நீயும் நானும் விஞ்ஞானமும் – 3

0

இன்னம்பூரான்

‘அவர் (கரியமாணிக்கனார்) புகழ் வாய்ந்த விஞ்ஞானி மட்டுமல்ல; அவர் அதற்கெல்லாம் மேலே மிகவும் உயர்ந்தவர்; புருஷோத்தமன்; லட்சியப் பிரஜை; முழுமையான மனிதர். ‘ – ஜவஹர்லால் நேரு.

உங்களுக்கு சிவக்கொழுந்து சாரைத் தெரியுமோ? தெரிந்திருக்க நியாயமில்லை. அவர் பெளதிக பாடம் எடுத்த காலக்கட்டம், நூறு வருடங்களுக்கு முன்னால்: 1911: 9ஆவது வகுப்பு: ஹிந்து உயர்நிலை பள்ளி: ஶ்ரீவில்லிபுத்தூர். தமிழில் பெளதிகத்தையும், பூகோளத்தையும்/ வேதியியலையும்  எளிதில் விளக்கி எனக்கு அதில் ஆர்வமூட்டினார், என்கிறார் ஒரு விஞ்ஞானி. அவரும் சளைத்தவரல்ல. மதிய விருந்துண்ணும் வேளையில், போகிற போக்கில், பாட அட்டவணையில்லாமல், பெளதிகத்தை போதித்து இறவாப் புகழ் பெற்றவர். தமிழிலும் ஆங்கிலத்திலும் அருமையான விஞ்ஞான கட்டுரைகள் எழுதியவர்.

விஞ்ஞானத்துக்கும் நமக்கும் காத தூரம் என்று நமக்குள் பச்சாதாபப்பட்டுக்கொண்டு மருகி வாடவேண்டிய தேவை ஒன்றுமில்லை. விடுதலை பெற்ற காலக்கட்டத்தில், அறுபது ஆண்டுகளுக்கு முன் விஞ்ஞானத்தின் மீதும், பொறியியல் மேலாண்மை மீதும், மாபெரும் தொழிற்சாலைகளை அமைப்பதிலும் ஆர்வமும் தீவிரமும் இருந்தது. பிரதமர் நேருவின் தீர்க்கதரிசனமும், கற்றோர்களின் தொண்டும், அன்றைய இளைய சமுதாயத்தின் தீவிர ஆர்வமும் அதற்குத் துணை நின்றன. காரைக்குடியில் இருக்கும் நவீன மின் – ரசாயன பரிசோதனை சாலையில் நடந்த இரும்பு துருப்பிடிப்பதைக் கட்டுப்படுத்தும் ஆய்வுகளும், அந்த மையத்தின் தலைவர் டாக்டர் பி.பி.டே அவர்கள் அளித்த பேட்டியும் நினைவலையில் உலவி வந்த போது, புனே நகரில், பெளதிகம் சார்ந்த பரிசோதனை மையம் கண் முன் வந்து நின்றது. மாபெரும் கட்டடம். ஒரு குட்டி கலாட்டா. கவின் அழகைப் பாதிக்கிறது என்று இரு மரங்களை வெட்டிக்கொண்டு இருந்தனர். காரில் அந்த பக்கம் வந்த ஒருவர் ‘சட்’ என்று இறங்கி ஓடோடி வந்து அரைகுறை ஹிந்தியில் சத்தம் போடுகிறார். மரத்தை வெட்டக் கூடாது என்கிறார். மற்ற அதிகாரிகள் வந்து வினயத்துடன் பிரச்சினையைச் சொன்னவுடன், மலர்ந்த முகத்துடன், ‘ மூன்றாவது மரம் நட்டு விட்டால், அழகு கூடுமே’ என்றார். கணக்குப் புலி; பாவ்லாவோ பாலே நாட்டியத்திலும் ரசனை. அவர் தான் இன்றைய தலைமாந்தன், கரியமாணிக்கனார்.

இராமனும் கிருஷ்ணனும் இணைந்து விஞ்ஞான சாதனைகள் புரிந்த கதை, இது. அணுக்களுக்குள் புகுந்து விளையாடிய சர். கே.எஸ்.கிருஷ்ணன் அவர்களை ராயல் சொஸைட்டியில் அனுமதிக்கப் பரிந்துரை செய்த சர்.சி.வி.ராமனின் பரிசோதனைகளுக்கு உடனிருந்து பல ஆராய்ச்சிகளை செய்த தம்பி கிருஷ்ணனை வானாளவ புகழ்கிறார், அண்ணா. ராமன் எஃப்பெக்ட்’ என்ற நோபல் பரிசு பெற்ற விஞ்ஞான சாதனை, சொல்லப் போனால், ‘ராமகிருஷ்ண எஃப்பெக்ட்’ தான். ஆனால், தன்னடக்கத்துடனும் பெருந்தன்மையுடனும், ராமன், ‘இது கிருஷ்ணன் எஃப்பெக்ட்’ என்கிறார். கிருஷ்ணன், ‘இது ராமன் எஃப்பெக்ட் தான்’ என்கிறார்.  பெளதிக சாத்திரத்தின் மற்ற கிளைகளிலும் இவரது கொடி பறந்தது. தற்காலத்தில், ஒளஷதங்கள், வர்ணங்கள், பிளாஸ்டிக், எரிபொருள்கள், நடையுடை யாவற்றிலும் கரியமாணிக்கனாரின் கைவண்ணம் மிளிர்கிறது.

வத்திராயிருப்பு கிராமத்தில் டிசம்பர் 4, 1898இல் பிறந்த நமது கரியமாணிக்கம் சிவக்கொழுந்து சாரைப் பற்றி சொல்வது,’…அவர் விஞ்ஞானியல்ல. ஆனால். விஞ்ஞானத்தை விளக்குவதில் மன்னன். மகுடிக்கு மயங்கிய அரவம் போல எங்களைக் கட்டிப் போட்டார். பெளதிகமோ, பூகோளமோ, வேதியியலோ, அவரது ஸ்டைலே தனி. அவர் பாடம் மட்டும் நடத்தமாட்டார். பரிசோதனைகளைச் செய்து காட்டுவார். எங்களைச் செய்ய ஊக்குவார். அவரால் தான் நான் விஞ்ஞானத்தில் ஆர்வம் கொண்டேன்…’.

சிவக்கொழுந்து சாருக்கு நெடுஞ்சாண்கிடையாக தாள் பணிந்து வந்தனம் செலுத்தும்

இன்னம்பூரான்

சித்திரத்துக்கு நன்றி:

http://royalsociety.org/DServe/dserve.exe?dsqIni=Dserve.ini&dsqApp=Archive&dsqCmd=ImageView.tcl&dsqDb=Catalog&dsqImage=EC_1940_12.jpg

உசாத்துணை:

http://www.vigyanprasar.gov.in/scientists/KS_Krishnan/KariamanikkamSKrishnan.htm

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *