன்ன, உரம்கொடுக்கும் நண்ண
    களம்கொடுத்து ஞானக் கொழுந்தாய் -புலன்மடக்கி
    ஆசை அறுத்தான்ம பூசைக்கு சாரதை
    ஓசை சதங்கையொலி ஓம்….(27)

    நையப் புடைப்பாள் நமதகந்தை போக்கிட
    ஐயம் அகன்றதும் ஆதரவாய் -கையைப்
    பிடித்திழுத்துச் செல்வாள் பரமசுகம் கூட்ட
    படித்ததெலாம் பெண்ணிவள்முன் பாழ்….(28)

    கோனார் கணக்கினில், கம்பன் கவிதையில்
    நானார் விளக்கநூல் நாற்பதில் -மூணாறில்
    எண்ணும் எழுத்துமாய் எங்கும் இருப்பவளை
    எண்ணல் அயன்கை எழுத்து….(29)

    பேசக் கொடுத்ததில்லை பாரதியின் தாய்மொழி
    கோஷமிட்டு கூற்றன் குதிக்கஆ -வேசமுற்று
    நாரணா, நான்முகா, நாதா நமச்சிவாயா
    கூறநா கிட்டிடும் காப்பு….(30)….கிரேசி மோகன்….!

    எண்ணமவள் நேற்று, எழுத்தவள் இன்றுநாம்,
    பண்ணும் செயலவள் பின்நாளை -பெண்ணவள்
    ஆன்றோர்க்கு ஞானம் அறிவிலார்க்கு ஆணவம்
    தேன்தோன்றும் தாய்சொல் தமிழ்….(31)

    கீரன் திருமுரு காற்றுப் படையவள்
    மாறன் திருவாய் மொழியவள் -சூரன்
    மகாகவி பாரதியின் மாங்குயில் பாட்டு
    தகாதோர் செவிக்கவள் திட்டு….(32)

    வண்டுவந்து மொய்க்கா வரைந்த மலர்சோலை
    கொண்டவர்மன் ஓவியத்தில் கால்மடித்து -முண்டகத்தின்,
    மெல்லிதழில், தோகை மயிலன்ன தடாகத்தில்
    நல்கிடுவாள் யாழில் நலம்….(33)

    என்பிழைகள் ஏராளம் என்றாலும் அன்னையே
    புன்மொழியான் என்னைப் பொறுத்தருள்வாய் -உன்விழியால்
    கூட்டு தமிழை கவிபாடும் ஆற்றலை
    ஏட்டுச் சுரைக்காய் எனக்கு….(34)

    பாக்கு பழமிலை பூக்கள் பணிவெதிர்
    பார்ப்பாள் பராசக்தி பாரதி -வாக்கில்
    வினயமுடன் வித்தை விரும்புவோர் தம்மை
    தனயனென ஏற்பாள்அத் தாய்….(35)

    வேசிவரக் காத்தவடை தோசை வரதனை
    ஆசுகவி ஆக்கிய ஆனைக்கா -ஆசிகையே
    காளமேகம் வாய்க்கெட்டி கைக்கெட் டியவாணி
    மூளயோகம் என்வாய்க்கும் மூட்டு….(36)….கிரேசி மோகன்….!

     

    பாத்தநூறு தெய்வத்தில் பாரதியை போலிங்கு
    காத்திருக்க வைக்கா கடவுளெது -கூத்தனூர்
    தேவி மனம்வைத்தால் தேளின் கொடுக்கிலும்
    காவியம் கொட்டும் களிப்பு….(37)

    சாத்திரங்கள் வேதங்கள் கூத்தனூர் தேவியின்
    நேத்திரத்து தீர நுணலிமைகள் -பாத்திரம்
    கண்டவள் பார்வை கருவண்டு போடுமே
    பண்டிதப் பிச்சை பிறப்பு….(38)

    பண்டித வன்புலிக்கு பாமரத் தோல்போர்த்தும்,
    மண்டை கனத்தில் மிதக்குங்கால் -எண்டிசைக்கும்
    மூளியைக் காவிய மன்னனாய் மாற்றிடும்
    காளியின் தாஸன் கதை….(39)

    வேதவ்யாசன் சொன்னது வேழம் தொகுத்தது
    கீதையைக் கண்ணன் கொடுத்தது -ஏதுமே
    வெற்றிக்குப் பின்னிருந்து வாணி விதைத்ததே
    முற்றும் துறக்கவும்அம் மாது….(40)

    கூனியின் சூழ்ச்சியும் கைகேயி வீழ்ச்சியும்
    மானி இராமன் முதிர்ச்சியும் -தோணி
    குகனின் நெகிழ்ச்சியும் குன்றனைய வாயு
    மகனனுமன் வாக்குமவள் மாண்பு….(41)

    பால்முகமும் வேல்விழியும் மால்மருவா நூல்மருங்கும்
    ஆல்சிவன்பெண் பால்வடிவாய், நால்மறையும் -தாள்தழுவ
    சீதமலர் போதமர்ந்து போதிக்கும் ஏதமில்
    லாதவள்யாழ் கீதம் லயிப்பு….(42)….கிரேசி மோகன்….!

    கூனியின் சூழ்ச்சியில் கைகேயி வீழ்ச்சியில்
    மானி இராமன் முதிர்ச்சியில் -தோணி
    குகனின் நெகிழ்ச்சியில் குன்றனைய வாயு
    மகனின்சொல் வாக்கிலவள் மாண்பு….(43)

    காடுவரை சென்றங்கு கொள்ளியில் வெந்துஎமன்
    ஏடுரைத்த வண்ணம் எரிவாயில் -போடும்முன்
    முட்டா ளையும்காக்கும் மந்திரமாம் வாணியைநா
    கட்டாலப் போறவனே கொள்….(44)

    தாத்தனூர் சேர்த்த திரவியங்கள் செல்லாது
    கோர்த்தநூறு சுற்றமும் கூடவரா -கூத்தூர்
    பேடையை நம்பிநீ பாடை படுத்திருக்க
    காடென் கடைசிவரை காப்பு….(45)

    கல்லறைக் காட்டினில் செல்லரித் தாலுமுடல்
    சொல்லரித்துப் போகாது சோர்வடையாய் -புல்லரித்து
    போற்றி உனைத்தூக்கி பூர்புவஸ் லோகத்திற்(கு)
    ஏற்றி விடுவான் எமன்….(46)

    தெக்குவாய் கூறிடும் தோத்திரங்கள் சுத்தமாய்
    மக்குபோய் ஆளும் மகாசபை -சுக்கலான
    ஓலைச் சுவடி உவேசா அவர்களால்
    நாளைக் கடந்துநிற்கும் நூல்….(47)

    கற்றதனால் ஆயபயன் நற்றமிழாள் நல்லுறவைப்
    பெற்றதே போதுமென்று போதியமர் -மற்றதெலாம்
    செந்திருவால் செல்வமும் சங்கரியால் வீரமும்
    வந்திரும்பார் வாணி வகுத்து….(48)….கிரேசி மோகன்….!

    போகத்தில் விந்து புகுமுன் புகுந்தங்கு
    மோகச் சினைமுட்டை மூளையை -வேகவைத்து
    பாமரனா, பண்டிதனா, மாமர மண்டையா
    தாமரையாள் தந்திடுவாள் தீர்ப்பு….(49)

    உச்சிக் குடிமியை ஊடாடும் பூணலை
    மெச்சிடும் ஆசார மேன்மையை -துச்சமாய்
    எண்ணும் கலைவாணி ஏற்பாள் வினயத்தை
    கண்ணின் மணியாய்க் குறித்து….(OR)
    மின்னும் அணியாய் மகிழ்ந்து….(50)

    வீணை படிகமணி வேதக் கரத்தளை
    பானை பிடிக்குமயன் பத்தினியை -சேனை
    கலைகள்எண் ணென்சூழ செந்தா மரையில்
    விளையும்வெண் பூவை வணங்கு….(51)

    பத்தரைப் பொன்னில் பதினாறாம் யவ்வனத்தில்
    முத்திறைக்கும் சேயின் முறுவலில் -சித்திரையில்,
    புத்தரின் மோனத்தில், புண்ணிய தீர்த்தத்தில்
    இத்தரைதர் மத்தில் இவள்….(52)

    காசியில் கங்கையில், ஆசியில், ஆண்மையில்
    வாசி அடக்கும் விளையாட்டில் -பூசிடும்
    மாசிவை வெண்ணீற்றில், ஹாசிய நாடகத்தில்
    ஆ!சிரி அப்பா அவள்….(53)

    தண்டடியில் தூங்கி தவமகுடி கேட்டெழுந்து
    மண்டயிடித் தாங்கே மலமறுக்கும் -குண்டலினிப்
    பாம்புக்(கு) அடங்காது, பாரதியின் கண்ணிநுண்
    தாம்புக்(கு) அடங்கத் தெருள்….(54)….கிரேசி மோகன்….!

     

     
    ————————————————————————————————————————–

     

     

    Share
  • ’’ரமண வசனாம்ருதம்’’….!

     

    ‘’தள்ளலும், கொள்ளலும், தானாம் யதார்த்தத்திற்(கு)
    எள்ளளவும் இல்லைகாண் எய்ததை: -துல்லிய
    வெண்தா மரைஇதயம் வேதம் இருக்கும்(ம)அக
    கண்தாவென்(று) ஈசரிடம் கேள்’’….கிரேசி மோகன்….!

    Share
  • பகவான்(ரமணர்) உவாச….!

     

    ’’அநாத்மாவோ ஆத்மாவுக்(கு) அன்னியம் அல்ல
    பெனாத்துகின் றாய்பேதை போல: -வினாத்தவம்
    மேற்கொண்டு உன்னுள்ளே மாண்புமிகு நானார்
    நூற்கண்டை ஊசியால் நெம்பு’’….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    150913 -Soulmates -watercolour -wm

    ’’கால்மாட்டில் மேய்ந்திட கோமாதா ரெண்டுமே
    டோல்கேட்(TOOL GATE) திருமால்தன் காலெட்ட(கால் எட்ட),-மால்காட்டில்
    பால்கொட்டி மாரியாய்(மழையாய்) பந்தயமாய்ச் சுற்றுது
    ஸோல்மேட்டை ,ம்யூஸிகல் சேர்(MUSICAL CHAIR)”….கிரேசி மோகன்….!

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    IMG_4319
    ”தாயை மயக்குகிறார், தாமோ தரர்தன்மண்
    வாயைத் திறக்க வினோதங்கள்: -ஆயர்
    குலக்கொழுந்தா!அன்றி கடவுளா! என்று,
    அலமலங்கி னாள்அன்னை அன்று’’….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    171103 i - Gosakha -wm

     

    ”நாஸகர் கம்ஸனுக்கு, நாயகர், வாகீஸ
    போஷகர் வெண்பா விளையாட்டில், -கோஸகர்,
    கொட்டும் மழையில் குளிர்காத்த ரக்‌ஷகர்,
    விட்டலவர் கண்ணன் வியப்பு’’….கிரேசி மோகன்….!

    Share