கண்ணீர் அஞ்சலி!
-ஆர். எஸ். கலா
வானம் மேலே ஆழ்கடல் கீழே
இரண்டுக்கும் இடையில்
நடந்தவை என்ன? யாரிடம்
கேட்பது யார் பதில் உரைப்பது
விண்ணில் பறந்து மண்ணில்
எங்கே விழுந்த விமானமே?
ஓர் ஆண்டு பூர்த்தி அடைந்தும்
சென்ற உயிரின் உடல்
கண்டதில்லை எட்டாத தொலைவில்
தொலைத்து விட்டுக் கொட்டும்
அருவியாகக் கண்ணீர் சிந்துகின்றது
உறவு மறவாமலே!
பிறப்பின் அடையாளம் உண்டு
இறப்பின் அடையாளம் எங்கே?
உயிர் துறந்த நாள் என்று என
அறிய நாமும் போவதோ எங்கே?
இன்முகத்துடன் கை அசைத்து
இன்பமாக விடை பெற்றுச் சென்ற
உடலின் ஒரு அங்கம்
கூடக் கண்டதில்லை!
தங்கமே
செல்லமே என்று கதறியும்
ஆனது ஒன்றும் இல்லை
இன்று வரை இது என்ன
கொடுமை? இறைவா உமக்கு
இதுவும் ஓர் விளையாட்டா? கூறி
விடு விடை விரைவாக!
சுமைதாங்க முடியாமல் வாடித்
தாகத்தில் நீர் அருந்த ஆழ்
கடலில் இறக்கி மறைந்தாயோ?
மேலே மேலே உயரும் இலட்சியத்தில்
நட்சத்திரத்துடன் போட்டி போட்டு
மேகத்திலே மோதி மறைந்தாயே
எம்.எச்.370 விமானமே?!
உன் உருஅறையை நம்பி ஆயிரம்
ஆயிரம் கனவுகளுடனும்
ஆசைகளுடனும் உள்ளே நுழைந்து
அமர்ந்த உயிர்கள் அனைத்தையும்
அடையாளம் அறியாதவாறு அழித்தாயே
உலகில் மனித இனம் வாழும் வரை
வாழும் உன் நினைவும்!
முடிவறியா நிலையில் இன்று வரை
உள்ளது நிலை இது
பயணித்து உயிர்நீத்த
அனைத்து உயிர்களின் ஆத்மா
சாந்தி அடைய இறைவனை
வேண்டுவோம் சாந்தி சாந்தி!