Author: ஆர்.எஸ். கலா

  • ஏழையின் ஏக்கம்!

    -ஆர். எஸ். கலா

    பட்டாடை உடுத்திப் பவனிவர
    ஆசை ஆனால் பணம் இல்லை…
    பட்டுமெத்தை மேல் படுத்து உருண்டு
    விளையாட ஆசை
    ஆனால் பணம் இல்லை…
    தினமும் அறுசுவை உணவு உண்ண
    ஆசை ஆனால் பணம் இல்லை…
    விதம் விதமாக நகை போட்டு
    அழகு பார்க்க ஆசை
    ஆனால் பணம் இல்லை…

    வானூர்தியில் உலகம் சுற்றி வரஆசை
    ஆனால் பணம் இல்லை…
    மாடி வீட்டின் மேல் இருந்து வேடிக்கை
    பார்க்க ஆசை
    ஆனால் பணம் இல்லை….
    சீரும் சிறப்புமாகத் திருமணம் நடக்க
    வேண்டும் என்று ஆசை
    ஆனால் பணம் இல்லை…
    பல முதியோர் இலங்களுக்குச் சென்று
    பல  வழியில்  உதவி செய்ய ஆசை
    ஆனால் பணம் இல்லை…

    இந்தப் பணத்துக்காகப் பல வேலை தேடிச்
    செய்ய ஆசை
    ஆனால் படிப்பு இல்லை…!
    மனதில் உறுதி உள்ளது இதயத்தில்
    ஆசை உள்ளது நிறைவேற வழி
    இல்லை…

    ஏழையாகப் பிறந்தேன் ஏழையாக
    வளர்ந்தேன் ஏழையாக வாழ்கின்றேன்
    ஆனால் பணத்துக்காக அழைக்கின்றேன்
    அழைக்கின்றேன்  அழைத்துக் கொண்டே
    இருக்கின்றேன்!

     

    Share
  • துணிவோடு எடுத்துரை!

    -ஆர். எஸ். கலா

    வெள்ளைக் காகிதத்தையும்
    கருமை எழுது கோலையும்
    என் கரங்களில் கொடுத்து
    விட்டு ஒதுங்கி நின்று பார்…                          kr

    புனைந்து விடுவேன் நான்
    கவிதை ஒன்று, மறுத்துப் பேச
    துணிவு இன்றி வெடவெடத்துப்
    போகும் சில கால்களும்  நின்று!

    நான் உருட்டி விடும்  வார்த்தை
    ஒவ்வொன்றும் சிலரின் நாக்குப்
    போட்ட படிகள் அதைக் கண்டும்
    தயங்காது நடக்கும் என் எழுது
    கோலின் வரிகள்  எனப் புரிய
    வைப்பேன்  நான்  நின்று!

    தொடர்வண்டிகளாய்த் தொடரும்
    உள்பூசல்களை, கதிர்வீச்சை
    விட விரட்டி அடிப்பதில் வல்லமை
    பெற்றது  மனத் துணிச்சல்
    என்பது புரியும்  இன்று!

    இறக்கை இன்றிப் பறக்க
    விடும் எழுத்துக்கள் கொடுக்கும்
    எத்தனையோ முகவரிகளை
    நிறுத்தி விடு, உன் அடக்கு
    முறைகளைக் கடக்க விடு பல
    பாதைகளை, குவிக்கட்டும் எழுதும்
    கரங்கள் சாதனைகளைத்
    துணையாகக் கொடு உன் கரம்
    கொண்டு நீயும் என்றும்!

     

    Share
  • விழித்தெழு பெண்ணே!

    -ஆர். எஸ். கலா

    பெண்ணே நீ  விழித்தெழு
    இருளைக் கிழித்தெழு
    அறியாமையைத் தகர்த்தெழு
    அறிவியலை இழுத்தெழு
    அருவியாகக் கண்ணீர்
    சிந்துவதை நிறுத்தியெழு
    அடிமைத்தனத்தை உடைத்தெழு!

    அன்புக்கு அடி பணிந்து
    வம்புக்கு அடிகொடுத்து
    நிமிர்ந்து நில்!
    தலைக்கனத்தை கைவிட்டு
    நம்பிக்கையை கையில் எடுத்து
    உயர்ந்த இடத்தில் நிலைத்து நில்!

    அதட்டல் மிரட்டல் உருட்டல் எல்லாம்
    புரட்டிப் போட்டுப்  படிப்படியாக
    உயர்ந்து நில்  படிப்பில்!

    ஏற்ற தாழ்வுகளையும் முரண்பாடுகளையும்
    மடக்கிக்  கசக்கிச் சுருட்டிப் போட்டு
    மகளிராலும் முடியும் என்று
    நிரூபித்துவிடு நல்ல செயலில்!

    தன்னடக்கம் நாவடக்கம் இவைகளைத்
    துணையாக எடு நன்மைக்கு!
    மனையாள மட்டுமே மனையாள்
    என்ற தவறான கறையைக்
    கரம்பிடித்தவன் நெஞ்சில் இருந்து
    துடைத்துத் தூக்கிப்போடு!

    அன்பாலும் ஆதரவாலும் எடுத்துக் கூறி
    வளைத்துப்பிடி உன் பிடியில் கணவனை!

    புன்னகையில் பெண் ஒரு மலர்
    தென்றலாகும் போது ஒரு மங்கை
    கொண்டலாகத் தடவும்போது அவள்
    ஒரு நல்ல துணைவி!
    பொறுமை இழந்தால்
    புயலாக மாறும் கண்ணகி!
    உணரவை ஆண்ஆதிக்கம் கொண்ட
    சிலருக்கு!

    ஆணும் பெண்ணும் ஓர் உயிரே
    பிறப்பும் இறப்பும் ஒன்றே
    என்று புரியவை
    ஆனால் ஆணவத்தில்
    ஆட்டம் போடாதே பெண்ணே
    அவைதனை நிறுத்தி விடு
    பாரதி கண்ட கனவு கலையாமல்
    சிலையாகாமல் உயிர்த்தெழ வேண்டும்
    நீ பாரதிப் பெண்ணாக விழித்தெழு
    பெண்ணே!

     

    Share
  • ஏக்கத்தோடு எதிர்பார்ப்பு

    -ஆர். எஸ். கலா

    உண்மையை  உரைத்து
    நன்மையைப் புரிந்து
    நெஞ்சை நிமிர்த்தி நின்றுவிடு!
    ஊக்கத்தைக்  கையில் எடுத்து
    உன் வெற்றியை அடைந்துவிடு!

    உன்னையும் உண்மையையும்
    உணராத நட்பைத் தட்டிவிடு!
    முயற்சியை முடிவாக்காமல்
    உலகத்தில் உலாவவிடு!

    சிறுக சிறுகச் சிந்தித்துச்
    செயல் பட்டுவிடு!
    மறக்க முடியாத சோகத்தையும்
    மாற்ற எண்ணி வென்றுவிடு!

    நல் அறிவுரைகளை
    ஏற்று விடு!
    தீய வழி தானாகவரும்
    தீன்டாமல் விலகிவிடு!

    கடமை கண்ணியம்
    மறவாத ஆட்சி புரிந்துவிடு!
    பலநாடு வியக்கும் வண்ணம்
    நாட்டின்  நலத்தையும் வீட்டின்
    வளத்தையும் வளர்த்துவிடு!

    நல்லவையை நாசம்
    பண்ணிவிடும் செயலுக்குத்
    தடை பிறப்பித்துவிடு!
    நல்ல பல திட்டங்களை
    அறிவித்து விடு!

    செல்வமும் புகழும் போதும்
    என்று நினைக்கும் அரசியலை
    மறந்து விடு!
    சென்ற இடமெல்லாம் சிறப்பான
    மனிதன் என்னும் புகழைப்
    பெற்று வென்றுவிடு!

    ஏழை எளியோரை மதித்து
    மனித நேயத்தை வளர்த்திடு!
    ஏற்றுமதி இறக்குமதி எனப்
    பல அபிவிருத்தி மூலம்
    ஏழை மக்களையும் சிரிப்போடு
    வாழவழி வகுத்திடு!

    உன் மக்கள் மனதில்
    மட்டும் இல்லை உலக
    மக்கள் மனதிலும்
    உன் நினைவை நிரந்தரமாகப்
    பதிய வைத்துவிடு!

     

    Share
  • ஈழம்

    -ஆர். எஸ். கலா

    ஈழம் என்னும் பெயர் கேட்டதுமே,
    உலக மக்கள் தலை வணங்குகின்றனர்
    சில மக்கள் உடல் நடுங்குகின்றனர்
    இள இரத்தங்கள் வெகுண்டு எழுகின்றனர்
    இத்தனை மாற்றங்கள்  ஏன்? ஏன்?

    இனம் மதம்   மொழி வேற்றுமை என்னும்,
    விஷக்கிருமி ஈழத்தை இறுக்கப் பிடித்தமையால்    Srilanka
    வடித்துப் பிடிக்க இயலவில்லை ஏற்பட்டது
    இந்த மாற்றம்!

    கட்டியவன் உதை அடி கொடுக்கும் போதும்,
    கண்ணைக் கசக்கியபடியே அழுது இருக்கும்
    பெண்ணையே ஈன்றவளையும் மறந்து,
    ஈழத்துக்காகத்  துணிந்து துப்பாக்கி ஏந்த வைத்தது,
    இன வெறி என்ற நோய்  உருவாகிய பின்னரே!

    இரத்தத்தில் வேற்றுமை இல்லை அனைவருக்கும்
    செந்நிறமே!
    நம் கரந்தான்  நமக்குத் துணை  இந்நிலையில்
    ஏனோ  வேற்றுமையை  வளர்த்து ஒற்றுமையைக்
    கெடுக்கின்றாய் மானிடனே!

