நிசாரியின் (சூரியன்) வீரியம்.
பா வானதி வேதா. இலங்காதிலகம்
குளிருது குளிருது என்று குடங்குதலானோம்.
குனிய நிமிர உடல் நோவானோம்.
நிமிர்ந்து நிம்மதி கொள்வாய் என்று
நிசாரி தன் கிரணங்களை வீசினான்
கஞ்சத்தனம் காட்டாது அதி பரிவை
வஞ்சகம் இன்றிக் காட்டுதல் கொடுமை
அஞ்சுகிறார் மக்கள் அலறுகிறார் வெப்பத்தால்
விஞ்சுதலாய் வெக்கையில் வியர்வை வழிகிறது
கோடை வேண்டும் கோடை வேண்டுமென்றோம்
கோரிக்கை கோரமாகித் துடிக்கிறோம் இன்று
மரங்களின் கீழ் மக்கள். பறவை
மரங்கொத்தியாய் முயற்சி, நிழல் தேடி.
குளியல் இரண்டு மூன்று முறை
எளிதான பருத்தி உடைத் தேர்வு
களித்திட கடல் தேடி ஓடல்.
புளித்திடாத குறையாக வெயில்..வெயில்..
பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
5-7-2015