காதலின் பொன்வீதியில் – 9
-மீனாட்சி பாலகணேஷ்
தலைவி நீராடிய சுனை!
கட்டு வரிவில் கரும் குறவர் கைத்தொழிலால் இட்ட பரண் மீதமர்ந்து அந்தக் குறமகள் கிளி முதலாகிய பறவைகளை தினைப்புனத்தின் அருகே வராவண்ணம் ஓட்டுகிறாள். ஆலோலம் பாடிப் பறவைகளை விரட்டித் தினைப்புனத்தைக் காக்க வேண்டுவது அவள் தந்தை அவளுக்கிட்ட பணி.
‘பூவைகாள் செம் கண் புறவங்காள் ஆலோலம்
தூவிமா மஞ்சைகாள் சொல் கிளிகாள் ஆலோலம்
கூவல் சேர் உற்ற குயில் இனங்காள் ஆலோலம்
சேவல்காள் ஆலோலம்’ என்றாள் திருந்து இழையாள்.
இவ்வாறு அந்த அழகு மயில், குயில் குரலில் ஆலோலம் பாட அதனைக் கேட்டு அங்கு வருகிறான் ஒரு இளம் வேடுவன். அவன்…..
காலில் கட்டிய கழலன் கச்சினன்
மாலைத் தோளினன் வரிவில் வாளியன்
நீலக் குஞ்சியன் நெடியன் ………………
காலில் கழல்களணிந்து, இடையில் கச்சினை இறுகக்கட்டி, திண்ணிய தோள்களில் காட்டு மலர்களால் ஆன வண்ண மலர் மாலைகளை அணிந்து கொண்டு வில்லையும் அம்பினையும் ஏந்தியபடி, முடிந்த குடுமித் தலையோடு, கம்பீரமாக நின்றான் அந்தக் கட்டிளம் காளை…..
சொல்லினைத் தேனில் குழைத்துரைக்கும் இளம் பெண்ணைக் கண்டு சொக்கி நின்றான் அவன். ஆச்சரியத்தில் கண்கள் விரிய, அவளை விழித்து நோக்குகிறான். அவள் மேல் மையல் பொங்குகின்றது அவனுக்கு! யார் இந்த அற்புத நங்கை? யாரந்தக் கட்டிளங்காளை?
அவள் வேட்டுவ மன்னன் நம்பிராஜனின் அருமை மகள் வள்ளி!
“அழகு மங்கையே! நீ யார்? உன் பெயரென்ன? சொல்ல மாட்டாயோ! ஊரென்ன? அதையும் சொல்ல மாட்டாயா? சரி. உன் ஊருக்குச் செல்லும் வழியென்னவோ?” எனக் கேட்டான்.
வள்ளி பதில் கூறாமல் நிற்கிறாள். வழியில் போகிறவன் வருகிறவன் எல்லாம் வந்து ஊரையும் பேரையும் கேட்டால், அவள் ஏன் கூற வேண்டும்? ஆகவே பாராமுகமாய் நின்றாள் வள்ளி. கட்டிளம் காளைக்கு இருப்புக் கொள்ளவில்லை. அவள் வனப்போ உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் அழகு. கொஞ்சுமொழி அஞ்சுகம். கண்டதும் கொண்ட காதலில் உருகி அவனுடைய ஊனும் உயிரும் தவிக்கின்றதே!
மேலும் சொல்வான்,
“மொழி ஒன்று புகலாய் ஆயின் முறுவலும் புரியாய் ஆயின்
விழி ஒன்று நோக்காய் ஆயின் விரகம் மிக்கு உழல்வேன் உய்யும்
வழி ஒன்று காட்டாய் ஆயின் மனமும் சற்று உருகாய் ஆயின்
பழி ஒன்று நின்பால் சூழும் பராமுகம் தவிர்தி ….”
“ஒரு மொழி கூறமாட்டேன் என்கிறாய். புன்னகையும் நீ புரியவில்லை! என்னை நோக்க மாட்டயோ? விரகம் மிகுகின்றதே; எனக்கு ஒரு மறுமொழி தாராயோ? உன் மனம் உருகாவிட்டால் பழி ஒன்று உன்பால் சூழும்,” என அச்சுறுத்துகிறான்.
இப்படித்தான் காதலின் ஆரம்ப நிகழ்வுகள் பெரும்பாலும் துவங்குகின்றன!
____________________________________
இது தலைவன் தலைமகள் ஒருத்தியைக் கண்டதும் கொள்ளும் காதல். ஆயினும் ஒருதலைக் காதல். எவ்வாறு இவள் மனதைக் கவர்ந்து தன்வசப் படுத்திக் கொள்வது? அன்புமொழி புகன்றான் காளை. அவள் அதனை லட்சியமே செய்யவில்லை. இந்தக் கட்டிளம் காளை வேறு எவரோ அல்லவே! செந்தமிழ்க் குமரன் அல்லவோ? அவளுக்கு அதைத் தெரிவிக்க வேண்டாமோ? என்ன செய்யலாம்?
(இந்தக் காதல் நாடகம், குமரன் அரங்கேற்றியதைத்தான் காலகாலங்களாகக் கட்டிளம் இளைஞர்கள் காதலின் பாடங்களாகப் படித்து வருகின்றனர்!)
ஓ! இதென்ன, தனது ஜனங்கள் புடைசூழ நம்பிராஜ மன்னன் வந்து கொண்டிருக்கிறான். தினைப்புனம் காக்கும் அருமை மகளுக்குப் பசியெடுக்குமே! தேனும், தினைமாவும் தர வந்தான். இப்போது இந்தக் காளை அவர்கள் கண்ணில் படாமல் ஒளிந்து கொள்ள வேண்டும்! திடீரெனக் காளை நின்ற இடத்தில் ஒரு வேங்கை மரம் எழுந்து நின்றது.
கச்சியப்பச் சிவாச்சாரியார் தாம் இயற்றிய கந்தபுராணத்தில் ‘தானோர் வேங்கையின் உருவமாகி வேற்படை வீரன் நின்றான்,’ என்கிறார். இவன் மாயாஜாலம் செய்வதிலும் வல்லவன் போலும். வள்ளி இதனை உணரவில்லை. புதிய மரத்தைக் கண்ணுற்ற நம்பிராஜன், “அம்மா! குழந்தாய்! இது உனக்கு நிழல் தந்து உதவும்,” எனக் கூறிப் போகிறான். தானே அறியாமல் குமரனின் காதலுக்கு அவனும் தன் பங்கிற்கு உதவுகிறான்!
நம்பிராஜன் அங்கிருந்து அகன்றதும் வேங்கைமரம் மறுபடி உருமாறிக் கட்டிளங் காளையாயினான். “உன்னிடம் மையல் கொண்டேன். இனி உன்னைப் பிரிந்து வாழ இயலாது; என்னை மணந்து கொள்,” என வள்ளியிடம் இறைஞ்சி நின்றான்! அவள் உள்ளமும் மெல்லக் காதலில் கனிந்தது.
காதலனின் கருத்தறிந்த பேதைப்பெண் நாணமும் அச்சமும் ஒருசேரக் கொண்டாள். “உயர்குடிப்பிறந்த உமக்கும் வேடர் குலத்துப் பிறந்த எனக்கும் எவ்வாறு பொருத்தம்?” என்று கேட்டாள்.
திரும்பத் தன் தந்தையும் அவன் கூட்டத்தாரும் வர, என்ன ஆகுமோ என அஞ்சினாள். தன்மீது காதல் கொண்டு நிற்பவனை, அவர்கள் சினத்திற்கு ஆளாகாமல் மறைந்து நிற்கக் கூறினாள்.
இங்கு தான் அவளுடைய காதல் உள்ளம், தன்னையறியாமலே குமரன் எனும் காளை பால் சென்று விட்ட உள்ளம், அவனுடைய நன்மையை எண்ணிப் பதைக்கும் உள்ளம், அதன் மென்மை, கனிவு எல்லாம் அவ்விளைஞனுக்கும், நமக்கும் புலனாகின்றது! அவளைத் தவிக்க விடாமல் மாயவித்தைக் காரன் போல் நமது காளை, கிழவேடம் கொண்டான்!
(பேதைப்பெண் வள்ளி இதனை உணர்ந்திலள்!)
என்ன துணிவு! வந்த நம்பிராஜனை வாழ்த்தவும் செய்கிறான்(ர்) அந்த விருத்தன் (முதியவன்): “உனக்கு வெற்றி உண்டாகுக! உன் குலம் தழைக்க!” எனத் திருநீறு தந்தார்!
“என் முதுமை நீங்கி இளமை எய்த இந்தக் குமரித் தீர்த்தத்தில் ஆட வந்தேன்,” என இருபொருள் படுமாறு தந்தையிடமே சொல்கிறான் முதியவன்!
‘நீண்டதனி மூப்பகல நெஞ்சமருள் நீங்க
ஈண்டுநும் வரைக்குமரி எய்தி இனிதாட
வேண்டிவரு கின்றனன் மெலிந்துகடி தென்றான்’
‘உமது மலையிலுள்ள குமரித் தீர்த்தத்திலாட (அ) உமது மகளான இந்தக் குமரி வள்ளியைக் கூடி மகிழ’ என இருவிதமாகப் பொருள் கொள்ளலாம்!
அப்பனுக்குப் பாடம் சொன்ன முருகன் இங்கு அப்பனிடமிருந்து கற்ற பாடத்தைத் தானும் திரும்பப் படித்து, நடித்துப் பார்க்கிறான்! (தவ முனிவர் வேடம் கொண்டு வந்து தன் தலைவியைச் சீண்டி விளையாடுகிறான்!)
“அங்ஙனமே செய்வீராக! என் அருமை மகளுக்கும் துணையாக இருப்பீராக,” என்று வெகுளியாகக் கூறுகிறான் நம்பிராஜன்! இப்படியும் ஒரு தகப்பன்.
அவன் சென்றதும், “பெண்ணே! பசிக்கின்றது,” என்று பெரியவர், தேனையும், தினைமாவையும் உண்டு பின் தாகத்திற்கு நீர் கேட்டார்! அவள் சுட்டிய சுனைக்கு வழி தெரியாதது போல் நடித்து, தன்னைக் கைப்பிடித்து அழைத்துச் செல்லுமாறு செய்தார். நீரையும் பருகித் தாகமும் தீர்ந்தது. உடலில் தெம்பு வந்ததும் மனம் வேறெல்லாமோ எண்ணியது. வள்ளி மேல் கொண்ட மோகம் பெருகியது. “அதையும் தீர்ப்பாயா?” எனக் குறும்புடன் கேட்டார்.
“நரைத்த தலைக் கிழவனாரே! தவவேடம் கொண்ட உமக்கு இது தகுமோ? எனது குலத்தார் இதனை அறிந்தால் உமக்குக் கேடு தான் விளையும். பித்தர் போலும் பிதற்றி உமது குலத் துக்கும் எனது வேடர் குலத்துக்கும் பெரும் பழியைச் செய்து விட்டீர்,” எனச் சீற்றத்துடன் மொழிகிறாள் வள்ளிக் குமரி!
விடு விடென்று அங்கிருந்து புனங்காக்கப் புறப்பட்டுச் செல்லலானாள்.
இப்போது காளை தவிக்கிறான். கன்னிக் கனியமுது கைநழுவிப் போயிற்றே! குறும்புக்காரக் கிழவனாக வந்தவன் குமரனல்லவோ? தன் அண்ணன் தந்திமுகத்து விநாயகனைத் துதித்தான். அவரும் தம்பிக்கு உதவ வேண்டி, மதயானை வடிவெடுத்து, அண்டமெல்லாம் நடுங்க ஒடோடி வந்தார்.
