-சு.கோதண்டராமன்

 

செங்கதிர்த் தேவன்

      பாரதி பூணூலைக் கழற்றி எறிந்ததாக ஒரு திரைப்படத்தில் காட்டுகிறார்கள். அதற்கான சான்று எதுவும் அவரது எழுத்துகளில் இல்லை. மாறாக அவர் பிராமண தர்மத்தில் எவ்வளவு மரியாதை வைத்திருந்தார் என்பதையே அவரது படைப்புகள் காட்டுகின்றன.

காஷ்மீர இந்துக்கள் எல்லோருமே பிராமணர்கள், வேறு சாதியினரே அங்கு இல்லை என்கிறார் பாரதி. தமிழ் நாட்டிலும் பிராமணர் அல்லாதார்க்குப் பூணூல் அணிவித்து, மது மாமிசங்களை நிறுத்தச் சொல்லி எல்லோரையும் பிராமணர் ஆக்க வேண்டும் என்றும் சொல்கிறார் அவர். அவர் ஒரு தாழ்த்தப்பட்ட இளைஞனுக்குப் பூணூல் அணிவித்ததை நாம் அறிவோம்.

பூணூல் என்பது யாகம் செய்வதற்கான அடையாளம் என்றும் அதற்கு மேல் அதில் ஒன்றும் முக்கியத்துவம் இல்லை என்றும் கூறுகிறார். எனவே பாரதி விரும்பியது என்னவென்றால், எல்லாச் சாதியினரும் யக்ஞம் செய்வதற்குரிய தகுதி பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்பது தான்.

யக்ஞம் என்பது தீ வளர்த்துச் செய்யப்படும் வேள்வி மட்டும் அல்ல, தெய்வ ஆராதனையாகச் செய்யப்படும் எல்லாச் செயல்களையும் குறிக்கும் என்கிறார். எல்லோரும் தெய்வத்தை ஆராதிக்கத் தகுதி பெற வேண்டும் என்பது அவரது விருப்பம்.

அந்தணர்கள் செய்கின்ற ஜபத்தில் பயன்படும் காயத்ரி மந்திரத்தைப் பாரதி அழகான தமிழில் தருகிறார் கேளுங்கள்.

செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம் அவன்

எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக.

 

பாரதிக்கு ஓம் என்னும் பிரணவத்தில் அளவற்ற ஈடுபாடு உண்டு. ஒலிக்கு என்று ஒரு தனிச் சக்தி இருப்பதை அறிந்த அவர் மந்திரத்தைத் தமிழில் மொழி பெயர்த்த போதும் ஓங்கார ஒலியை விடாமல் அதைச் சமத்காரமாக மந்திரத்தின் நடுவில் நுழைத்திருப்பதைக் கவனியுங்கள்.

காயத்ரி மந்திரம் தவிர சூரியனைப் போற்றும் மந்திரங்கள் பல வேதத்தில் உள்ளன. அதனால் பாரதியார் சூரியனைக் குறிப்பிடும்போது சீரடியாற் பழவேத முனிவர் போற்றும் செழுஞ் சோதி என்று பாராட்டுகிறார்.

காலை ஸந்த்யா வந்தனத்தில் இந்தப் பாட்டுகள் உதய சூரியனை நோக்கி ஓதப்படுகின்றன. சூரியன் பரமாத்மாவின் ஞான ஒளி. இந்த தேவன் நான்கு அம்சங்கள் உடையவன். மித்திரன், வருணன், அர்யமான், பகன். இவருள்ளே மித்திரன் அந்த ஒளியின் அன்பைக் குறிப்போன். வருணன் அதன் அனந்த நிலை (எல்லையற்ற தன்மை) ஆவான். அர்யமான் வலிமைத் தேவன். பகன் அவ்வொளியின் இன்ப உணர்ச்சியாக நிற்பவன்.

                “முழுமுதற் கடவுளுக்கு ஒளியே விழி. ஒளியையே சூரியன் என்று போற்றுகிறோம். பூலோகத்திலே ஒளியாகத் தோன்றும் சக்தி தான் சுவர்க்க லோகத்திலே ஞானமாகச் சுடர்கின்றது. அதன் அன்பு வடிவத்தை அதாவது தெய்வீக அன்பையே மித்திரன் என்று வாழ்த்துகிறோம்.

இந்த முன்னுரைக்குப் பின் பாரதி அந்தணர்கள் தினசரி செய்யும் சந்தியா வந்தனத்தில் சொல்லப்படும் மந்திரங்களுக்குப் பொருள் தருகிறார். எந்த மந்திரம் சொன்னாலும் பொருள் தெரியாமல் வெறுமே ஒலியைத் தியானம் செய்வதால் பயனில்லை என்பது அவரது கருத்து. அந்தக் கருத்துகளைத் தன் பாடல்களிலும் வெளிப்படுத்தி இருக்கிறார். இனி மந்திரங்களின் பொருளையும் அவற்றைப் பாரதி தன் பாடல்களில் புகுத்தி இருக்கும் அழகையும் காண்போம்.

மந்திரத்தின் பொருள்:

மக்களைக் காப்பவன் சூரியன். அவனது புகழத் தக்க அழிவற்ற மனம் கவரும் பெருமைகளைத் தியானிக்கிறேன். சூரியன் அனைத்தையும் அறிந்து கொண்டு மக்களை நடத்தி வைக்கிறார். பூமியையும் வானுலகத்தையும் தாங்கும் சூரியன் ஜீவராசிகளைக் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

பாரதியின் பாடல்

மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்

                வாழி நோக்கிடும் வள்ளிய தேவா

                காதல் கொண்டனை போலு மண் மீதே

                கண் பிறழ்வின்றி நோக்குகின்றாயே

 

மந்திரத்தின் பொருள்

                அழியாத பலன் பெறுவதற்காக அவருக்கு நெய் ஹவிஸ் அளிக்கிறோம். சூரியனே யார் உம்மை நியமத்துடன் ஆராதிக்கிறானோ அவன் பரிபூர்ண தர்ம பலனுடன் கூடினவனாக ஆகட்டும். உம்மால் காக்கப்பட்டவன் நோய்வாய்ப்படான். பாவம் இவனைத் தூரத்திலிருந்து கூடத் துன்புறுத்தாது.

பாரதியின் பாடல்:

கவலைகள் சிறுமை நோய் கைதவம் வறுமைத் துன்பம்

                அவலமாம் அனைத்தைக் காட்டில் அவலமாம் புலைமையாகும்

                இவையெலாம் அறிவிலாமை என்பதோர் இருளிற் பேய்கள்

                நலமுறு ஞானபானு நண்ணுக; தொலைக பேய்கள்

 

மந்திரத்தின் பொருள்

ஆன்ம ஜோதியாலும் பிரகாசத்தாலும் தேவர்களையும் மனிதர்களையும் அவரவர் கருமங்களில் புகுத்திக் கொண்டு சுற்றி வரும் சூரியன் பொன் மயமான தேரில் உலகங்களைப் பார்வையிட்டுக் கொண்டு சஞ்சரிக்கிறார்.

பாரதியின் பாடல்

பரிதியே பொருள் யாவற்கு முதலே

                பானுவே பொன்செய் பேரொளித் திரளே

 

மந்திரத்தின் பொருள்

இருளை விழுங்கிக் கொண்டு உதிக்கும் உயர்ந்த ஜோதி, தேவர்களைக் காப்பவர். இவரைப் பார்ப்பதால் நாம் உத்தமமான ஆத்ம ஜோதியை அடைவோம். அந்த பிரசித்தமான, அனைத்தையும் அறிகிற சூரியனை கிரணக் குதிரைகள் உலகோரின் தரிசனத்திற்காக உயரத் தாங்கிச் செல்கின்றன.

பாரதியின் பாடல்

கடலின் மீது கதிர்களை வீசி

                கடுகி வான்மிசை ஏறுதி ஐயா

 

மந்திரத்தின் பொருள்

மித்திரன் வருணன் அக்னி இவர்களது கண்ணாக விளங்கும் சூரியன் விசித்ரமான சர்வ தேவ ஸ்வரூபி. அசையும் பொருள் அசையாப் பொருள் இவற்றின் ஆத்மாவாக விளங்கும் சூரியன் தேவ லோகம், பூலோகம், அந்தரிக்ஷம் எங்கும் வியாபிக்கிறவர், கிழக்கில் உதிப்பவர், தேவர்களுக்கு நன்மை செய்பவர், கண் போன்றவர். இவரை நூறாண்டு காலம் வணங்குவோம், வாழ்வோம், உறவினருடன் குலாவுவோம், மகிழ்வோம், கீர்த்தி பெறுவோம், இனியன கேட்போம், இனியன பேசுவோம், தீமைகளை வென்று நிற்போம்.

பாரதியின் பாடல்

திருவளர் வாழ்க்கை கீர்த்தி தீரம் நல்லறிவு வீரம்

                மருவு பல்கலையின் சோதி வல்லமை என்பவெல்லாம்

                வருவது ஞானத்தாலே வையகமுழுது மெங்கள்

                பெருமை தானிலவி நிற்கப் பிறந்தது ஞான பானு.

 

மந்திரத்தின் பொருள்

                சூரியனைக் காண விரும்புகிறோம். விரும்பிய பலனை அளிப்பவரும் சிவந்த கண்ணரும் எல்லாம் அறிந்தவரும் எத்திக்கிலும் பிரகாசிப்பவரும் பெரிய கடலின் நீரின் நடுவிலிருந்து காலையில் உதிப்பவரும் ஆன சூரியன் முழு மனதுடன் என்னைப் புனிதன் ஆக்குவாராக.

பாரதியின் பாடல்

பண்ணிய முயற்சி எல்லாம் பயனுற ஓங்கும் ஆங்கே

                எண்ணிய எண்ணம் எல்லாம் எளிதிலே வெற்றி எய்தும்

                திண்ணிய கருத்தினோடும் சிரித்திடு முகத்தினோடும்

                நண்ணிடும் ஞான பானு அதனை நாம் நன்கு போற்றின்

 

இவற்றிலிருந்து பாரதி சந்தியா வந்தனத்தைப் பொருளுணர்ந்து போற்றியதை  அறிய முடிகிறது.

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *