Featuredஇலக்கியம்கட்டுரைகள்

சிறுகதைகள் இலக்கியம்

 

பவள சங்கரி

இலக்கியங்கள் என்பது அந்தந்தக் காலங்களின் கலாச்சாரங்கள், பண்பாடு, நடைமுறை வாழ்க்கை, இன்னல்கள் என அனைத்தையும் துல்லியமாகப் பிரதிபலிக்கும் கண்ணாடி. நச்சென்று வார்த்தைகளால், பளிச்சென்று தம் கருத்தை முன் வைக்கும் கட்டுரைகள் ஒரு விதம் என்றால், அலங்கார வார்த்தைகள் என்ற ஒப்பனையுடன் அழகாகத் தாம் கண்டவற்றை, கேட்டவற்றை, சற்றே கற்பனை கலந்து சுவையான பண்டமாக வழங்கக்கூடியது சிறுகதை. ஆரம்பக் காலங்களில் சிறுகதைகளுக்கு பரவலான அங்கீகாரம் இருந்திருக்கவில்லை. ஆங்கில இலக்கியங்களுக்கு கிடைத்த வரவேற்பு மற்ற மொழி இலக்கியங்களுக்கு கிடைப்பது அரிதாக இருந்திருக்கிறது. ஷேக்ஸ்பியர் படைப்புகள் குறித்து அறிந்தவர்கள் மட்டுமே பெரும்பாலும் இலக்கியவாதிகளாக கருதப்பட்ட காலமும் இருந்திருக்கிறது. மேலை நாட்டவர்களின் பிரவேசத்தினால் நமக்குக் கிடைத்த புதிய இலக்கிய வடிவமே சிறுகதை என்பதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டியுள்ளது.

இராமாயணம், மகாபாரதம், சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற மாபெரும் காவியங்களில் பல சிறுகதைகள் கிளைக்கதைகளாக வேரூன்றியிருக்கும். நாயன்மார்களின் வரலாறுகள் இன்றளவிலும் இறை நம்பிக்கையை ஊக்குவிக்கக்கூடிய திறன் பெற்றவையாகவே விளங்குவது சிறப்பு. மாபெருங்காவியங்களான இவைகளின் தாக்கம் இன்றைய வாழ்வியலிலும் காண முடிகிறது.

சிறுகதைகளின் முன்னோடி என்று எடுத்துக்கொண்டால் வீரமாமுனிவரைச் சொல்லலாம் எனினும், 18ம் நூற்றாண்டுகளில், தாண்டவராய முதலியார் என்பவரால் வடிக்கப்பட்ட சுவையான சிறுகதைகள் இன்றளவும் குழந்தைகளை உற்சாகப்படுத்துகிறது என்றால் அது மிகையில்லை. பாரதியாரின் சிறுகதைகள் 20ம் நூற்றாண்டுகளின் ஆரம்பத்தில் எழுதப்பட்டது. புதுமைப்பித்தன், கு.ப ராஜகோபாலன், வ.வே.சு. போன்றோரின் சிறுகதைகளும் பிரபலமாக இருந்தது.

1809ம் ஆண்டில் (ஜனவரி 19) பிறந்த அமெரிக்க கவிஞர், எழுத்தாளர், திறனாய்வாளர் மற்றும் விமர்சகர் ஆலன்போவின் (Allan Poe) திகில் கதைகள் மிகப்பிரபலமானது. உலகம் முழுவதையும் தம்முடைய படைப்புத் திறனால் கட்டுக்குள் வைத்திருந்தார். ‘துப்பறியும் கதைகளின் தந்தை’ என்று பெரும் பெயரும் பெற்றிருந்தார்.அவர் சிறுகதைகளின் இலக்கணம் பற்றிக் கூறும்போது,அரை மணி முதல் ஒன்று அல்லது ஒன்றரை மணிக்குள் படித்து முடிக்கக்கூடிய உரைநடையாக இருக்க வேண்டும் என்கிறார்.

ஹட்சன் என்ற பிரபல எழுத்தாளர், ஒரே மூச்சில் படித்து முடிக்கக்கூடியது நல்ல சிறுகதை என்கிறார். ஒரு சிறு அனுபவமோ, வாழ்க்கையில் நடக்கும் சுவையான நிகழ்ச்சிகளோ, கிடைத்த வெற்றிகள், அதனால் ஏற்படும் சிறு சிக்கல்கள், கவர்ச்சியான காட்சிக்ள் இப்படி எதுவும் நல்ல சிறுகதையின் அடிப்படையாகலாம் என்கிறார் மு. வரதராசனார். கல்கி காலத்தில் சிறுகதைகள் தனிப்பொலிவுடன் மிளிர்ந்தது. மணிக்கொடி போன்ற அச்சிதழ்களும் சிறுகதை வளர்ச்சிக்கான பெரும் பணியாற்றியுள்ளது. ரா. கி. ரங்கராஜன் அவர்களின் ‘எப்படிக் கதை எழுதுவது’ என்ற நூலும், அகிலனின் ‘கதைக்கலை’ என்ற நூலும், மகரம் என்பவரின் தொகுப்பான, ‘எழுதுவது எப்படி’ போன்ற நூல்கள் சிறுகதை எழுதும் கலையை பயிற்றுவித்திருக்கின்றது. வானொலியிலும் சிறுகதைகள் வாசிக்கப்பட்டு வருகின்றன. அமுதசுரபி, கல்கி போன்ற இதழ்கள் சிறுகதைப் போட்டிகள் நடத்தி நல்ல மாற்றங்களையும், முன்னேற்றங்களையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

நல்ல சிறுகதைகள் என்பது, வாசித்து முடித்தவுடன், சிந்தனைக்கு தூண்டுகோலாக அமைய வேண்டும் என்கிறார் புதுமைப்பித்தன்.

“கதையை வாசிப்பது, நமது சிந்தனையின் சலனத்தை ஊக்குவிப்பதற்கு ஒரு தூண்டுகோல். கதை முடிவடையும்போது அதைப்பற்றிய சிந்தனை முடிவடைந்து விடாது. இப்படிப்பட்ட கதைகள் முடிந்த பிறகுதான் ஆரம்பமாகின்றன என்று சொன்னால் விசித்திரவாதமாகத் தோன்றும். ஆனால் அதுதான் உண்மை” என்பது புதுமைப்பித்தனின் வாதம்.

மனக்குகை ஓவியங்கள், துன்பக்கேணி, மனித யந்திரம் போன்ற புதுமைப்பித்தனின் பல சிறுகதைகள் இது போன்று சிந்தனைக்குத் தூண்டுகோலாக இருப்பதைக் காணலாம்.

நாட்டுப்புறக் கதைகள் மிகச் சுவையான கதைக்களங்கள் கொண்டவை. இன்று அவைகள் பெரும்பாலும் மறைந்து கொண்டுவருகின்றன எனலாம். விக்கிரமாதித்தன் கதைத் தொகுப்புகளும், பாட்டிமார்கள் சொன்ன பழங்கதைகளும் குழந்தைகளுக்கும் படிப்பினை ஏற்படுத்தக் கூடியவைகள்.

சமகால எழுத்தாளர்களான, கல்கி கிருஷ்ணமூர்த்தி, தீபம் நா. பார்த்தசாரதி, புதுமைப்பித்தன் மு.வரதராசனார், ந.பிச்சமூர்த்தி, லா.ச.ராமாமிருதம், ராஜம் கிருஷ்ணன், ரமணிசந்திரன் , சு. சமுத்திரம், சாவி பனசை கண்ணபிரான், போன்றோர்கள் என்றும் மனதில் நிற்பவர்கள்.

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன், பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம், கள்வனின் காதலி, பொய்மான் கரடு, மோகினித் தீவு போன்ற புதினங்கள் இன்றளவிலும் இளைஞர்களையும் கவர்ந்திழுக்கக்கூடியவைகளாவே உள்ளது குறிப்பிடத்தக்கது. 75க்கும் மேற்பட்ட சுவையான சிறுகதைகளும் எழுதியுள்ளார்.

சாகித்ய அகாதமி விருது பெற்றுள்ள தீபம். நா. பார்த்தசாரதி அவர்களின் பிரபலமான புதினங்களான, பொன் விலங்கு மற்றும் குறிஞ்சி மலர், தொலைக்காட்சித் தொடர்களாக வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவருடைய கதை நாயகர்கள், சமூகப் பிரச்சனைகளுக்குத் தீர்வு சொல்லும் போராளிகளாகவே இருப்பார்கள். முறையாகத் தமிழ் பயின்றுள்ள இவரின் பயணக் கட்டுரைகளும் சுவாரசியமானது. பிரான்சு, செருமனி, இரசியா, இத்தாலி, எகிப்து, குவைத் போன்ற நாடுகளுக்குச் சென்று தன் பயண அனுபவங்களை பலருக்கும் பயன்படும் வகையில் எழுதியுள்ளார்.

நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளும், ஐம்பதிற்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்புக் கதைகளும் எழுதியுள்ளார். அகல்யை என்ற சிறுகதையில், கௌதமர் என்ற பாத்திரத்தின் அங்க இலட்சணங்களை விளக்கிய விதம்  வித்தியாசமாக இருக்கும்.

“ அவருக்கு வயது முப்பது. கறுத்து அடர்ந்த தாடி, அகன்று பிரகாசமான ஒளிவிடும் கண்கள், மெல்லிய உதடு, பரந்து விரிந்து திரண்ட மார்பு, ஒடுங்கிய வயிறு, எல்லாவற்றிலும் இயற்கையின் கனிவு பொங்கியது. மிருக அழகன்று – ஆளை மயக்காது, வசீகரிக்கும். அந்தக் கண்களில், அந்த உதடுகளில் ஒரு தெய்வீக ஒளி – தேஜஸ் – உள்ளத்தின் சாந்தியை எடுத்துக் காட்டிற்று.”

அதைவிட அவருடைய மனைவியை வர்ணிக்கும் போது அந்தக்கால பண்பாடும், கலாச்சாரமும் தெளிவாக விளங்கும்படி விவரித்திருப்பார்.

“அவர் மனைவி – அவள் தான் அகல்யை. அவர் ஆணுக்கு இலட்சியம் என்றால், இவள் பெண் குலத்திற்கு வெற்றி. மருண்ட பார்வை, அவரைக் காணுந்தோறும் காதல் பொங்கும் கண்கள். அவரைத் தனது உள்ளத்தில் மட்டும் வைத்துவிடவில்லை. அவளது ஒவ்வொரு செயலும் அவரது இன்பத்திற்காகவே. அதிலே அவளுக்கு ஓர் இன்பம்.”

துளியும் விரசமில்லாமல் அத்துனை ஆழ்ந்த காதல் கதையை, அழகாக வடித்த பாங்கு ஆச்சரியமூட்டுபவை.

மு. வரதராசனார் அவர்களுடைய ’அகல்விளக்கு’ என்ற புதினத்தின் அறிமுக உரையில்

     “என்ன உலகம் இது? பெண்கள் இருவர் பழகினால், உடம்பைக் கடந்து உள்ளத்தின் உறவு கொண்டு பழகவில்லையா? … ஆண்கள் இருவர் பழகும்போது அப்படி உள்ளத்தால் பழகவில்லையா? ஓர் ஆணும் பெண்ணும் பழகும் போது மட்டும் உள்ளம் இல்லையா? ஏன் இந்தத் தடுமாற்றம், ஏமாற்றம் எல்லாம்?” …. இமாவதியின் ஆழ்ந்த உள்ளத்திலிருந்து எழுந்த இந்தக் கேள்வியை ஒவ்வோர் ஆணும் பெண்ணும் எண்ணி எண்ணி விடை காண முடியுமானால், சமுதாயம் பண்பாடு மிக்கதாய் எளிதில் முன்னேற்றம் எய்தலாம்.

என்ற கா.அ.ச. ரகுநாயகன் (திருப்பத்தூர் வ.ஆ) அவர்களின் கருத்து இன்றளவிலும் ஆழ்ந்து நோக்கத்தக்கதொன்றாகும்.

அந்தக் காலத்தில் மு. வ அவர்களின் படைப்புகளை பலர் தம் வாழ்க்கைக்கு வழிகாட்டியாகவே பயன்படுத்தியுள்ளனர். அத்தகைய முற்போக்குச் சிந்தனைகள் கொண்டவைகள் அவர்தம் படைப்புகள்.

லா. சா. ராமாமிர்தம் அவர்கள், 200க்கும் மேற்பட்ட சிறுகதைகளும், 6 நாவல்களும் எழுதியுள்ளவர். 1989ம் ஆண்டில் சாகித்ய அகாதெமி விருது பெற்றவர்.

திருமதி ராஜம் கிருஷ்ணன் தம் பல கட்டுரைகள் மட்டும் கதைகள் மூலம் பெண் விடுதைலைக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். ஒரு புதினத்தை எழுதுவதற்கு முன்பு, சம்பந்தப்பட்ட களங்களில் நேரிடையாகத் தங்கி ஆய்வு மேற்கொண்டு பின்னரே அதுபற்றி எழுதுவதே இவருடைய தனிச்சிறப்பு. ‘கரிப்பு மண்கள்’ என்ற இவருடைய புதினம், தூத்துக்குடியில் வாழும் மீனவர்களுடன் தங்கி, அவர்களுடைய வாழ்க்கை முறைகளையும், நிலைகளையும் உணர்ந்து எழுதிய ஒன்றாகும். அதேபோல் ‘முள்ளும் மலரும்’ என்ற புதினத்திற்காகத் தம் கணவருடன் சம்பல் பள்ளத்தாக்கிற்குச் சென்று கொள்ளைக்கூட்டத் தலைவன் டாகுமான்சி என்பவரையும், மான்சிங் என்ற 400க்கும் மேற்பட்ட கொலைகள் செய்தவரையும் சந்தித்து நான்கு மணிநேரம் உரையாடி, பின்னர் அந்தப் புதினத்தை எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது. ’வேருக்கு நீர்’ என்ற புதினத்திற்காக 1973ம் ஆண்டின் சாகித்ய அகாதமி விருதும் பெற்றுள்ளார்.

’அமுதமாகி வருக’ என்னும் புதினம் பைகாரா நீர் மின் திட்டம் செயல்பாடுகள் குறித்த கருப்பொருளுடன், கள ஆய்வு மேற்கொண்டு எழுதப்பட்டது என்பது சிறப்பு. 1952ல் அகில உலகச் சிறுகதைப் போட்டியில் தமிழ்ச் சிறுகதைக்காக இவருடைய ‘ஊசியும் உணர்வும்’ என்ற சிறுகதை தேர்ந்தெடுக்கப்படது குறிப்பிடத்தக்கது.

இதுபோல சிறுகதைகள் மற்றும் நாவல்கள் எழுதுவதில் பெரும் புரட்சி ஏற்படுத்திய படைப்பாளிகள் பலர்.சுஜாதா அவர்களின் பல்வேறு விதமான படைப்புகளில், ‘மீண்டும் ஜினோ’ என்ற புதினம் என்றும் மனதை விட்டு அகலாதவை. இவர்களின் அனைத்து படைப்புகளையும் படிக்க வேண்டும் என்ற ஆவல் பூர்த்தியாக இறைவனை இறைஞ்சுகிறேன். ஒரு சிலவற்றையே இதுவரை வாசித்திருக்கிறேன்.

மக்களின் நடைமுறை வாழ்க்கையும், நடை, உடை மற்றும் பாவனைகளும் காலத்திற்கு காலம் மாறிக்கொண்டே இருப்பதே இலக்கியங்களில் மாற்றங்கள் ஏற்படக் காரணமாகிறது.  இந்த மாற்றங்களே சிறுகதைகளின் வளர்ச்சிக்கு வித்தாகிறது என்பதும் நிதர்சனம்.சமீபத்தில் இந்து நாளிதழ் மும்பை வாழ்க்கையைச் சித்தரிக்கும் இரண்டு கதைகளுடன், மேலும் மூன்று சிறந்த கதைகளையும் தேர்ந்தெடுத்து பரிசு வழங்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

தம்மைச் சுற்றியுள்ள மனிதர்களை நேசிக்கவும், அவர்தம் துன்பங்களை கருணைக் கண்களுடன் காணக் கூடியவர்களும், மற்றும் மக்கள் மனதில் தம் எழுத்துக்கள் நீங்காத இடம் பிடிக்க வேண்டும் என்ற வேட்கை உடையவர்களே சிறந்த படைப்புகளை அளிக்க வல்லவர்கள். மிகைப்படுத்தப்பட்ட கற்பனைக் காட்சிகள் தற்காலங்களில் அதிகமாக விரும்பப்படுவதில்லை. யதார்த்தமான சூழல்களில், மிக யதார்த்தமாக, சுருக்கமாக எழுதப்படும் சிறுகதைகளே பெரிதும் வரவேற்கப்படுகிறது. குறிப்பாக வட்டார வழக்குகளில்  எழுதப்படும் சிறுகதைகள் வாசகர்களை பெரிதும் கவருகிறது. தேசியச் சிந்தனைகள்,  சமுதாய சீர்திருத்தம், பெண்ணியம், தலித்தியம், கலாசாரம், பண்பாடு, மனிதத் தத்துவம், உளவியல், நவீனத்துவம், பின் நவீனத்துவம் என பல வடிவங்களில் சிறுகதைகள் எழுதப்படுகிறது.

அச்சிதழ்கள் பெரும்பாலும் ஒன்று அல்லது இரண்டு சிறுகதைகளே வெளியிடுவதால் சிறுகதை எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளை வெளிக்கொண்டு வருவதில் பெரும் சிரமத்திற்குள்ளாகிறார்கள். அந்த வகையில் பலவிதமான படைப்புகளை வெளியிடும் பல இணைய இதழ்கள் மற்றும் பல்வேறு இணைய தளங்கள் மூலமாக இன்றைய இலக்கியம் சிறந்த முறையில் வளர்ச்சியடைய வாய்ப்பாக அமைகிறது என்பதிலும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. நல்ல எண்ணங்களை ஊக்குவிக்கக்கூடியதான படைப்புகள் மட்டுமே காலத்திற்கும் அழியாமல் நிலைத்து நிற்கும் என்பதும் சத்தியம்.

படத்திற்கு நன்றி:

http://en.wikipedia.org/wiki/Edgar_Allan_Poe

நன்றி : இன் & அவுட் சென்னை இதழில் வெளியானது.

 

 

Print Friendly, PDF & Email
Download PDF
Share

Comments (10)

 1. ஒவ்வொரு வார்த்தையும் அழுத்தமாக மனதில் பதிந்தது. சமகால எழுத்தாளர்கள் குறித்துத் தாங்கள் கூறிய வார்த்தைகள் மேன் மேலும் படிக்கத் தூண்டுபவையாக அமைந்தன. அற்புதமான எழுத்தாளர்களுள் ஒருவரான, திரு. அகிலன் அவர்களின் ‘வேங்கையின் மைந்தன்’ அந்த வரிசையில் சேர்க்கப்பட வேண்டியதென நினைக்கிறேன். திரு.சுஜாதா அவர்கள், எழுத்துத் துறையில் தொடாத தளமில்லை. ‘மீண்டும் ஜீனோ’வின் முதற்பாகமான,’என் இனிய இயந்திரா’ விஞ்ஞான கதைகளின் முன்னோடி என்றே தோன்றும் எனக்கு. அற்புதமான கட்டுரை படிக்கத் தந்தமைக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

 2. அன்பு பவளா  நல்ல  கட்டுரை   கதைகளில் நானும் திருமதி ராஜம் கிருஷணன் அவர்களின் கதைகளை விரும்பி வாசிப்பேன்  கதைகள் எப்படி எழுத வேண்டும் என்றும்  இந்தக் கட்டுரை மூலம் எனக்கு தெரிய வந்தது    

 3. சிறு கதைகள் பற்றிய கட்டுரையில், புகழ் பெற்றவர்களை பட்டியலிட்டதோடு புகழ் பெற காரணமாக இருந்தது எந்த வகையான நடை, கதை கொடுக்கவேண்டிய பாதிப்பு, ஆகியவைகளையும் சொல்லி படிப்பவரையும் கதை எழுத தூடுகிறது, இந்த கட்டுரை.

 4. நல்லதொரு கட்டுரையை படைத்தமைக்கும்   பகிர்ந்தமைக்கும் நன்றி ஆசிரியர் பவள சங்கரி அவர்களுக்கு நன்றி! 

  கல்கி, புதுமைப்பித்தன், லா.ச.ரா வரிசையில் எனக்கு தி.ஜா, அசோகமித்திரன், சுஜாதா ஆகியோரின் கதைகள் மிகவும் பிடிக்கும். 

  சிறுவயதில் நான் படிக்க நேர்ந்த, கல்கியின் ‘கேதாரியின் தாயார்’ என்கிற கதைதான் எனக்கு சிறுகதை படிக்கும் ஆர்வத்தையே ஏற்படுத்தியது. தி.ஜா-வின் சிலிர்ப்பு, லா.ச.ரா-வின் பச்சை கனவு / கண்ணன், ஓ.ஹென்றியின் ‘The Last Leaf’ என்று பட்டியல் நீளும்………………

  சமீபத்தில், அ.முத்துலிங்கத்தின் ஆயுள் என்கிற சிறுகதை படித்தேன். எதை நோக்கியோ பயணித்துக் கொண்டிருந்த கதையின் முடிவில் இதுபோன்று ‘நறுக்கென்று’ கூட ஒரு செய்தியை சொல்லமுடியுமோ என்று வியந்துபோனேன்.  

  LEGENDS! UNSUNG HEROES! THANKS FOR REMEMBERING THE ALL! (For that matter, I never forget them.)

 5. சிறுகதைகள் சிறந்த இலக்கியங்களாகப் போற்றிக் கொண்டாடப்பட வேண்டியவையே. புதுமைப்பித்தன், அமரர் கல்கி, ஜெயகாந்தன், ஜெகசிற்பியன், தி.ஜா, கு.ப.ரா என்று சிறுகதை எழுத்தாளர்களின் பட்டியல் மிக நீளமானது.

  அப்போது சமுதாயப் பிரச்சனைகளையும், குடும்ப உறவுகளில் இருக்கும் சிக்கல்கள் போன்றவற்றையும் அதிகம் பேசிய சிறுகதைகள் இன்று பெரிய அளவில் மாற்றம் கண்டு வருகின்றன. அன்றாட அலுவல்களும், சாதாரண நிகழ்ச்சிகளும்கூட இப்போது சிறுகதைகளாக எழுதப்பட்டு வருகின்றன.
  ஆனால் கால் நிமிடக் கதைகள், ஒரு பக்கக் கதைகள் போன்றவற்றையும் சிறுகதைகள் பட்டியலில் இப்போதைய வெகுஜனப் பத்திரிகைகள் சேர்த்துவிட்டன. இப்போக்கு சிறுகதை வளர்ச்சிக்குத் துணைசெய்யுமா என்ற ஐயம் எழத்தான் செய்கிறது.

  ஆயினும் சென்ற நூற்றாண்டில் அமர எழுத்தாளர்களால் எழுதப்பட்ட சிறுகதைகள் காவியங்களாக நம் மனத்தில் நிலைத்துவிட்டன என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. சிறுகதைகள் குறித்த சிறந்த கட்டுரையைப் படைத்து தலைசிறந்த எழுத்தாளர்களின் வரிகளையும் அதில் அழகுறச் சேர்த்துள்ள ஆசிரியர் பவள சங்கரிக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள் மற்றும் நன்றிகள்!!

  — மேகலா

 6. அன்பின் திருமிகு பார்வதி இராமச்சந்திரன்,

  தங்களுடைய வாசிப்பிற்கும் கருத்துரைக்கும் நன்றி. உண்மைதான் இங்கு சொல்ல விட்டுப்போன, படித்து உணர வேண்டிய, பாடமாய் கொள்ள வேண்டிய படைப்புகளும், படைப்பாளிகளும் ஏராளம்…அவர்கள் அனைவரையும் நினைவு கொண்டால் நாமும் நம் வல்லமையை வளர்த்துக் கொள்ளலாம்.

  அன்புடன்
  பவள சங்கரி

 7. அன்பின் விசாலம் அம்மா,

  தங்கள் வாசிப்பிற்கும், கருத்துரைக்கும் நன்றி.

  அன்புடன்
  பவளா

 8. அன்பின் திரு தனுசு,

  நன்றியும், வாழ்த்துக்களும். நிறைய எழுதுங்கள்.

  அன்புடன்
  பவள சங்கரி

 9. அன்பின் திரு மாதவன் இளங்கோ,

  நல்ல பகிர்வு. நானும் அந்தக் கதைகளை வாசிக்க முயற்சிக்கிறேன். நன்றியும், வாழ்த்துக்களும்.

  அன்புடன்
  பவள சங்கரி

 10. அன்பின் மேகலா இராமமூர்த்தி,

  தங்களுடைய வாசிப்பிற்கும் கருத்துரைக்கும் நன்றி. ஆம் குட்டிக்கதைகள் அப்போதைக்கு படிப்பதற்கு சுவையாகவும், எளிமையாகவும் இருந்தாலும், மனதில் நிலைத்து நிற்பது சந்தேகமே.. இன்றைய அவசர யுகத்தில் அதற்கு பெரும் வரவேற்பு இருப்பதும் உண்மைதான்…

  அன்புடன்
  பவள சங்கரி

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க