முசுட்டுத் தாத்தா …
விசாலம்
அந்தப் பாழடைந்த பங்களா முன் அமைந்திருந்தது ஒரு பெரிய மைதானம் அதில் சின்னஞ் சிறு சிட்டுக்கள் பாண்டியும், கபடி விளையாட்டும் விளையாடுவார்கள். கிரிக்கெட் குரூப் வேறு வந்து விடும். “ராமு அப்படி அடி சிக்ஸர் என்று “மகிழ்ச்சியுடன் ஆராவரிப்பார்கள் பசங்கள். நடுவில் சண்டையும் வரும் நீ அவுட்டுடா , நான் பார்த்தேன்”என்பான் சங்கர் . அட போடா , எங்க அவுட்… பந்து பேட்டில் படவேயில்லைடா”. “சீட்டிங் சீட்டிங் பேட்டை எங்கிட்ட கொடு இப்ப என் சான்ஸ் “
“போடா அழுகுண்ணி “மட்டையைத்தூக்கிப்போடுவான் ராமு. பின் திரும்ப எல்லோரும் ஒன்று சேர்ந்துவிடுவார்கள். சில சமயம் பட்டங்கள் அங்கு பறக்கும் “ஓ போ காட்டே” என்றபடி ஒரு ஹிந்திக்காரன் கத்துவான்.பட்டத்தை அறுத்துவிட்ட மகிழ்ச்சியில் குதிப்பான . கண்மண் தெரியாமல் அந்தப்பட்டத்தைப் பிடிக்க ஓடும் ஒரு கூட்டம் . கார் வருவதும் தெரியாமல் ஓடும் . பீம் பீம் என்று ஓட்டுபவன் அலறுவான். இது போன்ற காட்சிகளுக்கு வந்தது ஒரு நாள் ஒரு முத்தாய்ப்பு .
அந்த நாள்…..ஒரு டிரக் வந்து நின்றது .அதிலிருந்து ஒரு வயதானவர் இறங்கினார் முகம் கடுகு போட்டால் வெடிக்கும் போல் இருந்தது .அவருடன் மேஜை நாற்காலி ஒரு பீரோவும் கூட இறங்கின .இரண்டு பெரிய பெட்டிகள் இறங்கின .ஹிட்லர் போல் சாமான்கள் இறங்கும்போதே சாமான்களை இறக்கிய ஆட்களைத்திட்டினார்முகத்தில் சிரிப்போ,புன்னைகையோ கடுகளவு கூட காணோம் .இதையெல்லாம் கவனிக்காமல் குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தன .இதைப்பார்த்த அவர் வேகமாக முறைத்தபடி அவர்களை நோக்கி வந்தார் . “ஸ்டாப் திஸ் நான்சென்ஸ் ஒய் ஸோ மச் ஆப் ..நாய்ஸ்?”என்று ஆங்கிலத்தில் கூச்சல் போட்டார் , இதை எதிர்ப்பார்க்காத சிறுவர்கள் ஓட்டம் பிடித்தனர் . ஓடும் போது பயத்தில் கிரிக்கெட் பேட் கீழே விழ…அதை அவர் எடுத்து காம்பவுண்டு வெளியில் வீசினார்.அந்த மட்டை விரிந்து போயிற்று ராமு பரிதாபமாகமுகம் வைத்தபடி அதை எடுத்தான் .கூட கமலா,கண்ணன் ,ரமேஷ்.சங்கர்,லீலாஎன்றுபலர் கூடினர்.முசுடு முதியவர் வந்தார் .தனது வாசலைப்பூட்டிக்கொண்டு உள்ளே சென்றார் குழந்தைகள் முகத்தில் ஈயாடவில்லை “.நல்ல விளையாட்டுக்கு வினை வைத்துவிட்டாரே இந்த முசுட்டு தாத்தா”{என்றாள் சாந்தி “கொஞ்சம் நாளில் எல்லாம் சரியாகி விடும் தாத்தா சாந்தமாகி விடுவார்” என்றாள் நீலா . “அங்கன பறையு “என்றான் உன்னி “சப் டீக் ஹோஜாயகா” என்றான் கரண்சிங் .எல்லோரும் நம்பிக்கையுடன் கலைந்தனர் .
மறுநாள் கேட் திறக்கவில்லை.ஆனால் தாத்தாவின் உருவம் தெரிந்தது ஒரு ஈசிசாரில் அமர்ந்திருந்தார்.கையில் ஒரு புத்தகம் இருந்தது சிறுமிகள் வந்தனர் பூட்டிய கேட்டைப் பரிதாபமாகப் பார்த்தனர்.பின் காப்டன் வந்தான் பின் அவர்கள் இருக்கும் தெருவிலேயே கிரிக்கெட் மாட்ச் ஆரம்பமானது.வழக்கம் போல் சேகர் ஆரம்பித்தான்.பந்தைச்சுழற்றிப்போட்டான் .ரமேஷ்.முதல் இரண்டு பால் சுமாராகத்தட்டினான் சேகர் .பின் நாலாவது பந்தில் தன் சக்தியெல்லாம் சேர்த்து ஒரு சுழட்டு சுழட்டினான் .அது வேகமாகப்பறந்து அந்தமுசுட்டுத்தாத்தாவீட்டுபங்களா சன்னலில் மோதியது.சன்னல் கண்ணாடி விரிந்தது .பயத்தில் எல்லோரும் ஓடத்தொடங்கினர்.சேகர் மட்டும் ஓடவில்லை .தைரியத்தை வரவழைத்துக்கொண்டு மேலே போனான்.
“தாத்தா தாத்தா”…. தாத்தா பேசவில்லை .முறைத்தார்
“தாத்தா உங்களுக்கு காது கேட்காதா?என் பால் உள்ளே விழுந்துடுத்து அதை எடுத்தக்கட்டுமா?” தாத்தா பதில் பேசாமல் பந்தை எடுத்தார் .உள்ளே சென்று ஒரு கூர்மையான கத்தி ஒன்றைக்கொண்டு வந்தார். சேகர் பார்த்துக்கொண்டு இருக்கையில் அதை இரண்டு பாகமாக கிழித்தார் . பின் சேகர் மேல் வீசினார் .சேகரின் மனம் இரண்டாக உடைந்தது . அழ ஆரம்பித்தான். தன் வீட்டிற்குச்சென்று கதவை அடைத்துக்கொண்டான்
இந்தக்கிழவருக்கு ஏன் இத்தனைக்கோபம் .வெறுப்பு ……………… அவர் பெயர் சண்முகம் அனாதையாக இருந்து பின் ஒரு சங்கத்தில் சேர்ந்து படித்தார் குடும்பச்சூழ்நிலை இல்லாததாலும் தனெக்கென்று ஒருவரும் இல்லை என்பதாலும் மனதில் எப்போதும் ஒரு ஏக்கம். தனிமையிலேயே சிறுவயதைக்கழித்தார்.நல்லவேளையாக படிப்பு நன்கு வந்ததால் சில சமூக சேவை உதவியினால் காலேஜை முடித்தார் .ஆனால் முசுடு சுபாவம் ஆனதால் ஒருவரும் அவரை நெருங்கவில்லை அவருக்கு இதனால் அன்பையும்,பாசத்தையும் உணர வாய்ப்பில்லாமல் போய்விட்டது .
