-வேதா. இலங்காதிலகம்

நீல ஆழியில் செல்லும் வெள்ளி ஓடம் 
நூலில் ஆடாத வெள்ளிப் பந்து 
நிலத்தின் இருட்டைச் சலவை செய்து
நிலா மஞ்சள்  பூசும் சந்திர வட்டக் கவியாள்!
தலைக் கனமற்று கலைத் தடமிடுபவளே!             tropic_night
திடல் ஏறி உன்னைத் தொடுமாசை தான்
திருடன் உன்னைத் தூற்றகிறான், அவன் 
திருட்டு உன்னொளியில் தெரியப் படுமாம்!

நட்சத்திர  நங்கையர் கூட்ட 
நல்லிரவு ராணியே! முகில் வலைத் துணி
முக்காட்டை விலக்கி நிலத்தினையொரு 
முறை பாரேன்! தண்ணொளி வீசேன்!
காலைச் சூரியன் ஒளியில் நீ முற்றாகக்
காணாமற் போவதில் என்றும்
கவலையே கொள்வதில்லையா இரவரசியே!

நீலவானில் அம்புலியாய், கவிஞருள்ளக் 
கோல எழிற் கற்பனை ஊற்றாய் 
வலம் வருகிறாய் அற்புதமாய்!
ஓய்வில்லா நிலவே! கலம் இறங்கிய மனிதன் 
காலடியும் நிலவில் விழுந்துள்ளதே!
நிலவு அந்த மழலைக் காலம்!
நிலவாய்த் தேய்ந்து முதுமை மறுபடி
உலவுகிறது மழலைத் திங்களாய்…!

இகத்துச் சீவராசிகளின் வைப்பு நிதியாய்
இதய வங்கியில் ஆனந்தக் காசு
சேர்க்கும் தண்மதி வெண்ணிலவே!
வேண்டுதல் வேண்டாமையற்று
பேதா பேதங்கள் அற்ற பேசாத எழிலே!
இலங்கையிலும் உன்னைக் கண்டேன்
இங்கும் உன்னைக் காண்கிறேன்
அறிவில் உயர்ந்தோன் எங்கும் தெரியப் படுவதாய்!!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *