தமிழ்த் தேசியவாதியுடன் சிறப்பு நேர்காணல்

0

பவள சங்கரி

தமிழ்த் தேசியவாதி ஐயா திரு பழ.நெடுமாறன் 1933 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10ஆம் நாள் , கி. பழநியப்பனார் மற்றும் பிரமு அம்மையாருக்கும் தவப்புதல்வனாய்ப் பிறந்தவர். இவரது தந்தையார் மதுரைத் தமிழ்ச் சங்க செயலாளராகவும், மதுரை திருவள்ளுவர் கழக நிறுவனராகவும் பணியாற்றியவர். 1942 ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற முத்தமிழ் மாநாடு, 1948 ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற தமிழ்த் திருநாள், 1956 ஆம் ஆண்டு மதுரைத் தமிழ்ச் சங்கப் பொன்விழா போன்ற மாபெரும் தமிழ் மாநாடுகளைச் சிறப்புற நடத்திய பெருமை அவர்தம் தந்தையாரையேச் சாரும். பழ.நெடுமாறன் அவர்களுக்கு பார்வதி என்ற மனைவியாரும், ஒரு தமக்கை, ஒரு தங்கை, மூன்று தம்பிகளும் உள்ளனர்.

ஆரம்பக் காலத்தில் மகாத்மா காந்தி, காமராசர் மீது கொண்ட பற்றின் காரணமாக இந்திய தேசிய காங்கிரசு இயக்கத்தில் இணைந்து பணியாற்றினார். இந்திரா காந்தி அம்மையார் மதுரையில் தாக்கப்பட்ட போது அவரை உயிருடன் மீட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. திரு காமராசர் அவர்கள் நெடுமாறன் ஐயாவின் துணிவையும் நற்குணத்தையும் வெகுவாகப் பாராட்டி அவருக்கு “மாவீரன்” என்ற பெயரையும் சூட்டினார். சில கருத்து வேறுபாடுகளினால் காங்கிரசை விட்டு வெளியேறியவர் , பின்னர் காமராசர் காங்கிரசு என்ற இயக்கத்தை தோற்றுவித்தார். ஈழப் பிரச்சனையில் முழுமையாகத் தம்மை ஈடுபடுத்திக்கொண்டு தமிழர்களின் நலன் கருதி தமிழர் தேசிய இயக்கத்தைத் துவக்கினார். பதவிக்காகவேண்டி தேர்தல் அரசியலில் ஈடுபடுவதைத் தவிர்த்து முற்றிலும் தமிழ் மக்களுக்கான போராட்டங்களை மட்டுமே முன்னிறுத்தும் சமூக நலப்பணி அரசியல் வழியைத் தேர்ந்தெடுத்து செயல்பட்டு வருகிறார்.

DSCN2103
இந்தியாவில் தூக்குத் தண்டனையை அறவே நீக்க வேண்டும் என்பதற்காக தமிழகமெங்கும் பெரும் இயக்கத்தை நடத்தியதோடு சென்னையில் ஐம்பதினாயிரம் பேரைத் திரட்டி மரண தண்டனை ஒழிப்பு ஊர்வலம் நடத்தியதன் மூலம் பெரும் விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தியவர் இவர். 1983 ஆம் ஆண்டில் கொழும்பில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட துக்கமான நிகழ்வின்போது 5000 தொண்டர்களுடன், மதுரையிலிருந்து இலங்கை நோக்கி தமிழர் தியாகப் பயணம் மேற்கொண்டார். 1991 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டிருந்த காயமடைந்த, ஊனமுற்ற விடுதலைப் புலிகளின் நிலைமை குறித்து தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு முறையிட்டு அவர்கள் விடுதலை பெற பெரிதும் உதவினார். 2000 ஆம் ஆண்டில் வீரப்பன், கன்னட நடிகர் இராசகுமாரை கடத்திய போது காட்டுக்குள் சென்ற மீட்புக் குழுவிற்குத் தலைமை ஏற்றுச் சென்று வீரப்பனிடம் பேசி இராசகுமாரை விடுவிக்கவும் உதவியவர். இதன் விளைவாக இரு மாநிலங்களுக்கிடையே மூளவிருந்த பெரும் இனக் கலவரத்தைத் தடுத்து நிறுத்திய பெரும்பேறும் பெற்றவர் இவர். 2000 ஆம் ஆண்டில் வீரப்பனுக்கு உதவியவர்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் தடா சட்டப்படிக் கைது செய்யப்பட்டு அதன் காரணமாக மைசூர் சிறையில் வாடிய 121 அப்பாவி ஊர்க்காரர்களின் வழக்கைச் சிறந்த வழக்கறிஞர்களைக் கொண்டு நடத்தி அவர்களில் 117 பேரின் விடுதலைக்கு வழி வகுத்த உத்தமரும் இவர்தான்.

