வேளாளர் பெண்கள் கல்லூரியின் ஆண்டு மலர் (2015)

பவள சங்கரி

பொதுவாக ஒரு கல்லூரி அல்லது பள்ளியின் கற்பிக்கும் திறன், ஆசிரிய உறுப்பினர்கள், உள்கட்டமைப்பு, மாணவர்களின் ஆற்றல் போன்ற அனைத்தையும்  குறிப்பிட்ட அந்த கல்வி நிறுவனங்களின் மூலம் வெளியிடப்படும் ஆண்டு மலர் வழியாக அறிந்துகொள்ள இயலும். அந்த வகையில் உயர் மேன்மைக்குரிய முதல் தர தகுதி பெற்ற வேளாளர் பெண்கள் தன்னாட்சிக் கல்லூரியின் ஆண்டு மலர் மேலும் தனித்துவம் பெற்றுள்ளது என்பதையும் குறிப்பிட முடிகிறது. உயர்தரமான வழுவழு காகிதங்களுடன், வண்ணப் படங்களும் நவீன ஓவியங்களுடன் அட்டைப் படமும், நூலின் புறத்தோற்றத்தை கவர்ச்சிகரமாக வைத்திருக்கிறது. கல்லூரி ஆரம்பத்தின் ஆணிவேர் முதற்கொண்டு, இன்றும் கல்லூரி சீரான வளர்ச்சிப் பாதையில் பயணிக்க உறுதுணையாய் இருக்கும் நிர்வாகக் குழுவினர், மீப்பெரும் கல்வியாளர்களை உருவாக்கும் ஆசிரியப் பெருமக்கள், உதவியாளர்கள் என அனைவரையும் அழகாகப் படம்பிடித்துக்காட்டி தற்போது இக்கல்விக் கழகத்தில் இணைந்திருப்போரையும், இனி இணையத் தயாராக இருப்போரையும் பாரபட்சமின்றி கவர்ந்திருப்பதும் யதார்த்தம். தமது ஆசிரியப்பணிக்கு எந்தவித இடையூறும் இருக்காது என்ற உத்திரவாதத்தை புதிதாக இணைபவர்களுக்கு வழங்கும் விதமாக முப்பது ஆண்டுகளுக்கும் மேலான தங்கள் கல்விச் சேவையை தொடர்ந்து தங்கள் ஒரே கல்லூரியில் அளித்திருப்பவர்களை கௌரவித்துள்ளதை வெளிப்படுத்தியிருப்பது பாராட்டிற்குரியது. அதிக மதிப்பெண் பெற்று முதல் நிலையில் உள்ள மாணவர்களை உற்சாகப்படுத்தி, மேலும் புதிய மாணவர்களையும் ஊக்கப்படுத்தியிருப்பதும் நல்ல முயற்சி. போட்டிகளும் வாழ்க்கையின் வெற்றிக்கு அவசியம் என்பதையும் உணரச் செய்திருப்பதும், கல்வி முடித்து வெளியில் சென்று சாதனை படைத்துவரும் பழைய மாணவர்களை கண்டடைந்து வெளிக்கொணர்ந்திருப்பதும் சிறப்பு. நேர்காணல் மூலமாக, உண்மையான உழைப்பினால் உலக சாதனை புரிந்து வெற்றி கண்ட பெண்மணியை பேட்டிகண்டு அவர்தம் சக்தியை தங்கள் மாணவச் செல்வங்களுக்குள் ஊடுறுவச் செய்திருக்கும் முயற்சியும் அருமை!  இதில் பல மாணவிகளை பங்கேற்கச் செய்திருப்பதும் சிறப்பு.

ஒவ்வொரு துறை சார்ந்த முனைவர்களின் ஆய்வேடுகள் பற்றிய தகவல்களை அளித்திருப்பது ஆய்வாளர் ஆகப்போகிறவர்களுக்கு  சுவை கூட்டுவது. வழமைபோல் விளையாட்டுத் துறை, வித்தியாசமான நிகழ்வுகள், ஆய்வு மாணவர்களின் குறிபிடும்படியான சாதனைகள் என மிக இனிமையாக நீள்கிறது நூல்.

அடுத்து அனைத்திற்கும் முத்தாய்ப்பாக தமிழ்துறை ஆரம்பித்து, ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், ஊட்டச்சத்து மற்றும் உணவுக்கட்டுப்பாடு, கணினி அறிவியல், வணிகத்துறை, பொருளாதாரம், நூலகம் என அனைத்துத்துறைகளின் சிறப்புகளையும் மிக இயல்பாக எடுத்துரைத்துள்ள விதம் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து மாணவிகளின் படைப்பாற்றல் திறனை முழுமையாக வெளிப்படுத்தும் வகையில் வித்தியாசமான, சுவையான பல படைப்புகளை வெளியிட்டு மாணவர்களை உற்சாகப்படுத்தியிருப்பதும் பாராட்டுதலுக்குரியது. அனைத்துப் படைப்புகளும் ஆக்கப்பூர்வமாகவும், மேன்மை பொருந்தியதாகவும் அமைந்திருப்பது கல்லூரியின் தரத்தை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையன்று.

இறுதியாக தேசிய சாரணர் இயக்கம், செஞ்சுருள் சங்கம், சுற்றுச் சூழல், சுகாதாரம், தொழில் முனைவோர் முன்னேற்றம், பசுமை இயக்கம், வெளிச்சங்கள் இலக்கிய அமைப்பு, கல்லூரி ஆண்டு மலர் ஆசிரியர் குழுவினரின் பக்கங்கள் என அனைத்து தன்னார்வத் துறையினரின் சாதனைகளையும் மிக அழகாக வடிவமைத்திருப்பது ஆக்கப்பூர்வமான செயல்.

ஆக வேளாளர் கல்லூரியின் 2015 ஆம் ஆண்டின் ஆண்டு மலர் பல சிறப்புகளைக் கொண்டதோடு, கல்லூரியின் தனிச்சிறப்புகளை முழுமையாக எடுத்தியம்புவதாக அமைந்திருக்கிறது. 200 பக்கங்கள் கொண்ட இந்த நூல் வாசிப்பவர்களை எந்த வகையிலும் தொய்வின்றி சுவையான வாசிப்பு அனுபவத்தை ஏற்படுத்தவல்லது என்பதில் ஐயமில்லை. இந்நூலை செம்மையாக வடிவமைத்துள்ள ஆசிரியர் குழுவினருக்கும், ஆகச் சிறந்த படைப்புகளை வழங்கி கல்லூரியின் நற்பெயரை நிலைநாட்டியுள்ள அனைத்து நல்லுள்ளங்களுக்கும், மாணவச் செல்வங்களுக்கும்  வல்லமை இதழின் வளமான வாழ்த்துகள்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *