இலக்கியம்கவிதைகள்பொது

கருவின் வலி!

-மெய்யன் நடராஜ்

உன் அந்தரங்கங்கள்
வெளிச்சத்துக்கு வந்துவிடுமென்று
வெளிச்சத்துக்கு வரவேண்டிய
என்னை அந்தரங்கமாகவே
அழித்துப் போட்டவளே…

பருவத்தின் பசி தீர்த்த உனது
பாவத்தின் சம்பளமாக என்னைக்
கைகளில் வாங்காமல்
கருவறைக்குள்ளேயே
கல்லறைக்குள் தள்ளி விட்டது
என்ன நியாயம்?

விதைத்தவர்கள் எல்லாம்
அறுவடைக்குக் காத்திருக்க
எவனோ விதைக்க
நிலமான நீ
என்னை அறுவடையாக்க
அருவருப்பு அடைந்தவளே!
நீ களங்கப் பட்டதால்
உன்னால் கருவறையின் புனிதமும்
களங்கப்படுத்தப் பட்டதை
அறியாயா நீ?

யாரோ எழுதிய கவிதை என்று
எவரும் வாசிக்காமல்
போகக் கூடுமென்றும்
நீ எழுதிய கவிதையை
நீயே அழித்துவிட்டு
நிம்மதி கொண்டவளே…

உனக்குத் தெரியுமா
நீ அழித்தது ஒரு
மகாத்மாவோ இல்லை
புத்தனோ காந்தியோ
அன்னை தெரேசாவோ
என்ற உண்மை?

விதைத்தது எல்லாம்
முளைக்க ஆசைவைக்கும்
விவசாயிகள் கொண்ட பூமியில்
உன் குடிசை விவசாயத்தில்
முளைக்கும் முன்பே என்னைக்
கருவறுத்தவளே…

வெளிச்சத்தின் விலாசம்
நான் காணும் முன்னால்
இருட்டின் இருப்பிடத்தைப்
பரிசளித்துக் குளிர்ந்தாய் நீ…!

குஞ்சு பொரிக்கத் தெரியாத போதும்
காக்கையின் கூட்டில்
முட்டையிட்டு ஒதுங்கிக் கொள்ளும்
குயிலின் மனசுகூட
உனக்கிலாத போது
நீ மானிடமாய்ப் பிறந்தது
மாபெரும் பாவம்!

கர்ப்பத்துக்கே
கொள்ளி வைக்கும்
உன் காதகத்தனத்தால்
என் கனவுகள்
சிதைக்கப்பட்ட போதும்
கனவுகளே இல்லாதிருக்கும்
என் தம்பி தங்கைகளை
உன் இச்சைகளால்
செதுக்கி நீ சிதைக்காதே!

கருச்சிதைவின் போது
உனது வலி ஒரு நேரம்தான்
உருச் சிதைந்த எனது
உயிரின் வலியோ
ஒவ்வொரு ஜென்மத்துக்கும்!
உன் உருவிற்கு
உருகும் மனமில்லாதபோது
நீ சுமந்த
கருவிற்கு அது ரொம்பத் தாராளம்!

அதனால்
மறவாதே நீ…
விதைப்புகள் சிதைப்புகளுக்கல்ல
விதைபுகழ் சிதைபுகழும் அல்ல!
அது வேர்களைத் தாங்கும்
நிலங்களின் தார்மீகம்!

 

Print Friendly, PDF & Email
Download PDF
Share

Comment here