    பட்டதும்  போதும்  விட்டதும் போதும்
    இன்னும்பல புதை குழிகள் தோண்ட வேண்டாமே!
    திட்டம் தீட்டும் குள்ள நரிகளின் கட்டத்தில்,
    சிக்கவேண்டாமே  வட்டமிடும் பருந்தை  விட்டு விலகு!

    சஞ்சலங்கள் சங்கடங்கள் எல்லாம் சத்தம்
    இன்றித் தகர்த்தெறிந்து  முக்கடலின்,
    சங்கமம் போல் மும்மொழியும் மதமும்,
    ஒன்றாக இணைந்து வங்கக் கடலின் ஆழம்
    போல் அன்புக் கடலை வளர்த்து  நம்
    தங்கத்தமிழ் மங்காமல் இருக்க வழிவகுத்து,
    ஈழம் அது  தமிழ்  வீடாக
    என் நாடு என்ற
    சொல்லை விடுத்து நம்நாடு என்று போற்ற வேண்டும்!

    ஈழத்தின்  மண் சுமக்கும் மக்கள் அனைவரும் நிமிந்து
    நின்று இரத்தம் சிந்தாமல் உயிர்ப்பலி கொடுக்காமல்,
    ஈழம்  வளம் அடைய வேண்டும் அழகு பெற வேண்டும்
    என்று  எல்லோர் கரமும் இணைய வேண்டும்!

    உலக நாடும்  புகழ வேண்டும்,  பல வலைத்தளங்கள்
    வழியாகவே   ஓங்க வேண்டும் தமிழ் நிலைக்கவேண்டும்
    ஈழத்தின் புகழ்!

    இந்து சமுத்திரத்தின் நித்திலம்
    என்று நெத்தியில் பொட்டுப் போல்
    நினைவில் நிறுத்திடும் நாடாம்
    சிறு மாங்காய் போல் வடிவம்
    கொடுக்கும்  ஈழமது  எங்கள்
    உயிராம்!

    நான்கு பக்கங்களும் கடலாலும்
    கங்கை நதியாலும் நீர் உரு எடுத்துக்
    காவல் காக்கும் நாடாம் ஈழம் அது!

    அதன் அழகைக் கண்டு
    அங்கீகரித்துத் தமிழால் சூட்டப்பட்ட
    அழகிய பெயராம் இலங்கைத் தீவு!

    நடை பாதையிலே இடை இடையே
    சீறி வரும் நீருக்குத் தடையாகப் பாலம்
    அந்த அழகுக் கோலம் காண
    வேண்டுமாயின்  நீயும் வர வேண்டும்
    ஊர்கோலம் ஈழம் வரவேற்கக்
    காத்திருக்கு எந்நாளும்!

    உடலை வருத்தி உழைக்கும் ஏழை
    உழைப்பாளிகளின் வெள்ளைச்
    சிரிப்பும் சூப்புக் கடை முதலாளிகளின்
    ஆனந்தச் சிரிப்பும் காண வேண்டுமா
    மாலை நேரம் சாலை ஓரம் தவறாமல்
    நீர் வாரும்!

    உயர்ந்த மலையிலே பணிந்த கோவிலும்
    பரந்த மணல் பரப்பிலே சிறந்த பள்ளி வாசலும்
    அமைதியை நாடும் கிருஸ்தவ ஆலயங்களும்
    அருக அருகே  புத்த மதத்தவரின் கட்டிடங்களும்
    காண வாருங்கள், ஈழத்தின் பத்தியின்
    பரவசமான மனிதநேயத்தை!

    ஈழத்தின் அழகை வர்ணிக்கஇன்னும்
    பிறக்க வேண்டும் பல தமிழ்ப் புலவர்கள்
    தமிழில் உரைக்க ஆரம்பித்தால் நீ
    நீர் அருந்த மறந்து ரசித்திருப்பாய்
    அதில் வல்லமை பெற்ற திறமையான
    கவிஞர்களைச் சுமந்திருக்கும் நாடு அது ஈழம்!

    வீழ்ந்தாலும் எழுந்து விடும் உறுதி
    பூண்டு வாழும் மனம் கொண்ட
    தமிழன் வாழும் அழகிய நாடாம்
    ஈழம்!

    எளியோரையும் வலியோரையும்
    செழுமையாகவே சேர்த்து
    இணைத்து வாழ வழி தேடும்
    தமிழன் வாழும்  நாடாம் எங்கள் ஈழம்!

     

    Share
  • மலை போலே சுமை மனதில் நிழலாடுது மரணவாசல் வரை

    ஆர் எஸ் கலா

     

    aaa
    <><><><><>><><><>><><><<>><><>>>>>>>>>><>><>>>>>>>>><>>>>>><

    மலை போலே சுமை மனதில் நிழலாடுது மரணவாசல் வரை
    <><><><><>><><><>><><><<>><><>>>>>>>>>><>><>>>>>>>>><>>>>>><

                                    {1}
    குமாரின் வாழ்கை  வரலாற்றை
    நினைக்கையிலே குளமாக
    வருகின்றது கண்ணீர் என்
    கண்களிலும்.  ஆமாம் ஒரு
    கன்னியமிக்க கருணை
    நிறைந்த மனிதன் குமார்.
    அவனுக்கு என்று உருவான
    குடும்பமோ ஒரு குருவிக் கூட்டம்
    போல் அழகான குடும்பம்.
    குமார் திருமணம் செய்யும் போது
    சுமார் முப்பது வயது இருக்கும்.
    அவன் மனைவி பெயர் வாணி
    சிறுவயதிலே  தந்தையை
    இழந்த ஒரு ஏழை வீட்டுப் பெண்.
    ஆனால் அழகிலும் அறிவிலும்
    அவளுக்கு நிகர் அவள்தான்.
    குமார் படிப்பறிவு இல்லாத
    இளைஞன்  விவசாயத்தில்
    பல சாதணை புரிந்த  ஆண்
    மகன். தாய்க்குத் தலை மகன்
    ஓரளவு வசதியான குடும்பம்.
    வாணியும் குமாரும் முல்லைத்தீவைப்  பிறப்பிடமாகக்
    கொண்டவர்கள். பெற்றோர்
    ஆசைப் படியே குமார் கை பிடித்தான்
    வாணியை. ஊரார் மத்தியில்
    முறையுடன். அழகான வாழ்வை
    அனுபவிக்க அவனும் தயாரானான்.
    வாரங்கள் மாதங்களாக மறைந்தது
    ஓராண்டை நெருங்கியது.
    வாணியும் தன் இல்லற இன்பத்தின்
    பரிசாக ஈன்று எடுத்தாள் அழகான
    ஆண் பிள்ளையை. குமாரின் மனம்
    மகிழ்ச்சியில் கூத்தாடியது. தன் மகனுக்கு
    அழகான பெயராக தெரிவு செய்து
    சூட்ட ஆசைப்பட்டவன் மனைவி வாணியிடம்
    விருப்பம் கேட்டான் அவள் தன் கணவன்
    பெயருடன் சேர்த்தாப் போல்  வையுங்கள்
    என்றாள்  இதன் இடையே குமாரின்
    பெற்றோர் பேரனுக்கு ஜாதக முறைப்படி
    சில எழுத்துக்கள் கூறவே அதில் ஓர்
    எழுத்தை தெரிவு செய்து முகுந்தன்
    என்று பேர் சூட்டினான் அன்று முதல்
    தன் மகனுக்கு  தமிழின் பெருமையையும்
    தமிழ் மண்ணின் கடமையையும் பலரின்
    தியாகங்களையும் கூறியே வளர்த்து
    வந்தான் முகுந்தனும் சுட்டிப்பையனாக
    வளர்ந்தான் ஒரு வாட்டி கூறினாலே
    கற்பூரம் போல் பிடித்துவிடுவான்
    படிப்பிலும் சரி பொது அறிவிலும்
    சரி நல்ல முன்னேற்றம்  முகுந்தனுக்கு
    ஆறு வயது கடந்த பின்னர்தான் வாணி
    மறு குழந்தைக்கு தாயானாள் இந்தத்
    தடவை  அழகிய குட்டித் தேவதையை
    பெற்றுக் கொடுத்தாள் குமார் கரங்களிலே
    குமார் தன் அன்பு மகளுக்கு குமுதினி என்று
    பெயர் சூட்டினான்  வாணியும் குமாரும்
    சேர்ந்து பேசி முடிவு செய்தனர் இரு
    குழந்தை போதும் என்று முடிவு எடுத்தனர்
    இருவரையும் அன்பும் அக்கறையும்
    அதனுடன் கொஞ்சம் கண்டிப்பும் காட்டியே
    வளர்த்து வந்தனர் நான்கு பேர்
    கொண்ட குட்டிக் குடும்பமாக வலம்
    வந்தது குமாரின் குடும்பம்.
      

                             {2}

    அந்த அழகு குடும்பத்திலே
    கல்லடி பட்டது போல் பட்டது
    கொடும் பாவிகள் விட்ட செல் அடி.
    விழுந்து நொறுங்கிய செல் பாகங்களுக்குப்
    பலியானது குமாரின்  ஒரு காலும் அவன்
    வியர்வை சிந்திய உழைப்பில் கட்டிய
    மனையும். அப்போதும்  தன் குடும்பம்
    நலமாக உயிர் தப்பியதைப் பார்த்து
    சந்தோசம் அடைந்தான் குமார் கால்
    இழந்தானே தவிர தைரியத்தையும்
    மன உறுதியையும் இழக்க வில்லை.
    தமிழனுக்கான கர்வமும் அவனிடம்
    நிறைந்தே இருந்தது தாய்க்கு நிகராக
    அவன் வாழும் தாய் மண்ணை அதிகம்
    நேசிப்பவன். தன் மகனுக்கு விடுதலைப்
    போராளிகளின் கொள்கையைச் சொல்லியே
    தூங்க வைப்பான் சிறு  வயதில்   நீயும்
    நாடுகாப்பாயா என்று விளையாட்டாகக்
    கேட்பான் மகனும் தலையை ஆட்டி வைப்பான்
    அது போன்றே அவன் பாடசாலை விட்டு வீடு
    திரும்பியதும் அருகில் இருக்கும் பயிற்சி
    முகாமுக்குப் போய் நின்று வேடிக்கை
    பார்ப்பான்  அப்போதே தன்னை ஒரு
    போராளியாக நினைக்கத் தொடங்கினான்
    முகுந்தன் பருவ வயதை அடைந்ததுமே
    இணைந்து கொண்டான் போராளி குடும்பத்தில்
    தந்தை குமார் கலங்க வில்லை தாய் வாணிதான்
    கொஞ்சம் கலங்கிப் போனாள். ஒரே ஒரு ஆண்
    மகன்.உடல் நலம் இல்லாத தந்தை பருவ  வயதை
    அடைந்த தங்கை  வீட்டுப் பொறுப்பை விட்டு
    நாட்டுப் பொறுப்பை ஏற்றுக் கொண்டானே
    என்று அவள் கலங்கவில்லை  தன் மகன்
    வீரனாக வலம் வரவேண்டும் நாட்டுக்கு
    பல நன்மை புரியவேண்டும் அதற்கு அவன்
    நெடும் நாள் வாழவேண்டும் தன் மூச்சை நிறுத்தும்
    வரை மகன் நலமக இருந்தால் போதும்
    என்று தான் கண் கலங்கினாள். ஆண்டுகள்
    உருண்டு ஓடியது குமார் வாணி இருவரையும்
    மெது மெதுவாக  முதுமை நெருங்கியது
    குமுதினியோ வீட்டுக்கு செல்லப்பாப்பாவாக
    வளர்ந்து வந்தாள் தாய் தந்தையரின் அன்பில்
    துவண்டு  போனாள் ஒரு மழலைபோல்.
    வீட்டுக்குச் செல்லம் ஊரிலோ அவள் ஒரு
    தமிழ் ஆசிரியை அழகு ஓவியம் போல்
    கொடி இடையாள் கொடிக்கும் அவளுக்கும்
    உள்ள வேறுபாடு கொடி வளைந்து கொடுக்கும்
    இவளோ இடை மேல் கரம் பட்டாலே வசமாய்
    கொடுப்பாள். கன்னத்தில். பட்டாம் பூச்சி  போல் இறக்கை
    இன்றிப் பறக்கும் பெட்டைப்பூச்சி அவள்.

    {3}
    அவளின் நல்ல குணம் பன்பும் அழகு
    பொது நலம் பெற்ரோரிடம் வைத்துள்ள
    பாசம்  மரியாதை  இவைகளைப்  பார்த்து
    பலர் தன் வீட்டுக்கே மருமகளாக்கி விட
    ஆசைப்பட்டனர்  அதில் சிலர் வீட்டுக்குத்
    தகவலும் சொல்லி அனுப்பி இருந்தனர்
    குமாரும் வாணியும் தன் மகளின்
    வாழ்க்கை பற்றி பேசும் போது மகன்
    குமுதனை நினைத்து ஏங்குவது வழமை
    அன்றும் அப்படியே பேசிக் கொண்டு
    இருக்கும் போது குமுதினி கூறினாள்
    அம்மா நாளை மறு நாள் அண்ணா
    வரு நாள் என்று  ஆமாம் அதை நான்
    மறப்பேனா என்றாள் தாய் வாணி
    முகுந்தன் மாதம் ஒரு தடவை தவறாது
    பெற்றோரைக் காண வருவான்  இரு
    தினங்களில்  தன் மகன் வரவை
    எதிர்பார்த்து விதம் விதமாகச் சமைத்தாள்
    வாணி  காடு மேடு என்று போவதால் நல்ல
    உணவு உண்டு எத்தனை வாரங்களோ என்று
    மனதில் நினைத்தபடி கலங்கும் கண்ணைத்
    துடைத்துக் கொண்டே பார்த்துப் பார்தது
    சமைத்து முடித்தாள்   குடும்பமே வழி
    பார்த்த  வண்ணம் இருக்க முகுந்தன்
    தன் சக தோழனுடன் ஓர் வாகனத்தில்
    வந்தான் நடையோ ஒரு கம்பீரமாக இருக்க
    தோள் மீதும் பக்க வாட்டிலும் ஆயுதங்கள்
    கண்டதும் ஒரே  சந்தோசம் தாய்க்கு  தந்தை
    அவன் பதவி அவன் வீரம் கூடவே துணைக்கு
    ஆள் இவைகளைக் கண்டு ஒரு வியப்பும்
    பெருமிதமும் கொண்ட மகிழ்ச்சியோடு  மகனை
    வரவேற்றனர் மகனாக இருந்தாலும் அவன்
    ஒரு நாட்டைக்  காக்கும் வீரன் அதனால்
    தன்னை அறியாமலே மரியாதையும்
    கொடுப்பார் தந்தை
    குமார்  முகுந்தன் வந்ததும்
    அனைவரிடமும் நலம் விசாரித்து
    விட்டு தாயின் கரங்களால் சாப்பிட
    அமர்ந்தான் நண்பனுடன்  தாய் வாணி
    உணவு பரிமாறிய வண்ணமே பல விஷயங்களை
    பேசினாள் அதனுடன் குமுதினியின் திருமண
    விஷயத்தையும் கூறி  உன் பதில் என்னப்பா
    என்று மகனை நோக்கினாள் பேசாமல்
    சாப்பிட்டு முடிந்ததும்  தன்  தந்தையைப்
    பார்த்துக் கேட்டான் ஏன் அப்பா நீங்கள்
    மௌனமாக இருப்பது உங்கள் விருப்பம்
    என்ன என்று குமார் மகனிடம் கூறினான்
    எனக்கும் திருமணம் செய்து வைப்பது சரி
    என்றுதான் படுகின்றது  உங்க அம்மா பேசி
    முடிக்கட்டுமே என்று அமைதியாக இருந்தேன்
    என்றான் மகனிடம் குமார்  ம்  சரிதங்கைக்கு
    பிடித்தால் நல்ல இடமாக அமைந்தால்  பேசி
    முடிங்க நான் இன்னும் ஆறு மாதங்கள்
    சென்றுதான் வருவேன் என்றான் தாயைப்
    பார்த்த வாறு அவனுக்குத் தெரியும் இதை
    தாய் ஏற்றுக் கொள்ளமாட்டாள் என்று
    கடமையின் கட்டுப்பாடு அவன் தலை வணங்கியே
    ஆக வேண்டும் பதறிப் போன தாய் வாய்  விட்டே
    அழுதாள் ஏண்டா இப்படி செய்கிறாய் மாதம்
    ஒரு  தடவை  வருவதையே என்னால் தாங்க
    முடியல இதில் ஆறு மாதம் சென்ற பின்னா
    என்று மகனின் கரம் பற்றிக் கேட்டாள் ஆம் அம்மா
    தலைவர் கட்டளை நான் வேறு ஊர் செல்லவேண்டும்
    அங்கு இருந்து வருவது கடினம் ஆறு மாதம் சென்றதும்
    இங்கே வந்து விடுவேன் அதனால் திருமணத்தைப்
    பேசி முடிங்க திருமண நாள் நான் வந்ததும் நடப்பது
    போல் குறித்து எடுங்கள் என்று கூறி தங்கையிடம்
    கொஞ்சம் கேலியும் பேசி விட்டுப் புறப்பட்டான்
    கலங்கிய கண்ணுடன் வழி அனுப்பி வைத்தனர்
    குடும்பமே ஒன்றாக சேர்ந்து

    {4}
    மகனை அனுப்பி விட்டு தனியே
    அடுப்பங்கரையில்  நின்று அழுதாள்
    வாணி குமார் அமைதியாக அமர்ந்தான்
    நாற்காலியில் குமுதினி தன் அறையின்
    உள்ளே சென்று விட்டாள்  வீடே அமைதியாக
    இருந்தது நேரம் ஓடி மறைய இரவும்
    எட்டிப் பார்த்தது அன்று தூங்கும் போது
    குமார் கூறினான்  பக்கத்து ஊர் பையன்
    நல்ல உத்தியோகமாம்
    அவர்கள் தான் முதல் முறை
    நம் குமுதினியை பெண் கேட்டது நாளை
    அவர்களிடம் பேசுவோம் அந்த தொலை பேசி எண்ணை
    ஞாபகமாக  எடுத்து வை என்று கூறி விட்டு தூங்கத்
    தயாரானான்  வாணியின் மனம் தூங்க மறுத்தது
    புரண்டு புரண்டு படுத்தவாறே இரவைக் கழித்தாள்
    மறு நாள் காலை குமுதினி வேலைக்குச் சென்றாள்
    குமார் வழக்கம் போல் நாற்காலியில் அமர்ந்து கொண்டு
    பத்திரிக்கையைப் புரட்டிக்கொண்டு இருந்தான்
    வாணி வீட்டு வேலையில் மூழ்கிப் போனாள்
    சிறுது நேரம் சென்றதும் குமார் வாணியை
    அழைத்து தொலைபேசி எண்ணைக் கேட்டு
    வாங்கி  தன் மகளை பெண் கேட்ட வீட்டுக்கு
    தொடர்பு கொண்டான் அவர்களும் சந்தோசம்
    ஒரு நல்ல நாள் பார்த்து விட்டு  வீட்டுக்கு வருவதாக
    கூறினர்கள்   நாட்டில் தினம் தினம் வெடி
    தினம் தினம் இழப்பு ஆனால் வீட்டை விட்டு
    வெளியேறவில்லை இது வரை .நாளும் கடந்தது
    மாப்பிள்ளை வீட்டார் வரவுக்கு நாள் குறிக்கப்பட்டது
    வண்ணக் கனவில் மிதக்க தயாரானாள் குமுதினி
    வீடே குதூகலம் ஆனது சொந்த பந்தம் எல்லோரும்
    வந்து மிகவும் சந்தோசமாக வேலைகளை செய்து
    கொண்டு இருக்க வாணி மட்டும் இடை இடையே
    காணாமல் போவாள் தனிமைில் போய் அழுவதும்
    பிறகு வந்து கூடி நின்று சிரிப்பதுமாக இருந்தாள்
    மகனுக்காக அழுகை மகளுக்காக சிரிப்பு
    இரண்டுக்கும் இடையில் தாயின் தவிப்பு
    மாப்பிள்ளை வரும் நேரம் நெருங்க. நெருங்க
    குமுதினிக்கு சந்தோசத்துடன் சேர்ந்து
    ஒரு தவிப்பு  தோழியர்கள் கூடி நின்று
    கேலியும் கிண்டலுமாக இருக்க
    அவள் அழகு முகம் சிவக்க வாகனம்
    வரும் ஓசை கேட்டு எட்டிப்  பார்த்தனர்
    தோழியர் மாப்பிள்ளை வீட்டார் வந்து
    விட்டனர் ஒரே பட படப்புடன் அவளும்
    ஐன்னல் வழியே பார்த்தாள் அழகான
    உடையும் அமைதியான முகமும்  தாயோடு
    நடந்து வந்தான் புது மாப்பிள்ளையை வரவேற்றனர்
    வீட்டுப் பெரியோர்  சிறுது நேரம்
    பேசி முடித்து விட்டு குமுதினியை அழைத்தனர்
    அவளும் வெட்கத்தோடு வந்து அமர்ந்தாள்
    இருவரிடமும் சம்மதமா என ஒரு முதுமை
    தாத்தா வினா எழுப்பவே ஆமாம் என்று
    தலையாலே பதில் உரைத்தனர் ஒரு
    வழியாக நிச்சயம் முடிந்தது  திருமணம்
    ஓராண்டு முடிய என்று முடிவு எடுத்து
    மாப்பிள்ளை வீட்டாரும் சந்தோசமாக
    போனார்கள்  குமுதினி  அன்று முதல்
    ஆரம்பித்தாள் வண்ணக் கனவையும்
    கற்பனைக்  கவியையும் தனக்கே உரிமையாக்கி தன் கரம் பிடிக்க
    வரும் கணவனை நினைத்து
    வடித்தாள் சிறு கவிதை
    உறவோடு வந்தாய் உள்ளத்தை
    கூடியவர்கள் அறியாமலே
    அள்ளிச் சென்றாய் வெள்ளம் போல்
    விளையாடுது உன்நினைவு தினமும்
    இரவினிலே   தனிமையில் நான்
    ஒருத்தி தவிக்கின்றேன் உன்னை நிறுத்தி
    கவிதை எழுதி முடிந்ததும் தானாக படித்து
    சிரித்தாள்  மனதினிலே

    {5}

    குமார் குடும்பத்தில் ஒவ்வொருவரும்
    ஒவ்வொரு  மன நிலையுடன் நாட்களை
    கழித்து வந்தனர்  திரு மணத்துக்கு இன்னும்
    ஏழு மாதங்கள் இருக்கு முகுந்தன் வீடு வர
    இரண்டு மாதம் இருக்கு என்று வாணி
    மனதிலே கணக்குப் பார்த்த வண்ணம்
    இருந்தாள் வழமை  போல் அன்றும்
    பல விசயங்களை  பேசிவிட்டு உறங்கத்
    தயாரானார்கள் திடீர் என்று குண்டு
    மழை பொழிய ஆரம்பித்தது இவை
    ஒன்றும் புதிய ஓசை இல்லை இருந்தும்
    அன்று கொஞ்சம் அதிகமாகவே இருந்தது
    மக்களின் குரல் ஓசையும் பலமாகவே கேட்டது
    வெளியேறிப் பார்க்க பயந்த மூவரும்
    பயந்த படியே அறையின் உள்ளே இருந்தனர்
    வெடி ஓசையும் செல்லும் மீண்டும் மீண்டும்
    பலமாக  வெடிக்கவே குமார் கூறினான்
    மகளிடமும் மனைவியிடமும்  நாம் இங்கே
    இருக்க வேண்டாம் என்று அழைத்தான்
    ஏற்கனவே தயாராக வெட்டி வைத்த குழிக்குள்
    சென்று அமரலாம் என்று அதன்படியே
    மூன்று பெயரும் ஓடி ஒழிந்தனர்  மெதுவாக குமாரின்
    கையைப்  பிடித்துக் கொண்டு சேர்த்தனர்
    தாயும் மகளும் பிறகு   ஓசை ஒன்றும்  காதில் விழ
    வில்லை ஒன்றும் புரிய வில்லை விடியும்
    வரை அமர்ந்து இருந்தனர் விடிந்ததும்
    வீட்டுக்குள்ளே குழியில் இருந்து
    வெளியேறியவர்களுக்கு பெரும் அதிர்ச்சி
    ஆம்  ஊரையே இராணுவம்  கைப்பற்றி
    அடித்து  உடைத்து வைத்திருந்தான் தன்
    பிடியில் இவர்களையும் சேர்த்துக் கொண்டு
    வந்து நிறுத்தினான் மக்களோடு மக்களாக
    அமர்ந்தனர் அங்கே பல உறவுகள் கதறுவது
    மனதை ஏதோ செய்தது   அன்று இரவு
    பொழிந்த குண்டுக்கு உறவை பலி
    கொடுத்தவர்களோ கதறி அழுதவண்ணம்
    இருந்தனர் இவர்கள் முகத்தைப் பார்த்த
    படியே கலங்கி இருக்கும் போது  ஒரு
    வாகனத்தில் கொண்டு வந்து கொட்டி
    விட்டான் குப்பை போல் அன்று அவன்
    துப்பாக்கிக்குப் பலியான மக்களின் உடலைக்
    கண்டதுமே எல்லோரும் கதறி அழுதனர்
    என் உறவு உன் உறவு என்ற வேற்றுமையே
    அப்போது இல்லை  அடித்து அதட்டி அடக்கி
    விட்டான் அழுதவர்களை உடலை அவர்கள்
    கண் முன்னே ஒரே குழியில் கொட்டி மூடி
    விட்டான் அப்போது வாணி இறைவனுக்கு
    நன்றி கூறினாள் இறைவா நல்ல வேளை
    என் மகன் வேறு ஊர்  சென்று விட்டான்
    எனக்கு இது போதும் என்று நன்றி
    கூறினாள் மனதிலே
    இறைவனுக்கு அப்போது  கடுமையான. குரலில்
    அழைத்தான்
    ஒரு சிங்கள மிருகம் எல்லோரும் எழுந்து
    செல்லவே கொண்டு போட்டான் ஒரு உடைந்த
    வீட்டில்  சுத்தியும் மரங்கள் கண் இமைக்கும்
    நேரத்திலே கம்பி வேலி போட்டு அடைத்தான்
    மிருகம் போல்  குப்பையில் மக்கள் கூட்டம்
    உணவு இல்லை நீர் இல்லை  ஒன்றும்
    புரியாமலே மக்கள் தவித்தனர்

    {6}

    இரு தினங்களுக்குப் பிறகு ஏதோ  கொஞ்சம்
    உணவு கொடுத்தான் அங்கே வயது வந்த
    பெண்கள் படும் அவஸ்தையும்  சிறு மழலைகள்
    துடிப்பதையும் பார்த்தால் கல்லும் கண்ணீர்
    சிந்தும் இந்த சிங்களவனுக்கு மனம் இரங்கவில்லை
    வந்து வந்து  யாராவது ஒருவரின் பெயர்
    கூறி விசாரணை என்று ஒரு உறவை அழைப்பான்
    சிறுது  நேரத்தில் பாதி உயிருடன் கொண்டு போடுவான்
    சிலரை கண்ணிலே காட்ட மாட்டான்  எமனைத்
    தவிர வேறு ஒரு தெய்வமும் கண்ணில் தெரிவதாக. இல்லை
    அதே போலவே  குமார் குடும்பத்துக்கும்  காத்திருந்தது
    கெட்ட நேரம்  கட்டபொம்மனுக்கு ஒரு எட்டப்பன்
    போல் குமாரின் குடும்பம் பற்றி போட்டுக்
    கொடுக்கவும் ஒரு எட்டப்பன் இருந்தான் அவனுங்க
    கூடவே வேகமாக வந்த அந்த நாய் அழைத்தான்
    குமுதினியை கொஞ்சம் பேச வேண்டும் வா என்று
    அவள் நடுங்கவே வாணி கதறினாள் குமார்
    பதறிப் போனான் நான் வருகிறேன் ஐயா என்றான்
    வேண்டாம் நீ நொண்டி நொண்டி வர ஒரு நாளாகும்
    போய் பேசாமல் இரு என்று அதட்டினான் வாணி
    தான் வருவதாக கூறி எழுந்தாள் ஏய் கிழவி
    அடங்கு இல்ல போடுவேன் மண்டையில் என்று
    தள்ளி விட்டு குமுதினியை அழைத்துச் சென்றான்
    அவள் அழுது கொண்டே பெற்றோரைப் பார்த்தபடி
    சென்றாள் கூட்டிப் போய் பல மணி நேரமாகியும்
    குமுதினி வரவில்லை வாணி அழைக்காத
    தெய்வமே இல்லை  குமார் மெதுவாக  ஊண்டு
    காலில் சென்று ஒருவனிடம் விசாரித்தான்
    அவன் ஒரு தள்ளு தள்ளி விரட்டி விட்டான்
    அழுத கண்ணுடன் வந்து அமர்ந்தான் அன்றுதான்
    குமார் அழுவதை வாணி பார்த்தாள் எதையும் தாங்கும்
    தன்  கணவனின் கண் கலங்கியதுமே ஏங்கியே
    போனாள் வாணி பாதி மூச்சி நின்றது அவளுக்கு
    கொஞ்சம் அமைதியாக இருங்கள் வருவாள்
    நம் மகள் நாம் யாருக்கு கெடுதல் செய்தோம்
    என்று கணவனிடம் ஆறுதல் கூறினாள்
    அவள் உள்ளே  செத்துக் கொண்டு இருந்தாள்
    மாலையாகிப் போயும்
    மகள் வரவில்லை பார்த்த படியே இருக்க  ஒருவன் வந்தான்
    இரு ஆண்களை அழைத்துப் போய் வாணியை
    தூக்கி கொண்டு போகுமாறு கட்டளை இட்டான்
    அவனுங்க பதறும் நெஞ்சை அடைக்கியபடியே
    வாரி அள்ளி எடுத்துக் கொண்டு வந்து  படுக்க
    வைத்தான் வாடிய கீரையாட்டம் ஒன்றுமே
    தெரியாத கிழிசல் துணிபோல் குமிதினியின் நிலமை
    ஆம் பாவிங்க அவளை சீரழித்து  கடித்துக் கொதறி  போட்டு விட்டானுங்க
    பலர் ரசித்த அழகு மேனியை அலங்கோலமாக்கி
    பாதி உயிருடன் அள்ளி க்
    கொடுத்திருந்தானுங்க பாவிகள்
    உதிர்ந்த ரோஜாபோல் கிடந்தாள் தரையில்
    ஓவென்று அழுத வாணியின் குரல்அந்த
    நொடியே அடங்கியது மகளின் உயிர்
    பிரியும் முன்பே வாணியின் உயிர் அடங்கி
    விட்டது வாணியின் அழகு முகம் பார்த்த
    ஊர் மக்கள் இந்தக் அவலக்  கோலம் கண்டு கலங்கியவாறு
    தங்களின் கூடவே இருக்கும் பருவப் பெண்களின்
    மக்களை நினைத்து ஏங்கத் தொடங்கினர்
    குமுதினி தந்தை முகம் பார்த்தாள் பேச எத்தனித்தாள்
    வார்த்தை வெளியாகவில்லை மூச்சு வெளியாகி
    விட்டது ஒரே நாள் ஒரே நேரம் தன்  இரு விழியையும்
    இழந்தான் குமார் உயிர் போன கூடாக வெறுமை
    யானான்  அவன் தைரியம்  வைராக்கியம் அனைத்தும்
    ஓடியே போனது உடைந்த முருங்கை மரமாக
    அவன் மனம் இப்போது

    {7)
    மடி கொடுக்கும் மனைவியும்  இல்லை
    தோள் கொடுத்து தூக்க மகன் இல்லை
    தூக்கி சாத்த மகள் இல்லை  தான்
    அனாதையா ?இல்லை மகன் வருவானா?
    என்று தெரியாமலே அகதியாக  வாழ்ந்தான் குமார்
    தினம் தினம் அவன் தொலைத்த உயிர்களின்
    ஞாபகத்துடன்    குமாரின் உறவினர் சிலர்
    அவனைப் பாசமாக  பார்த்து  ஆறுதல் கூறி
    துணையாக இருந்தனர் அப்போதுஅவர்கள் எப்படியோ
    சிங்கள வெறியனின் கண்ணில் இருந்து
    தப்பி அருகில் இருக்கும்  தமிழ் நாட்டுக்கு
    ஓடி வந்தனர்  வரும் போது  ஏதேதோ கூறி
    கூடவே அழைத்து வந்தனர்   குமாரையும் வரும் போது
    குமார் உள்ளம் ஏங்கிய ஏக்கத்தைக் கூற
    எவராலும் முடியாது ஓடி ஓடி உழைத்த ஊர்
    கூடி வாழ்ந்த நாடு  உயிரில்  கலந்த மனைவி
    மகளின் உடல் புதைத்த மண் எந்த ஊரோ
    எந்த காடோ இருக்கானா இல்லையா உயிருடன்
    தன் மகன் என்று தெரியாத நிலமை இப்படி
    பல வேதனையுடன் அடி எடுத்து வைத்தான்
    அதற்கும் காரணம் தன் மகனே மகன்
    எப்போதாவது வரும் போது தான்
    உயிருடன் இருக்க வேண்டும் மகன்
    முகம் பார்த்து அவன் கையில் நீர் வாங்கி அருத்திய பின்னரே
    உயிர் பிரிய வேண்டும் ஈழத்தின்
    மண்ணிலே தன் உடல்  புதைக்க வேண்டும்
    தமிழன் நாடு எடுக்க வேண்டும் அதை அவன்
    பார்த்த பின்னரே உயிரை விட வேண்டும்
    என்று  ஒரு  சிந்தனையும் அ வை நடக்கும் என்ற
    நம்பிக்கையிலும்  முள் வேலியை
    விட்டு  வெளியேறினான்  ஆனால் ஆண்டுகள்
    பல கடந்தன தமிழ் நாட்டிலும் அவன் ஒரு
    அகதியாகவே வாழ்ந்தான் மகனும் வர
    வில்லை நாடும் கிடைக்கவில்லை  இறுதி
    மூச்சும் நிறுத்தப் போகின்றான் இன்றும் வரும்
    படகை எதிர் பார்க்கான் மகன் இதிலாவது
    வரமாட்டானா என்று மூன்று இனமும் ஒன்றாக
    வாழ்ந்த நாட்டில் ஒரு மொழிக்காரனின் ஓர
    வஞ்சனையால் எத்தனை நெஞ்சங்கள்  வலில்யின் இன்று
    உண்மை பாசங்களை இழந்து உறவுகளையும்
    இழந்து  பிறந்த மண்ணையும் இழந்து
    விழி  மெது மெதுவாக மூடுகின்றது
    மூச்சும் கொஞ்சம் கொஞ்சமாக அடங்குகின்றது
    ஆனால் அவனின் ஏக்கம் மட்டும் நிலைத்து
    நிற்கின்றது நெஞ்சில் இவன் மூச்சு பறக்கும்
    ஆத்மா சாந்தி அடையாது என்று
    சுத்தி இருந்தவர்களின் குரல் முணுமுணுத்தது
    குமார் மூச்சு  முழுமையாக நின்றது விழி
    பாதியிலே நின்றது தன் மகனுக்காக வழி
    பார்த்த விழி மூடவேயில்லையே
    என்று  ஒரு கூட்டம்  நின்று புலம்புகின்றது.

        முற்றும்

    கவிக்குயில்  ஆர்  எஸ்  கலா

    மலேசியா

    Share
  • கண்ணீர் அஞ்சலி!

    -ஆர். எஸ். கலா

    வானம் மேலே ஆழ்கடல் கீழே
    இரண்டுக்கும் இடையில்
    நடந்தவை என்ன? யாரிடம்
    கேட்பது யார் பதில் உரைப்பது
    விண்ணில் பறந்து மண்ணில்
    எங்கே விழுந்த விமானமே?                             airplane

    ஓர்  ஆண்டு பூர்த்தி அடைந்தும்
    சென்ற உயிரின் உடல்
    கண்டதில்லை எட்டாத தொலைவில்
    தொலைத்து விட்டுக்  கொட்டும்
    அருவியாகக் கண்ணீர் சிந்துகின்றது
    உறவு மறவாமலே!

    பிறப்பின் அடையாளம் உண்டு
    இறப்பின் அடையாளம் எங்கே?
    உயிர் துறந்த  நாள் என்று என
    அறிய நாமும் போவதோ எங்கே?

    இன்முகத்துடன்  கை அசைத்து
    இன்பமாக விடை பெற்றுச் சென்ற
    உடலின் ஒரு அங்கம்
    கூடக் கண்டதில்லை!

    தங்கமே
    செல்லமே என்று கதறியும்
    ஆனது ஒன்றும் இல்லை
    இன்று வரை இது என்ன
    கொடுமை? இறைவா உமக்கு
    இதுவும் ஓர் விளையாட்டா? கூறி
    விடு விடை விரைவாக!

    சுமைதாங்க முடியாமல் வாடித்
    தாகத்தில் நீர் அருந்த ஆழ்
    கடலில் இறக்கி மறைந்தாயோ?
    மேலே மேலே உயரும் இலட்சியத்தில்
    நட்சத்திரத்துடன் போட்டி போட்டு
    மேகத்திலே மோதி மறைந்தாயே
    எம்.எச்.370 விமானமே?!

    உன் உருஅறையை நம்பி ஆயிரம்
    ஆயிரம் கனவுகளுடனும்
    ஆசைகளுடனும் உள்ளே நுழைந்து
    அமர்ந்த உயிர்கள் அனைத்தையும்
    அடையாளம் அறியாதவாறு அழித்தாயே
    உலகில் மனித இனம் வாழும் வரை
    வாழும் உன் நினைவும்!

    முடிவறியா நிலையில்  இன்று வரை
    உள்ளது நிலை இது
    பயணித்து உயிர்நீத்த
    அனைத்து உயிர்களின் ஆத்மா
    சாந்தி அடைய இறைவனை
    வேண்டுவோம்   சாந்தி  சாந்தி!

     

    Share
  • பொல்லாத சமுதாயம் புண்ணானது என் இதயம்!

    ஆர். எஸ். கலா

    ஒட்டிப் பிறந்தோம்
    வெட்டிப் பிரித்து
    ஒன்றாக வளர்ந்தோம்.
    தாய்  தந்தைக்கு இரு
    பிள்ளையென வாழ்ந்தோம்.
    அன்புக் கடலில் ஆழமாக
    புதையுண்டு மகிழ்ந்தோம்.
    குறை இல்லாச் செல்வத்தில்
    புரண்டே வந்தோம், படிப்பில்
    இருவரும் பட்டம் பெற்றோம்.
    அன்புக்கு இலக்கணமாகத்
    திகழ்ந்தோம்; தாயின் பாசத்துக்கும்
    அரவணைப்புக்கும் பணிந்து அடங்கி
    நடந்தோம்; குறை சொல்ல ஏதும் இல்லை
    எங்களைப்  புகழ்ந்து கூற விரும்புவதில்லை.
    பெற்றோர் பிறரிடம் தன் புகழ்ச்சியை
    அவர்கள் விரும்புவதும் இல்லை.
    இருந்தும் எங்களின் நேர்மையான
    உழைப்பு ஊருக்குள் அடையாளம்
    காட்டியது; பல பத்திரிகையிலும்
    வானொலியிலும் முகநூலிலும்
    தொழிலாளர் தினம் அன்று வெளியாகி
    எங்களுக்குப் பெருமையைப் பெற்று
    தந்தது; அனைத்து ஊடகங்களும்
    இதைப் பார்த்த பல தொழில்அதிபரின்
    வீட்டில் இருந்து எங்களை மாப்பிள்ளை
    கேட்டு வர ஆரம்பித்தனர்; அம்மா
    முடிவை எங்களிடமே விட்டு விட்டார்.
    ஆஹா! இது  நமக்குச் சரி வராதுடா
    தம்பி என்றான் அண்ணா;  நாங்கள்
    இருவரும் ஒரு சிறு மாற்றத்துக்காக
    அண்ணா தம்பி என்று அழைப்போம்.
    மற்றபடி இருவரும்  ஒட்டியவர்கள்தானே!
    நானும்  ’ம்ம்’  என்று தலை அசைத்தேன்.
    திடீரென அப்பாவை பார்த்துக் கூறினான்,
    ”அப்பா நீங்களே பாருங்கள் எங்களுக்கு
    அது போதும்!” என்று கூறி என்னை நோக்கினான்.
    நானும்  ”சரி” என்பது போல் தலைஅசைத்தேன்.
    அப்பா வேறு வழி இல்லாமல் தானே  தன்
    மருமகளைத் தேடத் தயார் ஆனார்; அம்மா
    அப்பாவை அவர் இளமைக் கால நினைவைச்
    சொல்லி ஏதோ கேலி செய்தார்;  பல
    நாள் சென்று அப்பா இரு படம் கொடுத்துச்
    சொன்னார், ”இவைதான் நான் பார்த்த
    மருமக்கள்!”  என் பெயர்  ’தீபக்’, அண்ணா
    பெயர் ’திலிப்’;  எங்கள் பெயரைக் கூறி
    அடையாளம் சொன்னார், எந்தப் பெண்
    யாருக்கு என்று; எனது வருங்காலதேவதை
    ஒரு அதிபரின் மகள்; திலிப்பின் தேவதை
    ஒரு தொழில்அதிபரின் மகள்; இருவரும்
    இரு புகைப்படங்களையும் பார்த்துச்
    சம்மதம் தெரிவித்தோம்;  பிறகு என்ன?
    அம்மா சும்மா இருப்பாரா? ஓடி ஓடி
    வேலைகளை ஆரம்பித்தார்;  ஜாதகம்
    பார்ப்பதும் அவை சரியெனக் கூறியதுமே
    பெண் பார்க்கும் படலம்; இப்படி எல்லா
    சடங்கு சம்பிரதாயமும் முடிந்து  தாலி
    கட்டுவதுதான்  இனி வேறு ஒரு தடையுமே
    இல்லை;  சில வாரங்களில் அதுவும் பல
    பெரியோர் மதிப்பு நிறைந்த மனிதர்கள்
    சொந்தம் பந்தம் என்று  திருமண மண்டபமே
    பத்தாத அளவு மக்கள் கூட்டம்! சும்மாவா
    பின்னே? இரு வீட்டுச் சொந்தங்கள் உறவுகள்
    தெரிந்தோர்  ’ம்ம்’  சொல்லவே முடியாத
    அளவு பட்டியல் நீளும்;  மங்கள வாத்தியத்தின்
    ஓசையுடன் இருவருக்கும் இனிதே திருமணம்
    நடந்து முடிந்தது; அமைதியான வாழ்க்கை
    நிறைவான இல்லற இன்பம் என்று வாழ்ந்து
    வந்தோம்;  வேறு வேறு வீட்டுப் பெண்ணாக
    இருந்தாலும் அவர்களும் எங்களுடன் சேர்ந்து
    ஒற்றுமையாகப் பழகியே வந்தனர்; அம்மா
    அப்பா அடையும் மகிழ்ச்சிக்கு எல்லையே
    இல்லை;  ஒரு நாள் சும்மா சுத்திப் பார்க்கச்
    சென்றோம்  நான்கு பேரும்; அன்றுதான்
    எங்கள் பின்னாடியே வந்தான் எமன்!
    ஒரு குடிகாரனின்  லாரி மோதியதில்
    எங்கள் வண்டி விபத்தானது; சில மணி
    நேரம் சென்று நான் கண் திறந்தேன்.
    அருகில் எங்கள் உறவினர் இருந்தார்
    அவரிடம் மற்றவர்களைப் பற்றி வினா
    எழுப்பவே, அவர் சிறு சிறிதாக எனக்கு
    எடுத்து உரைத்தார்; இறுதியில் கூறிய
    வார்த்தை என் தலையில் இடி விழுந்தது
    போல் இருந்தது; ”ஐயோ!” என்று கதறினேன்.
    என்ன பயன்? எமன் அழைத்து விட்டான் என்
    மனைவியையும் சகோதரனையும்! இரு
    உயிர் போய் இரு உயிர் எஞ்சியது; அம்மா
    என்ன ஆனாரோ என்று ஏங்கியவாறு
    ஓடி வந்தேன்; அம்மா உயிர்உள்ள பிணமாக
    இருந்தார் சகோதரன் இறந்த உடல் அருகே.
    அதற்குப் பக்கவாக்கில் என் மனைவி அமைதியாக
    உறங்குகிறாள்; என் கரம் கட்டிய தாலிதான்
    முன் இருக்கு; நான் ஒரு ஆண் என்றதையும்
    மறந்து கதறினேன், துடித்தேன், தவித்தேன்!
    உடன் பிறப்பா? மனைவியா? யார் அருகில்
    இருப்பேன்?  என் சகோதரன்  மனைவிக்கு
    இன்னும் நினைவு திரும்பவில்லை; அவள்
    வந்து கேட்டால் எப்படி பதில் உரைப்பேன்?
    இப்படியே அழுது அழுது ஓடாகத் தேய ஆரம்பித்த
    நான் ஓராண்டு வரை அழுதேன்; அண்ணா
    மனைவியும்  அழுது அழுது ஓய்ந்து போய்
    அவள் உடல் நோய்க்குத் துணையாகப் போனது
    பெற்றோர் வீட்டுக்குச் சென்று விட்டார்; நேரம்
    இருக்கும் போது போய் வருவேன்; அதிகம்
    போவது இல்லை; என்னைக் கண்டால்
    அவர் கணவன் ஞாபகம் வரும்; பாவம்!
    எனப் போவதைக் குறைத்து விட்டேன்; நானும்
    இப்போது கொஞ்சம் கவலையில் இருந்து
    நீங்கி வேலையில் கவனத்தைச் செலுத்திக்
    கொண்டு இருக்கின்றேன்;  இந்த நேரத்தில்
    தான் அம்மா எனக்கு மறுமணம் செய்யத்
    தயாரானார்; இதைஎன்னால் ஏற்றுக் கொள்ள
    இயலவில்லை; என் மனைவி புன்னகையுடன்
    புகைப்படத்தில் என் கட்டில் அருகே இருக்க,
    கட்டிலில் இன்னொருத்தியா மனம் இடம்
    கொடுக்கவில்லை;  அப்போது ஒரு கேள்வியை
    அம்மாவிடம் கேட்டேன்; சகோதரன் மனைவிக்கு
    ஏன் இதைச் செய்ய நீங்கள் நினைக்கவில்லை
    என்று! உடனே அம்மா பொங்கி எழுந்தார்! அவள்
    விதவை, மறு மணமா? அது எப்படி சாத்தியம்?
    வெள்ளை உடையுடன்தானே இருக்க வேண்டும்?
    அது தமிழன் கலாச்சாரம் என்றார்;  ஒரே மேடையில்
    தாலி கட்டியது;  ஒரே நாள் இருவரும் துணையை
    இழந்தது; ஆனால் எனக்கு மட்டும் மறுமணம்,
    அவர் வீட்டுக் கைதி! என்ன ஞாயமடா இந்தப்
    பொல்லாத உலகத்தில்?  நான் மறுத்து விட்டேன்.
    அம்மா பிடிவாதம்  பிடித்தார்; உடனே ஒரு
    ஆலோசனை கூறினேன்; ”நான் மறுமணம்
    செய்வதாயின் ஒரு விதவையைப் பாருங்கள்;
    இல்லை என்றால் எனக்கு வேண்டாம், விடுங்கள்!”
    என்றேன்;  அம்மா ஆடிப்போனார்; பொல்லாத
    சமுதாயத்தின் போலி வாழ்க்கையைப்  பின்
    பற்றும் வரை பெண்ணுக்கு முழுமையாக இல்லை
    எதிலும் சுதந்திரம்! நினைத்தாலே இதயம்
    கனக்கிறது; ஐயோ பாவம் சகோதரன்
    மனைவி!!

     

    Share
  • உழைப்புக்குத் தேவை துடிப்பு!

    -ஆர். எஸ். கலா

    எடுத்த காரியத்தை இறுதிவரை
    தொடர்ந்திட உறுதி பூண்டு விடு
    எதிர்காலத்தில் எதிலும் வெற்றி                       தொழிலாளி
    பெறுவேன் என்று நெஞ்சில்
    நிறுத்திவிடு!

    செய்வன திருந்தச் செய்
    கவலையை விட்டொழி
    காலத்தை வென்று நிரந்தர
    வெற்றியைக் கண்டிடு!

    முன்னேற்றத்தையே விரும்பு
    முறையுடன் அதை நிறைவேற்றிடு
    கல்விக் கண்ணோடு பெரியோர்
    சொல்லையும் கேட்டிடு, ஒளி
    விளக்காய்ச் சுடர்விடு நின்று!

    சோம்பேறியாகாதே
    துவண்டு விடாதே
    எதிர்காலக் கனவை
    கலைய விடாதே தொலை
    நோக்கி போல்  துல்லியமாகக்
    கணித்திடு உன் வெற்றியை
    புத்தியின் துணையோடு!

    உழைப்பில் முன்னேறு
    உழைப்பை முழுமையாக நம்பு
    உடல் வருத்தி உழைத்திடு
    உனக்குள் இருக்கும் திறமையை
    மடமை என்னும் திரையால்
    மூடாதே!

    உன் தொழிலை நம்பு
    அதையே நேர்வழியில்
    தொடங்கு, வரும் வருவாயை
    விரையம் செய்யாதே
    கறைபடிவது  கையானாலும்
    சிறைவாசம் செல்லாத்
    தொழிலைத் தேர்ந்தெடு!

    மேலே மேலே உயர்ந்திடு
    குணத்திலும் தொழிலிலும்
    தினமும் மேலோங்கும்
    சிந்தனையை வளர்த்திடு!

    சிகரம் தொட்டிடு சிறப்பாக
    வாழ்ந்திடு  தட்டிப் பறிக்காதே
    பிறரிடம்
    விட்டுக் கொடுக்காதே
    உன் நியாயமான கோரிக்கையை!
    கேளிக்கை வாழ்வை ஒதுக்கிடு
    வாழி வாழி என்று வாழ்ந்திடு
    உன் துடிப்பான உழைப்பைக்
    கொண்டு!

    பெற்றோர் போற்ற மற்றோர்
    வாழ்த்த உலகில் உன் புகழ்
    பறக்கட்டும், நீ சிந்திய வியர்வைத்
    துளிகளும் புகழாக மணம் பரப்பட்டும்
    உண்மையான உன்னதமான
    உழைப்பையே நம்பித் துடிப்போடு
    நீயும் இறங்கு!

     

    Share
  • சிந்தனையில் சிகரம் தொடு!

    -ஆர். எஸ். கலா

    மண்ணில் போட்ட விதை
    அத்தனையும் முளை
    விடுவதில்லை

    முளையிட்ட விதை அத்தனையும்                   fruit tree
    பிழைப்பதும் இல்லை

    முளைத்த விதை அத்தனையும்
    விரிச்சமாவதும் இல்லை

    விரிச்சமான விதை அத்தனையும்
    பூத்துக் குலுங்கி காய்ப்பதுமில்லை

    காய்த்த  காய் அத்தனையும்
    கனியாவதும் இல்லை

    கனிந்த காய் அத்தனையும்
    புசிக்க உதவுவதும் இல்லை

    சுவைத்த கனியில் இருந்து
    கிடைத்த விதை அத்தனையும்
    மீன்டும் மண்ணில் புதைவதும்
    இல்லை

    குளம் குட்டை குப்பையில்
    பாதி, மீதி பாதையில் மிதி
    பட்டு உடைந்து வீணாகவே
    போகின்றது

    இச் சிறு விதையிலே
    இத்தனை ஏமாற்றங்கள்
    என்றால்…

    மனிதன் தன் வாழ்க்கையைக்
    கடக்கும்  ஒவ்வொரு நொடிப்
    பொழுதும்  எத்தனை ஏமாற்றங்களை
    அவன்  பார்க்க வேண்டி இருக்கும்

    அந்த ஏமாற்றமே அவனின்
    ஏற்றமான படி என்று துணிந்தால்
    விரைந்து விழும் வெற்றிக் கனி
    அவன் கையில்

    கல்லிலும் முளையிடும் விதை உண்டு
    மண்ணிலும் மடிந்து விடும்
    விதை உண்டு

    துணிந்து வெற்றி காணும் மனிதனும்
    உண்டு சோர்ந்து தோல்வி காணும்
    மனிதனும் உண்டு

    சிறு விதையில் விரிச்சம்  காணும்
    விதை போல் சிறந்த சிந்தனையில்
    வெற்றி காண முயற்சிசெய் மானிடனே!

     

    Share
  • காதல் இனிது!

    -ஆர். எஸ். கலா

    இரு கண் நோக்கியதும் ஒரு ஈர்ப்பு
    இரு இதயம் இடம் மாறியதும் ஒருவித வியர்ப்பு
    இரு மனமும் இணைந்ததும் ஒருவிதத் தவிப்பு
    இரு வீட்டாரும் சம்மதித்ததும் ஒரே குதூகலிப்பு!

    இருகரம் இணைந்ததும் இல்லறம்
    இரு உடல் இணைந்ததும் இன்பம்
    இரு உயிர்களும் ஓர் உயிரானதும்
    விருப்பு வெறுப்பு சமபங்கு!

    காதல் என்னும் நாடகம் அரங்கேற்றம்
    கண்டது கணவன் மனைவியாக மேடையிலே
    தனிமையில் நோக்கிய கண்கள் இரண்டும்
    கைகோத்தது உறவினர் முன்னிலையிலே!

    முக்கனியும் செங்கரும்பும் என்ன இனிமை
    இக்குடும்பத்தில்  இனியது இனியது காதல் அல்லோ
    இவர்கள் இருக்கும் இடத்தில் பொழிந்து
    விடும் காதல் மழை அல்லோ!

    கனியான காதல் இனிப்பாகும்
    கலையாத கனவாய்  நிலையாகும்
    கணவன் கண்ணுக்கு நிலவாக மனைவியும்
    மனைவி நெஞ்சத்தில் சிலையாகக் கணவனும்
    காதல் காவியம் படிக்கலாம் இல்லறத்தில்
    படிப்படியாக!

    நம்பிக்கை என்னும் செடியில்
    பூக்கும் காதல் மலர் கொடுக்கும்
    இனிய காதல் கனியை இறுதி மூச்சை
    நிறுத்தி இறைவன் யாராயினும்
    இருவரில் ஒருவரை  அழைக்கும் வரை!

     

    Share
  • அவள் அப்படித்தான்

    ஆர்.எஸ் கலா.

    IMG_148177015739141

    வாணி… கோடீஸ்வரன் வீட்டுப் பிள்ளை
    கூடி விளையாடுவதோ ஏழை வீட்டு பசங்களுடன்
    அதட்டிப் பார்த்தார் தந்தை பரமசிவம்
    அடித்துப்பார்த்தாள் தாய் பாக்கியம்
    தன் மகள் மாறவில்லை பிடிவாதம்
    கொண்ட சிறுமி அவள்.

    சரி விட்டு விடுவோம் வளர்ந்ததும் ஏழை பணம்
    என்ற வேற்றுமை அறிந்து நிறுத்தி விடுவாள்
    என்று முடிவு செய்த பெற்றோர் மௌனம்
    காத்தனர். ஆனால் வாணி மாற வில்லை.
    அவள் வளர்வது போல் அவள் பரிவும்
    பாசமும் ஏழைகள் மேல் வளர்ந்தே வந்தன.

    பகட்டு வாழ்வை வெறுத்தாள்
    நாகரீக உடையை நிராகரித்தாள்
    சமுதாய சிந்தனையில் தினமும் முழ்கிப் போனாள்
    நாகரீக உச்சியில் நின்று ஆடும்
    பெற்றோருக்கு ஏமாற்றம் அதிகம்தான்
    மிஞ்சியது.

    பல தரப்பட்ட பட்டப் படிப்புக்களைப்
    படிக்கச் சொல்லி அவர்கள் கேட்டுக் கொண்டும்
    வாணி அதை ஏற்றுக் கொள்ளாது தமிழ்
    ஆசிரியராக வர வேண்டும் என்னும் இலட்சியத்தில்
    படித்து இறுதி ஆண்டு பரீட்சையும் எழுதி விட்டாள்
    தற்போது வீட்டிலேயே இருந்தாள் பரீட்சை
    முடிவு வரும் வரை.

