Author: ஜெயராமசர்மா

  • பன்முக நோக்கில் பாரதியாரின் படைப்புகள்!

    பன்முக நோக்கில் பாரதியாரின் படைப்புகள்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
    மேனாள்  தமிழ்மொழிக் கல்வி இயக்குநர் 
    மெல்பேண், ஆஸ்திரேலியா.

    புதுமைக்கவிஞர், புதுயுகக்கவிஞர், புரட்சிக்கவிஞர், என்றெல்லாம் போற்றப்படும் நிலையில் உயர்ந்து நிற்வர்தான்  பாரதியார். இவர் எட்டயபுரத்தில் பிறந்து எல்லோரையும் பார்க்கவைத்தார். வறுமையில் வாடினாலும் பெறுமதியாய் பாடிநின்றார். பொறுக்கும் இடத்தில் பொறுத்தார். பொங்கும் இடங்களில் பொங்கிப் பிரவாகித்தார். தலைகுனிந்து வாழுவதை தரக்குறைவாய் நினைத்தார். தலை நிமிர்ந்துவாழ தான் எழுதி நின்றார். காலத்தின் குரலாக அவரின் கருத்துகள் எழுந்தன. வீரமும், மானமும், ரோஷமும், உணர்ச்சியும், அவரின் சொத்துக்களாய் அமைந்தன. சிறுமை கண்டு சீறினார். வறுமைகண்டு பொங்கினார். அடிமையென்னும் சொல்லை வாழ்வில் அகற்றிவிட எண்ணினார். சுதந்திரமாய் மூச்சுவிட துணிந்து பல கூறினார். பக்தியைப் பேசினார். பண்பினைப் பேசினார். புத்தியைத் தீட்டிட புகட்டினார் பலவற்றை. வையத்துள் வாழ்வாங்கு வாழுவதை விரும்பினார். தெய்வத்தை நம்பினார். நல்ல நம்பிக்கைகளுக்கு வரவேற்பளித்த பாரதி மூட நம்பிக்கைகளுக்கு சாவுமணியடிக்கவும் தவறவில்லை. திருந்திய வாழ்வும் சிறப்பான சமூகமும் அமைய வேண்டும் என்னும் பேரவா பாரதியின் உள்ளத்தில் உறைந்த காரணத்தால் அதை நோக்கிய அவரின் செயற் பாடுகளும்  அவரின் சிந்தனையால் வந்த பல படைப்புகளும் அமைந்தன என்பது மனங்கொள்ளத் தக்கதாகும்.

    எந்த நாடென்றாலும் எந்த மொழியென்றாலும் காலத்தின் போக்குக்கு இணங்கவே இலக்கியம் அமைகிறது எனலாம். 19-ம் நூற்றாண்டில் காணப்பட்ட இலக்கியத்துக்கும் 20-ம் நூற்றாண்டில் காணப்பட்ட இலக்கியக்கியத்துக்கும் பல நிலைகளில் வேறுபாடுகளைக் கண்டுகொள்ள முடிகிறது எனலாம். முந்தைய நூற்றாண்டு இலக்கியம் வரட்சியைக் காட்ட பின்னர்வந்த நூற்றாண்டு இலக்கியப் போக்கு வளமுள்ளதாக அமைந்ததற்கு காலமே காரணமெனலாம். இலக்கியம் என்பது காலத்தின் கருத்தாகாவே மலர்கிறது என்பது கருத்திருத்த வேண்டிய முக்கிய அமிசம் ஆகும்.

    அரசர்களும், பிரபுக்களும் பெற்றிருந்த செல்வாக்கை பொதுமக்கள் பெறும் நிலை இந்தநூற்றாண்டில் ஏற்பட்ட காரணத்தால் இலக்கியமும் அதன் படைப்புகளும் பொதுமக்களை மையப்படுத்தியே அமைவதைக் கண்டு கொள்ளுகிறோம். பொதுமக்களின் வாழ்க்கை, குறிக்கோள், இன்ப துன்பங்கள், அவர்களது முன்னேற்றத்துக்கு குறுக்காக நிற்கும் சாதிக் கொடுமை, சமுதாயக் கட்டுப்பாடு, என்பவற்றை வெளிப்படுத்துவதாகவே அமைந்திருப்பதை அவதானிக்க முடிகிறது. இவ்வாறு புதுப்பாதையில் பயணிக்கும் இலக்கியம் பழைய இலக்கிய மரபுகளைவிட்டு விடுதலை பெறவேண்டியதாயிற்று.அந்த விடுதலையை இக்கால இலக்கியத்துக்கு அளித்தவராக பாரதியார் விளங்குகிறார் எனலாம். பழைய இலக்கிய மரபுகளை விடுதலை அடையச் செய்த பாரதி பழமையின் சிறப்பினை விட்டுக் கொடுத்தாரில்லை என்பது முக்கியமாகும். பழமையின் சிறப்பினை பாரதியார் எடுத்துப்பாடிய அளவு வேறு எந்தத் தமிழ்ப்புலவரும் – இந்தியரின் – பழைமைச் சிறப்பை எடுத்துப்பாடவில்லை என்பது மனமிருத்த வேண்டிய கருத்தெனலாம்.

    பாரதநாட்டு பழைய நாகரிகமும் மேனாட்டு புதிய நாகரிகமும் இந்தியாவில் சங்கமித்துக் கொண்டிருந்த காலத்தில் பிறந்தவர்தான் பாரதியார். இதனால் மேல்நாட்டு நாகரிகத்தில் காணப்பட்ட நல்ல அம்சங்களை தமிழ் மக்களும் ஏற்பது நல்லது என்னும் கருத்து பாராதியார் உள்ளத்தில் ஏற்படலாயிற்று. அதேவேளை மொழி, தமிழ் இனம், பாரதநாடு, பெண்ணுரிமை, சாதிபற்றிய ஏற்றத்தாழ்வு, முரண்பாடுகள், வறுமையின் நிலை, இவை பற்றிய கருத்துக்கள் அவரின் உள்ளத்தில் உரம்பெற்றும் இருந்தன எனலாம். இந்த நிலையில் பாரதியாரிடம் இருந்து வெளிவந்த படைப்புகளும் பன்முக நோக்குடையன வாகவே அமைந்திருந்தன என்பதும் நோக்கத்தக்கதே.

    பாரதியார் ஒருபக்கம் பார்த்தவர் அல்ல. அவரின் நோக்கு பரந்து விரிந்தது. அவரின் படைப்புகளும் பலதிறப்பட்டன.தெய்வத்தைப் பாடுவார். தேயத்தைப் பாடுவார். சாதியைப் பாடுவார். சன்மார்க்கத்தைப் பாடுவார்.பெண்மையைப் பாடுவார். மனிதர்க்குத் தேவையான உண்மையை பாடுவார்.முடைநாற்றம் வீசுகின்ற மூடத்தனத்தைப் பாடுவார்.பாப்பாவுக்கும் பாடினார். படித்தவர்க்கும் பாடினார். பாமரர்க்கும் பாடினார். கவிபாடி ஓயாத பாரதியார் கதைகளும் எழுதினார். கட்டுரைகளும் எழுதினார். புதுக்கவிதை என்னும் வழியிலும் பயணம் செய்தார்.அத்தோடு நிற்காமல் பத்திரிகைத் துறையிலும் முத்திரை பதித்தார்.இப்படிப் பார்க்கையில் பாரதியையும் அவரின் படைப்புக்களையும் பன்முக நோக்கில்த்தான் பார்க்கவேண்டிய தேவை இருக்கிறது எனலாம்.

    தேசிய கீதங்கள், பக்திப் பாடல்கள், ஞானப்பாடல்கள், பல்வகைப் பாடல்கள், தனிப் பாடல்கள், சுயசரிதை, கண்ணன் பாட்டு, பாஞ்சாலிசபதம், குயில்ப் பாட்டு, வசன கவிதை , புதிய பாடல்கள், யாவும் பாரதியார் எமக்களித்த சொத்துக்கள் எனலாம். இவைகள் ஒவ்வொன்றுமே பாரதியாரை யாரென்று அடையாளப் படுத்தி நிற்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை எனலாம். பாரதியார் பழமையைப் போற்றினார். முன்னோர்களை மதித்தார். கம்பனை , வள்ளுவனை , இளங்கோவை , உயரிடத்தில் வைத்துப் பார்க்கிறார்.  வள்ளுவன் தன்னை உலகினிக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்றும் நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் தந்த இளங்கோவை போற்றுகிறார். கம்பனைப் போற்றுகிறார். ஆனால் அவர்கள் போல் பாடாமல் அவர்கள் போல் நில்லாமல் அதேவேளை அவர்களை மனமிருத்தி அவர்களை வழிகாட்டி என எண்ணி தன்னிலையை வகுத்துக்கொண்டு காலத்துக்கு ஏற்ப தனது படைப்புக்களை அளித்திருப்பதால் பாரதியார் பெரும்புலவராய் மதிக்கப் படுகிறார் எனலாம். பாடுவதில் புதுமை. கையாளும் சொற்களில் புதுமை. எடுத்தாளும் உவமைகளில் புதுமை. சொல்லும் பாவடிவங்களில் புதுமை.இவைகள் பாரதியின் படைப்புகளின் சிறப்புகள் எனலாம்.

    பாரதியின் படைப்புகள் பலதிறப்பட்டனவாக இருக்கின்றன. அவை ஒவ்வொன்றுமே ஒவ்வொருவகையில் சிறப்பினை உள்ளடக்கி காட்டுகின்றன.ஒவ்வொரு படைப்பினையும் பன்முக நோக்கில் நோக்கினால் இக்கட்டுரை பெருநூலாகி விடும் என்பதனால் எடுத்துக் கூறக்கூடிய விடயங்களை மட்டும் பார்ப்பது பொருத்தமாக இருக்கும்.பாரதியின் படைப்புகளை நோக்குவதற்கு முன்னர் அவருக்கு முன்னிருந்த தமிழ்க் கவிதைகளை படைப்புக்களை நோக்குதல் வேண்டும். பாரதியின் படைப்புக்களை நோக்கும்வேளை பாரதிக்குமுன் பாரதிக்குப் பின் என்று வகுத்தல் சிறப்பாகும்.பாரதிக்கு முன் ஆசிரியப்பாக்கள், வெண்பாக்கள், செல்வாக்குற்று இருந்தன.பின் விருத்தம் வந்து நின்றது.இவை பாரதியின் முன் இருந்த நிலை. பாரதிகாலத்தில் கண்ணிவகைகள் கரைபுரண்டோடிய காலம் எனலாம். சிந்தும் பாரதியின் சொந்தமாகிக்கிடந்தது.பாரதியின் பின் பல கவிஞர்கள் பாரதியைப் பின்பற்றி பாரதிவழி சென்றார்கள். பாரதி தொடக்கிய புதுக்கவிதை , வசன கவிதை , இன்று பலராலும் பின்பற்றப் படுகிறது என்பதும் பாரதியின் படைப்புத் திறனின் விளைவு எனலாம்.

    பாரதியாரின் ஆளுமையால் பலபடைப்புகள் வெளிவந்தாலும் பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு , குயில்ப்பாட்டு , பாரதி அறுபத்தாறு , விநாயகர் நான்மணிமாலை , வேதாந்தப் பாடல்கள் , தோத்திரப்பாடல்கள் , ஆத்திசூடி , முரசு , பாப்பாப்பாட்டு , சமூகம் , வசனகவிதை  யாவராலும் குறிப்பிட்டுச் சொல்லும் வகையில் அமைந்த படைப்புகளாகி நிற்கின்றன. இப்படைப்புகள் வழியே இதுவரை தமிழில் இல்லாத வடிவிலும் பொருளிலும் பல புதிய இலக்கிய வகைகளைப் பாரதி பெற்றெடுத்து வழங்குகிறார் எனலாம்.பாஞ்சாலி சபதத்தில் பாரதியாரின் ஏக்கம், கோபம், ஆக்ரோஷம்,கேலி , கிண்டல், அறிவுரை ஆவேசம் அனைத்தையும் காணுகிறோம். ” என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம் – என்றெம தன்னைகை விலங்குகள் போகும் ” என்று ஏங்கிய ஏக்கம் தீர அடிமைத் தளையிலே வீழ்ந்து கிடக்கின்ற பாரதத்தாயினை விடுவிக்க மக்களிடம் எழுச்சியை ஏற்படுத்தவேண்டும் என்ற ஏக்கமே பாஞ்சாலி சபதமாய் பாரதியாரால் படைக்கப்பட்டது.பாரதியின் உணர்ச்சியின் வடிவமாய் அமைந்த படைப்பே பாஞ்சாலி சபதமாகும். “எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்து கொள்ளக் கூடிய சந்தம், பொதுசனங்கள் விரும்பக் கூடிய மெட்டு இவற்றினை உடைய காவியம் ஒன்று தற்காலத்தில் செய்து தருபவர் நம் தாய்மொழிக்குப் புதிய உயிர் தருவபவர் ஆகின்றார். ஓரிரண்டு வருஷம் நூல் பழக்கம் உடைய தமிழ் மக்கள் எல்லாருக்கும் நன்கு பொருள் விளங்கும்படி எழுதுவதுடன் காப்பியத்துக்குள்ள நயங்கள் குறைவு படாமல் எழுதுதல் வேண்டும்.தமிழ் சாதிக்குப் புதிய வாழ்வு தரவேண்டும் என்று கங்கணம் கட்டி நிற்கும் பராசக்தியே இத்தொழிலில் என்னைத் தூண்டினாள்” என்று பாரதியாரே கூறுவதிலிருந்து அவரின் பாஞ்சாலி சபதம் என்னும் படைப்பின் உன்னதம் புலப்பட்டு நிற்கிறதல்லவா?

    தமிழரின் அரசியல்- பொருளியல்- நோக்கிலும் இந்த நூற்றாண்டின் வரலாற்று நோக்கிலும் சிறப்பான இடம்பெறும் கவிதைகள் பாரதியின் தேசீய கீதத்தினுள்ளும் சுயசரிதையுள்ளும் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கதாகும். கவிதாதேவி அருள் வேண்டல், காலனுக்குரைத்தல், க தற்பாட்டுக்கள், அந்திப்பொழுது, வேய்ங்குழல், வள்ளிப்பாட்டு, அம்மாக்கண்ணு பாட்டு, வண்டிக்காரன் பாட்டு, என்று பல படைப்புகள் பல்சுவைதரும் வகையில் பாரதியின் சிந்தனையாக வந்தமைகின்றன.

    பாரதியின் படைப்புகளை நோக்கும்பொழுது புரட்சிவழிப் பொதுமையை வரவேற்றமையும், வடிவத்தில் புதுக்கவிதை என்னும் இலக்கிய வகைக்கு வித்திட்டமையையும் காணமுடிகிறது.பாரதியார் படைப்புகளில் சமதர்மவாதக் கருத்துகளும் கம்யூனிஸ வாதிகளும் வரவேற்கப்படும் அதே வேளை கடவுள் பற்றியும் பாடுகிறார். தெய்வத்தை முழுசாகவே நம்புகின்றார். இவை இரண்டும் முரண்பட்டு இருந்தாலும் இப்படிப் பாரதியாரின் படைப்புகள் பல நோக்கில் அமைந்தமைக்கு அக்கால சூழலும் அக்கால அரசியல் தலைவர் களுமே பாரதியாரின் இந்த முரண்பாட்டுக்குக் காரணம் எனலாம். விடுதலை இயக்கத்துக்குத் தலைமை தாங்கியவர்கள் தெய்வபக்தியில் திளைத்தவர் களாக விளங்கியதால் பாரதியாரின் சிந்தனையின் அவரின் நோக்காய் படைப்புகள் மூலமாய் வெளிப்பட்டது எனலாம்.

    பாரதியால் படைக்கப்பட்ட உரைநடைப் படைப்புகளை நோக்கும் பொழுது தருக்க முறை, திறனாய்வு முறை, வருணனை முறை, விளக்கமுறை, எடுத்துரை முறை, சொற்பொழுவு முறை, தத்துவ முறை, எள்ளல் முறை, என்னும் பன்னோக்கினைக் கண்டு தெளியலாம். பாரதி என்னும் கவிஞன் முரண்பாடுகள் உள்ளவனாய் படைப்புகள் மூலம் பார்க்க முடிகிறது. ஆங்கிலக் கல்வியை வெறுக்கிறான். ஆங்கில ஆதிக்கத்தை எதிர்க்கிறான். ஆனால் ஆங்கிலக்கவி ஷெல்லியை மனமிருத்தி “ஷெல்லிதாசன்” என்ன்னும் புனை பெயரில் பாப்புனைகிறான்.

    தெய்வத்தை நம்புகிறார். பராசக்தியிடம் வேண்டுகிறார். சரஸ்வதியிடம் வேண்டுகிறார். ஆனால் சாத்திரங்கள் எனக்கூறி சமூகநீதிக்கு எதிராய் வருவதை மூர்க்கமாய் எதிர்க்கிறார். “சாத்திரங்கள் ஒன்றுங்காணார் – பொய்ச் சாத்திரப் பேய்கள் சொல்லும் வார்த்தை நம்பியே” என்றும், “உங்கள் சூனியப்பொய்ச் சாத்திரங்கள் கண்டு நகைப்பான்” “பேயரசு செய்தால் பிணந் தின்னும் சாத்திரங்கள்” என்றும் “சூத்திரனுக்கொரு நீதி – தெண்டச் சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி சாத்திரம் சொல்லுமாயின் – அது சாத்திரம் மன்று சதியென்று கண்டோம்” என்று பாரதியார் நிற்கும் நிலை அவரின் படைப்புகளின் பன்முகமாய் தெரிகிறது அல்லவா?

    பாரதியாரின் படைப்புகளை ஒவ்வொன்றாக எடுத்து நோக்கினால் அங்கு பன்முகங்கள் தென்படுவதைக் கண்டுதெளியலாம். அவரின் படைப்புகள் பன்முக நோக்கினையே பறைசாற்றி நிற்கின்றன என்பதை நுணுகிப் பார்க்கும் வேளை கண்டு கொள்ளலாம். கடவுளரைப் பாடுகிறார். பராசக்தியின் உபாசனா தெய்வமாகவே தெரிகிறது. பாரதியாருக்கு முன்னர்வந்த பக்திப்பாடல்கள் சிவலோகம் பற்றியும் வைகுந்தம் பற்றியும் காட்டி நிற்க பாரதியார் படைப்பின் நோக்கு வேறுவிதமாய் அமைகிறது. தானும் நலமுற வாழவேண்டும் நாட்டு மக்களும் நலமுற வாழவேண்டும். அதற்காகவே தெய்வத்திடம் முறையிடும் புதுமை நோக்கு இப்படைப்பின் பால் வெளிப்பட்டு நிற்கிறது. “எண்ணில்லாத பொருட்குவைதானும் ஏற்றமும் புவியாட்சியும் தருவன் இன்றென தன்னையென் காளி மண்ணில் யார்க்குந் துயரின்றிச் செய்வேன், வறுமை யென்பதை மண்மிசை மாய்ப்பேன்” என்று பாரதியாரின் வேண்டுகோளைக் காட்டி நிற்கும் இப்படைப்பின் நோக்கு பரந்து பட்டதாய் சுயநலம் அற்றதாய் விளங்குவது புலப்பட்டு நிற்கிறதல்லவா?

    மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் என்னும் நம்பிக்கை பாரதியாரின் படைப்புகள் வாயிலாக வெளிப்பட்டு நிற்பதைக் கண்டு பெருமிதம் கொள்ள வேண்டும். “உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சம் இல்லை” இது நம்பிக்கையின் உச்சம்! “ஓடி விளையாடு பாப்பா நீ ஓய்ந்திருக்க லாகாது பாப்பா – தெய்வம் நமக்குத்துணை பாப்பா ஒரு தீங்கும் வரமாட்டாது பாப்பா” உற்சாகமூட்டும் உரம்! “ரெளத்திரம் பழகு” , “தையலை உயர்வு செய்”, “தொன்மைக்கு அஞ்சேல் , “போர்த்தொழில் பழகு”, நேர்படப்பேசு” , “வெடிப்புறப்புறப் பேசு”, இவை ஊக்க மருந்தாகும். “எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா இறைவா” இவ்வாழ்வினை அனுபவித்துவிடு என்று காட்டும் பெருவெளிச்சம்.

    பாட்டுப்பாடியதும் கட்டுரை கதை எழுதியதும் ஊடகத்துறையில் இருந்ததும் என்றெல்லாம் பாரதியின் படைப்பின் பன்முகம் வெளிப்பட்டாலும் அத்துடன் அச்சிந்தனை நின்றுவிடவில்லை. தமிழ் அறிவியலுடன் இணைதல் வேண்டும் என்னும் பன்முக நோக்கும் புலப்பட்டு நிற்கிறது. “புத்தம் புதிய கலைகள் பஞ்சப் பூதச்செயல்களின் நுட்பங்கள் கூறும் – மெத்த வளருது மேற்கே அந்த மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை”, “சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச்செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்”, “பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும், இறவாத புகழுடைய புது நூல்கள் தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும்”, இங்கு பாரதியின் படைப்பின் வாயிலாக தெரிகின்ற பன்முகங்கள்தான் பாரதியாரையும் அவரது படைப்புகளையும் இன்றுவரை உயர்வுடன் பார்க்க வைக்கிறது எனலாம்.

    Share
  • ஆலாலசுந்தரரை அகத்தினில் இருத்துவோம்!

    ஆலாலசுந்தரரை அகத்தினில் இருத்துவோம்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    இறைவன் மீது தோழமை உணர்வுடன் இப்பூவுலகில் வாழ்ந்தவர் தான் ஆலாலசுந்தரர் என்று அழைக்கப்படும் சுந்தரமூர்த்தி நாயனார். சுந்தரர் பூமியில் பிறந்த வரலாறு தேவ உலகுடன் , எம்பெருமான் சிவனுடன் இணைந்த வரலாறாகக் கருதப்படுகிறது. இறைவனுக்குத் தேவ உலகில் அணுகு தொண்டராக இருந்தவர் – மனந்தடுமாறி பேரின்பச் சூழலை மறந்து சிற்றின்பத்துக்குள் மனதினைச் செலு த்திய காரணத்தால் பூவுலகில் பிறவி எடுக்கும் நிலைக்கு ஆளா கிறார். தேவ உலகில் இவரின் சிந்தையினைக் கலைத்த பெண்களும் பூவுலகில் பிறக்கும் நிலை ஏற்படுகிறது. சிற்றின்ப ஆசைகளுக்கு உரிய இடம் பூவுலகமே ஆனதால் சுந்தரரின் சிற்றின்ப உணர்வு களைப் பகிர்வதற்கு – அவருக்குச் சலனத்தை ஏற்படுத்திய பெண் களே துணையாகவும் வந்து அமைகிறார்கள். அவர்களை மணந்து சுந்தரர் – தான் வந்தவேலை முடிந்தவுடன் – எங்கு முன்னர் இருந் தாரோ அங்கேயே போகிறார் என்பதுதான் ஆலாலசுந்தரரின் வரலா றாய்ப் படிக்கின்றோம்.

    கதைகளை நம்பலாமா என்று எண்ணத் தோன்றுகிறது. கதைகள் எப்படி இருந்தாலும் கதைகளூடாகப் புலப்படுகின்ற கருத்துக்களை த்தான் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ளல் வேண்டும். காமனையே தகனம் செய்த இடத்தில் காதலுக்கு இடமே இல்லை. காதல் கொண் டால் தண்டனை அனுபவிக்க வேண்டும், தண்டனைதான் பூவுலகில் வந்து பிறப்பது. பூவுலகுதான் காதலுக்கும் , சிற்றின்பத்துக்கும் ஏற்ற இடமாகும்.சிற்றின்பத்தை அனுபவிக்கும் வேளை பேரின்பம் பற்றிய புரிதல் வரும். வருவதற்கு பேரின்ப மயமான அந்தப் பெரும் பொ ருளை , பரம்பெருளைப் பற்ற வேண்டும். பற்றும் நிலையும் பல இருக்கிறது. அதில் ஒரு நிலை நட்பு நிலையாகும். அதாவது அந்தப் பரம்பொருளை நண்பனாகக் கொண்டு அவனிடம் அடைக்கலம் புகுவ தேயாகும். அதைத்தான் ஆலாலசுந்தரர் இப்பிறவியில் கையாண்டார்.

    சன்மார்க்கம் சகமார்க்கம் சற்புத்திர மார்க்கம்
    தாதாமார்க்கம் மென்றுஞ்சங் கரனை யடையும்
    நன்மார்க்கம் நாலவைதாம் ஞான யோகம்
    நற்கிரியா சரியையென நவிற்றுவதும் செய்வர்

    என்று சிவஞானசித்தியார் – இறைவன்மீது அடியார் கொள்ளும் பக்தி நிலை பற்றிக் காட்டுவது நோக்கத்தக்கது.

    அந்தணராய் பிறந்தார். அரசனாய் வளர்ந்தார். ஆடம்பரமான வாழ் வினை வாழ்ந்தார். அப்பரைப் போலவோ, மணிவாசகரைப் போல வோ ஆலாலசுந்தரர் வாழ்ந்தவராகத் தெரியவில்லை. சுந்தரரைக் காட்டும் அத்தனை படங்களுமே அவர் அணி மணிகளுடன் ஆட ம்பரமாய் அரசிளங்குமரனாகவே இருப்பதாகவே அமைந்திருக்கி ன்றன. அப்பரையோ மணிவாசகரையோ காட்டும் படங்கள் அத்த னையும் எதுவுமே இல்லாத துறவுக் கோலத்தில் இருப்பதாகவே அமைந் திருப்பதையும் காணமுடிகிறது.ஆனாலும் சுந்தரர் இறை வனின் நண்பனாக விளங்கி – தான் விரும்பிய அனைத்தையும் உரிமையுடன் கேட்டுப் பெற்றுக் கொண்டார் என்றும் அவரின் வரலாற்றால் அறிந்து கொள்ளுகின்றோம்.

    சுந்தரருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு அவர் மணக்கோலத்தில் வருகிறார். பெண்வீட்டாரும் வருகிறார்கள். அந்த ஆனந்தமான வேளையில் சிவபூஜையில் கரடி புகுந்தாற்போல – ஒரு கிழப்பிரா மணர் உள்ளே வந்து விடுகிறார். புதிய புரட்சியை அவர் உருவாக்கி விடுகிறார். “திருமணம் செய்ய இருக்கும் மணமகன் சுந்தரன் – தனக்கு அடிமை” என்று ஒரு குண்டைப் போட்டு விடுகிறார். திருமணத்தை காண வந்தவர்கள் திகைக்கிறார்கள்! மணமகன் அடிமையா ? என்ன வினோதம் என்று யாவரும் முணுமுணுக்கி றார்கள். வந்த கிழப்பிராமணரோ பிடித்த பிடியாக “சுந்தரன் எனக்கு அடிமை” என்று அடித்துச் சொல்லி – அதற்கான எழுத்து ஆதார த்தையும் காட்டுகிறார். சபையினரால் எதுவுமே செய்ய முடிய வில்லை. மணமகன் கோலத்தில் இருந்த சுந்தரர் “நீர் என்ன பித்தனா அல்லது பேயனா – மனிதனுக்கு மனிதன் அடிமையா?” இது முறையற்றது என்று துள்ளிக் குதிக்கிறார்.ஆனாலும் கிழப்பிரா மணரின் பக்கம் வலுவாய் இருப்பதால் யாவரும் அவரையே பார்த்தபடி செயலற்று நிற்கிறார்கள். உஷாரான கிழப்பிராமணர்” இந்த வழக்கினைத் தீர்க்க இந்த இடம் பொருத்தம் அல்ல – நான் இருக்கும் திருவெண்ணை நல்லூர்தான் பொருத்தம் என்று கூறி “சுந்தரர் பின் தொடர திருவெண்ணை நல்லூர் செல்கிறார். அங்குள்ள கோவிலுக்குள் சென்ற அந்தணர் மறைகிறார். அனைவரும் திகைக் கின்றனர். எம்பெருமான் காட்சி தருகிறார். சுந்தரர் தெளிவு பெறு கிறார். “என்னை எப்படிப் பேசினாயோ அப்படியே சொற்றமிழால் சுந்தரா பாடு – உன் பாட்டே எனக்கு உகந்த அர்ச்சனை ஆகும்” என்கிறார் இறைவன். சுந்தரர் வாயிலிருந்து செந்தமிழ் அருவியாய் பெருக்கெடுக்கிறது. இறைவனை எந்தவார்த்தையால் திட்டினாரோ அதே வார்த்தையையே வைத்து

    பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா
    எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை
    வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணை நல்லூர் அருட்துறையுள்
    அத்தா உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே

    என்று மனங்கசிந்துருகிப் பாடிப்பரவி நின்றார். நாயேன் பலநாளும் உன் நினைப்பின்றி இருந்தேன். அதனால் பேயாய் திருந்தேன், நீ பொன்னாய், மணியாய், வயிரமாய் இருக்கின்றாய் நானோ உன்னை மறந்தே இருந்திருக்கிறேன். ஊனாய், உயிராய், உடலாய், உலகாய், வானாய், நிலனாய், கடலாய், மலையாய், நீயே இருக்கிறாய். நானோ உனை அறியாமல் இருந்து விட்டேன்.

    என்று தம்மைத் தடுத்தாட்கொண்ட நிலையில் சுந்தரர் மெய்யுருகிச் செந்தமிழால் பரம்பொருளைப் பாடி நிற்கிறார். உனக்கு நான் ஏற்க னவே அடியவன் என்பதை மறந்துவிட்டேன் . நீ வந்து தெளிவு படுத்தி என்னை உனது மீளா அடைமையாய் ஆக்கி – என்னை மீட்டெடுத்தாயே பரம் பொருளே என்று ஏங்குவதும், இரங்குவதும் சுந்தரர் நிலையால் வெளிப்பட்டு நிற்கிறது எனலாம். ஆண்டவனின் பரீட்சை அடியவனைக் கடைத்தேற்றியதை இங்கு கண்டு தெளிகி றோம்.

