ககனமார்க்கம்
பழமைபேசி
நீங்கள் நினைப்பது போல அதற்கும் எனக்கும் எந்த வாய்க்காவரப்பும் கிடையாது. அதனோடு தகராறு செய்வதால் எனக்கு என்ன கிடைத்து விடப்போகிறது? ஒன்றும் கிடைக்கப் போவதில்லை.
ஞாயிற்றுக் கிழமை மாலை ஆகி விட்டால் போதும். நான் எதைச் செய்தாலும் இதைத்தான் காரணம் சொல்வார் என் மனைவி. விடிந்தால் திங்கட்கிழமை என்பதால் நீங்கள் எங்கள் மீது எரிச்சலைக் கொட்டுகிறீர்கள் என்று. உண்மையிலேயே அந்தத் திங்கட்கிழமையோடு எனக்கு எந்தத் தகராறும் இல்லை. வீட்டில் இருப்பவர்கள் மீதும் எந்தவிதமான எரிச்சலும் எனக்கு இல்லை.
ஆனால் என்ன? அந்தப் பாடாவதி திங்கட்கிழமையன்று, நான்தான் வைகறையையே எழுப்ப வேண்டி இருக்கிறது. ஐந்து மணிக்கு வீட்டை விட்டுக் கிளம்பி முதல் விமானத்தைப் பிடித்து ககனமேற வேண்டும். மேலாண்மைக் கலந்துரையாடலில் இருக்கிற முக்காலே மூணு வீச மணி நேரமும், தான் மட்டுமே பேசிச் சாவடிக்க வேண்டுமென்பதில் குறியாய் இருப்பான் டேவிட் பங்கி. இதுவும் அந்தக் கடூரமான திங்கட்கிழமையில்தான் நடக்கிறது. அதைத் தொடர்ந்துதான் செவ்வாய், புதன், வியாழன் போன்ற நாட்களும் வந்து தொலைக்கிறது. இந்தத் திங்கட்கிழமைக்கு என் போன்றவர்கள் மீது ஏன் இத்தனை வன்மம்? இதை உங்களிடம் சொல்லாமல் நான் வேறு யாரிடம் சொல்ல முடியும்??
திங்கட்கிழமைத் திருட்டு யாமத்தில் எழுவதால் என்னைத் திருடன் என்று நானிருக்கும் காலியர்வில்லில் எத்தனை பேர் சொல்லிக் கொண்டு திரிகிறார்களோ தெரியவில்லை. காலை நான்கு மணிக்கு நாய்கள் மட்டுமல்ல, எந்நேரமும் கூகுள் கூட்டலில் இருக்கும் எங்களுடைய பாலா அண்ணன் கூட உறக்கம் கொள்ளும் நேரம். அப்படிப்பட்ட உறக்கத்தையே என்னிடமிருந்து திருடிவிடும் திங்கட்கிழமை திருட்டுத் திங்கட்கிழமைதான். மற்றபடி எனக்கும் திங்கட்கிழமைக்கும் வாய்க்காவரப்பெல்லாம் ஒன்றும் இல்லை.
காலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்து கூகுள் பிளஸ்ஸில் யார் மண்டை உருளுகிறது, ஃபேசுபுக்கில் எந்தப் பெண்ணின் படத்துக்கு எத்தனை லைக் விழுந்திருக்கிறது, டுவிட்டரில் எவன் எவனை வம்புக்கு இழுத்திருக்கிறான் போன்றவற்றைப் பார்த்த கையோடு மின்னஞ்சல் மேய்ச்சல் செய்தானது. இழுத்துப் பிடித்துச் சமாளிக்க முடியவில்லை. குளிர்காலம் என்பதால் கூடுதலான அவசரம்.
வண்டிக்கு அச்சு முறிந்து விட்டால் என்ன செய்வதென்று சேமஅச்சு ஒன்றினைக் கூடவே எடுத்துச் செல்வார்களாம் பண்டைக் காலத்தில். இப்போதும் ஸ்டெப்னி டயர்கள் எடுத்துச் சொல்வது வழக்கத்தில்தான் உள்ளது. அதைப் போல கூடுதலாக ஒரு சேமச்சிறுநீர் வைப்பறை ஒன்றை மனிதனுக்குள்ளும் வைத்திருக்கலாம். முட்டுகிற நேரத்தில் பாவிப்பதற்காய். அவசரத்தில் கதவை மூட மறந்து விட்டேன். குழந்தைகள் யாரும் எழுந்து அலறிவிடக் கூடாது. என்ன எழவு இது? எங்கள் அமுச்சி வீட்டுப் பெரியெருமை பெய்வதெல்லாம் நினைவுக்கு வருகிறது. இனிமேல் ஞாயிற்றுக்கிழமை இரவில் பீர் குடிக்கவே கூடாது.
விமானம் சரியான நேரத்துக்குக் கிளம்புமா என்பதைச் சரி பார்த்தாகிவிட்டது. குழந்தைகளைப் பார்த்தால் பிரிவின் ஏக்கத்தில் அழுது விட்டால் என்ன செய்வது? பல் துலக்கி, தும்பிக் குளியல் முடித்து, உடுப்புக்கு மேல் உடுப்பு போட்டு வந்தாயிற்று. என்னாவொரு இன்பமடா? அமெரிக்காவின் காற்று நூற்றுக்கு நூறு வாங்கிவிடும். வசந்தத்தின் குழந்தைகள் செரிமரங்கள். செம்பூக்கள் பூத்து மணப்பெண் போலக் குலுங்கி நிற்கின்றன.
மனையாளின் அணுக்கச் சூட்டினை வீட்டிலேயே வைத்து விட்டு பெருந்தெருவில் இந்நேரத்துக்கு ஏன் இத்தனை பேர் கார்களில் போய்க் கொண்டிருக்கிறார்கள்? என்னைப் போல அவர்களும் திங்கட்கிழமையால் சபிக்கப்பட்டவர்களோ? திருடர்கள் வேறு ஆங்காங்கே கன்னக்கோல் வைக்கிறார்களாம். இதைப் படுவாப் பயல் டேவிட் பங்கியிடம் சொன்னால், முந்தின நாள் இரவே வந்துவிடு என்று சொல்லி, ஞாயிற்றுக் கிழமைக்கும் எனக்குமிடையில் சதி செய்கிறான்.
மெம்ஃபிசு விமான நிலையப் பணிப் பெண்கள் எறும்புகளின் தாவளத்தில் இருந்து வருகிறார்களா எனக் கேட்டறிய வேண்டும். இந்தக் குளிர்காலத்திலும் விடியலுக்கு முந்தைய யாமத்தில் என்ன சுறுசுறுப்புக் காண்பிக்கிறார்கள். முகமலர்ச்சிக்கென்றே தனிச்சம்பளம் தருவார்களாய் இருக்கும். முசுடுகளைப் பார்த்து விட்டுப் போய் விமானம் ஏறினால் நன்றாக இராது என்பது அவர்களுக்கும் தெரிந்திருக்கிறது.
பரிசோதக ஆண்களுக்கு மட்டும் காண்டாமிருக வயிறு. பார்க்கப் பாவமாக இருக்கிறது. உள்ளே காற்றை அடைத்து வைத்திருக்கிறார்கள் போலும். அதனால்தான் நாள் முழுதும் அதைச் சுமந்தபடியே நின்று கொண்டிருக்க முடிகிறது அவர்களால். உள்ளே இருக்கும் காற்றைப் பிடுங்கி விட்டால் என்ன? கைவசம் குண்டூசி எதுவும் இல்லை. வேட்டியும் போச்சு. அதையிழுத்துப் புடிக்கிற அரைஞாண் கயிறும் போச்சு. அரைஞாண் கயிறு கட்டி இருந்தாலாவது அதிலொரு காப்பூசி தொங்கும். ஆனால் வீட்டில் நிறையக் காப்பூசி இருக்கின்றன. எதற்கு இவ்வளவு காப்பூசிகள் வைத்திருக்கிறாயெனக் கேட்டால், காப்பூசியென்றால் என்ன என்ற கேள்வி நம்மை அறைகிறது. பின்னூசி என்றதும், ஓ அதுவா? தமிழ்ல சொல்ல வேண்டியதுதானே எனும் ஏகடியம் வேறு. பின்னும் ஊசியும் கலந்து நடுசென்ட்டர் போல ஆகிவிட்டது.
