திருக்கோட்டாறு
சு.கோதண்டராமன்
(காரைக்கால் அருகில் உள்ளது திருக்கோட்டாறு என்னும் பாடல் பெற்ற தலம். இன்று திருக்கொட்டாரம் என்று அழைக்கப்படுகிறது. அண்மையில் அத் தலத்தில் நான்கு நாட்கள் தங்கி இருந்தேன்.)
அன்றொரு நாளில் ஆளுடைப் பிள்ளை
அடியார் பலருடன் இவ்வூர் வந்தார்.
அன்றவர் கண்ட தெண்டிரை நீர்வயல்
குரவமர் மலர்ப் பொழில் குருந்த மாதவி
வண்ட லார் வயற் சாலி யாலைகள்
ஆடகம் பெறு மாட மாளிகை
இன்றும் உண்டு. யானும் கண்டேன்.
எங்கும் பசுமை நிரம்பக் கண்டேன்
இடை இடை வண்ணப் பூக்கள் கண்டேன்
தென்னை மரங்கள் தலையை ஆட்டி
தேன் மலர் வாசம் சுமந்து வந்த
வாயு தேவனை வணங்கக் கண்டேன்.
காற்றில் அசையும் செடிகளின் சலசல
கன்றை அழைக்கும் பசுவின் அம்மாவ்
பறவைப் பாடல் பற்பல பல வகை
பிக்விக் கொக்கொக் கிர்ரீய்ங் சிக்சிகி
(இன்னும் உண்டு. ஏட்டில் இடமிலை)
இத்தனை இசைகளும் இத்தனை ஒலிகளும்
இங்குள அமைதியை அதிகப் படுத்தின.
அகத்திய முனிவரின் ஆசிர மம் போல்
அழகு எளிமை அமைதி தூய்மை
இயற்கை அன்னையின் இதம் தரு அணைப்பில்
எழிலைப் பருகும் குழவியாய்க் கிடந்தேன்.
தவமே புரியத் தேவை இல்லை
தானே ஈசன் பேசும் இடமிது.
ஊரின் நடுவில் உள்ளது கோவில்
ஞானசம் பந்தர் வாழ்ந்த காலை
விரவி நாளும் விழாவிடைப் பொலியும்
தொண்டர் வந்து வியந்து பண்செயும்
கோட்டாற் றிலுயர் கோவில் என்று
கூறிய தென்னவோ இன்று வெற்றுக்
கனவாய்ப் பழைய கதையாய்ப் போனது.
ஊரே அமைதி, ஆலயம் விலக்கோ?
மணியை ஆட்டி உணவைக் காட்ட
மதியம் ஒரு முறை குருக்கள் வருகிறார்.
மாலையில் எவரோ விளக்கிடு வார்கள்.
மற்றையோ ரிங்கே வருவது இல்லை
இருக்கொடு தோத்திரம் இயம்புவார் இல்லை
மேளம் தாளம் மணிகள் ஏது?
பாலறா வாயர் ஆலயம் சுற்றி
சிற்றடி யாலே சீர்வலம் வந்து
சிறுகை தட்டித் தாளம் இட்டு
இசைத்த செந்தமிழ்த் தேவா ரத்தின்
இனிமையை நெஞ்சில் அசைபோட் டபடி
வண்டார் குழலி உடனுறை நாதன்
வானோர் பெருமான் ஐராவ தீசன்
முன்னை நாளிக் கோயிலின் சிறப்பும்
இன்றை நாளில் இயன்ற தாழ்வும்
ஒப்பு நோக்கியோ உள்ளம் நொந்தோ
தனிமையே துணையாய் தன்னில் தானாய்
மோனத் தவத்தில் மூழ்கி இருக்கிறான்.
படத்துக்கு நன்றி: http://news-amanushyam.blogspot.com/2013/01/blog-post_8882.html