நான் அறிந்த சிலம்பு – 159

-மலர் சபா

மதுரைக் காண்டம் – 04: ஊர் காண் காதை

பொன் கடைத்தெரு

சாதரூபம், கிளிச்சிறை, ஆடகம், சாம்பூநதம் எனும்
புகழ்பெற்ற நான்குவகைப் பொன்னின்
வேற்றுமைகளைப் பகுத்தறியும் பொன்வணிகர்   gold shop
பொன்னை வாங்க வருவோர்க்கு
‘எது எது எங்கு எங்கு இருக்கிறது’ என்று
குழப்பம் ஏற்படாமல் இருக்க,
‘இது இது இங்கு இருக்கிறது’ என்று அறிவிக்கும்படி,
கொடிகள் நாட்டப்பெற்றிருந்த
பொன் கடை வீதிகள் இருந்தன.

அறுவை வீதி

நுண்ணிய பருத்தி நூலாலும்
எலி மயிராலும்
பட்டு நூலாலும்
அழகுதோன்ற நெய்யப்பட்டு
பலப்பல நூறுகளாக அடுக்கிவைக்கப்பட்ட
அழகிய மணம் கொண்ட புடவைகள்
நெருக்கமாக வைக்கப்பட்டிருந்த
கடைத்தெருவும் இருந்தது.

கூல வீதி

நிறுத்து அளக்கும் துலாக்கோலும்
முகந்து அளக்கும் பறை, மரக்கால்
ஆகியவற்றைக் கையில் கொண்டு,
தரகு வேலை செய்பவர்கள்
அங்கும் இங்குமாகத் திரிந்து கொண்டிருந்தனர்.
அங்கே
இந்தக் காலம் அந்தக் காலம் என்று
காலம் கருதாமல்
எக்காலத்திலும் கிடைக்கும்
கரிய மிளகுப் பொதிகளுடன்
பிற தானியங்களும் கலந்து
விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த
கூல வீதியும் இருந்தது.

பற்பல வீதிகளையும் கண்டு, கோவலன் புறஞ்சேரிக்கு மீளுதல்

மேற்கூறிய வீதிகளுள்
அரசர், அந்தணர், வணிகர், வேளாளர்
ஆகியோர் இருக்கும்
நால்வகைத் தெருக்களிலும்
முச்சந்தியும் நாற்சந்தியும்
கோயில் கடைத்தெருவும் மன்றங்களும்
பல தெருக்குகள் கூடும் முடுக்குகளும்
குறுந்தெருக்களும் எல்லாம்
கோவலன் உலாவித் திரிந்து,
வானில் சூரியனின் வெம்மை மிகுந்தபோதும்
அதன் கதிர்கள் உட்புகாவண்ணம்
பசுமையான கொடிகள் படர்ந்த
பந்தலின் கீழ் நிழலில் நடந்து,
பாண்டி மன்னனின் பெரிய தலைநகரைக்
கண்டு மகிழ்ந்தான்.
பின் கொடிகள் இருந்த மதிலைக் கடந்து
கவுந்தியடிகளும், கண்ணகியும் இருந்த
இடத்தை அடைந்தான்.

ஊர் காண் காதை முற்றியது; அடுத்து வருவது அடைக்கலக் காதை

அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 201 – 218

http://ilakkiyam.com/sangailakkiyam/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1134-oorkankathai–

படத்துக்கு நன்றி: கூகுள்

 

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க