இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!…(64)

சக்தி சக்திதாசன்

 

அன்பினியவர்களே !

இனிமையான வணக்கங்களுடன் அடுத்த மடலில் உங்களுடன் உரையாடுவதில் மகிழ்ச்சியுறுகிறேன்.

சின்னச் சின்ன சில்லறை விடயங்கள் பல எம் வாழ்வில் நாளும் நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன. இவற்றைச் சில்லறை விடயங்களாக ஒதுக்கி விட்டு விட்டுப் போவோரும் இருக்கிறார்கள், மிகவும் பிரதானப்படுத்தி அல்லொகல்லோபப் படுவோரும் இருக்கிறார்கள், அவற்றிலிருந்து வாழ்க்கைக்குத் தேவையானவற்றை தெரிந்தெடுப்பவர்களும் இருக்கிறார்கள்.

இதுவே மனித வாழ்க்கையின் யதார்த்தம்.

பண்பு என்பது மனித வாழ்க்கையில் மாபெரும் பங்கெடுக்கிறது. அப்பண்பு பலவிதமான வடிவங்களில் நம்மிடையே பரிணமிக்கின்றது.

அப்பரிமாணங்களின் விளைவுகள் பலவிதமான வித்தியாசமான முடிவுகளுக்குள் எம்மைத் தள்ளுகின்றன.

இங்கிலாந்திலே “ஸ்யின்பறீஸ் (Sainsburys)” எனும் சூப்பர் மார்க்கெட் பிரபல்யமானது. இங்கே நடந் ஒரு சுவாரச்ய சம்பவத்தை இன்று ஒரு பத்திரிகையில் படித்த போது இதனை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்பட்டேன்.

அது என்ன என்கிறீர்களா? இதோ ,

லண்டனின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள “கிறேவோர்ட்(Crayford)” எனும் இடத்திலுள்ள இப்பிரபல்யமான சூப்பர் மார்க்கெட்டில் காஷியராகப் பணிபுரியும் ஒரு இளம் பெண்ணுக்கு வந்ததாம் கோபம் பாருங்கள் . . . .

அப்படி என்னதான் நடந்தது என்கிறீர்கள் ?

இவரது செக் அவுட் கவுண்டரில் தான் வாங்கிய பொருட்களுக்கு பணம் கொடுக்க வந்த ” ஜோ கிளார்க்” எனும் பெண் வாடிக்கையாளர் செல் போனில் யாரோடு உரையாடிக் கொண்டே இவரது செக் அவுட்டில் நின்றாராம் .

செக் அவுட் கண்ணகி மதுரையை எரிக்கவில்லை இவ்வாடிக்கையாளரையே எரித்து விடுவதைப் போல பார்த்து ,

செல்போன் தொடர்பைத் துண்டித்தால் தான் அவருக்கு தான் சேர்வ் பண்ணுவேன் என்று சொல்லி விட்டாராம் போங்கள் !

வந்ததே ஆத்திரம் அந்த வாடிக்கையாளருக்கு சாதாரண செக் அவுட் பணியாளரான உனக்கு எனது தொலைபேசி இணைப்பைத் துண்டிக்கச் சொல்ல என்ன அருகதையிருக்கிறது என்று வெடித்து, பாய்ந்து சென்று அந்த சூப்பர் மார்க்கெட் நிர்வாகத்தினரிடம் முறையிட்டாராம் !

பண்பாவது , மண்ணாங்கட்டியாவது எமக்கு எமது வாடிக்கையாளரின் பணமே முக்கியம் என்று எண்ணிய நிர்வாகத்தினர் அப்பெண் பணியாளருக்காக அவ்வாடிக்கையாளரிடம் மன்னிப்புக் கோரினார்களாம்.

ஆனால் விடயம் அத்தோடு நின்று விடவில்லை , அவ்வாடிக்கையாளரின் பண்பற்ற முறையைக் கண்டித்தும், அப்பெண் பணியாளரின் வைராக்கியத்தைப் பாராட்டியும் , அச் சூப்பர் மார்க்கெட்டின் நிர்வாகிகளின் நடவடிக்கையைக் கண்டித்தும் இணையத்தளம் மூலமான கண்டங்கள் குவிந்து கொண்டிருக்கின்றனவாம்.

இந்த செல்போன் தொடர்புகள் பற்றி நீங்களும் பல இடங்களில் அனுபவப்பட்டிருப்பீர்கள். எங்கு பார்த்தாலும் அனைவர் கைகளிலும் ஒரு செல்போன் ! அனைவரும் அதில் குறுஞ்செய்தி அனுப்புவதும், இணையத்தளங்களை வலம் வருவதும், சமூக வலைத்தளங்களில் சம்பாஷிப்பதும், பேசுவதும் என எப்போதும் குனிந்த தலை நிமிராமல் ( ஓ ! அது கூட பண்புதானோ ?) நடப்பதையே பார்க்கிறோம்.

ஏறுபோல் பீடுநடை என்றவர் இன்றிருந்தால் அவரும் குனிந்த படிதான் நடப்பாரோ ?

அது மட்டுமா? அன்று நான் காரில் போய்க் கொண்டிருக்கும் போது நடப்பவர் சாலையைக் கடப்பதற்கான ஒரு குரொசிங் ப்க்கத்தில் ஒரு நடுத்தர வயதான பெண்மணி அச்சாலையைக் கடப்பதற்குக் காத்திருக்கும் பாணியில் காதோடு பொருந்திக் கொண்ட செல்போனுடன் நின்றிருக்க , இங்கிலாந்து சாலை விதிகளுக்கமைய நானும் அவர் கடப்பதற்காக காரை நிறுத்தினேன். அப்பெண்மணிக்கு வந்ததே ஆத்திரம் பாருங்கள் . . . . .

என்னைப் பார்த்துச் சீறும் பாணியில் கையைத் தூக்கி ” ஏன் நிற்கிறாய் ? போ உன் வேலையைப் பார்த்துக் கொண்டு . . . . . “ எனும் பாணியில் கையால் எனைப்பார்த்துச் சைகை காட்டினார்.

சாலை விதிகளை நோவதா? செல்போனை நோவதா ? அப்பெண்ணை நோவதா ? இல்லை என்னத்தான் நோவதா ? என்று தெரியாமல் அசடு வழிய காரை நகர்த்தினேன்.

புகையிரதங்கள் அல்லது பேரூந்துகளில் பயணம் செய்யும் போது முன்னும் பின்னும் உட்கார்ந்திருப்பவர்கள் சிலர் ஆங்கிலத்திலும், வேறு சில வெளிநாட்டுக்காரர் தமது மொழியிலும் ஏதோ தாம் தமது வீடுகளில் இருப்பது போல மிகவும் சத்தமாக சம்பாஷணையில் ஈடுபட்டிருப்பார்கள்.

எனது அருகிருந்தவர் சூள் கொட்டவும் அடடா ! என்னைப் போல எண்ணும் மற்றுமொருவர் எனும் நப்பாசையில் நாம் அருகே திரும்பினேன் . . . ஜயகோ ! அவரது சூள் கொட்டலின் காரணம் என்ன தெரியுமா ? தான் குருஞ் செய்தி அனுப்பும் போது இவர்களின் பலத்த சம்பாஷணை தனக்கு இடையூரு செய்கிறதாம் . . . . . .

மற்றொரு பக்கத்தில் அமர்ந்திருக்கும் மற்றொருவரோ தனது காதுகளுக்குள் செல்போனைப் பொருத்தி படல்களைக் கேட்டு ரசிக்கும் பாணியில் கண்களை மூடிக் கொண்டே தலையாட்டிக் கொண்டிருந்தார்.

அனைத்தையும் பார்க்கும் போது எது பண்பு எனும் குழப்பம் என்னையே சூழ்ந்து கொண்டது. ஓ! நாம் தான் இடம் மாறி உட்கார்ந்து விட்டோம் இல்லைக் காலம் மாறி பிரந்து விட்டோம் என்று எனக்கு நானே சமாதானம் கூறிக் கொண்டேன்.

மீண்டும் அடுத்த மடலில்

அன்புடன்

சக்தி சக்திதாசன்

 

http://www.thamilpoonga.com

http://www.facebook.com/sakthi.sakthithasan

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *