விழித்தெழு பெண்ணே!

-ஆர். எஸ். கலா

பெண்ணே நீ  விழித்தெழு
இருளைக் கிழித்தெழு
அறியாமையைத் தகர்த்தெழு
அறிவியலை இழுத்தெழு
அருவியாகக் கண்ணீர்
சிந்துவதை நிறுத்தியெழு
அடிமைத்தனத்தை உடைத்தெழு!

அன்புக்கு அடி பணிந்து
வம்புக்கு அடிகொடுத்து
நிமிர்ந்து நில்!
தலைக்கனத்தை கைவிட்டு
நம்பிக்கையை கையில் எடுத்து
உயர்ந்த இடத்தில் நிலைத்து நில்!

அதட்டல் மிரட்டல் உருட்டல் எல்லாம்
புரட்டிப் போட்டுப்  படிப்படியாக
உயர்ந்து நில்  படிப்பில்!

ஏற்ற தாழ்வுகளையும் முரண்பாடுகளையும்
மடக்கிக்  கசக்கிச் சுருட்டிப் போட்டு
மகளிராலும் முடியும் என்று
நிரூபித்துவிடு நல்ல செயலில்!

தன்னடக்கம் நாவடக்கம் இவைகளைத்
துணையாக எடு நன்மைக்கு!
மனையாள மட்டுமே மனையாள்
என்ற தவறான கறையைக்
கரம்பிடித்தவன் நெஞ்சில் இருந்து
துடைத்துத் தூக்கிப்போடு!

அன்பாலும் ஆதரவாலும் எடுத்துக் கூறி
வளைத்துப்பிடி உன் பிடியில் கணவனை!

புன்னகையில் பெண் ஒரு மலர்
தென்றலாகும் போது ஒரு மங்கை
கொண்டலாகத் தடவும்போது அவள்
ஒரு நல்ல துணைவி!
பொறுமை இழந்தால்
புயலாக மாறும் கண்ணகி!
உணரவை ஆண்ஆதிக்கம் கொண்ட
சிலருக்கு!

ஆணும் பெண்ணும் ஓர் உயிரே
பிறப்பும் இறப்பும் ஒன்றே
என்று புரியவை
ஆனால் ஆணவத்தில்
ஆட்டம் போடாதே பெண்ணே
அவைதனை நிறுத்தி விடு
பாரதி கண்ட கனவு கலையாமல்
சிலையாகாமல் உயிர்த்தெழ வேண்டும்
நீ பாரதிப் பெண்ணாக விழித்தெழு
பெண்ணே!

 

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *