மே 12 – புளோரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த நாள் – தாதியர் தினம்
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
ஆஸ்திரேலியா
பொறுமையென்னும் நகையணிந்து, புன்னகை என்னும் நன்னகை அணிந்து, அன்பாய், அரவணைப்பாய், ஆறுதலாய், பக்குவமாய் ஆத்மார்த்தமாய், தொழிலென்று எண்ணாமல் தூய பணியினை ஆற்றுகின்றவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் ஆற்றும் பணி ‘தாதியர்‘ பணி. அது ஒரு தொழில் இல்லை, உன்னத சேவை.
மே எட்டாம் நாள் உதவிக்கரம் கொடுக்கும் உன்னத நாளாய் (செஞ்சிலுவை சங்க நிறுவனர் நாள்) அமைந்தது. மே பன்னிரண்டாம் நாள், அரவணைத்து ஆறுதல் நல்கும் “தாதியர் தினமாய்” மலர்கிறது. மே ஒன்று உழைக்கும் கைகளின் ஒற்றுமையினை வெளிப்படுத்தும் நாளாய் ஒளிர்ந்தது. மே மாதம் என்றாலே சமூதாயச் சிந்தனை நிறைந்த மாதமாக அமைகிறது என்பதைக் கருத்திருத்துவது நன்றெனக் கருதுகிறேன்.
தாதியர் சேவை தரமற்ற சேவை. தாதியர் சேவை வறியவர்க்கும் எளியவர்க்கும் உரிய சேவை . தாதியர் சேவை என்றாலே அருவருப்பு நிறைந்த அசிங்கமான சேவை என்றெல்லாம் பல கருத்துகள் இருந்த காலக்கட்டத்தில் – தாதியர் சேவையினைத் தனது வாழ்வின் குறிக்கோளாய் ஒருவர் தேர்ந்தெடுத்தார். அவர்தான் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த, இத்தாலியில் பிறந்த “புளோரன்ஸ் நைட்டிங்கேல்” அதாவது “கைவிளக்கேந்திய காரிகை”.
மே மாதம் பன்னிரண்டாம் திகதி, ஆயிரத்து எண்ணூற்று இருபதில் இப்பெருமாட்டி – சேவை செய்ய வேண்டும் என்னும் இறைவனின் விருப்பினால் இம்மண்ணுலகில் கால் பதிக்கின்றார். நல்ல நோக்கத்தைக் கருவில் சுமந்து அவர் மண்ணில் கால் பதித்த தினமே ” உலக தாதியர் தினமாய் ” கெளரவமாய் கொண்டாடிப் போற்றப்பட்டு வருகிறது என்பதை யாவரும் மனத்தில் இருத்தல் வேண்டும்.
செல்வமிக்க குடும்பத்தில் பிறந்தாலும் – செல்வத்தில் சிக்கித் தவிக்க விருப்பமின்றி வேதனைப்படுவோர் பக்கமே சென்று அவர்களுக்குப் பணி செய்யும் மகத்தான “தாதியர் பணியினை” மனத்தில் பதித்து அதன் வழியில் பயணப்படத் தொடங்கினார். தேர்ந்தெடுத்த பணி பல சிரமங்கள் நிறைந்த பணி. இவரின் ஆசையினை, பெற்றவர்கள் ஏற்றுக்கொள்ளவே இல்லை. ஆனாலும் “இறைவன் தனக்கு இப்படித்தான் நட என்று விதித்தார்” என அவர் உணர்வு உணர்த்திய நிலையில் அவர் தாதியர் சேவையினைத் தலையாய சேவையாய் ஏற்று, தன்னால் இயன்ற வரை பணியாற்றி நின்றார்.
பெண்கள் நிலையில் இவரின் இந்தச் சிந்தனையும் செயற்பாடும் புரட்சி மிக்கது எனலாம். யாருக்கும் அஞ்சாது துணிவுடன் தாதியராய் பெண்கள் களத்தில் இறங்கிட “விளக்கேந்திய சீமாட்டியாய்” இவரே முதலில் வந்து நிற்கிறார். இதுதான் இவரை இன்றும் நினைப்பதற்கும் கொண்டாடிப் போற்றி மகிழ்வதற்கும் காரணமாய் இருக்கிறது என்பது வெள்ளிடை மலையாகும்.
இவர் கண்ணால் பார்த்த காட்சிகள், இவர் மனத்தில் பதிந்த சம்பவங்கள் யாவும் இவரைப் பல வகைகளில் சிந்திக்கச் செய்தன. அந்தச் சிந்தனைகளினால் இவரின் தாதியர் சேவை உயர்ந்து விளங்கியது. ரஷ்சியப் பேரரசு, பிரான்ஸ், ஐக்கிய ராஜ்ஜியம், ஒட்டோமன் ஆகிய பேரரசுகளுக்கு இடையே 1854 தொடக்கம் 1856 ஆம் ஆண்டு வரை “கிரிமியன் போர்” நடைபெற்றது. இப்போரினால் தாக்கமுற்று, சரியான கவனிப்பார் அற்ற நிலையில் இருந்த படைவீரர்களுக்குத் தாமாகவே முன்வந்து – தாம் பயிற்றுவித்த முப்பத்து எட்டுத் தாதியருடன் தம் சிறிய தாயாரையும் இணைத்துக் களத்தில் சென்று துணிவுடன் தன்னுடைய பணியினை ஆற்றினார். இப்பணியினால் “விளக்கேந்திய சீமாட்டி”யின் புகழ் பிரகாசிக்கத் தொடங்கியது. கிரிமியன் போர், இவரின் வாழ்க்கைப் பாதையில் ஒரு முக்கிய நிலை.
வறியவர்கள்தான் தாதியர் ஆக வேண்டும். தாதியர்கள் சமையல் ஆட்களாகவும் வேலை செய்ய வேண்டும் என்னும் கருத்தையெல்லாம் இவர் உடைத்தெறிந்தார். வறியவர்களிடத்து இவர் மிகவும் கருணை காட்டினார். அவர்களின் நலனில் பெரிதும் அக்கறையும் செலுத்தினார். வறியவர் வாழ்வினுக்கு வலக்கரமாயும் விளங்கினார். இலண்டன் மாநகரில் இயங்கிய ஆதரவற்றோர் விடுதியில் இவர் கேள்வியுற்ற சம்பவம், இவருக்குப் பல சிந்தனைகளைத் தோற்றுவித்தது. வறியவர் ஒருவர் இறந்துவிடுகிறார். இதனால் அங்கு பெருஞ்சிக்கலே உருவாகி விடுகிறது. இந்த நிலையில் இவ்வம்மையாரின் கவனம் அங்கு செல்கிறது. மருத்துவ வசதி சிறப்பாய் அமையாமையே காரணம் என்பதை உணர்ந்த அவர் – ஆதரவற்றவருக்கு உரிய மருத்துவ வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என்றும் – வறியவருக்கான சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
தாதியர்கள் அலட்சியமாய், பொறுப்பற்று இருப்பதை அவர் வெறுத்தார். மருத்துவர்களுக்கு வலது கையாகவும், நோயாளர்களுக்கு அன்பானவர்களாகவும், பல கோணங்களில் உதவும் நிலையில் தாதியர்கள் இருக்க வேண்டும். பொறுமையும் சகிப்புத்தன்மையுமே இச்சேவையில் ஈடுபடுவோருக்கு மிக மிக அவசியமாய் இருக்க வேண்டும் என்றும் அவர் கருதினார். அதன் அடிப்படையிலே தான் அவரின் ஒவ்வொரு நடவடிக்கையும் அமைந்திருந்தன.
நோய்கள் பரவுவதற்குக் காரணம் சூழல் தூய்மை இன்மையே என்று அவர் கருதினார். மருத்துவமனைகள், அங்கிருக்கும் மருத்துவக் கருவிகள் அனைத்தும் சுத்தமாய் இருக்கவேண்டும் என்பது இவரின் கட்டாயமான நிலையாக இருந்தது. அதன் வழியில் இவரின் செயற்பாடுகள் அமைந்திருந்தன.
புளோரன்ஸ் அம்மையார் அவர்கள் சிறந்த எழுத்தாளராகவும் புள்ளிவிபரவியல் ஆளுமை உடையவராகவும் விளங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் கிராமப்புறச் சுகாதாரம் பற்றியும் சிந்தித்திருந்தார் என்பது கருத்திருத்த வேண்டிய விஷயம். தாதியர் சேவை என்பது இனம் கடந்து, மொழி கடந்து, நிறம் கடந்து, சாதியம் தவிர்த்து, மதம் கடந்து, தராதரம் கடந்து , மனித நேயத்தை மட்டுமே முக்கியத்துவப்படுத்தி நிற்பது என்பதை இது உணர்த்துகிறது, இல்லையா!
“மருத்துவ வசதிகளுக்கும் சுகாதார நுட்பங்களுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்த மருத்துவமனைகள் பற்றிய குறிப்புகள் “, “தாதியர் பற்றிய குறிப்புகள்” என்னும் நூல் அக்காலத்தில் தாதியர்களுக்கான மிகச் சிறந்த நூலாய்க் கருதப்பட்டது. “உடல்நலத்தைப் பாதிக்கும் விடயங்கள்” , “பிரித்தானிய இராணுவத்தின் மருத்துவமனை நிர்வாகமும் செயல்திறனும்” என்பவை இவரால் எழுதப்பட்ட நூல்களில் குறிப்பிடத்தக்க நூல்கள் எனலாம்.
இவரால் எழுதப்பட்ட “தாதியற் குறிப்புகள்” என்னும் புத்தகம் தாதியர் பயிற்சிக் கூடங்களின் பாடத்திட்டத்தில் முக்கிய பகுதியாய் இடம் பெற்றிருக்கிறது. அதுமாத்திரமன்றி தாதியியலுக்கான நல்ல ஒரு அறிமுக நூலாகவும் இது விளங்குகிறது. மருத்துவமனைத் திட்டமிடலிலும் இவரின் கருத்துகள் முன்னோடியாய் இருக்கின்றன.
தாதியருக்கென்று முதன்முதலாகப் பயிற்சிப் பாடசாலையினைத் தோற்றுவித்த பெருமையும் இவருக்கே உரியது. இவரின் சேவையினைப் பாராட்டிக் கெளரவிக்கும் வகையில் நடந்த கூட்டத்தில் தாதியர் பயிற்சிக்காக “புளோரன்ஸ் நைட்டிங்கேல் நிதியம்” நிறுவப்பட்டது. இந்த நிதியத்துக்குக் கிடைத்த நிதியினைக் கொண்டு ” நைட்டிங்கேல் பயிற்சிப் பாடசாலை “, 1860 ஜூலை 9 ஆம் நாள் ஆரம்பிக்கப்பட்டது.
விக்டோரியா அரசியினால் இவருக்கு “அரச செஞ்சிலுவைச் சங்க விருது” 1883 இல் வழங்கப்பட்டது. “ஓர்டர் ஒவ் மெரிட்” விருதினை 1907 இல் பெற்றுக்கொண்டார். இவ்விருதினைப் பெற்ற முதல் பெண் மணியாயும் இவரே விளங்குகின்றார். விக்டோரியா மகாராணியாருக்கு அடுத்த நிலையில் பேசப்படும் பெண்ணாக “புளோரன்ஸ் நைட்டிங்கேல்” சமூகத்தில் உயர்ந்த நிலையில் கவனிக்கப்பட்டார்.
நவீன தாதியியல் முறையினை உருவாக்கியவர் என்னும் பெருமையினை புளோரன்ஸ் அம்மையார் பெறுகிறார். இலண்டனில் வெஸ்மினிஸ்டர் அபேயில் இருக்கின்ற தாதியர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து அங்குள்ள மாளிகையில் உள்ள விளக்குகள் ஏற்றப்பட்டு – வருகை தருகின்ற தாதியர்கள் ஒவ்வொருவராலும் கைமாறப்பட்டு அங்கிருக்கும் உயர்வான பீடத்தில் வைக்கப்படும். இவ்வாறு செய்வதன் அர்த்தம் “ஒரு தாதியிடமிருந்து மற்ற தாதியருக்கு தமது அறிவினைப் பரிமாறுவதாகக் கருதும் குறுயீடு” எனலாம். இந்த நாள், கைவிளக்கேந்திய காரிகை, விளக்கேந்திய சீமாட்டி என அழைக்கப்படும் “புளோரன்ஸ் நைட்டிங்கேல்” அம்மையார் பிறந்த மே பன்னிரண்டாம் நாளே.