சித்திரையே வருக இத்தரை செழிக்க!

1

-விப்ரநாராயணன்

சித்திரை என்னை நித்திரை
யினின்று எழுப்பி விட்டாள்என்
முத்திரை பதிக்க வேண்டும்
இந்நாட்டில் நானென விதித்திட்டாள்!
இத்தரை மக்கள் இன்பமாய்
வாழ வழியெது எனக் கேட்டேன்
புத்தர் சொல்படி நடவென
விடையளித்துச் சென்றாள்!

நெல்லிலே கலப்படம், பேசும்
சொல்லிலே கலப்படம் என
நெல்லை இதழ் ஒன்றில்
படித்தேன் பதறி விட்டேன்!
கல்லைக் காசாக்கு வேனெனக்
கூறி மயக்குபவர் பலர்
எல்லை கடந்து மற்றவர்
உயிரைக் குடிப்பவர் பலர்!

வஞ்சக எண்ணங் கொண்டு
சுற்றித் திரிபவர் பலர்
லஞ்சப் பேயுருக் கொண்டு
உலா வருபவர் பலர்!
கஞ்சி குடிக்க வழியில்லாதோர்
வயிற்றில் அடிப்பவர் பலர்
வஞ்சியரின் வாழ்வைப் பாழாக்கிக்
கொலை புரிவோர் பலர்!

சாத்திரங்கள் பல படைத்தாய்
புராணங்கள் பலபடைத்தாய்
வேதங்கள்  நான்கு மொழிந்தாய்
காப்பியங்கள் பல படைத்தாய்–ஆனால்

சித்திரையே மக்கள் அவற்றைப்
படித்ததாகத் தெரிய வில்லை!
பத்தர்கள் பலர் தோன்றி
பத்தியைப் பரப்பினர் உலகில்
சித்தர்கள் பலர் வந்துநம்
சித்தத்தைத் தெளிவு படுத்தினர்
முக்தர்கள் பலர் அவதரித்து
முக்திக்கு வழியாதெனக் காட்டினர்!

ஆறுகள் பல படைத்தாய் ஆனால்
ஆறாத சண்டை உண்டானது
ஆறுகள் வற்றிப் போயிற்று ஆனால்
சண்டைகள் வற்ற வில்லை
கோவில்கள் பல படைத்தாய்
கூடவே உண்டியலும் வந்தது
கோவில் உண்டியலை உடைக்கும்
கூட்டங்கள் பெருகி விட்டன!

கோள்களைச் சுற்றிச் செல்கிறது
உலக விண்வெளிக் கலங்கள்
கோள்களைச் சுற்றி வருகின்றனர்
தங்கள் பாவங்கள் தீர!
சாத்திர விதிகள் படைத்தாய்
கூடவே விலக்குகளும் வந்தன
பற்றற்று வாழ வேண்டுமெனப் பகர்ந்தாய்
பற்றே வாழ்வெனக் கருதினர் மக்கள்!

நிலம் தந்தாய் நீர் தந்தாய்
இருக்க இடம் தந்தாய்
நிலங்களை அழித்தனர் மக்கள்
வாழ்விழந்து தவித்தனர் உழவர்கள்
நீர்நிலைகள் இருப்பிடங்கள் ஆயின
நீர்நாடி விலங்குகள் வந்தன
நிலமில்லை எனவே உணவில்லை
நீரில்லை எனவே வாழ்வில்லை!

பணம் பணமென்று ஓடுகின்றனர்
திசை யறியாது மக்கள்
குணம் நாடிச் செல்வோர்
குறைந்து விட்டனர் பாரினில்
கணப் பொழுதில் காசு
அள்ள வேண்டும் என்று
கானல் நீரைத் தேடி
அலைகின்றனர் பணப் பேய்கள்!

சோதனைகள் பல கண்டோம்
விடுதலை பெற்றோம் இருந்தும்
வேதனைகள்தான் இன்றும்
முழுமை விடுதலை இல்லை
போதனைகள் பல பெற்றும்
காற்றில் பறக்க விட்டோம்
போதும் போதும் சோதனைகள்
கண் திறப்பாய் சித்திரையே!

தேவைக்கு வரம்பு போடும்
வித்தையைக் கற்றுக் கொடுப்பாய்
தேகத்துள் உறைபவன் யாரெனக்
காட்டுவாய் எனக்கு அம்மையே
தேசம் சிறப்புடன் வாழ
வழி காட்டுவாய் தாயே
தேசுடை மாந்தர் வழிசெல்ல
வலிமை கொடுப்பாய் சித்திரையே!

சித்திரை வந்தாள் வாசலில்
நின்றாள், வாவென அழைத்தேன்
இத்தரை முழுதும் பாவங்கள்
சூழ்ந்து உள்ளது என்றாள்
ஆத்திரங் கொண்டாள்; அமைதியானாள்
அன்பாய்ப் பகர்ந்தாள் என்னிடம்
சாத்திரம் கூறும் கூற்றுப்படி
வாழ வேண்டும் என்றாள்!

மாற்றம் வேண்டும் சித்திரையே
வழி கூறுவாய் இன்றே
மாற்றம் உங்கள் மனதில்
வரும்வரை மாற்றம் இல்லை
மாற்றம் உன்னிடத்தில் இருந்து
துவங்க வேண்டும் முதலில்
மாற்றம் அகத்தில் தேவை
புறத்தே அல்ல என அறிவாய்!

மனித மனம் சுயநலமின்றி
ஒருநிலைப் படல் வேண்டும்
புனிதமான எண்ணங்கள் என்றும்
மனதில் தோன்ற வேண்டும்
இனிய சொற்களைப் பேசி
இன்முகத்துடன் இருக்க வேண்டும்
தனித்த சிந்தனையுடன் மனித
உறவைப் போற்ற வேண்டும்!

 

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “சித்திரையே வருக இத்தரை செழிக்க!

  1. காந்தியடிகள் மனித உறவைத்தான் போற்றினார். மனித உறவில் ஏற்படும் சிக்கல்கள்தான் உலகப்பிரச்சனையாகவே ஆகின்றது. வருடப்பிறப்பன்று இந்த நல்ல செய்தியை உலகத்துக்குத் தந்த விப்ரனுக்கும் அவர் பெயரோடு இணைந்து தற்போது சிந்தனையோடும் கலந்து விட்ட திருமலை அண்ணாச்சிக்கும் நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *