மர(ண) வாக்குமூலம்!
-நிரஞ்சன் பாரதி
இன்னும் சில
நொடிகளில் எனக்கு
மரணம் நிகழப் போகிறது!
நீ தானே கொல்கிறாய்
பரவாயில்லை…
நான் ’மர’த்துப் போனவன் தான்;
ஆயினும் எனக்கு உணர்ச்சிகளுண்டு!
கூட்டுக்குடும்ப முறையை
நீ நம்பாமல் இருக்கலாம்
நான் நம்புகிறேன்!
என்னிடம் இருக்கும்
குடும்பங்கள் யாவும்
’கூட்டு’க் குடும்பங்களே!!
’பச்சை’யாக இருப்பதால்
தண்டனையா எனக்கு?
பச்சை என்றால்
’பசுமை’ என்றும் பொருள்!
தமிழ் படிக்கவில்லையா நீ?
பசியாறக் கனிகள் தருகிறேன்
இளைப்பாற நிழல் தருகிறேன்
சுவாசிக்கக் காற்று தருகிறேன்
வாசிக்கக் காகிதம் தருகிறேன்
இருப்பினும் எனக்கு
அறுவை சிகிச்சை செய்து
உன் வீட்டில்
அறைகலன் ஆக்கினாய்!
வீட்டுக்கொரு மரம்
வளர்ப்போம் என்பதைத்
தவறாகப் புரிந்து கொண்டாயே!!
’நூறு கைகள் இருந்தும் என்ன பயன்?
பற்பல கால்கள் இருந்தும் என்ன பயன்?
நெடிய உடல் இருந்தும் என்ன பயன்?
உனக்கு ஓரறிவு
எனக்கு ஆறறிவு
ஆறிலே ஒன்று
கழியாதா’ என்கிறாய்!
உண்மை தான்…
உன்னை விட
நான் ஐந்து அறிவுகள்
பின்தங்கியிருக்கிறேன்!
ஆனால்
நீ வெட்டினாலும் நான் வீழ மாட்டேன்
நீ வீழ்ந்தபின்
மரணப் படுக்கையில்
நானன்றோ உனக்குப்
படுக்கை ஆவேன்!
உன்னுடன் சேர்ந்து
நானுமன்றோ எரிந்து போவேன்!