மாணவப் பருவத்திலிருந்து இன்று வரை தமிழர்களின் நலம் சார்ந்த பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு அதன்பொருட்டு சுமார் 50 க்கும் மேற்பட்ட முறை கைது செய்யப்பட்டு காவலிலும் சிறையிலும் நாட்கணக்கிலும் மாதக் கணக்கிலும் வைக்கப்பட்டவர். ஐயா அவர்கள் மக்கள் நலன் கருதி தமிழகத்தின் ஒன்றிரண்டு சிறைகளைத் தவிர ஏனைய அனைத்துச் சிறைகளிலும் இருந்திருக்கிறார் என்றால் அது மிகையாகாது.

DSCN2039

DSC_0600[1]

1611e269-dc52-499d-a5a6-359194b3e624சமீபத்தில் ஈரோடு திருமுறைக்கழக நிறுவனர் ரா.ப. தங்கவேலனார் நூற்றாண்டு விழா மற்றும் பெரிய புராணப் பேரொளி உயர்திரு ஈரோடு தங்க.விசுவநாதன் அவர்களின் பவள விழா நிகழ்வில் கலந்துகொண்டு, அவ்வமயம் அடியேனின் ’கடைச்சங்கத்தில் கொங்கு கலாச்சாரம்’ என்ற நூல் உலகத் தமிழினத் தலைவர் திருமிகு பழநெடுமாறன் அவர்களால் சிறப்பாக வெளியிடப்பட்டது. நூல் அவர் கையில் கிடைத்த குறுகிய கால அவகாசத்திலேயே நூலின் தலைப்பினாலேயே தாம் மிகவும் ஈர்க்கப்பட்டதால், வாசிக்கும் ஆர்வம் ஏற்பட்டு விரைவில் பெரும்பகுதி படித்ததாகவும், பல நூல்கள் அரைத்த மாவையே அரைத்துக்கொண்டிருப்பதைப் போல் அல்லாமல் இந்நூல் ஒரு புதிய கோணத்தில் ஆய்வு செய்யப்பட்டிருப்பதைத் தாம் மகிழ்ந்து வரவேற்பதாகவும், அதற்காகவே தமது மனம் நிறைந்த பாராட்டுகளை வழங்குவதாகவும் ஐயா அவர்கள் பேசியது மிகவும் உற்சாகம் அளிக்கக்கூடியதாக இருந்தது. நூல் பற்றிய பல விளக்கங்களை பொறுமையாகக் கேட்டறிந்ததோடு விரிவாக எழுதுவதாகவும் கூறியுள்ளார். ஐயா அவர்கள் அடுத்த ஆய்வு நூலுக்கான அச்சாரமும் போட்டு வாழ்த்தியது மன நிறைவை ஏற்படுத்தியது. நிறை குடங்கள் என்றும் நீர் தளும்புவதில்லை என்று முழுமையாக உணர்ந்த தருணமும் இதுதான்…. இவ்வரிய தருணத்தில் ஐயா அவர்களுடன் நம் வல்லமை இதழுக்காக மேற்கொண்ட சிறப்பு நேர்காணலின் தொகுப்புகளைக் கீழே காணலாம்:

எங்களுடைய பல விதமான ஐயங்களுக்கு மிகத் தெளிவாக பதில் அளித்து தம்முடைய நெருக்கடியான நேரச்சூழலிலும் பல மணித்துளிகளை நமக்காகச் செலவிட்ட ஐயா பழ.நெடுமாறன் அவர்களின் மனிதம் போற்றும் பேராண்மையை வணங்கி விடைபெற்றோம்.

உடன் இருந்து உதவியதோடு ஐயாவின் உள்ளம் அறிந்து மனம் நெகிழ்ந்து போற்றி, தம் ஐயங்களையும் தெளிவு பெற்ற தமிழர், இன்முகம் நிறை வல்லமை மிக்க இளைஞர் திரு அகரம் பார்த்திபன் அவர்களுக்கும் வாழ்த்துகள்.

நன்றி

அன்புடன்

பவள சங்கரி

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *