ஜூலை 6, 2015

இவ்வார வல்லமையாளர்
வல்லமைமிகு “அமெரிக்கத்தமிழர் வருண் ராம்” அவர்கள் 

 

Varun-Ram

 

வல்லமையின் இந்தவார வல்லமையாளர் என்ற சிறப்பைப் பெறுபவர் கூடைப்பந்தாட்ட விளையாட்டு வீரர், அமெரிக்கத்தமிழர் திரு. வருண் ராம் அவர்கள்.

இருபத்தியிரண்டு வயதாகும் திரு. வருண் ராம் என்னும் வருண் இராமசாமி அவர்கள் இந்த ஆண்டு மேரிலாண்ட் பல்கலைக் கழகத்தில் படிப்பில் முதன்மை மாணவராக  (3.99/4.00 GPA), நரம்பியல், உடற்செயலியல் என்ற இரு அறிவியல்துறைகளில் பயின்றுப் பட்டம் பெற்றுள்ளார். அத்துடன் அவர் கூடைப்பந்தாட்டத்திலும் சிறந்து விளங்கி தனது மேரிலாண்ட் பல்கலைக் கழக அணிக்கு வெற்றியைப் பெற்றுத் தந்த திறமையான ஆட்டத்தினால் வளரும் இளம் விளையாட்டுவீரர் என்ற பட்டியலிலும் இடம் பிடித்துள்ளார்.

இந்தியக் குடும்பத்து மாணவர் என்றால் கணிதம், அறிவியல், தொழில் நுட்பம் படிக்க விரும்புபவர்; சிறந்த படிப்பாளிகள் என்று அமெரிக்க மக்கள் மனதில் ஒரு பொதுமைப்படுத்தும் எண்ணம் உருவாகும் வண்ணம் அயல்நாடுவாழ் இந்தியர்கள் இருந்துவருகிறார்கள். இந்த எண்ணத்தை மாற்றும் வகையில் அவர்கள் படிப்பில், பிற தொழில்களில் மட்டுமல்ல, வாய்ப்புகள் அமைந்தால் விளையாட்டுத் துறையிலும் தங்கள் திறமையை வெளிப்படுத்துவார்கள் என்ற செய்தியை அமெரிக்க மக்களுக்கு வருண் ராம் அனுப்பி இருக்கிறார். படிப்புடன் விளையாட்டிலும் சாதிக்கமுடியும் என்ற நம்பிக்கையை அமெரிக்க இந்திய மாணவர்களுக்கும் தனது வெற்றியின் மூலம் உணர்த்தியிருக்கிறார்.

பொதுவாக அமெரிக்கக் குடும்பங்களில் வளரும் பிள்ளைகள், தங்களுக்கு ஆர்வம் ஏற்படும் துறைகளில் முயன்று, தங்கள் திறமைக்கு ஏற்ற, மனதுக்குப் பிடித்த துறையில் வளரவேண்டும். அது கலையாகவோ, விளையாட்டாகவோ இருந்தாலும்கூட அவர்கள் விருப்பம் தடை செய்யப்படுவதில்லை என்ற நிலை அமெரிக்கர்களிடம் உள்ளது. இதற்கு மாறாக, இந்தியக் குடும்பங்களில் வளரும் குழந்தைகள் மருத்துவம், பொறியியல், கணினி சார் கல்விகள், தொழில்நுட்பம், அறிவியல் துறைகளில் ஈடுபடுவது மட்டுமே எதிர்பார்க்கப்படும். கலை மற்றும் விளையாட்டு என்பவை பொழுதுபோக்கு என்ற வகையில் மட்டுமே கற்றுக்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். வாழ்வாதாரத்திற்கு மருத்துவராகவோ, பொறியியலாளராகவோ, பேராசிரியராகவோ, வழக்கறிஞகராகவோ பணிபுரிவது மட்டுமே மதிப்பாக, உயர்வாக  எண்ணப்படும்.

வருண் ராமின் பெற்றோர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. அவர் தொடர்ந்து நல்ல மதிப்பெண்கள் வாங்கும்வரை அவர் விளையாடலாம், அதுவரை  விளையாட்டிற்குத் தடையில்லை என்று முதலில் அனுமதித்தவர்கள், பின்னர் வருண் ராமின் திறமையைக் கண்டு அவர் வளர்ச்சிக்கு முழு ஆதரவும் கொடுத்து அவரது வாழ்வின் குறிக்கோளுக்கு உதவியாகவும் இருப்பவர்களானார்கள். இந்தியர்களின் பொதுவான பாதையில் இருந்து விலகி,  தன்னார்வத்தால் மட்டுமே விளையாட்டுத் துறையில் திறமையை வளர்த்துக் கொண்டு, தனது குறிக்கோள் நோக்கி முன்னேறியிருக்கிறார் வருண் ராம். இவர் குடும்பத்திலும் விளையாட்டுத் துறையைத் தேர்ந்தெடுத்த முதல் மனிதரும் இவர் மட்டுமே.

வருண் ராமின் பெற்றோர்கள் திரு.கொழந்தவேல் இராமசாமி, முனைவர் சாந்தினி என்போர்.  பெற்றோர் இருவரும் சேலத்திலிருந்து சற்றொப்ப 30 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவிற்குக் குடி பெயர்ந்தவர்கள். இருவரும் அமெரிக்க அரசின் அரசுப்பணியாளர்களாக இருப்பவர்கள். அத்துடன் மேரிலாண்ட் தமிழ்ச்சங்கத்தின் பணிகளிலும் மிகவும் ஈடுபாட்டுடன் பங்கேற்பவர்கள்.

அமெரிக்காவின் தேசிய கூடைப்பந்தாட்ட அணியில் (National Basketball Association) விளையாடுவது வருண் ராமின் குறிக்கோள். தேசிய அணியில் இடம்பிடிக்க வேண்டுமென்றால் சிறந்த பல்கலைக்கழக விளையாட்டுக் குழுக்களுக்காக விளையாடித் திறமையை வெளிப்படுத்தி, தேசிய அணியினர் கவனத்தைக் கவரவேண்டும். அமெரிக்க பல்கலைக்கழக விளையாட்டுச் சங்கம் (National Collegiate Athletic Association – NCAA) பல்கலைக் கழகங்களின் விளையாட்டு அணியை மூன்று பிரிவுகளாக பிரித்துள்ளது. அவை பிரிவு I, பிரிவு II, பிரிவு III ( Division I, Division II, and Division III of NCAA) குழுக்களென முறையே மிகப்பெரும் புகழ்வாய்ந்த பெரிய பல்கலைக்கழகங்கள், நடுத்தர நிலை மற்றும் சிறிய பல்கலைக்கழகங்கள் என்பவையே அப்பிரிவுகள்.

Varun-Ram-1

பிரிவு I இல் இருக்கும் பெரிய கல்லூரிகளில் படித்தால் தேசிய அணியில் இடம்பிடிக்கும் வாய்ப்புகளும் அதிகம். ஆனால், உயர்நிலைப் பள்ளி கல்விக்குப் பிறகு வருண் ராமிற்கு புகழ் பெற்ற பல்கலைக்கழகங்களில் படிக்கும் வாய்ப்பு கிடைக்காது போக, அதற்காகவே ஓராண்டு மேலும் பள்ளிக் கல்வியை நீட்டித்து மறு ஆண்டும் பெரிய கல்வி நிறுவனங்களில் நுழைவுக்கு விண்ணப்பித்தார். மீண்டும் முயற்சி தோல்வியடைந்தாலும், பிரிவு III நிலையில் உள்ள கனக்டிகட் பல்கலையில் சேர்ந்து ஓராண்டு படித்துவிட்டு, அங்கிருந்து மறு கல்வியாண்டில் மாற்றல் வாங்கிக் கொண்டு, பிரிவு I நிலையில் இருக்கும் மேரிலாண்ட் பல்கலைக் கழகத்திற்கு வந்தார். இது போன்று மாற்றம் வாங்கினால் விளையாட்டு அணியில் இடம் கிடைக்காது என்ற மறுப்பு கூறியவர்களின் வார்த்தைகளைப் பொய்யாக்கி, மேரிலாண்ட் பல்கலைக் கழகத்தின் ‘மேரிலாண்ட் டெர்ராபின்ஸ்’ (Maryland Terrapins) கூடைப்பந்து அணியில் தனது திறமையினால் இடம் பிடித்தவருக்கு விரைவில் அவரது திறமையான விளையாட்டால் அமெரிக்கர் அனைவரையும் அவரைத் திரும்பிப்பார்க்க வைக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

Varun-Ram-2

சென்ற மார்ச் மாதம் ‘வலப்ரேஸோ க்ருசேடர்ஸ்’ (Valparaiso Crusaders) அணியுடன் போட்டியிட்ட மேரிலாண்ட் டெர்ராபின்ஸ் அணியின் வெற்றிக்கு வருண் ராமின் திறமையான விளையாட்டே காரணமாக அமைந்தது. அவரது கனவுகளை நிறைவேற வாய்ப்பளிக்கும் சிறந்த தருணமாகவும் அது அமைந்தது எனலாம். அமெரிக்க இந்திய மாணவர்களுக்கு நல்லதொரு முன்மாதிரியாக விளங்கும் வருண் ராமைப் பாராட்டி, சென்ற வார இறுதியில் ஜூலை 4 ஆம் நாள் நடந்த வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை நடத்திய “தமிழ்விழா – 2015” (FeTNA – 2015) நிகழ்ச்சியில் சிறப்பு விருது அளிக்கப்பட்டு பாராட்டப்பட்டுள்ளார்.

varunR2

 

varunR
தாய், தந்தையருடன் (வலது, இடது புறங்களில் நிற்போர்) வருண் ராம் பொன்னாடை போர்த்திப் பாராட்டப் பெறுகிறார்

 

அவர் அவ்வாறு பாராட்டப்பட்ட பொழுதே, தமிழ்விழா – 2015 அரங்கிலேயே, வருண் ராம் அவர்களை இவ்வார வல்லமையாளராகப் பாராட்டும்படியும் பார்வையாளர்கள் சிலரால் பரிந்துரைக்கப்பட்டார். வருண் ராம் தனது கூடைப்பந்தாட்டக் கனவுகளை (Hoop Dreams) நிறைவேற்றுவதற்காக ஆங்கிலத்தில் “jumping through hoops” என்று சொல்வது போல பல தடைகளை எதிர்கொண்டு வெற்றிகண்டிருக்கிறார் என்பதில் ஐயமில்லை. அவரது குறிக்கோள்களான மருத்துவத்துறையில் பணியாற்றும் கனவு,  மற்றும் தேசியஅணியில் விளையாடும் கனவுகள் நிறைவேற வாழ்த்திப் பாராட்டுவதில் வல்லமைக் குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம்.

**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

**************************************************************************************

[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 ]

 

தொடர்புக்கு:
டுவிட்டெர் சமூக வலைத்தளத்தில் வருண் ராம் – https://twitter.com/vram_21

 

தகவல்கள் படங்கள் சேகரிக்கப்பட்ட இடங்கள்:
‘They ask, who is this kid?’: Varun Ram on life as an Indian basketball player
[http://www.theguardian.com/sport/2015/mar/18/they-ask-who-is-this-kid-varun-ram-on-life-as-an-indian-basketball-player]

Varun Ram is a star both on and off the court
[http://ekalavyas.com/2014/12/20/varun-ram-star-off-court/]

Wikipedia
[https://en.wikipedia.org/wiki/Varun_Ram]

அமெரிக்காவில் கூடைப்பந்து விளையாட்டில் சாதித்துவரும் அமெரிக்கத்தமிழர் வருண் ராம்
[http://www.valaitamil.com/tamizhar-varun-ram-college-basketball_10948.html]

வருண் ராம் அவர்களின் படங்கள் அவரது டுவிட்டெர் தளத்தில் இருந்தும்,  மேரிலாண்ட் பல்கலைக் கழகத்தின் தளத்திலிருந்தும் சேகரிக்கப்பட்டுள்ளன

 

நன்றி:
FeTNA – 2015 படங்களுக்கு ஏற்பாடு செய்த திரு. பழமைபேசி அவர்களுக்கு சிறப்பு நன்றிகள் உரித்தாகிறது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *