ஆங்காரியும் கோணங்கியும் இடையிலொரு அம்புஜவல்லியும்

5

 கீதா மதிவாணன்

“சக்களத்தி சண்டைன்னா என்ன, தாத்தா?”

சுவாரசியமாய் நெய்யப்பட்டுக்கொண்டிருந்த கதையின் இழைகள் பதினொரு வயதுப் பாலகன் அகிலின் கேள்வியால் பட்டென்று அறுபட்டன. உம் கொட்டிக்கொண்டிருந்த பிள்ளைகள் கெக்கேபிக்கேவென்று சிரித்தனர்.

பக்கத்தில் உட்கார்ந்திருந்த வளர்மதி அகிலின் புறங்கையில் சுள்ளெனக் கிள்ளினாள். ஸ்ஸ்… என்றவாறே கையை வெடுக்கென்று இழுத்துக்கொண்டு அவள் முகத்தைப் பார்க்க, அவளோ தூரத்தில் வேப்பமர நிழலில் மினுக்கிடும் மின்மினிகளைப் பார்த்துக்கொண்டிருந்தாள். கட்டாந்தரையில் ஓரம் கிழிந்த கோரைப்பாயில் ஒய்யாரமாய் சாய்ந்திருந்த ரங்கலட்சுமி, சிரிப்பை அடக்கநினைத்தும் முடியாமல் ஆஹாவென சிரித்தாள். சிரிக்கும் அளவுக்கு தான் என்ன கேட்டோம் என்று புரியாவிட்டாலும் கேலிக்குரியதை எதுவோ கேட்டுவிட்டோம் என்றுமட்டும் புரிந்தது.

வைத்திலிங்கம் தாத்தா சிரிக்கவில்லை. நிலவொளியில் இவன் முகத்தைக் கூர்ந்து பார்த்தார். பின் ஏதோ யோசிப்பது போல் தாடையைச் சொரிந்தபடி அண்ணாந்து பார்த்தார்.  இதற்கு போய் ஏன் இவ்வளவு யோசனை என்பதுபோல் பிள்ளைகள் தாத்தாவை அதிசயமாய்ப் பார்த்தனர். தங்களுக்குள் பேசிக்கொள்வது போல் கிசுகிசுத்தபடி எதையோ சொல்லி மீண்டும் கெக்கலித்தனர்.

நிலவின் தயவால் பாலை ஊற்றி மெழுகியதுபோல இருந்தது கண்ணுக்கெட்டிய இடமெல்லாம். பசுஞ்சாணித் தரையிலிருந்து எழுந்த வாசம் இதமாய் மனத்தை நிறைத்திருந்தது. முதன்முதலாய் இந்த ஊருக்கு வந்த நாளில் சாணவாடையும் ஆட்டாம்பிழுக்கை வீச்சமும் புழுதிமண்ணும் புழுக்கமுமாக ஊரே அந்நியப்பட்டுக் கிடந்தது இவனுக்கு. போதாதென்று காட்சிப்பொருள் போல அத்தை வீட்டு வழியே போவோர் வருவோரெல்லாம் வீட்டுக்குள் தலையை நீட்டி, “இதுதான் அந்த டவுனுப் பிள்ளையா?” என்ற கேள்வியுடன் இவனை ஒரு விநோதப்பார்வை பார்த்துப்போவது மகா எரிச்சலைத் தந்தது. எதிலும்  ஒட்டாமல் எவருடனும் பழகாமல் ஒதுங்கியே இருந்தவனை வலுக்கட்டாயமாக இழுத்துச்சென்று ஊரோடு ஒட்டப் பழக்கப்படுத்தியவர்கள் வளர்மதியும் ரங்கலட்சுமியும்தான். அமுதா அத்தையின் பெண்கள். அவர்கள் தயவால்தான் ஊரின் அழகு கண்ணுக்குப் புலப்பட்டது. வயலின் வரப்புகளில் விழாமல் நடக்கவும், கையைக் காலை உதைத்து நீச்சல் பழகவும், வேப்பமரக்குயிலுக்கு எதிர்ப்பாட்டு பாடவும் கற்றுக்கொண்டான்.

இன்னும் சில நாட்களில் மாடு கறக்கவும், மேய்ச்சலுக்கு ஓட்டிப்போகவும், பருத்திக்கொட்டை அரைக்கவும், களையெடுக்கவும், கடலை பிடுங்கவும்  கற்றுக்கொள்வான். அதற்கான பயிற்சியை ஆர்வத்துடன் ஆரம்பித்துவிட்டான் வைத்திலிங்கம் தாத்தாவிடம். அமுதா அத்தையின் வீட்டில்தான் வைத்திலிங்கம் தாத்தா இருந்தார். மாடுகளைப் பராமரிக்கும் வேலை அவருடையது. எப்போது தாத்தா வேலைகளை முடித்து படுக்கவருவார் என்று அத்தை வீட்டு வாசலில் காத்திருக்கும் ஒரு சிறுவர்  பட்டாளம். கொஞ்ச நேரத்தில் இனிப்பை ஈ மொய்ப்பதுபோல் பிள்ளைகள் தாத்தாவை மொய்த்துக்கொண்டிருப்பர்.

தாத்தாவிடம் கதை கேட்பதென்றால் பிள்ளைகளுக்குக் கொள்ளைப் பிரியம். தாத்தாவுக்கோ கதை சொல்வதில் அதைவிடவும் பிரியம் அதிகம். நாள் முழுவதும் வேலை செய்து களைத்துப்போயிருந்தாலும் கதை சொல்ல ஆரம்பித்துவிட்டால் அவர் களைப்பெல்லாம் போன இடம் தெரியாது. விக்கிரமாதித்தன் கதைகளைப் போல தாத்தாவும் ஏராளமான கதைகளை ஒன்றுக்குள் ஒன்றாகப் பின்னிக்கொண்டிருந்தார். சில ஊடுபாவு இழைகளைப் போல மாறிமாறி வந்து வித்தை காட்டும். சில ஊடுபயிர் போல இடையிடையே தலைகாட்டி வளரும். வண்டித்தடத்தைப் போல இணைந்தே வந்து இருவேறு திசையில் பிரியும் சில கதைகள். இறுதியில் ஒரு புதிரில் வெட்டுப்பட்டு முடியும் சில கதைகள். தாத்தாவின் கதையுலகத்திலிருந்து முற்றிலுமாய்த் தன்னை விடுவித்துக்கொள்வதென்பது எவருக்குமே சாத்தியமானதில்லை.

இன்றைய கதையின் நாயகி அம்புஜவல்லியைப் பற்றி தாத்தா அமோகமாய் சிலாகித்துக்கொண்டிருந்தார். “அம்புஜவல்லி அழகுன்னா அழகு… அப்படியொரு அழகு.. அவ பாடினா குயிலெல்லாம் ஊரைவிட்டு ஓடிடுமாம்.  ஆடினா மயிலெல்லாம் அவமானம் தாங்காம தன் தோகையை கழட்டி வச்சிடுமாம்.  அபாரமா கத்திச் சண்டை போடுவாளாம், ஒரே வீச்சில ஒன்பது தலைகளைக் கொய்வாளாம். அற்புதமா ஓவியம் வரைவாளாம், அவ ஓவியத்தைப் பாத்தா உயிரோடு இருக்கிறமாதிரியே இருக்குமாம். பரோபக்காரியாம். அம்மா தாயே பசிக்கிதுன்னு அரண்மனை வாசலுக்கு வார பிச்சக்காரனுக்கு பொன்னையும் பொருளையும் அள்ளித்தருவாளாம்….”

அரண்மனை வாசலில் எந்த பிச்சைக்காரனாவது பிச்சையெடுப்பானா என்று எவருக்கும் குறுக்குக்கேள்வி கேட்கத்தோன்றாது. கதையை கேட்கிற பெண்பிள்ளைகள் தங்களை அந்த இளவரசியாய் கற்பனை செய்து மகிழ, பையன்களுக்கோ அப்படியாகப்பட்ட இளவரசியையே திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்ற எண்ணம் உதிக்கும். தாத்தா தொடர்ந்து சொல்லிக்கொண்டிருந்தார்.

“அந்த இளவரசியைக் கட்டிக்கிடுறதுக்கு ரொம்பநாளா ஒரு மந்திரவாதிக்கு ஆசை. ஆனா… அவனால் கோட்டையை நெருங்கமுடியல. அதனால் அவன் என்ன பண்ணுனான்… கோணங்கின்னு ஒரு பூதத்தை ஏவி அவளைக் கடத்திகிட்டு வரச் சொல்லுறான். பூதமும் போச்சு…. ஆகா….என்னா அழகு… இவளக் கொண்டுபோய் மந்திரவாதிக்குக் குடுக்கிறதுக்குப் பதிலா நாமளே கட்டிகிட்டா என்னன்னு அதன் மனசில ஆசை வந்திட்டுது. இளவரசியைக் கடத்திகிட்டுப் போற வழியில அவ மயக்கத்தில இருக்கும்போதே தாலியைக் கட்டிப்புடுது. இளவரசி கண்ணு முழிச்சதும் தன் கழுத்தில் தொங்குற தாலியைப்பாத்து அழுவுறா… இப்படி என் வாழ்க்கையைக் கெடுத்துபுட்டியேன்னு ஒப்பாரி வக்கிறா…. அப்புறம் மனச தேத்திகிட்டு கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருசன்னு இருக்கும்போது பூதமானாலும் புருசன்னுதான் ஏத்துக்கணும்னு சொல்லி ஒண்ணுஞ்சொல்லாம தாலியை எடுத்து கண்ணில ஒத்திகிட்டு பூதத்தோட  வீட்டுக்குப் போறா… அங்கதான் இருக்கு வேடிக்க…. என்னாங்கிறியா… இந்தப் பூதத்துக்கு முன்னாடியே கல்யாணமாயி ஒரு பொண்டாட்டி இருக்கா…. மகா ஆத்திரக்காரி… பேரே ஆங்காரி. இளவரசியப் பாத்ததும் ஆங்காரமாயி புருசனை அடாபுடான்னு வையிறா…இளவரசியைக் கொல்லாமவிடமாட்டேன்னுட்டு அவ மேலப் பாயுறா… அம்புஜவல்லி சும்மா இருப்பாளா…அவதான் எல்லா வித்தையும் கத்தவளாச்சே… இடுப்புல சொருவியிருந்த கத்திய சடார்னு உருவி பத்ரகாளியாட்டம் நிக்கிறா. அதப் பாத்து ஆங்காரிக்கு கொஞ்சம்போல பயம் வந்திட்டுது. இருந்தாலும் வீராவேசமா சொல்றா…இருடி இரு… நீ அசந்தநேரம் உன்ன வெங்கலப்பானையில வெச்சி வெவிச்சு எம்புருசனுக்கே விருந்து வச்சிடறேன்னு சபதம் போடறா… அம்புஜவல்லியும் பதிலுக்குச் சொல்றா… உன்னய துண்டைக் காணோம், துணியைக் காணோம்னு இந்தக் காட்டவிட்டே ஓட ஓடத் தொரத்தலே…. எம்பேரு அம்புஜவல்லி இல்லைங்கறா…. அன்னியிலேந்து ரெண்டுபேருக்கும் சண்டதான். ஒரு பக்கம் மந்திரவாதி… பூதத்தைப் புடிச்சி குடுவயில அடைக்கத் தேடுறான்… இவளுங்க ஒருபக்கம் படுத்துறாளுக… சக்களத்தி சண்டையில மாட்டிகிட்டு முடியப் பிச்சிகிட்டுது கோணங்கி பூதம்.”

தம்மை மறந்து சிறுவர்கள் கதை கேட்டுக்கொண்டிருந்தனர். அப்போதுதான் அகில் அந்தக் கேள்வியைக் கேட்டான்.

“சக்களத்தி சண்டைன்னா என்ன, தாத்தா?”

 தாத்தாவின் கதையுலகுக்குள் சஞ்சரித்துக்கொண்டிருந்தவர்களை பலாத்காரமாய் வெளியில் இழுத்துப் போட்டது அகிலின் அந்தக் கேள்வி.  கேள்வி எழுப்பிய சிரிப்பிலிருந்து ஒவ்வொருவராய் மெல்ல விடுபட்டுக்கொண்டிருந்தனர். ஒட்டுமொத்தமாய் சிரிப்படங்கிய தருணத்தில் தாத்தா சொன்னார்.

“நீ பெரிய மனுசனானதும் உனக்கு உன் அத்த மவளுவ ரெங்கலட்சுமி, வளர்மதி ரெண்டு சிறுக்கியையும் கட்டிக் கொடுத்தோம்னு வைய்யி….உனக்காக இவளுக போட்டுக்குவாளுக பாரு…. குடுமிப்புடி சண்ட…. அதுக்குப் பேருதான் சக்களத்திச் சண்ட….”

அகிலுக்குக் கொஞ்சம் புரிந்ததுபோல் இருந்தது.

“குடுமிப்புடி சண்டைபோட்டா… அதான் சக்களத்திச் சண்டையா…?”

அடங்கியிருந்த சிரிப்பு மறுபடியும் வெடித்துக்கிளம்பியது. அகில் மேலும் ஏதோ கேட்க வாயைத் திறக்குமுன் மறுபடியும் வளர்மதி கிள்ளினாள். இந்த முறை குறிப்பு புரிந்தது. வாயை மூடிக்கொண்டான். இப்போது எல்லாருக்குமே தாத்தா விட்டக் கதையை தொடர்ந்து கேட்கும் ஆர்வம் போய்விட்டிருந்தது. அகிலுக்கு மட்டும் இந்தக் கதையின் முடிவைத் தெரிந்துகொள்ளும் ஆவல் மிஞ்சியது. ஆனால் தாத்தாவோ சக்களத்திக் கதைகளுக்குத் தாவிவிட்டிருந்தார்.

அகில் ரங்கலட்சுமியும் வளர்மதியும் குடுமியைப்பிடித்து சண்டையிட்டுக்கொள்ளும் காட்சியை நினைத்து சிரித்தான். அகிலுக்கு ரங்கலட்சுமியையும் பிடித்திருந்தது, வளர்மதியையும் பிடித்திருந்தது. அத்தைக்கு ஆண்பிள்ளைகள் இல்லாத குறையை ரங்கலட்சுமி தீர்த்துவைத்தாள். விடுவிடுவென்று மரம் ஏறி புளியங்காய் பறித்துப் போட்டாள். குளத்துப் படிக்கட்டில் இவனை உட்காரவைத்துவிட்டு தாமரைப் பூக்களைப் பறித்துவந்து தந்தாள். பாவாடையை மார்புவரை ஏற்றிக் கட்டி அதில் காற்றை நிரப்பி குளத்துநீரில் படகுபோல் வலம்வந்தாள். சட்டென்று பாவாடை இறுக்கம் தளர, காற்று வெளியேறி ப்ளக்கென்று தண்ணீருக்குள் மூழ்கித் திணறி வெளிவந்து இவனைப் பார்த்துச் சிரித்தாள்.

வளர்மதி ரொம்ப சாது. தின்னக் கொடுப்பதில் தன் பங்கையும் கொண்டுவந்து இவன் கையில் திணிக்கும் அந்தப் பாசம் இவனை வியப்பிலாழ்த்தும். மிஞ்சிப் போனால் அகிலைவிடவும் ஒரு வயது பெரியவளாய் இருப்பாள். ஆனால் அவள் காட்டும் பரிவு…. தாயிடத்தும் கண்டிராதது… தாத்தா சொன்னதுபோல் பெரியவனாகி இருவரையும் கல்யாணம் செய்துகொண்டால் இருவருக்கும் சண்டை வருவது நிச்சயம் என்பதும் புரிந்தது.

அன்று கனவில் அம்புஜவல்லியும், ஆங்காரியும் சண்டையிட்டுக் கொண்டிருந்தபோது ஒரு அழகான இளவரசன் குதிரையில் வந்து அம்புஜவல்லியைத் தூக்கிக்கொண்டு போனான். குதிரை ரொம்ப தூரம் போனதும் களைத்து நின்றபோதுதான் தெரிந்தது, அந்த இளவரசன் தான்தான் என்பதும் அம்புஜவல்லியென்று நினைத்து ஆங்காரியைத் தூக்கிவந்திருப்பதும். ஐயையோ என்று பதறும்வேளை,

“எந்திரிங்க…. எந்திரிங்க… சாணி கரைச்சிப் போடணும்…. ஐயா… அகிலு… எந்திரிச்சி திண்ணயில போய் படுய்யா…” அத்தை இதமாக எழுப்பினாள். துணுக்கிடச் செய்த கனவிலிருந்து விடுபடாமலேயே எழுந்து திண்ணை நோக்கிப் போனான்.

அத்தை கூரை வீட்டில் குடியிருந்தாலும் இவனை ஒரு இளவரசனைப் போல்தான் கவனித்துக்கொண்டாள்.  எப்போதும் எதையாவது தின்னக்கொடுத்துக்கொண்டே இருந்தாள். எங்கிருந்து எப்படிக் கிடைக்கிறதென்று தெரியாது. ஆனால் நித்தமும் கொய்யாப்பழம், மாங்காய், வெள்ளரிப்பழம், நுங்கு,  அவிச்ச கடலை, சுட்ட பனங்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, பலாச்சுளை என்று இவன் கண்ணில் காட்டிக்கொண்டே இருந்தாள். இளங்காலையில் புளிப்பும் இனிப்பும் துவர்ப்புமாய் பதமாய் தொண்டை நனைக்கும் பதநீரின் ருசிக்கு இப்போது அடிமையாகியிருந்தான். அமுதா அத்தை மட்டுமில்ல, மாமாவும் இவன் மேல் அத்தனைப் பிரியம் வைத்திருப்பது ஆச்சர்யமாயிருந்தது.

இரவு சாப்பிடும்போது மாமா வந்து பக்கத்தில் உட்கார்ந்துகொண்டார். அவரிடமிருந்து விரும்பத்தகாத வாடை அடித்தது. சற்று நகர்ந்து அமர்ந்துகொண்டான். மாமா இன்னும் நெருங்கி அமர்ந்தார்.

அத்தை இவனுக்கென்றே பிரத்யேகமாய் சுதேசிப் பாத்திரக்காரனிடம் சொல்லிவைத்து வாங்கிய பளபள எவர்சில்வர் தட்டில் ரசஞ்சோறு பிசைந்து வைத்து பருப்புத் துவையலையும் வைத்திருந்தாள். அவனது இடது கையில் சுட்ட அப்பளமொன்றைச் செருகிவிட்டுச் சென்றாள்.

வளர்மதியும் ரங்கலட்சுமியும் எதையோ கிண்ணத்தில் கரைத்துக் குடித்துக்கொண்டிருந்தார்கள். என்னவென்று சிம்னி விளக்கின் வெளிச்சத்தில் தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் இவன் தட்டில் இருப்பதை விடவும் உசத்தியாய் இருக்கப்போவதில்லை என்பது மட்டும் நிச்சயம்.

“மருமவனே… நல்லா அள்ளித்தின்னு என்னத்துக்கு வெக்கப்படுறே…. வேணும் வேணாம்னு வளைச்சுக்கட்டுவியா… அத விட்டுபுட்டு புதுப்பொண்ணு மாதிரி கொறிக்கிறே… நல்லா சாப்புடு…” சொல்லிக்கொண்டே மாமா இவன் தட்டிலிருக்கும் சோற்றை பெரியப் பெரியக் கவளங்களாக உருட்டி இவன் வாய்க்குள் திணிக்க முற்பட்டார். அகில் நெளிந்தான். வளர்மதியும் ரங்கலட்சுமியும் சிரித்தார்கள்.

“நானே சாப்புடறேன் மாமா…” தலையை இன்னும் குனிந்துகொள்ள… மாமா சிரிக்க… “சங்கோஜப்படுதில்ல… பிள்ளையை விடுங்க.. தானே அள்ளித்தின்னட்டும்” அத்தை மாமாவிடம் சொன்னாள்.

அம்மா அத்தையையும் அவள் குடும்பத்தையும் பற்றி எப்போதுமே நல்லவிதமாகப் பேசியதேயில்லை. இவ்வளவு நல்ல மனிதர்களை ஏன் அவளுக்குப் பிடிக்காமல் போயிற்று என்று அகிலுக்கு வியப்பாக இருந்தது. அம்மாவுக்கு யாரைத்தான் பிடித்திருந்தது? எல்லோரோடும் எப்போதும் பூசல்தான். அவள் ஆசையாய் அன்பாய் பேசிய தருணங்களை எண்ணிவிடலாம்.

“அகிலு…. சித்தப் பொறுமையா சாப்புடு…. கருவாடு சுட்டு எடுத்தாறேன்…” அடுப்புக்குப் பக்கத்திலிருந்து அத்தை குரல் கொடுத்தாள்.

சுட்டக் கருவாட்டின் மணம் நாசியை விடைக்கச் செய்தது. அம்மாவுக்கு கருவாட்டு வாசம் ஆகவே ஆகாது. அப்பாவுக்கோ அதுதான் பெரும்பிரியம். அம்மா சண்டை போட்டுக்கொண்டு ஆச்சி வீட்டுக்குச் சென்றுவிடும் சமயங்களிலெல்லாம் ஒரு அதிசயம் நிகழும். சொர்ணலதா என்று பெயர் பொறிக்கப்பட்ட ஒரு சில்வர் சம்புடம்  எங்கிருந்தோ வந்து அடுக்களை மேடை மீது அமர்ந்திருக்கும். அப்பா அதைத் திறந்தநொடி மணம் மூக்கைத் துளைக்க அகில் எங்கிருந்தாலும் அடுப்பங்கரை வந்துவிடுவான். நன்றாய் சுத்தம் செய்யப் பட்டு உப்பும், மஞ்சளும் தடவி பதப்படுத்தப்பட்ட நெத்திலிப்பொடியைப் பார்த்ததுமே நாவூற ஆரம்பித்துவிடும்.

எண்ணெயில் பொரித்தெடுத்துக் கொடுத்தால் ரசச் சோற்றுடன் தேவாமிர்தமாய் இறங்கும். கடைவாயில் வழிவது கூடத் தெரியாமல் அப்பா தலையைத் தலையை இடமும் வலமுமாய் ஆட்டி ஆட்டி சாப்பிடுவார். அப்பா என்றுமே அப்படி ரசித்து ருசித்து சாப்பிட்டு அவன் பார்த்ததே இல்லை. இந்தக் கருவாட்டுக்காகவே அம்மாவிடம் சண்டை போட்டு அடிக்கடி ஊருக்கு அனுப்புகிறாரோ என்று கூடத் தோன்றும்.  அம்மா வருவதற்குள் சொர்ணலதா சம்புடம் மறுபடி மாயமாய் மறைந்திருக்கும். ஒருநாள் பேச்சுவாக்கில் சொர்ணலதா சம்புடத்தைப்பற்றி இவன் அம்மாவிடம் சொல்லிவிட அம்மா சாமியாட ஆரம்பித்துவிட்டாள்.

அம்மாவுக்குக் கோவம் வந்தால் வீடு வீடாகவே இருக்காது. சாமான்களை எறிவதும் உடைப்பதும்…. அப்பா தலையைக் குனிந்தபடியேதான் உட்கார்ந்திருப்பார். எந்த சந்தர்ப்பத்திலும் அப்பா அம்மாவைக் கட்டுப்படுத்த முயன்றதே இல்லை. அகிலுக்கு இப்போது அவர்கள் கோணங்கியும் ஆங்காரியுமாக தோன்றினார்கள். சொர்ணலதா தான் அம்புஜவல்லி என்பதும்  அவள் நிமித்தமாய்த்தான் அவர்களுக்குள் அடிக்கடி வாதம் உண்டாகிறது என்பதும் புரிந்தது. அவன் அம்மாவும் ஆங்காரி மாதிரிதான் சபதம் போட்டிருந்திருப்பாளோ…?

என்றும்போல்தான் அன்றும் அம்மா வெறியாட்டம் ஆடிக்கொண்டிருந்தாள். அப்பா அதை லட்சியம் செய்யாததுபோல் அமைதியாக உட்கார்ந்திருந்தார். அம்மா தன் உரிமையை விட்டுக்கொடுக்க விரும்பவில்லை. அதைக்காட்ட அவள் கையாண்ட வழிமுறைதான் மற்றப் பெண்களிலிருந்து அவளை வேறுபடுத்திக் காட்டியது. அப்பாவின் மெளனமான உதாசீனம் அவளுடைய இயலாமையை இன்னும் தூண்டிவிட அவள் ஆங்காரியாக அவதாரமெடுத்தாள். இல்லை, இல்லை…. அப்படி ஆங்காரியாக அவதாரமெடுப்பதற்காகவே தூண்டிவிடப்பட்டிருக்கிறாள்.

தாத்தாவின் கதையில் வந்த ஆங்காரி, அம்புஜவல்லியைக் கொன்றாளோ, அம்புஜவல்லி ஆங்காரியைக் கொன்றாளோ அல்லது சமரசம் செய்துகொண்டு கோணங்கியுடன் வாழ்ந்தார்களா தெரியவில்லை. ஆனால் அம்மா என்னும் ஆங்காரியோ கோணங்கியைக் கொன்றுவிட்டு தானும் தூக்கில் தொங்கிவிட்டாள்.

அகிலின் வாழ்க்கை நாடகத்தில் பெற்றோர் வேடம் ஏற்றவர்கள் விரைவிலேயே தங்கள் பாத்திரத்தை முடித்துவிட்டு வேற்றுலகம் சென்றுவிட…. கண்முன் விரிந்து கிடக்கும் இந்தப் பரந்த உலகம் அவனைப் பயமுறுத்துகிறது, முன்னே விட்டுப் பின்னே கிசுகிசுத்துப் பரிகசிக்கிறது அல்லது கண்ணில் பரிதாபம் தேக்கி அவனைப் பலவீனமாக்குகிறது. இவை போதாதென்று அத்தையின், மாமாவின் அன்புக்குப் பின்னால் ஒரு ஆதாயத்தின் எதிர்பார்ப்பு இருப்பதும் மெல்லத் தெரிய வந்தபோது உலகம் வெறுத்துத்தான் போனது. ஆனாலும் அவர்களது ஆதாயம் நிறைவேறும் வரையிலான காலம் அவனுக்கு ஆதாயமாக இருந்தது. காற்றடிக்கும்போதே தூற்றிக்கொள்ளவேண்டும். கற்பிக்க முனைப்பாயுள்ளது காலம். கற்றுக்கொள்ளத் தயாராகிவிட்டான் அகிலும்.

*****************************************************

பதிவாசிரியரைப் பற்றி

5 thoughts on “ஆங்காரியும் கோணங்கியும் இடையிலொரு அம்புஜவல்லியும்

  1. நன்று. தொடர்ந்து பல கதைகளைப் படையுங்கள்!!

  2. சரசரவென்று பின்னலிடும் அழகான கதையோட்டம். படிக்கும் போதே, மனதினுள் இயல்பாக காட்சிகள் உருக்கொள்கின்றன. சாண வாடையும், புழுதி மண்ணும், வரிகளின் வழியே நாசியில் மணம் பரப்புகின்றன. போகிற போக்கில், அகிலின் நிலையும், நிதர்சனம் உணர்ந்து அவன் எடுத்த நிலைப்பாடும் பட்டென்று  போட்டு உடைத்த தினுசில் சொல்லப்பட்ட விதம் மனதைத் தொட்டது. மிக அருமையான பகிர்வு. வாழ்த்துகள்!!.

  3. மிகவும் அழகாகக் கதையை உள்வாங்கிய விமர்சனம். ஆழ்ந்து படித்திருக்கிறீர்கள் என்று அறியும்போது மிக்க மகிழ்ச்சி. ஊக்கம் தரும் பின்னூட்டத்துக்கும் வாழ்த்துக்கும் அன்பான நன்றி பார்வதி இராமச்சந்திரன் அவர்களே.

  4. சானி, சகதி, நெத்திலி, கருவாடு என்று பாரதிராஜா பட ரேஞ்சுக்கு ஒரு கதை, அதிலும் இளவரசி, மந்திரவாதி கதை சொல்லும் பாங்கு அழகோ அழகு.

    ////அத்த மவளுவ ரெங்கலட்சுமி, வளர்மதி ரெண்டு சிறுக்கியையும் கட்டிக் கொடுத்தோம்னு வைய்யி….உனக்காக இவளுக போட்டுக்குவாளுக பாரு…. குடுமிப்புடி சண்ட…. அதுக்குப் பேருதான் சக்களத்திச் சண்ட….” /// போன்று கதை முழுக்க நல்ல கிராமிய வட்டார வாசனையில் நல்ல கதை. பாராட்டுக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.