Advertisements
Featuredஇலக்கியம்கட்டுரைகள்

பாரதியின் வேத முகம் – 5

 

சு.கோதண்டராமன்

சாதிகள் இல்லையடி பாப்பா

இந்து சமயத்தைச் சாடுவோர் வேதத்தின் வர்ணாசிரம நெறி தான் சாதிப் பிரிவுகளை உண்டாக்கியது என்று கூறுவர். உண்மை அதுவல்ல. வேதம் சாதி பற்றி எதுவும் கூறவில்லை. வேத காலத்தில் சாதி இல்லை. வர்ணாசிரம முறை இருந்தது.

வர்ணாசிரமம் என்பதில் வர்ணம் ஆசிரமம் என்ற இரு சொற்கள் அடங்கியுள்ளன. இதில் ஆசிரமம் என்பது ஒரு தனி மனித வாழ்வின் வெவ்வேறு கால கட்டங்கைளக் குறிக்கும் – மாணவப் பருவம், இல்லறப் பருவம், காடு வாழ் பருவம், துறவுப் பருவம். இந்த ஆசிரம முறை பற்றிப் பாரதி எதுவும் கூறவில்லை. இளம் பருவத்தில் துறவு பூணும் முறை புத்த மதத்திலிருந்து இந்து மதத்திற்கு வந்து சேர்ந்த ஒரு கேடு என்று மட்டும் கூறுகிறார்.

ஆனால் வர்ண முறையைப் பாரதி பெரிதும் போற்றினார். வர்ணம் என்ற சொல் நிறம் என்ற பொருளுடையது. இது தொழில் அடிப்படையில் மனித சமூகத்தில் காணப்படும் பிரிவைக் காட்டுவது. ஒவ்வொரு சமூகத்திலும் நடைபெறும் தொழில்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம். சிலர் அறிவுத் துறையில் (ஆசிரியர், ஆராய்ச்சியாளர்) ஈடுபடுகின்றனர். சிலர் நாட்டு மக்களைக் காக்கும் பணியிலும் (அரசு அதிகாரிகள், ராணுவத்தினர்), சிலர் வாணிபத்திலும், மற்றையோர் உற்பத்தித் தொழிலிலும் உள்ளனர். ஒரு சமூகம் சீராக இயங்க இந்த நான்கு குழுக்களும் தேவை. இவற்றில் எந்த ஒன்றும் உயர்ந்தது என்றோ தாழ்ந்தது என்றோ சொல்ல முடியாது. ஒரு யந்திரத்தின் நான்கு பாகங்கள் போல, இவை நன்கு பொருந்தி சீராக அமைந்தால் தான் சமூக யந்திரம் சிக்கலின்றி இயங்கும். இதைத் தான் பாரதி குறிப்பிடுகிறார்.

வேதமறிந்தவன் பார்ப்பான் – பல

வித்தை தெரிந்தவன் பார்ப்பான்

நீதி நிலை தவறாமல் தண்ட

நேமங்கள் செய்பவன் நாய்க்கன்

 

பண்டங்கள் விற்பவன் செட்டி பிறர்

பட்டினி தீர்ப்பவன் செட்டி

தொண்டர் என்றோர் வகுப்பில்லை தொழில்

சோம்பலைப் போல் இழிவில்லை

 

நாலு வகுப்பும் இங்கொன்றே இந்த

நான்கினில் ஒன்று குறைந்தால்

வேலை தவறிச் சிதைந்தே செத்து

வீழ்ந்திடும் மானிடச் சாதி.

பகவத்கீதையில் நான்கு வர்ணங்கள் என்னால் உருவாக்கப்பட்டன என்று கண்ணன் கூறுவதைப் பாரதி குறிப்பிடுகிறார்.

நாலு குலங்கள் அமைத்தான் அதை

நாசமுறப் புரிந்தனர் மூடர்

 

பாரதியாரின் ஞானரதம் அவரது கருத்தை மேலும் தெளிவுபடுத்துகிறது.