ஒருநாள் …….தன் ஆபீசிலிருருந்து வரும் வேளை .ஒரு ஓரமாகத்தான் நடந்து கொண்டிருந்தார். ஆனால் திடீரென்று ஒரு ஆட்டோஅவர் மேல் மோதியது .அவர் மயக்கமடைந்து கீழே சாய்ந்தார்.கூட்டம் கூடியது .ஒருவரும் ஒன்றும் செய்யவில்லை அந்த நேரம் ஒரு பெண்மணி தன் காரிலிருந்து இறங்கி இவரைத்தூக்க வைத்து தன் காரில் தக்கதருணத்தில் ஆஸ்பத்திரி அழைத்தும் சென்றார்.அத்தோடு நிற்காமல் தினமும் வந்து விசாரித்து சேவையும் செய்தாள்.அவளும் ஒண்டிக்கட்டைதான் குப்பைத்தொட்டியிலிருந்து கண்டெடுத்து சமூக இயக்கத்தினால் வளர்க்கப்பட்டவள் . இன்று அவளே அந்த இல்லத்தில் முக்கிய நிர்வாகி
இருவர் மனமும் ஒன்றியது முசுடுக்குக்கொஞ்சம் கொஞ்சமாக பாசம் என்பதைப்புரிய வைத்தாள் வள்ளி.அவர் முகத்தில் இருந்த கடுகடுப்பை மாற்றி புன்சிரிப்பை வரவழைத்தாள் அவரது அனாவசிய கோபத்தைக்குறைத்தாள்.அவர் மேல் காதலும் கொண்டாள், ஆயிற்று வள்ளி சண்முகம் திருமணம் .ரெஜிஸ்டர் மேரேஜ் தான் .சண்முகத்தின் வயது நாற்பது வள்ளிக்கு முப்பத்தெட்டு.இத்தனை ஆண்டுகளுக்குப்பிறகு வாழ்க்கையில் மகிழ்ச்சியைக்கண்டார் சண்முகம்
“என்ன வள்ளி நமக்குப்பிறக்க போகும் குழந்தை உன்னைப்போல் சாந்தமாக இருக்கணும் உன்னைப்பொல் அழகாக இருக்கணும் “
“ஆமாம் பெண் குழந்தை தான் பெத்துக்கப்போறேன் உங்க போல அவ இருப்பா பேரு சண்முகப்பிரியா..எப்படி இருக்கு இந்த பேரு!”
“ரொம்ப அழகா இருக்கு”என்றபடிஅவள் வயிற்றில் தன் காதை வைத்துப்பார்த்து பரவசமடைந்தார்.எல்லாமே புதுமையாக இருந்தது அவருக்கு.
வந்தது அந்த சனிப்பிடித்த நாள் .அன்று ஞாயிற்றுக்கிழமை. பள்ளி மாணவர்கள் கிரிக்கெட் ஆடிக்கொண்டிருந்தனர் ஆட்டம் மிக மும்முரமாக இருந்தது. மட்டை பிடித்த பேட்ஸ்மென் மோஹனுக்கு ஐம்பதைப்பிடிக்க இன்னும் இரண்டு ரன்கள் வேண்டும் .அந்த ஆசையால் வெறிப்பிடிதாற்போல் இழுத்து ஒரு அடி அடித்தான் தன் வீட்டு வாசலிலிருந்து வேடிக்கைப்பார்த்த வள்ளியின் வயிற்றில் அந்தப்பந்து வந்து தாக்கியது .அந்தப்பந்தே யமனாக வந்தது போலும் .அடிவயிற்றைப்பிடித்தபடி “அம்மா”என்று அலறினாள்.ஷ்ண்முகம் ஒடோடி வந்தார். அலறிப் புடைத்தபடி ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்சென்றார் வயிற்றினுள்லேயே சிசு மரித்துவிட்டது பின் தாயைப்பிழைக்கவைக்க முடியவில்லை அவ்வளவுதான் சண்முகம் வாழ்க்கையில் ஒரு பேரிடி.கிரிக்கெட்டை வெறுத்தார் அதை விளையாடும் எல்லோரையும் எதிரியாகப்பார்த்தார் விளையாட்டு சிறுவர்களை வெறுத்தார் நடந்த சம்பவம் அவர் ஆழ்மனதில் பதிந்துமிகவும் தொந்தரவு செய்தது.வந்த புன்னகை மறைந்து பழைய சிடுசிடு திரும்பியது.பைத்தியம் பிடித்தாற்போல் ஆனார்.
ஒருநாள் அவருக்குத்திடீரென்று ஒரு ரெஜிஸ்டர்ட் போஸ்டு வந்தது அதில் அவரது தாத்தா வழி வந்த சொத்தான ஒரு வீடு இவர் பேருக்கு எழுதப்பட்டிருந்தது.இவரது தூரத்து உற்வான ஒருவர் இவர் இருப்பதைக்கண்டுப்பிடித்து மிகவும் முயற்சி செய்து இவரிடம் அந்த வீட்டை ஒப்படைத்தார்.அந்த வீடுதான் தற்போது சண்முகம் இருக்கும் வீடு.தில்லியில் பாலம் விஹார் என்ற இடத்தில் இருந்தது. அவருக்கு வயதாக வயதாக தனிமையை உணர்ந்தார்.கோபமும் சிடுசிடுப்பும் கூடியது.இயலாமை வேறு அவரை மிகவும் வெறுப்படைய செய்தது.இதனால் தான் அவர் அந்தக்கிரிக்கெட் பந்தைக் கிழித்துப்போட்டாரோ?தன்னை மாற்றிய தனக்கு உயிர்க்கொடுத்த தேவதை வள்ளியைக்கொன்ற பந்தல்லவா என்ற பழைய ஞாபகமும் வர கத்த ஆரம்பித்து விடுவார்.
ஒரு நாலு நாட்களாக அந்தக்காம்பவுண்டில் ஒரு சத்தமுமில்லை.ஐந்தாவது நாள் மெள்ள ராஜி அந்த மைதானத்தை எட்டிப்பார்த்தாள்.பின் தைரியமாக மேலே நடந்தாள்.வீட்டினுள் கதவு அடைக்க்ப்பட்டிருந்தது .”ஹையா மஜா தாத்தா வீட்டினுள் இல்லை “என்று குதித்தபடி வெளிவந்தாள்.பின் என்ன 1தோழிகள் கூட்டம் சேர்ந்தது.”வா கமலா மீனா ,நீலா ஓட்டம் பிடிச்சு விளையாடலாம்” என்றபடி ராஜி ஓட அந்ததோட்டப்பூக்களும் சிரித்தன.கடைக்குட்டி சுசீ மண்ணை அளைந்து கனகாம்பர விதைகளை விதைத்தாள்.பின் ரப்பர் குழாய் வழியாக நீர் பாய்ச்சினாள்.வேறு சிலர் அங்கிருந்த குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தனர் ஒரு வாரம் ஆயிற்று முசுடுதாத்தா வரவில்லை. “ஹையா ஜாலி” என்றபடி சிறுவர், சிறுமிகள் ஆனந்தமாக பொழுதைப்போக்கினர் அடுத்த நாள் ஒரு அம்புலனஸ் அந்தக்காம்பவுண்டுக்குள் வந்தது அதிலிருந்து இரண்டு பேர்கள் இறங்கி தாத்தாவைத் தூக்கியபடி சென்றனர்.உள்ளே ஒரு கட்டிலில் அவரைக்கிடத்திவிட்டு அருகிலிருந்த மேஜையில் சில மருந்துகளை வைத்துவிட்டு சென்றனர்.எட்டி நின்று பார்த்த குழந்தைகள் அந்த இடத்தை விட்டு நகர்ந்தனர்
“பாவம்டி தாத்தா என்ன உடம்போ தெரிலை “என்றாள் மீனுக்குட்டி
“ஆமாண்டி ஒரு வாரமா ஆஸ்பிடல்ல இருந்திருக்கார் போல இருக்கு “என்றாள் வாணி
“நான் ஓடிப்போய் எங்கம்மாட்ட சொல்லபோறேன் ஓட்ஸ் கஞ்சி எங்கம்மா வச்சுக்கொடுப்பா அத தாத்தாட்ட தரப்போறேன்”என்றாள் மீனுக்குட்டி மதியம் ஆனது ராஜி ஆப்பிள் பழத்தை வெட்டி எடுத்துக்கொண்டாள் மதியம் ஒரு மணி ராஜியுடன் மீனு, வாணி,சங்கர் சேகர் ரமேஷ் சிங் எல்லோரும் சேர்ந்துகொண்டனர்
“நான் உள்ளே வரலை என் பந்தை முசுடு தாத்தா கிழித்துப்போட்டுட்டார் “என்று முகத்தை உம் என்று வைத்துக்கொண்டான் மோகன்
” பாவண்டா அப்படி சொல்லாதே தனியா சுரமா படுத்திண்டிருக்கார் போலிருக்கு பிளட்பிரஷர் போலேருக்கு வாடா உள்ளே அவர் ஒன்னும் சொல்ல மாட்டார்ன்னு நினைக்கறேன் “
” தாத்தா நான் தான் ராஜி …என்ன தாத்தா சுரமா ஐயோ பாவம் டோன்ட் வொர்ரி உங்கள பாத்துக்க நாங்க இருக்கோம் :
” தாத்தா தாத்தா நான் தான் மீனு உங்களுக்கு கஞ்சி கொண்டுவந்திருக்கேன் என் அம்மா ஆசையா வச்சு தந்தா குடிங்கோ தாத்தா ஸ்பூனில் தரேன் ஆன்னு வாயைக்காட்டுங்கோ “என்றபடி கஞ்சி கொடுக்க தயரானாள் தாத்தா கண்களிலிருந்து நீர் வழிந்தது தன்க்குப்பிற்க்காத குழந்தையா இவள் என்று நினைத்தபடி மீனு கையைப்பிடித்துக்கொண்டார் தன் மனைவியின் ஞாபகம் வந்தது “தாத்தா மருந்தெல்லாம் நான் கரெக்டா கரெக்டா உங்களுக்கு தரேன் கவல படாதீங்கோ “என்றான் மோஹன் தாத்தா குழந்தையைப்போல் அழ ஆரம்பித்தார் அவர் அழுவதைப்பார்த்து சிறுவர்கள் மனம் கலங்கினர் .தைரியமாக அவர் கட்டிலில் அமர்ந்தனர்.அவர் காலைப்பிடித்து விட்டனர்.நேரம் தவறாமல் மருந்தையும் புகட்டிவிட்டனர்.தங்கள் அன்பால் முசுட்டுத்தாத்தாவையும் மாற்றினர்
ஒரு வாரத்தில் அங்கிருந்த சூழ்நிலையே மாறியது.வரட்டு மைதானமாக இருந்த இடம் அழகான நந்தவனமாய் மாறியது.செடிகள் பூத்துக்குலுங்கின.பல வகை பறவைகள் அங்கு வந்து தங்கின.வண்டின் ரீங்காரம் காதுக்கு ரஞ்சகமாக இருந்தது . முசுடு ஹிட்லர் கதை சொல்லும் தாத்தாவாக மாறினார் அவரைச்சுற்றி பல குழந்தைகள்.அவர் எந்த நேரமும் உல்கை விட்டுப்போகலாம் அப்படிப்பட்ட வியாதிதான் அவருக்கு வந்துள்ளது குழந்தைகளுக்கு அது தெரியாது .அவர் எழுதிய உயில் வக்கீலிடம் இருக்கிறது “எனக்குப்பிறகு இந்த வீடும் மைதானமும் குழந்தைகள் விளையாடும் இடமாக ஆக வேண்டும் உள்ளே கேரம் ,செஸ், ஜிம் போன்றவைகள் நடக்க வேண்டும் வெளி மைதானத்தில் கிரிக்கெட் ,டென்னிஸ் போன்ற விளையாட்டுக்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் இது நான் என் சுயபுத்தியுடன் எழுதுகிறேன் “
இதோ அவர் ஆனந்தமாக மரணபயமின்றி கிரிக்கெட் மாட்ச்சைப்பார்க்கிறார். “சபாஷ் அப்படி அடி .இன்னொரு ரன எடு “என்று குரல் கொடுக்கிறார் குழந்தையும் தெய்வமும் கொண்டாடுமிடத்தில் என்பதைப்புரிந்து கொண்டுவிட்டார் . .
குழந்தையும் தெய்வமும் கொண்டாடுமிடத்தில் என்பதைப் புரிந்துகொண்டுவிட்டார். கதையில் தாத்தாவிற்கு கடைசியில் தான் புரிந்தது. படித்தவர்கள் இப்பொழுதே புரிந்துகொண்டால் அவருக்கும் மகிழ்ச்சி மற்றவருக்கும் மகிழ்ச்சி.
நெஞ்சைத் தொடுகின்ற அருமையான கதை. பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்.
ஷண்முகம் தாத்தாவின் மனைவியும் குழந்தையும் பறிபோனது மிகவும் வருந்தத்தக்க விஷயம். ஆனால் அந்த வெறுப்பை அவர் குழந்தைகளிடம் காட்டுவது சரியல்ல. முசுட்டுத் தாத்தாவின் மனத்தை மாற்றி அவருடைய வாழ்வில் வசந்தமுண்டாக்கிய குழந்தைகளின் மனத்தை அவர் இறுதிக்காலத்திலாவது புரிந்துகொண்டாரே. மனம் தொட்ட கதைக்குப் பாராட்டுகள்.