சச்சிதானந்தம்

murugaimages

பாடிப் பணிந்து தொழுதிட மனமின்றி,

ஊடித் துணிந்து உன்னை மறந்தவன்,

தேடித் தொடர்ந்து மலரென உன்னை,

சூடிக் கனிந்த மனங் கொண்டேனே!                                                                                  96

 

மூடிய மனதுக்குள் முடிவற்று மலர்ந்து,

ஓடிய மனதினை ஒருநிலைப் படுத்தித்

தேடிய அமைதியைத் தெளிவுறக் கொடுத்துப்

பாடிய எனக்குள் பரவசம் கொடுத்தான்!                                                                           97

 

ஓரிச்சை பேரிச்சை உள்ளத்தில் ஆடும்,

மூவிச்சை கடக்கும்முன் முருகனில் கலக்கும்,

சீரிச்சை செவ்விச்சை ஆறாக ஓடும்

பேரின்பப் பெருவிச்சை நிறைவேற்று வேலா!                                                               98

 

நாவடியில் நாதன் பாவைச் சுமந்து,

காவடியில் மயிலின் தோகை சுமந்து,

ஈரடிகள் சிவக்கும் படியாய் நடந்து,

இறைவனடி நாடி இன்பம் அடைவோம்!                                                                          99

 

அசைவற்றுக் கிடக்கும் முதலை போல,

ஆடிச் சலனம்கொள்ளா இதயம் கொண்டு,

அகமும் அங்கமும் குகனில் ஒடுங்கி,

அறுமுக ஒளியில் ஐக்கிய மாவோம்!                                                                              100

 

(நிறைவுற்றது)

 

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “அறுமுகநூறு (20)

  1. தொடர்ந்து படித்து வந்தேன், அருமையான படைப்பை வழங்கியுள்ளீர்கள் திரு. சச்சிதானந்தம். நல்லதொரு படைப்பை வழங்கியதற்கு நன்றியும் பாராட்டுக்களும். 

    அன்புடன் 
    ….. தேமொழி 

  2. அறுமுகனை அழகிய நூறு துதிகளால் பாடிப் போற்றியுள்ள அருளாளர் திரு. சச்சிதானந்தம் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளும், உளம் கனிந்த பாராட்டுகளும்!!

  3. ‘பேரின்பப் பெருவிச்சை நிறைவேற்று வேலா!’ என சந்ததமும் முழங்கி அறுமுகன் ஒளியில் ஐக்கியமாவோம். அறுமுகனின் புகழை சந்தத் தமிழில் தொடுத்துத் தந்த சகோதரர் சச்சிதானந்தத்தை மனமார வாழ்த்துகிறேன். ஆறுமுகன்  அருளால் மேன்மேலும் பல அருமையான படைப்புகள் தந்து மங்காப் புகழ் பெற இறைவனை வேண்டுகிறேன். மிக்க நன்றி!!    

  4. கடந்த ஒரு மாதமாக பணி நிமித்தமாக வெளியூரில் இருந்ததால் வல்லமைக்கு வருகை தர இயலவில்லை. தாமதமான பதிலுரைக்கு மன்னிக்கவும்.

    வல்லமையில் அறுமுகநூறு தொகுப்பைத் தொடராக வெளியிட வாய்ப்பளித்த ஆசிரியர் பவளசங்கரி மற்றும் குழுவினருக்கும் எனது முதல் நன்றிகள்.

    இந்தத் தொகுப்பிற்காக வல்லமையாளர் விருது வழங்கிய திரு.திவாகர் ஐயா அவர்களுக்கும், ஒவ்வொரு வாரமும் கவிதையை வெளியிடும் பொழுது, ஏதேனும் பிழைகள் இருந்தால் மென்மையாகச் சுட்டிக்காட்டி அதனைத் திருத்திக் கொள்ள வாய்ப்பளித்த துணை ஆசிரியர் திருமதி.கவிநயா அவர்களுக்கும் எனது நன்றிகள்.

    தொடந்து ஒவ்வொரு வாரமும் கவிதைத் தொகுப்பைப் படித்து உற்சாகப் படுத்திய திருமதி.பார்வதி இராமச்சந்திரன், திருமதி. தேமொழி, திருமதி.மேகலா இராமமூர்த்தி, திரு.சத்தியமணி, திரு.மாதவன் இளங்கோ மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் என் உளம் கனிந்த நன்றிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.