பிறக்கும் போது மனிதர்கள் எல்லாம் மிருகங்களாகப் பிறக்கிறார்கள். பயிற்சியினாலும் குண கர்மங்களினாலும் வெவ்வேறு வர்ணத்தினராகிறார்கள். சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகச: (நான்கு வர்ணங்கள் என்னால் உருவாக்கப்பட்டன) எனப் பகவான் சொல்லியிருக்கிறார்.

      பாரத தேசத்தில் தான் வர்ணாசிரம பேதங்கள் இருப்பதாகச் சொல்வது பிழை. ஸகல தேசங்களிலும் உண்டு. ஆனால் பாரத தேசத்தில் தான் வர்ணாசிரம நெறி சீர் கெட்டுப் போயிருக்கிறது. பூர்வத்தில் பாரத தேசத்தில் வர்ணாசிரம நெறி நான் சொல்வது போலத் தான் இருந்தது. அதற்கு அந்நாட்டிலுள்ள வேதங்கள், உபநிஷத்துகள், புராணங்கள், இதிஹாஸங்கள் முதலிய ஸகல நூல்களும் ஸாக்ஷி. இப்பொழுது பாரதநாட்டைத் தவிர மற்றெல்லா நாடுகளிலும் பகவான் சொல்லிய முறை தான் நடைபெற்று வருகிறது. பாரத நாட்டில் அம்முறை தவறிவிட்டது. அது பற்றியே அந்நாட்டினர் வறுமை, நோய், அடிமைத் தனம் என்ற இழிவுகளிலே வீழ்ந்திருக்கிறார்கள்.”

இப்படி, விரிவாக வர்ண முறையை ஆதரித்த பாரதி, வர்ணங்களுக்குள்ளே உயர்வு தாழ்வில்லை, எத்தொழில் செய்தாலும் அனைவரும் சமம் என்பதைப் பல இடங்களிலும் வலியுறுத்துகிறார்.

சீலம் அறிவு தருமம் இவை

சிறந்தவர் குலத்தினில் சிறந்தவராம்

ஒற்றைக் குடும்பம் தனிலே பொருள் ஓங்க வளர்ப்பவன் தந்தை, மற்றைக் கருமங்கள் செய்தே மனை வாழ்ந்திடச் செய்பவள் அன்னை, ஏவல்கள் செய்பவர் மக்கள் என்றிருப்பது போல, சமூகத்திலும் வெவ்வேறு தொழில் செய்வோர் ஒற்றுமையாக ஒரு குடும்பம் போல வாழ வேண்டும் என்பது அவர் கருத்து.

பாரதியின் பூனைக் குட்டிகள் பாட்டு அனைவரும் அறிந்தது.

வெள்ளை நிறத்தொரு பூனை எங்கள்

வீட்டில் வளருது கண்டீர்

பிள்ளைகள் பெற்றதப் பூனை அவை

பேருக்கொரு நிறமாகும்

 

சாம்பல் நிறமொரு குட்டி கருஞ்

சாந்தின் நிறமொரு குட்டி

பாம்பின் நிறமொரு குட்டி வெள்ளைப்

பாலின் நிறமொரு குட்டி

 

எந்த நிறமிருந்தாலும் அவை

யாவும் ஒரே தரமன்றோ

இந்த நிறம் சிறிதென்றும் இஃது

ஏற்றமென்றும் சொல்லலாமோ

 

வண்ணங்கள் வேற்றுமைப்பட்டால் அதில்

மானிடர் வேற்றுமை இல்லை

 

சாதி போல் அல்லாமல் வர்ணம் மாற்றிக் கொள்ளக் கூடியது என்பதை அவர் வலியுறுத்துகிறார். அவரது ஞானரதத்தில் தர்ம லோகம் என்ற பகுதியில் கதாநாயகன் கூறுகிறான்:–

எனது பிதா க்ஷத்திரியர். நான் பிராமணன். என் மக்கள் பன்னிரண்டு பேர்களில் ஒருவனை மட்டுமே பிராமண காரியங்களுக்குத் தெரிந்தெடுத்திருக்கிறேன். மற்றவர்களை யெல்லாம் மற்ற மூன்று வர்ணங்களின் காரியங்களுக்கு அவரவர்களின் தகுதி, ஸ்வபாவம் முதலியவற்றைக் கருதி உரியவாறு பயிலுமாறு செய்திருக்கிறேன்.”

வர்ண முறையைப் போற்றிய பாரதி சாதி முறையைத் தீவிரமாக எதிர்த்தார். வர்ணம் என்பதும் சாதி என்பதும் ஒன்றல்ல என்ற உண்மையைப் பலர் அறிவதில்லை.

வர்ணம் பிறப்பை அடிப்படையாகக் கொண்டது அல்ல. ஆனால் ஜாதி என்பது பிறப்பால் வருவது. பிறப்பின் காரணமாக ஏற்படும் பிரிவுகளைப் பாரதி அடியோடு வெறுத்தார்.

                சாதிகள் இல்லையடி பாப்பா குலத்

                தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்

 

மேலவர் கீழவரென்றே வெறும்

வேடத்தில் பிறப்பினில் விதிப்பனவாம்

போலிச் சுவடியை எல்லாம் இன்று

பொசுக்கி விட்டால் எவர்க்கும் நன்மை உண்டென்பான்

சாதிப் பிரிவுகள் சொல்லி அதில்

தாழ்வென்றும் மேலென்றும் சொல்வார்

நீதிப் பிரிவுகள் செய்வார் அங்கு

நித்தமும் சண்டைகள் செய்வார்

சாதிக் கொடுமைகள் வேண்டா அன்பு

தன்னில் செழித்திடும் வையம்.

 

மானிடச் சாதி என்ற ஒன்றைத் தான் அவர் ஒப்புக் கொள்கிறார்.

                கூட்டி மானிடச் சாதியை ஒன்றெனக்

                கொண்டு வைய முழுதும் பயனுறப்

                பாட்டிலே அறம் காட்டு என்னும் ஓர் தெய்வம்.

 

……………………………………….ஆயிரம் சாதி

வகுப்பவர் வகுத்து மாய்க. நீரனைவரும்

தருமம் கடவுள் சத்தியம் சுதந்திரம்

என்பவை போற்ற எழுந்திடும் வீரச்

சாதி ஒன்றையே சார்ந்தவராவீர்.

மானிடர் அனைவரும் ஒரே சாதி என்ற நிலையிலிருந்து இன்னும் ஒரு படி மேலே போய்ப் பிற உயிரினங்களையும் உயிரற்றவைகளையும் கூட ஒரே சாதிக்குள் அடக்குகிறார்.

காக்கை குருவி எங்கள் சாதி

காடும் மலையும் எங்கள் கூட்டம்

என்று அவர் பாடும்போது அத்வைத மாமேருவின் உச்சிக்கே போய் விடுகிறார்.

கீதை முன்னுரையில் அவர், கண்ணபிரான் ஜாதி வேற்றுமையும் அறிவு வேற்றுமையும் பார்க்கக் கூடாது என்பது மட்டுமே அன்றி எல்லா உயிர்களுக்குள்ளேயும் எவ்வித வேற்றுமையும் பாராது இருத்தலே ஞானிகளுக்கு லட்சணம் என்கிறார்.

பாம்பும் நாராயணன், நரியும் நாராயணன், பார்ப்பானும் கடவுளின் ரூபம், பறையனும் கடவுளின் ரூபம். இப்படியிருக்க ஒரு ஜந்து மற்றொரு ஜந்துவை எக்காரணம் பற்றியும் தாழ்வாக நினைத்தல் அஞ்ஞானத்துக்கு லட்சணம். எல்லா வேற்றுமைகளும் நீங்கி நிற்பதே ஞானம்.

இவ்வாறு அவரது சமூகச் சமத்துவக் கொள்கையும் வேத அடிப்படையைக் கொண்டது என்பது தெரிகிறது.


 

Print Friendly, PDF & Email
Download PDF
Advertisements
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க