Author: வேதா இலங்காதிலகம்

  • டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் (15-10-1931 – 27-7-2015)

    -பா வானதி வேதா. இலங்காதிலகம்

    இந்திய ஏவுகணை நாயகன், தமிழ்
    இலக்கிய ஆர்வலன், பன்முக விஞ்ஞானி
    இந்தியா வல்லரசாகக் கனவு கண்டார்                  kalam
    இராமேஸ்வரத்தில் உதித்த முத்து கலாம்
    இந்திய அறிவியல் நட்சத்திரம், வீணையும்
    இசைக்கும் இசை ஆர்வலர் மரணமற்றவர்
    மகத்துவர், மக்களின் ஜனாதிபதியானவருடல் மறைந்தது
    மனிதருள் மாணிக்கத்திற்கு ஆத்ம அஞ்சலி!

    பத்மபூஷன், பாரதரத்னா, ஆர்யபட்டா இன்னும்
    பத்விபூஷன் என்று எண்ணற்ற விருதாளர்
    படகுச் சொந்தக்காரர் மரைக்காயர் தந்தையார்
    ஜைனுலாப்தீன் – ஆஷியம்மாவின் திருப்புதல்வன்
    சைவ உணவுக்கார இசுலாமியர், உலகமறை
    திருக்குறளின் அடியொற்றி நடந்த பிரம்மச்சாரி
    திருவே அறிவென உலகோரை ஊக்கியவர்
    நெருப்பின் சிறகுகளிவர் ஆங்கிலச் சுயசரிதை!

    மாமேதை, கனவுகள் காணுங்களென்று நினைவாகினார்
    மார்க்கம் காட்டி இளையோர் சிந்தனைகள்
    தீர்க்கமாக, மாணவர் குழாமுடன் கலந்தவர்
    பார் போற்றும் விஞ்ஞானி கவிஞருமாவார்
    நாட்டுக்காகத் தனையீந்த நற் சிந்தனையாளர்
    அறிவியல் தொழில் நுட்பத்தை நல்ல
    நெறியோடு காதலித்த இந்தியத் துருவநட்சத்திரம்
    அறிவால் அறிமுகம் அறிவுறுத்திய அறிஞன்!

    சாந்தி!  சாந்தி!

     

    Share
  • தமிழ் மையை நிரப்பு

    amay

    ஆதித் தொன்மையாம் குமரிக் கண்டம்
    ஆஸ்திரேலியா, சாலித்தீவு, தென்னாபிரிக்கா இணைவாம்
    ஏக மனதாராய்ச்சி தேவநேயப்பாவாணரோடு பலரால்.
    ஊகமல்ல பதினான்கு  மாநிலங்களான பிரிவாம்
    ஏழு தெங்கு நாடு என்றும்
    ஏழு பனை நாடெனப் பிரிவுகளாம்!
    தமிழன், தமிழ்மொழி பிறப்பிடம் குமரிக்கண்டம்
    தக்கசான்றுகள் பினீசியர்கள் கல்வெட்டுகள் நாணயங்கள்.
    உன்னத இலக்கியம் இரண்டாயிரமாண்டுகளிற்கு மேலானது
    கன்னலாம் நீண்ட இலக்கண மரபுடையது.
    இன்பத் தமிழேயித்தனை பழமைத் திமிரே!
    என்னைக் கவலைகள் தின்னத் தகாதென
    துன்ப அகராதி துடைத்தழிக்கும் அமிழ்தே!
    என்னுயிர்ச் சொத்தாமுலகின் பதினெட்டாம் நிலையே!
    உன்னையின்னும் மக்கள் இழுத்து அணைக்கட்டும்!
    சின்ன எழுதுகோலில் தமிழ்மையை நிரப்பட்டும்!
    மொழி எம் வாழ்க்கையின் வழி!
    ஆழி! உள்ளாழ்ந்து முத்துக் குளி!
    தோழியாய்த் தோளணைத்து மழையாய்ப் பொழி!
    ஊழிக்காலம் வரை காத்திட விழி!
    அறிவானது பனையோலை வாய்மொழியான பாதுகாப்பு!.
    செறிமைச் சூரியன்! இன்ப நீரோடை!
    வறியவனாக்காத மொழிப் பயிர் மேடை!
    தறியெனும் எழுதுகோலால் நூல் நெய்வோம்!
    பா ஆக்கம்
    பா வானதி வேதா. இலங்காதிலகம்.
    டென்மார்க்
    21-6-2015.
    Share
  • இணையத் தமிழே இனி…

    -பா வானதி வேதா. இலங்காதிலகம்

    சுணையற்று உறைந்தவர் மணை விட்டெழுகிறார்!
    அணைகிறார் தமிழ் ஆய்வு செய்கிறார்!
    புணையாக்கி இணையத் தமிழுள் நீந்துகிறார்!
    இணைந்து ஆர்வமாய்ப் பின்னுகிறார்! விதைக்கிறார்!
    இணையற்ற ஏணியிது தமிழ் வானிற்குப்
    பணையுடைப் பாட்டரும் காணாத சுரபி           surfing-the-internet
    பிணையும் எழுத்துப் பிழைகள் பாசி
    கணைச் சூடாகாது வெல்லல் வாசி

    தூசி நிறை இதயக்கமலத்தைப் பலர்
    பாசி படர்ந்த கிணறாக ஆக்குகிறார்
    ஆசியுடைத் தமிழடிகள் ஒளி ஈர்த்து
    வாசிக்கிறாராதித் தமிழ்ச் சங்க நூல்களை
    பூசித்துக் கூடித் தமிழ் எழுதுகிறார்
    கூசித் தம் மொழிக்கு உயிரூட்டுகிறார்
    நேசித்துப் புனிதமாய் இலக்கணம் படிக்கிறார்
    யாசிக்காத இணையத் தமிழே! அற்புதம்!

    கட்டுரை, சரித்திரம், ஆராய்வு, புவியியல்,
    கொட்டிய கலைகள், சமயம், அரசியல்
    எட்டாதது எதுவுமில்லை, யோகா, விளையாட்டென
    சொட்டும் நல்லறிவு, நல்லுணர்வு பெறுமதியாய்த்
    தொட்டிட்டால் வித்தகங்கள் அள்ளலாம் வெள்ளமாய்!
    தட்டும் விரல்நுனி வியப்பு நூலகம்!
    எட்டும் இணையத் தமிழே இனி
    கொட்டும் முரசு வெள்ளிடை மலை!

     (மணை – அமரும் பலகை, சிறு பீடம்;   புணை – தெப்பம்
    பணை – பெருமை;  கணைச் சூடு – நோய் வகை
    சுணை – சுரணை, அறிவு, கூர்மை)

     

    Share
  • இரட்டைவால் குருவி!

    -பா வானதி வேதா. இலங்காதிலகம்

    கரிக்குருவி, வலியன் குருவி, கரிச்சான்,
    கருவாட்டு வாலி, ஆனைச்சாத்தன், காரியெனும்
    கறுப்பான பல பெயருடைய இரட்டைவால் குருவி
    கண்டம் ஆசியா தாயகமான சிறுகுருவி

    கீச்சுக் கீச்சு ராகமாய் உற்சாகச் சுரத்தில்               sparrow
    கீதமிசைக்கும்; அடர்த்தியற்ற காட்டில் வாழும்
    வால் இரண்டாய்ப் பிளந்து ஆங்கில
    ’வி’  எழுத்துருவில் இருபத்தெட்டு செ.மீ. நீளம்

    பயமற்றது, துணிச்சல், உரமுடை மனம்
    பசுக்களின் மீதேறிச் சவாரி செய்யும்
    பருந்து, காகம், கழுகுகளை ஓடஓட
    பராக்கிரமமாய் விரட்டிக் கொத்தி எதிர்க்கும்!

    எறும்புப் புற்றின் மீது அமருமாம்
    எண்ணற்ற தன்னுடலின் உண்ணிப் பூச்சிகளையழிக்க!
    எறும்புகள் வெளியாக்கும் பாஃமிக் அமிலத்தில்
    எல்லாப் பூச்சிகளும் அழியுமாம்! வியப்பு!

     

    Share
  • பழையன வேண்டாம்!

    -பா வானதி வேதா. இலங்காதிலகம்

    vanathiவாருங்கள் தமிழ்புரிக்குச் செல்வோம்!
    வேருங்கள் சுய அறிவால்
    சேருங்கள் தீந்தமிழ் வரிகள்
    எங்கும் வெளியிடாத ஓவியம்
    எங்கும் பாடாத பாடல்
    எங்கும் ஆடாத நடனம்
    எங்கும் எழுதாத வரிகள்
    எங்கும் தேவையாம் கொடுங்கள்!

    தொல்காப்பியம் தண்டியலங்காரம் புலமைப்
    பல் நூல்கள் புரட்டுங்கள்!
    வல்லமையாய்ப் புதிதாய் வார்த்திடுங்கள்
    கல்லுதல் செய்தே வரைந்தவைகள்
    எல்லாம் பழையன என்றால்
    கொல்லையில் வீசுவதா சொல்லுங்கள்!
    வள்ளுவன் பாரதியின் பழையவைகள்
    ஊரதிரத் தேரோடுது பாருங்கள்!

    மல்லாட்டம் தமிழோடு போடுங்கள்!
    கல்லாதாரும் கற்றவரும் விளங்க
    வில்லவனாகிக் காதலையும் வரையுங்கள்!
    வில்லங்கமின்றிக் கவி இலக்கணம்
    நல்லங்கமாக்கி நெஞ்சக் கிண்ணத்தால்
    துல்லியமாய் வெல்லமாய் ஊற்றுங்கள்!
    எல்லோரும் மேதை என்பார்கள்!
    சொல்வளம் பஞ்சமற்ற புலவராகுங்கள்!

    (கல்லுதல்- தோண்டுதல்;  வில்லவன் – மன்மதன்)

     

    Share
  • அந்த மாமரம்!

    -பா. வானதி வேதா. இலங்காதிலகம்

    அந்த மாமரம் அன்று
    சொந்த மாமரம் எமக்கு
    தந்த நிழற் குடையில்
    குந்தப் பாய்விரித்த
    முந்தை அனுபவம் இது
    சந்தமாய் நெஞ்சில் பாயுது!

    வாழ்வூக்கிய பால பருவ
    வான் நோக்கிய மாமரம்
    புல் வெட்டிப் பசுந்தாகக்
    கல் பொறுக்கிச் சுத்தமாகச்
    சருகுகள் கூட்டி அள்ளி
    ஒருமையாய் ஒரு மைதானமாக்கி
    அருமையாய் அப்பா சகோதரர்களுடன்
    ஒருத்து அனுபவித்த வசந்தம்
    பெருமையான மாலைப் பொழுதுகள்
    கருமையற்ற மனமினித்த காலங்கள்!

    தேன் சுவையான மாம்பழம்
    பென்னம் பெரிய மாம்பழம்
    இன்று நினைத்தாலும் ஏக்கம்!
    மாலைத் தென்றல் பெரும்
    சாலையெனப் புகுந்து விளையாடி
    வாலையாட்டிச் சாமரம் வீசியது
    ஊஞ்சல் கட்டி ஆடி
    உறவாடிய பசும் கொற்றக்குடை!

    பெரிய கல்லோ ஒரு
    பெரிய வேரின் புடைப்பையோ
    சிம்மாசனமாக்கிக் கூடி அமர்ந்து
    சிரித்து ரசித்த ரசனை
    சிந்தை நிறைந்து வழிகிறது
    கூட்டுக் குடும்பமாய் மாமரத்தடியில்
    குலவியதை நெஞ்சம் மறக்காதது!
    குறை! இன்றைய பிள்ளைகளறியாதது!

     

    Share
  • அறிவுடைமை

    -வேதா. இலங்காதிலகம்

    நாலடியார்

    அதிகாரம் 25 –  அறிவுடைமை

    நளிகடற் றண்சேர்ப்ப நல்கூர்ந்த மக்கட்      naladiyar
    கணிகல மாவ தடக்கம்– பணிவில்சீர்
    மாத்திரை யின்றி நடக்குமேல் வாழுமூர்
    கோத்திரங் கூறப் படும்.

     நளி – பெரிய,  கடல் – கடலின், தண் – குளிர்ந்த, சேர்ப்ப – கரையுடைய அரசனே  நல் கூர்ந்த – வறுமையடைந்த,  மக்கட்கு – மனிதர்க்கு, அணிகலமாவது – அணிதற்குரிய ஆபரணமாவது, அடக்கம் – அடங்கியிருத்தல், பணிவுஇல் – அடக்கமில்லாத, சீர் – தன்மையில், மாத்திரையின்றி – அளவு இன்றி வரம்பு கடந்து நடக்குமேல் – ஒழுகுவானாகில்,  வாழும் . அத்தகையவன் வாழும் ஊர் – ஊரினரால், கோத்திரம் – தன் குலம், கூறப்படும் – இழிந்து சொல்லப்படும்.  என்றவாறு…

    என் வரிகள்:

    மகா சமுத்திரத்தின் தண்மை
    மணற்தரையின் அதிபதியாம் மன்னனே!
    கீழ்ப்படியும் குணம் பொருளில்
    கீழ்நிலையாளரை வடிவாக்கும் நகை
    கீழ்ப்படிதலற்று எல்லையின்றி மனிதன்
    இயங்கினால் தன் சொந்தக்
    குடியாளராலேயே இவன் குலம்
    இழித்துக் கூறும் நிலையடையும்

     

    Share
  • வல்லமைக்கு வாழ்த்து

    abq
    வல்லமை ஆறு ஆண்டு
    வெல்லமாய்த் தமிழில் வாழ்த்த
    நல்ல சொற்கள் வேண்டும்.
    சொல்லெடுத்து ஒரு சிற்பமாய்
    வல்லமையாய் வாழ்த்த மெல்லினம்
    வல்லினம் இடையினம் இணைத்து
    சில்லென்று தமிழில் குளித்து
    வெல்லமாய் வாழ்த்த வேண்டும்.
    சொல்லமைத்துத் தமிழில் ஒரு
    சொர்க்கபுரி  காண வழியுண்டு.
    பல்துறை விற்பன்னர் பழக்கமாகும்.
    துல்லியமாய் தமிழறிவு பெருகும்.
    எல்லோரும் வல்லமையாய் எழுதலாம்.
    வல்லமை வாழ்வு செழிக்கட்டும்.
    பல்துறை விற்பன்னர் பெருகட்டும்.
    பல்லாண்டு வாழ்க வல்லமை.
    வாழ்த்துவது
    பா வானதி வேதா. இலங்காதிலகம்
    டென்மார்க்.
    17-5-2015
    Share
  • நளிர் நளினம் (குளிர் நீர்)

    -பா வானதி வேதா. இலங்காதிலகம்

    பளிங்கு பளிங்கு கண்ணாடி
    பளிங்கு பளிங்கு படிகம்
    வெளிப்படை! உயிர் காக்கும்!
    நளினம் தண்ணீர் – தெளிநீர்                  water
    தெளிப்பு சீவன்கள் கொழிப்பு!
    நளினமின்றி உயிருலகு இல்லை
    துளி பட்டாலும் துளிர்க்கும்
    நளிவுடை நளிர் திரவம்

    ஆறு, கடல், குளத்தில்
    பீறும் மழையாயும், குட்டையிலும்
    ஊறும் பஞ்சபூதத்தில் ஒன்று
    சேறு, குற்றம் களையும்
    மீறும் தீ அணைக்கும்
    வீறு கொண்டு பாயும்
    நீருக்குச் சிறை பனி
    நீராவி குளிர, திரவம்
    அசுத்தம் சிறுநீர்  உப்புநீர்
    அருமைப் பதநீர் தேனீர்
    அழுதால் கண்ணீர் சுடுநீர்
    பித்தநீர் மஞ்சள் நீர்
    இளநீர் குடிநீர்  பலவகை
    நீர் பூமியில் 71விகிதம்
    நிறமற்ற புதுமை தனித்தன்மை
    திறமைப் பயன் மின்சாரம்!

     

    Share
  • வணங்கி வாழலாம்!

    -பா வானதி வேதா. இலங்காதிலகம்

    பூவினை ஒன்றொன்றாய் மாலையில் தொடுத்துப்
    பாவினைப் பண்ணாகப் பாடித் தொழுது
    என்வினை தீர இறையை வணங்கி
    வாழ்வினையொரு சுப வினையாக்குதல் நோக்கு!

