வெண்பூ வெண்பா(மஹாசரஸ்வதி வெண்பாக்கள்….!)

 

வெண்பூ வெண்பா
————————

(சரஸ்வதி வெண்பாக்கள்)
————————————

சு.ரவியின், ரவிவர்மா(ஆயில் பெயிண்டிங்) ஓவியம் பார்த்து எழுதியது….!

19-saraswathi-ravi-varma-paintings

“எண்ணையின் வண்ணத்தில் எண்ணென் கலையாளை
பண்ணிசைக்கும் கோலம் படுஜோர் – உன்நுதல்
குங்குமம் கொட்டி கலைமகள் நாசியில்
தங்கிய மூக்குத்தி தூள்’’….(1)

நாணல் இடையாளாம், நாவன்மை உடையாளாம்
பூணல் அயன்மணந்த புண்ணியளாம்-வீணில்
அலையாதெ நெஞ்சே அறுபத்தி நான்கு
கலையாளை சேரக் கவி….(2)

நாக்கில் நரம்பின்றி நாளும் வசைபாடி
தீக்குள் குளிர்காயா தேநெஞ்சே -வாக்கில்
கலைவாணி வந்து குடியேறும் வண்ணம்
அலைபாய்ந் திடா(து) அடங்கு….(3)

ரவியுடன் சுற்றி ரகசியங்கள் கற்ற
கவிஅனுமன் கானம் குளிரப் -புவிமிசை
பாயப் பொழிவாள் படிக நிறத்தாள்
ஆய கலையாள் அருள்….(4)

வந்தனம் செய்ய வரமளிக்கும் வாணியால்
மந்தனும் ஆவானே மாகவி -சிந்தையும்
வாக்கும் செயலுமவள் போக்கே துதித்திட
தேக்கும் வடிக்குமே தேன்….(5).

பலகலைக்கு ஞானி பயில்வோர்க்கு தோணி
தளைதப்பா தீந்தமிழின் தேனி -நிலைகுலைந்து
நான்நீ எனப்பேசும் நாநீ நுழையாயே
வாணி வரமருள் நீ….(6)….கிரேசி மோகன்….!

தேஜ சொரூபிணீ தேவி சரஸ்வதி
ராஜ ஷியாமளா ரக்ஷிநீ -பூஜை
புனஸ்காரம் எந்தன் நமஸ்காரம் தாயே
மனக்கிலேச யாழினை மீட்டு….(7)

வேதங்கள் நான்குமவள் காதணியும் குண்டலம்
நாதப் பரப்பிரமம் நாசிக்காற்று -ஓதும்
புராணங்கள் மேகலை பாதச் சிலம்பு
சராசரங்கள் சேரும் சபை….(8)

கட்டளை போடு கலித்துறைக்கு பாரதி
கட்டளை கோர்ப்பெனக்கு கைவர -வெட்டவெளி
வெண்பா களித்துறையில் வாழவைத்த வாணியே
என்பால் கலித்துறைக்கேன் ஏய்ப்பு….(9)

சகலகலா வல்லி அகலாதென் வாக்கில்
பகலிரவாய்க் கொள்வாய்நீ பள்ளி -புகலவரும்
வெண்பாவாம் வாரிசத்தில் வந்தமர்ந்து நின்புகழை
பெண்பாவாய் பாடிப் பற….(10)

நவையூறும் நாவில் சுவையூறச் செய்து
அவையேறும் வாழ்வை அளிப்பாய் -இவையாவும்
பெற்றிட வெண்பாக்கள் குற்றம் குறையின்றி
சொற்றுளியால் சீராய் செதுக்கு….(11)

மட்டொழுகும் வெண்கமலம் மீதில் தனிவெண்மைப்
பட்டிழைய சிற்றிடையில் போயமர்ந்து -மொட்டிதழால்
ஆய கலைகளை ஆன்றோர்(கு) அறிவிக்கும்
தாயே எனக்குமதைத் தா….(12)….கிரேசி மோகன்….!

 

சவ்வாது சந்தனம் சத்தியம் அவள்வாக்குக்(கு)
ஒவ்வாத வாச உபமானம் -இவ்வாத
உண்மை உணர்ந்தகம்பன் ஓதினன் அந்தாதி
அம்மை சரஸ்வதிமேல் அன்று….(13)

வேதம் உபநிடதம் வித்தைகள் எண்ணென்னும்
பாதம் விளையாடும் பிள்ளைகள் -மாதம்மும்
மாரியும் பெய்தலாய் மாண்புமிகு கல்வியதி
காரியின்கண் பார்க்கக் கவி….(14)

காமுறுவாள் கற்போர்மேல் கைகொடுக்கக் கற்பகமாய்
நாமருவி நூற்சேலை நெய்திடுவாள் -பூமருவும்
வாவிவளர் கூத்தனூர் தேவி சரஸ்வதி
தாவி அளிப்பாள் தமிழ்….(15)

துமியென்ற கம்பன் தவறில்லை என்று
சமயத்தில் செய்தாள் சகாயம் -தமிழென்று
ஆய்ச்சியாய் வந்தன்று பேச்சு வழக்காக்க
கூச்சலிட்ட கூத்தன் களைப்பு….(16)

காளிதாச கம்ப குமர குருபரர்கள்
தோளிலங்க வஸ்த்திரமாய்த் துள்ளிடுவோய் -தாளிரெண்டில்
கைக்கட்டிக் கேட்கின்றேன் பொய்க்கெட்டா புத்தியை
கைக்குட்டை யாய்கையில் கட்டு….(OR)
கைக்குட்டை யாய்கை கொடு….(17)

படிகமணி மாலை படிப்புணர்த்தும் ஓலை
மடிதவழும் வீணை, மருங்கின் -பிடிபடாமை
கோலத்தை நெஞ்சிருத்தி கும்பிடுவோர் முன்வாழ்த்தாம்
வேலொத்து பாய்ச்சும் வசவு….(18)….கிரேசி மோகன்….!

(ரவி)வர்மன் வரைந்தாற்போல் வாரிசத்தில் வீற்றிருந்து
தர்மம் தவம்தானம் தேர்ந்திட -கர்மமாய்
மோனத்தில் மூழ்கி முனையும் மஹாசக்தி
ஞானத்தை நானுற நல்கு….(19)

அற்பனே ஆனாலும் ஆசான் அவளிரெண்டு
பொற்பதம் போற்ற புழலறிவின் -கற்பனை
ஊற்றில் குளித்து உவப்பால் துடைத்தணிவர்
மாற்றுத் துணியாய் மனது….(20)

கல்வி கலவிடும் செல்வம் சிணுங்கிடும்
வல்லமை வீரம் வணங்கிடும் -செல்வி
கலைவாணி யாலுன் கவுரவம் கூடும்
தலைவானில் நிற்கும் திமிர்ந்து….(21)

வேறெதையும் எண்ணாது வேண்டி வணங்கிடுவாய்
சாரதையை நம்பி சிருங்கேரி -ஊரதனில்
பாரதன்பின் வாழ்வு பரிசுத்தம் ஆகிடும்
பாரதன்பின் பார்க்கப் பளிங்கு….(22)

துங்கா நதிக்கரைசத் சங்காய் சிருங்கேரி
சிங்கா சனத்திருக்கும் சாரதே -சங்காய்
கிடக்கின்றேன் சும்மா எடுத்தூதி அம்மா
நடத்தெனது நாடகத்தை நன்கு….(23)

சங்கரன் முன்செல்ல சாரதை பின்செல்ல
துங்கையின் தீரத்தில் தேவியின்ச -தங்கையின்
சத்தம் குறைந்திட சத்குரு பார்த்திட
வித்தை சிருங்கேரி வாய்த்து….(24)….கிரேசி மோகன்….!.

கர்ப நுணல்மேல் குடையாய் படம்பிடிக்கும்
சர்ப சகாய சிருங்கேரி -கர்ப
கிரகத்து சாரதையை கும்பிடுவோர் முன்பு
கிரகங்கள் கூப்பும் கரம்….(25)….

வித்தை, வினயம், விசாரம், விவேகமிவை
மொத்தமுமென் நெஞ்சில் முளைத்திட -ஸ்ரத்தை
அளித்திடு சாரதா அம்பிகே, என்னுள்
முளைத்திடு முண்டக மா….(26)….

உளம்கொடுக்கும் உன்ன, உரம்கொடுக்கும் நண்ண
களம்கொடுத்து ஞானக் கொழுந்தாய் -புலன்மடக்கி
ஆசை அறுத்தான்ம பூசைக்கு சாரதை
ஓசை சதங்கையொலி ஓம்….(27)

நையப் புடைப்பாள் நமதகந்தை போக்கிட
ஐயம் அகன்றதும் ஆதரவாய் -கையைப்
பிடித்திழுத்துச் செல்வாள் பரமசுகம் கூட்ட
படித்ததெலாம் பெண்ணிவள்முன் பாழ்….(28)

கோனார் கணக்கினில், கம்பன் கவிதையில்
நானார் விளக்கநூல் நாற்பதில் -மூணாறில்
எண்ணும் எழுத்துமாய் எங்கும் இருப்பவளை
எண்ணல் அயன்கை எழுத்து….(29)

பேசக் கொடுத்ததில்லை பாரதியின் தாய்மொழி
கோஷமிட்டு கூற்றன் குதிக்கஆ -வேசமுற்று
நாரணா, நான்முகா, நாதா நமச்சிவாயா
கூறநா கிட்டிடும் காப்பு….(30)….கிரேசி மோகன்….!

எண்ணமவள் நேற்று, எழுத்தவள் இன்றுநாம்,
பண்ணும் செயலவள் பின்நாளை -பெண்ணவள்
ஆன்றோர்க்கு ஞானம் அறிவிலார்க்கு ஆணவம்
தேன்தோன்றும் தாய்சொல் தமிழ்….(31)

கீரன் திருமுரு காற்றுப் படையவள்
மாறன் திருவாய் மொழியவள் -சூரன்
மகாகவி பாரதியின் மாங்குயில் பாட்டு
தகாதோர் செவிக்கவள் திட்டு….(32)

வண்டுவந்து மொய்க்கா வரைந்த மலர்சோலை
கொண்டவர்மன் ஓவியத்தில் கால்மடித்து -முண்டகத்தின்,
மெல்லிதழில், தோகை மயிலன்ன தடாகத்தில்
நல்கிடுவாள் யாழில் நலம்….(33)

என்பிழைகள் ஏராளம் என்றாலும் அன்னையே
புன்மொழியான் என்னைப் பொறுத்தருள்வாய் -உன்விழியால்
கூட்டு தமிழை கவிபாடும் ஆற்றலை
ஏட்டுச் சுரைக்காய் எனக்கு….(34)

பாக்கு பழமிலை பூக்கள் பணிவெதிர்
பார்ப்பாள் பராசக்தி பாரதி -வாக்கில்
வினயமுடன் வித்தை விரும்புவோர் தம்மை
தனயனென ஏற்பாள்அத் தாய்….(35)

வேசிவரக் காத்தவடை தோசை வரதனை
ஆசுகவி ஆக்கிய ஆனைக்கா -ஆசிகையே
காளமேகம் வாய்க்கெட்டி கைக்கெட் டியவாணி
மூளயோகம் என்வாய்க்கும் மூட்டு….(36)….கிரேசி மோகன்….!

 

பாத்தநூறு தெய்வத்தில் பாரதியை போலிங்கு
காத்திருக்க வைக்கா கடவுளெது -கூத்தனூர்
தேவி மனம்வைத்தால் தேளின் கொடுக்கிலும்
காவியம் கொட்டும் களிப்பு….(37)

சாத்திரங்கள் வேதங்கள் கூத்தனூர் தேவியின்
நேத்திரத்து தீர நுணலிமைகள் -பாத்திரம்
கண்டவள் பார்வை கருவண்டு போடுமே
பண்டிதப் பிச்சை பிறப்பு….(38)

பண்டித வன்புலிக்கு பாமரத் தோல்போர்த்தும்,
மண்டை கனத்தில் மிதக்குங்கால் -எண்டிசைக்கும்
மூளியைக் காவிய மன்னனாய் மாற்றிடும்
காளியின் தாஸன் கதை….(39)

வேதவ்யாசன் சொன்னது வேழம் தொகுத்தது
கீதையைக் கண்ணன் கொடுத்தது -ஏதுமே
வெற்றிக்குப் பின்னிருந்து வாணி விதைத்ததே
முற்றும் துறக்கவும்அம் மாது….(40)

கூனியின் சூழ்ச்சியும் கைகேயி வீழ்ச்சியும்
மானி இராமன் முதிர்ச்சியும் -தோணி
குகனின் நெகிழ்ச்சியும் குன்றனைய வாயு
மகனனுமன் வாக்குமவள் மாண்பு….(41)

பால்முகமும் வேல்விழியும் மால்மருவா நூல்மருங்கும்
ஆல்சிவன்பெண் பால்வடிவாய், நால்மறையும் -தாள்தழுவ
சீதமலர் போதமர்ந்து போதிக்கும் ஏதமில்
லாதவள்யாழ் கீதம் லயிப்பு….(42)….கிரேசி மோகன்….!

கூனியின் சூழ்ச்சியில் கைகேயி வீழ்ச்சியில்
மானி இராமன் முதிர்ச்சியில் -தோணி
குகனின் நெகிழ்ச்சியில் குன்றனைய வாயு
மகனின்சொல் வாக்கிலவள் மாண்பு….(43)

காடுவரை சென்றங்கு கொள்ளியில் வெந்துஎமன்
ஏடுரைத்த வண்ணம் எரிவாயில் -போடும்முன்
முட்டா ளையும்காக்கும் மந்திரமாம் வாணியைநா
கட்டாலப் போறவனே கொள்….(44)

தாத்தனூர் சேர்த்த திரவியங்கள் செல்லாது
கோர்த்தநூறு சுற்றமும் கூடவரா -கூத்தூர்
பேடையை நம்பிநீ பாடை படுத்திருக்க
காடென் கடைசிவரை காப்பு….(45)

கல்லறைக் காட்டினில் செல்லரித் தாலுமுடல்
சொல்லரித்துப் போகாது சோர்வடையாய் -புல்லரித்து
போற்றி உனைத்தூக்கி பூர்புவஸ் லோகத்திற்(கு)
ஏற்றி விடுவான் எமன்….(46)

தெக்குவாய் கூறிடும் தோத்திரங்கள் சுத்தமாய்
மக்குபோய் ஆளும் மகாசபை -சுக்கலான
ஓலைச் சுவடி உவேசா அவர்களால்
நாளைக் கடந்துநிற்கும் நூல்….(47)

கற்றதனால் ஆயபயன் நற்றமிழாள் நல்லுறவைப்
பெற்றதே போதுமென்று போதியமர் -மற்றதெலாம்
செந்திருவால் செல்வமும் சங்கரியால் வீரமும்
வந்திரும்பார் வாணி வகுத்து….(48)….கிரேசி மோகன்….!

போகத்தில் விந்து புகுமுன் புகுந்தங்கு
மோகச் சினைமுட்டை மூளையை -வேகவைத்து
பாமரனா, பண்டிதனா, மாமர மண்டையா
தாமரையாள் தந்திடுவாள் தீர்ப்பு….(49)

உச்சிக் குடிமியை ஊடாடும் பூணலை
மெச்சிடும் ஆசார மேன்மையை -துச்சமாய்
எண்ணும் கலைவாணி ஏற்பாள் வினயத்தை
கண்ணின் மணியாய்க் குறித்து….(OR)
மின்னும் அணியாய் மகிழ்ந்து….(50)

வீணை படிகமணி வேதக் கரத்தளை
பானை பிடிக்குமயன் பத்தினியை -சேனை
கலைகள்எண் ணென்சூழ செந்தா மரையில்
விளையும்வெண் பூவை வணங்கு….(51)

பத்தரைப் பொன்னில் பதினாறாம் யவ்வனத்தில்
முத்திறைக்கும் சேயின் முறுவலில் -சித்திரையில்,
புத்தரின் மோனத்தில், புண்ணிய தீர்த்தத்தில்
இத்தரைதர் மத்தில் இவள்….(52)

காசியில் கங்கையில், ஆசியில், ஆண்மையில்
வாசி அடக்கும் விளையாட்டில் -பூசிடும்
மாசிவை வெண்ணீற்றில், ஹாசிய நாடகத்தில்
ஆ!சிரி அப்பா அவள்….(53)

தண்டடியில் தூங்கி தவமகுடி கேட்டெழுந்து
மண்டயிடித் தாங்கே மலமறுக்கும் -குண்டலினிப்
பாம்புக்(கு) அடங்காது, பாரதியின் கண்ணிநுண்
தாம்புக்(கு) அடங்கத் தெருள்….(54)….கிரேசி மோகன்….!

 

 
————————————————————————————————————————–

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.