    திருமணம் தொடக்கத்தில் இப்படியெல்லாம் நடந்திருக்குமா என்று கேள்விகள் கேட்டு குழம்புவதில் பயனில்லை. தனது அடியானைத் தடுத்தாட் கொள்ள நடந்த ஒரு அற்புதம் என்றுதான் இதனைக் கொள்ள வேண்டும். எங்களுக்கும் இப்படி வாழ்க்கையில் பல சந்தர்ப் பங்களை அந்தப் படைத்தவன் செய்து காட்டியிருப்பான் என்பதை நினைத்துப் பார்த்தால் சுந்தர் கதை நன்றாகவே விளங்கும் என எண் ணுகிறேன்.

    இறைவனால் தடுத்தாட் கொள்ளப்பட்ட சுந்தர் பின்னர் சங்கிலியார், பரவையார் என்னும் பெண்களை மணமுடிக்கிறார். பூவுலகில் அனுபவிக்கும் இன்பங்களை அனுபவிக்கிறார். அவரின் விருப்பங் களுக்கு ஆண்டவனும் நண்பனாய் இருந்து அருள்பாலிக்கிறார் என்பதும் சுந்தரர் வரலாற்றால் அறிந்து கொள்ளுகின்றோம்.

    சுந்தரர் பற்றிய கதைகள் பலவற்றைக் கேட்கும் நாம் – சுந்தரரின் முக்கியத்துவம் பற்றி நோக்குவதுதான் மிகவும் அவசியமாகும். அவற்றையே அகம் இருத்துவதுதான் முறையானதாகும் என்று கருதுகிறேன்.சுந்தரரின் தடுதாட் கொண்ட கதையில் மனம் லயிக்கும் நாங்கள் சுந்தரரின் பங்களிப்பை பற்றிப் பெரிதும் பார்ப்பதே இல்லை. “பித்தா பிறை சூடி” என்னும் பதிகத்தையும் “மீளா அடிமை உனக்கே ஆளாய்” என்னும் பதிகத்தையும் பாடி நிற்கும் அளவிலேயே சுந்தரரை விட்டு விடுவோம்.ஆனால் அதற்கு அப்பாலும் சென்று சுந்தரரை நாம் பார்க்க வேண்டும் என்பதுதான் எனது மனக்கிடக் கையாகும்.

    சம்பந்தர், அப்பர் காலம் போல் சுந்தரர் காலம் அமையவில்லை. சம்பந்தருக்கும் அப்பருக்கும் புறச்சமயங்களின் எதிர்ப்பலைகள் நிறையவே இருந்தன. அவர்களின் பணிகள் அனைத்துமே – புறச்சமயங்களின் எதிர்ப்பினின்று சைவத்தை “மேன்மை கொள் சைவமாக” மிளிர்ந்திடச் செய்ய வேண்டும் என்னும் வகையிலே அமைந்தது எனலாம். அதற்காகவே அவர்கள் அடியவர்கள் புடைசூழ பக்தியென்னும் புரட்சியை சமூகத்தில் நடத்திக் காட்ட வேண்டிய வர்களாகவே செயற்பட்டார்கள். ஆனால் சுந்தரர்காலம் அப்படி இல்லாத காரணத்தால் சுந்தரரின் பக்திப் பாடல்கள் நோக்கும், போக் கும் வித்தியாசமாய் அமைந்தது என்பது கருத்திருத்த வேண்டியது முக்கியம் எனலாம்.

    சுந்தரர் இக இன்பங்களில் திளைத்தவராகவே இருந்திருக்கி ன்றார்.ஆனால் எந்த நிலையிலும் இறைவனை மறவாதவராக, இறைபுகழ் பாடுபவராக, இருந்திருக்கிறார் என்பதும் நோக்கத் தக்கது. துறவையோ, வெறுப்பையோ அவரது பக்திப் பனுவல்கள் காட்டுவதாக இல்லை எனலாம். இயற்கையினை மிகவும் நேசித்துப் பாடுகிறார். இரந்து நின்று பாடிப் பரிசில் பெறும் நிலையினை அவர் சாடுகிறார். தனக்கு வேண்டியவற்றை இறைவனிடம் நண்பனாய் கேட்டே பெறுகின்றவராய் சுந்தரர் இருக்கின்றார்.

    தம்மை யேபுகழ்ந் திச்சை பேசினுஞ்
    சார்கி னுந்தொண்டர் தருகிலாப்
    பொய்ம்மை யாளரைப் பாடா தேயெந்தை
    புகலூர் பாடுமின் புலவீர்காள்
    இம்மை யேதருஞ் சோறுங் கூறையும்
    ஏத்த லாம்இடர் கெடலுமாம்
    அம்மை யேசிவ லோகம் ஆள்வதற்
    கியாதும் ஐயுற வில்லையே

    என்று வித்தியாசமாய் சிந்தித்துப் பாடுவது சுந்தரரின் முக்கியத்துவம் எனலாம். அதாவது “தம்மையே புகழ்ந்து இச்சையான முறையில் பேசினாலும், சார்ந்து நின்றாலும், பொருள்தர மனம் வராத பொய்மைமயான வாழ்வு உடைய செல்வரைப் பாடாமல், சிவனுடைய கோவிலைப் பாடுங்கள், இந்தப் பிறப்புக்கு உரிய உணவும் உடையும் பெறலாம்; மறுமையில் சிவகதியும் கிடைக்கும். ஐயம் இல்லை” என்பதேயாகும்.

    “வீரத்தின் மிடுக்கு இல்லாத செல்வனை – வீமன், அருச்சுனன் என்று புகழ்வதில் எந்தப் பயனுமில்லை; கொடுக்க மனம் இல்லா தவனைப் பாரி என்று புகழ்ந்து கூறினாலும் கொடுபவர் இல்லை. மூத்துத் தளர்ந்து உடல் நடுங்கும் கிழவனாகிய செல்வனை – மலை போன்ற தோள் உடையவன் என்று புகழ்ந்து வாழ்த்துவதால் பயன் இல்லை.வஞ்ச நெஞ்சனை, கொடியவனை, பாவியை, கெட்டவனை, சாது என்று கூறிப் பாடுவதால் பயன் இல்லை.ஈயாத உலோபியை வள்ளல் என்றும், கல்வி இல்லாதவனைக் கல்வி வல்லவன் என்றும், புகழ்ந்து காலம் கழிக்காதீர். எம்பெருமான் சிவனைப் பாடிப் பயன் பெறுங்கள்” என்று காட்டும் பாங்கு சுந்தரரின் வித்தியாசமான சிந்தனையினையினை வெளிக்காட்டி நிற்கிறதல்லவா !

    சம்பந்தர், அப்பர், மணிவாசகர் செய்யாத ஒரு காரியத்தைச் சுந்தரர் செய்து தமிழ்ப் பக்திப் பரப்பில் முக்கியத்துவத்தைப் பெற்று நிற்கிறார். தில்லை வாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன் எனத்தொடங்கும் “திருத்தொண்டத் தொகையினை” அளித்தமை எனலாம்.சுந்தரரின் இந்தக் கொடை மட்டும் கிடைக்கா விட்டிருந்தால் – நாங்கள் ஏற்றிப் போற்றிக் கொண்டாடும் சைவத்தின் அறுபத்து மூவரும் வந்திருக்கவே மாட்டார்கள். அவர்களின் இறை அனுபவங்களையும் நாம் அறியும் வாய்ப்பும் எமக்கு வாய்த்திருக்காது. அந்த பெருவாய்ப்பினை நாம் இன்று பெற்றிருப்பதற்கு அத்திவாரமே சுந்தரர்தான் என்பதை மனமிருத் துதல் அவசியமாகும்.

    சுந்தரரின் திருத்தொண்டர் தொகை இல்லையேல் – பெரியபுராணம் வந்திருக்காது. சேக்கிழார் என்னும் தெய்வப்புலவர், செந்தமிழ் புலவர் – இறை அடியார்களை எங்கள் கண்முன்னே கொண்டுவந்து காட்டி யிருக்கும் நிலையும் ஏற்பட்டிருக்காது. சிந்தாமணியில் மூழ்கிய சோழ மன்னனும் சிவனின் திருவருளை அறிந்திருக்க மாட்டான்.

    பெரியபுராணம் என்னும் சைவத்தமிழ் காப்பியம் இன்று சைவவ த்துக்கே பெரும் பொக்கிஷமாய் திகழ்கிறது என்றால் அதற்கு மூலகாரணமே ஆலாலசுந்தரர் தான் என்பதை மறுத்துரைத்துவிட முடியாது. ஆலயங்கள் தோறும் அடியார்களின் திருவுருவச் சிலைகள் வைக்கப்பட்டு , உரிய காலங்களில் குருபூஜை செய்யப்பட்டு, திருவீதி உலா வருவதற்கும் ஆலாலசுந்தரப் பெருமானே அடித்தளம் இட்டார் என்பது பெரு முக்கியத்தைத்தை உணர்த்து கிறதல்லவா !

    தேன்படிக்கும் அமுதாம் உன் திருப்பாட்டைத் தினந்தோறும்
    நான்படிக்கும் போதுஎன்னை நான்அறியேன் நாஒன்றே
    ஊன்படிக்கும் உளம்படிக்கும் உயிர்படிக்கும் உயிர்க்கு உயிரும்
    தான்படிக்கும் அனுபங்காண் தனிக்கருணைப் பெருந்தகையே

    “வாழி திருநாவலூர் வந்தொண்டர் பதம் போற்றி“

    Share
  • முத்தமிழ் வித்தகர் விபுலானந்த அடிகள்!

    முத்தமிழ் வித்தகர் விபுலானந்த அடிகள்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா.

    ஈழத்தின் கிழக்கில் தோன்றிய முத்து – தமிழைச் சுமந்தபடி தரணியெங்கும் ஒளிவீசி நின்றது. அந்த முத்தின் வாழ்க்கை இரு நிலைகளில் அமைந்தது. படித்துப் பட்டம் பெற்று – பண்டிதராய், கல்லூரி ஆசிரியராய், அதிபராய், தந்தை தாய் வைத்த மயில்வாகனன் என்னும் பெயரோடு சமூகத்தில் பயணித்த காலம். மயில் வாகனன் என்னும் பெயரைக் கடந்து –

    “ஊரும் சதமல்ல உற்றார் சதமல்ல  உற்றுப் பெற்ற
    பேருஞ் சதமல்ல பெண்டீர் சதமல்ல”

    என்னும் மனப்பாங்கினைப் பெற்று – ‘என்கடன் பணி செய்து கிடப்பதே‘ என்னும் விசாலித்த நோக்குடன்; இராமகிருஷ்ண மடத்துடன் ஐக்கியமாகி, துறவியாகி – விபுலானந்தர் என்னும் அடையாளத்தைத் தனதாக்கி இவ்வுலகைவிட்டு ஏகும்வரை பயணித்த காலம் எனலாம். 

    காரைதீவு மண்ணில் பிறந்தவர் யாவர் மனத்திலும் இன்றும், என்றும் வாழ்ந்துகொண்டே இருக்கிறார்   என்றால் – அதற்கு திருப்பு முனையான காலமாய் அமைந்தது முத்தமிழ் மாமுனிவரின் துறவறத்தின் பின்னான காலம் என்றே சொல்லலாம். 1924 ஆம் வருடம் மயில்வாகனனை மாநிலம் அறிந்திட மலரச்செய்த காலம் எனலாம். மயில்வாகனன் இலண்டன் பல்கலைக்கழகத்தின் அறிவியல் பட்ட தாரியாய் , மேல்நாட்டு உடையுடன் மிடுக்குடன் இருந்த கோலம் மாறி -உடையாலும் , உள்ளத்தாலும்.  தாமரை இலைமேல் நீர் போன்ற நிலைக்குள் வந்து – துறவியாய்ப் பிறப்பெடுத்த நாள் எனலாம்.

    வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ
    வள்ளல் அடியிணைக்கு வாய்த்த மலரெதுவோ
    வெள்ளை நிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்ல
    உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது

    என்று சிந்திக்கும் நிலையினை அடைந்த காலம்தான் துறவுக்காலம் என்பதை முத்தமிழ் வித்தகரின் வார்த்தைகளே சான்று பகர்வதாய் இருக்கிறதல்லவா ?

    மயிவாகனன் விரும்பி இருந்தால் – அவருக்கு வாய்த்த வாய்ப்புகளைப் பயனாக்கி இல்லறத்தில் இணைந்து இகபோக இன்பங்களை இஷ்டமுடன் ஏற்றிருக்கலாம் அல்லவா? ஆனால் அவரைக் கருவில் உருவாக்கிய அந்த ஆண்டவனே அவரை அகிலத்துக்கும் ஆறுதல் அளிக்கும் வகையில் – துறவுக்குள் அவர் மனத்தை நாட வைத்துவிட்டான் என்றுதானே எடுக்க வேண்டி இருக்கிறது. இல்லறத்தில் இணைந்திருந்தால் காரைதீவின் மைந்தன் மயில்வாகனன் குடும்பஸ்தனாகி குழந்தைகளுடன் குடித்தனம் நடத்தி சாதாரண மானவராகவே மறைந்திருப்பார். ஆனால் கிழக்கின் முத்தாய் ஒளி விட்டு எல்லோர் இதயத்திலும் பதிந்திருக்கிறார் என்றால் அதற்கு வழி வகுத்தது துறவுதான் என்பதை எவருமே மறுத்து உரைத்திட முடியாது.

    சுந்தரரை இல்லறத்தில் இணைய விடாமல் எம்பெருமான் தடுத்தாட்கொண்டார். அரச போகத்தில் இருந்த சித்தார்த்த கெளதமர் இல்லறத்தை ஒதுக்கி  இறைஞானம் பெற்றார். அதே போன்ற ஒரு நிலையினையே மயில்வாகனுக்கும் கிடைத்தது எனலாம் . எல்லாமே இறையருள் அல்லால் வேறென்றும் இல்லை என்றுதான் எண்ண வேண்டி இருக்கிறது.

    ஆண்டவனின் பரிபூரணமான அனுக்கிரகத்தைக் கருவிலே தாங்கி வந்த காரணத்தால் அடிகளாகி, ஆசானாகி, பேராளுமையாய் பிரகாசித்து பயனுற வாழ்ந்தார் எனலாம். விஞ்ஞானம் படித்தவர் மெஞ்ஞானத்துள் மூழ்கிறார்.தமிழை மூச்சாக்கி நிற்கின்றார்.சமரச சன்மார்க்கத்தின் வழியில் பயணப்படுகிறார். ஆனால் சைவத்தைக் கைகளில் ஏந்துகிறார். இவையெல்லாம் துறவால் விளைந்த விளைவுகள் என்றே எடுத்துக் கொள்ளல் வேண்டும்.துறவு வாழ்க்கை என்பது முத்தமிழ் வித்தகரின் பாதையில் வாய்த்த பெரும் பொக்கிஷம் என்றேகொள்ள வேண்டும்.

    துறவறத்தின் பின்னர்தான் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதற் தமிழ்ப்பேராசியராகிறார். தமிழ் நாட்டில் தமிழ் அறிந்த பலபேர் இருந்தும் – ஈழத்து மைந்தனை எப்படித் தமிழ்ப் பேராளுமையாக அண்ணாமலைச் செட்டியார் கண்டுகொண்டார் என்றால் – அதுதான் துறவறத்தின் பெருவெளிச்சம் எனலாம்.பற்றுக்களையும் அறுக்கிறார். ஆனால் ,மொழியில், சமயத்தில், கலாசாரத்தில், பண்பாட்டில், ஆராய்ச்சியில், சமூகத் தொண்டில், இசையில், நாடகத்தில், கொண்ட பற்றுகளை இழந்தாரில்லை. அவற்றில் அவரின் பற்றானது பல்கிப் பெருகி பயனளிக்கும் வகையில் அமைந்தது எனலாம். இவையாவும் துறவு வாழ்க்கையின் பின் துலங்கியது என்பது தான் மிகவும் முக்கியமாகும்.

    ” நல்லைநகர் நாவலர் பிறந்திலரேல்
    சொல்லு தமிழெங்கே சுருதியெங்கே”

    என்று போற்றப்படும் நாவலர் பெருமான் இல்லறத்தை விட்டு துறவுநிலையில் நைட்டிக பிரம்மசாரியாய் ஆனபின்தான் – அவரின் பணிகள் ஆல்போல் விருட்சமாகியது. வேதாசலம் –மறைமலையடிகள் ஆனதின் பின்தான் அவரின் பணிகள் துலங்கின.நாவலர் பெருமானை நல்ல அரசாங்க உத்தியோகத்தில் பார்த்திட அவர் குடும்பத்தார் விரும்பினார்கள்.ஆங்கிலக்கல்வியைக் கற்ற ஆறுமுகமும் அக்காலத்தில் நல்ல உயர் பதவியில் அமர்ந்து இல்லறத்துள் புகுந்திருந்தால் – எல்லோரும் ஏற்றிப் போற்றும் ” நல்லை நகர் நாவலர் ” என்னும் பொக்கிஷம் எமக்குக் கிடைத்திருக்குமா? ஆறுமுகம் துறவுக்குள் சென்றதால்த்தான் – கந்தபுராண கலாசாரம் வந்தது. சைவம் பிழைத்தது.தமிழும் தளைத்தது எனலாம்.

    முத்தமிழை மூச்சாக்கினார் அடிகளார். இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் எங்களின் சொத்துக்களாகும். பழந்தமிழ் இலக்கியங்கள் முத்தமிழினைப் போற்றியே நின்றன. பழந்தமிழ் இலக்கியங்களை இதயத்தில் இருத்திய அடிகளார் – பழந்தமிழ் இசையினை ஆராய முற்படுகிறார். இலக்கியத்தை,  இலக்கணத்தை, வரன்முறையாகக் கற்றவர் அடிகளார். அதே வேளை பன்மொழிப் பாண்டித்தியமும், விஞ்ஞானப் புலமையும் மிக்கவர். குறிப்பாக பெளதிகத்தில் பேராளுமை உடையவர்.தான்கற்ற பெளதிக அறிவை முன்னிறுத்தி பழந்தமிழ் இலக்கியத்தில் இருக்கின்ற இசையினை ஆராய முற்படுகிறார். அவரின் அளப்பெரும் ஆராச்சியால்  வையம் பயனுற வாய்க்கிறது “யாழ்நூல்”. யாழ் நூலினைத் தந்திட்ட முத்தமிழ் மாமுனிவரின் பேராற்றலை வியக்காதார் இல்லை எனலாம். எவருமே தொடாத துறை! எவருடைய ஆராய்ச்சிக்கும் எட்டாத துறை ! அந்தத்துறையினைத் தொட்டிருக்கிறார் எங்கள் விபுலா னந்தத்துறவி! இப்பேராய்ச்சி மலர்ந்ததும் முத்தமிழ் வித்தகரின் துறவின் பின்தான் என்பதும் மனங்கொள்ளத்தக்கதாகும்.

    நரேந்திரன் விவேகானந்தர் ஆனபின்தான் இராமகிருஷ்ண அமைப்பே உருவாகிறது. வீரத் துறவியாய் அதே வேளை ஈரத் துறவியாய் பரிணமிக்கிறார். மக்கள் சேவையே மகேசன் சேவை என்பதை பல நிலையிலும் நிலை நிறுத்துகிறார். இந்த வழியினை எங்கள் முத்தமிழ் முனிவரும் மனத்தினில் பதிக்கிறார். முத்தமிழ் முனிவரும் விவேகானந்தர் எப்படி துறவறத்தின் பின் துலங்கினாரே அப்படியேதான் துறவுக்குப்பின் துலங்கி நின்றார் எனலாம்.

    அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் முதல்தமிழ் பேராசிரியரான பின்னர் இலங்கை பல்கலைக்கழகத்தின் முதல் தமிழ் பேராசிரியராயும் அணி செய்கின்றார். கல்வியை, சமயத்தை – சமூகத்தைக் கருத்திருத்தி அவர் ஆற்றிய அத்தனை பெரும் பணிகளும் துறவுக்குப் பின்தான் என்பதுதான் மனமிருத்த வேண்டிய கருத்தெனலாம்.

    இலங்கையில் பல பகுதிகளில் கல்விக்கூடங்களை நிறுவினார். ஏழை மாணவர்களின் வாழ்வில் ஒளிவிளக்கை ஏற்றிவைத்தார்.இலக்கிய கட்டுரைகள், சமயசன்மார்க்கக் கட்டுரைகள், ஆராய்ச்சி நூல்கள், மாநாடுகள் பலவற்றில் பேருரைகள், என்றுமே பயன்தரும்வகையில் பல நயமிக்க , பொருள் பொதிந்த கவிதைகள், கவிதை நூல்கள், என்று பல்துறைகளில் – பன்முக ஆற்றல்களை வெளிப்படுத்திய காலம் முத்தமிழ் வித்தகரின் துறவுக்காலமேதான் என்பததுதான் உண்மையாகும்.

    ஐப்பத்து ஐந்து ஆண்டுகள்தான் அவருக்கு ஆண்டவன் கொடுத்த வாழ்வாகும். அதிலும் அவர் துறவில்  வாழ்ந்த காலம் இருபத்து மூன்று ஆண்டுகளே. ஆனாலும் அந்தக்காலத்தில் போதித்ததோடு நின்றுவிடாமல் சாதித்தும் காட்டினார். நல்லவைகளை எல்லாம் அவர் விரும்பினார் ஏற்றுக் கொண்டார். அல்லவைகளை அவர் பார்த்தாரில்லை. அவற்றை நினைத்தாருமில்லை. அவரின் ஆக்கங்கள், அவரின் தொண்டுகள் என்றுமே எங்கள் மனத்தைவிட்டு அகலா.

    அதனால்தான் அவருக்கு விழாக்கள் எடுக்கிறோம்! அவருக்குச் சிலை எடுக்கிறோம்! அவர்பற்றிய மலர்களையும் வெளியிடுகிறோம்!  துறவு என்றால் காட்டுக்குள் ஓடுவதல்ல! துறவு என்றால் சமூகத்தைவிட்டு ஒதுங்கி நிற்பதும் அல்ல ! துறவு என்றால் காவியை அணிந்து மொட்டை அடித்து மெளனமாய் குகைக்குள் புகுந்து இருப்பதும் அல்ல!

    மக்கள் மத்தியில் வாழவேண்டும். மக்களுக்கு ஏற்ற சேவைகளைச் செய்ய வேண்டும். மொழியை, பண்பாட்டை, கலாசாரத்தை, சமயத்தை, சன்மார்க்கத்தை, அறிவியலை, சமூகத்துக்கு எப்படியாயினும் கொடுக்க வேண்டும் என்பதை துறவின் வழியில் பயணப்பட்டே கொடுத்த பேராளுமையாய் விளங்குபவர்தான் எங்களின் முத்தமிழ் வித்தகர் விபுலானந்த அடிகள்! அவரின் பெயரினை உச்சரிப்பதும், நினைப்பதும் கூட எங்களுக்குள் நல்லதோர் உணர்வை, ஊக்கத்தை,   உந்துதலை உருவாக்கும்!

    Share
  • வாதவூர் வண்டை மனமதில் இருத்துவோம்!

    வாதவூர் வண்டை மனமதில் இருத்துவோம்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    தேனை நாடி வண்டுகள் ஓடும். தேனைச் சுவைப்பதில் வண்டுகளுக்கு பேரானந்தம். இந்த வண்டு மற்றைய வண்டுகள் போன்றதன்று. இவ்வண்டு திருவாதவூரில் இருந்து வந்த வண்டு. ஏனைய வண்டுகள் பல மலர்களையும் நாடிநிற்க – வாதவூர் வண்டு; வேத உபநிடதங்களை நாடி அங்கு திருவாசகம் என்னும் உயரிய தேனைப் பருகி எமக்கெல்லாம் வழங்கி இருக்கிறது.அந்த வண்டு வழங்கிய தேனான திருவாசகம் – தொட்டாலும் இனிக்கும்.கேட்டாலும் இனிக்கும். படித்தாலும் இனிக்கும். சொல்லச் சொல்ல இனிக்கும் சொற்களால்  ஆனதுதான் அந்த வாசகம் “திருவாசகம்”.  இதனால்த்தான் “திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார்” என்று பலரும் வியந்து போற்றும் நிலை அமைந்து விட்டது.

    திருவாதவூரில் பிறந்தபடியால் திருவாதவூரர் என்றும், மணிமணியான வார்த்தைகளை வழங்கியதால் மணிவாசகர் என்றும், அவரின் ஒவ்வொரு வார்த்தைகளும் சைவத்துக்கும், தமிழுக்கும் மாணிக்கமாய் அமைந்தமையால் மாணிக்கவாசகர் என்றும் யாவராலும் பெருமதிப்புடன் அழைக்கப்பட்டர்.

    அந்தணகுலத்தில் பிறந்து, பேராளுமை மிக்கவராய் விளங்கினார் மணிவாசகப் பெருமான் என்று அவரைப்பற்றி திருவாதவூரடிகள் புராணம் வாயிலாக அறிகின்றோம். மணிவாசகப் பெருமானின் ஆளுமையினை அவர் வாழ்ந்த பாண்டி நாட்டின் அரசன் – அரிமர்த்தன பாண்டியன் அகத்தில் இருத்தி அவரை தனது அரசாட்சியில் முதலமைச்சர் ஆக்கினான். அத்துடன் அவரின் ஆற்றல்களை மெச்சி “தென்னவன் பிரம்மராயன்” என்னும் பட்டத் தையும் வழங்கிப் பெருமைப்படுத்தினான். மன்னவன் இவ்வாறு பெருமைப்படு த்தினான் என்பதை

    தென்னவன் பிரமராயன் என்றருள் சிறந்த நாமம்
    மன்னவர் மதிக்க நல்கி வையகம் உய்வதாக
    மின்னவ மணிப்பூணாடை வெண்மதிக்கவிகை தண்டு
    மொன்னவர் கவிரி வேழமளித்தனன் பொருநை நாடன்

    வாதவூராரினை தனது அகத்தில் ஏற்றிய மன்னவன் – மற்ற மன்னவர்களும் மதிக்கும் வண்ணம், அவருக்கு நன்மதிப்பினைக் கொடுத்தான். நவரெத்தினாலான ஆபரணங்கள், பட்டுப்பீதாபரங்கள், சந்திரன் போன்ற வெண் கொற்றக் குடை, முத்திலான சிவிகை, பொன்னாலான காப்பு, சாமரை, யானை என்று அளித்து ஆனந்தம் அடைந்தான். என்று வாதவூரடிகள் புராணம் சுட்டிக் காட்டி நிற்கிறது.

    அதிகாரம் மிக்க பதவி! அரசனின் அன்பும் ஆதரவுமான நிலை! எதையும் செய்யும் இருப்பிடம்! இவை எவையையும் வாதவூரர் உள்ளம் பெரிதாக ஏற்றுக் கொண்டதாகவே தெரியவில்லை. புகழும், ஆடம்பரங்களும் நிலையாய் இருக்க மாட்டா என்னும் நினைப்பால் நிலையாயிருக்கும்  அப்பரம் பொருளையே அவர் நாளும் பொழுது எண்ணியபடி அமைச்சர் என்னும் பெயரில் பாண்டியன் அவையில் இருந்தார் எனலாம். “ஓடும் செம்பொன்னும் ஒக்க நோக்கும்” எண்ணமே அவருள்ளத்தில் ஆழமாய் ஆணிவேராய் இருந்தது எனலாம்.

    திரும்பெருந்துறையில் நல்ல அரோபியக் குதிரைகள் வந்திருப்பதாயும் அதனைப் பார்த்து வாங்கிவரும்படியும் திரவியங்களை அரசன் அமைச்சரான வாதவூரரிடம் கொடுக்கிறான். அமைச்சரான வாதவூரரும் குதிரைகளை வாங்குவதற்கு செல்கிறார். அங்கு அவர் குருந்தமர நிழலில் ஒரு ஆனந்தப் பேரொளியினைக் காணுகிறார். தன்னை மறக்கிறார். தான் வந்த பணியை மறக்கிறார். அந்த ஞான ஒளியுடை மகானின் திருவடியில் சங்கமம் ஆகிறார்.

    குதிரை வாங்கச் சென்ற அமைச்சர் நீண்டநாள் வராதபடியால் அரசன் தூதுவர்களை அனுப்பி நிலைமையினப் பார்த்துவருமாறு பணிக்கிறான் சென்ற தூதுவர்கள் வாதவூரரின் நிலையினை மன்னனிடம் தெரிவிக்கவே மன்னவன் அடங்காச் சினங்கொள்ளுகிறான். சினத்தால் வாதவூரரை வதைக்கிறான். உலகினை மறந்த வாதவூரார் அந்தப் பரம்பொருளிடம் அடைக்கலமாகிறார்.

    ஆண்டவனின் ஆணைப்படி – “ஆவணி மூலத்தில் ஏற்கனவே ஒழுங்கு செய்த குதிரைகள் வரும் என்று” அரசனால் துன்பப்பட்டுக் கொண்டிருக்கின்ற வாதவூரர் மொழிகின்றார். குதிரைகளும் குறிப்பிட்ட நாளில் வருகின்றன. அரசன் வாதவூரரிடம் மன்னிப்புக் கேட்கின்றான். ஆனால் வந்த குதிரைகள் அனைத்துமே அன்றிரவு நரிகளாய் மாறிவிட்டன. அரசன் ஆத்திரம் மேலோங்குகிறது. வாதவூரரை சிறையில் அடைக்கின்றான். உயரிய பதவியைக் கொடுத்த அரசனே அவரை திரவியங்களை அபகரித்த குற்றவாளியாக்குகிறான். வாதவூரர் துன்பம் படைத்தவனுக்குப் பொறுக்கவில்லை. வைகை ஆறு பெருக்கெடுக்கிறது. அரசன் திகைக்கிறான். பெருகிவரும் நீரைத்தடுக்க நாட்டுமக்களுக்கு அரசன் ஆணையிடுகிறான்.