    அன்பினைப் பெற அருகினில் நெருங்கி
    அறிவினை வளர்க்க ஆய்வினை நகர்த்தி
    உயர்வினைத் தாருமெனப் பாவினை ஆக்கத்
    தேய்வினை எண்ணாது அறிவினைத் தீட்டலாம்!

    தீங்கினைப் பாங்காக விலக்கி நம்முள்
    தேங்கிட நல்லவை நிறைத்துத் திருப்தியாய்
    ஓங்காரனை, காங்கேயனை ஓயாது துதித்துப்
    பூங்காவென வாழ்வைப் பயமின்றித் தேடலாம்!

    குயவனைக் குவலயம் அமைத்த குருபரனின்
    தயவினைத் வேண்டித் தலைவணங்கி
    அருளினைத் தாருமென அன்பினைக் கொட்டி
    ஊழ்வினை, பாவவினை உதறிட வணங்கலாம்!

     

    Share
  • பூகம்பம்

    -வேதா. இலங்காதிலகம்

    images

    ஆதி மௌரிய குப்த
    இராச்சியத்தின் கீழாக இருந்த
    இமாலய இராச்சியம் என்ற
    நேபாளம் இன்று கிலியுள்!

    ஏழை புத்த நாடு
    முப்பத்தெட்டு விகித வறுமை
    காட்மண்டு தலைநகர் கொண்டு
    காத்திரமான பாதிப்பு பூகம்பம்!

    பூமிக்கடி அழுத்தம் அதிகரித்துப்
    பூமிப் பாளங்கள் அசைவால் (அதிர்வால்)
    புவி நடுங்கப் பூகம்பமென்கிறோம்!

    மூவித நில நடுக்கம்
    சாதாரண முறை, மேற்தள்ளல்
    முறை, சமாந்தர அசைவென
    மானுட வாழ்வைப் பாதித்து
    பல்லுயிர் அழிவுச் சேதமாகிறது.

    சாதாரணமாகக் கூறும் பூகம்பம்
    பல்லுயிர் காவு கொண்டது
    பாரிய சேதம் சோகம்!
    பன்னாட்டு உதவிகள் விரைகின்றன
    ஓன்பது மாடித் தரஹரா
    கோபுரம் ஒன்றுமில்லாது சரிந்தது
    சோதனைகள், சோகம் விலகட்டும்
    சோதிக்கும்  இயற்கை அமைதியாகட்டும்!

     

    Share
  • நிறைமதியாளர்!

    -வேதா. இலங்காதிலகம்

    நாலடியார்

    அதிகாரம் 25 –   அறிவுடைமை

    பகைவர் பணிவிட நோக்கித்  தகவுடையார்
    தாமேயு நாணித் தலைச்செல்லார் காணா
    யிளம்பிறை யாயக்காற் றிங்களைச் சேரா
    தணங்கருந் துப்பி னரா. (நாலடி: 241)

    அணங்கு – வருத்தம் செய்யும், அரு – கொடிய, துப்பின் – வலியுடைய, அரா – பாம்பு, இளம்பிறை – இளையபிறைச் சந்திரனாயிருக்கும் போது, திங்களை – சந்திரனை, சேராது – வருத்துவதற்கு நெருங்காது, (அது போல) தகவு உடையார் – தகுந்த அறிவுடையார், பகைவர் – தம்முடன் மாறுபட்டவர், பணிவு இடம் நோக்கு – தாழ்ந்து இருக்கும் காலத்தைக் கவனித்து, தாமேயும் நாணி – தம்மில் தாமே வெட்கமுற்று, தலைசெல்லார் – அவரை அடக்குதற்கு எதிர்த்துச் செல்லமாட்டார், காணாய் – இதனை அறிக.

    எனது வரிகள்:-

    முழுமதிச் சந்திரனையே என்றும்
    பழுதுடை கிரகணம் பற்றும்
    பிறை நிலாவை அதன்
    குறையோடு கிரகணம் பற்றா
    இவ் விதியாய் எதிராளியின்
    திடமற்ற நிலைப்பாடில் பலவீனரை
    அடக்கார்  எதிர்க்கார்  தம்முள்
    குறுகும் நிறை மதியாளர். 

     

    Share
  • பேசாத எழிலே…!

    -வேதா. இலங்காதிலகம்

    நீல ஆழியில் செல்லும் வெள்ளி ஓடம் 
    நூலில் ஆடாத வெள்ளிப் பந்து 
    நிலத்தின் இருட்டைச் சலவை செய்து
    நிலா மஞ்சள்  பூசும் சந்திர வட்டக் கவியாள்!
    தலைக் கனமற்று கலைத் தடமிடுபவளே!             tropic_night
    திடல் ஏறி உன்னைத் தொடுமாசை தான்
    திருடன் உன்னைத் தூற்றகிறான், அவன் 
    திருட்டு உன்னொளியில் தெரியப் படுமாம்!

    நட்சத்திர  நங்கையர் கூட்ட 
    நல்லிரவு ராணியே! முகில் வலைத் துணி
    முக்காட்டை விலக்கி நிலத்தினையொரு 
    முறை பாரேன்! தண்ணொளி வீசேன்!
    காலைச் சூரியன் ஒளியில் நீ முற்றாகக்
    காணாமற் போவதில் என்றும்
    கவலையே கொள்வதில்லையா இரவரசியே!

    நீலவானில் அம்புலியாய், கவிஞருள்ளக் 
    கோல எழிற் கற்பனை ஊற்றாய் 
    வலம் வருகிறாய் அற்புதமாய்!
    ஓய்வில்லா நிலவே! கலம் இறங்கிய மனிதன் 
    காலடியும் நிலவில் விழுந்துள்ளதே!
    நிலவு அந்த மழலைக் காலம்!
    நிலவாய்த் தேய்ந்து முதுமை மறுபடி
    உலவுகிறது மழலைத் திங்களாய்…!

    இகத்துச் சீவராசிகளின் வைப்பு நிதியாய்
    இதய வங்கியில் ஆனந்தக் காசு
    சேர்க்கும் தண்மதி வெண்ணிலவே!
    வேண்டுதல் வேண்டாமையற்று
    பேதா பேதங்கள் அற்ற பேசாத எழிலே!
    இலங்கையிலும் உன்னைக் கண்டேன்
    இங்கும் உன்னைக் காண்கிறேன்
    அறிவில் உயர்ந்தோன் எங்கும் தெரியப் படுவதாய்!!

     

    Share
  • நயம் விரும்பும் மனம்!

    -பா வானதி வேதா. இலங்காதிலகம்

    நயம் ஒன்றே விரும்பும் மனம்
    யெயம் காணத் துடிக்கும் தினம்
    பயமற்ற தன்னம்பிக்கைத் தூணெனும் மனம்
    சுயமழியாது காக்கும் தனம்!

    இன்ப மேகங்கள் சுகமான சுமையாய்
    அன்பின் இராகமாய் புது அனுராகமாய்
    இன்னிதழ்களின் எழில்மிகு நடனத்தில்
    மென்னகைப்பது கண்களில் நிதரிசனம்!

    வினைமனத் தினப்போரின் வில்லங்கப்
    பிணைதலில் விதி யென்று கூறிடும்
    புனையால் மனம் இறுகிடும்; இளகிய
    நினைவு இன்பம் சேர்ப்பதியல்பு!

     

    Share
  • எழுதுகோல் எடு!

    வேதா. இலங்காதிலகம்

    images

    ஆ வரைந்து மொழியறிந்த காலம்
    பூ வரைந்து ரசித்ததொரு காலம்
    பா வரைந்து திளைப்பதிக் காலம்.
    ஆசி நிறைத்து வாழ்த்தட்டும் ஞாலம்.
    எழுதுகோல் எடுத்திடு! எழுதுவோம் கவி.
    பழுதான பழக்கம் வழக்குகளைப் புவி
    கழுவிட வழிகள் பலவாய்க் குவி!
    நழுவிடாதே நடுவோம் நற் கவி!

    தேட்டம் தொடர்! பாட்டை வடி!
    நாட்டமுடன் பல இதழ்கள் படி!
    வாட்டம் தொலை! வாழ்வின் படி
    ஆட்டம் காணாது இறுகப் பிடி!
    வல்லமையாய் மொழிக் கடலுள் ஆழ்ந்து
    நல்ல பாக்கள் பல குவித்து
    வல்லாங்கு அறிவில் திறன் கலந்து
    வெல்ல வேண்டும் வெற்றியை அணைத்து.

    Share