Author: பவள சங்கரி

  • தட்டொளி

    பவள சங்கரி

    தட்டொளியின் புறக்காட்சிகளனைத்தும்
    அறச்சீற்றத்தின் அகக்காட்சிகள்! 

    life 26

    தட்டொளி – உலோகத்தாலான கண்ணாடி
    உக்கம் – விசிறி

    ஆண்டாள் சந்நிதியின் நேர் எதிரில் வெண்கலத்தால் செய்யப்பட்ட தட்டொளி இருக்கிறது. (படத்தில் உள்ளது). இதில் தான் ஆண்டாள் தன் முகத்தை பார்த்தாளாம். தற்போது பளபளப்பு குறைந்துள்ளது. ஆண்டாள் திருப்பாவையில், ‘உக்கமும் தட்டொளியும்’ என்று குறிப்பிட்டிருக்கிறாள் – கோதைத்தமிழ்!

    ஆண்டாள் அருளிய திருப்பாவை (493)large_133341970

    முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
    கப்பம் தவிர்க்கும் கலியே துயில்எழாய்
    செப்பம் உடையாய் திறல்உடையாய் செற்றார்க்கு
    வெப்பம் கொடுக்கும் விமலா துயில்எழாய்
    செப்பென்ன மென்முலைச் செவ்வாய்ச் சிறுமருங்குல்
    நப்பின்னை நங்காய் திருவே துயில்எழாய்
    உக்கமும் தட்டொளியும் தந்துஉன் மணாளனை
    இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்.

    Share
  • வாசுகியாயணம்!

    பவள சங்கரி

    1330 குறட்பாக்களும் இரண்டடியில் எழுதிவைத்த வள்ளுவப்பெருந்தகை, தமது மனைவி வாசுகி அம்மையாருக்காக எழுதிய வெண்பா மட்டுமே 4 வரிகளில் எழுதியுள்ளார்! இதோ:

    அடிசிற் கினியாளை அன்புடை யாளை
    படிசொற பழிநாணு வாளை … அடிவருடி,ப்
    பின்தூங்கி முன்னெழூஉம் ப யான்பிரிந்தால்
    என்தூங்கும் என்கண் எனக்கு.

    பின்னே, திருமணம் ஆன நாளிலிருந்து இறக்கும் தருணம் வரை திருவள்ளுவர் அன்றாடம் உணவு அருந்தும்போது தமதருகில் வைக்கச்சொன்ன ஒரு கொட்டாங்குச்சியில் தண்ணீரும், ஒரு ஊசியும் எதற்கு என்ற கேள்வியே கேட்காமல் அன்றாடம் வைத்துக்கொண்டிருந்தாராம்! காலம் முழுவதும் விளங்காமலே செய்த பணிவிடைக்கு தமது உயிர்பிரியும் இறுதி நேரத்தில் விளக்கம் கேட்டாராம் அம்மையார்..

    images
    அதாவது, ஐயனுக்கு உணவு பரிமாறும்போது சாதப்பருக்கை கீழே இறைந்துவிட்டால் அதை ஊசியால் எடுத்து தண்ணீரில் அலம்பி சாப்பாட்டில் சேர்த்துக்கொள்வதற்காக வைக்கச்சொன்னாராம். ஆனால் இறுதிவரை ஒருநாள் கூட அதற்கான தேவை ஏற்படவேயில்லையாம்!

    Share
  • உலகிலேயே மிகவும் நாகரீகம் அடைந்த நாடு!

    பவள சங்கரி

    முந்தைய காலத்தில் தமிழ், கிரேக்கம், இலத்தீன் ஆகிய மொழிகளில் நூல் இல்லை. எபிரேயம் என்ற ஹீப்ரு மொழி மற்றும் சீன மொழியில் சில எழுத்துக்கள் இருந்திருக்கின்றன. பைபிளின் பழைய ஏற்பாடு தோன்றியதும்கூட கி. மு.1000 ஆண்டுகளில்தான். ஆனால் இதெல்லாம் தோன்றுவதற்கு வெகுகாலம் முன்பே அதாவது 3000 ஆண்டுகளுக்கு முன்னரே, கடோபநிததத்தில் குறிப்பிட்டுள்ளபடி, தோன்றிய நசிகேதன் எனும் சிறுவன் எமனை வாக்குவாதத்தில் வென்று மூன்று வரங்கள் வாங்கி வருகிறான். அதேபோல் கார்க்கி போன்ற சில இந்துப் பெண்மணிகளும் சாதித்துள்ளனர். புத்தர், மகாவீரர், கன்பூசியசு, லாவோட்சே போன்றோருக்கும் முன்னரே இவர்களின் புகழ் பரவியிருந்தது. அதாவது உலகிலேயே மிகவும் நாகரீகம் அடைந்த நாடு நம் இந்தியாதான் என்பதற்கு இதுபோன்று பல உதாரணங்கள் உள்ளன!

    Share
  • வேளாளர் பெண்கள் கல்லூரியின் ஆண்டு மலர் (2015)

    பவள சங்கரி

    பொதுவாக ஒரு கல்லூரி அல்லது பள்ளியின் கற்பிக்கும் திறன், ஆசிரிய உறுப்பினர்கள், உள்கட்டமைப்பு, மாணவர்களின் ஆற்றல் போன்ற அனைத்தையும்  குறிப்பிட்ட அந்த கல்வி நிறுவனங்களின் மூலம் வெளியிடப்படும் ஆண்டு மலர் வழியாக அறிந்துகொள்ள இயலும். அந்த வகையில் உயர் மேன்மைக்குரிய முதல் தர தகுதி பெற்ற வேளாளர் பெண்கள் தன்னாட்சிக் கல்லூரியின் ஆண்டு மலர் மேலும் தனித்துவம் பெற்றுள்ளது என்பதையும் குறிப்பிட முடிகிறது. உயர்தரமான வழுவழு காகிதங்களுடன், வண்ணப் படங்களும் நவீன ஓவியங்களுடன் அட்டைப் படமும், நூலின் புறத்தோற்றத்தை கவர்ச்சிகரமாக வைத்திருக்கிறது. கல்லூரி ஆரம்பத்தின் ஆணிவேர் முதற்கொண்டு, இன்றும் கல்லூரி சீரான வளர்ச்சிப் பாதையில் பயணிக்க உறுதுணையாய் இருக்கும் நிர்வாகக் குழுவினர், மீப்பெரும் கல்வியாளர்களை உருவாக்கும் ஆசிரியப் பெருமக்கள், உதவியாளர்கள் என அனைவரையும் அழகாகப் படம்பிடித்துக்காட்டி தற்போது இக்கல்விக் கழகத்தில் இணைந்திருப்போரையும், இனி இணையத் தயாராக இருப்போரையும் பாரபட்சமின்றி கவர்ந்திருப்பதும் யதார்த்தம். தமது ஆசிரியப்பணிக்கு எந்தவித இடையூறும் இருக்காது என்ற உத்திரவாதத்தை புதிதாக இணைபவர்களுக்கு வழங்கும் விதமாக முப்பது ஆண்டுகளுக்கும் மேலான தங்கள் கல்விச் சேவையை தொடர்ந்து தங்கள் ஒரே கல்லூரியில் அளித்திருப்பவர்களை கௌரவித்துள்ளதை வெளிப்படுத்தியிருப்பது பாராட்டிற்குரியது. அதிக மதிப்பெண் பெற்று முதல் நிலையில் உள்ள மாணவர்களை உற்சாகப்படுத்தி, மேலும் புதிய மாணவர்களையும் ஊக்கப்படுத்தியிருப்பதும் நல்ல முயற்சி. போட்டிகளும் வாழ்க்கையின் வெற்றிக்கு அவசியம் என்பதையும் உணரச் செய்திருப்பதும், கல்வி முடித்து வெளியில் சென்று சாதனை படைத்துவரும் பழைய மாணவர்களை கண்டடைந்து வெளிக்கொணர்ந்திருப்பதும் சிறப்பு. நேர்காணல் மூலமாக, உண்மையான உழைப்பினால் உலக சாதனை புரிந்து வெற்றி கண்ட பெண்மணியை பேட்டிகண்டு அவர்தம் சக்தியை தங்கள் மாணவச் செல்வங்களுக்குள் ஊடுறுவச் செய்திருக்கும் முயற்சியும் அருமை!  இதில் பல மாணவிகளை பங்கேற்கச் செய்திருப்பதும் சிறப்பு.

    ஒவ்வொரு துறை சார்ந்த முனைவர்களின் ஆய்வேடுகள் பற்றிய தகவல்களை அளித்திருப்பது ஆய்வாளர் ஆகப்போகிறவர்களுக்கு  சுவை கூட்டுவது. வழமைபோல் விளையாட்டுத் துறை, வித்தியாசமான நிகழ்வுகள், ஆய்வு மாணவர்களின் குறிபிடும்படியான சாதனைகள் என மிக இனிமையாக நீள்கிறது நூல்.

    அடுத்து அனைத்திற்கும் முத்தாய்ப்பாக தமிழ்துறை ஆரம்பித்து, ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், ஊட்டச்சத்து மற்றும் உணவுக்கட்டுப்பாடு, கணினி அறிவியல், வணிகத்துறை, பொருளாதாரம், நூலகம் என அனைத்துத்துறைகளின் சிறப்புகளையும் மிக இயல்பாக எடுத்துரைத்துள்ள விதம் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து மாணவிகளின் படைப்பாற்றல் திறனை முழுமையாக வெளிப்படுத்தும் வகையில் வித்தியாசமான, சுவையான பல படைப்புகளை வெளியிட்டு மாணவர்களை உற்சாகப்படுத்தியிருப்பதும் பாராட்டுதலுக்குரியது. அனைத்துப் படைப்புகளும் ஆக்கப்பூர்வமாகவும், மேன்மை பொருந்தியதாகவும் அமைந்திருப்பது கல்லூரியின் தரத்தை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையன்று.

    இறுதியாக தேசிய சாரணர் இயக்கம், செஞ்சுருள் சங்கம், சுற்றுச் சூழல், சுகாதாரம், தொழில் முனைவோர் முன்னேற்றம், பசுமை இயக்கம், வெளிச்சங்கள் இலக்கிய அமைப்பு, கல்லூரி ஆண்டு மலர் ஆசிரியர் குழுவினரின் பக்கங்கள் என அனைத்து தன்னார்வத் துறையினரின் சாதனைகளையும் மிக அழகாக வடிவமைத்திருப்பது ஆக்கப்பூர்வமான செயல்.

    ஆக வேளாளர் கல்லூரியின் 2015 ஆம் ஆண்டின் ஆண்டு மலர் பல சிறப்புகளைக் கொண்டதோடு, கல்லூரியின் தனிச்சிறப்புகளை முழுமையாக எடுத்தியம்புவதாக அமைந்திருக்கிறது. 200 பக்கங்கள் கொண்ட இந்த நூல் வாசிப்பவர்களை எந்த வகையிலும் தொய்வின்றி சுவையான வாசிப்பு அனுபவத்தை ஏற்படுத்தவல்லது என்பதில் ஐயமில்லை. இந்நூலை செம்மையாக வடிவமைத்துள்ள ஆசிரியர் குழுவினருக்கும், ஆகச் சிறந்த படைப்புகளை வழங்கி கல்லூரியின் நற்பெயரை நிலைநாட்டியுள்ள அனைத்து நல்லுள்ளங்களுக்கும், மாணவச் செல்வங்களுக்கும்  வல்லமை இதழின் வளமான வாழ்த்துகள்.

    Share
  • ‘அப்பா’வின் அருமை

    பவள சங்கரி

    images (3)
    வழக்கமான காதல், டூயட், சண்டை, இரட்டை அர்த்த வசனங்கள், இத்யாதி எதிர்பார்த்து ‘அப்பா’ திரைப்படம் செல்பவர்கள் தங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளலாம். படம் ஆரம்பம் முதல் முடிவு வரை ஒரே சீராக உள்ளத்தை இறுக்கிப்பிடித்தபடி நகர்வதே இப்படத்தின் மாபெரும் வெற்றி எனலாம். கதை என்று பார்த்தால் நான்கு வரிகளில் சொல்லக்கூடிய சாதாரண கதைதான் என்றாலும் இயக்குநர் சமுத்திரக்கனி ஒரு வாழ்க்கையை வாழ்ந்து காட்டிவிட்டுப் போயிருக்கிறார்.

    images (5)வித்தியாசமான காட்சியமைப்பு, நவீன யுக்தி, தொழில்நுட்பம் என்ற எந்தவிதமான ஆடம்பரமும் இல்லாமலே உள்ளத்தை நிறையச் செய்திருப்பதற்கும், இப்படி ஒரு அப்பா எல்லா குழந்தைகளுக்கும் வாய்த்தால் நாட்டின் எதிர்காலம் தலை நிமிர்ந்து நிற்கும் என்று இயல்பாக எண்ணத் தூண்டியதற்கும் சமுத்திரக்கனிக்கு பாராட்டுகள். ஒரே சமயத்தில் அப்பாவாகிற மூவர்களான சமுத்திரக்கனி, தம்பி ராமையா, நமோ நாராயணன் ஆகியோரைச் சுற்றியே பின்னப்பட்ட கதைதான். தன்னுடைய ஆசைகள், கனவுகள் என அனைத்தையும் மகன் மீது திணிக்கும் அப்பா – தம்பி ராமையா, தாழ்வு மனப்பான்மையில் தானும் உழன்று தம் மகனுக்கும் அதையே ஊட்டி வளர்க்கும் அப்பா – நமோ நாராயணன் ஆகியோர் வளர்ப்பினால் ஏற்படும் அபத்தங்களும், ஒரு நல்ல அப்பாவான சமுத்திரக்கனி தன் குழந்தைக்குக் கொடுக்கும் சுதந்திரம், தனித்தன்மை, ஆகியவற்றின் மூலம் நல்ல வளர்ப்பு, தவறான வளர்ப்பு என்பதன் வேறுபாடுகளை வெகு இயல்பாக எந்த மேல்பூச்சோ, முகமூடியோ இல்லாமல் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

    குழந்தைகளுக்கு பாலியல் கல்வி தேவை, தேவையில்லை என்கிற வாதம் முடிவிற்கு வந்ததாக இல்லை. ஆனால் ஒரு அப்பாவைவிட வேறு எந்த பாடசாலையும் இந்த அளவிற்கு புரிதலுடன் எடுத்துரைக்க இயலுமா என்பது கேள்விக்குறிதான். ஒரு அப்பா தன் மகனுக்கும், ஒரு அம்மா தன் மகளுக்கும், தான் கடந்து வந்த பதின்மத்தின் இயற்கையான மனோ நிலையையும், சுரப்பிகளினால் ஏற்படும் இம்சைகளையும் விளங்கவைக்க முடியாத விசயங்களையா பாடத்திட்டங்களும், பாடசாலைகளும் விளங்க வைக்கமுடியும்? வசனங்களிலோ, காட்சியமைப்புகளிலோ, நடிப்பிலோ எங்கும் துளியும் அதிகப்படியாகிவிடாமல், எந்த பொழுதுபோக்கு அம்சமும் இல்லாவிட்டாலும் துளியும் சலிப்பு தட்டாமல் இரண்டு மணி நேரம் கட்டிப்போட்டு வைத்துவிட்டார் எனலாம். ஒவ்வொரு பெற்றோரும், மாணவர்களும் அவசியம் பார்க்கவேண்டிய திரைப்படம் இது. சில இடங்களில் சிறுவர்கள் வயதிற்கு மீறிய வசனங்கள் பேசுவதுபோல் தெரிந்தாலும் இன்றைய குழந்தைகளின் பேச்சில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதும் உண்மைதானே. ‘காதல்’ என்ற வார்த்தையே கெட்ட வார்த்தை என்ற காலங்கள் மலையேறிவிட்டதும், ஊடகங்கள் மூலமாக குழந்தைகளுக்கு அனைத்தும் அறிமுகம் ஆகிவிடுகிறபடியால் இதை குறையாகக் குறிப்பிட முடியவில்லை. இன்றைய காலத்திற்கேற்ப மிகத் தெளிவான சிந்தையுடன் எடுக்கப்பட்ட திரைப்படம் என்ற வகையில் இயக்குநருக்கு பாராட்டுகள். இளையராஜாவின் இசை உறுதுணையாக படக்காட்சிகளை உச்சத்திற்கு எடுத்துச்செல்கிறது. ரிச்சர்ட் எம்.நாதனின் கேமரா வெகு இயல்பாக காட்சியின் ஊடே பயணிக்கிறது. மனதில் நிற்கும் வசனங்கள் படத்தோடு ஒன்றிவிடச் செய்கின்றன என்றாலும் அது மிகையில்லை. இறுதிக் காட்சிகளில் இருக்கையின் நுனியில் அமரச்செய்து இதயத்தின்மீது ஏறிய பாறாங்கல்லை திரையரங்கை விட்டு வெளிவந்தவுடன் குளுகுளுவென்று ஒரு பனிக்கூழ் உள்ளே தள்ளியே வெளியேற்ற முடிந்தது! வெகு நாட்களுக்குப் பிறகு சமூக அக்கறையுடன் எடுக்கப்பட்ட ஒரு நல்ல திரைப்படத்தைப் பார்த்த திருப்தியுடன் வரமுடிந்தது!