பரிசோதனையெல்லாம் முடிந்தது. இன்னுமந்த பேய்ப்பறவையின் வயிற்றுக்குள் போவதற்கு அரை மணி நேரம் இருக்கிறது. பெரிதாக எது இருந்தாலும் முன்னொட்டாக பேய் வரும். வலுவான காற்றுக்கு பேய்க் காற்று. பெரும்புடலைக்கு பேய்ப்புடலை. அதென்றா அமெரிக்காக்காரிகளுக்கு மட்டும் பேய்மொலைகளா இருக்குதூ என்பான் திர்றான் என்கிற திருமூர்த்தி. விகாரமாக விரிந்திருக்கும் பெரிய அளவிலான கிணறுக்கு பேய்க்கிணறு. அது வெள்ளந்தி மக்களின் மொழி.
ஸ்டார்பாக்சு காப்பி குடிக்காமல் நாளைத் துவக்கினால் திருடிக் கொண்டு வந்த ஆட்டை புளியமரத்தடியில் எவனோ அடித்துப் புடிங்கிக் கொண்டு போய்விட்டதைப் போல மனசு சூம்பிக்கிடக்கும். அமெரிக்காவில் பலவிதமான அடிமைகள் உண்டு. அதில் வெகுமுக்கியமானது ஸ்டார்பாக்சு அடிமைகள். எனக்கு முன்னால் ஏற்கனவே ஆறேழு அடிமைகள் வந்து நின்று கொண்டிருக்கிறார்கள்.
கடலைபொரி தின்று கொண்டு கூரைக்கொட்டாயில் சிலுக்கு டான்ஸும், ஈசல்பொரி தின்று கொண்டு அடைமழையை வேடிக்கை பார்ப்பதும் போலத்தான் ஸ்டார்பாக்சு காப்பியோடு அலைபேசியில் வலைமேய்வதும். இதுக்கு இது என்று எப்படியோ அமைந்துவிடுகின்றன. அவற்றால் வாழ்க்கையும் சுபீட்சமடைகின்றது.
ககனமேறி விட்டால் வண்ணதாசனின் கவிதைகளையும், நாஞ்சில நாடனின் சிறுகதைகளையும் புசித்துக் கொண்டே போகலாம். வண்ணதாசனின் கவிதைகள் பதநீர், நாஞ்சில் நாடன் சிறுகதைகள் பனங்கற்கண்டு. இரண்டையும் மாறி மாறி உட்கொண்டால் விமான நெடியின் வீச்சில் இருந்து விமோசனம் கிட்டும்.
ஒவ்வொருவராக உள்ளே நுழைந்து, தட்டுமுட்டு சாமான்களை கிடைத்த பொந்துகளில் திணித்து அமர்ந்தாயிற்று. கச்சைகளும் கட்டியாயிற்று. முதல் வகுப்பு இருக்கையில் அமர்வதில் எப்போதும் இது கைகூடும் நமக்கு. அடுத்து உள்ளே வரும் ககனமேறிகளைப் பார்த்து மனிதமொழி பேசிக் கொள்ளலாம்.
என்ன ஒரு அழகு? நான்குமாதங்கள்தான் ஆயிற்றாம். கண்களைச் சிமிட்டிச் சிமிட்டிச் சிரிக்கிறான். என்னைச் சுற்றிலும் என்ன நடக்கிறதென்றே கவனித்திருக்கவில்லை நான். பார்வைகளால் ஒருவரையொரு நனைத்துக் கொண்டிருந்தோம். விமானம் முப்பத்து ஏழாயிரம் அடிகளைத் தொட்டுவிட்டதாம். நம்மைச் சுமந்து சொல்லும் விமானம் இன்னும் ஒரு மணி பத்து மணித்துளிகளில் சார்லட் நகர மண்ணை முத்தமிடும் என்கிறாள் விமானப் பணியாளச் சீமாட்டி.
முன்பக்க திசை நோக்கித் திருப்பி வைத்தாலும் அவன் என்னையே பார்க்கிறான். நான் அவனைப் பற்றி எழுதுவேனென்று அவனுக்கு முன்கூட்டியே தெரிந்திருக்குமோ? அல்லையில் நோக்கின் முகில்கள் பல்வேறு உருவங்களில் நடமாடிக் கொண்டிருக்கின்றன. அந்த உருக்களுக்கு இன்ன உருவம் பொருந்துமெனப் பார்த்துப் பொருத்துவது எனக்கு வாடிக்கை.
”ஐயா தாங்கள் என்ன குடிக்கிறீர்கள்?”, கேட்கிறாள் சீமாட்டி. ”கிரேன் பெரி ஜூஸ்!” என்றேன். உங்களுக்கு பணிவிடை செய்வதில் மகிழ்ச்சி என்கிறாள். இவள் நல்லவள். இனிமையாய்ப் பேசுகிறாள். நாளின் துவக்கம் என்பதால் புத்துணர்வோடு இருக்கிறாள். திடுமென வந்தது அறிவிப்பு.
பொன்னமராவதி நடுகற்கள் வானப்பரணில் அணிவகுத்து அமர்ந்திருக்கின்றன. பணியாளச் சீமாட்டிகள் அங்குமிங்கும் ஓடி வந்து கொண்டிருக்கின்றனர். சொக்கறைப் பையன் கன்னத்தில் குழிவிழ என்னையே பார்க்கிறான். சிரிக்கிறான். அம்மாவின் தலை கவிழ்ந்திருந்தது. இறைவனை இறைஞ்சிக் கொண்டிருக்கிறாள்.
மூன்றாவது வரிசையில் இருக்கும் நான் ஐந்தாவது வரிசையைத் திரும்பிப் பார்க்கிறேன். நான்கைந்து பேர் நின்று கொண்டிருக்கிறார்கள். அனைவருமே மருத்துவர்கள். ஒரு மலரை நோக்கி ஐந்தாறு வண்டுகள் வந்தன. சிறு இறகுகள் செல்லமாய்ப் படபடக்கக் கண்களாலேயே பேசிக் கொண்டன அவையாவும். மலரின் கட்டுப்பாட்டினை ஒன்று தனக்குள் கொண்டுவர, மற்றன எல்லாமும் தத்தம் திசையில் பறந்து மறைந்தன சுவடு தெரியாதபடிக்கு.
பணியாளச் சீமாட்டியவள் ஓரடிப் பீர்க்கங்காய் போன்ற ஆக்சிஜன் கலத்தைக் கொணர்ந்து கொடுத்தாள். மற்றவள் ஓடிச்சென்று முதலுதவிப் பையினைத் தூக்கி வந்தாள். எஞ்சிய பயணியர் அனைவரும் தத்தம் தலை கவிழ்ந்திருக்க, ஆழ்ந்த தவத்தில் சயனித்திருந்தனர். கண்களால் கூடப் பேசிக் கொள்ளவில்லை யாரும். என்னையும் என்னைத் தொடர்ந்து கவனித்துச் சிரிக்கும் ஐந்து வயதுப் பையனையும் தவிர.
நனைந்த துணியைக் கேட்டார் மருத்துவர். நெஞ்சினைத் தடவிக் கொடுத்துக் கொண்டே நெஞ்சுத்துடிப்பு, இரத்தழுத்தம் முதலானவற்றைக் கவனித்து குறித்துக் கொண்டிருந்தார். விமானம் மீண்டும் மெம்ஃபிசுக்கே திருப்பி விடப்பட்டிருப்பதாக விமானச்சாரதி அறிவிப்புச் செய்தார்.
விமானத்தில் இருந்த நடுகற்கள் நடுகற்களாகவே இருந்தன. கிஞ்சித்தும் அசையவில்லை எதுவும். ஒவ்வொரு மனத்துள்ளும் ஒரே ஒரு வேண்டுதல்தான் ஓதப்பட்டுக் கொண்டிருந்தது. எல்லோரது முகமும் சிவந்து கொண்டிருந்தது தொடுவானத்துக் கதிரவன் போல.
கீழே பார்க்கிறேன். தரை மார்க்கம் கண்களின் எல்லைக்குள் வந்து விட்டது. இது வரையிலும் எந்தவொரு சலனமுமின்றிச் சுற்றுமுற்றும் கவனித்துக் கொண்டிருந்த எனக்கு, இப்போது நெஞ்சு கனத்துப் படபடப்புக் கூடி வருகிறது. மீண்டும் ஐந்தாம் எண் வரிசையில் வலது புற இருக்கைகளைக் கவனிக்கிறேன். மருத்துவரின் கைகளுக்குள் மாந்தனா? மாந்தக் கூடா?? ஒன்றும் தெரியவில்லை.
அந்தக் குழந்தைகூட அழாமல் ஆழ்ந்ததொரு அமைதியைத் தன்மேலும் பூசிக் கொண்டிருக்கிறது. கண்களை மூடி அமர்ந்திருக்கிறேன். விமானம் தரையைத் தொடுவதை உணர்கிறேன். கண்கள் விழித்து வெளியில் பார்க்கிறது என் உத்தரவுவெதும் இல்லாமலேயே.
மூன்று தீயணைப்பு வண்டிகள்; நான்கைந்து மருத்துவ விரைவூர்திகள். சிவப்பு, மஞ்சள் ஒளிக்கீற்றுகளைப் பெருவாரியாக உமிழ்ந்து கொண்டிருக்கிறது. விமானம் படிப்படியான வேகக் குறைப்புடன் தரிப்பிடம் வந்து சேர்ந்து விட்டது. நடுகற்களாய் அமர்ந்திருக்கும் பயணியர் யாவரும், நடுகற்களாகவே தொடர்ந்து தம்மை இருத்திக் கொண்டிருக்கிறார்கள். நான் மட்டும் இங்குமங்கும் சிரமாடி விழிகளசைத்துக் கண்டு கொண்டிருக்கிறேன். கதவு திறக்கப்பட்டதுதான் தெரியும். திரும்பிப் பார்க்கிறேன் ஐந்தாம் எண் வரிசையில் யாருமே இல்லை. நடுகற்கள் உயிர் பெற்றுக் கொண்டிருந்தன. பணியாளச் சீமாட்டி முதன் முறையாகப் பேசினார். “கழிப்பறைக்குச் செல்வோர்; எழுந்து நிற்க விருப்பப்படுவோர் அவ்வண்ணமே செய்யலாம். நீங்கள் அனைவரும் மிகவும் உன்னதமானவர்கள். நன்றி!”, என்றார். நான்குமாதச் சிறுவன் என்னைப் பார்த்துச் சிரிக்கிறான்.
பேணிய மருத்துவரும் மற்ற மருத்துவர்களும் அளவளாவுகிறார்கள். உயிர்பெற்ற நடுகற்கள் ஒன்றோடொன்று பேசிக்கொண்டன.
ஒருவரை ஏற்றிச் செல்ல, எதற்காக மூன்று தீயணைப்பு வண்டிகள்? எதற்காக நான்கு மருத்துவ விரைவூர்திகள் வர வேண்டும்? ஆபத்துக்கான சமிக்கை ஒன்றுக்கு மேற்பட்ட முனையங்களுக்கு உடனே தெரிவிக்கப்படும். அந்த இடத்துக்கு அருகில் இருக்கிற இரண்டு அல்லது மூன்று இடங்களிலிருந்து இவ்வண்டிகள் உடனே அனுப்பப்படுவது வழக்கப்பாடு. ஏதாவது ஒரு வழியில் வந்து சேர வேண்டியது வரவில்லையென்றாலும் மற்றது வந்து சேர்ந்துவிடும் என்பதற்காக.
நெஞ்சுத் துடிப்பை வைத்துப் பார்க்கும் போது தான் எந்த முடிவுக்கும் வர இயலாது எனச் சொல்லிவிட்டார் மருத்துவர். பணியாளச் சீமாட்டிக்கும் நம்பிக்கையானது முகக்குறிப்பில் இடம் பெறவில்லை.
தத்தமது அடுத்த விமானங்களை யாரும் பிடித்துச் சென்று சேர்வதென்பது முடியாத காரியம். ஏற்கனவே இரண்டு மணி நேரம் காலத்தாழ்ச்சியாகி விட்டிருந்தது. எனினும் யாரும் ஏமாற்றத்தையோ, விரக்தியையோ காண்பித்துக் கொண்டிருக்கவில்லை. சோகம் அனைவரையும் உலுக்கி விட்டிருந்தது.
மீண்டும் விமானம் புறப்பட்டு வானேறியது. எல்லோரது மனத்திலும் அந்த மனிதனுக்கு என்னாயிற்றோ எனும் கவலைதான். வழக்கமாக விமானத்துக்குள் இருக்கும் சூழலை, அந்த விமானம் அன்றைக்குத் துப்புரவாக இழந்திருந்தது. பதநீரும் கற்கண்டும் பதம் பார்க்கப்படாமல் வெறுமன கிடந்தது. ஐந்தாவது வரிசையில் இருக்கும் 5F இருக்கையை அண்டியிருப்பவர்கள் எல்லோரும் சபித்துச் சபித்துப் பார்த்ததில் ஆடை இழந்து அம்மணமாய்த் தெரிகிறது. ”நீயும் ஏன் என்னை அடிக்கடி திரும்பிப் பார்க்கிறாய்?” என்று கேட்டு அழுகிறது சக பயணியின் வெற்றிடமான அந்த அம்மண இருக்கை.
நூற்று ஐந்து பேருடைய பயணத்தில் காலதாமதம். அன்றைய அலுவல் பாதிப்பு. விமானத்தின் அடுத்தடுத்த வழித்தடங்கல்களிலும் இதனால் பாதிப்பு. கனெக்ட்டிங் பிளைட்டுகளையும் பாதிக்கும். எப்படிப் பார்த்தாலும் பாதிப்பின் மதிப்பு நூறாயிரம் டாலர்களுக்கும் அதிகமாகலாம். யாரும் அதைப் பற்றிச் சிந்திப்பதாகத் தெரியவில்லை.
நான் உடனே இன்றைய எனது அலுவல் பாதிப்புக்குள்ளாகுமென எனது நிறுவனத்திற்கு அறிவுறுத்தினேன். “நீயும், உன்னை அண்டி இருப்பவர்களது பாதுகாப்புத்தான் முக்கியம். அதற்குத்தான் முன்னுரிமை!” எனும் மறுமொழி உடனே வந்து சேர்ந்தது.
விமானம் சார்லட்டையும் வந்தடைந்து மண்ணைத் தொடப் போகிறது. விமானப் பணியாளச் சீமாட்டிகள், இழவு வீட்டுப் பணியாளர்கள் போல இருந்தார்கள். நாம் சார்லட் நகரை வந்தடையப் போகிறோம் என்று தொய்ந்த குரலில் அறிவிப்புச் செய்கிறாள் அவள்.
விமானச் சக்கரங்களின் ’டடக்ச்’ ஒலி கேட்கிறது. யாரோ விசும்பி அழும் ஒலியினால் பின்னிருக்கைகளிலிருந்து சன்னமான சத்தம் வருகிறது. விமான ஓட்டி அறிவிப்புச் செய்கிறார், “ஐ காட் எ மெசேஜ் ஃபிரம் யு.எஸ் ஏர்வேஸ்; எதிர்பாராத விதமாக நமது பயணத்திலிருந்து பிரிந்து சென்று போனவரது உடல்நிலை கட்டுப்பாட்டுக்குள் வந்து, சீரான நிலையில் இருக்கிறார்!:.
நடுகற்கள் யாவும் புத்துயிர் பெற்று ஒத்த குரலில் கூவின, “ஹே… யு காய்ஸ் ஆவ்சம்யா! சீயர்ஸ்!!”. முன்பக்கம் இருந்த பணியாளச்சீமாட்டி கூவுகிறாள், “யு மேட் மை டே. காட் ப்ளஸ் அமெரிக்கா!”. ஒருவருக்கொருவர் வாழ்த்துச் சொல்லிக் கொள்கிறார்கள். மருத்துவருக்குப் புளகாங்கிதம்.
வெளியே வந்து விமான முனையத்தில் பார்த்தால் எங்கும் மக்கள் வெள்ளம். அங்குமிங்குமாக ஓடிச் சென்று தத்தமது அடுத்த விமானங்களுக்கு ஏகியபடி இருந்தனர். நாங்கள் வந்த விமானத்திலிருந்து வெளியேறியவர்களும் ஒவ்வொருவராகக் கூட்டத்தில் கரைந்து கொண்டிருக்கிறார்கள். “ஏதாகிலும் துயர் நேரிடின், இந்த தேசத்து மக்களின் உள்ளார்ந்த பேணுகை எனக்கும் உண்டல்லோ?”, வானுயர்ந்த நம்பிக்கைப் பேரொளியில் கரைந்து போகிறேன் நான்!!
அங்கதச் சுவையோடு சற்றே அவலச் சுவையும் இழையோட விமானப் பயண அனுபவத்தைப் படிப்போர்க்கு விருந்தாய்ப் படைத்துள்ளீர்கள் பழமைபேசி. பெயரில் பழமை இருந்தாலும் சிந்தனைகளில் புதுமைக்குப் பஞ்சமில்லை. பாராட்டுக்கள்!!
— மேகலா
கதையின் நடை மிக நன்றாக இருந்தது பழமை பேசி. ஒருபக்கம் சரமாரியாகச் சுட்டுத் தள்ளும் கிறுக்கர்கள் இருந்தாலும், உண்மையில் உயிருக்கு அதிக மதிப்பு கொடுக்கும் மனிதர்கள் நிறைந்தது அமெரிக்காவின் மறு பக்கம் . அதில் ஒரு பயணத்தில் முன் பின் தெரியாத இருக்கை எண் 5F பயணியின் உயிரைப் பற்றி கவலைப்பட்ட அமெரிக்கர்களை அழகாக விவரித்துள்ளீர்கள். கதையின் நடை முழுவதுமே அருமை. அதிலும் எனக்கு மிகவும் பிடித்த வரிககளும் வார்த்தைகளும் கீழே. வாழ்த்துக்கள்.
—-
அமெரிக்காவில் பலவிதமான அடிமைகள் உண்டு. அதில் வெகுமுக்கியமானது ஸ்டார்பாக்சு அடிமைகள். எனக்கு முன்னால் ஏற்கனவே ஆறேழு அடிமைகள் வந்து நின்று கொண்டிருக்கிறார்கள்.
ஈசல்பொரி தின்று கொண்டு அடைமழையை வேடிக்கை பார்ப்பதும் போலத்தான் ஸ்டார்பாக்சு காப்பியோடு அலைபேசியில் வலைமேய்வதும்.
”ஐயா தாங்கள் என்ன குடிக்கிறீர்கள்?”, கேட்கிறாள் சீமாட்டி.
தட்டுமுட்டு சாமான்களை கிடைத்த பொந்துகளில் திணித்து அமர்ந்தாயிற்று. கச்சைகளும் கட்டியாயிற்று.
பொன்னமராவதி நடுகற்கள் வானப்பரணில் அணிவகுத்து அமர்ந்திருக்கின்றன.
ஒரு மலரை நோக்கி ஐந்தாறு வண்டுகள் வந்தன. சிறு இறகுகள் செல்லமாய்ப் படபடக்கக் கண்களாலேயே பேசிக் கொண்டன அவையாவும். மலரின் கட்டுப்பாட்டினை ஒன்று தனக்குள் கொண்டுவர, மற்றன எல்லாமும் தத்தம் திசையில் பறந்து மறைந்தன சுவடு தெரியாதபடிக்கு.
விமானம் மீண்டும் மெம்ஃபிசுக்கே திருப்பி விடப்பட்டிருப்பதாக விமானச்சாரதி அறிவிப்புச் செய்தார்.
விமானத்தில் இருந்த நடுகற்கள் நடுகற்களாகவே இருந்தன.
நான் மட்டும் இங்குமங்கும் சிரமாடி விழிகளசைத்துக் கண்டு கொண்டிருக்கிறேன்.
பதநீரும் கற்கண்டும் பதம் பார்க்கப்படாமல் வெறுமன கிடந்தது.
சேமச்சிறுநீர் வைப்பறை, மின்னஞ்சல் மேய்ச்சல், பெருந்தெரு, காப்பூசி, பேய்ப்பறவை, வலைமேய்வது
—-
படமும் அருமை.
…. தேமொழி
இனி எல்லாம் சுகமே. மிக நன்றி மணி. ஆஸ்வாசப் படுத்திக்கொள்கிறேன். இந்தத் திங்கள் இனிமையாக அமைந்தது.
ஒரு உயிருக்காக நூறாயிரம் டாலர்கள் செலவு செய்ய அமெரிக்கர்கள் தயாராகவே இருக்கின்றனர்.
இங்கே இந்திய/தமிழ் அரசியல்வாதிகள் கண்ணெதிரே தமிழ் இனமே இலங்கையில் அழிக்கப்பட்டுக் கொண்டிருப்பதை எந்தவித உணர்வும் இல்லாமல் பார்த்துக்கொண்டு இருக்கின்றனர். பணத்துக்காக பார்த்துக்கொண்டும் இருந்தனர்.
பழமைபேசி கட்டுரை விவரிப்பு பாரட்டத்தக்கது
தலைப்பை பார்த்தவுடன் இந்த விஷயமாகத்தான் இருக்குமென யூகித்தேன்! அதோடு திங்கட்கிழமை சமாச்சாரமும் சேர்த்துவிட்டீர்கள்!
எனக்குப் பிடித்த வரிகளையும் வார்த்தைகளையும் தோழி தேமொழி ஏற்கனவே அழகாக பட்டியலிட்டு விட்டார்.
ஒரு சொல் விளையாட்டே நடத்துகிறீர்கள் சகோ! இவற்றையெல்லாம் அடியேனின் கட்டுரைகளில் உபயோகிக்கலாமா? பதிப்புரிமையையும், வர்த்தக முத்திரையையும் வைத்துக்கொண்டு வழக்கு போட்டு அமெரிக்க நீதிமன்றத்திற்கு என்னை இழுத்தடிக்கமாட்டீர்களே? 😉
நன்று! வாழ்த்துகள்!