‘மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்’

0

பவள சங்கரி

சீதாயணம் – மதிப்புரை

Seethayanam-cover-page-Small

AIbEiAIAAABDCJzb5f6r79updCILdmNhcmRfcGhvdG8qKGQ0ZDQwOTE4MDVkMzA4MjZjMjBkYzExYWQzODE2NWVmYzBkYjg2YWQwAUYq-HXl0fg_jIMRCjP1KRGW0E9Dஅணுசக்தி ஆக்கப்பணியில் 45 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் பெற்ற அறிவியல் விஞ்ஞானி திரு ஜெயபாரதன் தமிழ் இலக்கியப் பணியிலும் தம்முடைய சுவடுகளை ஆழப்பதித்துள்ளார். சீதாயணம் எனும் இந்நாடக நூலின் ஆசிரியரின் நாடகம் மிக வித்தியாசமான கோணத்தில் வரையப்பட்ட ஒன்று. நம் நாட்டில் ஆன்மீக நம்பிக்கை என்பது பெரும்பான்மை மக்களின் குருதியில் ஊறிக்கிடப்பதென்பது அனைவரும் அறிந்த உண்மை. இராமாயணம் என்ற மாகாவியத்தின் நாயகன் இராமச்சந்திரமூர்த்தியும், அவர்தம் தர்மபத்தினி சீதாதேவியும் மனிதராக அவதரித்தவர்கள் என்றாலும் அவதாரங்களான தெய்வங்களாகவே கருதப்பட்டு வழிவழியாக வழிபடப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் இராம காவியம் பெரிதும் போற்றி பரவப்பட்டு வருவதும் கண்கூடு. திரு ஜெயபாரதன் அவர்களின் சீதாயணம் சீதா தேவியின் தூய வாழ்வின் இன்னல்களும் அதற்கு காரணமானவர்களின் சாடல்களையும் முன்னிறுத்தி நியாயம் கேட்கும் ஒரு சீர்மிகு படைப்பு. சீதாதேவியின் துன்பங்களைப் பொருட்படுத்தாமல், அவளுடைய தூய உள்ளம் புரிபட்டபோதும், தனிப்பட்ட முறையில் அவள்மீது துளியும் சந்தேகம் இல்லாதபோழ்தும், ஊர் மக்களின் பேச்சுகளுக்கு செவிசாய்த்து சீதாதேவியை, இரண்டு குழந்தைகளுடன் தவ முனிவரின் பாதுகாப்பில் தபோவனத்திற்கு அனுப்பப்படுகிறாள். இந்த அடிப்படையில் ஒரு பெண்ணிற்கு நேர்ந்த கொடுமையை மிகத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டப்பட்ட ஒரு படைப்பு இது. சீதா தேவியை தெய்வீக அன்னையாகவும், இராமரை தெய்வ அவதாரமாகவும் வழிபடும் வழமை பாரத தேசத்தில் பல காலமாக உள்ளது. ஆனால் திரு ஜெயபாரதன் அவர்களின் கோணத்தில் இராமர் மானுடனாகப் பிறந்தவர் என்பதற்கான ஆதாரங்களைக் காட்டுவதோடு, ஆணாதிக்கப் போக்கினால் சீதா தேவி பட்ட துயரங்களை உணர்வுப்பூர்வமாக உள்ளம் உருகும் வகையில் சித்தரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பகவத் கீதையும் ஆண்டவன் படைத்தது அல்ல, வியாசரின் படைப்புதான் என்றும் ஆதாரங்கள் காட்டி பொது நம்பிக்கைகளை ஆட்டம் காணச்செய்கிறார்.

ஆரம்பத்தில் இந்த நூலுக்கான அணிந்துரையை எழுதவேண்டுமென திரு ஜெயபாரதன் அவர்கள் வற்புறுத்தியபோதும் என் மனம் அதற்குச் சம்மதிக்காததன் காரணம், நம் நாட்டில் பெரும்பாலான மக்கள் தெய்வமாக வழிபடும் சிறீஇராமச்சந்திரமூர்த்தி மற்றும் சீதாதேவி இருவரையும் விமர்சனத்திற்கு உள்ளாக்குவதன் மூலமாக அவர்களுடைய மனதைப் புண்படுத்தவேண்டி வருமோ என்பதுதான்.

13177440_1036013426487282_8635532580074961715_nஆனால் இப்போது எழுதவேண்டிய தேவை ஏற்பட்டதற்கும் காரணம் இல்லாமலில்லை. நான்கு பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தையைப் பெற்று அவர்களை சிறப்பான முறையில் வளர்த்து தம் கடமைகளை சரிவர செய்துமுடித்துள்ள ஒரு முதிய தகப்பனாரின் உணர்வுப்பூர்வமான உள்ளக்கிடக்கையை உதறித் தள்ளும் துணிவற்றுப் போனதுதான். திரு குகேச சங்கரன் அவர்கள் என் தந்தையார் என்ற கண்ணோட்டத்தைவிட, நான்கு பெண் குழந்தைகளின் தந்தையாக அவர்களை வளர்க்கும் தருணங்களில் சமூகத்தில் நடந்த பல்வேறு அவலங்களின் காட்சிகளைக் கண்டவர் என்பதோடு பரந்துபட்ட அனுபவ ஞானங்களையும் பெற்றவர் கூற்றில் இருந்த யதார்த்தப் பார்வையே இதனை எழுதத்தூண்டுகிறது. அந்த வகையில் திரு ஜெயபாரதன் அவர்கள் உலகத்து மாதர்கள் அனைவரும் தாம் பெற்ற பிள்ளைகளாகக் கருதி அவர்தம் நலனில் ஆழ்ந்த அக்கறையும், ஈடுபாடும் கொண்டு அந்தப் பின்னணியிலேயே இந்த நூலை எழுதி முடித்திருப்பதும்தான். ஆசிரியரின் நேர்மையான துணிச்சல் பாராட்டுதலுக்குரியது.