    Share
  • மனிதாபிமானம்

    பவள சங்கரி

    ஒரு பிரபலமான வங்கியில் முதியோர் ஓய்வூதியம் வாங்க வந்திருந்த ஒரு தம்பதியரின் மிக மோசமான நிலையை அறிந்தபோது இதயம் துடித்தது. வங்கி மேலாளரிடம் ஓய்வூதிய மனு நிரப்பும்போதே அடுத்த மாதத்திலிருந்து பணம் கைக்கு கிடைத்துவிடுமா என்று கேட்க அவர் சிரித்துவிட்டு ஒரு ஆண்டு ஆகும், இன்னும் எத்தனை வேலை இருக்கிறதே என்கிறார். கிராம நிர்வாக அதிகாரி, தாசில்தார் போன்றோரிடம் கையெழுத்து வாங்க வேண்டும் போன்ற சட்ட திட்டங்கள்… நொந்துபோய் வந்தவரிடம் ஒருவர் தலைக்கு 2000 செலவு செய்தால் ஒரு மாதத்தில் பென்சன் கிடைத்துவிடும் என்று ஆறுதல் சொல்கிறார். இந்த தம்பதியரின் நிலையில் இந்த 4000 மிகப்பெரியத் தொகையாகத் தெரிய மலைத்துப்போய் நிற்கிறார்கள். ஆண் ஒன்று பெண் ஒன்று என இரு குழந்தைகள் பெற்ற மகராசர்கள். மகள் வீட்டில் பெரியவர்கள் ஒரு பகுதியிலும் மகன் ஒரு பகுதியிலும் தனித்தனியாக குடித்தனம் செய்கிறார்கள். மகனும் தன் வசதிக்கு பெற்றவர்களுக்கு சாப்பாட்டிற்கு தன்னால் முடிந்ததைத் தருகிறாராம். இந்த நிலையில் ஓரளவிற்கு வசதியாக இருக்கும் மகள் தன் வீட்டிற்கு பெற்றோர் சரியாக வாடகை தருவதில்லை என்பதற்காக வெளியே முடுக்கிவிடச் சொல்லிவிட்டாராம்… இந்தக்கொடுமையான சூழ்நிலையில் முதியோர் ஓய்வூதியம் பற்றி அறிந்து, அம்மா புண்ணியத்தில் 500 ரூபாய் அதிகம் உயர்ந்து 1500 கிடைக்கிறது என்று மகிழ்ச்சியோடு வந்தால் இங்கு இந்த நிலை..

    முதியோர் ஓய்வூதியம் என்பது அழிவு நிலையில் இருக்கும் பயிருக்கு உயிர்நீர் ஊற்றுவது போலத்தானே.. இதற்கு எத்தனை கையெழுத்துகள், சட்டதிட்டங்கள், கையூட்டுகள்…! சரி அப்படியே இருந்தாலும், இந்த முதியவர்கள் அங்கங்கு அலைந்து திரிந்து கையெழுத்து வாங்கும் சிரமத்தைக் குறைக்கும்விதமாக குறிப்பிட்ட வங்கிகளில் குறிப்பிட்ட ஒரு சில மணி நேரங்கள் கிராம நிர்வாக அதிகாரியோ அல்லது சம்பந்தப்பட்ட வேறு அதிகாரிகளோ அங்கேயே வந்திருந்து அந்த கையெழுத்தை போட்டுத் தருவதற்கு ஏதாவது ஏற்பாடு செய்யலாமே? அவர்கள் கையூட்டு தரும் அவலமும் தீரலாமே? இது மனிதாபிமான அடிப்படையில் தீர்க்கவேண்டிய பிரச்சனை அல்லவா?

    Share
  • இருண்மை

    பவள சங்கரி

    Org201201241041286378000

    மலையில் மணம்வீசும் மென்மலர்கள்
    மாலையில் கலையிழந்து தலைசாயும்
    மறுபடியும் மொட்டாகி மலரும்மணம்
    இது மலரின் வாடிக்கை

    மழையும் புயலும் வெள்ளமும்
    மலரையும் மணத்தையும் அள்ளிச்செல்லும்
    கனியும் சுவையும் காணாமலடிக்கும்
    இது இயற்கையின் வேடிக்கை

    மலையும் அறமும் அசராமல் நிற்கும்
    கலையும் மணமும் கருத்தென கொள்ளும்
    மழையும் வெள்ளமும் இயல்பென ஏற்கும்
    இது மலையின் நிறம்

    பூவோ புயலோ மழையோ வெள்ளமோ
    காயோ கனியோ கருப்போ வெளுப்போ
    மலையைப் பிளக்க மாதவம் செய்வதில்லை
    இது மலையின் வரம்

    பூவும் மணமும் கலையும் மலையும்
    இயற்கையின் அம்சங்கள் மாறா நிலைகள்
    மனமும் குணமும் மதமும் மாற்றமும்
    இயல்பாய் நீளும் இருண்மைகள்

    இணையப் படத்திற்கு நன்றி

    Share
  • பொது சார்புக் கோட்பாடு

    பவள சங்கரி

    qeaow870

    புகழ்பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டீன் கண்டறிந்த பொது சார்புக் கோட்பாடு – theory of relativity என்ற தத்துவம். இதைத்தானே நம் பாட்டனார்கள் மிக இயல்பாக ‘கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்’ என்று பண்டைக்காலம் தொட்டே கூறி வந்திருக்கிறார்கள்.

    ஒரு முறை விஞ்ஞானி ஐன்ஸ்டீன், இந்த தத்துவத்தை அதாவது “நாம் காண்பதெல்லாம் உண்மையல்ல” என்ற கோணத்தில் தாம் கண்டறிந்த தத்துவத்தை விளக்கிக் கொண்டிருந்தாராம். அதைக் கேட்டுக்கொண்டிருந்த அந்த இளைஞர்களில் ஒருவன் அவரிடம், “இதை என்னால் ஒப்புக்கொள்ள முடியாது. நான் இப்போது உங்களைப் பார்க்கிறேன், நீங்கள் இருப்பது உண்மைதானே?” என்று கேட்டானாம். அதற்கு ஐன்ஸ்டீன் அவனிடம் வானத்தில் அழகாக மின்னிக் கொண்டிருந்த ஒரு நட்சத்திரத்தைச் சுட்டிக் காட்டி, “அதோ பார். அங்கு நட்சத்திரம் தெரிகிறதா?” என்று கேட்க அவன், “ஆம்” என்று பதிலளித்தான். உடனே ஐன்ஸ்டீன், “அந்த நட்சத்திரம் வெகு காலத்திற்கு முன்பே எரிந்து மறைந்து விட்டதொன்று. நீ இப்போது பார்க்கும் ஒளி அந்த நட்சத்திரம் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் அது வெளியிட்ட ஒளி மட்டுமே என்பதை விளக்கமாகக் கூறி அந்த இளைஞனுக்கு புரிய வைத்தபோது அவன் வாயடைத்து நின்றானாம்!.

    அப்படியானால், நாம் காண்பவை அனைத்தும் பொய்யா? மெய் என்று ஏதும் இல்லையா? நாம் இருப்பதும் பொய்யா? வானும், நதியும் கடலும் மலையும் நீரும், ஊரும், வனமும், சோலையும், மான்களும் மீன்களும் என நாம் பார்க்கும் அனைத்தும் மெய்யில்லையா? அனைத்தும் பொய்யா?

    நம்ம பாரதி பாடலை இப்ப கேளுங்க!

    நிற்பதுவே நடப்பதுவே
    நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம்
    சொற்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ?
    கற்பதுவே கேட்பதுவே கருதுவதே நீங்களெல்லாம்
    அற்ப மாயைகளோ? உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?

    வானகமே இளவெயிலே மரச்செறிவே நீங்களெல்லாம்
    கானலின் நீரோ? வெறும் காட்சிப் பிழைதானோ?
    போனதெல்லாம் கனவினைப்போல் புதைந்தழிந்தே போனதனால்
    நானும் ஓர் கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ?

    காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பல நினைவும்
    கோலமும் பொய்களோ? அங்குக் குணங்களும் பொய்களோ?
    சோலையிலே மரங்களெல்லாம் தோன்றுவதோர் விதையிலென்றால்
    சோலை பொய்யாமோ? இதைச் சொல்லொடு சேர்ப்பாரோ?

    காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்பமன்றோ?
    வீண்படு பொய்யிலே நித்தம் விதி தொடர்ந்திடுமோ?
    காண்பதுவே உறுதிகண்டோம் காண்பதல்லால் உறுதியில்லை
    காண்பது சக்தியாம்; இந்தக் காட்சி நித்தியமாம்.

    https://youtu.be/LhirpTCGTHY

    Share
  • சமூகப் பொறுப்பு அவசியம்

    பவள சங்கரி

    13528672_1078659385522191_3450249930793537970_nசென்ற வெள்ளியன்று (24/06/16) காலை 6.30 மணிக்கு வழக்கம்போல் செங்கல்பட்டு அருகே உள்ள பரனூர் மகேந்திரா சிட்டியில் உள்ள இன்போசிஸ் ஐடி நிறுவனத்தில் மென் பொறியாளராக தான் பணிபுரியும் அலுவலகத்திற்குச் செல்வதற்காக சென்னை நுங்கம்பாக்கம் இரயில் நிலையத்திற்கு தன் தந்தையுடன் வந்திருக்கிறார் சுவாதி. தினமும் மின்சார இரயிலில் பணிக்குச் செல்வது வழக்கம். மகளை இறுதியாகப் பார்க்கப்போவது அன்றுதான் என்ற எண்ணம் துளியும் இல்லாமல் அன்பு மகளை கொண்டுவந்து விட்டுவிட்டு கிளம்பிவிட்டார் அவர் தந்தை. மத்திய அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்ற சென்னை சூளைமேட்டை சேர்ந்த சந்தான கோபாலகிருஷ்ணன் என்பவரின் மகள் சுவாதி, 24 வயது இளம் பெண். மகளை இரயில் நிலையத்தில் விட்டுவிட்டு வீடு வந்து சேர்ந்த சில மணித்துளிகளில் அவர் இரயில் நிலையத்தில் கொலையான செய்தி கேட்டு துடிதுடித்து பதறி ஓடி வந்து இரத்த வெள்ளத்தில் அசைவற்றுக் கிடக்கும் உடலைப் பார்த்து தன் இரத்தம் உறைந்து அதிர்ச்சியில் நிற்கிறார். இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக அதே இடத்தில் நடைமேடையில், போவோர் வருவோருக்குக் காட்சிப் பொருளாக, பிரேதப் பரிசோதனைக்குக்கூட எடுத்துச் செல்லாமல் அங்கேயே வைத்து இருந்ததையும் சேர்த்தே விழுங்க வேண்டிய கொடுமையான சூழலில் ஒரு தந்தையின் நிலையை கற்பனை கூட செய்ய முடியவில்லை. சென்னை போன்ற ஒரு பெருநகரத்தில் இப்படியொரு நிலை சற்று வருத்தத்திற்குரியதுதான். அதுவும் கொலை செய்தவனைக் கண்டுபிடிப்பதற்கு ஏதுவாக சிசிடிவி கேமரா கூட இல்லை என்பதுதான் மேலும் வேதனைப்படச் செய்யும் விசயம்.

    பட்டப்பகலில், மக்கள் நடமாட்டம் உள்ள இரயில் நிலையம் போன்ற பொது இடத்தில் இத்தனைக் கொடூரமாக ஒரு பெண்ணை வெட்டிக் கொன்றுவிட்டு கத்தியை தண்டவாளத்தில் தூக்கி வீசிவிட்டு சாவதானமாக ஒரு கொலைகாரன் தப்பிச் செல்லும் அளவிற்கா நம் காவல்துறையும், சமூகமும் இருக்கிறது? நினைக்கவே அச்சமாக இருக்கிறது. பாதுகாப்பு என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது. இதே நாளில் பல்வேறு இடங்களில் பல்வேறு விதமான கொலைகள் நடந்திருக்கின்றன என்றாலும் ஒரு பொது இடத்தில் ஒரு இளம் பெண் இப்படி பட்டப்பகலில் கொலை செய்யப்பட்டிருப்பது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏதோ சிறிய வாக்குவாதத்திற்குப் பிறகே அந்த இளைஞன் அப்பெண்ணை கொடூரமாகத் தாக்கிக் கொன்றிருக்கிறான் என்பது நேரில் கண்டவர்களின் வாக்குமூலம்.

    சில நாட்களுக்கு முன்பு கால் டாக்சி ஓட்டுநரிடம் வாக்குவாதம் செய்து, அவர் பற்றி புகாரும் அளித்ததால் அவர் வேலையிலிருந்து நீக்கப்பட்டும் இருந்திருக்கிறார். இதுகூட கொலைக்கான காரணமாக இருக்குமோ என்ற நோக்கிலும் காவல்துறை விசாரணை இருந்திருக்கின்றது. ஆனாலும் தான் கொலை செய்யவில்லை என்று அந்த ஓட்டுநர் மறுத்திருக்கிறார். இன்னும் சரியான காரணம் புரிபடாத இந்நிலையில் ஊடகங்கள் தங்கள் மகளின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டாம் என்று குடும்பத்தினர் கேட்டுக்கொண்டிருக்கின்றனர். கொலைக்கான காரணம் சரியாக தெரியாதபோது மேலும் மேலும், புதிய புதிய கற்பனைக் கதைகளைச் சொல்லி வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதில் நியாயமில்லை. தேவையில்லாமல் சம்பவத்தை திசை திருப்புவதால் கொலையாளி தப்பிப்பதற்கும் அது வழிவகுத்துவிடும். ஊடகங்களும் பொது மக்களும் தேவையில்லாத விவாதத்தை நிறுத்தி, கொலைக்கான காரணமும், கொலையாளியும் பிடிபடும் வரை பொறுமை காப்பதே தற்போதைய தேவை.

    Share
  • மாய உலகில் மனம் பாடும் பாடல்!

    பவள சங்கரி

    18834492

    குருட்டு உலகில் குதர்க்கம் பேசும் முரட்டு உலகம் – இது
    உச்சியைத்தொட வக்கணை பேசும் வரட்டு நாதம் – பாப்பா
    புரிந்து தெளிந்து கொள்ளம்மா பித்தம் தீர வழியைச் சொல்லம்மா

    இருக்கும் மடமையை வெளிச்சம் போடும் பகட்டு உலகமே – மாயையில்
    ஓயாத போட்டியும் பொறாமையும் கூடிய உலகமே – பாப்பா
    புரிந்து தெளிந்து கொள்ளம்மா பித்தம் தீர வழியைச் சொல்லம்மா

    குருட்டு உலகில் குதர்க்கம் பேசும் முட்டாள் உலகம்தான் – இது
    பட்டாம்பூச்சியாய் தவ்வித்தவ்வி விட்டிலாய் வீழும் விபரீதம்தான் – பாப்பா
    புரிந்து தெளிந்து கொள்ளம்மா பித்தம் தெளிய மருந்து சொல்லம்மா

    நொந்த பயிரை நோண்டிப் பார்க்கும் கொடுமையை கூடிக் களிக்கும்
    நொந்த பயிரை நோண்டிப் பார்க்கும் கொடுமையை கூடிக் களிக்கும்- கொண்டாடும்
    நொந்திடும் தோட்டக்காரனிடம்
    பூச்சொரியும் வசனங்களோதும் சில புரட்டு வேதமும் ஓதும்
    வகைவகையான புரட்டுகள் வைத்து வதைக்கும் உலகமே – பாப்பா
    புரிந்து தெளிந்து கொள்ளம்மா பித்தம் தெளிய மருந்து சொல்லம்மா

    மமதைக் குரங்கைத் தாவவிடும் தத்துவ ஞானம் – அதன்
    போதையில் மூழ்கும் முற்றும்
    வம்பும் குலைந்து குரங்கும் வீழ்ந்து அடுத்த மரம் தாவும்
    வம்பும் குலைந்து குரங்கும் வீழ்ந்து அடுத்த மரம் தாவும் – சிலர்
    மனமும் இதுபோல சறுக்கி வீழ்ந்து மாயும் பகட்டு உலகமம்மா – பாப்பா
    புரிந்து தெளிந்து கொள்ளம்மா பித்தம் தெளிய மருந்து சொல்லம்மா

    குருட்டு உலகில் குதர்க்கம் பேசும் முட்டாள் உலகமம்மா – இது
    பட்டாம்பூச்சியாய் தவ்வித்தவ்வி விட்டிலாய் வீழும் விபரீதம்தான் – பாப்பா
    புரிந்து தெளிந்து கொள்ளம்மா பித்தம் தெளிய மருந்து சொல்லம்மா
    ம்ம்ம்ம்ம்ம்… ம்ம்ம்ம்ம்…. ம்ம்ம்ம்…. ஆ… ஆ… ஆ…. ஆ….

    பி.கு. பாடலுக்கு குரல் கொடுத்து பதிவு செய்துள்ள அன்புத் தோழி கீதா மதி அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றியும், பாராட்டுகளும்.

    https://soundcloud.com/thiru-arasu-10/video-1467000372

    Share
  • ‘மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்’

    பவள சங்கரி

    சீதாயணம் – மதிப்புரை

    Seethayanam-cover-page-Small

    AIbEiAIAAABDCJzb5f6r79updCILdmNhcmRfcGhvdG8qKGQ0ZDQwOTE4MDVkMzA4MjZjMjBkYzExYWQzODE2NWVmYzBkYjg2YWQwAUYq-HXl0fg_jIMRCjP1KRGW0E9Dஅணுசக்தி ஆக்கப்பணியில் 45 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் பெற்ற அறிவியல் விஞ்ஞானி திரு ஜெயபாரதன் தமிழ் இலக்கியப் பணியிலும் தம்முடைய சுவடுகளை ஆழப்பதித்துள்ளார். சீதாயணம் எனும் இந்நாடக நூலின் ஆசிரியரின் நாடகம் மிக வித்தியாசமான கோணத்தில் வரையப்பட்ட ஒன்று. நம் நாட்டில் ஆன்மீக நம்பிக்கை என்பது பெரும்பான்மை மக்களின் குருதியில் ஊறிக்கிடப்பதென்பது அனைவரும் அறிந்த உண்மை. இராமாயணம் என்ற மாகாவியத்தின் நாயகன் இராமச்சந்திரமூர்த்தியும், அவர்தம் தர்மபத்தினி சீதாதேவியும் மனிதராக அவதரித்தவர்கள் என்றாலும் அவதாரங்களான தெய்வங்களாகவே கருதப்பட்டு வழிவழியாக வழிபடப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் இராம காவியம் பெரிதும் போற்றி பரவப்பட்டு வருவதும் கண்கூடு. திரு ஜெயபாரதன் அவர்களின் சீதாயணம் சீதா தேவியின் தூய வாழ்வின் இன்னல்களும் அதற்கு காரணமானவர்களின் சாடல்களையும் முன்னிறுத்தி நியாயம் கேட்கும் ஒரு சீர்மிகு படைப்பு. சீதாதேவியின் துன்பங்களைப் பொருட்படுத்தாமல், அவளுடைய தூய உள்ளம் புரிபட்டபோதும், தனிப்பட்ட முறையில் அவள்மீது துளியும் சந்தேகம் இல்லாதபோழ்தும், ஊர் மக்களின் பேச்சுகளுக்கு செவிசாய்த்து சீதாதேவியை, இரண்டு குழந்தைகளுடன் தவ முனிவரின் பாதுகாப்பில் தபோவனத்திற்கு அனுப்பப்படுகிறாள். இந்த அடிப்படையில் ஒரு பெண்ணிற்கு நேர்ந்த கொடுமையை மிகத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டப்பட்ட ஒரு படைப்பு இது. சீதா தேவியை தெய்வீக அன்னையாகவும், இராமரை தெய்வ அவதாரமாகவும் வழிபடும் வழமை பாரத தேசத்தில் பல காலமாக உள்ளது. ஆனால் திரு ஜெயபாரதன் அவர்களின் கோணத்தில் இராமர் மானுடனாகப் பிறந்தவர் என்பதற்கான ஆதாரங்களைக் காட்டுவதோடு, ஆணாதிக்கப் போக்கினால் சீதா தேவி பட்ட துயரங்களை உணர்வுப்பூர்வமாக உள்ளம் உருகும் வகையில் சித்தரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பகவத் கீதையும் ஆண்டவன் படைத்தது அல்ல, வியாசரின் படைப்புதான் என்றும் ஆதாரங்கள் காட்டி பொது நம்பிக்கைகளை ஆட்டம் காணச்செய்கிறார்.

    ஆரம்பத்தில் இந்த நூலுக்கான அணிந்துரையை எழுதவேண்டுமென திரு ஜெயபாரதன் அவர்கள் வற்புறுத்தியபோதும் என் மனம் அதற்குச் சம்மதிக்காததன் காரணம், நம் நாட்டில் பெரும்பாலான மக்கள் தெய்வமாக வழிபடும் சிறீஇராமச்சந்திரமூர்த்தி மற்றும் சீதாதேவி இருவரையும் விமர்சனத்திற்கு உள்ளாக்குவதன் மூலமாக அவர்களுடைய மனதைப் புண்படுத்தவேண்டி வருமோ என்பதுதான்.

    13177440_1036013426487282_8635532580074961715_nஆனால் இப்போது எழுதவேண்டிய தேவை ஏற்பட்டதற்கும் காரணம் இல்லாமலில்லை. நான்கு பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தையைப் பெற்று அவர்களை சிறப்பான முறையில் வளர்த்து தம் கடமைகளை சரிவர செய்துமுடித்துள்ள ஒரு முதிய தகப்பனாரின் உணர்வுப்பூர்வமான உள்ளக்கிடக்கையை உதறித் தள்ளும் துணிவற்றுப் போனதுதான். திரு குகேச சங்கரன் அவர்கள் என் தந்தையார் என்ற கண்ணோட்டத்தைவிட, நான்கு பெண் குழந்தைகளின் தந்தையாக அவர்களை வளர்க்கும் தருணங்களில் சமூகத்தில் நடந்த பல்வேறு அவலங்களின் காட்சிகளைக் கண்டவர் என்பதோடு பரந்துபட்ட அனுபவ ஞானங்களையும் பெற்றவர் கூற்றில் இருந்த யதார்த்தப் பார்வையே இதனை எழுதத்தூண்டுகிறது. அந்த வகையில் திரு ஜெயபாரதன் அவர்கள் உலகத்து மாதர்கள் அனைவரும் தாம் பெற்ற பிள்ளைகளாகக் கருதி அவர்தம் நலனில் ஆழ்ந்த அக்கறையும், ஈடுபாடும் கொண்டு அந்தப் பின்னணியிலேயே இந்த நூலை எழுதி முடித்திருப்பதும்தான். ஆசிரியரின் நேர்மையான துணிச்சல் பாராட்டுதலுக்குரியது.

    ‘பெருமைக்குரிய ஒரு தேசீய மற்றும் பக்திப் பாரம்பரியத்திலே பிறந்து இந்திய விடுதலைப் போராட்டத்தில் பல ஆண்டுகள் மகாத்மா காந்தியின் கீழ் பணியாற்றி பங்கெடுத்துச் சிறை சென்ற தம் தந்தையார் சி.சிங்காரவேல் பாண்டியன் அவர்களால் முறையாக வளர்க்கப்பெற்றவர் திரு சி.ஜெயபாரதன் அவர்கள். ஐந்து வயது முதலே காலை ஆறு மணிக்கு நீராடி, பாரதியின் தேசீய, பக்திப் பாடல்களை அனுதினமும் காலைப் பிரார்த்தனையில் தந்தையுடன் கலந்து பல ஆண்டுகள் பாடி வந்ததால் பாரத நாட்டுப் பற்றும், பைந்தமிழ் மொழிப்பற்றும் திரு.சி.ஜெயபாரதன் அவர்கள் ரத்தத்திலும் மனத்திலும் பதிந்து ஊறி விட்டன’ என்ற, உயர்திரு வையவன் அவர்களின் பதிப்புரை மேலும் நம்பிக்கையளிப்பதாகவே உள்ளது.

    குத்தீட்டியாய் சீதையின் உயிரினூடே குத்திக் கிழிக்கும் சொல்லம்புகளின் இரணம் ஒரு தந்தையின் நிலையிலிருந்து காணும்போது அவள் பட்ட வேதனையைவிடக் கொடிதாகிவிடுகிறது. வார்த்தை அம்புகளை சரமாரியாக ஏவி சீதையைக் கொன்ற இராமனை மன்னிக்கும் மனநிலையை ஒரு தந்தையிடம் எதிர்பார்ப்பது எங்கனம்? இறுதிவரை காப்பேன் என்று வாக்களித்து கைப்பிடித்த அன்பு மனைவியை வனவாசம் அனுப்பும் இராமன் அநீதி இழைத்தவன் சாதாரண மானுடப் பிறவியாக மட்டுமே இருக்கமுடியும் என்ற ஆசிரியரின் கணிப்பு மறுக்கவியலாதது.

    “சீதையை இராமன் காட்டுக்கு அனுப்பும் உத்திர காண்ட அதிர்ச்சிக் காட்சியை நான் இராம கதையின் உச்சக் கட்டமாகக் கருதுகிறேன். இலங்காபுரியில் போரிட்டு சீதாவை மீட்ட காட்சியை நான் இராமகதையின் உச்சக் கட்டமாக எடுத்துக்கொள்ளவில்லை” என்ற ஆசிரியரின் கருத்து கவனிக்கப்பட வேண்டியவை.

    கர்ப்பவதியாக காட்டிற்குத் துரத்தப்பட்ட சீதை லவ குசனை ஈன்றெடுத்து, வால்மீகி ஆசிரமத்தில் வாழ்நாளைக் கழித்து, இறுதியில் உயிரை மாய்த்துக்கொள்பவளை, பாரத தேசம், கணவன் இராமனுடன் இயைந்து வாழ்ந்த உன்னத தம்பதிகளாகக் காட்டித் தொழுது வருவதைப் பொறுக்க முடியாமல், தெய்வ அவதாரமாக வேடம் பெற்ற இராமனை மானிடனாக, மன்னவனாக மாற்றித்தன் ‘சீதாயணம்’ எழுதப்படுவதாக ஆசிரியர் குறிப்பிட்டிருப்பது விவாதத்திற்குரிய கருத்து என்றாலும் மனிதாபிமான அடிப்படையில் எவரும் மறுக்கவியலாத ஒன்று என்றே கூறமுடிகிறது. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இக்காவியம் நடந்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதை ஒப்புக்கொள்ளும் இந்த அறிவியல் விஞ்ஞானியான ஆசிரியர், மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அனுமன் போல ஆறறிவு பெற்றுப் பேசும் குரங்குகள் வாழ்ந்ததற்கு உலக வரலாறுகளில் எந்த சான்றுகளும் இல்லை என்று அறுதியிட்டு கூறுகிறார்.

    மேலும், அரக்கர், இராட்சதர் என்று தனிப்பிரிவினர் இருந்திருக்கவில்லை. பத்துத் தலைகளும், அச்சமூட்டும் கொடிய புறத்தோற்றமும் கொடுமைக்காரர்களுக்கு ஒரு கற்பனையான அடையாளம் மட்டுமே என்ற வகையில், ‘ஆறு மில்லியன் யூதர்களைக் கொன்று புதைத்த அடால்ஃப் ஹிட்லர், விஷ வாயுவிலும் மற்ற வழிகளிலும் பல்லாயிரம் பேரைக் கொன்று குழியில் மூடிய சதாம் ஹுசேன் போன்ற அரக்க வர்கத்தினர் உலகில் ஒவ்வொரு யுகத்திலும் பிறந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அந்த அரக்கர் அனைவரும் முழுக்க முழுக்க மனித உருக்கொண்டவரே’ என்ற ஆசிரியரின் நச்சென்ற குறிப்பின் மூலம் தெளிவாக்கப்படுகிறது. அந்த வகையில் ஆசிரியரின், ‘பத்து தலைகள், வெளியே நீட்டிய பற்கள், குரங்கு வாய்கள், வானர வால்கள் ஆகியவற்றை வடிகட்டி, முக்கிய கதாபாத்திரங்களை மனிதராகக் கருதி கதை ஓட்டத்தை மானிட நிகழ்ச்சிகளாக மாற்றினால் இராம கதை இனியதாய் சுவைக்கக் கூடிய, நம்பக்கூடிய ஓர் இதிகாசக் காவியமாகப் புத்துயிர் பெற்று எழுகிறது’ என்ற அவருடைய மாற்றுக்கோணமும் நாடகத்தின் போக்கை முழுமையாக உணர்ந்துகொள்ள வழியமைக்கிறது. இப்படி இராம காதையை ஒரு சாதாரண இதிகாசக் காவியமாக எடுத்துக்கொள்ளும் பட்சத்தில் அடுத்து வரும் புதிய தலைமுறைகளில் மதப்போராட்டம் படிப்படியாய் குறைவதற்கு வாய்ப்பிருக்கிறது என்று அவர் குறிப்பிடும் மற்றொரு கருத்தும் முக்கியமாக சிந்திக்கத்தக்கது.

    புத்தரைப்போல, மகாவீரர் போல இராமன் இந்து மதத்தையோ அல்லது வேறு எந்த மதத்தையோ பரப்பவில்லை என்ற வகையில் இராமனை தெய்வீக நாயகனாகப் போற்றுவதற்குரிய எந்த சிறப்பான அம்சமும் அவன் வரலாற்றில் இல்லை என்ற யதார்த்த வாதத்தையும் முன்வைக்கிறார். அசோக மன்னன் புத்த மதத்தை உலகெங்கும் பரப்பியதைப்போல இராமன் இந்து மதத்தை பரப்ப எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்கிறார். குறைந்தபட்சம் சிந்திக்கத்தக்க, பொறிக்கத் தகுந்த பொன்மொழிகளோ அல்லது செம்மொழிகளோ கூட பேசியதில்லை என்பதையும் சுட்டிக்காட்டுகிறார். இறைவனே நேரடியாக வந்து பகவத்கீதையைப் படைத்தார் என்பதும் வாதத்திற்குரிய ஒரு வரலாற்றுத் தகவல் என்கிறார் இந்த அறிவியல் விஞ்ஞானி. உலக மாகாவியமான மகாபாரதத்தைப் படைத்த வியாசரே கீதையையும் படைத்திருக்க வேண்டும் என்கிற தமது முடிவையும் ஆணித்தரமாக முன்வைக்கிறார்.
    புராண காலத்தில், அக்காலச் சூழலில் நடந்த உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட சுவையானதொரு காவியம் இதுவே தவிர இதற்கு வேறு எந்த இறை முலாம் பூச வேண்டியத் தேவை இல்லை என்பதை பல எடுத்துக்காட்டுகளுடன் தெளிவாக அறுதியிட்டுக் கூறுகிறார் ஆசிரியர்.

    இவர்தம் பார்வையில் இராவணன் பாத்திரப் படைப்பைப் பற்றிச் சில வரிகள் :

    தங்கை சூர்ப்பணகையை இலக்குவன் அவமானம் செய்ததால், இராவணன் சீதையைக் களவாடிச் சென்று, பலிவாங்கித் தண்டிக்கப் பட்டான்.

    சீதாயணம் பற்றிய தெளிவு:

    இராமகதை உண்மையாக நிகழ்ந்தது என்பதற்கான உறுதி இருப்பினும், கம்பரும், பின்னால் இந்தி மொழியில் எழுதிய துளசிதாசரும் மூலக்கதையை சற்று மாற்றியுள்ளதாக இராஜாஜி குறிப்பிடுகிறார். வால்மீகி இராமனைக் கடவுளின் அவதாரமாகச் சித்தரிக்கவில்லை என்றும், இராமன் தன்னை ஒரு அவதார தேவனாகக் கருதவில்லை என்றும் இராஜாஜி எழுதியுள்ளதை குறிப்பிடுகிறார்.

    இராமாயணம், மகாபாரதம் போன்ற நமது புராணக் கதைகள் அனைத்தும் ஆணாதிக்க வழிபாடுகளையே, பல்லாயிரம் ஆண்டுகளாகப் பறைசாற்றி வருகின்றன.

    இராமன் சீதைக்குச் செய்த கொடுமையால் மனம் நொந்து, இறுதியில் ஆற்று நீரில் மூழ்கித் தன்னுயிரை மாய்த்துக் கொண்டான்.
    பெண்கள் ஆணாதிக்க உலகில்தான் அன்று தொட்டு வாழ்கிறார். சங்க காலத்திலும் சரி, இராமன் காலத்திலும் சரி, இந்தக் காலத்திலும் சரி, ஆடவர் பெண்ணை இரண்டாந்தரப் பிறவியாய்த்தான் நடத்தி வருகிறார். இராமன் முழுக்க முழுக்க ஓர் ஆணாதிக்க மன்னன். சீதா அவனுக்கு இணையான மனைவியன்று; ஒரு சேவகி !

    கடவுள் படைப்பிலே நுட்ப ஞானமுள்ள, தாய்மைக்கான நுணுக்க உறுப்புள்ள பெண்ணே முதலில் உருவாக்கப் பட்டு, ஆணை அவளுக்கு உதவும் ஒரு கருவியாய் பிறகு வடிவாக்கியது. ஆனால் நடந்ததென்ன, நடப்பதென்ன ?
    ஆணின் கைப் பொம்மையாகப் பெண் தன்னிலை மறந்து, வல்லமை இழந்து, உரிமையற்று ஆடி வருகிறாள்.

    சீதாயணத்தின் அறிவிப்பு இதுதான் என்று இந்நூல் ஆசிரியரும், அறிவியல் விஞ்ஞானியுமான திரு ஜெயபாரதன் குறிப்பிடுவது ஆழ்ந்து சிந்திக்கத்தக்கது.

    சீதாயணம் எனும் இந்நூல் பெண்ணினத்திற்குப் பெருமை சேர்க்கும் ஒரு வித்தியாசமான சிந்தையை ஊக்குவிக்கும் ஒரு நூல் என்றே கூற முடிகிறது. ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்வது மட்டுமே எக்காலத்திற்கும் பொருந்தும் ஒரு நடைமுறை என்றாலும், ஆணாதிக்கம் மலிந்துவிட்ட ஒரு சமூகத்தில் ஒரு பெண்ணின் பாதுகாப்பு என்பது பல வகையில் கேள்விக்குறியாகவே இருந்துகொண்டிருக்கிறது. இது அரச குமாரிக்கும் பொருந்தும் என்றே இந்நூல் நிரூபிக்கிறது. பெண்ணியம் என்ற பெயரில் பெண் தன் விருப்பம்போல் எப்படியும் வாழலாம், மூத்தோர் சொல் பழமைவாதம், பெண் என்பவள் எந்தக் கட்டுப்பாடும் இன்றி தன்னிச்சையாக எதையும் பேசி, எப்படியும் வாழலாம் என்ற போக்கை எவ்விடத்தும் கிஞ்சித்தும் வெளிப்படுத்தாமல், வெகு இயல்பாக ஒரு பெண்ணின் கோணத்திலிருந்து தன்னிலையை உணர்த்தும் ஒரு உன்னத கோணத்தில் நடுநிலையுடன் படைக்கப்பட்டிருப்பதே இந்நூலின் வெற்றி என்றே எண்ணத் தோன்றுகின்றது. அந்த வகையில் பெண்ணினம் போற்றும் ஒரு சிறந்த நூலாசிரியர் என்ற பட்டியலில் ஆசிரியர் திரு ஜெயபாரதன் நிலைத்த இடம் பிடிக்கிறார் என்பதே நிதர்சனம்.

    சீதாயணம் நாடகம் மின்னூல் வடிவில் இங்கே காணலாம்

    Share
  • தமிழ்த் தேசியவாதியுடன் சிறப்பு நேர்காணல்

    பவள சங்கரி

    தமிழ்த் தேசியவாதி ஐயா திரு பழ.நெடுமாறன் 1933 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10ஆம் நாள் , கி. பழநியப்பனார் மற்றும் பிரமு அம்மையாருக்கும் தவப்புதல்வனாய்ப் பிறந்தவர். இவரது தந்தையார் மதுரைத் தமிழ்ச் சங்க செயலாளராகவும், மதுரை திருவள்ளுவர் கழக நிறுவனராகவும் பணியாற்றியவர். 1942 ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற முத்தமிழ் மாநாடு, 1948 ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற தமிழ்த் திருநாள், 1956 ஆம் ஆண்டு மதுரைத் தமிழ்ச் சங்கப் பொன்விழா போன்ற மாபெரும் தமிழ் மாநாடுகளைச் சிறப்புற நடத்திய பெருமை அவர்தம் தந்தையாரையேச் சாரும். பழ.நெடுமாறன் அவர்களுக்கு பார்வதி என்ற மனைவியாரும், ஒரு தமக்கை, ஒரு தங்கை, மூன்று தம்பிகளும் உள்ளனர்.

    ஆரம்பக் காலத்தில் மகாத்மா காந்தி, காமராசர் மீது கொண்ட பற்றின் காரணமாக இந்திய தேசிய காங்கிரசு இயக்கத்தில் இணைந்து பணியாற்றினார். இந்திரா காந்தி அம்மையார் மதுரையில் தாக்கப்பட்ட போது அவரை உயிருடன் மீட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. திரு காமராசர் அவர்கள் நெடுமாறன் ஐயாவின் துணிவையும் நற்குணத்தையும் வெகுவாகப் பாராட்டி அவருக்கு “மாவீரன்” என்ற பெயரையும் சூட்டினார். சில கருத்து வேறுபாடுகளினால் காங்கிரசை விட்டு வெளியேறியவர் , பின்னர் காமராசர் காங்கிரசு என்ற இயக்கத்தை தோற்றுவித்தார். ஈழப் பிரச்சனையில் முழுமையாகத் தம்மை ஈடுபடுத்திக்கொண்டு தமிழர்களின் நலன் கருதி தமிழர் தேசிய இயக்கத்தைத் துவக்கினார். பதவிக்காகவேண்டி தேர்தல் அரசியலில் ஈடுபடுவதைத் தவிர்த்து முற்றிலும் தமிழ் மக்களுக்கான போராட்டங்களை மட்டுமே முன்னிறுத்தும் சமூக நலப்பணி அரசியல் வழியைத் தேர்ந்தெடுத்து செயல்பட்டு வருகிறார்.

    DSCN2103
    இந்தியாவில் தூக்குத் தண்டனையை அறவே நீக்க வேண்டும் என்பதற்காக தமிழகமெங்கும் பெரும் இயக்கத்தை நடத்தியதோடு சென்னையில் ஐம்பதினாயிரம் பேரைத் திரட்டி மரண தண்டனை ஒழிப்பு ஊர்வலம் நடத்தியதன் மூலம் பெரும் விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தியவர் இவர். 1983 ஆம் ஆண்டில் கொழும்பில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட துக்கமான நிகழ்வின்போது 5000 தொண்டர்களுடன், மதுரையிலிருந்து இலங்கை நோக்கி தமிழர் தியாகப் பயணம் மேற்கொண்டார். 1991 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டிருந்த காயமடைந்த, ஊனமுற்ற விடுதலைப் புலிகளின் நிலைமை குறித்து தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு முறையிட்டு அவர்கள் விடுதலை பெற பெரிதும் உதவினார். 2000 ஆம் ஆண்டில் வீரப்பன், கன்னட நடிகர் இராசகுமாரை கடத்திய போது காட்டுக்குள் சென்ற மீட்புக் குழுவிற்குத் தலைமை ஏற்றுச் சென்று வீரப்பனிடம் பேசி இராசகுமாரை விடுவிக்கவும் உதவியவர். இதன் விளைவாக இரு மாநிலங்களுக்கிடையே மூளவிருந்த பெரும் இனக் கலவரத்தைத் தடுத்து நிறுத்திய பெரும்பேறும் பெற்றவர் இவர். 2000 ஆம் ஆண்டில் வீரப்பனுக்கு உதவியவர்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் தடா சட்டப்படிக் கைது செய்யப்பட்டு அதன் காரணமாக மைசூர் சிறையில் வாடிய 121 அப்பாவி ஊர்க்காரர்களின் வழக்கைச் சிறந்த வழக்கறிஞர்களைக் கொண்டு நடத்தி அவர்களில் 117 பேரின் விடுதலைக்கு வழி வகுத்த உத்தமரும் இவர்தான்.

    மாணவப் பருவத்திலிருந்து இன்று வரை தமிழர்களின் நலம் சார்ந்த பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு அதன்பொருட்டு சுமார் 50 க்கும் மேற்பட்ட முறை கைது செய்யப்பட்டு காவலிலும் சிறையிலும் நாட்கணக்கிலும் மாதக் கணக்கிலும் வைக்கப்பட்டவர். ஐயா அவர்கள் மக்கள் நலன் கருதி தமிழகத்தின் ஒன்றிரண்டு சிறைகளைத் தவிர ஏனைய அனைத்துச் சிறைகளிலும் இருந்திருக்கிறார் என்றால் அது மிகையாகாது.

    DSCN2039

    DSC_0600[1]

    1611e269-dc52-499d-a5a6-359194b3e624சமீபத்தில் ஈரோடு திருமுறைக்கழக நிறுவனர் ரா.ப. தங்கவேலனார் நூற்றாண்டு விழா மற்றும் பெரிய புராணப் பேரொளி உயர்திரு ஈரோடு தங்க.விசுவநாதன் அவர்களின் பவள விழா நிகழ்வில் கலந்துகொண்டு, அவ்வமயம் அடியேனின் ’கடைச்சங்கத்தில் கொங்கு கலாச்சாரம்’ என்ற நூல் உலகத் தமிழினத் தலைவர் திருமிகு பழநெடுமாறன் அவர்களால் சிறப்பாக வெளியிடப்பட்டது. நூல் அவர் கையில் கிடைத்த குறுகிய கால அவகாசத்திலேயே நூலின் தலைப்பினாலேயே தாம் மிகவும் ஈர்க்கப்பட்டதால், வாசிக்கும் ஆர்வம் ஏற்பட்டு விரைவில் பெரும்பகுதி படித்ததாகவும், பல நூல்கள் அரைத்த மாவையே அரைத்துக்கொண்டிருப்பதைப் போல் அல்லாமல் இந்நூல் ஒரு புதிய கோணத்தில் ஆய்வு செய்யப்பட்டிருப்பதைத் தாம் மகிழ்ந்து வரவேற்பதாகவும், அதற்காகவே தமது மனம் நிறைந்த பாராட்டுகளை வழங்குவதாகவும் ஐயா அவர்கள் பேசியது மிகவும் உற்சாகம் அளிக்கக்கூடியதாக இருந்தது. நூல் பற்றிய பல விளக்கங்களை பொறுமையாகக் கேட்டறிந்ததோடு விரிவாக எழுதுவதாகவும் கூறியுள்ளார். ஐயா அவர்கள் அடுத்த ஆய்வு நூலுக்கான அச்சாரமும் போட்டு வாழ்த்தியது மன நிறைவை ஏற்படுத்தியது. நிறை குடங்கள் என்றும் நீர் தளும்புவதில்லை என்று முழுமையாக உணர்ந்த தருணமும் இதுதான்…. இவ்வரிய தருணத்தில் ஐயா அவர்களுடன் நம் வல்லமை இதழுக்காக மேற்கொண்ட சிறப்பு நேர்காணலின் தொகுப்புகளைக் கீழே காணலாம்:

    எங்களுடைய பல விதமான ஐயங்களுக்கு மிகத் தெளிவாக பதில் அளித்து தம்முடைய நெருக்கடியான நேரச்சூழலிலும் பல மணித்துளிகளை நமக்காகச் செலவிட்ட ஐயா பழ.நெடுமாறன் அவர்களின் மனிதம் போற்றும் பேராண்மையை வணங்கி விடைபெற்றோம்.

    உடன் இருந்து உதவியதோடு ஐயாவின் உள்ளம் அறிந்து மனம் நெகிழ்ந்து போற்றி, தம் ஐயங்களையும் தெளிவு பெற்ற தமிழர், இன்முகம் நிறை வல்லமை மிக்க இளைஞர் திரு அகரம் பார்த்திபன் அவர்களுக்கும் வாழ்த்துகள்.

    நன்றி

    அன்புடன்

    பவள சங்கரி

    Share
  • சிவவாக்கியர்

    பவள சங்கரி

    im20110164sivavakkiyar

    ஐயிரண்டு திங்களாய் அடங்கி நின்ற தூமையே
    கையிரண்டு காலிரண்டு கண்ணிரண்டும் ஆகியே
    உயிராவது எதுவடா? உடம்பாவது எதுவடா ?
    உயிரையும் உடம்பையும் ஒன்றுவிப்பது எதுவடா?
    உயிரினால் உடம்பெடுத்த உண்மை ஞானியே சொல்லடா ?

    – சிவவாக்கியர்

    பொருள் :

    ஒரு முழுமையான உயிரினமாய் இந்த பூமியில் வலம்வரும் உன்னால் உன் மூலம் அறிய இயலுமா? ஒரு துளி நீரில் உருவாகி, கை, கால், கண், மூக்கு, செவி என பல உறுப்புகளும் தோன்றியது எங்கனம்? ஒவ்வொன்றையும் தோற்றுவித்து அனைத்தையும் இணைத்து ஓர் உருவமாய் அதைச் செயல்படச் செய்தது யார்? இதற்கும் மேலாக உயிர் என்ற ஒன்றை அதனுள் புகுத்தி, ஆன்மா என்றொரு சக்தியையும் ஒளித்து வைத்திருப்பதை அறிந்தவர் எவர்? இவ்வுயிர் அந்த உடலோடு கலப்பது எப்போது? எங்கனம்? உயிரினால் உடலெடுத்து அலையும் ஆணவத்தின் அரசனே பதில் கூறும்!

    ஆம் நம் உயிரைச் சுமந்துத் திரியும் உடலின் ஆக்கத்தையே புரிந்துகொள்ள முடியாத அகங்காரமும், ஆணவமும் ஆட்டிப்படைக்கும் நிலையிலிருந்து மீண்டுவந்தால்தான் நம் பெருமூளை விரிவடைந்து இறைசக்தியை முழுமையாய் உணரும் பிரபஞ்சப் பார்வை விரிவடையும். ஆக, அகந்தையை அழிப்பது மட்டுமே இறை நிலையின் முதற்படி. இறைமையை உணரச்செய்வதும் இதுதான்!

    Share
  • ஆணவ மலம்

    பவள சங்கரி

    zw95

    இவ்வுலகில் அழிவின்றி நிலைத்திருப்பவையாக நம் சைவச் சித்தாந்தங்கள் கூறுபவை – பதி, பசு, பாசம் என்பன. பதி எனும் இறையை அடைவதற்கு பசு எனும் உயிர்களுக்குத் தடையாக இருப்பவை ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களே.

    உயிர்கள் சத்தியம், அசத்தியம் எனும் இரண்டையும் பகுத்துணர இயலாத இருளாக அறிவொளியை மறைக்கக்கூடியதே இந்த ஆணவ மலம். இறை சக்தியை அண்டவிடாமல் நீச மயக்கத்தில் உழலச் செய்து, அறிவை கீழ் நிலைக்கு எடுத்துச்சென்று பொய் பக்தியை உருவாக்குவதும் இந்த ஆணவ மலமே.

    கன்மம் என்பது கர்ம வினையின்பாற்பட்டது. அவரவர் செய்யும் வினைக்கேற்ப அதனதன் பலாபலன்கள் மாறுபடுகிறது. நற்பண்புகளுடன் நல்வினையாற்றுவோர் நற்பலனையும், தீய பண்புகளுடன் தீவினையாற்றுவோர் தீய பலன்களையும் அனுபவிப்பர் என்பது நியதி.

    உடல், உலகு மற்றும் உலகில் காணும் அனைத்துப் பொருட்களையுமே மாயையைக் கொண்டே இறைவன் படைக்கிறான் என்பது சைவசித்தாந்தத்தின் வாக்கு. அந்த வகையில் இந்த மலம் உயிர்களுக்குப் பகையாகக் கருதப்பட்டாலும், அறிவின் மயக்கத்தை நீக்கவல்ல ஒளியைப் பாய்ச்சுவதானால் நல்வழியில் தீண்டப்படும் மாயையினால் இறைவனை அடைய முடியும் என்பது சித்தர் வாக்கு. தீய வழியில் பயன்படுத்தப்படும் மாயை ஒருவரை அதல பாதாளத்தில் கொண்டு தள்ளிவிடும் என்பதும் இயற்கை நியதி. இதற்கு இப்பூவுலகின்கண் காணும் ஆயிரம் நிகழ்வுகளே சாட்சி!

    Share
  • பஞ்சமாபாதகம்

    பவள சங்கரி

    கொலை, பொய், களவு, கள்ளூண், குருநிந்தை ஆகிய பஞ்சமாபாதகங்கள் என்பது மிகவும் பெரியதொரு பாவம் என்றுதான் நம்மில் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அவற்றுக்கெல்லாம் கூடப் பரிகாரமும் கழுவாயும் உண்டு என்கிறது புறநானூறு.

    வேதத்தில் வல்லவர்களான அந்தணர்களைக் கொல்வது, பெண் கொலை புரிவது , குழந்தைகளை அழிப்பது போன்றவைகள் கொடும் பாவம் என்று கருதப்பட்டாலும் இந்தப் பாவங்களையெல்லாம் விடக் கொடுமையானது பொய் சொல்வதுதானாம்.

    பொன்ற வான்அந்தணர் பெண் புதல்வரைக்
    கொன்ற பாதகத்தில் கொடும் பொய்
    என்பது செஞ்சடை வேதிய தேசிகர் வாக்கு. – திருப்பனந்தாள் புராணம்

    “பொய் சொன்ன வாய்க்குப் போஜனம் கிடைக்காது” என்ற பழமொழி உறுதியாகச் சொல்லும் உண்மையும் இதுதான்.

    வள்ளுவப் பெருந்தகை இதையே

    பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
    செய்யாமை செய்யாமை நன்று (297)

    அதாவது பொய்யாமையை மட்டும் கடைபிடித்தால் போதும்; மற்ற எந்தவொரு தர்மமும் நீ செய்ய வேண்டிய தேவையில்லை என்கிறார்.

    Share