    பெற்றோர் ஏதேதோ நாட்டின்
    பெயர்களை கூறி அழைத்தனர்
    அழகை ரசிக்க வரும் படி அதை எல்லாம்
    மறுத்து விட்டு தன் தோழியுடன் பேசி
    ஒரு முடிவுக்கு வந்தாள். தான் வீட்டில்
    இருக்கும் வரை அந்த நாளை ஒரு
    நல்ல முறையில் கழிக்க விரும்பிய வாணி
    தன் தோழி ராணியிடம் கேட்டாள்.

    நீயும் நானும் மண்டபம் சென்று அங்கே உள்ள
    இலங்கை அகதிகளின் மழலைகளுக்கு
    பாடம் கற்றுக் கொடுப்போமா தங்கும்
    விடுதியில் தங்கி, செலவுகள் அத்தனையும்
    என்னுடையது என்றாள். ராணி ஏழை வீட்டுப்பிள்ளை
    ஆனால் அறிவாளி அவளும் ஒப்புக்
    கொண்டாள்.

    இருவரும் புறப்பட்டனர் வாணியின்
    பெற்றோர் பாரட்ட மனம் இன்றி முறைத்தனர்
    கண்டு கொள்ள வில்லை சென்று விட்டாள் வாணி
    மண்டபத்தை அடைந்ததும் அங்கே உள்ள அகதிகளின்
    பார்வை பல கேள்விகளை எழுப்பியது அவர்கள்
    இருவரும் தங்களை அறிமுகம் செய்ததும் சில
    பெற்றோர் கண்ணீர் சிந்திய படியே நன்றி கூறினர்.

    தங்கள் பிள்ளைகளும் நாலு எழுத்து கற்றுக்
    கொள்ளப்போவதை எண்ணி.
    ராணி வாணி இருவரின் இதயமும் கனத்தன
    அன்று முதல் ஆசிரியர்களானார்கள்
    அகதி மழலைகளுக்கு கண் மூடி திறப்பதுக்குள்
    மூன்று மாதம் ஓடி மறையவே விடை பெற வேண்டிய
    கட்டாயம் .

    மழலைகளின் அன்பில் நனைந்த அவர்களின்
    கண்களும் கலங்கின அகதிகளின் அன்பையும்
    கண்டு பெருமிதம் கொண்ட வண்ணம் வீட்டை
    வந்து அடைந்தார்கள். வீட்டில் பல உறவுகள்
    இருப்பதைப் பார்த்து முகம் மலர்ந்தாள்
    அவர்கள் ஆங்கில மொழியில் நலம்
    விசாரித்தனர் வாணி அழகாய் தமிழ்
    மொழியில் வணக்கம் நான் நலம் என்றாள்.

    உறவுகளின் முகம் சற்று மாறியது வாணியின்
    பெற்றோர் சமாதானம் செய்தனர் அவள் அப்படித்தான்
    தமிழ் பற்று அதிகம் என்றனர் இவைகளை கண்டு
    கொள்ளாமலே தன் அறையின் உள்ளே நுழைந்த
    வாணி தன் மடி கணினியைத் தட்டுகிறாள்
    அரசு பாடசாலைக்கு தமிழ் ஆசிரியர் விண்ணப்பம்
    கொடுக்க தயாரானாள், அவள் மாறமாட்டாள்
    அவள் அப்படித்தான் வாழ்க்கை எல்லை வரை
    இருப்பாள் இது உறுதி…!

    கவிக்குயில் ஆர் எஸ் கலா
    மலேசியா

    Share
  • ஏங்கும் ஏந்திழை!

    -ஆர். எஸ். கலா

    காதல் இது காதல் இது
    கன்னி கொண்ட காதல் இது!
    காத்திருக்கச் சொல்லி விட்டு
    போன மன்னன் எங்கே?

    தூது சென்ற வெண் புறாவும்                          enthizhai
    துணையோடு வந்து நிற்க
    தூது விட்ட பெண் மனமோ
    ஏக்கம் கொண்டது இங்கே!

    கதவையும் திறந்து வைத்து
    கன்னி மனசையும் திறந்து
    வைத்தேன்!

    பொன்னின் செல்வன்
    போனது எங்கோ
    பொன்னான உன் பாதம்
    படுவது எப்போ?

    பாச வலை விரித்து
    என்னைப் பிடித்தவரே
    பாசாங்கான பாசம்
    காட்டி என்னைப் பதற
    விட்டவரே!

    நான்கு பக்கமும் சுவர்
    அடைப்பு நடுவிலே நான்
    அமர்ந்திருக்க
    நாலு பக்கமும் சுத்துதையா
    என் மூச்சுக்காற்று உன்
    பேச்சைத் தேடி!

    மஞ்சள் வெயிலும்
    மாலையாகிப் போனதையா
    மஞ்சள் முகமும் வாட்டம்
    காட்டுதையா!

    நீதான்  தஞ்சம் என்று
    என் நெஞ்சில் உன்
    நினைவை விதைத்தேன்
    நீதான் என் உலகம்
    என்று கனவில் மிதந்தேன்!

    போகாதே  போகாதே என்
    உள்ளத்தைக் கொல்லாதே
    உணர்வை  வதைக்காதே
    போதும்  போதும்  உன்
    விளையாட்டு என் எதிரே
    வந்து நில்லு என் உயிரே!

     படத்துக்கு நன்றி: fineartamerica.com

    Share
  • லிமரைக்கூ கவிதைகள்!

    -ஆர். எஸ். கலா

    கை  நிறையப் பணம்
    கடந்த கால வாழ்வை  மறந்து                       rose
    விட்டது அவன் மனம்!

    நாட்டாமை வயிறு தொந்தி
    அவர் பயணம் செய்வதோ இரட்டை
    குதிரை பூட்டிய வண்டி!

    மனைவி தயங்கியே கடையில்
    கடன் கேட்கிறாள் கணவனோ மதுவில்
    மயங்கியபடி  பாதையில்!

    முட்களின் நடுவில் ரோஜா
    அதைக் கரம்கொண்டு பறித்துக்
    கொடுத்தார் ராணிக்கு ராஜா!

     

    Share
  • புலிவால் பிடித்தோமடா

    ஆர்.எஸ். கலா

    unnamed

    வெளி நாட்டு வாழ்க்கை
    விவகாரம் நிறைந்ததடா….

    விட்டெறியும் காசை
    நோக்கி செல்லும்
    போது விட்டுச் செல்வது
    உறவை மட்டும் இல்லையடா….

    உணர்வு உணர்ச்சி ஆசை
    அதனுடன் சேர்த்து நாம்
    நம் நாடு உயிருடன்
    திரும்புவோம் என்ற நம்பிக்கை
    இத்தனையும் விட்டுச்சென்றால்
    கிடைப்பது வெளிநாட்டு
    வாழ்க்கை………

    வாழ்க்கை அது என்ன வாழ்கையடா
    வாய்திறந்து விவாதிக்க முடியாத
    ஓட்டமடா…….

    உட்கார முடியாத உழைப்படா
    உறவுக்கு மடல் போட முடியாத
    பணிச்சுமையடா……

    விட்ட காசை எடுக்க வேண்டும்
    என்ற வேகமடா அடகு வைத்த
    பத்திரம் மீட்ட வேண்டும் என்ற
    இலட்சியமடா……

    கட்டிய மனைவியைக் கனவில்
    கட்டி அணைத்து பாசமான
    மகளுக்கு நினைவில் முத்தம்
    கொடுத்து காச்சி மூச்சி என்று
    கத்தும் சத்தங்களுடன் கண்
    மூடி தூங்கும் நிலைமையடா….

    இளமை ஆசைகளை பலியாக்கி
    இளமையை இரையாக்கி
    இன்பத்தைக் கொலை செய்து
    துன்பத்தில் துவண்டு எடுப்பது
    தான் வெளிநாட்டுப் பணமடா……

    விபத்து என்று ஒன்று நடந்து
    இறப்பை நோக்கினால் இறுதிக்
    கடமையும் நமக்கு சரிவரக் கிடைப்பது
    இல்லையடா…..

    தொட்டு உடலை துடைக்க
    உறவுகள் பக்கம் இல்லையடா
    கொட்டி விடுவான் அரபி ஏதோ
    ஒரு திரவியத்தை மூடி விடுவான்
    பெட்டியை…….

    போட்டு விடுவான் பெட்டியை
    பொதியோடு பொதியாக மாதங்கள்
    பல கடந்து நாடு வந்து சேரும் உடலடா…..

    உடல் அடக்கம் இன்றி கடைமைக்
    காரியங்களும் கைவிடப்பட்டு
    உறவுகள் கவலையில் இருந்து
    விடுபட்ட பின்னே நம் உடல்
    கிடைப்பது திண்ணமடா….

    மனைவி மக்கள் புகைப்படம்
    பார்க்க ஆசை என்று அனுப்புங்கள்
    என்று கூறவும் தைரியம் இல்லையடா
    பாவிகள் சிலர் கையில் சிக்கினால்
    என் மனைவி மானம் புகையாக
    போகுமடா……

    ஊரார் கண்ணுக்கு தெரிவது
    எங்கள் ஊதியம்
    ஓட்டு வீடு கிடைத்தமையால்
    உறவுக்கு குதூகலம்
    உண்மை நிலவரத்தை மறைத்து
    உள்ளுக்குள் அழுது உடலை
    வருத்தியே வாழ்வது எங்கள்
    வெளி நாட்டு வாழ்க்கையடா…..

    திணார் டாலர் ரியால்
    கொடுக்கும் வலி கொஞ்சம்
    இல்லையடா சொல்லவே வார்த்தை
    நிறையவே உள்ளதடா அதுக்கு
    எல்லையே இல்லையடா…….

    கவிக்குயில் ஆர் எஸ் கலா
    இலங்கை தளவாய்

    Share