Author: சு.கோதண்டராமன்

  • பாரதியின் வேதமுகம்-17

    சு. கோதண்டராமன்

    நையப் புடை

          மகாகவி பாரதி வேதங்களைப் பொருளுணர்ந்து கற்றவர் என்றும் அத்வைத வேதாந்தத்தில் தோய்ந்தவர் என்றும் கண்டோம். ஆனால் நான் பெற்ற அத்வைத இன்பத்தை நீங்களும் அனுபவியுங்கள் என்று அவர் மக்களுக்கு அறைகூவல் விடுக்கவில்லை. வேதாந்தம் என்பது அதற்கு உரிய தாகமும் வயதும் சூழ்நி்லைகளும் வாய்க்கப் பெற்றோருக்கு மட்டுமே உரியது. மற்றவர் உலகக் கடமைகளிலிருந்து தப்புவதற்காக வேதாந்தத்தில் புகுந்து ஒளிந்து கொள்ளக் கூடாது என்பது அவரது கருத்து.

          எல்லா சாஸ்திரங்களும் ஏறக்குறைய உண்மை தான். ஆனால் எல்லோருக்கும் எப்போதும் ஒரே சாஸ்திரம் ஒத்து வராது.

          வயதான பிறகு கடோபநிஷத்தையும் சுந்தர காண்டத்தையும பாராயணம் பண்ணிக் கொண்டிருக்கட்டும் என்று கூறின பாரதி இளைஞர்களுக்கும் குடித்தனக்காரர்களுக்கும் கூறும் அறிவுரைகள்  அவரது புதிய ஆத்திசூடியில் உள்ளன. மற்ற விஷயங்களில் புதுமை செய்தது போல, வேதாந்தத்தையும் உலகியலையும் ஒருங்கே போற்றியதன் மூலமும் பாரதி புதுமை செய்துள்ளார்.

          அவருடைய புதிய ஆத்திசூடியில் காணப்படும் நையப் புடை என்ற வாசகம் நம் கவனத்தை ஈர்க்கிறது. அந்தச் சொற்களில் தான் என்ன வேகம்! அவற்றில் பாரதியின் முழுக் கோபமும் வெளிப்படுகிறது.

          பாரதி என்ன வன்முறையாளரா? அன்பு இல்லாத வன்நெஞ்சரா? இல்லை, இல்லை. கொல்ல வரும் புலியையும் அன்போடு சிந்தையில் போற்றச் சொன்னவர் அல்லவா அவர்? இப்பொழுது யாரை நையப் புடைக்கக் கூறுகிறார்?

                பாரதியை முழுமையாகப் படித்தால் இதன் உட்பொருள் தெரிய வரும். புலியினும் கொடிதான பகைவர்கள் நம்மிடையே உள்ளனர். அவர்களைத் தான் அவர் நையப் புடைக்கச் சொல்கிறார். யார் அந்தப் பகைவர்கள்? ஆத்திசூடியிலேயே அந்தப் பட்டியல் வருகிறது. அச்சம், இளைப்பு, மௌட்டியம், ஓய்தல் இவை தாம் அவை.

                பாரதம் தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டு பாழ்பட்டு நின்றதற்குக் காரணம் நம் மக்களிடத்தில் உள்ள இத் தீய குணங்கள் தாம் என்பதை உணர்ந்த பாரதி அவற்றில் முதன்மையான அச்சத்தை ஒழிக்கச் சொல்லிப் பலகாலும் வற்புறுத்துகிறார். பாப்பாவிற்குக் கூறும் அறிவுரையில்,

                பாதகம் செய்பவரைக் கண்டால் நீ

                பயம் கொள்ளலாகாது பாப்பா,

                மோதி மிதித்து விடு பாப்பா அவர்

                முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா

    என்று பாடி அச்சமின்மையைப் பிஞ்சு நெஞ்சில் விதைக்கிறார்.

                பாரதியாரின் அச்சமில்லை பாட்டு பிரசித்தமானது.

                    இச்சகத் துளோரெலாம் எதிர்த்து நின்ற போதிலும்

                    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

                    மற்றவர்கள் தன்னைத் துச்சமாக எண்ணித் தூற்றினாலும், பொருள் எல்லாம் இழந்து பிச்சை எடுக்கும் நிலை ஏற்பட்ட போதிலும், வேசையர் வலை வீசினாலும், நண்பரே துரோகம் செய்த போதிலும், பெரும் படை தன்னைக் கொல்ல வந்து நின்றாலும் உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் எந்த சூழ்நிலையிலும் அஞ்சாமல் நிமிர்ந்து நிற்க வேண்டும் என்கிறார்.

                    அச்சத்தை அழித்து விட்டால் மரணமில்லாப் பெருவாழ்வே கிடைக்குமாம்.

                    நாணத்தைக் கவலையினைச் சினத்தைப் பொய்யை

                    அச்சத்தை வேட்கைதனை அழித்து விட்டால்

                    அப்போது சாவுமங்கே அழிந்து போகும்

                    மனிதருக்கு இயல்பாக ஏற்பட்ட அச்சத்தை நீக்கித் தனக்கு அருள வேண்டும் என மகாசக்தியை வேண்டுகிறார்

                    ஐயம் தீர்த்து விடல் வேண்டும் புலை

                    அச்சம் போயொழிதல் வேண்டும்

                    மகாசக்தியின் பாதங்களைச் சரணடைந்து விட்டதால் தன் அச்சம் நீங்கிவிட்டதாகக் கூறி மார் தட்டுகிறார் கேளுங்கள்.

          மரணமும் அஞ்சேன் நோயினை அஞ்சேன்

                    மார வெம்பேயினை அஞ்சேன்

                அக்கால மக்களின் கோழைத்தனத்தைப் பார்த்து,

                அஞ்சி அஞ்சிச் சாவார் இவர்

                அஞ்சாத பொருள் இல்லை அவனியிலே

    என்று நெஞ்சு பொறுக்காமல் புலம்புகிறார்.

                நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் என்று மார் தட்டிய நாவுக்கரசர் வழி நின்று நம் கவியரசரும்

          காலா என் காலருகே வாடா

                சற்றே உனை மிதிக்கிறேன்   என்றும்

                யார்க்கும் குடியல்லேன் யானென்ப தோர்ந்தனன் மாயையே

                உன்றன் போர்க்கஞ்சுவேனோ பொடியாக்குவேன் உன்னை

    என்றும் கூறுகிறார். சாவுக்கு மட்டுமன்றி வேறு எதற்கும் அஞ்சக் கூடாது என்பது அவரது கருத்து.

                தொன்மைக்கு அஞ்சேல்

                கீழோர்க்கு அஞ்சேல்

                தீயோர்க்கு அஞ்சேல்

                பேய்களுக்கு அஞ்சேல்

          தருமத்திற்கும் நீதிக்கும் பயப்படவேண்டும், தலை வணங்க வேண்டும் என்ற முன்னோர் கருத்தை வலியுறுத்தும்போது கூட நீதி நூல் பயில், நீதி தவறேல் என்பாரே அன்றி பயப்படு, தலை வணங்கு என்ற சொற்களைத் தவறியும் பயன்படுத்தவில்லை.

          ஆறுவது சினம், நயம்பட உரை — ஔவையின் இந்த உபதேசங்களிலிருந்து மாறுபடுகிறார் பாரதி. சினத்தை முன்னே வென்றிடுவீர் என்று அவர் சொன்னாலும், தீமையைக் கண்டால் எல்லையற்ற கோபம் பொங்கி வரவேண்டும், அப்படி வராதவன் நாயினும் கீழானவன் என்பது அவர் கருத்து.

                ரௌத்திரம் பழகு

                வெடிப்புறப் பேசு

                கொடுமையை எதிர்த்து நில்

                சீறுவார்ச் சீறு

    என்ற வாசகங்களாலும்

                தாய் பிறன் கைப்படச் சகிப்பவனாகி

                நாயென வாழ்பவன் நமரில் இங்கு உளனா

    என்ற அடிகளாலும் தீமையை எதிர்த்துப் போராட ஊக்கம் கொடுக்கிறார். இத்தகைய முயற்சியில் சாவது நேரினும் அஞ்சாமல் முனையிலே முகத்து நிற்கும்படி அவர் கூறியது இளைஞர்களுக்கு எவ்வளவு எழுச்சி ஊட்டக்கூடியது!

                    ஆண்கள் மட்டுமன்றிப் பெண்களும் அச்சம் தவிர்த்து வாழ வேண்டும் என்பதையும் பல இடங்களில் கூறுகிறார்.

                    நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்

                    ஞான நல்லறம் வீர சுதந்திரம்

                    பேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாம்.

                நையப் புடைத்து ஒழிக்க வேண்டியவற்றில் அடுத்து வருவது இளைப்பு.

                உடலினை உறுதி செய்

                ஊண் மிக விரும்பு

                இளைப்பது இகழ்ச்சி என்றும்

                அரிவாளைக் கொண்டு பிளந்தாலும் கட்டு மாறா உடல் உறுதி வேண்டும் என்றும் அவர் உடலைப் பேண வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறார். நோயாளியைக் கண்டால் அவருக்கு மட்டற்ற கோபம் வருகிறது. வலிமையற்ற தோளினானை, மார்பிலே ஒடுங்கினானை, பொலிவிலா முகத்தினானை, பொறியிழந்த விழியினானை, ஒலியிழந்த குரலினானை, ஒளியிழந்த மேனியானைப் போ போ என்று கழுத்தைப் பிடித்துத் தள்ளி நோய்களற்ற உடலினானை வா வா என்று வரவேற்கிறார். நோயினுக்கு இடம் கொடேல், யௌவனம் காத்தல் செய் என்று அறிவுறுத்திய அவர் தளர்ந்த முதுமைக் கோலத்தோடு தான் வாழக் கூடாது என்று கருதித் தானோ என்னவோ இளமையிலேயே இறந்து விட்டார்.

                அவரது பாடல்களை ஒரு முறை படித்து விட்டாலே யாருக்கும் தாழ்ந்து நடவாமல் நிமிர்ந்து ஏறு போல் நடக்கத் தோன்றுகிறது.

                நொய்ந்தது சாகும் என்ற இயற்கை நியதியை வலியுறுத்துகிறது புதிய ஆத்திசூடி. இதை விளக்கும் வகையில் அவரது வசன கவிதை,

                காற்றுத் தேவன் மெல்லிய தீயை அவித்து விடுவான், வலிய தீயை வளர்ப்பான். எனவே நொய்ந்த உடல், நொய்ந்த உள்ளம் இவற்றை ஒழித்து விட்டு உயிரை வலிமையுற நிறுத்துவோம் வாருங்கள் என்று முழங்குகிறது.

                நமது மூன்றாவது எதிரி மௌட்டியம் (மூடத்தனம்). அதில் தான் எத்தனை வகை நம்மிடம் உள்ளன. கஞ்சி குடிப்பதற்கு இல்லாத நிலையில் அதன் காரணம் இவை என்று அறியாமை, வஞ்சனைப் பேய்கள், மந்திரவாதி, சோதிடம் இவற்றை நம்புதல், மூடப் பழக்கங்கள் எனத் தெரிந்தும் முன்னையோர் சொன்னது என்பதால் கண் மூடித்தனமாகப் பின்பற்றுதல், நூலினைப் படித்துணராமல் பொய்மைச் சாத்திரங்களை நம்பி மாதர் தம்மை இழிவு செய்யும் மடமை, ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று அலையும் அறிவீனம்– அப்பப்பா, எத்திசை நோக்கினும் நமது தாழ்வுக்குக் காரணமாக நிற்பது அறியாமையே என்பதை உணர்ந்த அவர் இதை நையப் புடைத்து ஒழிக்கச் சொன்ன வசனங்கள் இவை:-

                சோதிடம் தனை இகழ்

                தொன்மைக்கு அஞ்சேல்

                பிணத்தினைப் போற்றேல்

                புதியன விரும்பு

                மௌட்டியம் தனைக் கொல்

                வேதம் புதிது செய்

                நமது நாலாவது எதிரி சோம்பல்.

                ஓய்தல் ஒழி

                நாளெல்லாம் வினை செய்

                யவனர் போல் முயற்சி கொள்

                கெடுப்பது சோர்வு என்றும்

    சோம்பல் மிகக் கெடுதி பாப்பா என்றும் தொழிலிலே சோம்பலைப் போல் இழிவில்லை என்றும் கூறிய அவர்

    ஊக்கமும் உள்வலியும் உண்மையிற் பற்றுமில்லா

    மாக்களுக்கோர் கணமும் வாழத் தகுதி உண்டோ என்று சாடுகிறார்.

                    அச்சத்தை ஒழிக்கவேண்டும், வலிமையைப் பெருக்க வேண்டும்  என்ற எண்ணம் பாரதிக்கு எப்படி ஏற்பட்டது? சந்தேகமில்லாமல் வேதத்திலிருந்து தான். இது தொடர்பாக விவேகானந்தர் கூறுவதைக் கேட்போம்.

                    “வலிமை, வலிமை-இதுதான் உபநிடதத்தின் ஒவ்வொரு பக்கமும் எனக்குக் கூறும் செய்தி. நினைவில் வைக்க வேண்டிய ஒரு பெரும் விஷயம் இதுவே. என் வாழ்க்கையில் எனக்குக் கற்பிக்கப்பட்ட மிகப் பெரும் பாடம் இதுவே. உபநிஷத் கூறுகிறது, வலிமை, வலிமை. மனிதா, பலவீனனாக இராதே. பலவீனத்தைப் பலவீனத்தால் குணப்படுத்த முடியுமா? அழுக்கை அழுக்கால் போக்க முடியுமா? மனிதா, நிமிர்ந்து நில். வலிமையாக இரு.

                    “ஆம், உலகிலேயே அபீ: (பயப்படாதே) என்று திரும்பத் திரும்பக் கூறும் இலக்கியம் உபநிஷத் ஒன்று தான். உலகின் வேறு எந்த சமய இலக்கியத்திலும் கடவுளின் தன்மையாகவோ மனிதனின் தன்மையாகவோ அச்சமின்மை கூறப்படவில்லை.

                    “உத்திஷ்டத, ஜாக்ரத, ப்ராப்ய வரான் நிபோத- எழுந்திரு, விழித்துக் கொள், லட்சியத்தை அடையும் வரை நிறுத்தாதே. இளைஞர்களே, எழுந்திருங்கள், விழியுங்கள். நேரம் சாதகமாக உள்ளது. வாய்ப்புகள் நம் கண் முன்னே விரிந்து தயாராகக் காட்சி தருகின்றன. தைரியமாக இருங்கள். அஞ்சாதீர்கள். நம்முடைய சமய இலக்கியத்தில் மட்டும் தான் அச்சமின்மை என்ற சொல் ஆண்டவனின் இயல்பாகக் கூறப்பட்டுள்ளது.  நாம் அனைவரும் அச்சமற்றவர்களாக ஆக வேண்டும். வேலை முடிந்துவிடும்.

                    “உண்மையான வேதாந்தி ஆவதற்கு முதல் படி அச்சமற்று இருக்க வேண்டும். பலவீனம் தொலைய வேண்டும். இது மிகவும் கடினம் தான். உலகப் பற்றை முற்றிலும் துறந்தவர்கள் கூடச் சில சமயம் மனதின் அந்தரங்கத்திற்குள் பலவீனத்தை உணர்வார்கள். ஆசாபாசங்களில் சிக்கி உழலும் சராசரி மனிதனைப் பற்றிக் கேட்பானேன்? அவர்களது வாழ்க்கையில் அவர்கள் ஆயிரம் ஆயிரம் விஷயங்களுக்கு அடிமையாகப் பயந்து பயந்து வாழ்கின்றனர்.”

          பாரதியின் அச்சமில்லை என்ற பாட்டுக்கும், வலிமை கொண்ட தோளினாய் வா வா வா என்ற வரிகளுக்கும் வேர் எங்கிருக்கிறது என்று தெரிகிறது அல்லவா?

                வாருங்கள், பாரதியுடன் சேர்ந்து பேரிகை கொட்டுவோம்–அச்சம், இளைப்பு, அறியாமை, சோம்பல் என்னும் பகையே, நையப் புடைக்கத் துள்ளி வருகுது வேல், சுற்றி நில்லாதே,போ.

    Share
  • திருக்கோட்டாறு

    சு.கோதண்டராமன்

    (காரைக்கால் அருகில் உள்ளது திருக்கோட்டாறு என்னும் பாடல் பெற்ற தலம். இன்று திருக்கொட்டாரம் என்று அழைக்கப்படுகிறது. அண்மையில் அத் தலத்தில் நான்கு நாட்கள் தங்கி இருந்தேன்.)

    அன்றொரு நாளில் ஆளுடைப் பிள்ளை
    அடியார் பலருடன் இவ்வூர் வந்தார்.
    அன்றவர் கண்ட தெண்டிரை நீர்வயல்
    குரவமர் மலர்ப் பொழில் குருந்த மாதவி
    வண்ட லார் வயற் சாலி யாலைகள்
    ஆடகம் பெறு மாட மாளிகை
    இன்றும் உண்டு. யானும் கண்டேன்.

    எங்கும் பசுமை நிரம்பக் கண்டேன்
    இடை இடை வண்ணப் பூக்கள் கண்டேன்
    தென்னை மரங்கள் தலையை ஆட்டி
    தேன் மலர் வாசம் சுமந்து வந்த
    வாயு தேவனை வணங்கக் கண்டேன்.

    காற்றில் அசையும் செடிகளின் சலசல
    கன்றை அழைக்கும் பசுவின் அம்மாவ்
    பறவைப் பாடல் பற்பல பல வகை
    பிக்விக் கொக்கொக் கிர்ரீய்ங் சிக்சிகி
    (இன்னும் உண்டு. ஏட்டில் இடமிலை)
    இத்தனை இசைகளும் இத்தனை ஒலிகளும்
    இங்குள அமைதியை அதிகப் படுத்தின.

    அகத்திய முனிவரின் ஆசிர மம் போல்
    அழகு எளிமை அமைதி தூய்மை
    இயற்கை அன்னையின் இதம் தரு அணைப்பில்
    எழிலைப் பருகும் குழவியாய்க் கிடந்தேன்.
    தவமே புரியத் தேவை இல்லை
    தானே ஈசன் பேசும் இடமிது.

    ஊரின் நடுவில் உள்ளது கோவில்
    ஞானசம் பந்தர் வாழ்ந்த காலை
    விரவி நாளும் விழாவிடைப் பொலியும்
    தொண்டர் வந்து வியந்து பண்செயும்
    கோட்டாற் றிலுயர் கோவில் என்று
    கூறிய தென்னவோ இன்று வெற்றுக்
    கனவாய்ப் பழைய கதையாய்ப் போனது.

    ஊரே அமைதி, ஆலயம் விலக்கோ?
    மணியை ஆட்டி உணவைக் காட்ட
    மதியம் ஒரு முறை குருக்கள் வருகிறார்.
    மாலையில் எவரோ விளக்கிடு வார்கள்.
    மற்றையோ ரிங்கே வருவது இல்லை
    இருக்கொடு தோத்திரம் இயம்புவார் இல்லை
    மேளம் தாளம் மணிகள் ஏது?

    பாலறா வாயர் ஆலயம் சுற்றி
    சிற்றடி யாலே சீர்வலம் வந்து
    சிறுகை தட்டித் தாளம் இட்டு
    இசைத்த செந்தமிழ்த் தேவா ரத்தின்
    இனிமையை நெஞ்சில் அசைபோட் டபடி
    வண்டார் குழலி உடனுறை நாதன்
    வானோர் பெருமான் ஐராவ தீசன்
    முன்னை நாளிக் கோயிலின் சிறப்பும்
    இன்றை நாளில் இயன்ற தாழ்வும்
    ஒப்பு நோக்கியோ உள்ளம் நொந்தோ
    தனிமையே துணையாய் தன்னில் தானாய்
    மோனத் தவத்தில் மூழ்கி இருக்கிறான்.

     

    படத்துக்கு நன்றி: http://news-amanushyam.blogspot.com/2013/01/blog-post_8882.html

     

    Share
  • பாரதியின் வேத முகம் – 16

    சு.கோதண்டராமன்

     

    வேதம் புதுமை செய்

    இடைக்காலம் வரை ஒரு சிலரிடம் மட்டுமே முடங்கிக் கிடந்த வேதங்களை மேலை நாட்டவர் கண்டுபிடித்து மிகுந்த முயற்சியுடன் கற்று மற்றவர்க்கும் பயன்படும் வகையில் அவற்றை மொழி பெயர்த்து வெளியிட்டுள்ளனர். அதற்காக நாம் அவர்களுக்கு நன்றி செலுத்த வேண்டும். இந்த மொழிபெயர்ப்புகள் எல்லாவற்றிற்கும் அடிப்படை ஸாயணாசார்யர் என்பவர் 14 ஆம் நூற்றாண்டில் எழுதிய உரை தான். ஸாயணரோ வேதங்களுக்கு வேள்விக் கண்ணோட்டத்துடனேயே உரை எழுதி உள்ளார். வேறு வகையான உரைகள் கிடைக்காத நிலையில் மேலை நாட்டவர் இதனையே வேதத்தின் உண்மையான கருத்து என்று கருதி அதன் அடிப்படையில்  சில விளக்கங்கள் கொடுத்துள்ளனர்.

    இவர்கள் கூறுவதாவது, “பண்டைய ஆரியர்கள் மின்னல், நீர், காற்று, தீ முதலான இயற்கைத் தெய்வங்களை வணங்கினர். இந்தத் தெய்வங்களை மகிழ்விக்க வேள்விகள் செய்தனர். இவற்றில் இவர்கள் தீ வளர்த்து அதில் விலங்குகளைப் பலியிட்டும் சோமரசம் என்னும் போதை தரும் பானங்களை அளித்தும் வழிபட்டனர். தங்களை விரோதிகளிடமிருந்து காப்பாற்றுமாறு இவர்கள் தேவர்களை வேண்டினர். விரோதிகள் என அவர்கள் குறிப்பிடுவது இந்த வேள்வி முறைக்கு மாறுபட்ட கூட்டத்தினரான திராவிடர் என்னும் கூட்டத்தாரை.”

    ஆங்கிலேய வரலாற்று ஆசிரியர்களின் கற்பனையான ஆரியர் குடியேற்றம்,  திராவிடர்களுடன் போர் முதலிய கொள்கைகள் அவர்கள் நம்மைப் பிரித்து வைத்து ஆளுவதற்கு வசதியாக இருந்தது. அவர்களது இந்தக் கண்டுபிடிப்புகளை மறு பரிசீலனை இன்றி ஒப்புக்கொண்ட நம் நாட்டு ஆசிரியர்களும் அக் கருத்துகளையே உண்மை என்பதாகப் பரப்பி வந்துள்ளனர்.

    இவ்வாறு வேதங்கள் தவறான முறையில் புரிந்து கொள்ளப்பட்டதால் பலரும் வேதத்தை இகழும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் அரவிந்தரும் அவர் வழி நின்று பாரதியும் ஆன்மிகக் குறியீட்டு முறையில் வேதத்திற்குப் பொருள் கண்டு இது வரை தெளிவு படுத்தப்படாத பகுதிகளில் சிறந்த ஆன்மிகக் கருத்துகள் அடங்கி இருப்பதை வெளிப்படுத்தினர்.

    ஆன்மிகக் குறீயீடு என்பது என்ன? வேதத்தில் சொல்லப்பட்ட வேள்வி என்பது மனிதன் இறை நிலை அடையச் செய்யும் முயற்சியைக் குறிக்கும். இந்திரன் என்பது இடி மின்னல் தெய்வம் அல்ல. அது விஞ்ஞான சக்தியை அதாவது தெய்விகத் தன்மை கொண்ட மனத்தைக் குறிக்கிறது. அக்னி என்பது தீ அல்ல. அது ஞான சக்தி என்னும் அறிவுத் துணிவை அதாவது மேல்நிலை அடையவேண்டும் என்னும் இறை நாட்டத்தைச் சுட்டும். அவ்வாறே சூரியன் என்பது அறிவாகிய ஒளியையும், கோ (பசு)  என்பது அதன் கிரணங்களையும் குறிக்கும். வேள்வியில் அளிக்கப்படும் ஹவிஸ் எனப்படும் நெய்யுணவிற்கு ஞானத் தெளிவு என்று பொருள் கொள்ள வேண்டும். விருத்திரன் என்பது ஆரியருக்கு விரோதமான திராவிடர் இனத் தலைவன் அல்ல. அதன் வேர்ச் சொல்லான விருத் என்பது மறைத்தல் என்னும் பொருள் உடையது. அது அறிவை மறைக்கும்   அஞ்ஞானத்தைக் குறிக்கிறது.

    அரவிந்தர் தன் கற்பனையை வேத மந்திரங்களில் புகுத்துகிறாரோ என்ற ஐயம் எழலாம். ஸாயணருக்குக் காலத்தால் முந்தியவரான யாஸ்கர் என்பவர் வேதத்திற்கு அரும்பதவுரை எழுதியுள்ளார். அவர் சொற்களின் வேர் வரை சென்று பொருள் காண்பவர். அவரது வழி நின்றே அரவிந்தரும் இந்திரன் முதலான சொற்களுக்குப் புதிய பொருள் தருகிறார்.

    சடங்குகளைப் போற்றும் கொள்கை உடைய ஸாயணரும் சில இடங்களில் இத்தகைய குறியீட்டுப் பொருள் தருகிறார். பல இடங்களில் சடங்குகளுக்குப் பயன்படும் வகையில் வலிந்து பொருள் கொள்கிறார். இந்த முரண்பாட்டை நீக்குகிறார் அரவிந்தர். மேலும் பல சூக்தங்களில் ஸாயணரும் அவரை ஒட்டி மொழிபெயர்த்த மேலை நாட்டவரும் தரும் பொருள் புரியாத புதிராக உள்ளது. அரவிந்தரின் குறியீடு தான் அதைச் சரியாக விளக்குகிறது.

    உதாரணத்திற்கு ரிக் வேதம் 1-32 இன் மொழிபெயர்ப்பு இது.

    “1 இந்திரனுடைய வீரச் செயல்களை இங்கு சொல்லுகின்றேன். அவன் வஜ்ரி. மின்னல் அவனுக்குப் படை. அவனுடைய முன்னைத் திறமைகளைச் சொல்லுகின்றேன். பாம்பைக் கொன்றான். மலைகளின் சார்புகளை உடைத்தான்.

                    “2 மலையின் மேலே கிடந்த விருத்திரப் பாம்பை அழித்து விட்டான். வானத்தாலாகிய வயிரப் படையை இவனுக்கு த்வஷ்டா என்ற தேவன் செய்து கொடுத்தான். நதிகள் வானக் கடலை நோக்கிப் பாடிக் கொண்டு செல்கின்றன, இரைந்து கொண்டு செல்லும் ஆவினம் போல.

                    “3 இந்திரன் ஏறு போன்றான். மூன்று படிகளிலே மதுவுண்டான். அந்த மது வேள்வியிலே வடிக்கப்பட்டது.

                    “4 அரவுகளிலே முதலில் தோன்றியவனை இந்திரன் கொன்ற பிறகு மற்ற மாயாவிகளின் மாயைகளை எல்லாம் வென்றான். பின்பு சூர்யனையும் வானத்தையும் உஷாதேவியையும் தோற்றுவித்தான். அதன் பிறகு இந்திரா, உனக்கோர் பகைவனுமில்லை.

                    “5 மறைக்கும் தொழிலே கொண்ட விருத்திரனுக்குத் தோளில்லை. அவனை இந்திரன் பேரிடியாலே கொன்றான். பிளந்த விறகுகளைப் போலே விருத்திரன் மண் மீது சிதறி வீழ்ந்தான்.

                    “6 போர்த் தொழில் அறியாதவன் விருத்திரன். இவன் நேர்மை நாடுவோனும் மகாவீரனுமாகிய இந்திரனைப் போருக்கு அழைத்தான். இந்திரனுடைய அம்புத் திரளை இவனால் கடந்து செல்ல முடியவில்லை. சிதறுகிற தனது திறமைகளை இந்திர சத்ரு ஒன்று சேர்க்க முயன்றான்.

                    “7 காலும் கையும் இல்லாதவன் விருத்திரன். இந்திரனோடு இவன் போர் செய்ய வந்தான். அவனுடைய வயிரப் படை இவனை மலையின் மீது கொன்றது. பலவற்றிலே விளங்குவோன் இந்திரன். ஆணேறுகளை ஆண்மை போகிய எருதுகள் எதிர்ப்பது போல அவனை விருத்திரன் பகைத்தான், சிதறி வீழ்ந்தான்.

                    “8 ஆற்றடி பிளவுண்டு கிடப்பது போலே விருத்திரன் கிடந்தான். இவன் மீது நதிகள் சென்றன. அவை மனதின் மேல் ஏறிச் சென்றன. முன்னர் அவற்றை விருத்திரன் தனது வலிமையாலே சூழ்ந்து நின்றான். இப்போது அவற்றின் அடியிலே வீழ்ந்து கிடக்கிறான்.

                    “9 விருத்திரன் தாயும் அகல வீழ்ந்தாள். தாய் மேலும் மகன் கீழுமாயினர். இந்திரன் அவள் மீது வீசியிருந்த படையை மீட்டுக்கொண்டான். கன்றுடன் கிடக்கும் பசுவைப் போலே கிடந்தனள் தாநு.

                    “10 தங்கு தடையில்லாது பாயும் நதிகளிடையே அவனுடல் அமிழ்ந்திக் கிடந்தது. விருத்திரனது உடல் மறைவைக் கண்டு நதிகள் விரிந்து பெருகின. இந்திரனைப் பகை கொண்டோன் நெட்டிருளில் வீழ்ந்தான்.

                     “11 கதிர்களைப் பணியென்னும் பகைவன் பிடித்து வைத்தது போலே நதிகளை விருத்திரன் தடுத்துக் கொண்டான். அவை பகைவனுக்குப் பத்தினிகள் ஆயின. அவற்றைப் பாம்பு காத்தது. நீர்த் திரள் வெளிப்படும் வாயில் அடைபட்டிருந்தது. விருத்திரனைக் கொன்று இந்திரன் அதைத் திறந்தான்.

                    “12 இந்திரா, முதற் பெருங் கடவுள் உன்னைப் போரிலே செலுத்தினான். அப்போது நீ எமக்கு வலியதோர் உயிர்க் காவலன் ஆயினை. கதிர்களை வென்றாய், சூரா, மதுவை வென்றாய். ஏழு நதிகளையும் பெருகும்படி விடுவித்தாய்.

                    “13 இந்திரனும் விருத்திரனும் போர் செய்த காலத்தில் பகைவன் விளைவித்த மின்னலும் தென்றலும் இடியும் அவன் பொழிந்த மழையும் இவனைத் தீண்டவில்லை. பிறகு பகைவனுடைய சேனைகள் வந்தெதிர்த்தன. அவற்றையும் இந்திரன் வென்றான்.

                    “14 இந்திரா, பகைவனை அழித்தபிறகு, அச்சத்தோடு செல்லும் பருந்து போல, நீ எதன் பொருட்டாகத் தொண்ணூற்று ஒன்பது நதிகளையும் உலகங்களையும் கடந்து மேலேறிச் செல்கிறாய்? நீ கண்டு மனம் அஞ்சத் தகுந்த போராளி பாம்பினிடத்தில் ஏது?

                    “15 செல்வன நிற்பன அனைத்திற்கும் இந்திரனே அரசன். இவன் வயிரப் படையைக் கைக் கொண்டான். சிகரங்களுடைய அனந்த மலைக்கும் இவனே வேந்தன். தொழில் செய்வோரை எல்லாம் இவனே ஆளுகின்றான். ஆரக் கால்களை வளையம் சூழ்ந்திருப்பது போல இவன் அவர்களைச் சூழ்ந்து நிற்கின்றான்.

    மேலே கண்ட மொழி ஆக்கம் நமக்கு எதுவும் விளங்காது இருப்பதில் வியப்பு இல்லை. பாம்பு நதியைக் குகையில் அடைத்து வைத்திருந்தது, இந்திரன் அதைக் கொன்று நதிகளை விடுவித்தான் என்பது குழந்தைக் கதை போல உள்ளது. இதில் என்ன ஆன்மீகத் தத்துவம் இருக்கிறது, இது போன்ற கதைகளைக் கொண்ட வேதத்தைக் கொண்டாடுகிறார்களே என்று நமக்குத் தோன்றும். அதன் உண்மையான பொருளை அறிய அரவிந்தர் வழி நின்று பாரதி அளிக்கும் விளக்கம் கீழே தரப்பட்டுள்ளது.

    “இந்திரன் என்பது விஞ்ஞான சக்தி. இவனுக்குப் பகை அஞ்ஞானம். இந்த அஞ்ஞானத்திற்கு விருத்திரன் என்பது பெயர். (விருத்திரன்= மூடுவோன், மறைப்போன்.) விருத்திரன் இருள், அவனே தெய்வ இன்பங்களிலிருந்து நம்மைப் பிரித்து வைக்கும் அஹங்காரம், அதாவது பிரிவுணர்ச்சி. அவன் தாய்க்குத் தாநு என்று பெயர். (தாநு= பிரிப்பது)

    “நமக்குள்ளே மூன்று படிகள் இருக்கின்றன, மண், காற்று வானம் என. வானத்தின் மேலே உண்மை உலகம் இருக்கிறது. அந்த உண்மை உலகத்திலிருந்து நமது அறிவிலே ஞான ஒளியின் கிரணங்களும் தேவ இன்பங்களாகிய நதிகளும் எப்போதும் பாயும்படி செய்ய வேண்டும். இதுவே வேத ரிஷிகளின் நாட்டம்.

    “அந்த நதிகளையும் கதிர்களையும் நம்முள்ளே பாயவொட்டாதபடி விருத்திராசுரனும், பணி முதலிய மற்றப் பிசாசுகளும் தடுக்கின்றன. அச்சம், கவலை, சிறுமை, திகைப்பு, சோர்வு முதலாக நம்முள்ளே வாழும் அசுரருக்குக் கணக்கில்லை. இவர்களுக்கெல்லாம் தலைவன் விருத்திரன். இவன் மேற்கூறப்பட்ட தேவநதிகளை மண்மலையின் கீழே உள்ள ஓர் இருட்குகையில் அடக்கி வைத்து அவை நமது அறிவிலே பாயாதபடி மேலே நின்று தடுக்கிறான்.

    “இந்த விருத்திரனை வேதம் பாம்பு என்று சொல்லுகிறது. அஞ்ஞானம் ஒரு விஷப்பூச்சி. அதற்குக் கை கால் கிடையாது. வீரியம் கிடையாது. நெளிந்து நெளிந்து உள்ளே புகுந்து ஒளியையும் இன்பத்தையும் மறைக்கிறது.

    “இந்திரன் முதலிய தேவர்களை யாகத்தினாலே தோழமை கொண்டால் அவர்கள் இந்தப் பாம்பையும் இதன் சேனைகளையும் கொன்று தேவநதிகளை விடுவித்து நம்முள்ளே பாயும்படி செய்து நமக்கு அமரத் தன்மை உண்டாகும்படி செய்கிறார்கள். யாகம் என்பது நமது உடல் பொருள் ஆவி அறிவு அனைத்தையும் தேவர்களுக்கு அர்ப்பணம் செய்து விடுதல். இந்த வேள்வி செய்தால் மண் காற்று வான் (உடல் உயிர் அறிவு) என்ற மூன்று படிகளிலும் தேவர் வந்து நிலை பெற்று அமிர்த பானம் (சோமரஸம் குடித்தல்) செய்கிறார்கள். இது மகரிஷிகளின் யோகானுபவத்திலே கண்டது. இதனை நன்கு அறிந்து கொண்டால் மந்திரங்களின் பொருள் தெளிவு படும்.”

    பாரதியின் இந்த விளக்கத்துக்குப் பின் இதை மீண்டும் படிக்கும்போது நமக்கு ஒரு புதிய பொருள் விளங்குகிறது அல்லவா? இது போல மேலும் சில சூக்தங்களுக்குப் பாரதி புதிய பொருள் தருகிறார். அவர் மட்டும் நீண்ட நாள் வாழ்ந்திருந்தால் நான்கு வேதங்களையும் முழுமையாக மொழிபெயர்த்து வேதம் புதுமை செய்திருப்பார்.

    Share
  • பாரதியின் வேத முகம் – 15

     

    -சு.கோதண்டராமன்

     

    செங்கதிர்த் தேவன்

          பாரதி பூணூலைக் கழற்றி எறிந்ததாக ஒரு திரைப்படத்தில் காட்டுகிறார்கள். அதற்கான சான்று எதுவும் அவரது எழுத்துகளில் இல்லை. மாறாக அவர் பிராமண தர்மத்தில் எவ்வளவு மரியாதை வைத்திருந்தார் என்பதையே அவரது படைப்புகள் காட்டுகின்றன.

    காஷ்மீர இந்துக்கள் எல்லோருமே பிராமணர்கள், வேறு சாதியினரே அங்கு இல்லை என்கிறார் பாரதி. தமிழ் நாட்டிலும் பிராமணர் அல்லாதார்க்குப் பூணூல் அணிவித்து, மது மாமிசங்களை நிறுத்தச் சொல்லி எல்லோரையும் பிராமணர் ஆக்க வேண்டும் என்றும் சொல்கிறார் அவர். அவர் ஒரு தாழ்த்தப்பட்ட இளைஞனுக்குப் பூணூல் அணிவித்ததை நாம் அறிவோம்.

    பூணூல் என்பது யாகம் செய்வதற்கான அடையாளம் என்றும் அதற்கு மேல் அதில் ஒன்றும் முக்கியத்துவம் இல்லை என்றும் கூறுகிறார். எனவே பாரதி விரும்பியது என்னவென்றால், எல்லாச் சாதியினரும் யக்ஞம் செய்வதற்குரிய தகுதி பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்பது தான்.

    யக்ஞம் என்பது தீ வளர்த்துச் செய்யப்படும் வேள்வி மட்டும் அல்ல, தெய்வ ஆராதனையாகச் செய்யப்படும் எல்லாச் செயல்களையும் குறிக்கும் என்கிறார். எல்லோரும் தெய்வத்தை ஆராதிக்கத் தகுதி பெற வேண்டும் என்பது அவரது விருப்பம்.

    அந்தணர்கள் செய்கின்ற ஜபத்தில் பயன்படும் காயத்ரி மந்திரத்தைப் பாரதி அழகான தமிழில் தருகிறார் கேளுங்கள்.

    செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம் அவன்

    எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக.

     

    பாரதிக்கு ஓம் என்னும் பிரணவத்தில் அளவற்ற ஈடுபாடு உண்டு. ஒலிக்கு என்று ஒரு தனிச் சக்தி இருப்பதை அறிந்த அவர் மந்திரத்தைத் தமிழில் மொழி பெயர்த்த போதும் ஓங்கார ஒலியை விடாமல் அதைச் சமத்காரமாக மந்திரத்தின் நடுவில் நுழைத்திருப்பதைக் கவனியுங்கள்.

    காயத்ரி மந்திரம் தவிர சூரியனைப் போற்றும் மந்திரங்கள் பல வேதத்தில் உள்ளன. அதனால் பாரதியார் சூரியனைக் குறிப்பிடும்போது சீரடியாற் பழவேத முனிவர் போற்றும் செழுஞ் சோதி என்று பாராட்டுகிறார்.

    காலை ஸந்த்யா வந்தனத்தில் இந்தப் பாட்டுகள் உதய சூரியனை நோக்கி ஓதப்படுகின்றன. சூரியன் பரமாத்மாவின் ஞான ஒளி. இந்த தேவன் நான்கு அம்சங்கள் உடையவன். மித்திரன், வருணன், அர்யமான், பகன். இவருள்ளே மித்திரன் அந்த ஒளியின் அன்பைக் குறிப்போன். வருணன் அதன் அனந்த நிலை (எல்லையற்ற தன்மை) ஆவான். அர்யமான் வலிமைத் தேவன். பகன் அவ்வொளியின் இன்ப உணர்ச்சியாக நிற்பவன்.

                    “முழுமுதற் கடவுளுக்கு ஒளியே விழி. ஒளியையே சூரியன் என்று போற்றுகிறோம். பூலோகத்திலே ஒளியாகத் தோன்றும் சக்தி தான் சுவர்க்க லோகத்திலே ஞானமாகச் சுடர்கின்றது. அதன் அன்பு வடிவத்தை அதாவது தெய்வீக அன்பையே மித்திரன் என்று வாழ்த்துகிறோம்.

    இந்த முன்னுரைக்குப் பின் பாரதி அந்தணர்கள் தினசரி செய்யும் சந்தியா வந்தனத்தில் சொல்லப்படும் மந்திரங்களுக்குப் பொருள் தருகிறார். எந்த மந்திரம் சொன்னாலும் பொருள் தெரியாமல் வெறுமே ஒலியைத் தியானம் செய்வதால் பயனில்லை என்பது அவரது கருத்து. அந்தக் கருத்துகளைத் தன் பாடல்களிலும் வெளிப்படுத்தி இருக்கிறார். இனி மந்திரங்களின் பொருளையும் அவற்றைப் பாரதி தன் பாடல்களில் புகுத்தி இருக்கும் அழகையும் காண்போம்.

    மந்திரத்தின் பொருள்:

    மக்களைக் காப்பவன் சூரியன். அவனது புகழத் தக்க அழிவற்ற மனம் கவரும் பெருமைகளைத் தியானிக்கிறேன். சூரியன் அனைத்தையும் அறிந்து கொண்டு மக்களை நடத்தி வைக்கிறார். பூமியையும் வானுலகத்தையும் தாங்கும் சூரியன் ஜீவராசிகளைக் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

    பாரதியின் பாடல்

    மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்

                    வாழி நோக்கிடும் வள்ளிய தேவா

                    காதல் கொண்டனை போலு மண் மீதே

                    கண் பிறழ்வின்றி நோக்குகின்றாயே

     

    மந்திரத்தின் பொருள்

                    அழியாத பலன் பெறுவதற்காக அவருக்கு நெய் ஹவிஸ் அளிக்கிறோம். சூரியனே யார் உம்மை நியமத்துடன் ஆராதிக்கிறானோ அவன் பரிபூர்ண தர்ம பலனுடன் கூடினவனாக ஆகட்டும். உம்மால் காக்கப்பட்டவன் நோய்வாய்ப்படான். பாவம் இவனைத் தூரத்திலிருந்து கூடத் துன்புறுத்தாது.

    பாரதியின் பாடல்:

    கவலைகள் சிறுமை நோய் கைதவம் வறுமைத் துன்பம்

                    அவலமாம் அனைத்தைக் காட்டில் அவலமாம் புலைமையாகும்

                    இவையெலாம் அறிவிலாமை என்பதோர் இருளிற் பேய்கள்

                    நலமுறு ஞானபானு நண்ணுக; தொலைக பேய்கள்

     

    மந்திரத்தின் பொருள்

    ஆன்ம ஜோதியாலும் பிரகாசத்தாலும் தேவர்களையும் மனிதர்களையும் அவரவர் கருமங்களில் புகுத்திக் கொண்டு சுற்றி வரும் சூரியன் பொன் மயமான தேரில் உலகங்களைப் பார்வையிட்டுக் கொண்டு சஞ்சரிக்கிறார்.

    பாரதியின் பாடல்

    பரிதியே பொருள் யாவற்கு முதலே

                    பானுவே பொன்செய் பேரொளித் திரளே

     

    மந்திரத்தின் பொருள்

    இருளை விழுங்கிக் கொண்டு உதிக்கும் உயர்ந்த ஜோதி, தேவர்களைக் காப்பவர். இவரைப் பார்ப்பதால் நாம் உத்தமமான ஆத்ம ஜோதியை அடைவோம். அந்த பிரசித்தமான, அனைத்தையும் அறிகிற சூரியனை கிரணக் குதிரைகள் உலகோரின் தரிசனத்திற்காக உயரத் தாங்கிச் செல்கின்றன.

    பாரதியின் பாடல்

    கடலின் மீது கதிர்களை வீசி

                    கடுகி வான்மிசை ஏறுதி ஐயா

     

    மந்திரத்தின் பொருள்

    மித்திரன் வருணன் அக்னி இவர்களது கண்ணாக விளங்கும் சூரியன் விசித்ரமான சர்வ தேவ ஸ்வரூபி. அசையும் பொருள் அசையாப் பொருள் இவற்றின் ஆத்மாவாக விளங்கும் சூரியன் தேவ லோகம், பூலோகம், அந்தரிக்ஷம் எங்கும் வியாபிக்கிறவர், கிழக்கில் உதிப்பவர், தேவர்களுக்கு நன்மை செய்பவர், கண் போன்றவர். இவரை நூறாண்டு காலம் வணங்குவோம், வாழ்வோம், உறவினருடன் குலாவுவோம், மகிழ்வோம், கீர்த்தி பெறுவோம், இனியன கேட்போம், இனியன பேசுவோம், தீமைகளை வென்று நிற்போம்.

    பாரதியின் பாடல்

    திருவளர் வாழ்க்கை கீர்த்தி தீரம் நல்லறிவு வீரம்

                    மருவு பல்கலையின் சோதி வல்லமை என்பவெல்லாம்

                    வருவது ஞானத்தாலே வையகமுழுது மெங்கள்

                    பெருமை தானிலவி நிற்கப் பிறந்தது ஞான பானு.

     

    மந்திரத்தின் பொருள்

                    சூரியனைக் காண விரும்புகிறோம். விரும்பிய பலனை அளிப்பவரும் சிவந்த கண்ணரும் எல்லாம் அறிந்தவரும் எத்திக்கிலும் பிரகாசிப்பவரும் பெரிய கடலின் நீரின் நடுவிலிருந்து காலையில் உதிப்பவரும் ஆன சூரியன் முழு மனதுடன் என்னைப் புனிதன் ஆக்குவாராக.

    பாரதியின் பாடல்

    பண்ணிய முயற்சி எல்லாம் பயனுற ஓங்கும் ஆங்கே

                    எண்ணிய எண்ணம் எல்லாம் எளிதிலே வெற்றி எய்தும்

                    திண்ணிய கருத்தினோடும் சிரித்திடு முகத்தினோடும்

                    நண்ணிடும் ஞான பானு அதனை நாம் நன்கு போற்றின்

     

    இவற்றிலிருந்து பாரதி சந்தியா வந்தனத்தைப் பொருளுணர்ந்து போற்றியதை  அறிய முடிகிறது.

     

    Share
  • மரமேறி சொன்ன மந்திரப் பொருள்

    சு. கோதண்டராமன்

    இரவு பத்து மணி இருக்கும் அப்பொழுது தான் உறங்க ஆரம்பித்திருந்தேன். கீய்ங், கீய்ங் என்று நாய்க் குட்டிகள் கத்தும் சத்தம் கேட்டுக் கண் விழித்தேன். மாடியிலிருந்து கீழே இறங்கி வந்தேன்.
    என் வீட்டிற்கு அடுத்தாற்போல் ஒரு மனை பல வருடங்களாகக் காலியாக உள்ளது. அதற்கு நான்கு புறமும் காம்பவுண்டுச் சுவர் உண்டு. அதில் இரண்டு சுவர்கள் சந்திக்கும் மூலையிலிருந்து தான் சத்தம் வந்தது. நாய் ஒன்று குட்டி போட்டிருக்கிறது போலும். லேசாகத் தூறிக் கொண்டிருந்தது. என் வீட்டுக் காம்பவுண்டு ஓரமாக நின்று பார்த்ததில் நான்கு குட்டிகள் கொழு மொழுவென்று பஞ்சுப் பந்துகள் போல அழகாக இருந்தன. பிறந்து பத்து நாள் இருக்கும்.
    நான் தற்போது சென்னை வாசி. இவ்வூருக்கு வந்து இரண்டு நாட்களாகிறது. இரண்டு நாட்களாகச் சத்தம் வரவில்லை.  இப்பொழுது ஏன் கத்துகின்றன? ஒருக்கால் மழையில் நனைவதனாலோ?
    சத்தம் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தது. எனக்கு மனது தவித்தது. “இந்தப் பிஞ்சு உயிர்களின் துன்பத்தைப் போக்க நம்மால் ஏதேனும் செய்ய முடியுமா?” என்று சிந்தித்துப் பார்த்தேன். ஒன்றும் புலப்படவில்லை. கீழ் வீட்டில் குடியிருப்பவரை எழுப்பி என் சோகத்தைப் பகிர்ந்து கொண்டேன். அவர் ஒரு பாலிதீன் விரிப்பை எடுத்து வந்து இரு சுவர்களையும் மூடும் வகையில் பந்தல் போல் விரித்து விட்டு அது காற்றில் பறக்காமல் இருக்க அதன் மேல் நான்கு கற்களையும் வைத்துவிட்டுத் தன் கடமை முடிந்ததாக நினைத்துத் தூங்கப் போய்விட்டார்.
    அப்படியும் குட்டிகள் கத்திக் கொண்டு தான் இருந்தன. எனக்குத் தூக்கம் வரவில்லை. வாசல் சன் ஷேடின் கீழ் நின்று அந்தத் திசையையே பார்த்துக் கொண்டிருந்தேன். மழை சோவென்று பலத்த சத்தத்துடன் பெய்யத் தொடங்கியது. அதையும் மீறி குட்டிகளின் அவலக் குரல் கேட்டது. பாவம், குளிர் தாங்கவில்லை போலும். இவற்றை எடுத்து வந்து மேலே என் வீட்டு வரவேற்பு அறையில் ஒரு சாக்கை விரித்துப் படுக்க வைக்கலாமா என்று எண்ணினேன்.
    அடுத்த வீட்டுக் காம்பவுண்டுச் சுவரில் ஏறிக் குதித்து அவற்றை எடுத்து வருவது ஒன்றும் பெரிய வேலை இல்லை தான். ஆனால் நடைமுறைச் சிக்கல்கள் பல உண்டு. முதலில், என்னிடம் டார்ச் லைட் இல்லை. இரவில் யாரை எழுப்பி டார்ச் லைட் இரவல் கேட்பது? செல் போன் வெளிச்சத்தை வைத்துக் கொண்டு ஓரளவு சமாளிக்கலாம். ஆனால் அடுத்த மனையில் பாம்புகள் நடமாட்டம் அதிகம். என் வீட்டிற்கும் அவை வருவதுண்டு. நாங்கள் அடிப்பதில்லை. நான் இந்த வீட்டைக் கட்டி இதில் முப்பது வருடம் வாழ்ந்திருக்கிறேன். யாரையும் பாம்பு கடித்தது இல்லை. கையைத் தட்டினால் ஓடி மறைந்து விடும். எங்களுக்கும் பாம்புகளுக்கும் அப்படி ஒரு எழுதப்படாத உடன்படிக்கை. ஆனால் இந்த அரைகுறை வெளிச்சத்தில் தெரியாமல் நான் பாம்பின் மேல் காலை வைத்துவிட்டால் அது அந்த ஒப்பந்தத்தை மதித்து நடக்குமா என்பது சந்தேகமே.
    மேலும், குட்டிகளை எடுக்க முயன்றால் தாய் நாய் என்னை ஏதோ விரோதியாகக் கருதி கடித்து விடவும் கூடும். ஒரு புறாவுக்காகத் தன் உயிரைக் கொடுக்க முன்வந்த சிபி போல நாய்க்குட்டிகளுக்காக என் உயிரைக் கொடுத்து வரலாற்றில் இடம் பெற விருப்பமில்லை. ஆனாலும் இந்தச் சின்னஞ் சிறு பிராணிகளின் துன்பத்தைப் போக்க வழி தெரியாமல் இருக்கும் என் பலவீனத்தை நினைக்கும் போது வெட்கமாக இருந்தது.
    குட்டிகள் மழைச் சத்தத்தோடு போட்டி போட்டுக் கத்திக் கொண்டிருந்தன. எனக்குத் தூக்கம் வரும் என்ற நம்பிக்கை இல்லை. அங்கேயே திண்ணையில் உட்கார்ந்து கொண்டேன். இதற்கிடையில் பாலிதீன் விரிப்பில் தண்ணீர் நிரம்பி குளம் போல் நடுவில் குழிந்து விட்டது. அதன் எடை தாங்காமல் மேலே வைத்திருந்த கற்கள் விழுந்து விடவே அத்தனை தண்ணீரும் குட்டிகள் மேல் தடதடவென்று கொட்டி மூழ்கடித்தது. அதனால் கத்தல் இன்னும் அதிகமாயிற்று.
    ஆண்டவனே, எனக்கு இவ்வளவு பெரிய உடலையும் அறிவையும் இத்தனை வசதிகளையும் கொடுத்திருக்கிறாய். இந்த  அற்ப ஜீவன்களுக்கு உதவ முடியாமல் இவற்றால் என்ன பயன்? அக்கம் பக்கத்தில் இத்தனை பேர் இந்தச் சத்தத்தை லட்சியம் செய்யாமல் தூங்கவில்லையா? எனக்கு மட்டும் ஏன் இப்படி மனம் சங்கடப்படுகிறது? முல்லைக்குத் தன் தேரையே பந்தலாக்கிய பாரியைப் பற்றியும், வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிய வள்ளலாரைப் பற்றியும் படித்ததை மற்றவர்களைப் போல மறந்துவிடாமல் நினைவில் வைத்திருப்பதாலா? செயல்படுத்தப்பட முடியாத நெஞ்சின் ஈரம் இருந்தும் ஒன்று தான், இல்லாததும் ஒன்று தான். திண்ணையில் சாய்ந்து யோசனை செய்து கொண்டே எப்பொழுது தூங்கினேன் என்று தெரியாமல் தூங்கி விட்டேன்.
    வழக்கமாகத் தேங்காய் பறிப்பவர் காலையில் வந்தார். அவருடன் எனக்கு முப்பது வருடப் பழக்கம். “வாங்க ஐயா, எப்போ வந்தீங்க? நல்லா இருக்கீங்களா?” என்று கேட்டுக் கொண்டே படியேறினார். அவருக்குப் பதில் முகமன் கூறிவிட்டு அவருடன் கொல்லைப் புறத்துக்குச் சென்றேன். “பட்டண வாசியாப் போயிட்டீங்க, இருந்தாலும் ஊரை மறக்காம வந்திட்டுப் போயிட்டு இருக்கீங்களே. அதாங்க நல்லது. ஆனா, என்ன சொல்லுங்க, நம்ம ஊருக்கு ஈடு இந்த ஒலகம் பூராத் தேடினாலும் கெடைக்காதுங்க, என்ன சொல்றீங்க?” என்றார்.
    ஆமாம் என்று ஒப்புக் கொண்டேன். மரத்தைத் தொட்டுக் கண்ணில் ஒற்றிக் கொண்டு காலில் நார் வளையத்தை மாட்டிக் கொண்டு விறுவென்று மரம் ஏற ஆரம்பித்தார்.
    “அந்த மூலையிலே நாய் குட்டி போட்டிருக்கு. அந்தப் பக்கம் காய் விழாமல் பாத்துங்கண்ணே.”
    “சரிங்க.”
    அவருக்கு வயது எண்பது இருக்கும். அவரை மரம் ஏறச் செய்வதில் எனக்கு விருப்பம் இல்லை. எனக்கும் அவரை விட்டால் வேறு ஆள் இல்லை. அவருக்கும் பிழைக்க வேறு வழி இல்லை. இரண்டு பிள்ளைகள் துபாயில் இருக்கிறார்கள். பணம் காசு அனுப்புவதில்லை. ஒரு முறை சொல்லிப் பார்த்தேன். “நீங்கள் மரம் ஏறுவதை விட்டு விட்டு ஏதேனும் சின்னதாக வியாபாரம் செய்யலாமே, நான் வேண்டுமானால் பணம் தருகிறேன்” என்றேன். அவர் ஒப்புக் கொள்ளவில்லை. “நீங்க கவலைப் படாதீங்க ஐயா. என்னை முருகன் காப்பாத்துவான்” என்று உறுதியாகக் கூறுவார். அவர் மரம் ஏறி இறங்கி வரும் வரையில் என் வாய், “காக்க காக்க, கனக வேல் காக்க” என்று புலம்பிக் கொண்டிருக்கும்.
    தேங்காய்களைப் பறித்துப் போட்டு, இறங்கி வந்து, எல்லாவற்றையும் குவித்து விட்டு என்னிடம் காசு பெற்றுக் கொள்ளும் நேரத்தில் என்னைப் பார்த்தவர், “ஏன் ஐயா, மொகம் ஒரு மாதிரி இருக்கு? ஒடம்பு நல்லா இல்லையா?” என்றார்.
    நான் முதல் நாள் இரவுக் கதையைச் சொன்னேன். அவர் அதைக் கேட்டு விட்டு, “இதுக்குப் போயா இவ்வளவு அலட்டிக்கிட்டீங்க? நாய்க் குட்டிங்க அப்படித் தான் கத்தும். கத்தக் கத்தத் தான் அதுக்கு பலம். மனிசக் கொழந்தைகளுக்கும் அப்படித் தான்”. என்றார்.
    “ஆனா ரெண்டு நாளா இப்படிக் கத்தல்லியே. மழையிலே நனைஞ்சதனாலே தானே கத்துது. இப்படி ரொம்ப நேரம் நனைஞ்சா செத்துடாதா?”
    “பூனைக்கும் ஆட்டுக்கும் தாங்க மழை ஆவாது. மத்த எந்தப் பிராணிக்கும் ஒண்ணும் செய்யாதுங்க. முருகன் ரெயின் கோட்டு போட்டுத் தான் பூமிக்கு அனுப்பறான். மனுசனுக்கும் அப்படித் தாங்க. ஒங்களைப் போல ஆப்பீசிலே ஒக்காந்து வேலை செய்யறவங்க தான் மழைலே நனைஞ்சா சளி புடிக்கும்பீங்க. எங்களைப் போல வய வெளிலே கெடக்கிறவங்க கொடையைப் புடிச்சிக்கிட்டா வேலை செய்ய முடியும்? நனைவோம், காய்வோம். ஒண்ணும் ஆகாதுங்க.”
    உண்மை தான் அவரைப் பார்த்தாலே தெரிகிறது. ‘அரிவாளைக் கொண்டு பிளந்தாலும் கட்டு மாறா உடல் உறுதி’ என்று பாரதியார் சொன்னபடியான வைரம் பாய்ந்த உடல் அது.
    “மழை அதுக்குப் பாதிக்காதுன்னா பின்னே ஏன் அது கத்துது?”
    “நாப்பது வயசிலே நாய்க் கொணம்னு சொல்றாங்கள்ல, அது என்ன கொணம்னு தெரியுமா ஐயா ஒங்களுக்கு?”
    “நன்றியோட இருக்கறது.”
    “அது ஒசந்த கொணமில்லே. ஆனா நாய்க் கொணம்னு கேவலமால்ல சொல்றாங்க.”
    அது என்ன கேவலமான நாய்க்குணம்? யோசித்துப் பார்த்தேன். புலப்படவில்லை.
    “சொல்லுங்க.”
    “நம்ம வீட்டுக்கு யாராவது புதுசா வந்தா நாய் குலைக்குது. அவங்களே அடிக்கடி வந்தா அது குலைக்கிறதை நிறுத்திக்குது இல்லையா?”
    “ஆமாம்.”
    “நாய்க்குப் புதுசா எதுவானாலும் புடிக்காது. அது தான் அதோட பொறவிக் கொணம். குட்டிங்க பொறந்து நாலஞ்சு நாளைக்கு கண் மூடியிருக்கும். கண்ணெத் தொறந்து பாத்தா ஒரே வெளிச்சமா இருக்கா, அந்த வெளிச்சம் அதுக்குப் புடிக்காது. கத்தும். அப்புறம் அது பழகிப் போயிடும். ராத்திரிலே இருட்டைக் கண்டா புதுசா இருக்கா, கத்தும். அப்புறம் அதுவும் பழகிப் போயிடும். இப்போ மழை பெய்யிறது இதுகளுக்குப் புதுசு. புடிக்கல்லே. கத்துது. அது பழகற வரைக்கும் கத்திக் கிட்டு தான் இருக்கும்.”
    அப்படியா? அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் எல்லாம் ஈவு இரக்கம் இல்லாமல் தூங்குகிறார்கள், நான் மட்டும் தான் ஏதோ புத்தர், ஏசு, காந்தியின் அவதாரம் என்று நினைத்துக் கொண்டிருந்தேனே. அவர்கள் எல்லோரும் விஷயம் தெரிந்தவர்கள்.
    “முழுக்கக் கேளுங்க ஐயா. மனுசப் பயலுக்கு நாப்பது வயசாச்சின்னா இந்த நாய்க் கொணம் வந்திடும். புதுசா எது வந்தாலும் புடிக்காது. புது ஊரிலே குடியேற மாட்டான். அப்படிப் போனாலும் எங்க ஊரு மாதிரி ஆகுமான்னு சொல்லிக்கிட்டு இருப்பான். புதுசா தொழில் ஆரம்பிக்க மாட்டான். கஷ்டமோ நஷ்டமோ பழைய வேலயையே தான் செய்வான்.
    “சின்னப் புள்ளைங்களைப் பாருங்க. எப்போப் பாத்தாலும் புதுப் புது விஷயங்களைத் தேடிப் போயிட்டு இருப்பாங்க. பொறந்த கொழந்தை தெனம் ஒரு புது வெளையாட்டு வெளையாடுது. புதுசு புதுசா வார்த்தை கத்துக்குது. புதுப் புது சினேகிதம் ஏற்படுத்திக்கிட்டு பழகுது. அது தான் எப்பவும் சந்தோஷமா இருக்குது.”
    உண்மை தான். புது மனிதர்கள், புது விஷயங்கள் என்றால் நாம் மிகுந்த எச்சரிக்கையோடு தானே அணுகுகிறோம்.
    “எங்க முருகனைத் தகப்பன் சாமிம்பாங்க. அப்பனுக்கே உபதேசம் பண்ணினவனுங்க. அதுக்கு என்ன அர்த்தம்? புதுப் புது விஷயங்களைப் பாத்து பயப்படாம அதை அதை அப்படி அப்படியே ஏத்துக்கணும்னு அதை மறந்து போன பெரியவங்களுக்குச் சின்னப் புள்ளைங்க தான் சொல்லித் தர  முடியும்.”
    முற்றிலும் உண்மை. பதஞ்ஜலி யோக சூத்ர உரையில் பாரதி கூறுவது எனக்கு நினைவுக்கு வந்தது. “ஓம் என்பது பிரணவ மந்திரம். இந்த மந்திரத்துக்கு ஆகமங்கள் கோடி வகைகளில் பொருள் சொல்கின்றன. ப்ரணவம் என்ற சொல் எப்போதும் புதுமையானது என்ற பொருள் தருவது.”
    முருகன் சிவனுக்கு ஓங்காரத்தின் உட்பொருளை உபதேசித்த கதையில் இவ்வளவு பெரிய சூட்சுமம் இருக்கிறதா? எவ்வளவு எளிதாகச் சொல்லிவிட்டார் படிப்பறிவில்லாத இந்த மரமேறி!

    Share
  • பாரதியின் வேத முகம் – 14

     

    -சு.கோதண்டராமன்

     

    வாயுவாகி வெளியை அளந்தனை

    வேதக் கருத்துகளைத் தன் பாடல்களில் பாரதி பயன்படுத்தியதைப் பார்த்தோம். வேத சூக்தங்களில் சிலவற்றை அவர்  மொழிபெயர்த்ததையும் அறிந்தோம். ஒரு சிறிய வேத மந்திரத்தை விளக்கிப் பாரதி பல பக்கங்களில் எழுதிய வசன கவிதை ஒன்றையும் இப்பொழுது பார்ப்போம்.

    வேதத்தில்  வரும் ‘நமஸ்தே வாயோ த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரம்மாஸி’ (காற்றே, நீயே கண் கண்ட தெய்வம்) என்பதற்கு விளக்கமாகப் பாரதி பதினைந்து அழகிய வசன கவிதைகள் எழுதியுள்ளார். அவற்றில் ஒரு சில மட்டும் கீழே சுருக்கித் தருகிறேன்

    1 ஒரு வீட்டு மேடையிலே ஒரு பந்தல். ஒரு மூங்கிற் கழியிலே கொஞ்சம் மிச்சக் கயிறு தொங்குகிறது. எனக்கும் இந்தக் கயிற்றுக்கும் ஸ்னேகம். நாங்கள் அடிக்கடி வார்த்தை சொல்லிக் கொள்வதுண்டு. ஒரு கயிறா சொன்னேன்? இரண்டு கயிறு உண்டு. ஒன்று ஆண். மற்றொன்று பெண். கணவனும் மனைவியும். ஆண் கயிற்றுக்குக் கந்தன் என்று பெயர். பெண் கயிற்றுக்குப் பெயர் வள்ளியம்மை. அவை இரண்டும் ஒன்றை ஒன்று காமப் பார்வை பார்த்துக் கொண்டும் புன்சிரிப்பு சிரித்துக் கொண்டும் வேடிக்கைப் பேச்சு பேசிக்கொண்டும் ரஸப் போக்கிலே இருந்தன. இங்ஙனம் நெடும் பொழுது சென்ற பின் வள்ளியம்மைக்குக் களியேறிவிட்டது.

                    நான் பக்கத்து வீட்டிலே தாகத்துக்கு ஜலம் குடித்து விட்டு வரப் போனேன். நான் திரும்பி வந்து பார்க்கும்போது வள்ளியம்மை தூங்கிக் கொண்டிருந்தது. கந்தன் என்  வரவை எதிர் நோக்கி இருந்தது. எங்கேடா போயிருந்தாய் வைதீகம்? சொல்லிக்கொள்ளாமல் போய் விட்டாயே என்றது. அம்மா நல்ல நித்திரை போலிருக்கிறது என்று கேட்டேன். ஆகா அந்த க்ஷணத்திலே கயிற்றிலிருந்து வெடித்து என் முன்னே நின்ற தேவனுடைய மகிமையை என்னென்று சொல்வேன்? காற்றுத் தேவன் தோன்றினான். அவனுடல் விம்மி விசாலமாக இருக்குமென்று நினைத்திருந்தேன். வயிர ஊசி போல் ஒளி வடிவமாக இருந்தது (வாயு தேவனின் உடல் ஒளி வடிவமானது என்பது வேதக் கருத்து.).

          நமஸ்தே வாயோ த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரம்மாஸி

                    காற்றே போற்றி நீயே கண் கண்ட தெய்வம்.

          அவன் தோன்றிய போதிலே வான முழுதும் ப்ராண சக்தி நிரம்பிக் கனல் வீசிக் கொண்டிருந்தது. ஆயிர முறை அஞ்சலி செய்து வணங்கினேன். காற்றுத் தேவன் சொல்வதாயினன் மகனே ஏதடா கேட்டாய்? அந்தச் சிறிய கயிறு உறங்குகிறதா என்று கேட்கிறாயா? இல்லை. அது செத்துப் போய் விட்டது. நான் ப்ராணசக்தி. என்னுடனே உறவு கொண்ட உடல் இயங்கும். என் உறவு இல்லாதது சவம். நான் ப்ராணன். என்னாலே அச் சிறு கயிறு உயிர்த்திருந்தது. சுகம் பெற்றது. சிறிது களைப்பெய்தியவுடனே அதை உறங்க இறக்க விட்டு விட்டேன். துயிலும் சாவு தான். சாவும் துயிலே. நான் விளங்குமிடத்தே அவ்விரண்டும் இல்லை. மாலையில் வந்து ஊதுவேன். அது மறுபடி பிழைத்து விடும். நான் விழிக்கச் செய்கிறேன். அசையச் செய்கிறேன். நான் சக்தி குமாரன். என்னை வணங்கி வாழ்க.

          நமஸ்தே வாயோ த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரம்மாஸி

                    த்வாமேவ ப்ரத்யக்ஷம் ப்ரம்ம வதிஷ்யாமி

          2 நடுக் கடல். தனிக் கப்பல். வானமே சினந்து வருவது போன்ற புயற் காற்று. ஹதம். இரு நூறு உயிர்கள் அழிந்தன. ஊழி முடிவும் இப்படியே தானிருக்கும். சக்தி காற்றாகி விடுகிறாள். காற்றே பந்தல் கயிறுகளை அசைக்கிறான். அவற்றில் உயிர் பெய்கிறான். காற்றே நீரில் சூறாவளி காட்டி, வானத்தில் மின்னலேற்றி, நீரை நெருப்பாக்கி நெருப்பை நீராக்கி, நீரைத் தூளாக்கி, தூளை நீராக்கிச் சண்ட மாருதம் செய்கின்றான். காற்றே யுக முடிவு செய்கின்றான். காற்றே காக்கின்றான். அவன் நம்மைக் காத்திடுக.

          3 வீமனும் அனுமனும் காற்றின் மக்கள் என்று புராணங்கள் கூறும். உயிருடையன வெல்லாம் காற்றின் மக்களே என்பது வேதம். உயிர் தான் காற்று. தோன்றுதல், வளர்தல், மாறுதல், மறைதல் எல்லாம் உயிர்ச் செயல். உயிரை வாழ்த்துகின்றோம்.

          4 எறும்பு உண்ணுகிறது, உறங்குகின்றது, மணம் செய்து கொள்கின்றது, குழந்தை பெறுகின்றது, ஓடுகிறது, தேடுகிறது, போர் செய்கிறது, நாடு காக்கிறது. இதற்கெல்லாம் காற்று தான் ஆதாரம். மகா சக்தி காற்றைக் கொண்டு தான் உயிர் விளையாட்டு விளையாடுகிறாள்.

          5 காற்றுக்கு அஞ்சி உலகத்திலே இன்பத்துடன் வாழ முடியாது. மலைக் காற்று நல்லது. கடற் காற்று மருந்து. வான் காற்று நன்று. ஊர்க் காற்றை மனிதர் பகைவனாக்கி விடுகின்றனர். அவன் வரும் வழியிலே எவ்விதமான அசுத்தமும் கூடாது. அவன் வரும் வழியிலே சோலைகளும் பூந்தோட்டங்களும் செய்து வைப்போம். அவன் சக்தி குமாரன். மகாராணியின் மைந்தன். அவனுக்கு நல்வரவு கூறுகின்றோம். அவன் வாழ்க. (சுற்றுச் சூழல் பற்றி இன்று ஏற்பட்டிருக்கும் விழிப்புணர்வுக்கு அன்றே வேத அடிப்படையில் வித்திட்டவர் பாரதி)

          6 நொய்ந்த வீடு, நொய்ந்த உடல், நொய்ந்த உயிர், நொய்ந்த உள்ளம் இவற்றைக் காற்றுத் தேவன் புடைத்து நொறுக்கி விடுவான். ஆதலால் மானிடரே வாருங்கள். வீடுகளைத் திண்மையுறக் கட்டுவோம். உடலை உறுதி கொள்ளப் பழகுவோம். உயிரை வலிமையுற நிறுத்துவோம். உள்ளத்தை உறுதி செய்வோம்.

          7 காற்றைப் புகழ நம்மால் முடியாது. அவன் புகழ் தீராது. அவனை ரிஷிகள் ப்ரத்யக்ஷம் ப்ரம்ம என்று போற்றுகிறார்கள். ப்ராண வாயுவைத் தொழுகின்றோம். அவன் நம்மைக் காத்திடுக. அபானனைத் தொழுகின்றோம் அவன் நம்மைக் காக்க. வ்யானனைத் தொழுகின்றோம் அவன் நம்மைக் காக்க. உதானனைத் தொழுகின்றோம் அவன் நம்மைக் காக்க. காற்றின் செயல்களை எல்லாம் பரவுகின்றோம். உயிரை வணங்குகின்றோம். உயிர் வாழ்க. புலவர்களே, காலையில் எழுந்தவுடன் உயிர்களை எல்லாம் போற்றுவோம்.

          நமஸ்தே வாயோ த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரம்மாஸி

     

    Share
  • பாரதியின் வேத முகம் – 13

     

    -சு.கோதண்டராமன்

     

    கவிவாணர்க்கு நல்லமுது

    அரவிந்த கோஷ் சொல்கிறார், “அக்னியைப் பற்றிய வேத மந்திரங்களில் கவிதை மிகவும் செழிப்புற்றிருக்கிறது. பாட்டின் பொருளாகிய அக்னி தேவனின் தழலும் ஒளியும் பாடுகிற ரிஷிகளின் அறிவிலே தாவி விட்டன போலும்.”

    அரவிந்தரின் இந்தக் கருத்தை மேற்கோள் காட்டி விட்டு பாரதி பேசுகிறார், ஆம். உயர்ந்த கவிதையின் நெறி அது. கவியின் இஷ்டதேவதையின் காந்தி அவனுடைய உள்ளத்தில் வீசும். அந்த ஒளி பாட்டிலே தெரியும்.

    இந்த முன்னுரையுடன் பாரதி வேத மந்திரங்களில் அக்னியின் புகழ் கூறுவனவற்றை மொழி பெயர்த்துத் தருகிறார். அவரது மொழி பெயர்ப்பின் ஒரு பகுதி கீழே தரப்பட்டுள்ளது. அடைப்புக்குள் உள்ள விளக்கமும் பாரதியினுடையதே.

    அக்னிமீளே என்று தொடங்கும் ரிக் வேதம் முதல் மண்டலம் முதல் சூக்தம்.

    1 தீ வேள்வியின் முன் நிற்பவன். அதன் பருவங்களை வகுக்கும் தேவன். அங்கு வானவரை அழைப்பவன். செல்வங்களை மிகுதியுறக் காட்டுவோன். அவனை வேண்டுகிறேன். (அமிர்தத்தின் பிறப்பிடமாகிய சூர்யன் என்ற ஒளியில் நான் என்னையே ஹோமம் செய்து கொள்கிறேன் என்று வேத ரிஷிகள் கூறினர். இன்றைக்கும் காலையில் ஒவ்வொரு வேதியனும் சூர்யச்ச மாமன்யுச்ச என்ற இந்த மந்திரத்தைச் சொல்கிறான். இவ்விதமான வேள்வி நடைபெற வேண்டுமானால் அதற்குத் தீயின் துணை வேண்டும். தீயை எழும்படி செய்தால் போதும். பிறகு இந்த வாழ்க்கை வேள்வியின் பொறுப்பு. அவனே வேள்வியை அதன் பருவங்களுக்குத் தக்கவாறு மேலே ஏற்றிக் கொண்டு போகிறான். எல்லா விதமான தெய்வ சக்திகளையும் அங்கு அழைத்து வருகிறான்.)

    2 தீயை முன்னைப் புலவர் போற்றினர். புதியோரும் அவனையே போற்றுக. அவன் இங்கு அமரரைக் கொண்டு தருக.

    3 நாளுக்கு நாள் வளரும் செல்வமும் வீரமிக்க புகழும் தீயாலே பெறுக. (தீக் கடவுள் எல்லா மனிதரிடத்தும் உள்ளத் திண்மையாக நிற்கிறான். அவனை வளர்த்தால் எண்ணிய பொருள் எதுவும் எவ்வுலகத்திலும் கை கூடும்.)

    4 தீயே, நெறியில் ஓங்கும் வேள்வியதனை நீ எப்புறத்தும் சூழ்ந்து காக்கிறாய். அஃதே வானவரிடம் சேரும்வழி. (மனித நிலையிலிருந்து அமர நிலை நோக்கிச் செல்லும் வழி தான் வேள்வி போகும் வழி.)

    5 தீ வானவரை அழைப்போன். புலமையுள்ள செய்கைத் திறமை ஆவோன். ஞானக் கேள்வி தருவதில் சிறந்தோன். அவ்வானவன் வானவருடன் வருக.

    6 அன்ப, வேள்வி தருவோனுக்கு நீ சீர் தருவாய். அதுதான் தீயே உனது உண்மை.

    7 தீயே, நின்பால் நாள் தோறும் இரவும் பகலும் நாம் பணிவு ஏந்தி வருகிறோம். (அகங்காரத்தை விட்டு முழுவதும் பணிவு கொள்வதே தேவரை அழைக்கும் வழி)

    8 நெறியில் ஓங்கும் வேள்விகளின் அரசே, நேர்மை காப்பாய். சுடர் வீசுவாய். எனது மனையிலே வளர்வாய். தீயே நின்னை அடைகிறோம். (சொல்லிலும் நடையிலும் உள்ளத்திலும் முழு நேர்மை காணும்போது அங்கே அக்னி சக்தி பிறந்திருப்பதாக அறிந்து கொள்ளலாம்.)

    9 அருகே போவதற்கு எளியனாய் மகனுக்குத் தந்தை போல் நீ எமக்கு ஆகுக. நல்வாழ்வு பெறும்படி எம்மைச் சார்ந்திடுக.

    இந்த வேதக் கருத்துகளை உள்ளடக்கி எளிய தமிழில் பாரதி பாடிய பாடலின் ஒரு பகுதியைக் கீழே காண்போம்.

    நெஞ்சிற் கவலைகள் நோவுகள் யாவையும்

    நீக்கிக் கொடுப்பவனை – உயிர்

    நீளத் தருபவனை – ஒளிர்

    நேர்மைப் பெருங் கனலை – நித்தம்

    அஞ்சேல் அஞ்சேல் என்று கூறி – எமக்கு நல்

    ஆண்மை சமைப்பவனைப் – பல் வெற்றிகள்

    ஆக்கிக் கொடுப்பவனைப் – பெருந் திரள்

    ஆகிப் பணிந்திடுவோம் வாரீர்.

    வானகத்தைச் சென்று தீண்டுவன் இங்கென்று

    மண்டி எழும் தழலைக் – கவி

    வாணர்க்கு நல் அமுதைத் – தொழில்

    வண்ணம் தெரிந்தவனை – நல்ல

    தேனையும் பாலையும் நெய்யையும் சோற்றையும்

    தீம் பழம் யாவினையும் இங்கே உண்டு

    தேக்கிக் களிப்பவனைப் பெருந் திரள்

    ஆகிப் பணிந்திடுவோம் வாரீர்.

     

     

    Share
  • பாரதியின் வேத முகம் – 12

     

    -சு.கோதண்டராமன்

    நம்புவதே வழி

    இஸ்லாமிய வேதம் குர் ஆன் பல இடங்களில் அல்லா மேல் ஈமான் கொள்ளுங்கள் என்று நம்பிக்கையை வலியுறுத்துகிறது. கிருத்துவர்களின் பைபிளும் பல இடங்களில், விசுவாசியுங்கள் என்று நம்பிக்கையை முதன்மைப்படுத்துகிறது. ஆனால் இந்து மதமோ அந்த அளவுக்கு நம்பிக்கையை வலியுறுத்துவதாகத் தெரியவில்லை.

    வேதம் தனி மனித சிந்தனைக்குக் கொடுத்துள்ள சுதந்திரம் வேறு எங்கும் காணக் கிடைக்காதது. வேதத்தை ஒப்புக் கொள்ளாதவரைப் பாவி என்றோ காபிர் என்றோ இந்துக்கள் இகழ்வதில்லை. மாறாக புதிய சிந்தனைகளை வரவேற்று அவற்றின் உண்மைகளை ஆராய்ந்து அவற்றில் உள்ள நல்லனவற்றை ஏற்றுக் கொண்டு தன்னை மாற்றிக் கொண்டு வந்திருக்கிறார்கள். ஒரே வேதத்திற்கு சங்கரர் ஒரு விதமாகவும் ராமானுஜர் ஒரு விதமாகவும் மத்வர் ஒரு விதமாகவும் விரிவுரை எழுதியுள்ளனர். அவரவருக்கு எது சரி என்று படுகிறதோ அதை ஏற்றுக் கொள்ளவும் அதன்படி நடக்கவும் பிறப்புரிமை பெற்றவன் இந்து. கடவுள் இல்லை என்று சொல்பவனையும் வேத மதம் வெறுப்பதில்லை. இன்றைய பெரியார் மட்டுமல்ல, முற்காலத்தில் வாழ்ந்த ஜாபாலி என்ற முனிவரின் கருத்துகளும், சார்வாகர்கள் என்றழைக்கப்பட்ட நாஸ்திகர்களின் கருத்துகளும் இந்து சமய இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளன.

    வேதம் நம்பிக்கையை வலியுறுத்துகிறதா? சாதாரண மக்கள் வழக்கில் நம்பினவருக்கு நடராசா, நம்பாதவருக்கு யமராசா என்று சொல்லப்படுகிறது என்றாலும் வேதத்தில் எந்த இடத்திலும் இந்த வேதம் சொல்வதை நம்புங்கள். நம்பினால் தான் கடைத்தேறுவீர்கள், இல்லாவிட்டால் நரகத்துக்குப் போவீர்கள் என்ற மிரட்டல்கள் காணப்படுவதில்லை.

    இத்தகைய சூழ்நிலையில் பாரதியின் இரு வரிகள் நமக்குப் புதிராக உள்ளன. முதலாவது, சக்தியைக் கும்பிடுமாறு தன் மனத்துக்கு அறிவுறுத்தும் இடத்தில்

    நம்புவதே வழி என்ற மறை தனை

                    நாம் இன்று நம்பி விட்டோம் என்கிறார்.

    இன்னொரு பாடலில்

    நம்பினோர் கெடுவதில்லை நான்கு மறைத் தீர்ப்பு

                    அம்பிகையைச் சரண் புகுந்தால் அதிக நலம் பெறலாம்

    என்கிறார்.

    வேதம் நம்பிக்கையை வலியுறுத்துவதாக அல்லவா கூறுகிறார். உண்மையா? தேடினால் கிடைப்பது சிரத்தை பற்றிய ஒரு சூக்தம். ரிக்வேதம் பத்தாவது மண்டலம் 151வது சூக்தம்.

    சிரத்தை என்பது அடைய வேண்டிய லட்சியத்தில் உறுதியும் அதை அடைவதற்கான வழியில் முழு முனைப்புடன் ஈடுபடுவதையும் குறிக்கும். செய்யும் ஒவ்வொரு சிறு செயலும் தன் இறுதி நோக்கத்துக்குப் பயன்படுமா என்று ஆராய்ந்து பயன்படக்கூடிய எந்த சிறு செயலையும் விடாமல் செய்வதும் பயன் தராத எந்த சிறு செயலையும் செய்யாதிருப்பதும் இதில் அடங்கும். இதில் நம்பிக்கை எங்கே வந்தது?

    ஆதி சங்கரர் சிரத்தை என்பதற்கு நம்பிக்கை என்றே பொருள் தருகிறார். இறைவன் ஒருவர் உண்டு என்பதில் சந்தேகம் இல்லாத தெளிவான மனத்துடன் இருப்பதே நம்பிக்கை என்கிறார். அதுவே சிரத்தையின் அடிப்படை. குறிக்கோளில், அதாவது இறைவனிடத்தில், நம்பிக்கையும் அதை அடையும் வழியாகிய, குருவின் வார்த்தைகளில் நம்பிக்கையும் தான்.

    ஒரு உதாரணம் பார்ப்போம். ஒருவன் ஒரு புதிய ஊருக்குச் செல்ல விரும்புகிறான், ஒருவரிடம் வழி கேட்கிறான். அவன் அதில் நம்பிக்கையோடு பயணம் செய்ய வேண்டும். கொஞ்ச நேரம் சென்ற பின் இந்தப் பாதை சரியானது தானா? நமக்குச் சொன்னவர் சரியாகத் தான் சொல்லி இருப்பாரா? நாம் போய்ச் சேருவோமா என்று ஐயுறுதல் கூடாது.

    நம்பிக்கை இன்றி, சந்தேகம் தன்னை ஆட்கொள்ள அனுமதிப்பவன் அழிவான் என்கிறது கீதை. (ஸம்சயாத்மா விநச்யதி)

    இந்த சிரத்தை, அதாவது குறிக்கோளில் உறுதியும் செயல்பாட்டில் சந்தேகம் மற்றும் குறை இல்லாத வினைத் திட்பமும், ஒரு தேவியாக உருவகப்படுத்தப்பட்டு வேதத்தில் போற்றப்படுகிறது. அதன் சுருக்கமான மொழி பெயர்ப்பு இதோ:-

    சிரத்தை இறைவனின் தலையில் உள்ளது. அதைச் சொற்களால் போற்றுவோம். சிரத்தையே, கொடுப்போருக்கும் கொடுக்க விரும்புவோருக்கும் விரும்பிய பலன்களைக் கொடுப்பாயாக. (சிரத்தையோடு செய்தால் விரும்பிய பலன் கிடைக்கும்.) தேவர்கள் அசுரர்களுடன் இட்ட போரில் சிரத்தையைக் கைக் கொண்டனர். வெற்றி பெற்றனர். (நோக்கத்தில் வெற்றி பெற வேண்டுமென்ற) இதய தாகத்தால் சிரத்தை அடையப்படுகிறது. சிரத்தையால் செல்வம் அடையப்படுகிறது. சிரத்தையைக் காலையிலும் நண்பகலிலும் மாலையிலும் வணங்குகிறோம். சிரத்தா தேவியே, எங்களுக்கு சிரத்தையைக் கொடு.

    இந்தக் கருத்துகளைத் தான் பாரதி ஒரு வரியில் கூறுகிறார்.

                    நம்பினோர் கெடுவதில்லை நான்கு மறைத் தீர்ப்பு.

    சிரத்தையை, அதற்கான இதய தாகத்தை, அடைவது எப்படி? அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்பது போல சிரத்தையை அடைய சிரத்தை என்னும் அம்பிகையைத் தான் வணங்க வேண்டும். சிரத்தா தேவியே, எங்களுக்கு சிரத்தையைக் கொடு என்று தான் அந்த ரிக் வேத சூக்தம் நிறைவடைகிறது. பாரதியும் அதையே எதிரொலிக்கிறார்.

    அம்பிகையைச் சரண் புகுந்தால்

                    அதிக நலம் பெறலாம்.

     

                    நம்புவதே வழி என்ற மறை தனை

                    நாம் இன்று நம்பி விட்டோம்.

     

    Share
  • பாரதியின் வேத முகம் – 11

     

    -சு.கோதண்டராமன்

    கற்பக விநாயகக் கடவுளே போற்றி

     

    பாரதி எல்லா இந்து தெய்வங்களையும் அல்லாவையும் ஏசுவையும் போற்றிப் பாடியுள்ளார் என்றாலும் விநாயகர் ஒருவருக்குத் தான் அவர் நான்மணிமாலை பாடிச் சூடியுள்ளார். விநாயகரைக் குறிப்பதாகக் கருதப்படும் “கணானாம் த்வா கணபதிம் ஹவாமஹே” என்ற வேத மந்திரத்தின் பொருளையும் அதில் மறவாமல் குறிப்பிடுகிறார்.

    வேத முனிவர் விரிவாப் புகழ்ந்த

                பிருகஸ்பதியும் பிரமனும் யாவும்

                தானேயாகிய தனி முதற் கடவுள்

    என்று வாழ்த்துகிறார்.

    பிற்காலத்தில் ஏற்பட்டதாயினும் தற்போது அதிகமாகப் பயன்படுத்தப்படும் விநாயகர் துதியாகிய சுக்லாம்பரதரம் விஷ்ணும் என்ற சுலோகத்தையும் அவர் மறக்கவில்லை.

    வெள்ளாடை தரித்த விட்டுணு என்று

                செப்பிய மந்திரத் தேவனை

                முப்பொழுதேத்திப் பணிவது முறையே.

    மேலும் விநாயகரை ஆர்ந்த வேதப் பொருள் காட்டும் தீபன், வேதச் சுடர், வேத காரணன் என்றும் போற்றுகிறார். விநாயகர், ஸத்தெனத் தத்தெனச் சதுர் மறையாளர் நித்தமும் போற்றும் நிர்மலக் கடவுள். எல்லா மதங்களுக்கும் பொதுவான முழுமுதற் கடவுளுக்கு உள்ள பல பெயர்களில் விநாயகர் என்பதும் ஒன்று என்பது தான் பாரதியின் கொள்கை. அவர் விநாயகருக்குச் செய்யும் அர்ச்சனை நாமாவளியைப் பார்த்தால் தொல் பழம் தெய்வங்கள் உள்பட எல்லா தெய்வங்களின் பெயர்களும் அதில் வந்து விடுகின்றன.

    பரம் பொருளேயோ பரம் பொருளேயோ

                ஆதி மூலமே அனைத்தையும் காக்கும்

                தேவ தேவா சிவனே கண்ணா

                வேலா சாத்தா விநாயகா மாடா

                இருளா சூரியா இந்துவே சக்தியே

                வாணீ காளீ மாமகளேயோ

    இன்னொரு பாடலில் இன்னும் ஒரு படி மேலே போய்ப் பிற மத தெய்வங்களின் பெயர்களையும் சூட்டுகிறார்.

     

    விநாயக தேவனாய் வேலுடைக் குமரனாய்

                நாராயணனாய் நதிச் சடை முடியனாய்

                பிறநாட்டிருப்போர் பெயர் பல கூறி

                அல்லா யெஹோவா எனத் தொழுதன்புறும்

                தேவரும் தானாய் திருமகள் பாரதி

                உமையெனும் தேவியர் உகந்த வான் பொருளாய்

                உலகெலாம் காக்கும் ஒருவனைப் போற்றுதல்.

    புராணங்களை ஒட்டி விநாயகரைக் கறையுண்ட கண்டன் மகன், சக்தி மகன், அரங்கத்திலே திருமாதுடன் பள்ளிகொண்டான் மருகன் என்று அழைத்தாலும் அவர் புராணக் கதைகளின்படி விநாயகரைப் பெருவயிறன் (லம்போதரன்) என்றோ, அருணகிரியார் பாடியபடி ‘மிக்க அடிசில் கடலை பட்சணமெனக் கொள் அருள் விக்கின சமர்த்தன்’ என்றோ அக்காலப் பள்ளி மாணவர்களின் தோத்திரப் பாடலின்படி ‘நூறு குடலை மாம்பழம் நொடிக்கும் அளவில் அமுது செய்ய வல்ல பிள்ளாய்’ என்றோ ஓரிடத்திலும் குறிப்பிடவில்லை. ஏன்? எல்லாம் வல்ல கடவுளுக்குப் பெருந் தீனி தின்பது சிறப்புச் சேர்க்கும் ஒரு செயலா? கடவுளை உணவு உண்பதில் சமர்த்தன் என்று குறிப்பிட்டால் வழிபடுவோருக்கும் அதுவே வழக்கமாகி விடும் என்று பாரதி கருதி இருப்பார்.

    மனிதர்கள் எல்லோரும் ஒரே மாதிரியானவர்கள் அல்லர். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான மூர்த்தி மனதுக்கு ஏற்றதாக இருக்கிறது. சிவனின் உக்ர தோற்றத்தில் ஒருவருக்கு ஈடுபாடு ஏற்படுகிறது என்றால் மற்றவருக்கு நாராயணனின் பள்ளி கொண்ட தோற்றம் அமைதி தருகிறது. குறும்பு செய்யும் கண்ணன் ஒருவனுக்கு மகிழ்ச்சி தந்தால் மற்றவனுக்குக் கோபத்துடன் வேலேந்தும் முருகன் ஆறுதல் தருகிறான். சோகமே வடிவான ஏசு ஒருவனுக்கு ஈடுபாடு தருமானால் இன்னொருவனுக்கு ஆனந்தமே வடிவான கணபதி மகிழ்ச்சி தருகிறார். விநாயகரைப் பார்த்து பாரதி பாடுகிறார் கேட்போம்.

    எனக்கு வேண்டும் வரங்களை

                இசைப்பேன் கேளாய் கணபதி       

                மனதிற் சலனம் இல்லாமல்

                மதியில் இருளே தோன்றாமல்

                நினைக்கும்போது நின் மவுன

                நிலை வந்திட நீ அருள் செய்வாய்

                கனக்கும் செல்வம் நூறு வயது

                இவையும் தர நீ கடவாயே

    ‘யத்பாவயஸி தத் பவஸி’ என்ற பழமொழிப்படி எந்த உருவத்தை மனதில் தியானிக்கிறோமோ அந்த உருவத்தின் தன்மைகள் நம்மிடம் படியும். ஆம். அசையாமல் உட்கார்ந்திருக்கும் கணபதியை நாம் வழிபட்டால் நமக்கும் அவருடைய மவுன நிலை சித்திக்கும். மனதில் சலனமோ மதியில் இருளோ தோன்றாது. தலையில் இடி விழுந்தால் சஞ்சலப்படாமல் இருக்க முடியும். ஏது நிகழினும் நமக்கென்ன என்று இருக்க முடியும். சலனமற்ற மனமும் தெளிவான புத்தியும் தானே நாம் பெறக் கூடிய வரங்களுள் மிகச் சிறந்தவை.

    Share
  • பாரதியின் வேத முகம் – 10

    சு. கோதண்டராமன்

    தேன் வந்து பாயுது காதினிலே

    பாரதியின் பிரபலமான பாட்டு, ‘செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே’ என்பது. நாவால் சுவைக்க வேண்டிய தேன் காதிலே பாய்ந்தால் அதன் இனிமையை அனுபவிக்கமுடியுமா என்று எண்ணுகிறோம்.

    ‘உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும்’ என்று ஒரு பாடல். வாக்கு காதினால் உணரப்படுவது. இதில் கண்ணால் காணக் கூடிய ஒளி எங்கிருந்து வந்தது என்று நமக்குச் சந்தேகம் வருகிறது.

    குழந்தைக் கதை என்ற தலைப்பில் ஒரு கதை- பாரதி எழுதியது. பெயர் தான் குழந்தைக் கதை. விஷயம் என்னவோ கனமானது தான், முதல் உலகப் போரைப் பற்றியது. அதில் ஒரு வரி, மேலே பருந்துகளும் கருட பக்ஷிகளும் வட்டமிட்டு வெயிலைத் தின்று கொண்டுலாவின, என்று வருகிறது. வெயிலையாவது தின்பதாவது.

    இப்படிப் பொறிகளையும் அதன் வேலைகளையும் மாற்றி மாற்றிச் சொல்வது, ஒரு கவித்வ உத்தி மட்டுமல்ல. அதன் பின்னணியில் ஒரு பெரிய தத்துவம் உள்ளது.

    பாரதியின் பதஞ்சலி யோக சூத்திர விளக்கத்தைப் பார்ப்போம். யோக சாஸ்திரப்படி, வெளியில் தெரியும் கண் காது முதலான பொறிகளால் நாம் காட்சி கேள்வி முதலான அனுபவம் பெறுவதில்லை. மாறாக, சித்தமே காண்கிறது, கேட்கிறது, வாசனை, தொடு உணர்ச்சி, சுவை ஆகியவற்றை அறிகிறது. சித்தம் செயல் படாமல் இருக்கும் போது பொறிகள் தம் வேலையைச் செய்தாலும் அது நம் அறிவுக்கு எட்டுவதில்லை. மாறாக, சித்தம் ஆனந்த நிலையில் இருக்கும் போது இந்த எல்லா அனுபவங்களும் பொறிகள் இல்லாமலே கூட நிகழும்.

    இதை விளக்குவது அவருடைய ஞானரதம் என்னும் கட்டுரை. கந்தர்வ லோகத்தில் பாரதி சஞ்சரித்துக் கொண்டிருக்கிறார். அவருடைய அனுபவத்தை அவருடைய வார்த்தைகளிலேயே கேட்போம்.

    கந்தர்வ லோகத்திற்குப் போய்ச் சேர்ந்தவுடனே என்னை அறியாமல் ஓர் ஆனந்தம் உண்டாயிற்று. அதி ரமணீயமான ஸங்கீதத் தொனி கேட்டது. அவ்வொலி பொன்னாற் செய்யப்பட்ட தொண்டையினை உடைய பெண் வண்டுகளின் ரீங்காரம் போலிருந்தது. அன்று, அது சரியான உவமை ஆகமாட்டாது. உயிருக்குள்ளே இன்னிசை மழையை வீசிக் கொண்டேயிருந்தது போலத் தோன்றிய அவ்வொலிக்கு இன்ன உவமை சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. இது என்ன ஒலி, எங்கிருந்து வருகிறது என்று யோசித்தேன். எனது அறிவிற்குப் புலப்படவில்லை.

    இந்த இனிய ஒலி என்னைப் பரவசப்படுத்துகிறதே, அது எங்கிருந்து வருகிறது என்றேன். மேலே பார் என்றனள். நீல வானத்தில் சந்திரன் தாரகைகளிடையே கொலு வீற்றிருக்கக் கண்டேன்.

    அவருடைய கிரணங்கள் என்றாள்.

    சந்திர கிரணங்களா, சந்திர கிரணங்களுக்கும் இந்த மனோகரமான தொனிக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டேன்.

    சந்திர கிரணங்களுக்கு இந்த இனிய ஓசை இயற்கை. அது இந்த உலகத்தில் நன்றாகக் காதில் விழுகிறது. உங்கள் மண்ணுலகத்திலே ஜனங்களுடைய செவியில் விழுவது கிடையாது. ஆனால் அங்கே கூட அருமையான கவிகளின் செவியில் இந்த ஓசை படும் என்றாள்.

    இவ்வாறு பொறிகளையும் அதன் வேலைகளையும் மாற்றிச் சொல்வதற்கு வேத ஆதாரம் உண்டா? உண்டு. யஜுர் வேதம் 1.1.5.11 ‘ஒளியுள்ள சொற்களைச் சொல்லுக’ என்கிறது. நம்மைப் போன்ற சாமானியர்கள் சொல்லின் ஒலியை மட்டுமே அறிவோம். ரிஷிகள் அதன் ஒளியையும் அறிந்திருந்தார்கள். மருத்துகள் (புயற் காற்று) சூரியனைப் போலப் பிரகாசிக்கிறது என்கிறது ரிக் வேதம் 1.64.2. இன்னும் நிறைய உண்டு.

    வேத ரிஷிகளைப் போல் பாரதியின் சித்தமும் எப்பொழுதும் பரம்பொருளின் நினைவிலேயே, ஆனந்த நிலையில் தோய்ந்திருந்தது. அதனால் அவருக்குப் புலன்களுக்கு அப்பாற்பட்ட உணர்வுகள் சாத்தியமாயிற்று. தீக்குள் விரலை வைத்த போது நந்தலாலாவைத் தீண்டும் இன்பம் கிடைத்தது. காற்றுத் தேவனின் உடல் வயிர ஊசி போல ஒளி வடிவமாகக் காட்சி தந்தது.

    Share
  • பாரதியின் வேத முகம் – 9

     

    -சு.கோதண்டராமன்

    இனி ஒரு விதி செய்வோம்

          பாரதியின் கோபம் வெளிப்படும் இடங்களில் ஒன்று ‘இனி ஒரு விதி செய்வோம்’ என்று துவங்குகிறது. ‘தனி ஒருவனுக்கு உணவு இல்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்’ என்பதை எந்த நாளும் காக்க வேண்டிய ஒரு விதியாக அவர் விதிக்கிறார். தின்ன வரும் புலியை அன்போடு சிந்தையில் தேக்கச் சொன்ன அவர் இவ்வளவு கொடூரமாகச் சபதம் செய்தது ஏன் ?

    சற்றே பின்னோக்கி, அவர் வாழ்ந்த காலத்தைப் பார்ப்போம். புகழ் பெற்ற தாது வருஷத்துப் பஞ்சம், இந்திய மக்களில் மூன்று கோடிப் பேரைப் பலி வாங்கிய கொடுமை அவர் பிறப்பதற்கு ஆறு ஆண்டுகள் முன்பு தான் ஏற்பட்டது. இதன் துன்பங்கள் எல்லாம் மக்கள் கூறக் கேட்டு இளம் பாரதி மனதில் படிந்திருக்க வேண்டும். பசியின் கொடுமையை அனுபவித்தவர் தான் உள்ளபடி உணரமுடியும். பாரதியும் அதை அனுபவித்திருந்தார். கவிதையையும் நாட்டுக்கு உழைத்தலையும்  தொழிலாகக் கொண்ட அவருக்குப் பரிசாகக் கிடைத்தது வறுமை தான். ஆனால் அவர் ஒரு போதும் வாடிய தன் வயிற்றுக்காகக் கவலைப் படவில்லை. அவர் வருந்தியது இந்நாட்டு மக்களுக்காகத் தான்.

    கஞ்சி குடிப்பதற்கு இலார் அதன்

    காரணங்கள் இவை என்னும் அறிவும் இலார்

    பஞ்சமோ பஞ்சம் என்றே நிதம்

    பரிதவித்தே உயிர் துடிதுடித்தே

    துஞ்சி மடிகின்றாரே இவர்

    துயர்களைத் தீர்க்கவோர் வழி இல்லையே         

    என்று நெஞ்சு பொறுக்காமல் புலம்புகிறார்.

    பஞ்சம் ஏற்படக் காரணம் என்ன? ஆயிரக் கணக்கான ஆண்டுகளாகப் பயிரிட்டு இந்திய மண்ணின் சாரம் குறைந்துவிட்டது என்ற வாதத்தைப் பாரதி ஒப்புக் கொள்ளவில்லை. இந்தியா பாருக்குள்ளே நல்ல நாடு என்றும், கனியும் கிழங்கும் தானியங்களும் கணக்கின்றித் தரும் நாடு என்றும் இனிய பொழில்கள் நெடிய வயல்கள்  எண்ணறு நிறை நாடு என்றும் கூறுகிறார்.

    பின் ஏன் பஞ்சம்? நம் மக்கள் உழைக்க அஞ்சுவதாகச் சிலர் கூறுகின்றனர். ஜப்பானியரைப் போல் உழைத்தால் நாம் எங்கோ போயிருப்போம் என்பர். பாரதி இதையும் மறுக்கிறார்.

    மானிடர் உழாவிடினும் வித்து நடாவிடினும் நீர் பாய்ச்சாவிடினும் வகை வகையாப் புற்கள் நெற்கள் மலிந்திருக்கும் என்பார் அவர்.

    ஆக, பஞ்சத்துக்குக் காரணம் வளமின்மையோ உழைப்பின்மையோ அல்ல. எல்லாம் விளைந்தும் சரியான பங்கீடு இல்லாதது தான் காரணம். உடையவர்கள் இல்லாதவர்களுக்குக் கொடுக்காமல் பதுக்குகிறார்கள். அதற்கு அடிப்படையான அன்பு இல்லை அவர்களிடம். அதனால் பாரதி பல இடங்களிலும் அன்பையே வலியுறுத்துகிறார்.

    மனிதரின் கடமையாக அவர் கூறும் நான்கில் ஒன்று, பிறர் துயர் தீர்த்தல். இதைச் செய்யச் சிலர் தவறுவதால் உலகில் பிறர் துடிதுடிக்கின்றனர். பஞ்சத்திலும் நோய்களிலும் பாரத மக்கள் புழுக்கள் போலத் துஞ்சத் தம் கண்ணால் கண்டும சோம்பிக் கிடக்கும் இந்நிலைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கத் துடிக்கும் அவரது சொல்லின் வேகத்தைப் பாருங்கள்.

    மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனியுண்டோ ? 

    இந்நிலை வளரவிட்டால் என்ன ஆகும் ? ரஷ்யப் புரட்சியைச் சுட்டிக் காட்டுகிறார். அங்கு

    உழுது விதைத்து அறுப்பாருக்கு உணவில்லை

    மாகாளி பராசக்தி கடைக்கண் வைத்தாள்

    ஆகா என்று எழுந்தது பார் யுகப் புரட்சி

    அன்பு கொண்டு பகுத்துண்டு வாழ்ந்தால் மேன்மையுறலாம். இன்றேல் மாகாளியின் கோபத்துக்கு இலக்காகி வஞ்சனையாளர் எல்லாம் வீழ்ந்திடுவர். எனவே நான் அழிக்காவிட்டாலும் மாகாளி இந்த சுயநல ஜகத்தை அழிக்கப் போவது திண்ணம். எனவே அன்பு செய்யுங்கள். அடுத்தவர் பசியை நீக்குங்கள். கிருத யுகம் மீண்டும் மலரும் என்கிறார் அவர். பாரதியின் கோபம் நமக்குப் புரிகிறது.

    பாரதியின் அன்பு வட்டம் இந்தியாவை மட்டுமோ, மனிதரை மட்டுமோ உள்ளடக்கியதல்ல. பூமண்டலம் முழுமையும் உள்ள எல்லா உயிர்களையும் கொண்டது அது.

    மண் மீதுள்ள மக்கள் பறவைகள்

    விலங்குகள் பூச்சிகள் புற்பூண்டு மரங்கள்

    யாவுமென் வினையால் இடும்பை தீர்ந்தே

    இன்பமுற்று அன்புடன் இணங்கி வாழ்ந்திடவே

    செய்தல் வேண்டும் தேவதேவா

    ஞானாகாசத்து நடுவே நின்று நான்

    பூமண்டலத்தில் அன்பும் பொறையும்

    விளங்குக. துன்பமும் மிடிமையும் நோவும்

    சாவும் நீங்கிச் சார்ந்த பல்லுயிரெல்லாம்

    இன்புற்று வாழ்க என்பேன். இதனை நீ

    திருச்செவிக்கொண்டு திருவுளமிரங்கி

    அங்ஙனே யாகுக என்பாய் ஐயனே.

    “மங்கலம் நல்கும் இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். யக்ஞம் சிறப்பாக நிறைவுற வேண்டுகிறோம். யக்ஞம் செய்பவருக்காக வேண்டுகிறோம். நமக்கு தேவதைகள் நன்மை செய்யட்டும். மனிதர்கள் எல்லோருக்கும் நன்மை உண்டாகட்டும். செடி கொடிகள் மேலோங்கி வளரட்டும். நம்மிடமுள்ள இரண்டு கால் பிராணிகளுக்கு மங்கலம் உண்டாகட்டும். நான்கு கால் பிராணிகளுக்கும் நலம் உண்டாகட்டும்” என்ற வேதத்தின் கூற்றே இங்கு எதிரொலிக்கக் கேட்கிறோம்.

     

    Share
  • பாரதியின் வேத முகம் – 8

     

    -சு.கோதண்டராமன்

    இப்போதே முக்தி

                    தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் என்ற நான்கும் புருஷார்த்தங்கள் எனப்படுகின்றன. இதையே தமிழில் அறம் பொருள் இன்பம் வீடு என்கிறோம். இவை ஒவ்வொரு மனிதனும் வாழ்நாளில் அடைய வேண்டியவை என்று கூறப்படுகின்றன.

    தரும நெறிப்படி நடக்க வேண்டும். பொருள் தேடி உண்ண வேண்டும். உலக இன்பங்களைச் சுவைக்க வேண்டும். பின் மோட்சம் அடைய வேண்டும். இந்த மோட்சம் என்ற சொல்லுக்கு விடுதலை, விடுபட்டு நிற்றல் என்று பொருள். இறந்தபின் அடைய வேண்டிய நிலை என்று தான் அனைவரும் இதற்குப் பொருள் கூறுகின்றனர்.

    ஆனால் மோட்சம் என்பது இறந்த பிறகு அடையப்பட வேண்டியது என்பது வேதத்தின் உண்மையான கருத்து அல்ல. வேதத்தின் உண்மையான கூற்றுப்படி நான்காவது புருஷார்த்தம் இறந்த பிறகு அடையும் சொர்க்கப் பதவி அல்ல, பயத்திலிருந்து விடுபடுவதையே அது குறிக்கிறது என்கிறார் விவேகானந்தர்.

    பாரதியாரின் பாடல் ஒவ்வொன்றிலும் இந்த வேதக் கருத்து ஆதார சுருதியாக ஒலிப்பதைக் கேட்கலாம்.

    மோட்சம் என்பது இறந்த பிறகு கிடைப்பது அல்ல என்பதை அவர் வாக்கிலேயே கேட்போம்.

    செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம்

    சேர்ந்திடலாமென்றே எண்ணியிருப்பார்

    பித்த மனிதர் அவர் சொலும் சாத்திரம்

    பேயுரையாமென்று இங்கு ஊதேடா சங்கம்

     

    இத்தரை மீதினில் இந்த நாளில்

    இப்போதே முத்தி சேர்ந்திட நாடிச்

    சுத்த அறிவு நிலையில் களிப்பவர்

    தூயவராம் என்று இங்கு ஊதேடா சங்கம்

    கவலைப்படுதலே கருநரகம்மா, கவலையற்றிருத்தலே முக்தி என்று அவரது விநாயகர் நான்மணிமாலை விளக்குகிறது.

    விடுதலை என்ற தலைப்பில் பாரதி நான்கு பாடல்கள் பாடியிருக்கிறார். நான்கில் எதுவும் அரசியல் சுதந்திரம் அடைவது பற்றியோ இறந்த பின் அடைவதாகச் சொல்லப்படும் சுவர்க்கம் பற்றியோ பேசவில்லை.

    பறையருக்கும் இங்கு தீயர் புலையருக்கும் விடுதலை என்ற பாட்டில் ஜாதி சமத்துவம், ஆண் பெண் சமத்துவம், ஏழை பணக்காரன் சமத்துவம், ஆண்டான் அடிமை என்ற வேறுபாடற்ற சமத்துவம் இவை தான் பேசப்படுகின்றன. சமத்துவமற்ற நிலையிலிருந்து விடுதலை பெறுவதே இதன் கருப்பொருள். எல்லாம் கடவுளின் ரூபங்கள் என்ற வேதக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு பாரதி இந்த சமத்துவத்தை வலியுறுத்துகிறார். இது சமுதாய வாழ்வின் விடுதலை.

    மற்ற மூன்று பாடல்களிலும் பாரதி மனிதன் தன் சொந்த வாழ்வில் தானாக ஏற்படுத்திக்கொண்ட தளைகளிலிருந்து விடுதலை பெறுவதைக் கூறுகிறார்.

    உயிர்க் கூட்டங்களில் மனிதன் மட்டும் தான் உணவு தேடுவதை ஒரு சுமையான வேலையாகச் செய்து கொண்டவன். தாவரங்களோ பறவைகளோ மனிதன் அளவு அலட்டிக் கொள்வதில்லை. ஏனெனில் அவற்றின் உணவுத் தேவை சொற்பமானது. உணவு தேடுவதையும் உண்பதையும் சுமையான கடமையாகக் கருதாமல் அவை மகிழ்ச்சியாகச் செயல்படுகின்றன. மரங்களும் செடி கொடிகளும் எந்தத் தொழில் செய்து வாழ்வனவோ என்று கேட்கிறார் பாரதி.

    அவரது முக்தி இலக்கணம் சிட்டுக்குருவியினது போன்ற வாழ்க்கை தான். அது எப்படிப் பொழுது போக்குகிறது?

    முட்டை தருங் குஞ்சைக் காத்து மகிழ்வெய்தி

                    முந்த உணவு கொடுத்து அன்பு செய்திங்கு

                    முற்றத்திலேயும் கழனி வெளியிலும்

                    முன் கண்ட தானியம் தன்னைக் கொணர்ந்துண்டு

                    மற்றப் பொழுது கதை சொல்லித் தூங்கிப் பின்

                    வைகறையாகு முன் பாடி விழிப்புற்று

                    விட்டு விடுதலையாகி நிற்பாய் இந்தச்

                    சிட்டுக்குருவி போலே

    சோம்பேறித்தனமாக ஒரு வேலையும் செய்யாமல் கதை பேசிப் பொழுது போக்குவது தான் முக்தி என்று பாரதி கருதுகிறாரா? அல்ல, அல்ல. அன்பு செய்து என்று ஒரு வார்த்தை போட்டிருக்கிறார் கவனியுங்கள்.

    விடுதலை என்று தலைப்பிட்ட மற்றொரு பாடலில் பாரதி கூறுகிறார்,

    ………………..பாடுபடல்வேண்டா               

                    ஊனுடலை வருத்தாதீர், உணவு இயற்கை கொடுக்கும்

                    உங்களுக்குத் தொழில் இங்கே அன்பு செய்தல் கண்டீர்

    பாடுபடல் வேண்டா, ஊனுடலை வருத்தாதீர் என்று சொல்லும்போது சோம்பேறித்தனத்தைத் தான் அவர் விடுதலை என்று கூறுகிறாரோ என்று தோன்றுகிறது. அடுத்த வரியில் தொழில் அன்பு செய்தல் என்று கூறுவதைச் சற்று சிந்தித்தால் தான் உண்மையான பொருள் விளங்கும்.

    மீண்டும் விநாயகர் துதிக்குப் போவோம். அதில் கடமைகள் யாவை என்று பட்டியல் இடுகிறார். தன்னைக் கட்டுதல், பிறர் துயர் தீர்த்தல், பிறர் நலம் வேண்டுதல், இறைவனைப் போற்றுதல் இந்நான்கே பூமியில் எவர்க்கும் கடமை என்கிறார். பிறர் நலம் வேண்டுதல் என்பது மற்றவர்க்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்தல் என்று பொருள். பிறர் துயர் தீர்த்தல் என்பது அதிலிருந்து வேறானது என்பது புலனாகின்றது. அங்கு அன்பு செய்தல் என்று கூறியதைத் தான் இங்கு பிறர் துயர் தீர்த்தல் என்கிறார். இது மனத்தாலோ வாய்ச் சொல்லாலோ செய்யப்படும் பிரார்த்தனை அல்ல. இது உடலால் உழைப்பதையே குறிக்கும். தனக்காக உழைக்காமல் பிறருக்காக உழைத்தால் அது ஊனுடலை வருத்தாது. அது பாடாக, சுமையாகத் தோன்றாது. எனவே தன் உணவுக்காக, தன் சுகத்துக்காக உழைக்கும்போது தான் கவலைகளும் பயங்களும் துயரங்களும் ஏமாற்றங்களும் தோன்றும். அவ்வாறின்றி பிறருக்காக உழைப்பது கவலையிலிருந்து விடுபட வழியாகிறது. அதுவே முக்தி என்பது பாரதியின் கருத்து.

    பாரான உடம்பினிலே மயிர்களைப் போல்

                    பலப்பலவாம் பூண்டு வரும் இயற்கையாலே

                    நேராக மானுடர் தாம் பிறரைக் கொல்ல

                    நினையாமல் வாழ்ந்திட்டால் உழுதல் வேண்டா

                    காரான நிலத்தைப் போய்த் திருத்த வேண்டா

                    கால்வாய்கள் பாய்ச்சுவதிற் கலகம் வேண்டா

                    சீரான மழை பெய்யும் தெய்வமுண்டு

                    சிவன் செத்தாலன்றி மண் மேல் செழுமையுண்டு

     

                    ஆதலால் மானிடர்கள் களவை விட்டால்

                    அனைவருக்கும் உழைப்பின்றி உணவுண்டாகும்

                    பேதமிட்டுக் கலகமிட்டு வேலி கட்டிப்

                    பின்னதற்குக் காவலென்று பேருமிட்டு

                    நீதியில்லாக் கள்வர் நெறியாயிற்றப்பா

                    நினைக்குங்கால் இது கொடிய நிகழ்ச்சியன்றோ

     

    தன்னைப் பற்றிக் கவலைப்படாமல் அன்பு செய்து கொண்டிருந்தால் உணவு இயற்கை கொடுக்கும் என்பதை மற்றொரு பாட்டிலும் தெளிவுபடுத்துகிறார்,

    நமக்குத் தொழில் கவிதை நாட்டுக் குழைத்தல்

                    இமைப்பொழுதும் சோராதிருத்தல் – உமைக்கினிய

                    மைந்தன் கணநாதன் நங்குடியை வாழ்விப்பான்

                    சிந்தையே இம்மூன்றும் செய்.

     

    இவ்வாறு ஊருக்கு உழைப்பதன் மூலம் தன்னைப் பற்றிய கவலையைத் துறந்து வாழும் வழியை அடைவது இவ்வுலகில் வாழும்போது தான் முடியும். அதைத் தான் பாரதி மண்ணுலகிலிருந்து வானகத்தைத் தீண்டுவது என்கிறார்.

     

    Share
  • பாரதியின் வேத முகம் – 7

    – சு.கோதண்டராமன்

    ஓம்

    வேதம் ஓதத் துவங்கும் போதும், முடிக்கும் போதும், ஓம் என்னும் மந்திரத்தைச் சொல்வது வழக்கமாக உள்ளது. எந்த மந்திரத்தைக் கூறினாலும் அதற்கு முன் ஓங்காரம் உச்சரிக்கப்படுகிறது. இது எல்லா வேதங்களின் சாரம் என்று சாந்தோக்கிய உபநிஷத்தும், ஓங்காரமே பிரம்மம் (பரம்பொருள்) என்று தைத்திரீய, பிரச்ன உபநிடதங்களும் கூறுகின்றன. இவ்வளவு முக்கியத்துவம் அளிக்கப்படும் ஓங்காரத்தின் பொருள் என்ன?

    ஓங்காரத்துக்குப் பொருளே சொல்ல முடியாது என்று சிலரும், இறைவன் தான் ஓங்காரத்தின் உட்பொருள் என்று சிலரும் கூறுவர். இன்னும் சிலர், உலகிலுள்ள அனைத்து ஒலிகளின் சங்கமமே ஓங்காரம் என்பர்.

    வேத மந்திரங்களில் பாரதிக்கு மிகவும் பிடித்தமான சொல் ஓம். கந்தர்வ லோகத்தில் பிரதிமைகள் இல்லாத கோவில்களும் சில உண்டு. அங்கு ஓம் என்று ஒளி எழுத்தில் எழுதி வைத்திருப்பதாக ஞானரதம் என்ற கட்டுரையில் அவர் கூறுகிறார். பாஞ்சாலி சபதத்தின் இறை வணக்கப் பாடலில் ஓம் எனப் பெரியோர்கள் ஓதுவது தான் பிரமம் எனப்படும் அறிவும் அனந்தமும் ஆகிய நிர்மலப் பொருள் என்கிறார். இறைவனை வணங்கும் போது ஓம் எனும் பொருளை உளத்திலே நிறுத்த வேண்டும் என்று அவரது விநாயகர் நான்மணிமாலை கூறுகிறது.

    ஓங்காரம் ஆசீர்வாதத்திற்கு உரிய மங்கலச் சொல் என்று பாரதி கருதியதை, “தருமன் முகமலர்ந்து வருக என்று சொல்லி ஓம் என்று ஆசீர்வதித்தான்” என்று அவரது தர்மலோகம் கூறுகிறது. ஓங்காரத்தை தியானத்திற்குரிய எளிய மந்திரமாகவும் மன அமைதி் தருவதாகவும் அவர் கருதினார் என்பது தருமலோகம் என்ற கட்டுரையில் “முனிவர்கள் இருவரும் பிரம்மத் தியானத்திலே அமர்ந்திருந்தார். நான் ஓம் என்று ஜெபித்து சாந்தி தேவியை வரிக்கலானேன்” என்று கூறுவதிலிருந்து அறியலாம்.

    இறைவனை ஓங்கார வடிவினனாகச் சொல்வது ஏன்?

    ஓங்காரத்துக்கு இன்னொரு பெயர் பிரணவம் என்பது. ப்ரணவ என்ற வட சொல் ப்ர+நவ என்ற இரு சொற்களின் கூட்டு. ப்ர என்ற முன்னொட்டு முதன்மை அல்லது சிறப்பைக் குறிக்கும். நவ என்பதற்குப் புதுமை என்பது பொருள். எனவே ப்ரணவம் என்பது புதுமைக்குச் சிறப்பு என்று பொருள் தருகிறது.

    புதுமைக்குச் சிறப்பு அளித்தல் என்பது, அடிப்படையை மாற்றாமல் பிற விஷயங்களில் சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாற்றம் செய்து கொள்ளுதல் ஆகும்.

    பிரபஞ்சத்தில் ஒவ்வொரு பொருளும் கணம் தோறும் மாறிக் கொண்டே, புதுமை அடைந்து கொண்டே இருக்கிறது. இவ்வாறு பிரபஞ்சமே ஓங்கார ஸ்வரூபமாக உள்ளது. இந்த இடை விடாத மாற்றங்களின் காரண கர்த்தாவான இறைவனும் ஓங்கார ஸ்வரூபனாகக் கருதப்படுகிறான். இறைவனை முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருளே என்று போற்றிய மாணிக்கவாசகர் அடுத்த அடியில் பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே என்று கூறுவதை நோக்குக.

    பதஞ்ஜலி யோக சூத்ர உரையில் பாரதி கூறுவதைக் கேட்போம். ஓம் என்பது பிரணவ மந்திரம். இந்த மந்திரத்துக்கு ஆகமங்கள் கோடி வகைகளில் பொருள் சொல்கின்றன. ப்ரணவம் என்ற சொல் எப்போதும் புதுமையானது என்ற பொருள் தருவது.

    வேதத்தில் ஓங்காரத்துக்கு இவ்வளவு முக்கியத்துவம் தரப்படுவதன் நோக்கம் புதுமையில் நாட்டம் கொண்டவனாக இரு என்று அறிவுறுத்துவதற்கே.

    சாதாரணமாகக் குழந்தைகள் தாம் புதுமையில் நாட்டம் கொண்டவர்களாக இருப்பார்கள். புதிய கற்பனைகள், புதிய சிந்தனைகள், புதிய விளையாட்டுகள், புதிய நண்பர்கள் என்று நாள் தோறும் புதுமையை வரவேற்றுக் கொண்டிருக்கிறார்கள். குழந்தைப் பருவம் மகிழ்ச்சியாக இருப்பதற்குக் காரணம் இது தான். குழந்தைகளிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் இது.

    புராணங்களின் மெய்ப் பொருள் கண்டு பயன் பெற வேண்டும் என்ற பாரதியின் கருத்துக்கு இணங்க, ஓங்காரம் தொடர்பான ஒரு புராணக் கதையின் உட்பொருள் காண முயல்வோம்.

    பிரணவத்தின் பொருள் தெரியாத பிரமனைக் குட்டிச் சிறையில் அடைத்து சிவனார் மனம் குளிர அவர் செவியில் முருகன் ஓதினார் என்று புராணம் கூறுகிறது. புதுமையைப் போற்று என்று குழந்தைகள் சொல்கின்றனர். புதியனவற்றை ஏற்க மறுக்கும் முதியவர்களே, குழந்தைகளிடம் இதைக் கற்றுக் கொள்ளுங்கள் என்பது தான் முருகனின் உபதேசம்.

    இந்த நெறிப்படி, காலத்திற்கேற்பத் தன்னைப் புதுப்பித்துக் கொண்டு வந்ததால் தான் இந்து சமயம் எத்தனையோ சோதனைகள் வந்தும், அவற்றைக் கடந்து வந்து இன்று உலகளாவப் பரவத் தொடங்கியுள்ளது. ரிக் வேத ஸம்ஹிதையே இந்தப் பரந்த மனப்பான்மைக்கு அடித்தளம் இட்டது. பின்னர் எழுந்த நூல்களும் இத் தடத்திலேயே சென்றன. எனவே அவையும் வேதம் என்ற தலைப்பின் கீழ்க் கொண்டு வரப்பட்டன.

    வேதம் காலம் தோறும் புதுப்பிக்கப்பட்டு வந்திருக்கிறது என்பதற்கு இந்த ஓங்காரமே சாட்சி. ஆம். வேதத்தின் ஸம்ஹிதை என்ற காலத்தால் மூத்த பகுதியில் இந்த ஓங்காரம் ஒரு சொல்லாக அமையவில்லை. இது ஒரு பிற்காலக் கண்டுபிடிப்புத் தான் என்றாலும் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இன்று எந்த வேத மந்திரம் சொல்வதானாலும் ஓங்காரத்துடன் தான் துவக்கப்படுகிறது, ஓங்காரத்துடன் முடிக்கப்படுகிறது.

    நிகழ்காலத்திலும் இந்தப் புதுப்பி்க்கும் செயல் தொடர்ந்து நடைபெற வேண்டுமென்பது பாரதியின் விருப்பம். அதனால் தான் ஆத்திசூடியில் வேதம் புதுமை செய் என்கிறார். நாம் புதுமையை விரும்பினாலும் அதை ஏற்றுக் கொள்வதற்கும் பழமையைக் கைவிடுவதற்கும் நமக்குத் தயக்கம் அதிகம். இதைப் பாரதி தன் மனத்துக்கு அறிவுறுத்தும் பாடலில் காட்டுகிறார்.

    புதியது காணில் புலனழிந்திடுவாய்

    புதியது விரும்புவாய் புதியது அஞ்சுவாய்

    அடிக்கடி மதுவினை அணுகிடும் வண்டு போல்

    பழமையாம் பொருளிற் பரிந்து போய் வீழ்வாய்

    பழமையே அன்றிப் பார்மிசை ஏதும்

    புதுமை காணோம் எனப் பொருமுவாய்

    பாரதி மற்றவர்க்கு உபதேசித்ததைத் தான் நடைமுறைப்படுத்திக் காட்டினார். முந்தைய புலவர்களினின்றும் மாறுபட்டு்க் காலத்திற்கு ஏற்ற புது வகையான பாடல்கள், புது வகையான கருப் பொருள்கள் கொண்டு தமிழ் இலக்கியத்தை வளப்படுத்தியது போல, மானிட சமுதாயம் நலம் பெறுவதற்கான ஒரு புதிய மந்திரத்தையும் உருவாக்கினார்.

    சொல் புதிது

    வேத மந்திரங்களைச் சொல்லி முடிக்கும்போது, ‘எங்கும் அமைதி நிலவுவதாக’ என்று பொருள்பட ‘ஓம் சாந்தி’ என்று மும்முறை சொல்லி முடிப்பது வழக்கம். இந்தியா தாழ்வுற்றுப் பாழ்பட்டு நின்ற நிலையில் நமக்குத் தேவை செயலற்றுக் கிடக்கும் அமைதி அல்ல, செயல்படுவதற்கான வலிமையே என்று உணர்ந்து பாரதி ஓம் சக்தி என்ற புதிய மந்திரத்தை அறிமுகப்படுத்துகிறார். இம்மந்திரம் வேத வழக்கில் இல்லாதது. ஆனால் இதன் கருத்து வேத சம்மதமானதே என்பதை விவேகானந்தரின் இந்த உபநிடத மேற்கோள் மெய்ப்பிக்கிறது.

    உபநிஷத் கூறுகிறது, “வலிமை, வலிமை. மனிதா, பலவீனனாக இராதே. பலவீனத்தைப் பலவீனத்தால் குணப்படுத்த முடியுமா? அழுக்கை அழுக்கால் போக்க முடியுமா? மனிதா, நிமிர்ந்து நில். வலிமையாக இரு.”

    இவ்வாறு ஓம் சக்தி மந்திரம் பாரதியால் வேத நெறி அடிப்படையில் காலத்தின் தேவை கருதி உருவாக்கப்பட்டதை அறிகிறோம்.

     

    படத்துக்கு நன்றி: http://www.vallamai.com/wp-content/uploads/2013/01/பாரதி.jpg

     

     

    Share
  • பாரதியின் வேத முகம் – 6

    எத்தனை கோடி இன்பம்

    -சு.கோதண்டராமன்

    வேத ரிஷிகள் உலக வாழ்க்கையின் ஒவ்வொரு அணுவையும் ரசித்து ரசித்து அனுபவித்தவர்கள். காணும் ஒவ்வொரு பொருளிலும், கேட்கும் ஒவ்வொரு ஒலியிலும் அவர்களுக்கு இன்பம் பொங்கி வருவது தெரிகிறது. வாழ்க்கையின் இருண்ட பகுதியையே எண்ணி, ஐயோ என் வாழ்க்கை இப்படித் துன்ப மயமாக ஆகிவிட்டதே, உலகில் எல்லாரும் வஞ்சகக்காரர்கள், எல்லாப் பொருளும் துன்பம் நிறைந்தவை என்று அஞ்சி அஞ்சிச் சாகும் மானிடப் பூச்சிகளுக்கும் அவர்களுக்கும் தான் எத்தனை வேறுபாடு. இதோ இந்த வேத மந்திரத்தைப் பாருங்கள்.

    மது வாதா ருதாயதே

    மது க்ஷரந்தி ஸிந்தவ:

    மாத்வீர் நஸ் ஸந்த் வோஷதீ:

    மது நக்தம் உதோஷஸி

    மதுமத் பார்த்திவகும் ரஜ:

    மது த்யௌ ரஸ்து ந: பிதா

    மதுமாந்நோ வனஸ்பதி:

    மதுமாகும் அஸ்து சூர்ய:

    மாத்வீர் காவோ பவந்துந:

     

    பித்ரு தர்ப்பணத்தின் போது முப்பாட்டனார்க்கு எள்ளும் நீரும் அளிக்கும் போது இந்த மந்திரத்தைச் சொல்கிறோம். இதன் பொருள் என்ன?

    இனிய காற்று வீசுகிறது. நதிகள் இனிமையாக ஓடுகின்றன. செடி கொடிகள் நமக்கு இனியனவாக இருக்கட்டும். இரவும் விடியற்காலையும் இனியவையாக உள்ளன. பூமியின் புழுதி இனிதாக உள்ளது. நமது தந்தை போன்ற ஆகாயம் இன்பம் அளிக்கட்டும். வனத்தின் மரங்கள் இன்பம் நிறைந்தவைகளாக இருக்கட்டும். சூரியன் இன்பம் தரட்டும். பசுக்கள் இனிமையான பாலை அளிக்கட்டும்.

    உலகில் துன்பம் இருப்பது உண்மை தான். ஆனால் அதற்காகத் துவண்டு விடக் கூடாது என்பது பாரதியின் கருத்து. நல்லதும் தீயதும் செய்திடும் சக்தி நலத்தை நமக்கு அளிப்பாள் என்று நம்புக” என்று ஊக்கம் தருகிறார் அவர். துன்பமே இயற்கை என்னும் சொல்லை மறந்திடுவோம், இன்பமே வேண்டி நிற்போம் யாதும் அவள் தருவாள் என்று கூறுகிறார். அவருக்குக் காக்கைச் சிறகினிலும், பார்க்கும் மரங்களிலும் நந்தலாலா தென்படுகிறான். கேட்கும் ஒலியில் எல்லாம் அவனது கீதமே காதில் விழுகிறது. தீக்குள் விரலை வைத்தாலும் நந்தலாலாவைத் தீண்டும் இன்பம் தோன்றுகிறது. அவரது இந்த வசன கவிதையைப் பாருங்கள். இந்த வேத மந்திரத்தின் நேர் மொழிபெயர்ப்பு போலவே உள்ளது.

    இவ்வுலகம் இனியது இதிலுள்ள வான் இனிமை யுடைத்து

                    காற்றும் இனிது தீ இனிது நீர் இனிது நிலம் இனிது

                    ஞாயிறு நன்று திங்களும் நன்று

                    வானத்துச் சுடர்களெல்லாம் மிக இனியன

                    மழை இனிது மின்னல் இனிது இடி இனிது

                    கடல் இனிது மலை இனிது காடு இனிது

                    ஆறுகள் இனியன

     

    இன்பம் என்ற இந்த வசன கவிதை முழுவதையும் படித்துப் பாருங்கள். நமக்கும் பாரதியைப் போல எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா என்று நன்றி சொல்லத் தோன்றும்.

    Share
  • பாரதியின் வேத முகம் – 5

     

    சு.கோதண்டராமன்

    சாதிகள் இல்லையடி பாப்பா

    இந்து சமயத்தைச் சாடுவோர் வேதத்தின் வர்ணாசிரம நெறி தான் சாதிப் பிரிவுகளை உண்டாக்கியது என்று கூறுவர். உண்மை அதுவல்ல. வேதம் சாதி பற்றி எதுவும் கூறவில்லை. வேத காலத்தில் சாதி இல்லை. வர்ணாசிரம முறை இருந்தது.

    வர்ணாசிரமம் என்பதில் வர்ணம் ஆசிரமம் என்ற இரு சொற்கள் அடங்கியுள்ளன. இதில் ஆசிரமம் என்பது ஒரு தனி மனித வாழ்வின் வெவ்வேறு கால கட்டங்கைளக் குறிக்கும் – மாணவப் பருவம், இல்லறப் பருவம், காடு வாழ் பருவம், துறவுப் பருவம். இந்த ஆசிரம முறை பற்றிப் பாரதி எதுவும் கூறவில்லை. இளம் பருவத்தில் துறவு பூணும் முறை புத்த மதத்திலிருந்து இந்து மதத்திற்கு வந்து சேர்ந்த ஒரு கேடு என்று மட்டும் கூறுகிறார்.

    ஆனால் வர்ண முறையைப் பாரதி பெரிதும் போற்றினார். வர்ணம் என்ற சொல் நிறம் என்ற பொருளுடையது. இது தொழில் அடிப்படையில் மனித சமூகத்தில் காணப்படும் பிரிவைக் காட்டுவது. ஒவ்வொரு சமூகத்திலும் நடைபெறும் தொழில்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம். சிலர் அறிவுத் துறையில் (ஆசிரியர், ஆராய்ச்சியாளர்) ஈடுபடுகின்றனர். சிலர் நாட்டு மக்களைக் காக்கும் பணியிலும் (அரசு அதிகாரிகள், ராணுவத்தினர்), சிலர் வாணிபத்திலும், மற்றையோர் உற்பத்தித் தொழிலிலும் உள்ளனர். ஒரு சமூகம் சீராக இயங்க இந்த நான்கு குழுக்களும் தேவை. இவற்றில் எந்த ஒன்றும் உயர்ந்தது என்றோ தாழ்ந்தது என்றோ சொல்ல முடியாது. ஒரு யந்திரத்தின் நான்கு பாகங்கள் போல, இவை நன்கு பொருந்தி சீராக அமைந்தால் தான் சமூக யந்திரம் சிக்கலின்றி இயங்கும். இதைத் தான் பாரதி குறிப்பிடுகிறார்.

    வேதமறிந்தவன் பார்ப்பான் – பல

    வித்தை தெரிந்தவன் பார்ப்பான்

    நீதி நிலை தவறாமல் தண்ட

    நேமங்கள் செய்பவன் நாய்க்கன்

     

    பண்டங்கள் விற்பவன் செட்டி பிறர்

    பட்டினி தீர்ப்பவன் செட்டி

    தொண்டர் என்றோர் வகுப்பில்லை தொழில்

    சோம்பலைப் போல் இழிவில்லை

     

    நாலு வகுப்பும் இங்கொன்றே இந்த

    நான்கினில் ஒன்று குறைந்தால்

    வேலை தவறிச் சிதைந்தே செத்து

    வீழ்ந்திடும் மானிடச் சாதி.

    பகவத்கீதையில் நான்கு வர்ணங்கள் என்னால் உருவாக்கப்பட்டன என்று கண்ணன் கூறுவதைப் பாரதி குறிப்பிடுகிறார்.

    நாலு குலங்கள் அமைத்தான் அதை

    நாசமுறப் புரிந்தனர் மூடர்

     

    பாரதியாரின் ஞானரதம் அவரது கருத்தை மேலும் தெளிவுபடுத்துகிறது.

    பிறக்கும் போது மனிதர்கள் எல்லாம் மிருகங்களாகப் பிறக்கிறார்கள். பயிற்சியினாலும் குண கர்மங்களினாலும் வெவ்வேறு வர்ணத்தினராகிறார்கள். சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகச: (நான்கு வர்ணங்கள் என்னால் உருவாக்கப்பட்டன) எனப் பகவான் சொல்லியிருக்கிறார்.

          பாரத தேசத்தில் தான் வர்ணாசிரம பேதங்கள் இருப்பதாகச் சொல்வது பிழை. ஸகல தேசங்களிலும் உண்டு. ஆனால் பாரத தேசத்தில் தான் வர்ணாசிரம நெறி சீர் கெட்டுப் போயிருக்கிறது. பூர்வத்தில் பாரத தேசத்தில் வர்ணாசிரம நெறி நான் சொல்வது போலத் தான் இருந்தது. அதற்கு அந்நாட்டிலுள்ள வேதங்கள், உபநிஷத்துகள், புராணங்கள், இதிஹாஸங்கள் முதலிய ஸகல நூல்களும் ஸாக்ஷி. இப்பொழுது பாரதநாட்டைத் தவிர மற்றெல்லா நாடுகளிலும் பகவான் சொல்லிய முறை தான் நடைபெற்று வருகிறது. பாரத நாட்டில் அம்முறை தவறிவிட்டது. அது பற்றியே அந்நாட்டினர் வறுமை, நோய், அடிமைத் தனம் என்ற இழிவுகளிலே வீழ்ந்திருக்கிறார்கள்.”

    இப்படி, விரிவாக வர்ண முறையை ஆதரித்த பாரதி, வர்ணங்களுக்குள்ளே உயர்வு தாழ்வில்லை, எத்தொழில் செய்தாலும் அனைவரும் சமம் என்பதைப் பல இடங்களிலும் வலியுறுத்துகிறார்.

    சீலம் அறிவு தருமம் இவை

    சிறந்தவர் குலத்தினில் சிறந்தவராம்

    ஒற்றைக் குடும்பம் தனிலே பொருள் ஓங்க வளர்ப்பவன் தந்தை, மற்றைக் கருமங்கள் செய்தே மனை வாழ்ந்திடச் செய்பவள் அன்னை, ஏவல்கள் செய்பவர் மக்கள் என்றிருப்பது போல, சமூகத்திலும் வெவ்வேறு தொழில் செய்வோர் ஒற்றுமையாக ஒரு குடும்பம் போல வாழ வேண்டும் என்பது அவர் கருத்து.

    பாரதியின் பூனைக் குட்டிகள் பாட்டு அனைவரும் அறிந்தது.

    வெள்ளை நிறத்தொரு பூனை எங்கள்

    வீட்டில் வளருது கண்டீர்

    பிள்ளைகள் பெற்றதப் பூனை அவை

    பேருக்கொரு நிறமாகும்

     

    சாம்பல் நிறமொரு குட்டி கருஞ்

    சாந்தின் நிறமொரு குட்டி

    பாம்பின் நிறமொரு குட்டி வெள்ளைப்

    பாலின் நிறமொரு குட்டி

     

    எந்த நிறமிருந்தாலும் அவை

    யாவும் ஒரே தரமன்றோ

    இந்த நிறம் சிறிதென்றும் இஃது

    ஏற்றமென்றும் சொல்லலாமோ

     

    வண்ணங்கள் வேற்றுமைப்பட்டால் அதில்

    மானிடர் வேற்றுமை இல்லை

     

    சாதி போல் அல்லாமல் வர்ணம் மாற்றிக் கொள்ளக் கூடியது என்பதை அவர் வலியுறுத்துகிறார். அவரது ஞானரதத்தில் தர்ம லோகம் என்ற பகுதியில் கதாநாயகன் கூறுகிறான்:–

    எனது பிதா க்ஷத்திரியர். நான் பிராமணன். என் மக்கள் பன்னிரண்டு பேர்களில் ஒருவனை மட்டுமே பிராமண காரியங்களுக்குத் தெரிந்தெடுத்திருக்கிறேன். மற்றவர்களை யெல்லாம் மற்ற மூன்று வர்ணங்களின் காரியங்களுக்கு அவரவர்களின் தகுதி, ஸ்வபாவம் முதலியவற்றைக் கருதி உரியவாறு பயிலுமாறு செய்திருக்கிறேன்.”

    வர்ண முறையைப் போற்றிய பாரதி சாதி முறையைத் தீவிரமாக எதிர்த்தார். வர்ணம் என்பதும் சாதி என்பதும் ஒன்றல்ல என்ற உண்மையைப் பலர் அறிவதில்லை.

    வர்ணம் பிறப்பை அடிப்படையாகக் கொண்டது அல்ல. ஆனால் ஜாதி என்பது பிறப்பால் வருவது. பிறப்பின் காரணமாக ஏற்படும் பிரிவுகளைப் பாரதி அடியோடு வெறுத்தார்.

                    சாதிகள் இல்லையடி பாப்பா குலத்

                    தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்

     

    மேலவர் கீழவரென்றே வெறும்

    வேடத்தில் பிறப்பினில் விதிப்பனவாம்

    போலிச் சுவடியை எல்லாம் இன்று

    பொசுக்கி விட்டால் எவர்க்கும் நன்மை உண்டென்பான்

    சாதிப் பிரிவுகள் சொல்லி அதில்

    தாழ்வென்றும் மேலென்றும் சொல்வார்

    நீதிப் பிரிவுகள் செய்வார் அங்கு

    நித்தமும் சண்டைகள் செய்வார்

    சாதிக் கொடுமைகள் வேண்டா அன்பு

    தன்னில் செழித்திடும் வையம்.

     

    மானிடச் சாதி என்ற ஒன்றைத் தான் அவர் ஒப்புக் கொள்கிறார்.

                    கூட்டி மானிடச் சாதியை ஒன்றெனக்

                    கொண்டு வைய முழுதும் பயனுறப்

                    பாட்டிலே அறம் காட்டு என்னும் ஓர் தெய்வம்.

     

    ……………………………………….ஆயிரம் சாதி

    வகுப்பவர் வகுத்து மாய்க. நீரனைவரும்

    தருமம் கடவுள் சத்தியம் சுதந்திரம்

    என்பவை போற்ற எழுந்திடும் வீரச்

    சாதி ஒன்றையே சார்ந்தவராவீர்.

    மானிடர் அனைவரும் ஒரே சாதி என்ற நிலையிலிருந்து இன்னும் ஒரு படி மேலே போய்ப் பிற உயிரினங்களையும் உயிரற்றவைகளையும் கூட ஒரே சாதிக்குள் அடக்குகிறார்.

    காக்கை குருவி எங்கள் சாதி

    காடும் மலையும் எங்கள் கூட்டம்

    என்று அவர் பாடும்போது அத்வைத மாமேருவின் உச்சிக்கே போய் விடுகிறார்.

    கீதை முன்னுரையில் அவர், கண்ணபிரான் ஜாதி வேற்றுமையும் அறிவு வேற்றுமையும் பார்க்கக் கூடாது என்பது மட்டுமே அன்றி எல்லா உயிர்களுக்குள்ளேயும் எவ்வித வேற்றுமையும் பாராது இருத்தலே ஞானிகளுக்கு லட்சணம் என்கிறார்.

    பாம்பும் நாராயணன், நரியும் நாராயணன், பார்ப்பானும் கடவுளின் ரூபம், பறையனும் கடவுளின் ரூபம். இப்படியிருக்க ஒரு ஜந்து மற்றொரு ஜந்துவை எக்காரணம் பற்றியும் தாழ்வாக நினைத்தல் அஞ்ஞானத்துக்கு லட்சணம். எல்லா வேற்றுமைகளும் நீங்கி நிற்பதே ஞானம்.

    இவ்வாறு அவரது சமூகச் சமத்துவக் கொள்கையும் வேத அடிப்படையைக் கொண்டது என்பது தெரிகிறது.


     

    Share