இலக்கியம்கவிதைகள்

அந்த மாமரம்!

-பா. வானதி வேதா. இலங்காதிலகம்

அந்த மாமரம் அன்று
சொந்த மாமரம் எமக்கு
தந்த நிழற் குடையில்
குந்தப் பாய்விரித்த
முந்தை அனுபவம் இது
சந்தமாய் நெஞ்சில் பாயுது!

வாழ்வூக்கிய பால பருவ
வான் நோக்கிய மாமரம்
புல் வெட்டிப் பசுந்தாகக்
கல் பொறுக்கிச் சுத்தமாகச்
சருகுகள் கூட்டி அள்ளி
ஒருமையாய் ஒரு மைதானமாக்கி
அருமையாய் அப்பா சகோதரர்களுடன்
ஒருத்து அனுபவித்த வசந்தம்
பெருமையான மாலைப் பொழுதுகள்
கருமையற்ற மனமினித்த காலங்கள்!

தேன் சுவையான மாம்பழம்
பென்னம் பெரிய மாம்பழம்
இன்று நினைத்தாலும் ஏக்கம்!
மாலைத் தென்றல் பெரும்
சாலையெனப் புகுந்து விளையாடி
வாலையாட்டிச் சாமரம் வீசியது
ஊஞ்சல் கட்டி ஆடி
உறவாடிய பசும் கொற்றக்குடை!

பெரிய கல்லோ ஒரு
பெரிய வேரின் புடைப்பையோ
சிம்மாசனமாக்கிக் கூடி அமர்ந்து
சிரித்து ரசித்த ரசனை
சிந்தை நிறைந்து வழிகிறது
கூட்டுக் குடும்பமாய் மாமரத்தடியில்
குலவியதை நெஞ்சம் மறக்காதது!
குறை! இன்றைய பிள்ளைகளறியாதது!

 

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க