இப்போது வள்ளி என்ன செய்வாள் பாவம். சிந்திக்கப் பொழுதில்லை! ஆபத்துக்குப் பாவமில்லை! ஆகவே மிகுந்த அச்சம் கொண்டவள், பொய்வேடம் கொண்டு நின்ற புங்கவனான கிழவ னாரை அணுகி, “இவ்வேழத்தினிடமிருந்து என்னைக் காத்தருளுக,” என அவரை இறுகத் தழுவிக் கொண்டனள்.
அவ்வேளை யில்வள்ளி அச்சமொடு மீண்டுதவப்
பொய்வேடங் கொண்டுநின்ற புங்கவன்தன் பாலணுகி
இவ்வேழங் காத்தருள்க எந்தைநீர் சொற்றபடி
செய்வேன் எனவொருபால் சேர்ந்துதழீஇக் கொண்டனளே.
இப்போது குமரனின் உள்ளமும் உடலும் குளிர்ந்தது! தான் காதல் கொண்ட மங்கைக்குத் தன் உண்மை வடிவைக் காட்டி நின்றான் அந்தக் குறும்புக்காரன். வேழமும் தான் வந்த செயல் நிறைவேறியதால் விரைந்தோடி மறைந்தது! காதல் மங்கை நாணினாள்; வியர்த்தாள்; அயர்ந்தாள்; அச்சம் கொண்டாள். காதலில் அவனுக்கிணையாகக் கசிந்துருகினாள்.
நம்மை அணையும்வகை நற்றவஞ்செய் தாய்அதனால்
இம்மை தனிலுன்னை எய்தினோ மென்றெங்கள்
அம்மை தனைத்தழுவி ஐயன் அருள்புரிந்தான்.
வள்ளியுடன் கூடி இன்புற்றிருந்தபின், “நீ தினைப்புனம் செல்; நான் அங்கே வருவேன்,” எனக் கூறினான். திரும்பச் சென்ற வள்ளியிடம் தோழி வருகின்றாள்.
“என்னம்மா இது? பறவைகளெல்லாம் வந்து பயிர்களைப் பாழ்படுத்த விட்டு விட்டு நீ எங்கு சென்றாய்?” எனக் கேட்டாள். அவளை மேலும் கீழுமாகப் பார்வையால் துளைத்தெடுக்கிறாள்.
வள்ளியின் உடலிலொரு புது வாசனை (நாற்றம்); உருவம் சிறிது மாறுபட்டுத் தெரிகின்றது! நடந்து கொள்ளும் விதமும் புதுமையாக உள்ளது. எங்கோ பார்த்தபடி விட்டேற்றியாக அல்லவோ மறுமொழி பகருகிறாள். சொல்லும் செயலும் (மாற்றமும் செய்கையும்) உள்ளமும் இவை எல்லாமே வேறுபட்டுத் தெரிகின்றன தோழிக்கு! இவையெல்லாம் காதலனுடன் கூடிக் களித்தமையால் வந்த மாற்றங்கள் என ஊகித்து அறிந்த தோழி (இகுளை), “எங்கேயடி சென்றாய்?” என உரிமையுடன் கேட்கிறாள்.
நாற்றமுந் தோற்றமும் நவிலொ ழுக்கமும்
மாற்றமுஞ் செய்கையும் மனமும் மற்றதும்
வேற்றுமை யாதலும் விளைவு நோக்கியே
தேற்றமொடு இகுளையங்கு இனைய செப்புவாள்.
“போடி, நான் மலை மீதுள்ள சுனை நீரில் ஆடச் சென்றேன்,’ என வள்ளி நாணத்துடன் எங்கோ பார்த்தபடி கூற, தோழிக்கு எழுந்த ஐயம் நிச்சயமாகின்றது.
“விழிகள் சிவந்து வாய் வெளுத்து, உடலில் வியர்வையும் விம்மிய நெஞ்சகமுமாக, கைவளை நெகிழவும், ஆடியவர்க்கு இவற்றை எல்லாம் செய்விக்கும் தண்மையான சுனை எங்கே உள்ளதடி, காட்டுவாய்!” என வள்ளியிடம் தோழி கூறுகிறாள்.
மைவிழி சிவப்பவும் வாய்வெ ளுப்பவும்
மெய்வியர் வடையவும் நகிலம் விம்மவுங்
கைவளை நெகிழவுங் காட்டுந் தண்சுனை
எவ்விடை இருந்துளது இயம்பு வாயென்றாள்.
தோழி புரிந்து கொண்டதை, வள்ளியும் அறிந்து கொண்டாள். “அடி, நீயல்லவோ எனக்கு உற்ற தோழி, என்னைத் தவறாக எண்ணலாமோ?” என்று வேண்டினாள்.
காதல் நிறைவேறத் தோழியின் உதவி தாராளமாக வேண்டும் அல்லவோ?
அச்சமயம் குமரன் எனும் காதல் தலைவன் (வள்ளியின் தலைவன்) தனது அம்பினால் புண்பட்ட வேழம் ஒன்றினைத் தேடியவாறு வருபவன் போல் வந்து நின்றான்.
கொம்பினைக் கையிலேந்தி, குறி தவறாத அம்புகளை உடையவனாய், தீட்டப்பட்ட குறுவாளினையும் கொண்டு, கச்சினை இறுகக்கட்டி, வேட்டையால் இளைத்துக் காணப்பட்டவனாயும், தாள்கள் சிவக்குமாறு அவன் அங்கு தோன்றினான் என்பார் கச்சியப்பர்.
கோட்டிய நிலையினன் குறிக்கொள் வாளியன்
தீட்டிய குறியவாள் செறித்த கச்சினன்
வேட்டம தழுங்கிய வினைவ லோனெனத்
தாட்டுணை சிவந்திடத் தமியன் ஏகினான்.
இருவரும் ( வள்ளியும் முருகன் எனும் குமரனும்) கொண்ட மையல் தன்னை அவர்கள் இருவரின் கண்களும் உரையாடுவதிலிருந்து புரிந்து கொண்டாள் தோழி. அவள் உதவியின்றி, இக்காதல் நிறைவேறாது என்றுணர்ந்த குமரவேள் அவள் உதவியை வேண்டுகிறான். பல நாட்கள் ரகசியமாக இவர்கள் சந்தித்து மகிழத் தோழி உதவுகின்றாள்.
தோழியின் குறுக்கீட்டினால் தான் காதலர் ஒன்று சேர்கின்றனர். தந்தை அறிந்து கொண்டதும், அவனறியாமல் குமரன் எனும் காதலனுடன் வள்ளியை உடன்போக்காக அனுப்பி வைப்பதும் தோழி தான்! அவள் மதியூகத்தினால் தான் இக்காதல் கடிமணத்திலும் நிறைவு பெறுகின்றது!
காதலின் பொன்வீதியில் காதலர் வெற்றி நடை பயில எல்லாம் அறிந்த தோழியின் துணை மிகவும் அவசியம் என நாம் காண்கிறோம்.
தலைவன் கடிமண நாளை நீட்டும் போதுக் கடிந்துரைப்பதும் தோழியே!
அவனுடன் தலைவியை யாரும் அறியாது அனுப்பி வைப்பதும் தோழியே!
‘மணம் புரிந்து செல்லும் எம் தலைவியைக் காதலுடன் வாழ்நாள் முழுமையும் போற்றுவாயாக,’ எனக் கண்ணீர் மல்கத் தலைமகனிடம் வேண்டுவதும் அந்த உற்ற தோழியே!
*************************************************************