சு. கோதண்டராமன்

நையப் புடை

      மகாகவி பாரதி வேதங்களைப் பொருளுணர்ந்து கற்றவர் என்றும் அத்வைத வேதாந்தத்தில் தோய்ந்தவர் என்றும் கண்டோம். ஆனால் நான் பெற்ற அத்வைத இன்பத்தை நீங்களும் அனுபவியுங்கள் என்று அவர் மக்களுக்கு அறைகூவல் விடுக்கவில்லை. வேதாந்தம் என்பது அதற்கு உரிய தாகமும் வயதும் சூழ்நி்லைகளும் வாய்க்கப் பெற்றோருக்கு மட்டுமே உரியது. மற்றவர் உலகக் கடமைகளிலிருந்து தப்புவதற்காக வேதாந்தத்தில் புகுந்து ஒளிந்து கொள்ளக் கூடாது என்பது அவரது கருத்து.

      எல்லா சாஸ்திரங்களும் ஏறக்குறைய உண்மை தான். ஆனால் எல்லோருக்கும் எப்போதும் ஒரே சாஸ்திரம் ஒத்து வராது.

      வயதான பிறகு கடோபநிஷத்தையும் சுந்தர காண்டத்தையும பாராயணம் பண்ணிக் கொண்டிருக்கட்டும் என்று கூறின பாரதி இளைஞர்களுக்கும் குடித்தனக்காரர்களுக்கும் கூறும் அறிவுரைகள்  அவரது புதிய ஆத்திசூடியில் உள்ளன. மற்ற விஷயங்களில் புதுமை செய்தது போல, வேதாந்தத்தையும் உலகியலையும் ஒருங்கே போற்றியதன் மூலமும் பாரதி புதுமை செய்துள்ளார்.

      அவருடைய புதிய ஆத்திசூடியில் காணப்படும் நையப் புடை என்ற வாசகம் நம் கவனத்தை ஈர்க்கிறது. அந்தச் சொற்களில் தான் என்ன வேகம்! அவற்றில் பாரதியின் முழுக் கோபமும் வெளிப்படுகிறது.

      பாரதி என்ன வன்முறையாளரா? அன்பு இல்லாத வன்நெஞ்சரா? இல்லை, இல்லை. கொல்ல வரும் புலியையும் அன்போடு சிந்தையில் போற்றச் சொன்னவர் அல்லவா அவர்? இப்பொழுது யாரை நையப் புடைக்கக் கூறுகிறார்?

            பாரதியை முழுமையாகப் படித்தால் இதன் உட்பொருள் தெரிய வரும். புலியினும் கொடிதான பகைவர்கள் நம்மிடையே உள்ளனர். அவர்களைத் தான் அவர் நையப் புடைக்கச் சொல்கிறார். யார் அந்தப் பகைவர்கள்? ஆத்திசூடியிலேயே அந்தப் பட்டியல் வருகிறது. அச்சம், இளைப்பு, மௌட்டியம், ஓய்தல் இவை தாம் அவை.

            பாரதம் தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டு பாழ்பட்டு நின்றதற்குக் காரணம் நம் மக்களிடத்தில் உள்ள இத் தீய குணங்கள் தாம் என்பதை உணர்ந்த பாரதி அவற்றில் முதன்மையான அச்சத்தை ஒழிக்கச் சொல்லிப் பலகாலும் வற்புறுத்துகிறார். பாப்பாவிற்குக் கூறும் அறிவுரையில்,

            பாதகம் செய்பவரைக் கண்டால் நீ

            பயம் கொள்ளலாகாது பாப்பா,

            மோதி மிதித்து விடு பாப்பா அவர்

            முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா

என்று பாடி அச்சமின்மையைப் பிஞ்சு நெஞ்சில் விதைக்கிறார்.

            பாரதியாரின் அச்சமில்லை பாட்டு பிரசித்தமானது.

                இச்சகத் துளோரெலாம் எதிர்த்து நின்ற போதிலும்

                அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

                மற்றவர்கள் தன்னைத் துச்சமாக எண்ணித் தூற்றினாலும், பொருள் எல்லாம் இழந்து பிச்சை எடுக்கும் நிலை ஏற்பட்ட போதிலும், வேசையர் வலை வீசினாலும், நண்பரே துரோகம் செய்த போதிலும், பெரும் படை தன்னைக் கொல்ல வந்து நின்றாலும் உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் எந்த சூழ்நிலையிலும் அஞ்சாமல் நிமிர்ந்து நிற்க வேண்டும் என்கிறார்.

                அச்சத்தை அழித்து விட்டால் மரணமில்லாப் பெருவாழ்வே கிடைக்குமாம்.

                நாணத்தைக் கவலையினைச் சினத்தைப் பொய்யை

                அச்சத்தை வேட்கைதனை அழித்து விட்டால்

                அப்போது சாவுமங்கே அழிந்து போகும்

                மனிதருக்கு இயல்பாக ஏற்பட்ட அச்சத்தை நீக்கித் தனக்கு அருள வேண்டும் என மகாசக்தியை வேண்டுகிறார்

                ஐயம் தீர்த்து விடல் வேண்டும் புலை

                அச்சம் போயொழிதல் வேண்டும்

                மகாசக்தியின் பாதங்களைச் சரணடைந்து விட்டதால் தன் அச்சம் நீங்கிவிட்டதாகக் கூறி மார் தட்டுகிறார் கேளுங்கள்.

      மரணமும் அஞ்சேன் நோயினை அஞ்சேன்

                மார வெம்பேயினை அஞ்சேன்

            அக்கால மக்களின் கோழைத்தனத்தைப் பார்த்து,

            அஞ்சி அஞ்சிச் சாவார் இவர்

            அஞ்சாத பொருள் இல்லை அவனியிலே

என்று நெஞ்சு பொறுக்காமல் புலம்புகிறார்.

            நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் என்று மார் தட்டிய நாவுக்கரசர் வழி நின்று நம் கவியரசரும்

      காலா என் காலருகே வாடா

            சற்றே உனை மிதிக்கிறேன்   என்றும்

            யார்க்கும் குடியல்லேன் யானென்ப தோர்ந்தனன் மாயையே

            உன்றன் போர்க்கஞ்சுவேனோ பொடியாக்குவேன் உன்னை

என்றும் கூறுகிறார். சாவுக்கு மட்டுமன்றி வேறு எதற்கும் அஞ்சக் கூடாது என்பது அவரது கருத்து.

            தொன்மைக்கு அஞ்சேல்

            கீழோர்க்கு அஞ்சேல்

            தீயோர்க்கு அஞ்சேல்

            பேய்களுக்கு அஞ்சேல்

      தருமத்திற்கும் நீதிக்கும் பயப்படவேண்டும், தலை வணங்க வேண்டும் என்ற முன்னோர் கருத்தை வலியுறுத்தும்போது கூட நீதி நூல் பயில், நீதி தவறேல் என்பாரே அன்றி பயப்படு, தலை வணங்கு என்ற சொற்களைத் தவறியும் பயன்படுத்தவில்லை.

      ஆறுவது சினம், நயம்பட உரை — ஔவையின் இந்த உபதேசங்களிலிருந்து மாறுபடுகிறார் பாரதி. சினத்தை முன்னே வென்றிடுவீர் என்று அவர் சொன்னாலும், தீமையைக் கண்டால் எல்லையற்ற கோபம் பொங்கி வரவேண்டும், அப்படி வராதவன் நாயினும் கீழானவன் என்பது அவர் கருத்து.

            ரௌத்திரம் பழகு

            வெடிப்புறப் பேசு

            கொடுமையை எதிர்த்து நில்

            சீறுவார்ச் சீறு

என்ற வாசகங்களாலும்

            தாய் பிறன் கைப்படச் சகிப்பவனாகி

            நாயென வாழ்பவன் நமரில் இங்கு உளனா

என்ற அடிகளாலும் தீமையை எதிர்த்துப் போராட ஊக்கம் கொடுக்கிறார். இத்தகைய முயற்சியில் சாவது நேரினும் அஞ்சாமல் முனையிலே முகத்து நிற்கும்படி அவர் கூறியது இளைஞர்களுக்கு எவ்வளவு எழுச்சி ஊட்டக்கூடியது!

                ஆண்கள் மட்டுமன்றிப் பெண்களும் அச்சம் தவிர்த்து வாழ வேண்டும் என்பதையும் பல இடங்களில் கூறுகிறார்.

                நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்

                ஞான நல்லறம் வீர சுதந்திரம்

                பேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாம்.

            நையப் புடைத்து ஒழிக்க வேண்டியவற்றில் அடுத்து வருவது இளைப்பு.

            உடலினை உறுதி செய்

            ஊண் மிக விரும்பு

            இளைப்பது இகழ்ச்சி என்றும்

            அரிவாளைக் கொண்டு பிளந்தாலும் கட்டு மாறா உடல் உறுதி வேண்டும் என்றும் அவர் உடலைப் பேண வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறார். நோயாளியைக் கண்டால் அவருக்கு மட்டற்ற கோபம் வருகிறது. வலிமையற்ற தோளினானை, மார்பிலே ஒடுங்கினானை, பொலிவிலா முகத்தினானை, பொறியிழந்த விழியினானை, ஒலியிழந்த குரலினானை, ஒளியிழந்த மேனியானைப் போ போ என்று கழுத்தைப் பிடித்துத் தள்ளி நோய்களற்ற உடலினானை வா வா என்று வரவேற்கிறார். நோயினுக்கு இடம் கொடேல், யௌவனம் காத்தல் செய் என்று அறிவுறுத்திய அவர் தளர்ந்த முதுமைக் கோலத்தோடு தான் வாழக் கூடாது என்று கருதித் தானோ என்னவோ இளமையிலேயே இறந்து விட்டார்.

            அவரது பாடல்களை ஒரு முறை படித்து விட்டாலே யாருக்கும் தாழ்ந்து நடவாமல் நிமிர்ந்து ஏறு போல் நடக்கத் தோன்றுகிறது.

            நொய்ந்தது சாகும் என்ற இயற்கை நியதியை வலியுறுத்துகிறது புதிய ஆத்திசூடி. இதை விளக்கும் வகையில் அவரது வசன கவிதை,

            காற்றுத் தேவன் மெல்லிய தீயை அவித்து விடுவான், வலிய தீயை வளர்ப்பான். எனவே நொய்ந்த உடல், நொய்ந்த உள்ளம் இவற்றை ஒழித்து விட்டு உயிரை வலிமையுற நிறுத்துவோம் வாருங்கள் என்று முழங்குகிறது.

            நமது மூன்றாவது எதிரி மௌட்டியம் (மூடத்தனம்). அதில் தான் எத்தனை வகை நம்மிடம் உள்ளன. கஞ்சி குடிப்பதற்கு இல்லாத நிலையில் அதன் காரணம் இவை என்று அறியாமை, வஞ்சனைப் பேய்கள், மந்திரவாதி, சோதிடம் இவற்றை நம்புதல், மூடப் பழக்கங்கள் எனத் தெரிந்தும் முன்னையோர் சொன்னது என்பதால் கண் மூடித்தனமாகப் பின்பற்றுதல், நூலினைப் படித்துணராமல் பொய்மைச் சாத்திரங்களை நம்பி மாதர் தம்மை இழிவு செய்யும் மடமை, ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று அலையும் அறிவீனம்– அப்பப்பா, எத்திசை நோக்கினும் நமது தாழ்வுக்குக் காரணமாக நிற்பது அறியாமையே என்பதை உணர்ந்த அவர் இதை நையப் புடைத்து ஒழிக்கச் சொன்ன வசனங்கள் இவை:-

            சோதிடம் தனை இகழ்

            தொன்மைக்கு அஞ்சேல்

            பிணத்தினைப் போற்றேல்

            புதியன விரும்பு

            மௌட்டியம் தனைக் கொல்

            வேதம் புதிது செய்

            நமது நாலாவது எதிரி சோம்பல்.

            ஓய்தல் ஒழி

            நாளெல்லாம் வினை செய்

            யவனர் போல் முயற்சி கொள்

            கெடுப்பது சோர்வு என்றும்

சோம்பல் மிகக் கெடுதி பாப்பா என்றும் தொழிலிலே சோம்பலைப் போல் இழிவில்லை என்றும் கூறிய அவர்

ஊக்கமும் உள்வலியும் உண்மையிற் பற்றுமில்லா

மாக்களுக்கோர் கணமும் வாழத் தகுதி உண்டோ என்று சாடுகிறார்.

                அச்சத்தை ஒழிக்கவேண்டும், வலிமையைப் பெருக்க வேண்டும்  என்ற எண்ணம் பாரதிக்கு எப்படி ஏற்பட்டது? சந்தேகமில்லாமல் வேதத்திலிருந்து தான். இது தொடர்பாக விவேகானந்தர் கூறுவதைக் கேட்போம்.

                “வலிமை, வலிமை-இதுதான் உபநிடதத்தின் ஒவ்வொரு பக்கமும் எனக்குக் கூறும் செய்தி. நினைவில் வைக்க வேண்டிய ஒரு பெரும் விஷயம் இதுவே. என் வாழ்க்கையில் எனக்குக் கற்பிக்கப்பட்ட மிகப் பெரும் பாடம் இதுவே. உபநிஷத் கூறுகிறது, வலிமை, வலிமை. மனிதா, பலவீனனாக இராதே. பலவீனத்தைப் பலவீனத்தால் குணப்படுத்த முடியுமா? அழுக்கை அழுக்கால் போக்க முடியுமா? மனிதா, நிமிர்ந்து நில். வலிமையாக இரு.

                “ஆம், உலகிலேயே அபீ: (பயப்படாதே) என்று திரும்பத் திரும்பக் கூறும் இலக்கியம் உபநிஷத் ஒன்று தான். உலகின் வேறு எந்த சமய இலக்கியத்திலும் கடவுளின் தன்மையாகவோ மனிதனின் தன்மையாகவோ அச்சமின்மை கூறப்படவில்லை.

                “உத்திஷ்டத, ஜாக்ரத, ப்ராப்ய வரான் நிபோத- எழுந்திரு, விழித்துக் கொள், லட்சியத்தை அடையும் வரை நிறுத்தாதே. இளைஞர்களே, எழுந்திருங்கள், விழியுங்கள். நேரம் சாதகமாக உள்ளது. வாய்ப்புகள் நம் கண் முன்னே விரிந்து தயாராகக் காட்சி தருகின்றன. தைரியமாக இருங்கள். அஞ்சாதீர்கள். நம்முடைய சமய இலக்கியத்தில் மட்டும் தான் அச்சமின்மை என்ற சொல் ஆண்டவனின் இயல்பாகக் கூறப்பட்டுள்ளது.  நாம் அனைவரும் அச்சமற்றவர்களாக ஆக வேண்டும். வேலை முடிந்துவிடும்.

                “உண்மையான வேதாந்தி ஆவதற்கு முதல் படி அச்சமற்று இருக்க வேண்டும். பலவீனம் தொலைய வேண்டும். இது மிகவும் கடினம் தான். உலகப் பற்றை முற்றிலும் துறந்தவர்கள் கூடச் சில சமயம் மனதின் அந்தரங்கத்திற்குள் பலவீனத்தை உணர்வார்கள். ஆசாபாசங்களில் சிக்கி உழலும் சராசரி மனிதனைப் பற்றிக் கேட்பானேன்? அவர்களது வாழ்க்கையில் அவர்கள் ஆயிரம் ஆயிரம் விஷயங்களுக்கு அடிமையாகப் பயந்து பயந்து வாழ்கின்றனர்.”

      பாரதியின் அச்சமில்லை என்ற பாட்டுக்கும், வலிமை கொண்ட தோளினாய் வா வா வா என்ற வரிகளுக்கும் வேர் எங்கிருக்கிறது என்று தெரிகிறது அல்லவா?

            வாருங்கள், பாரதியுடன் சேர்ந்து பேரிகை கொட்டுவோம்–அச்சம், இளைப்பு, அறியாமை, சோம்பல் என்னும் பகையே, நையப் புடைக்கத் துள்ளி வருகுது வேல், சுற்றி நில்லாதே,போ.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.