    பலரும் தமக்கான பங்கினை செய்கிறார்கள். ஆனால் பிட்டவைத்து பிழைப்பு நடத்தும் செம்மனச் செல்வி என்னும் மூதாட்டிக்கு உதவிட யாருமே இல்லா திருந்தது. அவ்வேளை எம்பெருமானே வேலையாளாய் வருகிறார். ஒழுங்காய் வேலை பார்க்காத காரணத்தால் அரசனின் காவலர்கள் பிரம்படிக்கு ஆளாகிறார் ஆதி அந்தமில்ல அந்த அரும்பொரும் ஜோதி!

    பரம்பொருளின் முதுகில் விழுந்த அடி அரசனின் முதுகில் விழுந்தது. அனைவரின் முதுகிலும் விழுந்தது. அரசன் விழித்தான். அஞ்ஞானம் அகன்றது. வாதவூரரை விடுவித்து விழுந்து விழுந்து வணங்கினான். என்ன நல்ல கதையாக இருக்கிறதா! வாதவூரர் வரலாற்றில் இவற்றைக் காணுகிறோம்.

    கல்லால் ஒருவன் அடிக்க உடல் சிலிர்க்க
    காலில் செருப்பால் ஒரு வேடன் வந்தே உதைக்க
    வில்லால் ஒருவன் அடிக்க
    வீசி மதுரை மாறன் பிரம்பால் அடிக்க …
    அந்த வேளை யாரை நினைத்தீரோ… அய்யா
    பெற்ற தந்தை தாய் இருந்தால் உலகத்தில் உமக்கிந்த
    தாழ்வெல்லாம் வருமே அய்யா  –

    என்று ஒரு இறையன்பர் பாடுவதில் பிரம்படி பட்ட செய்தி எப்படி வருகிறது பாருங்கள்.

    மனிதன் தெய்வத்தோடு வைக்கின்ற இணக்கமானது எப்படியாய் இருப்பினும் அது நல்லதையே நல்கும்.அடியுண்ட அரசனுக்கு நல்லறிவு பிறந்தது. வாதவூரருக்கு பலவகையில் உதவிட அரசன் முன்வந்தான். ஆனால் வாதவூரரோ தாம் துறவறத்தையே நாடுவதாகக் கூறினார். அரசனும் வாதவூரர் வழியினைப் பெருவழியென ஏற்றுக் கொண்டான்.

    மனிதன் என்பவன் ஏதேனும் ஒரு துறையில் சிறந்து விளங்கும் பொழுது அத்துறைக்கு ராஜன் ஆகிறான். பாண்டிய மன்னன் அவையில் அமைச்சர் ஆனதால் வாதவூரர் புவிராஜனாகிறார். தித்திக்கும் திருவாசகத்தை அளித்த தமையால் கவிஜாரன் ஆகிறார். அவரின் பக்தியுடை வாழ்வால் அவர் தவராஜனாகிறார். பல சிறப்புக்களைப் பெற்ற வாதவூரர் நிறைவில் நடராஜனுக்கே உரியவராய் திகழ்கிறார் எனலாம்.

    வாதவூரர் வண்டாய் பறந்தார். அந்த வண்டு “திருவாசகம்” என்னும் தேன் கூட்டையும் “திருக்கோவையார்” என்னும் தேன் கூட்டையும் கட்டி நாமனைவரும் நாளும் பொழுதும் வேண்டிய தேனைப்பெற்று சுவைத்திட வழி சமைத்திருக்கிறது எனலாம்.

    உடையாள் உந்தன் நடு இருக்கும் உடையாள் நடுவுள் நீ இருத்தி
    அடியேன் நடுவுள் இருவீரும் இருப்பதானால் அடியேன் உன்
    அடியார் நடுவுள் இருக்கும் அருளைப் புரியாய் பொன்னம்பலத்து
    முடியா முதலே என்கருத்து முடியும் வண்ணம் முன்னின்றே

    என்னும் வேண்டுகளை வாதவூர் வண்டு இறைவனிடம் சொல்லுகிறது. இது தெவிட்டாத் தேனாகி இனிக்கிறதல்லவா!

    திருவாசகமென்னும் தேன் பருகினார் ஒரு அடியவர். அவரால் தனது உணர்வினை வெளிப்படுத்த சொற்களைத் தேடுகிறார்.அவர் தேடியதை அளிக்கிறார் பருகுவோம் வாருங்கள்….

    வான்கலந்த மாணிக்கவாசக நின் வாசகத்தை
    நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே
    தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித் தீஞ்சுவை கலந்துஎன்
    ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே –  இப்படிச் சுவைத்தவர்தான் வள்ளல் பெருமான்.

    வாதவூர் வண்டு மலர்கள்தோறும் எடுத்தவந்த தேனால் ஆக்கப்பட்ட திருவாசகத்தை தமிழர்களாகிய நாம் மட்டும் சுவைத்து மகிழ்வது பெருமைதான். ஆனால் தமிழ் அறியா ஒருவர், எங்கள் சைவம் சாரா ஒருவர், அதுவும் ஆசிய நாட்டைச் சேராத ஒருவர், ஆங்கில நாட்டை சேர்ந்த ஒருவர் கிறீத்தவ பாதிரியாரானவர் திருவாசகமென்னும் தேனைத் தொட்டதும் தன்னை மறந்தார். அந்தத் தேன்கூட்டுக்குள்ளேயே புகுந்து தேனை மாந்திக் கொண்டே இருந்தார் என்பது மனமிருத்த வேண்டிய கருத்தல்லவா!

    சிவனை முழுமுதற் கடவுளாகப் பாடி உருகிடும் திருவாசகம் என்னும் தேன் – ஒரு கிறீத்தவ  அருட் தந்தையை எப்படிக் கவரமுடியும்? இது ஒரு முரண்பட்ட நிலையாகத் தெரிகிறது அல்லவா! இறைவன் என்பவன் ஒருவனே. திருவாசகத்தில் “சிவனாக” காட்சியளிக்கும் ஆண்டவன்தான் – பரமண்டலத்தில் வீற்றிருக்கும் பிதாவாக கிறீத்தவ அருட்தந்தை ஜி.யூ போப் அவர்களின் உள்ளத்தில் பதிந்திருக்கலாம். இதனால் அவர் ஆங்கிலத்தில் திருவாசகத்தேனை மொழிபெயர்த்து அனைவருமே பயனுறச் செய்தார் எனலாம். இலண்டன் மாநகரில் கிறீத்தவ தேவாலயத்தில் முழந்தாளிட்டு செபம் செய்யும் வேளை ‘தன்னருகில் மாணிக்கவாசகரும் செபம் செய்வதாக‘ தான் உணர்ந்ததை  – திருவாசக ஆங்கில மொழி பெயர்ப்பு நூலில் பதிவிட்டுள்ளார் என்பது மனங்கொள்ளத் தக்கதாகும்.இதுவே சமயங்கடந்த பக்தி நிலை எனலாம்.இதனை வாதவூர் வண்டின் ‘திருவாசகம் என்னும் தேன்‘ செய்திருக்கிறது.

    நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க
    இமைப்பொழுதும் என்னெஞ்சில் நீங்காதான்தாள் வாழ்க
    கோகழியாண்ட குருமணிதன் தாள்வாழ்க
    ஆகமமாகி நின்று அண்ணிப்பான் தாள்வாழ்க
    ஏகன் ஆனெகன் இறைவனடி வாழ்க

    என்று இறைவனுக்கு வாழ்த்துக் கூறிய வாதவூர் வண்டினை நாமனைவரும் மனத்தினில் இருத்துவோம். இருத்தினால் ……

    தொல்லை இரும்பிறவி சூழும் தளை நீங்கும்! அல்லல் அறுபடும்! ஆனந்தம் பெருகும்! அத்துடன் மருவா நெறியும் அளிக்கும் !

    “அருள்வாத வூரர்சொல  அம்பலவர் தாமெழுதும்
    திருவா சகத்தைத் தெளிந்தால் – கருவாம்
    பவகதியும் நீங்கிப் பரமரரு ளாலே
    சிவகதியும் உண்டாம் சிவம்“

    Share
  • மே 12 – புளோரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த நாள் – தாதியர் தினம்

    மே 12 – புளோரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த நாள் – தாதியர் தினம்

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    ஆஸ்திரேலியா

    பொறுமையென்னும் நகையணிந்து, புன்னகை என்னும் நன்னகை அணிந்து, அன்பாய், அரவணைப்பாய், ஆறுதலாய், பக்குவமாய் ஆத்மார்த்தமாய், தொழிலென்று எண்ணாமல் தூய பணியினை ஆற்றுகின்றவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் ஆற்றும் பணி ‘தாதியர்‘ பணி. அது ஒரு தொழில்  இல்லை, உன்னத சேவை. 

    மே எட்டாம் நாள் உதவிக்கரம் கொடுக்கும் உன்னத நாளாய் (செஞ்சிலுவை சங்க நிறுவனர் நாள்) அமைந்தது. மே பன்னிரண்டாம் நாள், அரவணைத்து ஆறுதல் நல்கும் “தாதியர் தினமாய்” மலர்கிறது. மே ஒன்று உழைக்கும் கைகளின் ஒற்றுமையினை வெளிப்படுத்தும் நாளாய் ஒளிர்ந்தது. மே மாதம் என்றாலே சமூதாயச் சிந்தனை நிறைந்த மாதமாக அமைகிறது என்பதைக் கருத்திருத்துவது நன்றெனக் கருதுகிறேன்.

    தாதியர் சேவை தரமற்ற சேவை. தாதியர் சேவை வறியவர்க்கும் எளியவர்க்கும் உரிய சேவை . தாதியர் சேவை என்றாலே அருவருப்பு நிறைந்த அசிங்கமான சேவை என்றெல்லாம் பல கருத்துகள் இருந்த காலக்கட்டத்தில் – தாதியர் சேவையினைத் தனது வாழ்வின் குறிக்கோளாய் ஒருவர் தேர்ந்தெடுத்தார். அவர்தான் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த, இத்தாலியில் பிறந்த “புளோரன்ஸ் நைட்டிங்கேல்” அதாவது “கைவிளக்கேந்திய காரிகை”.

    மே மாதம் பன்னிரண்டாம் திகதி, ஆயிரத்து எண்ணூற்று இருபதில் இப்பெருமாட்டி – சேவை செய்ய வேண்டும் என்னும் இறைவனின் விருப்பினால் இம்மண்ணுலகில் கால் பதிக்கின்றார். நல்ல நோக்கத்தைக் கருவில் சுமந்து அவர் மண்ணில் கால் பதித்த தினமே ” உலக தாதியர் தினமாய் ” கெளரவமாய் கொண்டாடிப் போற்றப்பட்டு வருகிறது என்பதை யாவரும் மனத்தில் இருத்தல் வேண்டும்.

    செல்வமிக்க குடும்பத்தில் பிறந்தாலும் – செல்வத்தில் சிக்கித் தவிக்க விருப்பமின்றி வேதனைப்படுவோர் பக்கமே சென்று அவர்களுக்குப் பணி செய்யும் மகத்தான “தாதியர் பணியினை” மனத்தில் பதித்து அதன் வழியில் பயணப்படத் தொடங்கினார். தேர்ந்தெடுத்த பணி பல சிரமங்கள் நிறைந்த பணி. இவரின் ஆசையினை, பெற்றவர்கள் ஏற்றுக்கொள்ளவே இல்லை. ஆனாலும் “இறைவன் தனக்கு இப்படித்தான் நட என்று  விதித்தார்” என அவர் உணர்வு உணர்த்திய நிலையில் அவர் தாதியர் சேவையினைத் தலையாய சேவையாய் ஏற்று, தன்னால் இயன்ற வரை பணியாற்றி நின்றார்.

    பெண்கள் நிலையில் இவரின் இந்தச் சிந்தனையும் செயற்பாடும் புரட்சி மிக்கது எனலாம். யாருக்கும் அஞ்சாது துணிவுடன் தாதியராய் பெண்கள் களத்தில் இறங்கிட “விளக்கேந்திய சீமாட்டியாய்” இவரே முதலில் வந்து நிற்கிறார். இதுதான் இவரை இன்றும் நினைப்பதற்கும் கொண்டாடிப் போற்றி மகிழ்வதற்கும் காரணமாய் இருக்கிறது என்பது வெள்ளிடை மலையாகும்.

    இவர் கண்ணால் பார்த்த காட்சிகள், இவர் மனத்தில் பதிந்த சம்பவங்கள் யாவும் இவரைப் பல வகைகளில் சிந்திக்கச் செய்தன. அந்தச் சிந்தனைகளினால் இவரின் தாதியர் சேவை உயர்ந்து விளங்கியது. ரஷ்சியப் பேரரசு, பிரான்ஸ், ஐக்கிய ராஜ்ஜியம், ஒட்டோமன் ஆகிய பேரரசுகளுக்கு இடையே 1854 தொடக்கம் 1856 ஆம் ஆண்டு வரை “கிரிமியன் போர்” நடைபெற்றது. இப்போரினால் தாக்கமுற்று, சரியான கவனிப்பார் அற்ற நிலையில் இருந்த படைவீரர்களுக்குத் தாமாகவே முன்வந்து – தாம் பயிற்றுவித்த முப்பத்து எட்டுத் தாதியருடன் தம் சிறிய தாயாரையும் இணைத்துக் களத்தில் சென்று துணிவுடன் தன்னுடைய பணியினை ஆற்றினார். இப்பணியினால் “விளக்கேந்திய சீமாட்டி”யின் புகழ் பிரகாசிக்கத் தொடங்கியது. கிரிமியன் போர், இவரின் வாழ்க்கைப் பாதையில் ஒரு முக்கிய நிலை.

    வறியவர்கள்தான் தாதியர் ஆக வேண்டும். தாதியர்கள் சமையல் ஆட்களாகவும் வேலை செய்ய வேண்டும் என்னும் கருத்தையெல்லாம் இவர் உடைத்தெறிந்தார். வறியவர்களிடத்து இவர் மிகவும் கருணை காட்டினார். அவர்களின் நலனில் பெரிதும் அக்கறையும் செலுத்தினார். வறியவர் வாழ்வினுக்கு வலக்கரமாயும் விளங்கினார். இலண்டன் மாநகரில் இயங்கிய ஆதரவற்றோர் விடுதியில் இவர் கேள்வியுற்ற சம்பவம்,  இவருக்குப் பல சிந்தனைகளைத் தோற்றுவித்தது. வறியவர் ஒருவர் இறந்துவிடுகிறார். இதனால் அங்கு பெருஞ்சிக்கலே உருவாகி விடுகிறது. இந்த நிலையில் இவ்வம்மையாரின் கவனம் அங்கு செல்கிறது. மருத்துவ வசதி சிறப்பாய் அமையாமையே காரணம் என்பதை உணர்ந்த அவர் – ஆதரவற்றவருக்கு உரிய மருத்துவ வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என்றும் – வறியவருக்கான சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

    தாதியர்கள் அலட்சியமாய், பொறுப்பற்று இருப்பதை அவர் வெறுத்தார். மருத்துவர்களுக்கு வலது கையாகவும், நோயாளர்களுக்கு அன்பானவர்களாகவும், பல கோணங்களில் உதவும் நிலையில் தாதியர்கள் இருக்க வேண்டும். பொறுமையும் சகிப்புத்தன்மையுமே இச்சேவையில் ஈடுபடுவோருக்கு மிக மிக அவசியமாய் இருக்க வேண்டும் என்றும் அவர் கருதினார். அதன் அடிப்படையிலே தான் அவரின் ஒவ்வொரு நடவடிக்கையும் அமைந்திருந்தன.

    நோய்கள் பரவுவதற்குக் காரணம் சூழல் தூய்மை இன்மையே என்று அவர் கருதினார். மருத்துவமனைகள், அங்கிருக்கும் மருத்துவக் கருவிகள் அனைத்தும் சுத்தமாய் இருக்கவேண்டும் என்பது இவரின் கட்டாயமான நிலையாக இருந்தது. அதன் வழியில் இவரின் செயற்பாடுகள் அமைந்திருந்தன.

    புளோரன்ஸ் அம்மையார் அவர்கள் சிறந்த எழுத்தாளராகவும் புள்ளிவிபரவியல்  ஆளுமை உடையவராகவும் விளங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    இந்தியாவின் கிராமப்புறச் சுகாதாரம் பற்றியும் சிந்தித்திருந்தார் என்பது கருத்திருத்த வேண்டிய விஷயம். தாதியர் சேவை என்பது இனம் கடந்து, மொழி கடந்து, நிறம் கடந்து, சாதியம் தவிர்த்து, மதம் கடந்து, தராதரம் கடந்து , மனித நேயத்தை மட்டுமே முக்கியத்துவப்படுத்தி நிற்பது என்பதை இது   உணர்த்துகிறது, இல்லையா!

    “மருத்துவ வசதிகளுக்கும் சுகாதார நுட்பங்களுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்த மருத்துவமனைகள் பற்றிய குறிப்புகள் “, “தாதியர் பற்றிய குறிப்புகள்” என்னும் நூல் அக்காலத்தில் தாதியர்களுக்கான மிகச் சிறந்த நூலாய்க் கருதப்பட்டது. “உடல்நலத்தைப் பாதிக்கும் விடயங்கள்” , “பிரித்தானிய இராணுவத்தின் மருத்துவமனை நிர்வாகமும் செயல்திறனும்” என்பவை இவரால் எழுதப்பட்ட நூல்களில் குறிப்பிடத்தக்க நூல்கள் எனலாம்.

    இவரால் எழுதப்பட்ட “தாதியற் குறிப்புகள்” என்னும் புத்தகம் தாதியர் பயிற்சிக் கூடங்களின் பாடத்திட்டத்தில் முக்கிய பகுதியாய் இடம் பெற்றிருக்கிறது. அதுமாத்திரமன்றி தாதியியலுக்கான நல்ல ஒரு அறிமுக நூலாகவும் இது விளங்குகிறது. மருத்துவமனைத் திட்டமிடலிலும் இவரின் கருத்துகள் முன்னோடியாய் இருக்கின்றன.

    தாதியருக்கென்று முதன்முதலாகப் பயிற்சிப் பாடசாலையினைத் தோற்றுவித்த பெருமையும் இவருக்கே உரியது. இவரின் சேவையினைப் பாராட்டிக் கெளரவிக்கும் வகையில் நடந்த கூட்டத்தில் தாதியர் பயிற்சிக்காக “புளோரன்ஸ் நைட்டிங்கேல் நிதியம்”  நிறுவப்பட்டது. இந்த நிதியத்துக்குக் கிடைத்த நிதியினைக் கொண்டு ” நைட்டிங்கேல் பயிற்சிப் பாடசாலை “, 1860 ஜூலை  9 ஆம் நாள் ஆரம்பிக்கப்பட்டது.

    விக்டோரியா அரசியினால் இவருக்கு “அரச செஞ்சிலுவைச் சங்க விருது” 1883 இல் வழங்கப்பட்டது. “ஓர்டர் ஒவ் மெரிட்” விருதினை 1907 இல் பெற்றுக்கொண்டார். இவ்விருதினைப் பெற்ற முதல் பெண் மணியாயும் இவரே விளங்குகின்றார். விக்டோரியா மகாராணியாருக்கு அடுத்த நிலையில் பேசப்படும் பெண்ணாக “புளோரன்ஸ் நைட்டிங்கேல்” சமூகத்தில் உயர்ந்த நிலையில் கவனிக்கப்பட்டார்.

    நவீன தாதியியல் முறையினை உருவாக்கியவர் என்னும் பெருமையினை புளோரன்ஸ் அம்மையார் பெறுகிறார். இலண்டனில் வெஸ்மினிஸ்டர் அபேயில் இருக்கின்ற தாதியர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து அங்குள்ள மாளிகையில் உள்ள விளக்குகள் ஏற்றப்பட்டு – வருகை தருகின்ற தாதியர்கள் ஒவ்வொருவராலும் கைமாறப்பட்டு அங்கிருக்கும் உயர்வான பீடத்தில் வைக்கப்படும். இவ்வாறு செய்வதன் அர்த்தம் “ஒரு தாதியிடமிருந்து மற்ற தாதியருக்கு தமது அறிவினைப் பரிமாறுவதாகக் கருதும் குறுயீடு” எனலாம். இந்த நாள், கைவிளக்கேந்திய காரிகை, விளக்கேந்திய சீமாட்டி என அழைக்கப்படும்  “புளோரன்ஸ் நைட்டிங்கேல்” அம்மையார் பிறந்த மே பன்னிரண்டாம் நாளே. 

    Share
  • மே 8 – செஞ்சிலுவை சங்க நிறுவனர் ஹென்றி டியூனன்ட் பிறந்தநாள்

    மே 8 – செஞ்சிலுவை சங்க நிறுவனர் ஹென்றி டியூனன்ட் பிறந்தநாள்

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, ஆஸ்திரேலியா

    வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த ஒருவரையும் அவர் தொடங்கிய  அரும்பெரும் சேவையையும் நினைக்கும் நாளே மே 8. 

    இறை பக்தியும், மனித நேயமும், கருணையும் கொண்ட குடும்பத்தில் ஜெனீவா என்னும் இடத்தில் 1828ஆம் ஆண்டு மே மாதம் எட்டாம் நாள், இம்மண்ணில் மலர்ந்தார்.

    ‘வளரும் பயிர் முளையிலேயே‘ தெரியும் என்பார்கள். ஹென்றி டியூனன்டும் பயனுள்ள பயிராய் முளைவிட்டார்.  மற்றவருக்கு உதவ வேண்டும், மற்றவர் படுகின்ற துன்பங்களைப் போக்க வேண்டும் என்னும் நல்ல சிந்தனைகள் ஹென்றியின் இளம் பருவத்திலேயே முகிழ்த்துவிட்டது எனலாம். சமுதாய நலன் சார்ந்து சிந்திப்பதற்கு அவரின் பெற்றாரும் உற்ற துணையாக விளங்கினார்கள். சிறையிலே கைதிகளுக்குக் கொடுக்கப்படுகின்ற கடுமையான தண்டனையை இவரின் மனம் ஏற்க மறுத்தது. அதனால் சிறைக்கூடங்களுக்கே சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறி அவர்களைத் தேறுதல்படுத்தினார்.

    வங்கித் தொழிலினைத் தேர்ந்தெடுத்து வளமாக வாழ்க்கையினை அமைத்தாலும் இவரின் சிந்தனை, துயரப்படுகின்றவர்கள் பக்கமே சென்றது எனலாம். 1859 ஜூன் மாதம் 25ஆம் திகதி இவர் வட இத்தாலிக்குச் செல்லும் நிலை ஏற்பட்டது. அப்பொழுது “சோல்பரினோ” யுத்தம் நடை பெற்றிருந்தது. ஆஸ்திரியா, பிரான்ஸ், இத்தாலிய நாட்டுப்படைகளைச் சேர்ந்தவர்கள் மூன்று இலட்சம்பேர் பதினாறு மணித்தியாலங்கள் போரிட்டதன் காரணத்தால் ஏறக்குறைய நாற்பதினாயிரம் பேர் உயிர்போகும் தறுவாயில் குற்றுயிராய்க் கிடந்தார்கள். இப்படிக் கிடந்தவர்களை எவரும் கண்டுகொள்ளவே இல்லை. எவருமே இவர்களின்மீது அக்கறை காட்டாது இருந்தமை ஹென்றி டியூனன்டின் உள்ளத்தில் பெருந்தாக்கத்தினை உருவாக்கியது.

    அல்லல்பட்டு ஆற்றாமையினால் அவதியுறும் அவர்களின் நிலைமை ஹென்றி அவர்களிடம் – பரிவை, பக்குவத்தை, மனிதநேயத்தை, உதவிடும் உன்னதத்தை உருவாக்கிய என்பதுதான் உண்மையாகும்.இந்தக் காட்சி அவரின் வாழ்க்கைப் பாதையினையே மாற்றியது எனலாம். பகைமைகள் நிரம்பி, யுத்த மோகம் கருக் கொண்ட வேளையில் – அவற்றையெல்லாம் ஒரு பொருட்டாய் எண்ணாமல் துணிவுடன், துயரத்தில் அவதிப்படுகிறவர்களுக்கு ஹென்றி மேற்கொண்ட மனிதாபிமான பணிகள் புரட்சியானவை. புனிதம் மிக்கவை என்றுதான் சொல்ல வேண்டும்.

    “சோல்பரினோ நினைவுகள்” என்னும் இவரது நூல் இவரின் எண்ணங்களை வெளிச்சமிட்டுக் காட்டி நிற்கிறது எனலாம். போரின் கொடுமைகளைப் பார்த்த இவரின் மனத்தில் – அப்போர்களில் ஈடுபட்டவர்களின்  துயரங்களே முக்கியமாகப் பட்டன. அவர்களைக் காத்திட அவர் எடுத்த அரும்பெரும் பணிதான் “செஞ்சிலுவைச் சங்கமாய்” எழுந்தது. நடுநிலையில் இருந்து எந்தவித பாரபட்சமுமே காட்டாது உதவிக்கரம் நீட்டுவதே இந்த அமைப்பின் மையக்கருவாய் அமைந்தது என்பதுதான் முக்கியமாகும். “சோல்பரினோ நினைவுகள்” என்னும் நூலில் ‘ எங்கு போர் நடந்தாலும் காயமடைந்த வீரர்களுக்குப் பாரபட்சமின்றி உதவ சர்வதேச அமைப்பு உருவாக்கப்படவேண்டும், என்று குறிப்பிட்டிருந்தார். அவரின் எண்ணமாய் 1863இல் “செஞ்சிலுவைச் சங்கம்” மலர்ந்தது.

    வளமார்ந்த செல்வச் செழிப்பில் பிறந்து வளமுடன் வாழ்ந்த மனிதரான ஹென்றி அவர்களின் மனதில் “சேவை மனப்பான்மை” குடிகொண்ட காரணத்தால் – ‘எதையுமே எதிர்பார்க்காமல் எது தேவையோ அதனை உடனடியாக ஆற்றிடும் நிலையினை‘ அவர் ஆத்மார்த்தமாக்கிக் கொண்டு விட்டமை தான் இன்றும் அவரை உலகமே கொண்டாடும் நிலைக்கு வழிவகுத்தது என்பது மறுக்க முடியாத உண்மை எனலாம். கிடைத்த வாழ்க்கையினால் ஆனந்தமாய் வாழ்ந்திருக்கலாம். ஆனால் மற்றவர்கள் போல் அதாவது சாதாரணமானவராக அவர் வாழ்க்கையினைப் பார்க்கவில்லை. அடுத்தவர் வேதனை அவர் வேதனையாகவே அவர் கண்டார். அதனால் உதவிக்கரம் நீட்டும் உயரிய அமைப்பாக இன்று செஞ்சிலுவை அமைப்பு உலகில் பரந்து விரிந்து செறிந்து பட்டொளி பரப்பி நிற்கிறது எனலாம்.

    மனித உயிர்களையும் அவர்களுக்கான ஆரோக்கியத்தையும் உறுதி செய்வது, இனம், மதம், நாடு, சாதி என்று பாராமல் துயரத்தில் பங்கு கொள்ளுவது, அரசியலை தவிர்த்து அகிம்சைவழியில் கவனம் செலுத்துதல், காய்தல் உவத்தலின்றி சேவையினையே கருவாய்க் கொண்டு செயலாற்றுதல் ஒற்றுமையினை மையப்படுத்திச் சேவையினை ஆற்றுதல், பொறுப்பாய், கடமை உணர்வுடன் செயற்படுதல் என்னும் உயரிய நோக்கங்களை ஆணி வேராக்கியே “செஞ்சிலுவை அமைப்பு” உலகம் முழுவது நூற்றுக்கு மேற்பட்ட கிளைகளை நிறுவி “மக்கள் தொண்டே மாபெரும் தொண்டு”, “மக்கள் தொண்டே மகேசன் தொண்டு” என்று களப்பணி ஆற்றி கைகொடுத்து அரவணைத்து நிற்கிறது எனலாம். “செஞ்சிலுவைச் சங்கம்” “செம்பிறைச் சங்கம்” இரண்டுமே ஒன்றுதான். ஹென்றி அவர்களின் சிந்தனையில் “செஞ்சிலுவை” ஆகியது அரபு நாடுகளின் சிந்தனையில் “செம்பிறையாய்” ஆகியது. இதுதான் வித்தியாசமே அன்றி செயற்படும் வகை ஒரே நிலைதான் என்பதை கருத்திருத்தல் நன்றாகும்.

    “இடர்வரும் போதும் உள்ளம் இருக்கிடும் போதும் – உடன் பிறந்தவர் போல் உள்ளம் இரங்கிடல் வேண்டும், ஓடும் உதிரத்திலே வடிந்து ஒழுகும் கண்ணீரிலே தேடிப்பார்த்தாலும் சாதி தெரிவதுண்டோ, எவர் உடம்பிலும் சிவப்பே இரத்த நிறமாகும் எவர் விழி நீர்க்கும் உவர்ப்பே இயற்கைக் குணமாகும் , பிறப்பினால் எவர்க்கும் உலகில் பெருமை வரமாட்டா சிறப்பு வேண்டுமெனில் நல்ல செய்கையே வேண்டும் ” என்னும் அரிய தத்துவத்தை அகமிருத் தியே ஹென்றி டியூனன்ட் என்னும் மாமனிதர் உதவிக்கரம் கொடுக்கும் உன்னத பணியினை ஆரம்பித்தார். அவரின் எண்ணங்களை உலகெங்கும் எடுத்துச் செல்லும் அமைப்புகளாய் “செஞ்சிலுவைச் சங்கமும்”, “செம்பிறைச் சங்கமும்” திகழ்கின்றன என்பதை அனைவரும் அகமிருத்துதல் அவசியமாகும். அற்புதமான பணியினை உலகினுக்கு அளித்திட்ட ஜெனிவாவின் புதல்வர் பிறந்த நாளினை கொண்டாடும் சிறப்பான தினமாக மலர்ந்ததுதான் மே மாதத்தில் வரும் எட்டாம்நாள் அதுவே  “உலக செஞ்சிலுவை நாளாகும்”. ஜொலித்து நிற்கிறது எனலாம்.

    வசதிபடைத்த ஹென்றி அவர்கள் பிற்காலத்தில் பிச்சைக்காரன் போலவே வாழ்ந்தார். “நான் ஓரிரு ரொட்டித் துண்டுகளில் வாழ்கிறேன். நான் அணியும் சாயம் போன கோட்டினை, செஞ்சிலுவைச் சங்கத்துக்கு உதவி கேட்க வரும் பொழுது மையால் கருப்பாக்கிக்கொள்ளுகிறேன். எங்கேனும் இருக்கும் கதவுகளின் ஓரமாய் இரவில் படுத்துக்கொள்ளுகின்றேன்.”

    நோபல் பரிசு கிடைத்தும் அதனையும் செஞ்சிலுவை அமைப்புக்கே வழங்கிய அன்பின் உருவத்தின் பிறந்தநாளைக் கொண்டாடும் தினந்தான் மே எட்டாம் நாளாகும்.

    Share
  • மெல்பேண் மாநகரில் துவாரகன் – அபிதாரணி மிருதங்க  அரங்கேற்றம்

    மெல்பேண் மாநகரில் துவாரகன் – அபிதாரணி மிருதங்க அரங்கேற்றம்

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, 
    ஆஸ்திரேலியா 

    முகக்கவசம் களைந்து முறுவலுடன் சபை விளங்க அன்புச் சகோதரரின் மிருதங்க  அரங்கேற்றம் மெல்பேண் மாநகரில் றோவில் பாடசாலை மண்டபத்தில் 17-04-2021 சனிக்கிழமை அன்று சிறப்பாக நடைபெற்றது. மேடை அலங்காரம் யாழ்மண்ணை நினைவில் கொண்டுவந்து நிறுத்தியது. மேடையின் முகப்பு கோவில்களின் மண்டபங்களில் காணப்படும் யாளியினைக் கொண்டதாய் வண்ணமாய் ஜொலித்தது. மேடையின் பின்னணியாகப் பெரியதாய் எம்பெருமான் சிவனின் உருவம் அழகான வண்ணத்தில் ஆசி வழங்குவதாய் மிளிர்ந்தது. பின்பக்கமாக அரங்கின் இருமருங்கும் வாழவைக்கும் வாழைகள் வைக்கப்பட்டிருந்தன. வாழைகளின் நடுவில் பச்சையினை வெளிப்படுத்தும் பாங்கான செடிகள் பக்குவமாய் அழகினை மெருகேற்றி நின்றன. மேடையின் முன்னே மங்கலமாய் மஞ்சள் நிற மலர்கள் வட்டமாய்க் கோலமிட, கோலத்தின் நடுவே – தேவ சபையில் சிவனாரின் திருநடனத்துக்கு லயத்தைக் கொடுத்து, மிருதங்கம் முழங்கும் நந்தியெம்பெருமானின் வெண்கல வடிவம் வைக்கப்பட்டிருந்தமையினைப் பாராட்டியே ஆக வேண்டும். விநாயகப்  பெருமானும் கல்வித்  தெய்வமான கலைமகளும் மங்கல விளக்குகள் மத்தியில் மேடைக்குக் காவலாய், அரங்கேற்றத்துக்கு அரணாக வைக்கப்படிருந்தமை பக்தியின் பரவசத்தை நல்கியது எனலாம்.

    இறை வணக்கத்துடன், குரு வணக்கத்துடன், பெற்றவர்கள் ஆசியுடன் அரங்கேற்றம் தொடங்கியது. அரங்கேற்றம் காணும் திருவளர் செல்வன் துவாரகன், திருவளர் செல்வி அபிதாரணியின் அன்புத் தந்தையார் கவிஞர், எழுத்தாளர் சந்திரன் அவர்கள்,

                ” உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
    நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா
    அலகி லாவிளை யாட்டுடை யார்அவர்
    தலைவர் அன்னவர்க் கேசர ணாங்களே “

    என்று கம்பநாடன் கவியினை முன்வைத்து வரவேற்புரையினை மிகவும் கச்சிதமாய் வழங்கினார். வரவேற்புரைக்கு அவர் தேர்ந்தெடுத்த கம்பநாடன் கவியினூடாக அவரின் இலக்கிய நோக்கும் அவர்வழி பயணப்படும் அவர் குடும்பத்தின் நோக்கும் தெள்ளிதிற் புலப்பட்டது.

    வரவேற்புரை நிறைவுற்றதும் திரை விலகியது. தேவ உலகத்தில் இருக்கிறோமா என்று எண்ணும் வகையில் மேடை ஒழுங்கமைப்பு எல்லோரையும் பிரமிக்க வைத்தது என்றுதான் சொல்ல வேண்டும். அணிசெய் கலைஞர்கள் அமர்ந்திருக்க, வெண் மேகமாய் மேடை ஜொலித்திட, மேடையின் இரு பக்கங்களிலும் இருந்து அண்ணாவும் தங்கையும் மேடையை நோக்கி வந்த விதம் அவையினரை அசர வைத்தது. எந்த ஒரு மிருதங்க அரங்கேற்றத்திலும் இடம்பெறா வகையில் இது கண்கொள்ளாக் காட்சியாய் அமைந்தது. அன்புச் சகோதர்களின் குருவான யோகன் கந்தசாமி அவர்கள் மேடையின் முன்வந்து ஆயத்தம், ஆரம்பம் என்று மூன்று முறை கைத்தட்டி தலைநிமிர்ந்து தனது நாற்பத்து எட்டும் நாற்பத்து ஒன்பதாவதுமாகிய மிருதங்க அரங்கேற்றம் என்று சொல்லிப் பூரித்து நிற்க, விக்கினங்கள் அகற்றும் விநாயகப் பெருமானின் துதியான “வாதாபி கணபதிம்” என்னும் கீர்த்தனையுடன் தொடங்கிய தொடக்கம் அனைவரையும் பிரமிக்க வைத்தது. பாடிய அகிலன் சிவாநந்தன், வயலின் மேதை முரளிக்குமார், கடம் செல்வன் மருத்துவர் திவாகர் யோகபரன், மோர்சிங் கலைஞர் கம்பன் புகழ்பாடும் ஜெயராம் ஜெகதீசன், ஆரம்பக் கட்டத்தைத் தூக்கி நிறுத்தினார்கள்.

    ஹம்சத்வனியுடன் அரங்கேற்றம் ஆரம்பமானதே களிப்பினை நல்குவதாய் அமைந்தது எனலாம். அகிலன் சிவானந்தன் எப்படிப் பாடினாலும் முரளிக்குமார் எப்படி வாசித்தாலும் அத்தனைக்கும் ஈடு கொடுக்கும் வண்ணம் துவாரகனும் அபிதாரணியும் தங்களின் விரல்களால் வித்தை காட்டியது அவையினரின் அகத்தினில் புகுந்து விண்ணதிரும் வகையில் கரவொலியாய் எழுந்தது. 

    ஆதி தாளத்தில் ஹம்சத்வனியில் ஆரம்பித்த இசைக்கோலம், ரூபக தாளம், கண்ட ஜதி, துருவ தாளம், மிஸ்ர நடை, ஜம்பை தாளம் என வளர்ந்து, தொடங்கிய ஆதி தாளத்துடன் மங்களமாய் மலர்ந்தது. கண்ட ஜதி துருவ தாளத்தில் பல அட்சரங்களை அலாதியாய் அகிலன் சிவானந்தன் மெதுவாயும் துரித கதியிலும் பாடி நிற்க – அகிலனின் வேகத்துக்கு ஏற்றாற் போல், தேர்ந்த வித்துவான்கள் வாசிப்பது போன்று துவாரகனும் அபிதாரணியும் அரங்கில் மிருதங்க வாத்தியத்தை அனுபவித்து வாசித்துக் காட்டி அனைவரையும் தம்வசமாக்கி விட்டனர். இடைவேளை எப்படி வந்தது என்று தெரியாமலே அரங்கேற்றம் விறுவிறுப்பாய் அமைந்திருந்தது.

    இடைவேளையின் பின்னர், அரங்கேற்ற அரங்கு முற்றிலுமாக மாறியே காணப்பட்டது. பெரும்பாலான மிருதங்க அரங்கேற்றங்களில் வீணை வாத்தியம் இணைவது என்பது குறைவாக இருக்கிறது. ஆனால் இங்கு புதுமையாக இரண்டு வீணைகள் இணைந்து நின்றன. இணைந்தமை புதுமையன்று. வீணையை வாசித்த வித்துவான்கள் ராம்நாத் ஐயர், கோபிநாத் ஐயர் இருவரும் சகோதரர்கள். மிருதங்க அரங்கேற்றம் செய்யும் துவாரகனும் அபிதாரணியும் சகோதரர்கள். இதைத்தான் இசைக்கோலத்தின் புதுமை என்பதா? அல்லது இந்த மிருதங்க அரங்கேற்றத்தின் பெருஞ்சிறப்பு என்பதா?அல்லது சந்திரன் உஷா தம்பதியினரின் ஆளுமை என்பதா? எப்படிப் பார்த்தாலும் அன்புச் சகோதரர்களின் மிருதங்க அரங்கேற்றம் புத்தம் புதுமையாய் அமைந்தது எனலாம்.

    வீணைச் சகோதரர்கள் தாங்களாகவே வடிவமைத்த கெளரி மனோஹரி இராகத்தில் மிஸ்ர ஜம்பை தாளத்தில் அமைந்த ராகம் தானம் பல்லவி – துவாரகன் அபிதாரணி சகோதரர்களுக்கு பெரும் சவாலாகவே அமைந்தாலும் அண்ணாவும் தங்கையும் கற்ற வித்தையினைக் கச்சிதமாய்க் காட்டி – பெற்றவர்களையும், பேணி நின்ற குருவினையும் பார்த்துப் பருகவந்த ரசிகப் பெருமக்களையும் வியக்க வைத்தார்கள். 

    வீணைகள் இணைய, வயலின் அருகணைய, மோர்சிங்கும் கடமும் துணையாக அகிலன் சிவானந்தனின் அருமையான தில்லானா களைகட்ட, சந்திரனின் பாடல் உள்நுழைய, தமிழ்வாழ்த்து வந்து நிற்க, முத்தைத் தரு பத்தித் திருநகை அமைந்திட வேண்டும் என்னும் பக்தியின் நோக்கில் அருணகிரியார் அருட்திருப்புகழுடன் அன்புச் சகோதர்களின் மிருதங்க அரங்கேற்றம் ஆனந்தமாய் நிறைவடைந்தது.

    ஈன்ற பொழுதில் பெரிதுவந்து நின்ற தாயார் உஷாவும் அவையவத்து முந்தியிருக்கச் செய்ய எண்ணிய தந்தை சந்திரனும் பூரித்து நின்றனர். அவர்களின் செல்வங்களான துவாரகனும் அபிதாரணியும் வள்ளுவன் வழியில், பெற்றவர்களை மற்றவர்களுக்கு வெளிச்சமிட்டுக் காட்டி நின்றனர். இவை அத்தனையும் மிருதங்க அரங்கேற்றத்தின் அடிநாதமாய் அமைந்திருந்தது என்பதை மனந்திறந்து சொல்லி மகிழ்கின்றேன்.

    Share
  • பேராளுமை மிக்க அந்தணப் பெரியார் வைத்தீஸ்வரக் குருக்கள்

    பேராளுமை மிக்க அந்தணப் பெரியார் வைத்தீஸ்வரக் குருக்கள்

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    ஆஸ்திரேலியா

    அந்தணக் குலத்தில் ஆளுமைகள் பலர் இருந்து அரும்பணிகள் ஆற்றி இருக்கிறார்கள். அவர்கள் ஆலயங்களில் கிரியைகளை ஆற்றும் நிலையிலும் அரச பணிகளை ஆற்றும் பதவிகளிலும் இருந்திருக்கிறார்கள்.எங்கு அவர்கள் இருந்தாலும் தங்களின் அகவொழுக்கம், புறவொழுக்கங்களை எந்த நிலையிலும் கைவிடாதவர்களாகவே வாழ்வில் விளங்கியிருக்கிறார்கள் என்பது மனங்கொள்ளத் தக்கதாகும். அப்படி அவர்கள் வாழ்ந்த காரணத்தால் சமூகத்தில் அவர்கள் பெரிதும் மதிக்கப்படுகின்ற நிலையிலே இருந்தார்கள், இன்னும் இருக்கிறார்கள் எனலாம்.

    வேதம் ஒதுவது வேதியர்க்கு அழகு. விக்கிரகங்களைத் தொட்டு ஆராதித்து அவனைப் பக்தி சிரத்தையுடன் பூசிக்கும் நிலையில் தம்மை ஆட்படுத்திக் கொண்டிருப்பதும் அந்தணரின் அழகெனலாம். கிரியைகளை ஆற்றி ஆலய கும்பாபிஷேகங்களை முறைப்படி செய்து மக்களும் நாடும் வளமுடன் இருக்கும் வழியிலே பயணிப்பதும்கூட அந்தணர்க்கு அழகு எனலாம்.

    கிராமத்தின் நன்மதிப்பைப் பெற்று அங்கு வாழும் மக்களுக்கு நாளும் பொழுதும் நல்ல குருவாய், நல்ல வழிகாட்டியாய், நல்ல ஆலோசகராய், விளங்கிய அழகும் –  விளங்கும் அழகும் அந்தணப் பெரியோருக்கு வாய்த்திருக்கிறது எனலாம். இப்படிப் பார்க்கின்ற வேளை, ஈழத்தில் குறிப்பாக யாழ்ப்பாண மண்ணுக்கு, அந்தணப் பெரியார்கள் பெருந்துணையாகவே விளங்கி இருக்கிறார்கள் என்பதை மனமிருத்தல் அவசியமாகும்.

    வித்துவான் கணேசையர், வித்தியாதிபதி சதாசிவ ஐயர், காசிவாசி செந்திநாத ஐயர் வித்தியாதிபதி லக்ஷ்மண ஐயர், பேராசிரியர் கா.கைலாசநாதக் குருக்கள், பண்டிதர் பஞ்சாட்சரசர்மா இந்த வரிசையில் வந்து நிற்பவர்தான் காரைநகர் ஈந்த பேராளுமை வைத்தீஸ்வரக் குருக்கள் ஆவர். ஆலயத்திலும் நிற்பார். ஆன்றோர் அவையிலும் நிற்பார். வேதமும் ஓதுவார். வித்துவான்கள் மத்தியில்  தொல்காப்பியமும் செப்புவார். இறைவனைப் பற்றி அருட்பாடல் களையும் பாடுவார். இலக்கியக் கூட்டங்களில் இலக்கியப் பாடல்களையும் எடுத்து நயமுரைப்பார். ஆனாலும் அந்தண ஆசாரத்தை அகமிருத்தியே அனைத்தையும் ஆற்றுவார்.

    இப்பேராளுமை 1916ஆம் ஆண்டு கணபதீஸ்வரக் குருக்கள் சிவயோக சுந்தராம்பாள் தம்பதிகளுக்கு நற்புத்திரனாய் நானிலத்தில் இறையருளால் பிறந்தார்கள். ஆண்டவனையே அனுதினமும் நினைக்கும் ஆசாரசீலரான கணபதீஸ்வரக் குருக்களின் உதிரத்தில் உதித்த காரணத்தால் அவரின் புத்திரராய் பிறந்த வைத்தீஸ்வரக் குருக்களும் ஆண்டவன் அருளினைப் பெற்றே இம்மண்ணில் நல்லவண்ணம் வந்தார் மலர்ந்தார் எனலாம். தந்தையைக் குருவாய் கொண்டு தனது கல்வியை ஆரம்பித்தார். தந்தையின் வழி காட்டலில் நல்ல ஆசான்கள் இவருக்கு வந்தமைந்தார்கள். பண்டிதர் பஞ்சாட்சரசர்மா, பண்டிதர் சுப்பிரமணிய தேசிகர், மகாவித்துவான் கணேசையர் இவருக்கு நல்ல வெளிச்சத்தைக் காட்டினார்கள். சமயத்தைக் கற்றார். அன்னைத் தமிழையும் ஐயந்திரிபறக் கற்றார்.சமஸ்கிருதத்தையும் கற்றுத் தேர்ந்தார். ஆங்கிலமும் அறிவார். ஆனாலும் அவரின் கற்றல் தாகம் அடங்கிவிடவே இல்லை.

    வைத்தீஸ்வரக் குருக்கள், பேராளுமையாய் மிளிர்வதற்கான பாதையில் பயணிக்கத் தொடங்கினார். நல்ல ஆசான்களிடம் கற்றதோடு அமையாது மேலும் கற்றலின் வழியில் பண்டிதராய்,  பயிற்றப்பட்ட ஆசிரியராய், நற்றமிழ் நாயகராய் உயரும் நிலைக்கு வந்து நின்றார் எனலாம்.

    கற்றுத் தேர்ந்த குருக்கள் அவர்கள் கற்றதைக் கொடுக்க வேண்டும் என்னும் ஆவலினால் ஆசிரியப் பணியினை அணைத்துக்கொண்டார். கொழும்பு விவேகானந்த வித்தியாலயத்தில் தொடங்கிய  ஆசிரியப் பணி நாட்டின் பல இடங்களில் பயணித்து நிறைவில் தலைமை ஆசிரியர் நிலையில் இருந்து ஓய்வுபெற்றார்.

    கொழும்பில் பணியாற்றும் வேளை கற்பித்தலோடு அமையாது ஏனைய நிலையிலும் தன்னுடைய ஆற்றலைப் பகிர்ந்துகொண்டார். விவேகானந்த சபையில் நடத்தப்படும் சைவ சமயப் பாடக் குழு, தினகரன் பத்திரிகை செய்திப் பிரிவு ஆகிய இவற்றில் தனது பங்களிப்பினை வழங்கினார். அத்துடன் சிறைச்சாலைக்குச் சென்று அறப்போதனையும் ஆற்றினார்.

    ஓய்வு பெற்றபின்னர் மேடையில் பேசுவார், எழுதுவார். அத்துறைக்கு வருகின்றவர்களுக்கும் ஊக்கம் ஊட்டுகின்றவராகவும் இருப்பார். சைவத்தையும் தமிழையும் நாவலர் பெருமான் தனது இரு கண்களாகவே கொண்டாரென்று பலரும் விதந்து போற்றுவார்கள். அந்த நிலையில் எங்கள் குருக்கள் அவர்களும் விளங்கினார் என்றால் அதனை எவரும் மறுத்துரைக்கவே மாட்டார்கள். அந்த அளவுக்கு அவரின் பணிகள் மிகவும் சிறப்பாக அமைந்திருந்தன என்பது வெள்ளிடை மலையாகும்.

    யாழ்ப்பாண ஆன்மீகப் பேரொளி யோகர் சுவாமிகளின் நல்லாசியுடன் 1940ஆம் ஆண்டில் குருக்கள் அவர்களால் “காரைநகர் மணிவாசக சபை” ஆரம்பிக்கப்பட்டது. இச்சபையின் பிறப்பால் இளைய சமுதாயத்திடம் சைவத்தைப் பற்றிய சிறப்பான புரிதல் உருவாகியது என்பது முக்கியம் எனலாம். காரை நகருக்கு மட்டுமல்லாது யாழ்மண்ணுக்கே இந்த அமைப்பு நல்லதோர் சமய வழிகாட்டுதலை வழங்கியது எனலாம். இந்தச் சபையினை அமைத்ததோடு நின்றுவிடாமல் இந்தியாவில் இருக்கின்ற சைவ ஆதீனங்களையும் இணைக்கும் பாலமாகவும் குருக்கள் விளங்கினார் என்பது மிகவும் முக்கியம்.

    ஈழத்துச் சிதம்பரம் என பக்தி சிரத்தையுடன் போற்றி நிற்கும் காரைநகர் சிவன் சன்னிதானத்தில் அமைந்துள்ள மணிவாசகர் சபையினூடாக 1955ஆம் ஆண்டு தொடக்கம் திருவெம்பாவைக் காலத்தில் “மணிவாசகர்” விழா நடைபெறத் தொடங்கியது. தொடர்ந்து ஆண்டுதோறும் இவ்விழாவினை நடத்துவதில் குருக்கள் அவர்களின் பணி மிகவும் போற்றப்பட வேண்டியதென்றே கொள்ளல் வேண்டும். இந்த விழாக்களில் தமிழகத்து அறிஞர் பெருமக்கள் கலந்து சிறப்பிப்பதும் ஈழத் திருநாட்டின் அறிஞர் பெருமக்கள் அவர்களோடு இணைந்து நிற்பதும் குருக்கள் அவர்களின் சிந்தனையால்.  செயற்றிறனால் விளைந்த நல்ல பலனல்லவா! சங்கமிக்கும் அறிஞர்களால் பல அரிய பெரிய விஷயங்கள் எல்லாம் யாவருக்கும் கிடைக்கும் பெருவாய்ப்பும் வாய்த்திருந்தது. ” காரைநகர் மணிவாசகர் சபை” சைவமும் தமிழும் நல்கும் பொக்கிஷமாய் மிளிர்ந்தது. அந்தப் பொக்கிஷத்தை ஆக்கி அளித்த பேராளுமையாக எங்கள் குருக்கள் திகழ்கிறார்.

    “‘காரை நகரில் சைவ சமய வளர்ச்சி” என்னும் குருக்கள் அவர்களின் நூல் – பல்கலைக்கழத்தில் வைக்கப்படவேண்டிய பெறுமதியான நூலென்றே சொல்லலாம். பெறுமதியான நூலை ஆக்கிய வைத்தீஸ்வரக் குருக்களென்னும் பேராளுமை – பதிப்புத் துறையிலும் தன்னுடைய கவனத்தைச் செலுத்தினார் என்பதும் கருத்திருத்த வேண்டியதேயாகும். கந்தர் மடத்தைச் சேர்ந்த சுவாமிநாதப் பண்டிதரால் ஆக்கப்பட்ட “திருமுறைப் பெருமை ” , பிரம்மஶ்ரீ கார்த்திகேயப் புலவரின் “திண்ணைபுர அந்தாதி” , திருப்போசை வெண்பா” , “”தன்னை அந்தாதி” “திக்கை அந்தாதி” வித்துவான் எவ்.எக்ஸ்.சி. நடராசா அவர்களின் “நன்நூல் காண்டிகை உரையும் நாவலர் பெருமானும்”, “தெரி நிலை வினயெச்சம்”, “வினைத் தொகை” ஆகியவற்றைப் பதிப்பித்ததோடு அமையாது; ஏழாலைப் பண்டிதர் கந்தையா அவர்களின் ” நாவலர் பிள்ளைத்தமிழ்”, “ஷேத்திரத் திருவெண்பா”, மற்றும் திருவாளர் சபாபதியால் எழுதப்பட்ட” அருள் நெறித் திரட்டு ” ஆகிய நூல்களையும் பதிப்பித்தார் என்பது குருக்கள் அவர்களின் பதிப்புத்துறைப் பக்கம் எனலாம். அவரின் பதிப்புத்துறைக்கு முத்திரை பதிக்கும் வகையில் அமைந்த நூல்தான் – தங்கத்தாத்தா நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் மகனார் புலவர்மணி சோ, இளமுருகனார் ஆக்கிய “திருத்திண்ண புரச் சுந்தரேசர் புராணம் என்னும்  ஈழத்துச் சிதம்பர புராணம்” ஆகும்.

    திருவாதிரைக் கால நிகழ்வுகளை மலராக்கி ஐந்து மலர்களாய் குருக்கள் அவர்கள் வெளியிட்டிருக்கிறார். அது மட்டுமன்றி ” காரைநகர் சைவ மகாசபைப் பொன்விழா மலர்”, காரைநகர் மணிவாசகர் சபைப் பொன்விழா மலர் “, “காரைநகர் வியாவில் ஐயனார் கோவில் கும்பாவிஷேக மலர்” என்று வெளிவந்த மலர்கள் அனைத்துக்கும் எங்கள் பேராளுமை குருக்கள் அவர்களே ஆசிரியராய் இருந்து நெறிப்படுத்தி இம்மலர்களை மணம் கமழ வைத்தார் என்பது மனக்கொள்ளத் தக்கதாகும்.

    திருவாசகத்தை தந்தை தாயார் வழியில் பெற்றுக் கொண்ட குருக்கள் அவர்கள் தானும் அதனுட் புகுந்து மணிவாசகரின் உருகும் வாசகத்தை அகமிருத்தியதன் விளைவே மணிவாசகர் சபை ஆகியது எனலாம்.சைவத்தின் உயர் தத்துவங்கள் பொதிந்திருக்கும் திருவாச கத்தைக் கையில் எடுத்த பாங்குடன் நின்று விடாது – சைவத்துக்குத் தமிழும் இன்றியமையாதது என்பதை மனமிருத்தி 1960 ஆம் ஆண்டில் ” தமிழ் வளர்ச்சிக் கழகத்தை ” ஆரம்பித்தார். இதன் வாயிலாகப் பல தமிழ்ப்பணிகளுக்கு வழி சமைத்தார் எனலாம். காரைநகர் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் வாயிலாக இருபத்து ஆறு நூல்களை வெளியிட்டார். மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் இக்கழகம் பெரிதும் துணையாக விளங்கியது என்பதை மறுத்துவிட முடியாது. இக்கழகத்தின் செயற்பாடு 1970 தொடக்கம் 1980 காலப் பகுதியில் பெரு வெளிச்சமாய் அமைந்தது எனலாம்.

    பேராளுமை வைத்தீஸ்வரக் குருக்கள் சைவத்தையும் தமிழையும் அகமிருத்தி தன்னாலான பணிகளை மேற்கொண்டார் என்பதை பலரும் காய்தல் உவத்தலின்றி ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்குச் சான்றாக அவரை வந்து சேர்ந்த விருதுகளும் பட்டங்களும் குவிந்து கிடக்கின்றன எனலாம்.

    யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமே அவரை வியந்து அவருக்குத் “தத்துவக் கலாநிதி” என்னும் பட்டத்தை 2020ஆம் ஆண்டில் வழங்கி பெருமைப்படுத்தியிருக்கிறது.

    இலங்கைக் கம்பன் கழகம் “மூதறிஞர்” என்னும் பட்டத்தை வழங்கி குருக்கள் அவர்களைக் கெளவித்தமையும் மனங்கொள்ளத்தக்கதாகும். குருக்கள் அவர்களைக் கெளரவிப்பதன் மூலமாக கெளரவித்த அமைப்புகளே பெருமையுற்றன எனலாம். அந்த வகையில் – வடக்குக்கிழக்கு புனர்வாழ்வு அமைச்சு “கலைஞான கேசரி” என்னும் பட்டத்தையும், சர்வதேச இந்துமத குருமார் ஒன்றியம் “சிவாகம கிரியா பூஷணம்” என்னும் பட்டத்தினையும் வழங்கிப் பெருமைப்பட்டன எனலாம்.

    நூல்கள்மீது தீராத காதல் கொண்டிருந்தார் குருக்கள். அதனால் அவரின் இருப்பிடமே பெரியதொரு நூல்நிலையமாய் திகழ்ந்தது என்பதைப் பலரும் அறிவார்கள். மலர்கள், பத்திரிகைகள், பல்வேறு வகையான நூல்கள் குருக்கள் அவர்களைச் சூழ்ந்தே இருந்தன எனலாம். தனது சேமிப்பில் இருந்த ஐயாயிரத்துக்கு மேற்பட்ட நூல்களை – அவரின் தந்தையாரும் ஈழத்துச் சிதம்பர நூலின் ஆசிரியருமான சிவஶ்ரீ கணபதீஸ்வரக் குருக்கள் பெயரில் அமைக்கப்பட்ட ” கணபதீஸ்வரக் குருக்கள் நூல் நிலையத்துக்கு ” வழங்கி யாவரும் என்றுமே பயனுறச் செய்தார்.

    தள்ளாத வயதானாலும் தமிழையும் சைவத்தையும் மனங்கொண்டவராகவே குருக்கள் அவர்கள் திகழ்ந்தார்கள் என்பதற்கு அவரின் தொண்ணூற்று ஏழாவது வயதில் “சைவக் களஞ்சியம்” என்னும் அரிய நூலின் தொகுப்பு ஆசிரியராய் இருந்து 2013 ஆம் ஆண்டில் வெளியீடு செய்தமை பெருஞ் சான்றாகும்.

    எழுதி, பேசி, பதிப்பித்து, சமூகத்தில் முன்னின்ற குருக்கள் அவர்கள் அறவழியினையும் உபதேசிக்கும் ஆசானாயும் விளங்கி இருக்கிறார்கள். முப்பத்து இரண்டு விதமான அறங்களைத் தேர்ந்தெடுத்து தன்னுடைய நாட்குறிப்பில் எழுதிவைத்திருந்தார் என்று அறிய முடிகிறது. திருமணம் செய்ய இயலாத நிலையில் இருக்கும் ஏழைப் பெண்களுக்கு உதவுதல் வேண்டும் என்பார். இறந்தவர் உடலைத் தகனம் செய்ய இயலா நிலையில் இருப்பார்க்கு உதவ வேண்டும் என்று எடுத்துரைப்பார். ஆதரவற்றோரை அரவணைத்தல், அவருக்கு இருப்பிட வசதியினை ஏற்படுத்திக் கொடுத்தல், கற்கும் மாணவர்களுக்கு உணவளித்தல், என்று பலவகை அறங்கள் செய்வது பெரும் புண்ணியம் என்றும் அவற்றைச் செய்தல் வேண்டும் என்பதும் குருக்கள் அவர்களின் விரிந்த பரந்த சிந்தனையாய் இருந்திருக்கிறது என்றும் அவரின் வரலாற்றால் அறிந்திட முடிகிறது.

