தமிழ் மையை நிரப்பு

amay

ஆதித் தொன்மையாம் குமரிக் கண்டம்
ஆஸ்திரேலியா, சாலித்தீவு, தென்னாபிரிக்கா இணைவாம்
ஏக மனதாராய்ச்சி தேவநேயப்பாவாணரோடு பலரால்.
ஊகமல்ல பதினான்கு  மாநிலங்களான பிரிவாம்
ஏழு தெங்கு நாடு என்றும்
ஏழு பனை நாடெனப் பிரிவுகளாம்!
தமிழன், தமிழ்மொழி பிறப்பிடம் குமரிக்கண்டம்
தக்கசான்றுகள் பினீசியர்கள் கல்வெட்டுகள் நாணயங்கள்.
உன்னத இலக்கியம் இரண்டாயிரமாண்டுகளிற்கு மேலானது
கன்னலாம் நீண்ட இலக்கண மரபுடையது.
இன்பத் தமிழேயித்தனை பழமைத் திமிரே!
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென
துன்ப அகராதி துடைத்தழிக்கும் அமிழ்தே!
என்னுயிர்ச் சொத்தாமுலகின் பதினெட்டாம் நிலையே!
உன்னையின்னும் மக்கள் இழுத்து அணைக்கட்டும்!
சின்ன எழுதுகோலில் தமிழ்மையை நிரப்பட்டும்!
மொழி எம் வாழ்க்கையின் வழி!
ஆழி! உள்ளாழ்ந்து முத்துக் குளி!
தோழியாய்த் தோளணைத்து மழையாய்ப் பொழி!
ஊழிக்காலம் வரை காத்திட விழி!
அறிவானது பனையோலை வாய்மொழியான பாதுகாப்பு!.
செறிமைச் சூரியன்! இன்ப நீரோடை!
வறியவனாக்காத மொழிப் பயிர் மேடை!
தறியெனும் எழுதுகோலால் நூல் நெய்வோம்!
பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்
21-6-2015.

About வேதா இலங்காதிலகம்

(திருமதி. வேதா. இலங்காதிலகம்- டென்மார்க் இலங்கையள் 1976 லிருந்து இலங்கை வானொலிக்கு எழுதத் தொடங்கிப் பயணம் தொடர்கிறது. இரண்டு கவிதைப் புத்தகமும் ஒரு மொழிபெயர்ப்புக் கட்டுரைகளுமாய் 3 புத்தகங்கள் வெளியிட்டுள்ளேன். ஒரு இணையத்தளம் 4 வருடமாக இயக்குகிறேன்.- வேதாவின் வலை. எனது நூல்களாக 2002ல் வேதாவின் கவிதைகள்- கவிதைத் தொகுப்பு 2004ல் மொழிபெயர்ப்புக் கட்டுரைத் தொகுப்பு – ''..குழந்தைகள் இளையோர் சிறக்க..'' 2007ல் உணர்வுப் பூக்கள் - தொகுப்பு - இதில் எனது 69 கவிதைகளும் எனது கணவரின் கவிதகள் 43மாகத் தொகுக்கப் பட்டது. இவை மின்னூல்களாக நூலகம் டொற் ஓர்க் லும். பார்க்கலாம். பல விபரங்களும் '' எனது நூல்கள்'' என்ற தலைப்பில் என் வலையிலும் காணலாம். 1976லிருந்து இலங்கை வானொலி பூவும் பொட்டும் மங்கையர் மஞ்சரிக்குக் கவிதை எழுத ஆரம்பமானது என் எழுத்துப் பயணம். அதன் பின் 1987ல் டென்மார்க் வந்து டென்மார்க்கில் குழந்தைகள் ( பிள்ளைகள்) பராமரிப்புக் கல்வியை 3 வருடம் டெனிஸ் மொழியில் படித்து முடித்தேன் ''பெட்டகோ'' எனும் தகுதி பெற்றேன். 14 வருடங்கள் 3 – 12 வயதுப் பிள்ளைகளுடன் பணி புரிந்து ஒய்வு பெற்றேன். 26 வருடங்களிற்கும் மேலாக டென்மார்க்கில் வசிக்கிறேன் என் கணவருடன்.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க