இலக்கியம்கவிதைகள்

நித்திலம் வேண்டினேன்!

கவிஞர்.மகேந்திரன் பன்னீர்செல்வம்

நித்தமும் நிறைமதி
புத்தம்புது ஒளிபாய்ச்ச
சத்தமின்றி வருகையில்
சித்தம் வேண்டினேன்
நித்திலம் வேண்டுமென!!

சிந்தனையில் சிரித்து
சந்தத்தில் சிந்து பாடும்
சுந்தரத் தொன்மையின்
செப்புத் தமிழினால்
நித்திலம் வேண்டுமென!

நஞ்செனும் சொற்களால்
வஞ்சகரின் பேச்சில்
மஞ்சு முகில் போல்
நெஞ்சம் கனத்து
தஞ்சம் அடைகையில்
நித்திலம் வேண்டுமென!!

நெறியுடை வாழ்வில்
குறிப்பறிந்து செயலாற்றி – நெஞ்சை
பறித்துச் செல்லும்
செறிவுநிறை மாந்தருறையுள்
அறிவுநிறை புவனத்தில்
நித்திலம் வேண்டுமென!!

நேர்மைத்திறம்  மாறா
கூர்மை அறிவுடை
தேர்வு நிலைதனில் – பிறர்
பார்வை துச்சமாக்கி
தேர்ச்சி அடைகையில்
நித்திலம் வேண்டுமென!!

அந்தம் நெருக்கையில்
மந்தப் போக்கினில்
பந்தமென்று இருந்த
சொந்தங்கள் யாவுமே
நிந்தனை செய்கையில்
நித்திலம் வேண்டுமென!!

சத்தியம் சொல்கிறேன்
நித்திலம் வேண்டினேன்!
முத்ததின் ஒளியுடை
புத்தியின் திண்மையே
நித்திலம் என்பதாம்!!

சான்றோர் சபையினில்
மாண்போர் நடுவில்!
பண்புசார் சொற்களை
அம்புபோல் பாய்த்திடவே
அகிலம் ஆளும் இறைவா – எனை
நித்திலம் ஆக்கிவிடு!!!

Print Friendly, PDF & Email
Download PDF
Share

Comments (7)

 1. Avatar

  “செப்புத் தமிழினால்
  நித்திலம் வேண்டுமென!”
  என்பதை ….
  செந்தமிழ்க் கவிதையால் …என எழுதியிருக்கலாமே …
  கவிதையில் அந்த ஓரிடத்தில் அது எதுகை வர உதவியிருக்குமே…
  கவிதை பிடித்திருந்தது… நன்றி கவிஞர்.மகேந்திரன் பன்னீர்செல்வம்

  ….. தேமொழி

 2. Avatar

  அன்புநிறை சகோதரி தேமொழி..

  தங்கள் கருத்தினை ஏற்றுக்கொள்கிறேன்…
  கவிக்கு அழகு சேர்க்கும் அற்புதமான கருத்துரை…
  என் மனமார்ந்த நன்றிகள்…

 3. Avatar

  “முத்ததின் ஒளியுடை
  புத்தியின் திண்மையே” அழகான வரிகள். வாழ்த்துக்கள் திரு.மகேந்திரன் பன்னீர் செல்வம்.

 4. Avatar

  அழகு தமிழில் நல்ல கவிதை. வாசிக்க நன்றாக இருந்தது. வாழ்த்துக்கள்.

 5. Avatar

  “சான்றோர் சபையினில்மாண்போர் நடுவில்!பண்புசார் சொற்களைஅம்புபோல் பாய்த்திடவேஅகிலம் ஆளும் இறைவா – எனைநித்திலம் ஆக்கிவிடு!!!”

  நீங்கள் வேண்டியது நித்திலம்! அதோடு சேர்ந்து வல்லமையும் கிடைத்திருக்கிறது. 🙂 

  நீங்கள் கூறியுள்ளது போல் வல்லமை தளமும் சான்றோர்  சபையே! எழுத்துலக  ஜாம்பவான்கள், துரோணர்கள் பலரும் எழுதி வரும் ஆரோக்கியமான இலக்கிய தளமான வல்லமையில் என்னுடைய படைப்பு முதலில் வெளிவந்த போது இருந்த அதே மகிழ்ச்சி! அதை விடவும் அதிகமாய்!!

  வாழ்த்துகள் மகி! மகிழ்ச்சியாக இருக்கிறது!

  தொடரட்டும் உம் பணி – வல்லமையில் செம்மையாக!

 6. Avatar

  நித்திலம் வேண்டுமென்று நிபந்தனை போட்டதாலே
  நித்தமோர் நித்திலமாய் உதிர்ந்திட – செந்தமிழாள்
  நிறைவுகள் தருவாள் மன‌நிம்மதி காணச்செயவாள்
  நினைவுகள் இனிக்குமாறு இன்னும் கவிவரட்டும்

 7. Avatar

  அன்புநிறை நண்பர் தனுசு…..
  வாழ்த்துக்கும் கருத்துக்கும் மனமார்ந்த நன்றிகள்…

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க