    ஈழத்து மண்ணில் அதுவும் வட புலத்தில் காரைநகர் என்னும் புனித ஊரில் இப்படி ஒரு பேராளுமை, அந்தணப் பெரியோர் – சிவத்தமிழ் வித்தகராக, பண்டிதமணியாக, கலாநிதியாக, விளங்கி இருக்கிறார் என்பது சைவத்துக்கும் தமிழ்மொழிக்கும் கிடைத்த பெருமை என்று சொல்லுவது பொருத்தமாய் இருக்கிறதல்லவா!

    “அந்தணர்க்குண் மனையனையான் அருங்கலைகள்
    மிகப் பயின்றான் அருமை ஆசான்
    சந்தததும் சிவனன்பு தழைக்கின்ற
    உள்ளத்தான் தகைசால் நண்பன்
    கந்தமலி பூம்பொழில் சூழ் திண்ணாபுரங்
    கவினோங்குங் கருத்து மிக்கான்
    வந்தவருக்கு அமுதளிப்பான வண்பெயர்கொள்
    வைத்தீஸ்வரக் குருக்கள்“

    Share
  • சிந்திக்க வைக்கும் சிறப்பான சித்திரை!

    சிந்திக்க வைக்கும் சிறப்பான சித்திரை!

    மகாதேவ ஐயர் ஜெயராம சர்மா, 
    ஆஸ்திரேலியா

    சித்திரைத் திருநாளை தமிழர் திருநாள் என்பதா? தைத் திருநாளை தமிழர் திருநாள் என்பதா? என்று ஒரு போராட்டமே நடந்து கொண் டிருக்கிறது. அந்தப் போராட்டம் அரசியல் மயப்படுத்தப்பட்டு, அரசி யல் கட்சிகளின் கொள்கையாக்கப்பட்டு; அக்கட்சிகள் சார்பாக அறிஞ ர்கள் தங்களின் கருத்துக்களை வெளிப்படுத்தி பெரும் சர்சையினை உருவாக்கி ஆட்சிகள் மாறும் வேளை காட்சிகள் மாறியதையும் காணக்கூடியதாக இருக்கிறது. ஆனாலும் பலரும் சித்திரைத் திருநாளையே தமிழர்தம் திருநாளாகக் கொண்டாடி வருகிறார்கள் என்பதும் நோக்கத்தக்கதே. திருநாளினைக் கொண்டாடுவதன் நோக்கமே மனமகிழ்வும் மனநிறைவுமேயாகும். அதனை விட்டு விட்டு அங்கும் – வீண் தர்க்கமும் குதர்க்கமும் பேசி அங்கும் ஒரு பஞ்சாயத்தை அரங்கேற்றுவதும் பொருத்தமுடையதா ? சிந்தித்தால் தெளிவு வரும் அல்லவா?

    சித்திரை மாதத்தின் முதல் நாளையே புத்தாண்டாக கொண்டாடி வருகிறார்கள் தமிழர்கள் என்பதற்கு சான்றுகள் பல இருக்கின்றன என்று அறியக்கிடக்கிறது. வானியலையும், பருவங்களின் சுழற்சியையும் அடிப்படையாகக் கொண்டே சித்திரைத்திருநாள் புத்தாண்டாக மலர்ந்திருக்கிறது எனலாம். பூமியானது சூரியனை ஒருமுறை சுற்றிவருவதற்கு எடுக்கும் காலம் பனிரெண்டு  மாதங்களாகும்.சூரியன் பூமத்திய ரேகையில் பிரகாசிக்கும் மாதம் ஆண்டினது தொடக்கமாகக் கருதப்படுகிறது.சூரியன் முதல் ராசியான மேஷ ராசிக்குள் நுழைவதிலிருந்து அந்த ராசியைவிட்டு வெளி யேறும் வரையுள்ள காலமானது சித்திரை மாதமேயாகும்.

    அகத்தியரின் ‘பன்னீராயிரத்தில்‘ பங்குனி மாதத்தை கடை மாதம் என்று காட்டப்படுகிறது. சங்க இலக்கியம் தமிழர்தம் பொக்கிஷ மாகும். அந்த பொக்கிஷத்திலேயே சித்திரைத் திருநாள் – புத்தாண்டு என்பதற்கு சான்றுகள் இருக்கின்றன என்பதும் மனங்கொள்ளத் தக்கதாகும். நெடுநெல் வாடையில் 160-161 வரிகளில் “திண்ணிலை மருப்பின் ஆடுதலையாக” என்று நக்கீரர் பகுருகின்றார். இப்பாடலில் வரும் ‘ஆடுதலைக்கு‘ மேஷ ராசி என்று பத்துப்பாட்டு ஆராய்ச்சி நூலின் வாயிலாக முனைவர் மா. இராசமாணிக்கனார் தெளிவு படுத்துகிறார். “தலைநாள் பூத்த பொன் இணர் வேங்கை” என்று மலைபடுகடாம் என்னும் சங்கப்பாட்டு காட்டுகிறது. அதாவது – பங்குனி மாதத்தின் கடைசி சித்திரை மாதத்தின் முதல் நாளிலேதான் வேங்கை மரங்கள் வழக்கமாகப் பூக்கும் என்பது இதன் பொருளாகும். அதுமட்டுமல்ல “கணிவேங்கை நன்னாளே நாடி மலர்தலால்” என பழமொழி நானூறு சுட்டிக் காட்டுவதால் – இளவேனில் காலத்தின் துவக்கமானாது சித்திரையே என்பதும் அதுவே தலைநாளாக மிளிர்ந்தது என்பது தெளிவாகத் தெரிகிறதல்லவா?.

    சீவகசிந்தாமணியிலும் கோடை காலமே முதலாவது பருவம் என்று சுட்டுவதும் நோக்கத்தக்கதே. மேலும் ‘புஷ்பவிதி‘ என்னும் நூலிலே “சித்திரை முதல் மாதமே” என்று கமலை ஞானப் பிரகாசரும் விளக்கம் அளித்துள்ளமையும் கருத்திருத்த வேண்டியதே.

    சூரியனின் சுழற்சியை வைத்துத்தான் புத்தாண்டைக் கணக்கிடலாம். அப்படித்தான் கணக்கிடப்பட்டும் வருகிறது அதனால்தான் சித்திரைத் திருநாள் புத்தாண்டாய் மலர்கிறது. தைமாதம் என்பது மகர ராசியில் வருகிறது. மகர ராசி என்பது வானிலைப்படி பஞ்சாங்கப்படி பத்தாவது ராசியாகும். பத்தாவது ராசியில் வரும் தை எப்படி புத்தாண்டாய் அமைய முடியும்? மேஷ ராசிதான் முதலாவது ராசி என்பதற்கே ஆதாரங்கள் இருப்பதாலும் அதனையே இலக்கியச் சான்றுகள் உறுதிப் படுத்துவதாலும்மேஷத்தில் சூரியன் நுழையும் காலமாக சித்திரையே பொருந்தி வருவதாலும்புத்தாண்டினைச் சித்திரையில் கொண்டாடி வருவதே வரன் முறையாக இருக்கிறது என்பது சித்திரைத் திருநாள் கொண்டாடி மகிழும் வேளை யாவரும் மனமிருத்தல் நல்லது என்று கருகிறேன்.

    இளவேனில் காலத்தில்த்தான் சித்திரையே ஆரம்பிக்கின்றது. இதனையே வசந்தகாலம் என்று அழைக்கின்றனர். வசந்த காலத்தில்த் தான் மாமரங்களில்  மாந்தளிர்களும் மலர்களும் பூத்துக் குலுங்கு கின்றன. வேப்பமரங்களிலும் வேப்பம் பூக்களும் பூத்துக் குலுங்கு கின்றன.மாமரங்கள் பூத்துக் குலுங்கினால் நல்ல சுவையான மாங்கனிகள் கிடைக்கும். சுவைத்தால் இன்பமே பெருகும். வேம்பின் குணமோ கசப்பு. வேம்பம் பூவின் நிலையும் கசப்புத்தான். கசப்பான வேம்பும், இனிப்பான மாவும் ஜொலிக்கும் காலம்தான் சித்திரைத் திருநாள். அதாவது இனிப்பும் கசப்பும் நிறைந்ததுதான் மனித வாழ்க்கை என்பதை இயற்கையே உணர்த்தி பாடம் நடத்தும் காலம்தான் புத்தாண்டாய் வருவிருக்கும் சித்தைரைத் திருநாள் என்பதை மனமிருத்தல் அவசியமானது என்று கருதுகிறேன்.

    சித்திரை என்று நினைத்தாலே பெரும் எதிர்பார்ப்புகள் வந்தே நிற்கும். “பங்குனிபோய் சித்திரை வந்தால் பத்திரிகை வந்திடும் கல்யாணப் பத்திரிகை வந்திடும்” என்று ஒரு பாட்டும் பிரபல்யமாய் ஒலிப்பதைக் கேட்டிருக்கிறோம். அப்படி என்றால் – சித்திரை என்பது வாழ்வில் நல் முத்திரை பதிக்க வரப் போகிறது என்பதுதானே அர்த்தம்! சித்திரைத் திருநாள் தமிழர்தம் உள்ளங்களில் உவகையினை ஏற்படுத்தும் நாளாகவே அமைகிறது எனலாம்.

    புத்தாடை வாங்குவது! விதம்விதமாய் பலகாரங்கள் செய்வது! பட்டாசு மத்தாப்பு என்று வாங்கிக் குவிப்பது! வீட்டுக்கு வெள்ளை அடிப்பது! வீட்டை அழகு படுத்துவது! ஒரே கல கலப்புத்தான்!

    சித்திரைப் புதுவருடம் என்றவுடன் மருத்துநீர் முனவந்து நிற்கும்! மருத்துநீர் என்பது மருத்துவத்தின் ஒரு பங்களிப்பே எனலாம். தமிழர்கள் எதைச் செய்தாலும் அதற்குள் மருத்துவத்தையும் இணைத்தே விடுவார்கள். இது தமிழர்களின் அத்தனை கொண்டாங்களிலும் ஒட்டிக் கொண்டே இருக்கும்.

    தாழம்பூ, தாமரைப்பூ, மாதுளம்பூ, துளசி, விஷ்ணுகிராந்தி, சீதேவியார் செங்கழுநீர், வில்வம், அறுகு, பீர்க்கு, பால், கோசலம், கோமயம், கோரோசனை, மஞ்சள், திற்பலி, சுக்கு, இவற்றை நீரிலை கலந்து காய்ச்சி எடுப்பதுதான் ‘மருத்து நீர்‘ என்னும் சித்திரைத் திருநாள் விஷேட மருந்துவம் ஆகும். இந்த மருத்து நீரை அனைவரும் தலையில் வைத்து பின்னர் நீராடுதல் என்பது அவசியமானதாகச் சொல்லப்பட்டு பெரும்பாலும் அனைவருமே செய்து வருகின்றனர். கொண்டாட்டம் என்றாலும் அதிலும் ஆரோக்கியத்தை அடிப்படையாக வைத்திருப்பது கவனதுக்குரியது அல்லவா?

    மருத்துநீர் வைத்து நீராடிய பின்னர் வாங்கிய புத்தாடைகளை அணிவது மரபாக இருந்து வருகிறது. புத்தாடை அணிந்து கோவில் சென்று தரிசனம் செய்து பெரியவரிடம் ஆசி பெற்று பலவகையான பட்சணங்களை உண்டு மகிழ்வதும் வழமையாக இருக்கிறது.

    பெரியவர்களிடம் ஆசிபெறுவது, கைவிசேசம் வாங்குவது சித்திரைப் புத்தாண்டில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். பெரியவர்களின் வாழ்த்து என்றுமே துணைநிற்கும் என்பதும் அவர்களிடம் பெறும் கைவிசிசேசம் அந்த ஆண்டு முழுவதலும் இலட்சுமி கடாட்சமாய் ஜொலிக்கும் என்பதும் மனத்தில் பதியும் அசையாத நம்பிக்கை எனலாம்.

    கோவில்களில் திருவிழாக்கள் இக்காலத்தில் சிறப்பாக இடம் பெறும். பெரும்பாலும் அனைவருமே கோவில் வழிபாட்டை தவறாமல் பயபக்தியுடன் செய்திடத் தவறவே மாட்டார்கள்.

    கலைவிழாக்களுக்குக் குறைவிருக்காது. விளையாட்டு நிகழ்சிகளும் நடை பெறும். கிழகிலங்கைப் பகுதிகளில் ஊஞ்சல் கட்டி அதில் சிறியவர் முதல் பெரியவர்வரை அமர்ந்து ஆடிப்பாடி மகிழ்வது சித்திரைத் திருநாளில் பெரிய தொரு விசேசமாய் நடந்து கொண்டே இருக்கிறது. யாழ்ப்பாணத்தில் இந்த நிலை இல்லை என்றே சொல்லாலாம். கிழக்கிலங்கையில் சில பகுதிகளில் புத்தாடை வாங்கினால் முதலில் அதனை வீட்டிலிருக்கும் தென்னைக்கு கட்டி அதன் பின்னே அவர்கள் தாங்கள் கட்டிக் கொள்ளும் வழமையும் இருந்து வருகிறது. ஆனால் இம்முறை யாழ்ப்பாணப்பாணப்பகுதில் இல்லை எனலாம்.

    அச்சு முறுக்கு, சீனிப்பணியாராம், பயத்தம் பணியாரம், கிழக்கிலங்கையில் சித்திரையில் அதிகமாக எல்லா வீடுகளிலுமே செய்வார்கள். யாழ்ப்பாணத்தில் இவை எல்லாம் செய்தாலும் அவர்கள் தங்களுக்கென்று சிறப்பான பலவற்றையும் செய்து பகிர்ந்துண்டு மகிழ்வார்கள்.

    உறவுகள் ஒன்று சேர்வது, உணவுகளில் அறுசுவை சேர்ப்பது, பக்கத்து வீட்டாருக்குப் பகிர்ந்து மகிழ்வது, வறுமையில் இருப்பார்க்கு இயன்றவற்றைக் கொடுத்து அவர்களையும் மகிழ்விப்பது, இயன்றவரை தான தர்மம் செய்வது சித்திரைப் புத்தாண்டில் இடம்பெறும் முக்கியமான பண்பாடு எனலாம்.

    இலங்கையில் சித்திரைப் புத்தாண்டினை சிங்கள பெளத்தர்களும் கொண்டாடி மகிழ்கிறார்கள் என்பதும் அரசாங்க பொதுவிடுமுறை தினமாக இருக்கிறது என்பதும் மனங்கொள்ளத் தக்கதாகும். தமிழர்கள் பலவித பலகாரங்கள் செய்வார்கள். ஆனால் சிங்கள பெளத்தர்கள் பாற்சோறு வைத்துப் பரிமாறி மகிழ்வார்கள். அவர்களும் பெரியவர்களிடம் வெற்றிலையில் கைவிசேசம் பெற்று ஆசியும் பெறுவார்கள். ஆளும் இனமும் ஆளப்படும் இனமும் கொண்டாடி மகிழும் கொண்டாட்டமாய் சித்திரைப் புத்தாண்டு இலங்கையில் விளங்குவதும் முக்கியத்துவம் மிக்கதாய் தென்படுகிறது அல்லாவா!

    இந்தியாவில் அடங்கியிருந்த கொரனா மீண்டும் தலைவிரித்து நிற்கிறது. அங்கும் சித்திரையைக் கொண்டாட விரும்பினாலும் நிலமை சீரடையுமா என்பது கேள்வியாய் எழுந்து நிற்கிறது! சிங்கப்பூர், மலேசியா தமிழர்களும் சித்திரைத் திருநாளைக் கொண்டாடக் காத்திருக்கிறார்கள்.ஆனால் அங்கும் இன்னும் சீனாவின் சீதனம் சிக்கலாய் நிற்கிறது!

    புலம் பெயர்ந்த நாடுகளில் வாழுகின்ற தமிழர்களும் சித்திரையில் என்ன செய்யலாம் என்று சிந்தித்த வண்ணமே இருக்கிறார்கள். ஆனால் சித்திரையோ பக்கத்தில் வந்து நிற்கிறது!

    கொரனா என்னும் அரக்கன் தனது கோரப்பிடியை விட்டபாடில்லை. கொண்டாட்டங்கள் அனைத்துமே பெருந் திண்டாட்டமாய் ஆகிவிட்டது. இதில் சித்திரை வந்தால் என்ன? வராவிட்டால்த்தான் என்ன? என்னும் அளவுக்கு மக்கள் மனமெல்லாம் பயமென்னும் இருளே செறிந்து காணப்படுகிறது. என்றாலும் சித்திரை என்றவுடன் நித்திரையே பறக்கிறது! எப்படியும் கொண்டாடி மகிழ வேண்டும் என்னும் ஆவலை மட்டும் அடக்கிவிடவே முடியவில்லை. கொண்டாடுவோம்! ஆனால் அடக்கமாய் ஆன்மீகமாய் கொண்டாடி அகநிறைவினை அடைவோம்!

    Share
  • ஏப்ரல் 10 – உலக ஹோமியோபதி நாள்

    ஏப்ரல் 10 – உலக ஹோமியோபதி நாள்

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, ஆஸ்திரேலியா

    [ஏப்ரல் 10ஆம் நாள், உலக ஹோமியோபதி நாள்.  என் தந்தையார், என் தாய்மாமன் ஆகியோர், ஹோமியோபதி வைத்தியர்கள் ஆவர். நானும் ஹோமியோபதி பற்றி என் தந்தையாரிடம் அறிந்திருக்கிறேன். ஓரளவு அதில் பயிற்சியும் இருக்கிறது. என் தாயாரின் அப்பா அதாவது என் தாத்தா, பிரபலமான ஆயுள்வேத வைத்தியர். அந்த வகையில் ஹோமியோபதி நாளினைக் கருத்திருத்தி இக்கட்டுரையினை வழங்குகின்றேன்.]

    பிறப்பு என்பது நல்லதொரு வரமாகும். ஆனால் இறப்பும் அதனுடன் இணைந்தே இருக்கிறது.பிறந்தவுடன் கொண்டாடி மகிழ்கின்றோம். பல வித கற்பனைகள் சிறகடிக்க வாழ்க்கை என்னும் வானில் சிறகடித்துப் பறந்தும் வருகிறோம்.அப்படி சிறகடிக்கும் வாழ்வில் எப்படியோ நோய்கள் வந்து எங்களின் இன்பக் கனவு களைச் சிதறடித்து விடுவதையும் காண்கிறோம். இதனால்தான் “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்னும் பொன் மொழியும் ஏற்பட்டதோ என எண்ணிடத் தோன்றுகிறது.நோயிலிருந்து விடுபட  மண்ணில் வந்த அருந்துணையே மருத்துவம் எனலாம். அந்த மருத்துவம் நாட்டுக்கு நாடு வேறுபட்டதாய், வேறு வேறு பெயர்களில் தோற்றம் பெற்றாலும் மருத்துவத்தின் தலையாய பணி மண்ணில் வாழுகின்ற மக்களை இயன்றவரை நலமுடன் வாழ்ந்திடச் செய்வதேயாகும். அந்தவகையில் காலத்துக்காலம் பல மருத்துவ வழிகள் உருவாக்கப்பட்டன. அந்த வழியில் இன்று உலகின் இரண்டாவது மருத்துவ வழியாக சிறந்து விளங்குவதுதான் ஹோமியோபதி” மருத்துவம், ஐரோப்பா, அமெரிக்கா, தென்கிழக்கு ஆசிய நாடுகள், இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் என்று பரந்து விரிந்திருக்கிறது.

    பதினெட்டாம் நூற்றாண்டின் கடைசிப் பகுதி. ஆங்கில மருத்துவம் முழுமை பெறாத காலம். அக்காலப்பகுதியில் பெயர் தெரியாத பல நோய்கள் மக்களை வாட்டி எடுத்துக்கொண்டிருந்தன. ஆங்கில மருத்துவ முறையினைச் சார்ந்து நின்ற ஒருவருக்கு மக்கள் படுகின்ற வேதனையைப் பார்த்துக் கொண்டிருக்க இயலாமல் போய்விட்டது. ஆங்கில மருத்துவமானது நோய்களைக் குணப்படு த்துவதைவிட – நோயாளிகளுக்கு பெருமளவு வேதனையினைத்தான் தருகிறது என்பதை மனமார உணர்ந்த அவர் மருத்துவத்தை விட்டுச் சிறிதுகாலம் ஒதுங்கியே இருந்தார்.

    ஆனாலும் அவரால் ஒதுங்கியபடியே இருந்திட முடியவில்லை. மருத்துவம் சார்ந்த நூல்களை மொழிபெயர்க்கும் பணியினைச் செய்யத் தொடங்கினார். ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த அறிஞர் டாக்டர் கல்லென் அவர்களின் நூலினை மொழிபெயர்க்கும் பணியில் ஈடுபட்டார். அந்த நூலில் அவர் ஒரு வாசகத்தைக் கண்டார். “மலேரியாவைக் குணப்படுத்தும் தன்மை சிங்கோனா மரப்பட்டை க்கு இருக்கிறது” என்பதாகும். அதனைப் பரிசோதித்திட  சிங்கோனா மரப்பட்டையினை அவரே சாப்பிட்டார். மலேரியா பாதித்தால் என்னென்ன அறிகுறிகள் தென்படுமோ அத்தனையும் அவருக்கும் தென்பட்டது.காய்ச்சலும் குளிரும் அவரையும் பாதித்தது. “எது மருந்தாகப் பயன்படுகிறதோ அதுவே நோயை உண்டாக்கும் கூறுகளையும் பெற்றிருக்கும்” என்னும் அடிப்படையான முரண்பாட்டினை அவர் தன்னையே மையப்படுத்தி அறிந்து கொண்டார். அவர்தான் ஜேர்மன் நாட்டைச்சேர்ந்த “டாக்டர் சாமுவேல் ஹனிமன்” ஆவர். 1796 ஆம் ஆண்டில் இவர்கண்ட தத்துவத்தின் அடிப்படையில் உருவானதுதான் உலகெங்கும் பரந்திருக்கும் “ஹோமியோபதி” ஆகும்.

    அந்த மேதை 1755 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் திகதி பிறந்தார். அவர் பிறந்த தினமான ஏப்ரல் 10 ஆம் திகதியே “உலக ஹோமியோபதி நாளாகக்” கொண்டாடப்பட்டு வருகிறது. ஏப்ரல் 7 ஆந் திகதி “உலக சுகாதர தினம்” கொண்டாடப்பட்டது.

    “ஒத்ததை ஒத்தது குணப்படுத்தும்” என்பதைத் தன்னை மையப்படுத்தி டாக்டர் சாமுவேல் ஹனிமன் கண்டதே “ஹோமியோபதி” மருத்துவத்தின் அடிப்படைக் கோட்பாடு எனலாம். இதனைத்தான் “முள்ளை முள்ளால் எடுப்பதுபோல்” என்றும் எடுத்துக் கொள்ளலாம் அல்லவா?

    உலகம் முழுவதும் ஹோமியோபதி மருத்துவம் வளர்ந்தும் வருகிறது. மக்களும் பயனினை அடைந்தும் வருகிறார்கள். இம்மருத்துவம் பாதுகாப்பானதாகவும் சிறந்த பல தன்மைகளைக் கொண்டதாகவும் விளங்குகிறது. ஹோமியோபதி மருத்துவம் என்பது ; நோயுற்றவருக்கு – மனரீதியாகவும், சிந்தனைரீதியாகவும், ஆன்மீக மற்றும் உடல்ரீதியாகவும், சமநிலையினை உண்டாக்குகிறது என்பதுதான் இம்முறையின் விசேடத்தன்மை எனலாம்.

    ஹோமியோபதி என்பது கிரேக்கச் சொல்லாகும். “ஹோமோ” என்றால் ‘ஒத்த மாதிரியான ‘ என்றும் , “பேத்தே” என்றால் ‘வேதனை‘ என்றும் பொருளாகும். ஹோமியோபதியின் தன்மையே வித்தியாசமானதாகும். அதாவது குறைந்த அளவிலான மருந்துகளைக் கொடுத்து நோய்களைக் குணப்படுத்துவதேயாகும். மருந்துகள் பல இன்று பக்கவிளைவுகளை ஏற்படுத்தி இருந்த நோயோடு இன்னும் அவதியை அளித்து நிற்கின்றன. ஆனால் ஹோமியோபதி மருத்துவத்தில் பக்கவிளைவுகள் அற்ற மருந்துகளே கொடுக்கப் படுகின்றன. இயற்கை விதியின் அடிப்படையாக “விருப்பத்தை விருப்பம் மூலம் குணமாக்குதல்” என்னும் அடிப்படையில் அமைந்து நலன் விளைவிக்கும் நிலையில் இருப்பதுதான் இம்மருத்துவம் என்பது நோக்கத் தக்காதாகும்.

    ஹோமியோபதியின் தந்தையான டாக்டர் சாமுவேல் ஹனிமன்

    “ஆர்கனான்” என்னும் அரிய ஹோமியோபதி நூலினை ஆக்கி அளித்திருக்கிறார். ஹோமியோபதி மருத்துவமுறையினை இவர் சீர்படுத்த ஆறு ஆண்டுகள் எடுத்தன. நான்கு ஆண்டுகளின் பின்னர் “மெடிசின் ஒவ் எக்ஸ்பீறியன்ஸ்” என்னும் நூலினை ஆக்கினார். இதில் இருந்துதான் “ஆர்கனான்” நூலின் முதற்பதிப்பு 1810 இலும் 1816 இல் இரண்டாம் பதிப்பும் 1824 இல் மூன்றாம் பதிப்பும் 1829 நான்காம் பதிப்பும் ஐந்தாவது பதிப்பாக 1831 இலும் இந்த நூல் வெளியிடப்பட்டது என்பது குறைப்பிடத்தக்கது. அந்த அளவுக்கு இந்த நூலின் முக்கியத்துவம் இருந்திருக்கிறது என்பதைதான் நாம் மனமிருத்தல் அவசியமாகு.

    டாக்டர் சாமுவேல் ஹனிமனால் படைக்கப்பட்ட இந்த நூல் – ஹோமியோபதியினைப் படிக்க விரும்பும் அனைவருக்குமே பெரும் பயனை அளித்திடும் வகையிலேதான் அமைந்திருக்கிறது. ஹோமியோபதி மருத்துவ முறைக்கு மூலதாரமான இந்தப்படைப்பு  “ஆர்கனான் ஒவ் மெடிசன்” என்றுதான் பெயர். இப்படைப்பானது படைத்தளித்த டாக்டர் சாமுவேல் ஹனிமன் அவர்களது காலத்திலேயே ஆறுபதிப்புக்களை கண்டது என்பதுதான் மிகவும் பெதுமைக்குரிய விடயமெனலாம். ஜேர்மன் மொழியில் படைக்கப்பட்ட இவ்வரிய ஆக்கமானது பின்னர் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. ஹோமியோபதி தொடர்பான பல சந்தேகங்கள் எழுவார்க்கு டாக்டர் ஹனிமன் அவர்களின் இந்தப்படைப்பு சிறந்த விளக்கத்தை அளிக்கும் பெருந்துணையாக அமைகிறது என்பது மனங்கொள்ளத் தக்கதாகும்.

    நோயாளிகளை அணுகும் முறையில் ஹோமியோபதி மற்ற மருத்துவ முறைகளிலிருந்து வேறுபடுகிறது எனலாம். “நோய்களுக்கான மருந்து என்பதைத் தவிர்த்து ஒவ்வொரு மனிதருக்குமான மருந்து” என்பதே அதன் அணுகுமுறையாய் அமைகிறது எனலாம். மனிதர்கள் ஒவ்வொருவரும் தனித்துவம் மிக்கவர்கள். அதனால் அவர்களுக்கு வருகின்ற வியாதிகளுக்கு ஒரேவிதமான மருந்துகளைக் கொடுப்பது உகந்ததல்ல. என்பது டாக்டர் ஹனிமன் அவர்களது கருத்தாகும். உதாரணமாக காய்ச்சல் வரும்பொழுது எல்லோருக்கும் ஒரேவிதமான அறிகுறிகள் வெளிப்படுவதில்லை. இதற்குக் காரணம் ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள் என்பதுதான் டாக்டர் ஹனிமன் அவர்களின் எண்ணமாய் இருந்தது. தனித்துவமாய் இருக்கும் பொழுது மருந்துமட்டும் எப்படி பொதுவாக இருக்கலாம் என்னும் சிந்தனை அவரிடம் எழுந்ததால் அவரின் அணுகுமுறை வேறுபட்டதாக அமைந்தது எனலாம். இதன்படி  டாக்டர் ஹனிமன் அவர்கள் ” உயிராற்றல் பற்றிய கோட்பாடுகளை  வளர்த்தெடுத்தார்.

    “உடல் உறுப்புகள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு ஒன்றையொன்று சார்ந்து, ஒன்றையொன்று தீர்மானித்து செயற்படுவதற்கான ஒருங்கிணைப்பு சக்தியாக , உடலெங்கும் பரவி ஆளுமை செலுத்தும் ஆற்றலே உயிராற்றல்” என்று டாக்டர் ஹனிமன் உணர்ந்தார்.அதனைத் தன்னுடைய படைப்பான ” ஆர்கனன் ஒவ் மெடிசன் ” என்பதில் சுட்டிக் காட்டுகிறார்.

    இன்று உலகம் முழுவதும் நவீன மருத்துவம் ஆட்சி செலுத்தியே நிற்கிறது. ஆனாலும் ஆயுள்வேதம், சித்தவைத்தியம், யுனானி, அக்குபக்‌ஷர், ஹோமியோபதி மருத்துவ முறைகளும் இல்லாமல் போகவில்லை என்பது கருத்திருத்த வேண்டியதாகவே இருக்கிறது. நவீன மருத்துவத்தில் பல முன்னேற்றங்கள் வந்துவிட்டன. என்றாலும் ஆய்வுகூட முடிவுகளை மையப்படுத்தி நவீன மருத்துவம் பயணிக்கிறது எனலாம். ஆய்வுகூட முடிவுகள் நோய் குணமாகிவிட்டது என்று காட்டும். குணமானாருக்கு மீண்டும் அந்தநோய் வந்துவிடும். மீண்டும் ஆய்வூகூடத்தை நவீன மருத்துவம் நாடும். அதற்கிடையில் பல்வகையான மருந்துகள் ஒருபக்கம் குவிந்துவிடும்.நோயைத் தீர்க்கக் கொடுக்கும் மருந்துகளின் பக்க விளைவுகளால் வேறுவிதமான வேதனைகள் அங்கே வந்து நிற்கும். இவை எதுவுமே இல்லாமல் மருந்தும் மருத்துவமும்தான் வேண்டும் என்று மக்கள் பலர் எண்ணத் தலைப்பட்டு விட்டார்கள். அவர்கள் அனைவருக்கும் உற்ற நண்பனாய். மந்திரியாய். நல்லாசானாய் , நல்வெளிச்சமாய் ஹோமியோபதி வந்தமைந்திருக்கிறது என்றுதான் கருத வேண்டி இருக்கிறது.

    கடுமையான, மற்றும் நீடித்த சுகாதாரப் பிரச்சினைகளுக்கு ஹோமியோபதி பலனளிக்கும் என்றும் நம்பிக்கை இன்று மக்கள் மத்தியிலே ஏற்பட்டிருக்கிறது என்பதை யதார்த்தமாய் காணமுடிகிறது. இயற்கையில் கிடைக்கும் பொருட்களில் இருந்து ஹோமியோபதிக்கான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. குறைந்த செலவினை உடையதாகவும் இம்மருத்துவம் விளங்குகிறது.ஹோமியோபதி மருத்துவத்தின் இருநூறாவது ஆண்டுவிழா ஜேர்மனியில் கொண்டாடப்பட்ட வேளை “ஹோமியோபதி என்பது முழுமையான மருத்துவம், நோய் தீர்க்கும் ஆற்றல் நிறைந்தது என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது” என்று ஜேர்மனியின் மருத்துவத்துறையின் அமைச்சரே கூறியுள்ளார் என்பது முக்கிய கருத்தெனலாம்.

    இருநூறு மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் உலகிலே ஹோமியோபதி மருத்துவத்தையும் மருந்துகளையும் எடுத்துக் கொள்ளுகிறார்கள் என்று அறிய முடிகிறது. குறைந்த விலையில் மருந்துகளைப் பெற்றுக்கொள்ளவும் முடிகிறது.அதுமட்டுமல்ல நிரந்தரத்தீர்வினை நல்கும் சிறப்பும் ஹோமியோபதிக்கு நிறையவே இருக்கிறது என்பது வெளிப்பட்டு நிற்கிறது.இஅலங்கையிலும் ஹோமியோபதிக்கு இடம் கொடுத்து சுதேசிய வைத்தியப் பிரிவினால் “ஹோமியோபதி மருத்துவச் சபை” அமைக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல ஹோமியோபதி வைத்தியசாலையும் நிறுவப்பட்டிருக்கிறது. ஹோமியோபதியினைப் பலரும் கற்கின்றார்கள் என்பது நோக்கத்தக்கத்தாகும்.

    என்னதான் இருந்தாலும் உடல் நலன் மட்டும் இல்லாவிட்டால் எல்லாமே வெறுமைதான். வையத்துள் வாழவே பிறந்தோம். மரணம் வரும்  என்பது யாவருக்கும் தெரியும். மரணத்தை எவருமே விரும்புவதில்லை. வாழும் காலம் வரை ஆனந்தமாய் அகமகிழ்வாய் அகநிறைவாய் வாழவே அனைவருமே ஆசைப்படுகிறோம். அந்த ஆசையும் அவசியமான ஆசையேயாகும். ஆசைப்பட்டால் மட்டுமே போதுமா? ஆசைப்படி வாழவேண்டு மானால் ஆரோக்கியத்தை அனைவரும் காத்திட  கருத்தினில் எடுத்திட வேண்டும். ஆரோக்கியத்தை அளிப்பதற்காக அவதாரம் எடுத்துதான் மருத்துவம். அந்த மருத்துவத்தில் ஹோமியோபதியும் ஒன்று. அந்த ஹோமியோபதி  எங்கள் ஆரோக்கியத்துக்கு நல்வழிகாட்டியாய் தலைநிமிர்ந்து நிற்கிறது என்னும் செய்தி பெருவெளிச்சமாய் விரிகிறது அல்லவா! அந்த வெளிச்சத்தை அளித்த மாமேதை டாக்டர் சாமுவேல் ஹனிமனை நினைப்போம்! அவரின் நினைவாக “ஹோமியோபதி நன்னாளை” யாவரும் கொண்டாடுவோம்!

    Share
  • பக்தி இயக்கத்தின் முன்னோடியாய் மிளிர்ந்த தமிழ் தந்த செல்வி காரைக்கால் அம்மையார்!

    பக்தி இயக்கத்தின் முன்னோடியாய் மிளிர்ந்த தமிழ் தந்த செல்வி காரைக்கால் அம்மையார்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    உலகிலே பல மொழிகள் காணப்படுகின்றன. ஒவ்வொரு மொழியும் முக்கியமான மொழிகள்தாம். ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு விதமான சிறப்பு இருக்கிறது. ஆனால் எந்த ஒரு மொழிக்குமே இல்லாத சிறப்பினை உலகில் எங்கள் தமிழ் மொழி பெற்றிருக்கிறது. அந்தச் சிறப்புத்தான் “பக்தி இலக்கியம்” என்னும் சிறப்பாகும். பக்தி என்பது – இலக்கியமாக எழுந்தி ருப்பது உலகமொழிகளில் தமிழ் மொழியில் மட்டுமே என்பதை எல்லா மொழியியல் அறிஞர்களுமே ஏற்றுக் கொள்ளுகிறார்கள். அந்த அளவுக்கு தனித்துவமாய், வளர்ந்து யாவரும் வியக்கும் வண்ணம் பக்தி இலக்கியம் தமிழில் அமைந்திருக்கிறது என்பது தமிழருக்கெல்லாம் மிகவும் பெருமை அல்லவா!

    பக்தி இலக்கிய வரலாற்றை எடுத்து நோக்கினால் தமிழகத்திற்கு தனித்த தொரு இடமுண்டு எனலாம். சைவ நாயன்மார்களும், வைணவ ஆழ்வார்க ளும்  உவந்தளித்த பக்தி இலக்கியத்தால் எங்கள் தமிழ் மொழி “பக்தியின் மொழி” என்னும் சிறப்பினைப் பெற்றது என்பது மறுக்கமுடியாத உண்மை எனலாம். இவர்களின் அருட்பாடல்களால் “பக்தி இலக்கியம்” தமிழின் தமிழ்ச்சமூகத்தின் பெருஞ் சொத்தாக ஆகிவிட்டது எனலாம்.

    சைவ பக்தி இலக்கியத்தின் எழுகின்ற ஞாயிறாக விளங்குவர் காரைக் கால் தந்த தவப்புதல்வி, தமிழ்ச்செல்வி, புனிதவதியாகிய காரைக்கால் அம்மையார் ஆவர். சிவஞானச் செந்திருவான இவ்வம்மையார் சைவத் திருமுறைகளின் தோற்றுதல்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார் என்பதை பலரும் ஏற்றுக் கொள்ளுகிறார்கள். ஆன்ம ஞானத்தை, ஆன்ம சுதந்திரத்தை, ஆன்ம முக்தியை பெற்று பெண் குலத்துக்கே பெருமையினைத் தேடித்தந்தவராக இவ்வம்மையார் திகழுகிறார் எனலாம்.

    சைவசமயம் போற்றும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் மூவர்மட்டுமே பெண்களாக இருக்கிறார்கள். அவர்களுள் மூத்தவராய் தலையானவராய் இருப்பவர் காரைக்கார் அம்மையார் என்பது மனங்கொள்ளத்தக்கதாகும். மற்றைய பெண்களைவிட காராக்கால் தந்த தமிழ்ச்செல்வி யாவற்றிலும் முன்னிற்பவர் ஆகிறார் எனலாம். இவ்வம்மையாரைப் பன்முக நோக்கிலே தான் பார்க்கவேண்டி இருக்கிறது.

    தத்துவச் செறிவு மிக்கார். மெஞ்ஞான உணர்வு மிக்கார். சமயசாதனை மிக்கார். இலக்கியச் சாதனை மிக்கார். என்று இவரின் நோக்கு பரந்து விரிந்து சைவ பக்தி இலக்கியத்துக்கு வெளிச்சமாய் நிற்கிறது எனலாம்.

    அதிசயங்கள் இல்லாமல் பிறந்த அம்மையார் அனைவரும் மெச்சும் ஆன்மீக அதிசயமாகிறார். சித்துக்கள் அறியாத அம்மையார் சிந்தனைகளை விதைத்த பெரும் சித்தராகவே ஆகிறார் சைவபக்தி உலகில்.சாதாரண பெண்ணாக வளர்ந்து சாதாரணமாகவே இல்லறவாழ்வில் இணைக்க ப்படுகின்றார். இல்லறத்தில் நல்லறம் விளையும் வண்ணம் வாழ்ந்தவரின் வாழ்வில் ஆண்டவன் அருள் பாய்ந்து அவரின் கோலம் மாறுகிறது. குடும்பம் மாறுகிறது. சைவ பக்தி உலகுக்கு தத்துவஞான முத்துக் கிடை க்கிறது எனலாம். இது காரைக்காலில் வந்து பிறந்த ஏனைய பெண்களுக்கு வாய்க்கவில்லை. இவருக்கு மட்டுமே வாய்த்திருக்கிற தென்றால் திருவருள் என்பது கருவிலேயே வந்து அமர்ந்து விட்டது என்றுதான் கருத்தத் தோன்றுகிறதல்லவா! மாங்கனியின் வருகை ஒரு மங்கையின் வாழ்வையே பக்திக்குள் புகுந்துவிட வைக்கிறது! மாங்கனியால் மானிலத்துக்கே ஆன்மீக அம்மையாய் ஆகிவிடுகிறார் காரக்கால் ஈந்த புனிதவதியான தமிழ்ச்செல்வி!

    காரைக்கால் தந்த ஆன்மீக முத்து சைவ பக்தி இலக்கியத்தின் முன்னோ டியாக விளங்கினார் என்பதற்கு அவரின் பரந்துபட்ட செயற்பாடுகளே அர ணாகி நிற்கின்றன. கோவில்களில் இருக்கின்ற நாயன்மார்களின் சிலைகள் நின்றபடியே இருக்க காரைக்கால் அம்மையார் சிலைமட்டும் இருந்தபடி வைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். மற்றவர்கள் எல்லாம் நிற்க இவர் மட்டும் இருக்கும் வண்ணம் சிறப்புற்றதற்குக் காரணந்தான் என்ன?

    மாங்கனியை இறைவனிடம் பெற்றதாலா? பேயுடலுடன் கயிலை மலையில் தலையால் நடந்து அதியம் புரிந்ததாலா? புலமையில் சிறந்து விளங்கியதாலா? தியாகங்களைச் செய்தலாலா? அப்படியெல்லா மெண்ணிப் பார்க்கையில் அம்மையாரைவிட பல செய்தவர்கள் இருந்திரு க்கிறார்கள் எனலாம். அப்படி இருக்க இவருக்கேன் இப்படிச் சிறப்பென்றால் “இவர் தோன்றி இருக்காவிட்டால் சைவமும் இல்லை மற்ற சிவன் அடியார்களும் இல்லை” என்பதனாலாகும் என்பது பல பெரியோர்களின் கருத்து எனலாம்.

    “இவள் நம்மைப் பேணும் அம்மை” என்று முழுமுதற் கடவுளான சிவனே செப்பியதாகக் கூறப்படுகிறது. உண்மையில் சைவத்தைப் பேணிய தாய்! சைவத்துக்கு ஒரு திட்டமான வடிவம் கொடுத்து அது ஒரு தனிப்பெருஞ் சமயமாக வளர்வதற்கான அடித்தளம் இட்டவர் அம்மையார் அவர்களேயாவர். சமணமும் சாக்கியமும் சைவத்தை நிலைகுலையச் செய்யாமல் சைவத்தை தலைநிமிரச் செய்தவர் சைவம் நிலைபெறச் செய்தவர் காராக்கால் அம்மையார் என்பதனாலேயே அவர் முக்கியத்து வப் படுத்தப்படுகிறார். முன்னிலையில் அமர்ந்திருக்கிறார் எனலாம். எந்த ஒன்றும் தாயின் வயிற்றில்த்தான் பிறக்க வேண்டும் என்பதை நாமனைவரும் அறிவோம்.  முழுத்தன்னை பெற்ற சைவம் என்ற ஒன்று, சிவ வழிபாடு என்ற ஒன்று , காரைக்கால் அம்மையாராகிய தாய் வயிற்றில் பிறந்ததாகும் என்பதை மனமிருத்தல் அவசியமாகும்.தமிழ் நாட்டில் சைவத்தைக் காத்திட்ட பெருமை காரைக்கால் அம்மையாரையே சாரும் எனலாம். அவர் போட்டுக் கொடுத்த பாதையில்த்தான் பின் வந்த அடியார்கள் செப்பமாய் செல்ல முடிந்தது எனலாம். “தென்னாடுடைய சிவன் எந்நாட்டவர்க்கும் இறைவனாய்”  ஆவதற்கு முதலடி எடுத்து வைத்தவர் என்னும் நிலையில் காரைக்கால் தந்த தமிழ்ச்செல்வி புனித வதி அம்மையார் திகழுகிறார் எனலாம்.

    சைவசமயத்தின் எழுச்சிக்கும் வளர்ச்சிக்கும் அடித்தளமாய் இருந்த காரைக்கால் அம்மையார் தமிழ் இலக்கியத்திலும் புத்திலக்கிய முன்னோடியாக மிளிர்கிறார் எனலாம். சங்க இலக்கியம் காதலை யும் , போரையும் கருவாய் கொண்டு மகிழ்ந்தது.காப்பியங்கள் சாதனை புரிந்த தலைவர்கள் புகழ்பாடி போற்றும் வகையில் எழுந்தன. ஆனால் பக்தி எனும் பாதையில் மலர்ந்த  பக்தி இலக்கியங்களோ மானுடக் காதலை, மனிதனைப் புகழ்ந்து பாடுவதை விடுத்து இறைகாதலையும், பரமான்வாவைப் பாடுதலையும், இறை தொடர்பினைத் தேடுவனவாகவுமே மலர்ந்தன எனலாம். இவ்வாறு மலர்ந்த பக்தி இலக்கியத்தில் சிறப்பாக சைவபக்தி இலக்கியத்தின் முன்னோடியாக காரைக்கால் அம்மையார் திகழ்கிறார் எனலாம். நாயன்மார் களுக்குக் காலத்தால் முற்பட்ட இவ்வம்மையார் தமிழ் இலக்கியத்தில் பல இலட்சியப் புதுமைகளைச் செய்து புத்திலக்கிய முன்னோடியாக விளங்குகிறார் என்பதை தமிழ் இலக்கிய வரலாற்று ஆய்வாளர்கள் அனை வருமே ஏற்று நின்கின்றார்கள் என்பது மனம் இருத்தவேண்டிய கருத் தெனலாம்.

    அற்புதத் திருவந்தாதி, திருவிரட்டை மணிமாலை, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் என்பன அம்மையார் தமிழ் இலக்கியத்துக்கு அளித்த மிகப் பெருங்கொடைகள் எனலாம். முதல் ஆழ்வார்களின் பங்களிப்பும் அம்மை யாரின் பங்களிப்பும் பல்லவர் காலத்தில் பக்திப் பாடல்கள் தோன்றுவதற்கு விடிவெள்ளியாய் அமைந்தாலும் – பல்லவர்கால இலக்கியக்கியப் போக்கினுக்கு வழிகாட்டிய பெருமையினை அம்மையாரே பெற்றுக் கொள்ளுகிறார் எனலாம். அந்த வகையில் அம்மையாரின் பிரபந்தங்கள் விளங்குகின்றன என தமிழ் இலக்கிய வரலாற்று ஆசிரியர்கள் வியந்து போற்றுகின்றனர். இந்த ரீதியில் காரைக்கால் தந்த தமிழ்ச்செல்வி காரைக்கால் அம்மையார் தமிழகத்துப் பெரும்புலவர் வரிசையில் வைத்து எண்ணத்தக்க சிறப்பு வாய்ந்த தமிழிலக்கியப் படைப்பாளியாக விளங்கு கிறார் என்பது மிகவும் பொருத்த முடையதேயாகும்.

    நூற்று நாற்பது செய்யுட்களே காரைக்கால் அம்மையாரின் இலக்கிய வெளிப்பாடாய் கிடைத்திருக்கிறது.நான்கு சிறைய பிரபந்தங்கள் வாயிலாக இப்பாடல்கள் வந்திருக்கின்றன. குறைந்த அளவில் இலக்கியத்தில் இணைந்து நிற்கும் இவரை பெரும்புலவர் என்று எப்படிக் கருத முடியும்? அப்படி எண்ணுமளவுக்கு அம்மையாரின் இலக்கிய ஆளுமைதான் என்ன? என்று சிந்திக்கத் தோன்றுகிறதல்லவா! இலக்கியத்தரம் என்பது எண்ணிக் கையால் வருவதுதல்ல! இலக்கியத்தைப் படைத்த சிறப்பினைக் கொண்டே தீர்மானிக்கப் படுவதெனலாம். அந்த வகையில் அம்மையாரின் ஆற்றல் அவரை உன்னத நிலையில் காணவே வைத்திருக்கிறது எனலாம்.

    பின்னால் வந்த நாயன்மார்களுக்கும் ஆழ்வார்களுக்கும் பொருள் மரபிலும்,யாப்பு முறையிலும் அம்மையாரே வழிகாட்டியாய் அமைந்திருக்கிறார். அவரின் பிரபந்தங்கள் அவர்களுக்கு பாடமாக நல்லாசிரியனாக முன்னின்றது எனலாம். வெண்பாவைக் கையாண்டு சங்கமருவிய கால நிலையினைப் பேணினார். ஆனால் தனது உள்ளத்தில் எழும் தெய்வானுபங்களை , உணர்ச்சிகளை வெளிப்படுத்த வெண்பா யாப்பு சிறந்ததாக எனக்கருதி விருத்தம் என்னும் யாப்பினைக் கையெடுக்கின்றார். அம்மையாரின் இந்தச் சிந்தனையானது தமிழ் இலக்கியப் பாதையில் புதிய இலக்கிய மரபு ஆரம்பித்து வைத்தது எனலாம்.

    இசையால் இறைவனைப் பாடும் பதிகப் பாதையினை அம்மையாரே தொடக்கி வைக்கிறார். பதிகத்தின் நிறைவில் இடம் பெறும் திருக்கடைக் காப்புப் பாடலில் – பாடுபவர் பெயர், பாடுவோர் பெறும் நலன்கள், ஆகிய வற்றை ஆரம்பித்து வைத்தவரும் அம்மையாரே ஆவர். இதுவே சம்பந்தப் பெருமானுக்குக் கைகொடுத்தது எனலாம். அந்தாதி என்னும் யாப்பினை அம்மையார் காட்டுகிறார். பின்னர் தொடரும் இலக்கியப் பெருவழிக்கு இவையாவுமே பெருவெளிச்சமாய் அமைகிறது என்பதை மனமிருத்தினால் அம்மையாரின் ஆளுமை தெள்ளிதிற் புலனாகும்!

    நிலையாமையை வலியுறுத்தி இலக்கியம் பேசப்பட்ட நிலையில் – இல்லறத்தில் இன்பங்காணா இறைவன்பால் இன்பங்கண்ட காரைக்கால் அம்மையாரின் சிந்தனையும் அதன் நிமித்தம் வெளிவந்த அவரின் இலக்கிய வெளிச்சமும்; மக்கள் மனதில் நல்லதோர் நம்பிக்கையினை வாழ்க்கையில் உருவாக்குவதாக அமைந்தது எனலாம். பெண்ணாக இருந்தும் ஈமப்புறங் காட்டினைக் கண்டு அஞ்சாமல் அங்கு ஆண்டவன் ஓயாமல் நடனமிடுகிறான் என்று கண்டு  கொள்ளுகிறார். இச்செயலானது அம்மையாரினால் அஞ்சிய பெண்களுக்குக் காட்டிய புதிய பாதையாக எடுத்துக் கொள்ளவும் – அம்மையாரின் புதியதான ஒரு சமயப்பாதையினைக் காட்டி நிற்பதையும் விளக்கி நிற்கிறது அல்லவா! இப்படிச் செய்தமையால் காரைக்கால் அம்மையார் தனித்துவம் மிக்க பெண்ணரசியாய் மிளிர்கிறார் என்றுதான் எண்ண வேண்டி இருக்கிறது. சுடு காட்டில் இறைவனின் நடனத்தைக் காண ஒரு சாதரண பெண்மணி விரும்பியமையும், சுடலையினை நடனமிடும் இடமாகக் கண்டு ஆனந்தம் அடைந்தமையும் , அம்மையாரின் மனதில் தோன் றிய வித்தியாசமான போக்கினையே காட்டுகிறது எனலாம். அந்த நடனத்தை ரசிப்பவர்கள் பேய்களாக இருப்பதால் தனக்கும் பேய் உருவினை ஆண்டவனிடம் வேண்டிப் பெற்றார் என்பதும் அம்மையாரின் நிலையினை அடியார்கள் நிலையில் பார்க்கும்பொழுது மிகவும் வேறுபட்ட, மாறுபட்ட, புதிய தொரு கோணத்தையே வெளிப்படுத்தி நிற்கிறது எனலாம்.

    சிவனைப் பற்றி ஏனைய இலக்கியங்களில் காட்டியதை விட காரைக்கால் அம்மையார் தனது பாடல்கள் வாயிலாக காட்டிய பாங்கு மிகவும் வளர்ச்சி உடையதாகவே இருக்கிறது என்று பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன் அவர்கள் குறிப்படுவது நோக்கத்தக்கதாகும். “இறைவனுடன்  அன்பு பூண்டுஅவனுக்கு அடியவனாகவும், அடிமையாகவும், வாழ முற்படவேண்டும்.இறை வனை ஏத்தினால் பிறவி நீங்கும். இறைவனை நினைப்பவர் நெஞ்சுளே உறை கின்றான். அவனை அன்பு செய்யத் தொடங்கினால் அவலம் இல்லை. அவனிடம் அன்பு  செய்தால் இருவினை கழலும் என்ற கருத்துக்கள் சிவ வழி பாட்டு வரலாற்றில் முதன் முதலாகக் காட்டி தனது பக்திப் பனுவல்களை வழங்கியவர் காரைக்கால் அம்மையார் என்பது மனங்கொள்ளத் தக்கதெனலாம்.

    கரைக்கால் தந்த தவச்செல்வி , தமிழ்ச்செல்வி , புனிதவதி என்று பெருமையுடன் காட்டும் சேக்கிழார் அவர்கள் – அம்மையாரை சைவ பக்தி இலக்கிய வரலாற்றில் மிகவும் உன்ன்னத நிலையிலே வைத்து ஏற்றிப் போற்றுகிறார் எனலாம் பின்னே வரப்போகின்ற சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய அருளாளார்கள் பாடவிருக்கும் பதிகங்களுக்கெல்லாம் முன்னோடி யாகப் பாடிய பெருமை மிக்கவர் அம்மையார் என்பதால் அவரின் பதிகளுக்கு “மூத்த நல்பதிகம்” என்னும் பெயரைக் கொடுத்து பெருமைப் படுத்துகிறார்.

    ‘அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு‘ என்னும் நிலையினை வெறுத்து நிற்கும் – சேக்கிழார் காரைக்கால் அம்மையாரின் பெருமையைக் காட்டி அவரைத்தொடர்ந்து திலவதியார்,  மங்கையற்கரசியார் போன்றவர்களைக் காட்டி பெண்கள் எல்லோருக்கும் – ஏன் பெண்களை ஒதுக்கிய சமூகத்துக்கேநல்லதோர் பாடத்தைப் புகட்டுகிறார் என்பது புலனாகிறதல்லவா?

    தமிழ் நாட்டிலே முதன்முதலாக சைவநாயன்மார் வரிசை யில்,வணங்கப் பெற்றவர் என்னும் பெருமைக்குரியவர் காரைக்கால் அம்மையார் அவர்களே ஆவர். சிலை அமைத்து வழிபாடும் அம்மையாருக்கு நடத்தப்படுகிறது. வணிகத்துக்குச் சென்றவர்கள் அம்மையாரின் சிலையினை எடுத்துச் சென்றுள்ளனர் என்று அறிய முடிகிறது. கி. பி. ஐந்தாம் நூற்றாண்டிலே இவ்வாறு நடைபெற்றிருக்கிறது என்பது மனமிருத்த வேண்டிய கருத் தென லாம். அம்மையாரின் வழிபாடானது தாய்லாந்து,  கம்பூச்சியா,  இந்தோனேசியா, பாலி, போன்ற இடங்களில் பரவியிருக்கிறது என்பதையும் வரலாற்றால் கண்டு கொள்ளுகிறோம். தென்கிழக்கு ஆசிய நாடுகளில் அம்மையாரின் வழிபாடு பரவி இருந்திருக்கிறது என்பதற்கும் ஆதாரங்கள் கிடைத்திருக் கின்றன என்பதும் மனமிருத்த வேண்டிய கருத்தெனலாம்.

    காரைக்கால் அம்மையாரின் வழிபாடு மட்டுமல்ல அவரின் வரலாறும் வடமொழி, தெலுங்கு, கன்னடம் , போன்ற பிறமொழிகளிலும் பரவி இருக்கிறது  என்பது  தமிழ் மொழிக்கும் சைவத்துக்கும் கிடைத்த மிகப்பெரியசிறப்பு என்றுதான் எண்ண வேண்டி இருக்கிறது. அப்படிப் பெருமைக்குரியகாரைக்கால் ஈன்ற தவச்செல்வி, தமிழ்ச்செல்வி, புனிதவதியான காரைக்கால் அம்மையினை நினைப்போம். அவரின் ஆற்றலை, பக்தியை அனைவருடனும் பகிந்து அவரைப் போற்றி நிற்போம் .

    ” பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல் உன்னை யென்றும்
    மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும்நான் மகிழ்ந்துபாடி
    அறவாநீ நீயாடும்போது அடியின் கீழுருக்க என்றார்”

    Share
  • ஆன்மீக ஒளிபரப்பிய  ஆற்றலுடை யோகர் சுவாமிகள் !

    ஆன்மீக ஒளிபரப்பிய ஆற்றலுடை யோகர் சுவாமிகள் !

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா.     

    சித் என்றால் அறிவு, ஞானம், தெள்ளிய பார்வை, கூர் நோக்கு, விரிந்த நோக்கு என்று பொருள் சொல்லப்படுவதால் – சித்தர்களை அறிவாளிகள், ஞானிகள்,  தெளிந்த பார்வையினை உடையவர்கள், கூர்ந்த நோக்கினை உடையவர்கள், கடந்து சிந்திப்பவர்கள் என்றும் எடுத்துக் கொள்ளலாம் அல்லவா!

    சித்தர்கள் என்பவர்கள் மானிடம் செழித்திட வாழ்ந்த மகா ஞானிகள் எனலாம். “அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு” என்னும் தத்துவமே அவர்களது இறுக்கமான தத்துவமாய் இலங்கியது எனலாம். எதையும் விரும்பார். எதையும் தமக்காக்கிட எண்ணார். மற்றவர் நலனுக்காய் அவர்கள் எப்பொழுதும் கைகொடுத்திடவே எண்ணுவார்கள். அதன் வழியில் பயணப்படுவார்கள்.

    “மக்கள் சேவையினை மகேசன் சேவையாய்” எண்ணி இப்பூவுலகில் வாழ்ந்தவர் – பல சித்தர்கள் இருக்கிறார்கள், அப்படியான சித்தருக்கென்று ஒரு பரம்பரையே இருக்கிறது என்பதை வரலாற்றால் அறிகிறோம்.

    பாரத நாட்டில் திருமூலருடன் சித்தர் பரம்பரையினை இணைத்துக் கூறுவது வழக்கம். திருமூலர் மூவாயிரம் வருடங்கள் இம்மண்ணு லகில் வாழ்ந்து பல அரிய, பெரிய, பணிகளையெல்லாம் ஆற்றினார் என்று அறிகிறோம். அவரின் பேராற்றல் வியந்து பார்க்கக் கூடியதாகும். அவரின் திருமந்திரம் என்னும் திவ்விய நூல் பலவித கருத்துக்களின் பொக்கிஷமாய் மிளிர்கிறது எனலாம். திருமூலரைத் தொடர்ந்து பல சித்தர்கள் பாரத மண்ணில் வந்தார்கள். அவர்களில் சிலர் ஈழத்திலும் கால்பதித்து சமூக நலனுக்காய் பலவற்றைச் செய்தார்கள் என்றும் அறிய முடிகிறது.

    ஈழத்துச் சித்தர்கள் என்றும் சொல்லும் பொழுது மற்றய சித்தர்களை விட மாறு பட்டவராய், வேறு பட்டபராய் ஒருவர் யாழ்ப்பாண மண்ணிலே பிறந்து, எல்லா இடமும் திரிந்து, யாவருக்கும் சுமை தாங்கியாய், ஆன்மீக வெளிச்சமாய் விளங்கியிருக்கிறார் என்பதை நினைவில் கொள்ளுவது சாலவும் பொருந்தும் என எண்ணுகின்றேன். ஆடையில் ஆரம்பரம் இல்லை. தனிப்பட்ட எந்த அலங்காரங்களும் இல்லை. எளிமையான வாழ்வு. பரிவாரங்கள் இல்லை. பவனி இல்லை. யாரும் சந்திக்கலாம். ஏற்றத்தாழ்வுகள் பார்ப்பதும் இல்லை. நாடியவர்களின் நலன் காக்கும் நன்மருந்து.

    நல்லூரில் தேரடியில் ஞானம் பெற்று, கொழும்புத் துறையில் குடிசையில் அமர்ந்து அருளாட்சி புரிந்து இறையடியைச் சரண் புகுந்த யோகர் சுவாமிகள்தான் அப்பெரும் சித்தராவார்.

    மாவிட்டபுரத்தில் சைவக்குடும்பத்தில் பிறந்து “சதாசிவன்” என்னும் பெயர் பெற்று , கத்தோலிக்க பள்ளியில் “யோன்” என்று பெயர் மாற்றப்பட்டு நிறைவில் யோகநாதனாகிப் பின் “யோகர் சுவாமி” என்னும் சித்தராய் மலர்கிறார் இந்த மகான். தாயார் சிறுவயதில் இறக்கிறார். தந்தையார் மலை நாட்டில் வேலை செய்கிறார். மகனை எப்படியாவது படிக்க வைக்கத் தந்தை விரும்புகிறார்.

    தந்தையின் உடன் பிறந்த சகோதரன் சின்னையாவோ கொழும்புத் துறையில் கத்தோலிக்கப் பெண்ணை மணம் முடித்து அம்மதத்துள் நிற்கின்றார். அந்தச் சூழலில் சதாசிவன் – யோனாகி கல்வி கற்கும் சூழ்நிலை ஏற்பட்டதைக் கண்டதும்; தந்தையுடன் பிறந்த சகோதரி முத்துப்பிள்ளை என்பவர் மருமகனை மீட்டு சைவத்துள் கொண்டுவர முயலுகின்றார். சமணத்துக்குச் சென்ற தம்பியை மீட்ட திலவதியார் போல – மருமகனைச் சைவத்துக்குள் இழுத்திட மாமியார் முன்வந்து நின்றார் எனலாம். மருமகனை மாற்று மதம் தீண்டா வண்ணம் சைவப் பற்றினை ஊட்டுவதற்காக மாமியார் முத்துப்பிள்ளை கையாண்ட வழிகள் நல்ல வெளிச்சமாய் அமைந்தது எனலாம். மாமியாரின் நெறிப்படுத்தலினால் – யாழ் மண்ணுக்கு நல்லதொரு சித்தர் கிடைக்கப் பெற்றார் என்பதும் பொருந்தும் அல்லவா!

    கந்தப்பெருமான் அருள்புரியும் மாவிட்டபுரத்தில் பிறந்தவர் கந்தப் பெருமான் அருள் புரியும் நல்லூரில் ஞானம் பெற்றார் என்பது திருவருள் அல்லால் வேறு எப்படி என்று  எடுக்க முடியும்!

    எல்லோரையும் போலவே சாதரணமாகவே பிறந்தார். சாதாரணமாகவே வளர்ந்தார். சாதாரணமாகவே படித்தார். அதன் பின் அரச உத்தியோகமும் பார்த்தார். அவரின் பிறப்பில்கூட எந்த அதிசயமும் நிகழவில்லை என்பதும் நோக்கத்தக்கது. ஆனால் பெரும் மகானாக, பெரும் சித்தராக அவர் வளர்ந்து நின்றார் என்பதற்கு இறையருளை தான் காரணம் எனச் சொல்லக்  கூடியதாக இருக்கிறது .

    “பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றை
    பற்றுக பற்று விடற்கு “     

    என்ற வள்ளுவத்தின் கருவே யாழ் மண்ணின் சித்தரிடம் நிறைந்து காணப்பட்டது எனலாம்.

    “மற்றவர்கள் துயிலும் பொழுது ஞானி விழித்திருப்பான்” என்று கீதையில் சொல்லப்பட்டிருக்கிறது. அது முற்றிலும் எங்கள் யாழ் மண்ணின் ஆன்மீக ஜோதி யோகர் சுவாமிகளுக்கு மிகவும் பொருத்தமாய் அமைந்தது எனலாம். கிளிநொச்சியில் சுவாமிகள் நீர்ப்பாசனப் பகுதியில் கடமையாற்றும் வேளை – வேலை முடிந்து மற்றவர்கள் நித்திரைக்குச் சென்றுவிடுவர். சுவாமியோ அவ்வேளை நித்திரையை விட்டு விட்டு நெடுநேரம் “தியானத்தில்” இருந்திருக்கிறார் என்பதை அறிய முடிகிறது. சுவாமிகள் இப்படி இரவில் நடந்து கொள்ளுவதை – அங்கு சென்று வரும் அவரின் மாமியாரின் மகனாகிய  வயித்தியலிங்கம் என்பார் சுவாமிகளுக்கு “விசர்போக்கு” ஆரம்பித்து விட்டது என்று கூறியதாகவும் அறிய முடிகின்றது. கிளிநொச்சியில் இருந்த காலத்தில் – தேவாரம், திருவாசகம், திருமந்திரம், அருணகிரியார் பாடல்கள், தாயுமானவர் பாடல்கள், சித்தர் பாடல்கள், ஒளயார் பாடல்கள், ஆகியவற்றை மனனம் செய்திருக்கிறார் என்றும் அறிய வருகிறது.

    சுவாமிகளின் வாழ்கையில் அவரது இருபத்தைந்தாவது வயது குறிப்பிடத் தக்க காலம் எனலாம். அவர் வேலையை விட்டு யாழ்மண்ணுக்கு வருகிறார். இலங்கைவந்த வீரத்துறவி சுவாமி விவேகானந்தரைக் காணும் பேறும் அவருக்கு வாய்க்கின்றது. சுவாமி விவேகானந்தருக்கு யாழ்மண்ணில் கொடுக்கப்பட்ட வரவேற்பு நிகழ்வில் பங்குபற்றும் வாய்ப்பும் கிடைக்கிறது.

    இராமகிருஷ்ண பரமஹம்சரிடத்தும், விவேகானாந்தரிடத்தும், இராமகிருஷ்ண அமைப்பிலும் சுவாமிகளுக்கு மிகுந்த நம்பிக்கையும் ஈடுபடும் இருந்தது எனலாம். மயில்வாகனம் என்னும் மட்டுநகர் பெருமகன் இராமகிருஷ்ண அமைப்பில் இணைய விழைந்த வேளை அவரை ஆசீர்வதித்து வரவேற்று நின்றவர் யோகர் சுவாமிகளாவர். அந்த மயில்வாகனே பிற்காலத்தில் முத்தமிழ் வித்தகராய் முகிழ்த்த “சுவாமி பிபுலானந்த” அடிகள் ஆவர்.

    “எப்பவோ முடிந்த காரியம்”

    “முழுவதும் உண்மை”

    “நாமறியோம்”

    “முழுவதும் உண்மை”

    இவையாவும் உபநிடத வாக்கியங்களின் மொழி பெயர்ப்புப்போல் தென்படுகிறதல்லவா ? ஆம் …. யாழ்மண்ணில் வந்து நின்ற மகா சித்தரான செல்லப்பா சுவாமிகளின் உள்ளத்தினின்றும் வெளிவந்த வாக்கியங்களே இம் மகா வாக்கியங்களாகும். இவற்றை உபநிடதம் அல்லால் வேறு என்ன வென்று சொல்ல முடியும் !

    நல்லூர் தெரிவில் சிரித்தபடி திரிந்தார். வெறித்த பார்வையராய் இருந்தார்.

    வேடம் எதையுமே விரும்பினர் அல்லர். கறுப்பு நிற மேனியும், கந்தையுமே

    அவரடையாளம். அவரைப் பித்தன் என்று மற்றவர்கள் பேசித்திரிவார்கள்.

    அவரை நாடி வந்தால் வந்தவரைப்பார்த்துச் சீறுவார். வீதியால் செல்லுபவர்களைப் பேசுவார். புகழ்சியே இகழ்ச்சியோ எல்லாவற்றையும் ஒன்றாகவே எடுத்துக்கொள்ளுவார். திருநீறு அணிய மாட்டார். நெற்றியில் பொட்டும் இருக்காது. முதல் கூறியதைத் திரும்பக் கூறாதவர். சாதியை, சமயத்தைப் பேசி சங்கடத்துக்குள் அகப்படாதவர். இப்படியெல்லாம் இருந்தவர்தான் நல்லூர் தேரடியில் இருந்த பெரு ஞானி, சித்தர், செல்லப்பராவர்.

    அந்த ஞானியை யோகர் சுவாமிகள் 1904 ஆம் ஆண்டில் நல்லூர் தேரடியில் காணுகிறார். “டேய் நீ யார்” என ஒரு உலுக்கு உலுக்கி “ஒரு பொல்லாப்பும் இல்லை” என்று உறுமினார். “தேரடாவுள்”,  “தீரடா பற்று”, என்னும் உபதேசங்கள் அங்கு அவருக்குக் கிடைத்தன. செல்லப்பரின் உறுமல் யோகர் சுவாமிகளைக் கட்டிப் போட்டது.

    ஞான தேசிகனைச் சந்தித்ததும் அதனால் தன்னுள் ஏற்பட்ட பரிபூரண நிலையையும் சுவாமிகள் பாட்டாகவே காட்டியுள்ளார்.

    ” இருவருந் தேடிக் காணா இறைவன் என்போல் உருத்தாங்கி
    இணங்கி யெவரும் வணங்கும் நல்லையில் இன்னான் இவனென்ன
    ஒருவரு மறியா தோடியுலாவி உவகை பூத்த முகத்தினராய்
    ஒருநாள் என்றனை உற்று நோக்கி ஓர் பொல்லாப்பு மில்லையென்று
    அருவமுங் காட்டி உருவமுங் காட்டி அப்பாற் கப்பாலாம்
    அருள்நிலை காட்டிக் காட்டிக் காட்டிக் அந்த மாதி யில்லாச்
    சொரூபமும் காட்டிச் சும்மா விருக்கும் சூட்சுமத்தில் மாட்டிவிட்டான்
    துன்பம் இறந்தன இன்பம் இறந்தன சோதிசோதி சிவசோதி”

    உபதேசம் கிடைத்தும் சுவாமிகள் குருவை விட்டகலாதே இருந்தார். ஆனால் குருவோ அவருக்குச் சோதனைமேல் சோதனைகள் கொடுத்தார். தேறினார் யோகர் சுவாமிகள். ஆனால் செல்லப்பரோ ஏறியே விழுந்தார். இறுதியில் “இரு யானைகள் ஒரு தறியில் கட்டப்படாது” என்று செல்லப்பர் கூறி சுவமிகளைக் கலைத்துவிட்டார்.

    “பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றை
    பற்றுக பற்று விடற்கு”

    இக்குறள் வழியில் யோகர் சுவாமிகள் இருந்தார். அதனால் குருவின் ஏச்சோ, பேச்சோ அவரை மாற்றிவிடக் கூடியதாக அமையவில்லை. எல்லாமே தனக்கு வாய்த்த உபதேசம் என்று சுவாமிகள் எடுத்துக்கொண்டார்.

    குருநாதர் செல்லப்பர் உடல்நலம் இல்லாது படுத்திருந்த வேளை சுவாமிகள் அவரைப் பார்க்கச் சென்றாராம். “என்ன பார்க்கப் போகிறாய்? நில் அங்கே, உன்னைச் சிந்தித்துப் பார்” என்றாராம் செல்லப்பர். அவ்வார்த்தையுடன் திரும்பிய சுவாமிகள் அந்தப்பக்கமே போகவில்லை என்று அறிய முடிகிறது.

    யோகர் சுவாமிகள் கொழும்புத்துறையில் ஒரு சிறு கொட்டிலில் தனது வாழ்வினை ஆரம்பிக்கிறார். அங்கு ஆன்மீக ஒளி அனைவருக்கும் கிடைக்கிறது. சாதி, சமய, இன, மொழி, வேறுபாடுகளைக் கடந்து பலருமே அவரை வந்து வணங்குகிறார்கள். ஆசிகளை, வாழ்த்துகளைப் பெற்று திருப்தி அடைகிறார்கள்.

    யோகர் சுவாமிகளை நாம் இன்றும் நினைத்து அவருக்குக் குருபூசை வழிபாடுகள் செய்வதற்குக் காரணம் அவரின் வாழ்வியல் முறைகளே எனலாம்.

    அவரின் பூரணமான துறவு நிலை அவரை பெரும் ஞானியாய் சித்தராய் மிளிர வைத்திருக்கிறது எனலாம். பலரும் சமூகத்தில் துறவு நிலையினை மேற் கொண்டு பிரமச்சாரிகளாய் வாழ்ந்திருக்கிறார்கள். ஆனால் அவர்களின் வாழ்வியலையும்  யோகர் சுவாமிகளின் வாழ்வியலையும் ஒப்பிட்டுப் பார்ப்பது பொருத்தமானதன்று. அவர்களின் நிலை வேறு. சுவாமிகளின் நிலை வேறு.

    “தமக்கென வாழா பிறர்க்குரியவராய்” சுவாமிகள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டார். தனக்கு நாளைக்குத் தேவை என்று கருதி எதையும் அவர் வைத்திருக்க எண்ணுவதே இல்லை. அன்பர்கள் கொடுப்பதில் ஒரு சிறுபகுதியை பயன்படுத்துவார். மற்றவற்றை எல்லாம் பங்கிட்டு அளித்து விடுவார். பணம்கூட அவருக்கு ஒரு பொருட்டல்ல. தேவையான பொழுது அவருக்குக் கிடைக்கும். தேவைக்கு அதிகமாக பொன்னோ, பொருளோ எதையும் சுவாமிகள் மனம் நாடுவதே இல்லை.

    “பற்று இல்லாதவனிடத்து எல்லாப் பொருள்களும் வந்து சேரும்” என்பதற்கு சுவாமிகள் அவர்கள் நல்லதோர் எடுத்துக்காட்டு எனலாம். இன்று சித்தர்கள், ஞானிகள், ஆன்மீக வழிகாட்டிகள் என்று நாட்டில் தலைவிரித்து நிற்கும் பலர் பொருள் ஒன்றே குறிக்கோளாய் மனமிருத்தி மக்களை ஏமாற்றி ஆன்மீகத்தையே இழிவு படுத்திக் கேவலத்துக்கு ஆளாகி நிற்பதை இன்று யதார்தமாகவே காணமுடிகிறதல்லவா? ஆனால் யோகர் சுவாமிகளோ “பற்றினைப் பற்றா நின்றவர்”. பரமனைப் பற்றினார். பண்புகளைப் பற்றினார். சமூக நலன்களைப் பற்றினார். ஆன்மீகத்தைப் பற்றினார். அக ஒழுக்கத்தைப் பற்றினார். அன்பைப் பற்றினார். ஆறுதலைப் பற்றினார்.

    பலவித கொள்கையினை உடையவர்கள், அரசியலில் உயர் நிலையில் இருப்பவர்கள், அரச உயர்பதவிகளில் இருப்பவர்கள் என்று பலவகைப் பட்டவர்கள் சுவாமிகளை நாடி வருவர். வருபவர்களின் நம்பிக்கைக்கு ஊறு விளைவிக்கும் வண்ணம் நடந்திட சுவாமிகள் விரும்பியதே இல்லையாம். இப்படி சுவாமிகள் நடப்பதால் வருபவர்கள் மனதில் – தங்களின் கொள்கையினை உடையவர் தான் சுவாமிகள் – என்னும் எண்ணம் உருவாகி விடுகிறது எனலாம்.

    “பார்க்கும் இடமெங்கும் நீக்கமறப் பரம் பொருளையே”  சுவாமிகள் காண்பதனால் அவருக்கு வருபவர்கள் வேறுபாடுகள் தென்படுவதில்லை எனலாம்.” ஒவ்வொருவரும் தத்தம் கடமையைச் செய்ய வேண்டும்” என்பதை வருபவர்களுக்கு சுவாமிகள் பெரும் உபதேசமாக வழங்குவார். பஞ்சமா பாதகங்களை ஒருவன் ஒழித்தாலே வாழ்வு சிறக்கும் என்பது சுவாமிகளின் பெரு நம்பிக்கையாய் அமைந்தது. துறவு பூண்டுதான் உண்மையினை உணர வேண்டும் என்பதில்லை. இல்லறத்தே இருந்தாலும் நல்லறமாய் வாழ்க்கையினை அமைத்துக் கொண்டால் உண்மையினை உணரலாம் என்பது சுவாமிகளின் நல்ல தொரு தத்துவமாயும் வாழ்வியலுக்கு ஏற்ற வழிகாட்டியாயும் அமைந்தது எனலாம்.

    உலகத்தைத் திருத்த முயலுதல் என்பது நாய் வாலை நிமிர்த்த முயல்வது போலாகும். உன்னை முதலில் திருத்த முயற்சி செய். உலகத்துக்கு நன்மை செய்ய முற்பட்டால் நாமே அதிக நன்மையை அடைகிறோம் என்பதை நாம் அனைவருமே உணருதல் வேண்டும் என்னும் அரிய தத்துவத்தை சுவாமிகள் மொழிந்திடுவார். இது யோகர் சுவாமிகளின் சமுதாய அக்கறையினைப் பறைசாற்றி நிற்கிறதல்லவா? முற்றும் துறந்த பற்றற்ற சித்தரான யோகர் சுவாமிகளின் இச்சிந்தனையாலேதான் இன்றும் நாம் அவரை நினைக்கவும் பூசிக்கவுமான நிலை ஏற்படுகிறது எனலாம். துறவி என்றால் காட்டுக்குப் போய் கடுந்தவம் ஆற்றுவதல்ல. நாட்டுக்குள், நாட்டு மக்களுக்கு மத்தியில் வாழ்ந்து நாட்டுமக்களின் நல் வாழ்வுக்கு வெளிச்சமாய் இருப்பதுதான் சரியான துறவியின் இலட்சணம், இலக்கு என்பதைக் காட்டியவர் யோகர் சுவாமிகள் என்பதை எவருமே மறுத்துரைத்துவிட முடியாது! அதனால் தான் அவரை நாடு கடந்தும் மொழி கடந்தும் இனங்கடந்து பின்பற்றிப் பல சீடர் பரம்பரையும், நல்ல வழிகாட்டுதல்களும் மலர்ந்திருக்கின்றன என்பது மனங்கொள்ளத்தக்கதாகும்.

    யோகர் சுவாமிகளின் நெறிப்படுத்தலால் பல இளைஞர்கள் வாழ்விலே திருந்தி இருக்கிறார்கள். பொதுமக்களுக்கான சேவைகளை இன்றும் யாழ்மண்ணில் செய்து கொண்டு பல உள்ளங்கள் இருக்கின்றன என்றால் அதற்கெல்லாம் வித்தாகி உரமாகி நிற்பவர் யோகர் சுவாமிகளே ஆவர். ஆண்டவன் இல்லை என்று அடித்துக் கூறியவர்கள் பலர் சுவாமிகளின் அறிவுரைகளால் ஆன்மீகத்தில் நாட்டங் கொண்டு ஆண்டவன் புகழ் பாடும் நிலையில் வந்து நின்றார்கள் என்பதும் அறியக்கூடிய ஆனந்தமான அவசியமான தகவல் எனலாம்.

    திருவாசகத்தை பெரிதும் சுவாமிகள் விரும்பினார். திருவாசகத்துள்ளும் சிவபுராணத்தை அவர் முக்கியத்துவப் படுத்தினார். ஈழத்தில் சிவபுராணம் பள்ளிகள் தோறும் வெள்ளிக் கிழமைகளில் பிராத்தனை மண்டபத்தில் படிக்கப்படுவதற்கும் யோகர் சுவாமிகளின் வழிகாட்டலே துணையாய் அமைந்திருக்கும் என்றும் எண்ணத் தோன்றுகிறது. சிவதொண்டன் நிலையம் சுவாமிகளை நினைவூட்டிக் கொண்டே இருக்கும். இராகமாகப் பாடி திருமுறைகளை ஓதுவதில் சுவாமிகள் பெரு விருப்புடையவராக இருந்தார் எனலாம். அவரின் திருவாக்காய் மலர்ந்திருக்கும் “நற்சிந்தனைகள்” மிகப் பெரிய தத்துவக் கருத்துகளை உள்ளடக்கிய எமக்கு வாய்த பொக்கிஷம் என்றே சொல்லலாம்.

    சித்தர் என்றால், யோகி என்றால், ஞானி என்றால், சாத்திரம் சொல்லுவார். தொட்டவுடன் நோய்களைப் போக்குவார். கேட்டவற்றை உடனே கண்முன்னே வரவழைத்துக் கொடுப்பார். உருவை மாற்றுவார். சித்துக்கள் காட்டுவார். என்றெல்லாம் நாம் அனைவரும் எண்ணியே நிற்கின்றோம். இப்படியெல்லாம் செய்யும் நிலைக்கும் ஞானத்துக்கும் எந்தவித தொடர்புமே இல்லை என்பதுதான் உண்மை நிலையாகும். இதை நம்மில் பலர் அறியவில்லை எனலாம்.

    யாழ்மண்ணின் யோக புருஷரான யோக சுவாமிகள் மானிடம் தளைக்க நல்ல ஆன்மீக ஒளி பாய்ச்சிட வந்த மகானாகவே விளங்கினார். அவரிடமும் எதிர்காலத்தை அறியும் ஆற்றலும், வருகின்ற அல்லல்களை அறியும் ஆற்றலும், நிரம்பியே இருந்தது. ஆனால் அவர் அவற்றை மக்கள் மத்தியில் காட்டி செல்வாக்கினைப் பெற்றிட ஒரு நாளுமே எண்ணம் கொண்டவராக இருந்ததே இல்லை. தனது மனதுக்குப் பட்டால் சிலவேளை சிலருக்கு வழி காட்டியிருக்கிறார் என்பதை அவரின் வரலாற்றால் அறிந்து கொள்ள முடிகிறது. “பெரியோர்களை நாடுவதன் தலையாய நோக்கம் நம்மைச் சீர்படுத்துவதற்கே அன்றி வேண்டியதைப் பெறுவதற்கு அல்ல” என்னும் கருவினைத் தமது உள்ளத்தில் கொண்டு செயற்பட்டபடியால் தான் இன்றும் நாம் யோகர் சுவாமிகளை நினைத்து அவரைப் போற்றுகிறோம் எனலாம்.

    Share
  • நற்றுணையாவது நமச்சிவாயவே

    நற்றுணையாவது நமச்சிவாயவே

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, 
    ஆஸ்திரேலியா 

    சைவசமயம், இறை வழிபாட்டினை இலகுவாக்குவதற்குப் பல சுலபமான வழிகளையெல்லாம் காட்டியிருக்கிறது. அவ்வழிகள் யாவுமே ஆரோக்கியத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன என்பதுதான் மிகவும் முக்கியமாகும். உணவின் அளவைக் குறைத்தலும், சிலவேளை தவிர்த்தலும், வாழ்வில் நல்ல ஆரோக்கியத்துக்கும் நல்ல சிந்தனைக்கும் கூட ஆதாரமாக அமையலாம் என்பதைச் சைவ சமயம் உணர்ந்த காரணத்தால் உணவினை ஒறுத்து இருப்பதை  “விரதம்” என்று உயர்வு கொடுத்து அதனுடன் தெய்வீகத்தையும் தொடர்புபடுத்தி வாழ்வியலில் முக்கிய நடைமுறை ஆக்கிவிட்டது. அந்த வகையில் சிவராத்திரி விரதம் மிகவும் முக்கியத்துவமும் பெருமையும் உடையதாகச் சைவர்களால் கருதப்படுகிறது.

    பசித்திரு – தனித்திரு – விழித்திரு. இவை தத்துவார்த்தமான பதங்களாகும். சொல்லுவதற்கு கவிதை நடை போல இருந்தாலும் உயரிய பொருளினை உள்ளடக்கி நிற்கிறது என்பதைக் கருத்திருத்த வேண்டும். பசித்திருவில் – ப, தனித்திருவில் – த, விழித்திருவில் – வி, இம்மூன்று எழுத்தையும் சேர்த்தால்  வருவது “பதவி” என்னும் சொல்லாகும். பசித்து தனித்து விழித்து இருந்தால் என்ன பதவி கிடைத்து விடும் என்று எண்ணத் தோன்றுகிறதல்லவா? பதவிகளுக்கெல்லாம் உயர்ந்த பதவி அதாவது இறைவனது அருள் என்னும் பதவி, மனமாசு அகன்று மனம் மாண்புறும் பதவி, ஆணவமெனும் அழுக்கு அகன்று ஆண்டவன் நினைப்பு அகத்தில்எழுந்திடும் பதவி, என்று பல பதவிகள் எமக்கு வாய்க்கும் என்று எமது சைவசமயம் எடுத்து இயம்பி நிற்கிறது.

    சிவராத்திரி நோன்பு காலத்தில் ஆலயத்துக்குச் சென்று அரட்டை அடிப்பதோ, வீண் வம்புகள் பேசுவதோ, மற்றவரைக் குறை சொல்லுவதோ  தவிர்க்கப்பட வேண்டியதாகும். தனித்திருங்கள். புசிப்பதைத் தவிருங்கள். இறை எண்ணத்துடன் இறை புகழ் பாடி விழித்திருத்திருங்கள். இப்படி இருப்பதுதான் சிவராத்திரிக்கு நமது சமயம் கொடுக்கும் முக்கியத்துவம் எனலாம்.

    விழித்திருக்க வேண்டும் என்பதற்காக சினிமாப் படங்களைப் பார்ப்பதோ, நாடகங்களைத் தொலைக்காட்சியில் பார்ப்பதோ, சீட்டாடுவதோ, களியாட்ட விடுதிகளை நாடுவதோ, முறையல்ல. விழிப்பது முக்கிய மானதுதான். ஆனால் அந்த விழித்திருக்கும் நேரத்திலும் இறை நினைப்பாய் இருப்பதுதான் விழிப்புக்கு உரிய அர்த்தமாய் அமையும் என்பதையும் யாவரும் கருத்தில் இருத்துவது அவசியமாகும்.

    கருடபுராணம், அக்னிபுராணம், அருணாசலபுராணம், சிவராத்திரி புராணம் யாவும் சிவராத்திரியைப் பற்றி அதன் மகிமைகள் பற்றி யெல்லாம் எடுத்தியம்புகின்றன. ஆலகால விஷத்தை ஈசன் உண்ட  நிகழ்ச்சியும், அடிமுடி தேடிய பிரம்மா விஷ்ணுவுக்கு ஒளிப் பிளம்பாக காட்சி கொடுத்த சம்பவமும், அர்ஜுனன் பாசுபதாஸ்திரம் பெற்றதும், கண்ணப்பர் ஈசனுக்குத் தனது கண்ணைப் பிடிங்கி அப்பியதும் அதனால் கண்ணப்பன் மோட்சம் பெற்றதும், மார்க்கண்டேயருக்காக ஈசன் எமனைக் காலால் உதைத்ததும், குபேரன் செல்வந்தனாகியதும், என்று பல அற்புதங்கள் நிகழ்ந்த தினமாக சிவராத்திரி விளங்குகிறது என்னும் நம்பிக்கை பலகாலமாக இருப்பதும் மனங்கொள்ளத் தக்கதாகும்.

    மாதம் மாதம் சிவராத்திரி வருகிறது. ஆனால் மாசிமாதத்தில் வருகின்ற சிவராத்திரியைத்தான் “மகாசிவராத்திரி” என்று உயர்வுடன் அனுட்டிக்கின்றோம். மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி ஏன் இவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது என்பதற்கு புராணக் கதைகளை விட அறிவியல் ரீதியான விளக்கமே அனைவருக்கும் பயனை நல்கும் அல்லவா? ஆன்மீகம் என்பது வெறும் வார்த்தை அல்ல. ஆன்மீகம் அறிவியலுடன் இணையும் பொழுதுதான் அதன் உன்னதம் உயர்வடை கின்றது. அறிவியலையும் ஆன்மீகத்தையும் இணைத்தே எங்கள் சமயம் தன்னை நிலைநிறுத்தி வருகிறது என்பதை மறுத்துவிட முடியாது. அந்த வகையில் மாசியில் வருகின்ற சிவராத்திரி “மகா” என்னும் உயர்நிலை எய்துவதற்கு உரிய காரணத்தை அறிவது அவசியம் அல்லவா?

    ஈத்தர் என்னும் சக்தி உலகத்தை இயக்குகிறது என்று அறிவியல் சொல்லுகிறது. இந்தச் சக்தியானது உலகம் முழுவதும் , அண்டம் முழுவதும் நிறைந்தே இருக்கிறது. இந்தச் சக்தியானது பூமியை  நோக்கி ஒவ்வொரு வினாடியும் வந்துகொண்டே இருக்கிறதாம்.

    பூமியானது சூரியனை சிறிய நீள்வட்டப் பாதையிலும் பெரிய நீள்வட்டப் பதையிலுமாக இரண்டு பாதையில் சுற்றி வருகிறது. இவ்வாறு பூமி சுற்றி வரும்பொழுது பெரிய நீள்வட்டப் பாதையில் இருந்து சிறிய நீள்வட்டப் பாதைக்கு மாறுகின்ற நேரம்தான் “மகாசிவராத்திரி” வரும் நேரமாக அமைகிறது. ஈத்தர் சக்தியானது எப்பொழுதுமே பூமியை நோக்கி வந்துகொண்டே இருக்கிறது. ஒவ்வொரு மாதத்திலும் வரும் சிவராத்திரியில் ஈத்தர் சக்தியின் அளவு அதிகமாகவே இருக்கும். ஆனால் வருடத்தில் ஒருமுறை வரும் மாசி மாத சிவராத்திரியில் மட்டுமே  ஈத்தர் சக்தியின் அளவு அபரிதமாக இருக்கும். இப்படி அபரிதமாக இம்மாதத்தில் வருடத்துக்கு ஒருமுறை அமைவதால் இக்காலத்து வருகின்ற சிவராத்திரியை “மகாசிவராத்திரி”  என்று உயர்வுடன் போற்றும் நிலை ஏற்பட்டது என்பதை யாவரும் கருத்திருத்தல் அவசியமானதாகும் .  

    மாசிமாதத்தில் வருகின்ற ஈத்தருக்கு அதிக சக்தி காணப்படுகிறது. ஈத்தர் மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி நகரும். பூமியானது கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிச் சுற்றிக் கொண்டிருக்கும். எனவே நேரடியாக முழுச் சக்தியும்  கிடைக்கும் நிலை இந்த மகா சிவராத்திரிக்கே வாய்க்கிறது.

    மகாசிவராத்திரி அன்று விரதம் இருந்து கண்விழித்து முதுகை நேராக வைத்து தியானம் செய்யும் பொழுது ஈத்தர் உச்சந்தலையில் உள்ள சகஸ்ரார சக்கரத்தின் வழியாக பீனியல் கிளாண்ட்  என்ற ஆனந்த சுரப்பி  மூளையை அடைந்து பல வித நல்ல ஹார்மோன்களைச் சுரக்கச் செய்கிறது. இந்த நேரத்தில் நமக்கு நாமே

    ஆசீர்வாதம் (Self Blessing)  செய்து கொள்ளும் பொழுது இது நமது டி என் ஏ (DNA) வில் கெட்ட பதிவுகளை (கர்மா) அழிக்கும் வல்லமையை உருவாக்குகிறது.

    ஈத்தர் சக்தி என்பது பகலிலும் உண்டு. இரவிலும் உண்டு. பகலில் சூரிய வெளிச்சம் காரணமாக சற்றுக்குறைவாகவே காணப்படும். ஆனால் இரவில் சூரிய வெளிச்சம் காணப்படாமையினால் ஈத்தர் சக்தியின் அளவு அதிகமாகவே இருக்கும்.

    இரவு ஒன்பது மணி தொடக்கம் அதிகாலை இரண்டு மணிவரை உடலின் இயக்கமும் வித்தியாசமாய் இருக்கும். இவ்வேளை ஈத்தர் சக்தியின் அளவும் கூடதலாகவே அமையும் நிலை காணப்படுவதால் இவ்வேளையிலே கட்டாயம் விழித்திருப்பது அவசியமாகிறது. எனவேதான் மகாசிவராத்திரியின் முக்கிய சாமமாக இந்த நேரம் எமது சமய ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.

    சிவன் என்றால் மங்களம் என்பது பொருளாகும். அந்த மங்களமான சிவனைக் குறிப்பதுதான் சிவராத்திரி. எம்மை யெல்லாம் இயக்கிக் கொண்டிருக்கும் ஜீவனுக்கும் ஒரு பற்றுக்கோடு தேவையாகின்றது. அந்தப் பற்றுக்கோடாக விளங்கும் ஆற்றல்தனைத்தான் சிவன் என்கிறோம். இந்தச் சிவனை உருவமாய், அருவமாய், அருவுருவமாய் வழிபடுகிறோம். இது சிவ வழிபாட்டில் அமைந்திருக்கும் சிறப்பெனலாம்.

    சிவனுக்கு உகந்த மந்திரமாய் பஞ்சாட்சரம் மந்திரம் விளங்கு கின்றது என்று அருளாளர்கள் எடுத்து மொழிந்திருக்கிறார்கள். சம்பந்தர் தொடக்கம் மணிவாசகப் பெருமான், திருமூலர். அருணகிரி நாதர்வரை சொல்லி இருக்கிறார்கள். சைவசித்தந்தமே நமச்சிவாய என்னும் நாமத்தைப் பெரிதும் போற்றி அதற்கெனப் பல தத்துவார்த் தங்களையெல்லாம் வெளிப்படுத்தி நிற்பதையும் காணமுடிகிறது எனலாம்.

    “வேதம் நான்கினும் மெய் பொருளாவது
    நாதன் நாமம் நமச்சி வாயவே”

    “நற்ற வாவுனை நான்ம றக்கினும்
    சொல்லும் நாநமச்சி வாயவே”

    “நமச்சிவாய வாழ்க”  இந்த வார்த்தை சிவனைக் குறிக்கும் சக்தி மிக்க வார்த்தையாகும்.

    நமசிவாய என்பதற்கு – சிவனை வணங்குகிறேன் என்பது அர்த்தமாகும். இந்த மந்திரத்தை உச்சரித்து வந்தால் வாழ்வில் நலம் பெருகும். மனம் வெளிக்கும். சிவனின் அருள் என்றுமே துணையாகி நிற்கும்.

    நமசிவாய மந்திரதை உச்சரித்தால் உலக இன்பங்கள் கிடைக்கும். நலம் பெருகும்.ஞான மார்க்கத்தின் முதற்படிக்கு எம்மையெல்லாம் இட்டுச் செல்லும்.ஆகவேதான் அடியார்கள் இம்மந்திரத்தை உயிரெனப் போற்றினார்கள் என்பதை மனமிருத்தல் அவசியமாகும். சிவராத்திரியில் இந்தச் சக்திமிக்க , சித்திவழங்கும் “நமச்சிவாய” என்னும் நாமத்தை மறவாமல் மனமார நினைந்து வாயாலே உச்சரித்தால் நிச்சயம் பரம்பொருளான அந்தச் சிவனின் அருள் கிட்டுவதோடு எமது அழுக்கான மனமெல்லாம் அழுக்ககன்று ஆண்டவனின் நினைப்பு நிச்சயம் அமரும் என்பதை அனைவரும் அகமிருத்துவோம்.

    எமது சமயம் நல்ல நம்பிக்கைகளின் அடிப்படையில் அமைந்த சமயமாகும். ஒவ்வொரு செயலுக்கும் சிறப்பான காரண காரியங்கள் இருக்கின்றன. அவற்றைச் சரியான முறையில் விளங்கிக் கொண்டு விட்டோமானால் மனத்தில் ஐயம் என்பது அகன்றே ஓடிவிடும். ஐயந் தெளிதல் வேண்டும். ஐயம் தெளிந்தால் ஆண்டவன் அருளும் எமக்கு வாய்த்துவிடும். சிந்தையினைத் தெளிவாக்கல் சிவன் அருள் பெற வழியாகும். சிவராத்திரி நன்னாளில் சிந்தையைத் திருத்திடச் சிவனை வேண்டுவது எமது தலையாய பணியாகும்.

    “சொற்றுணை வேதியன் சோதி வானவன்
    பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
    கற்றுணை பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
    நற்றுணை யாவது நமச்சி வாயவே

    “சலமிலன் சங்கரன் சார்ந்த வர்க்கலால்
    நலமில னாடொறு நல்கு வானவன்
    குலமில ராகிலுங் குலத்துக் கேற்பதோர்
    நலமிகக் கொடுப்பது நமச்சி வாயவே” 

    “இல்லக விளக்கது விருள் கெடுப்பது
    சொல்லக விளக்கது சோதி யுள்ளது
    பல்லக விளக்கது பலருங் காண்பது
    நல்லக விளக்கது நமச்சி வாயவே” 

    Share
  • பெண்களுக்கும் சமூகநீதி!

    பெண்களுக்கும் சமூகநீதி!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, 
    ஆஸ்திரேலியா

    “பெண் நலம் ஓம்பப்படாத இடத்தில் வேறு எவ்வித நலனும் நிலவுவது அரிது. ஒரு நாட்டு நலன் அந்நாட்டுப் பெண்மக்கள் நிலைமையைப் பொறுத்தே நிற்கும்” என்னும் திரு. வி. கவின் கூற்று யாவரும் மனமிருத்த வேண்டியதே.

    இன்று “சர்வதேச மகளிர் தினம்” உலகெங்கும் வரவேற்புப் பெற்று பெண்களின் பெருமை விதந்து பேசப்படுகின்றது என்றால் அதற்கு வித்தாக விளங்கியவர் 18ஆம் நூற்றாண்டில் ஜெர்மனியில் ஒரு கிராமத்தில் பிறந்த ‘கிளாரா ஜெட்கின்‘ என்னும் பெண்மணியாவார். இவர் இளம் வயது முதலே பெண்களின் உரிமை, பெண்களின் நலன், யாவற்றிலும் மிகுந்த அக்கறை கொண்டவராகவே இருந்தார் எனலாம். பெண் தொழிலாளர்களின் உரிமையை, பிரச்சினைகளை, மனமிருத்தி – உலகெலாம் ஒலிக்கும்படி செய்தமையால் – பெண்களின் இயக்கங்களுக்கும், அவர்களின் செயற்பாடுகளுக்கும் பெரும் உந்துதலை அளித்தது எனலாம்.

    பெண்கள் பற்றிய உரிமைப் போராட்டங்கள் என்னும் வகையில் 1789 இல் பாரீஸில் சமத்துவத்துவத்துக்காக பெண்கள் எழுந்தனர். பெண்கள் தொடர்பான வேலை நேரம், பெண்களின் வாக்குரிமை, பெண் அடிமை, விடுதலை, என்னும் கோஷங்களுடன் பேரெழுச்சியாய் அப்போராட்டம் வெடித்தது. போராட்டத்தின் முடிவில் பெண்களின் கோரிக்கைக்கு பிரான்ஸ் அரசு ஒப்புதல் வழங்கியது. வழங்கிய அந்த நாள் மார்ச் 8 – 1848 ஆகும். இந்தத் திகதியும் மாதமும் “மகளிர்க்கு உரிய தினம்” என்னும் நிலைக்கு இட்டுச் செல்ல ஏதுவாக அமைந்தது எனலாம்.

    பிரான்சில் பெண்களின் எழுச்சிபோல் 1857இல் அமெரிக்காவில் நியூயோர்க்கிலும் பெண்களின் உரிமைக்குரல் எழுப்பப்பட்டது. பெண்கள் ஒருமித்துப் போராடினால்த்தான் அவர்களுக்கான உரிமைகள் கிடைக்கும் என்னும் எண்ணம் பரந்து விரிந்தது.

    “சர்வதேச மகளிர் தினத்துக்கு” வித்திட்ட – கிளாரா ஜெட்கின் தலைமையில் 1919இல் ஹேகனில் அனைத்துலாகப் பெண்களுக்கான மாநாடு கூடியது. இம்மாநாட்டின் தொடர்பாக ‘சர்வதேச மகளிர் அமைப்பு‘ என்பது உருவாக்கப்பட்டது. ஜேர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க்குடன் சில ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பெண்கள் பலர் இந்த அமைப்பின் சார்பில் 1911 இல் மார்ச்சு மாதம் 19 ஆந் திகதி முதல் ‘ சர்வதேச மகளிர் தினத்தைக் “ கொண்டாடினார்கள். பெண்கள் பல நாடுகளிலிருந்து கலந்துகொண்ட இவ்வரலாற்று வேளையில்தான் – பெண்களுக்கான வாக்குரிமையினை அளிப்பதற்கு மன்னன் லூயிஸ் இணக்கம் தெரிவித்தார். இது இடம் பெற்றது மார்ச் மாதம் 8ஆம் திகதியேயாகும். பெண்களின் ஒத்துழைப்பால் இவையனைத்தும் நிகழ்ந்த அந்த நாளை “சர்வதேச மகளிர் தினமாக” ஆண்டுதோறும் கொண்டாடும் தினமாகத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

    1917ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் திகதி ரஷ்சியாவில் சென்பீட்டர்ஸ் நகரில் ஒரு போராட்டம் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தை அடுத்து 1921 மார்ச் 8ஆம் திகதி “சர்வதேச மகளிர் தினமாக” பிரகடனப்படுத்தப்பட்டது.

    ஐக்கிய நாடுகள் சபை 1975ஆம் ஆண்டினை “சர்வதேச மகளிர் ஆண்டாக” அறிவித்தது. அதனைத் தொடர்ந்து 1977இல் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் “சர்வதேச மகளிர் தினத்தை”  மகளிர் தினமாகக் கொண்டாட முடிவு செய்யப்பட்டது.

    பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டன. அதனால் துணிந்த பெண்கள் முழு வீச்சுடன் முன்வந்து போராடிப் பெண்களுக்கான பல உரிமைகளை  வென்றெடுத்தார்கள். ஆனாலும் இன்னும் பெண்களுக்கான பிரச்சினைகள் தொடர்கின்றன.

    மனித வாழ்விலே பெண்ணின் பங்கு மிக மிக இன்றியமையாதது எனலாம். இதனை எவருமே மறுத்துவிட முடியாது. ஆனால் அப்படிப்பட்ட பெண்களை  ” பெண்கள் ” என்னும் தோற்றத்தையும் அவர்களது உடலையும் வைத்துக் கொண்டு அரங்கேறும் அவலங்கள் சொல்லமுடியாதன.

    பெண்களுக்கு வாக்குரிமை எதற்கு? பெண்களுக்கு பேசும் உரிமை எதற்கு? பெண்களுக்கு வேலைபார்க்கும் உரிமை எதற்கு? பெண்களுக்கு வீட்டை விட்டு வெளியில் செல்லும் உரிமை எதற்கு? பெண்கள் என்றால் திருமணம் செய்ய உதவும் ஒரு மனித உருவம். பிள்ளைகளைப் பெற்றுக் கொடுக்கும் ஒரு இயந்திரம். ஆணுக்கு இன்பத்தை அளிக்கும் ஒரு நுகர்வுப் பொருள்.இப்படியெல்லாம் எண்ணி பெண்ணினத்தை வதைத்த வரலாறு மறைக்க முடியாத வரலாறாகும்.அவற்றை யெல்லாம் உடைத்தெறிந்து போராடி பெண்கள் வந்து நிற்கும் நிலையினை இன்று உலகெங்கும் காணுகிறோம். ஆனாலும் பெண்களுக்கான அச்சம் என்னும் நிலைமட்டும் அகலவே இல்லை.

    பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் ஆள்வதும் பாரினில் பெண்கள் பெற்று நிற்கிறார்கள் என்பதும் மறுப்பதற்கில்லை. இன்று பெண்களின் ஆளுமை பல்கிப் பெருகி நிற்பதையும் காணுகிறோம்.

    ஆனாலும் பெண்கள் என்னும் படைப்பால் அவர்களை நோக்கும் விதமும், அவர்களை வதைக்கும் விதமும் , சமூகத்தை விட்டு அகலவே இல்லை என்றே எண்ண முடிகிறது.

    பெண்களைப் பொறுத்தவரை சட்டரீதியாகவும், சமூக ரீதியாகவும் எல்லோரையும் போல சமூகநீதி வழங்கப்பட வேண்டும். ஆணும் பெண்ணும் சமமென்று பேசப்படுகிறதே தவிர அவர்களது நடைமுறை வாழ்வில் சமஉரிமை கிடைப்பதில்லை. பெண்கள் பொருளாதார ரீதியாகவும், இன சமூகரீதியாகவும் பாதிக்கப்படும் நிலையினை மாற்றிட முயலுதல் அனைவரதும் தார்மீகக் கடமையாகும்.பெண்களின் பிரச்சினைகளை அணுகவும் அவற்றை அகற்றிடவும் ஆற்றல் மிக்க அதிகாரிகள் நியமிக்கப்படுதல் அவசியமாகும். காவல்துறையில் கூட பெண்களின் நிலை பரிதாபமாகவே காணப்படுகிறது. காவல் துறையில் உயர்பதவியில் இருக்கும் பெண்களுக்கே தக்க பாதுகாப்பு இல்லாதிருக்கிறது.

    “நாணமும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம், கற்பு நிலையென்று சொல்லவந்தால் இரு கட்சிக்கும் அதைப் பொதுவில் வைப்போம்“

    என்று முழக்கமிட்டுப் பெண்ணுரிமை பேசி நின்றான் புரட்சிக்கவி பாரதி. பாரதி வீர முழக்கத்தைப் படிப்பதோடு நின்று விடக் கூடாது. அதனைக் கருத்தில் இருத்தி யாவரும் செயலாக்குதல் மிக  அவசியம்.

    Share
  • தை பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம்!

    தை பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
    மெல்பேண், ஆஸ்திரேலியா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்

    “தைபிறந்தால் வழிபிறக்கும்” என்று தமிழர்கள் சொல்லுவது வழக்கமாகும். அந்த வழக்கம் தொடர்ந்து வரவேண்டும் என்பதுதான் பலரின் ஆசையாகும். ஆனால் சென்றவருடம் பொங்கலைப் பொங்கி மகிழ்ந்த பின்னர் கண்ணூறு பட்டதுபோல் சீனாவின் சீதனம் வந்திறங்கியது. சீதனத்தின் சீரழிவால் வாழ்வே தடம்புரண்டு நிற்கும் நிலை ஆகிவிட்டது. பொங்கல் இப்பொழுது வந்து நிற்கிறது. பொங்குவதா விடுவதா? பொங்கினால் பகிர்ந்து கொடுத்து மகிழலாமா? அல்லது அவரவர் பாட்டில் வீட்டிலே பொங்கி நிற்பதா என்றெல் ல்லாம் எண்ணத் தோன்றுகிறது அல்லவா?

    “தை பொறந்தால் (பிறந்தால்) வழி பிறக்கும் தங்கமே தங்கம் தங்கச் சம்பா நெல் விளையும் தங்கமே தங்கம் முத்துச் சம்பா நெல்லு குத்தி தங்கமே தங்கம் முத்தத்திலே சோறு பொங்கி தங்கமே தங்கம் குத்து விளக்கேத்தி வச்சு (வைத்து) தங்கமே தங்கம் கொண்டாடி மகிழ்ந்திடுவோம் தங்கமே தங்கம் ”  – என்னும் இந்தப் பாடல் மனமகிழ்ந்த பொங்கலை, மலர்ந்த பொங்கலை, மண்வாசனை தரும் பொங்கலை, உயிர்த்துடிப்பான பொங்கலை, கலாசாரம் பண்பாடு கலந்த பொங்கலை நினைவூட்டிகிறதல்லவா?  இப்படி ஒரு காலம் இருந்தது. ஆனால் அப்படி ஒரு காலம் வரவேண்டும் என்பதுதான் எல்லோரினதும்  பேராவலும் ஆகும்.

    “உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் – வீணில் உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம்”

    ” உழுதுண்டு வாழ்வார்க்கு ஒப்பில்லைக் கண்டீர் பழுதுண்டு வேறோர் பணிக்கு“ 

    “சேற்றில் கால் வைக்காவிட்டால் சோற்றில் கைவைக்க முடியாது” இவையெல்லாம் பொங்கலை மனமிருத்தும் அமுத வாக்குகள்.

    பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், வானொலிகள், அத்தனையும் சீனாவின் சீதனத்தால் நாளும் பொழுதும் சீரழியும் நிலையினைப் பற்றிய அறிவிப்புக் களை வெளிப்படுத்தியபடி இருக்கின்றன. “வாழப்பழகிக் கொள்ளுங்கள்” என்று பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளே சொல்லும் அளவுக்கு பரவிய பாவி பரந்து நிற்கிறது. விலத்திப் போகவேண்டும். பாதுகாப்புடன் வாழுவோம் என்னும் நிலையில் இவ்வருடப் பொங்கல் வந்திருக்கிறது.

    பொங்கல் என்றாலே உற்சாகம் பிறந்துவிடும். புத்தாடை வாங்குவது! புதுப்பானை வாங்குவது! சர்க்கரையும், தேனும், நெய்யும், பருப்பும், பாலும் தான் முன்னால் வந்து நிற்கும். கூடவே பழங்களும், கரும்பும் சேர்ந்து விடும்! இவையெல்லாம் அனுபவித்து ஆனந்தம் அடைவதற்கு வாய்ப்பு வருமா என்பதை எண்ணியே யாவரும் சிநதனைக்குள் மூழ்கி நிற்கும் நிலை உருவாகி இருக்கிறது.

    என்றாலும் இதுவும் கடந்து போகும் என்னும் துணிவுடன் பொங்கலை மங்கலமாய் வரவேற்றிடத் துணிய வேண்டும் என்றும் ஒரு பக்கம் மனம் சொல்லிக் கொண்டே இருக்கிறது.

    அப்படிச் சொல்லும் வேளையில் தைப்பொங்கலைப் பற்றி ஒரு பார்வை பார்ப்போமா? பார்த்தால் மனதின் கலக்கம் சற்று ஓய்வெடுக்கும் அல்லவா?

    தைமாதத்தின் தொடக்கத்தில் இந்த விழா ஏன் கொண்டாடப் படுகிறது? இந்த விழாவினை யாரை மையப்படுத்திக் கொண்டாடுகிறோம்? இந்த விழாவின் அடிப்படை எதனை உணர்த்துகிறது? இந்த விழாவில் தமிழரின் எத்தகைய பண்பாட்டு அம்சங்கள் நிறைந்திருக்கின்றன?  பொங்கல் என்றால் புது உடைகள் வாங்குவோம். பொங்குவோம். தொலைக்காட்சியில் நடக்கும் பொங்கல் கொண்டாட்ட நிகழ்ச்சிகளைப் பார்த்து ரசிப்போம். அத்துடன் பொங்கல் விழா நின்றுவிடும். இதுவல்ல பொங்கல்!

    உழைப்பு என்பதுதான் சமுதாயத்தின் அடிப்படை. அந்த உழைப்பில் பங்கு கொள்ளும் அனைவரும் வாழ்த்தப்பட வேண்டியவர்களே. உழைப்புக்கு உதவும் மனிதர்கள், உழைப்புக்கு உதவிடும் விலங்குகள், உழைப்புக்கு உதவிடும் கருவிகள் கவனத்தில் கொள்ளப்படுவதுதான் சமூதாய அறமாகும். அப்படியான ஒரு அறத்தினை வலியுறுத்தத்தான்  தைப்பொங்கலைக் கொண்டாடுகிறோம் என்பதை மனமிருத்தல் வேண்டும்

    உலகிலே  உயிர்வாழ்வதற்கு வெப்பம் முக்கியமானது. காற்று முக்கியமானது நீர் முக்கியமானது. உணவு  முக்கியமானது. இவற்றுக்கெல்லாம் இறை அம்சம் கொடுத்து அவற்றை சமூகத்தின் உயர் நிலையில் வைக்கும் வழக்கம் நெடுங்காலமாக இருந்து வருகிறது. இவையாவும் தைப்பொங்கலுடன் இணைவதால்த்தான் பொங்கல் சிறப்பான விழாவாக அமைகிறது எனலாம்.

    விவசாயம் என்பதுதான் சமூக வாழ்வுக்கு முதுகெலும்பாகும். விவசாயம்  கொண்டு வருகின்ற பொருட்களால்த்தான் சமூகத்தில் மக்களின் அன்றாட வாழ்வே சிறப்பாகிறது. அந்த விவசாயத்தைச் செய்பவன் இந்தப் பொங்கலில் போற்றப் படுகின்றான். அந்த விவசாயிக்கு உதவும் மாடுகள் பூசிக்கப்படுகின்றன. விவசாயத்தை செழிப்பாக்கும் சூரியன் வணங்கப்படுகிறது. விவசாயத்துக்கு உதவும் கருவிகள் மதிக்கப் படுகின்றன.இதனால் தைப்பொங்கல் என்பது நன்றியினை நவில்கின்ற பெருவிழா அமைகிறது என்பது முக்கிய கருப்பொருள் எனலாம்.

    தையில் அறுவடை செய்த புத்தரிசி கொண்டு புதுப்பானையில் பாலும் சர்க்கரையும் சேர்த்து மண்பானையில் பொங்கி மகிழும்பொழுது பொங்கி வரும் பாலினைப் பார்த்து குடும்பத்தில் உள்ளார்கள் “பொங்கலோ பொங்கல்”  என்று மகிழ்ந்து நிற்கும் நிலையினை எங்கள் பிள்ளைகளின் உள்ளத்தில் இருக்கச் செய்வது மிக இன்றியமை யாததாகும்.

    கலப்படம் இல்லாமல் யாவுமே உழைப்பின் பயனாக வந்த அரிசி, பால், சர்கரை, கரும்பு, இஞ்சி, மஞ்சள், வாழை, மாவிலை, இவையெல்லாம் மகிழ்ச்சியின் அடையாளங்கள். மனித சமூகத்தின் மாண்பின் அடையாளங்கள் எங்களின் பண்பாட்டின் அடையாளங்கள். இவைகள் தைப்பொங்கலில் பயன் படுத்தும் பொழுது ஏற்படும் மனநிறைவுக்கு ஈடு இல்லை எனலாம்.

    கூட்டுறவின் மகத்துவம் தைப்பொங்கலின் சிறப்பாகும். மனிதனும் விலங்குகளும் கூடி உழைத்து அதன் பயனாக வெளிப்படும் ஒரு கூட்டுறவுத் திருநாள் என்றுகூட தைப்பொங்கலை எடுத்துக் கொள்ளலாம். வருடத்தின் தொடக்க மாய்வரும் தையினை மங்களகரமாக வரவேற்க வேண்டுமென்று எண்ணி பொங்கல் திருநாளினை ஏற்படுத்திய எங்களின் முன்னோர்களை நாங்கள் வாழ்த்தாமல் இருந்திட முடியுமா? வருடத் தொடக்கத்தில் மனதில் ஏற்படும் எண்ணங்கள்தான் அந்த வருடம் முழுவதையும் மகிழ்வுடன் வாழ வைக்கும் என்று எண்ணிய உளவியல் சிந்தனையை உவந்தேற்ற வேண்டாமா?

    பொங்கலின் முதலில் மார்கழியின் நிறைவில் போகி என்றொரு பண்டிகை கொண்டாடப் படுகிறது. போகி என்றால் பழைய விஷயங்களை பழைய பொருட்களைக் களைந்து விடுவதாகும். அடுத்து பொங்கல் வருகிறது. பழைய பொருட்களை எரித்து விடுவதைத்தான் போகியில் காண்கிறோம், உண்மையில் இதன் அர்த்தம் அதுவன்று. எங்கள் மனதிலுள்ள பொறாமை வஞ்சகம். பொய், கபடு, சூது, வாது, இவற்றையெல்லாம் ஞானம் என்னு. தீயில் பொசுக்கி மனதைத் தூய்மை ஆக்கி புத்தாடை உடுத்து புதுப்பொங்கலை சுவையாக உண்டு புத்துணர்வு பெற்று நிற்கவேண்டும் என்பதுதான் இதன் தாற்பரியம் எனலாம்.

    பொங்கலுக்கு அடுத்து மாட்டுப் பொங்கல் வருகிறது. விவசாயத்துக்கு உதவிய மாடுகளுக்கும், பால் தந்து எம்மை வாழ்வித்த பசுக்களுக்கும் நன்றி நவிலும் நாளாக இது அமைகிறது. அடுத்த நாள் காணும் பொங்கல் அமைகிறது. உற்றார் உறவினரை, பெரியவர்களைக் கண்டு அவர்களின் வாழ்த் தினை ஆசியினைப் பெற்றுக் கொள்ளும் நாளாக இந்த நாளை அமைத்து மகிழ்கின்றார்கள்.

    மாட்டுப்பொங்கல், போகித்திருநாள், காணும்பொங்கல் இவைபற்றி எல்லாம் நகரித்தில் வாழ்கின்றவர்களுக்கோ. புலம்பெயர் பகுதிகளில் வாழ்கின்றவர்களுக்கோ தெரியவருவது குறைவாகும். பொங்கலைக் கூட குக்கரில் பொங்கி தாங்கள் இருக்கும் வீட்டின் அடுப்படியில் வைத்து கரண்டியால் இரண்டு கரண்டி அவசர அவசரமாக வாயில் போட்டுவிட்டு வேலைக்கு ஓடும் நிலையினைதான் பொங்கல் நன்னாளில் காண்கின்றோம்.மாடிக் குடி இருப்புகளில் வாழ்கின்றவர்களின் பொங்கலை நினைத்துப் பார்க்கவே பரிதாப மாகவே இருக்கும்.

    சமயம் கடந்த விழாவாக தமிழர் விழாவாக தைப்பொங்கல் விளங்குகிறது என்பதுதான் இந்த விழாவின் மிகச் சிறப்பு எனலாம். உலகில் வாழுகின்ற தமிழர்கள் – கிறீஸ்தவராயினும், இந்துக்களாயினும், தைப்பொங்கலை மகிழ்வுடன் “பொங்கலோ பொங்கல்” என்று பொங்கும் மனத்துடன் கொண்டாடி மகிழ்கிறார்கள். சமயச்சாயம் பூசப்படாத தமிழர் திருநாளாய்  தைப்பொங்கல் திகழ்கிறது என்பது தமிழருக்கெல்லாம் மிகவும் பெருமையான விஷயம் அல்லவா!  நன்றி நவிலும் விழா! உழைப்பாளரின் உன்னத விழா! கூட்டுறவின் விழா! மதபேதமற்ற மகோன்னத விழா! எல்லோரும் ஓரினம் எல்லோரும் ஓர் நிறை என்னும் விழா! எனவே பொங்கலோ பொங்கல் என்று ஆனந்தமாய் கொண்டாடி அகமகிழ்வோம் வாருங்கள்!

    Share