‘பெருமைக்குரிய ஒரு தேசீய மற்றும் பக்திப் பாரம்பரியத்திலே பிறந்து இந்திய விடுதலைப் போராட்டத்தில் பல ஆண்டுகள் மகாத்மா காந்தியின் கீழ் பணியாற்றி பங்கெடுத்துச் சிறை சென்ற தம் தந்தையார் சி.சிங்காரவேல் பாண்டியன் அவர்களால் முறையாக வளர்க்கப்பெற்றவர் திரு சி.ஜெயபாரதன் அவர்கள். ஐந்து வயது முதலே காலை ஆறு மணிக்கு நீராடி, பாரதியின் தேசீய, பக்திப் பாடல்களை அனுதினமும் காலைப் பிரார்த்தனையில் தந்தையுடன் கலந்து பல ஆண்டுகள் பாடி வந்ததால் பாரத நாட்டுப் பற்றும், பைந்தமிழ் மொழிப்பற்றும் திரு.சி.ஜெயபாரதன் அவர்கள் ரத்தத்திலும் மனத்திலும் பதிந்து ஊறி விட்டன’ என்ற, உயர்திரு வையவன் அவர்களின் பதிப்புரை மேலும் நம்பிக்கையளிப்பதாகவே உள்ளது.

குத்தீட்டியாய் சீதையின் உயிரினூடே குத்திக் கிழிக்கும் சொல்லம்புகளின் இரணம் ஒரு தந்தையின் நிலையிலிருந்து காணும்போது அவள் பட்ட வேதனையைவிடக் கொடிதாகிவிடுகிறது. வார்த்தை அம்புகளை சரமாரியாக ஏவி சீதையைக் கொன்ற இராமனை மன்னிக்கும் மனநிலையை ஒரு தந்தையிடம் எதிர்பார்ப்பது எங்கனம்? இறுதிவரை காப்பேன் என்று வாக்களித்து கைப்பிடித்த அன்பு மனைவியை வனவாசம் அனுப்பும் இராமன் அநீதி இழைத்தவன் சாதாரண மானுடப் பிறவியாக மட்டுமே இருக்கமுடியும் என்ற ஆசிரியரின் கணிப்பு மறுக்கவியலாதது.

“சீதையை இராமன் காட்டுக்கு அனுப்பும் உத்திர காண்ட அதிர்ச்சிக் காட்சியை நான் இராம கதையின் உச்சக் கட்டமாகக் கருதுகிறேன். இலங்காபுரியில் போரிட்டு சீதாவை மீட்ட காட்சியை நான் இராமகதையின் உச்சக் கட்டமாக எடுத்துக்கொள்ளவில்லை” என்ற ஆசிரியரின் கருத்து கவனிக்கப்பட வேண்டியவை.

கர்ப்பவதியாக காட்டிற்குத் துரத்தப்பட்ட சீதை லவ குசனை ஈன்றெடுத்து, வால்மீகி ஆசிரமத்தில் வாழ்நாளைக் கழித்து, இறுதியில் உயிரை மாய்த்துக்கொள்பவளை, பாரத தேசம், கணவன் இராமனுடன் இயைந்து வாழ்ந்த உன்னத தம்பதிகளாகக் காட்டித் தொழுது வருவதைப் பொறுக்க முடியாமல், தெய்வ அவதாரமாக வேடம் பெற்ற இராமனை மானிடனாக, மன்னவனாக மாற்றித்தன் ‘சீதாயணம்’ எழுதப்படுவதாக ஆசிரியர் குறிப்பிட்டிருப்பது விவாதத்திற்குரிய கருத்து என்றாலும் மனிதாபிமான அடிப்படையில் எவரும் மறுக்கவியலாத ஒன்று என்றே கூறமுடிகிறது. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இக்காவியம் நடந்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதை ஒப்புக்கொள்ளும் இந்த அறிவியல் விஞ்ஞானியான ஆசிரியர், மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அனுமன் போல ஆறறிவு பெற்றுப் பேசும் குரங்குகள் வாழ்ந்ததற்கு உலக வரலாறுகளில் எந்த சான்றுகளும் இல்லை என்று அறுதியிட்டு கூறுகிறார்.

மேலும், அரக்கர், இராட்சதர் என்று தனிப்பிரிவினர் இருந்திருக்கவில்லை. பத்துத் தலைகளும், அச்சமூட்டும் கொடிய புறத்தோற்றமும் கொடுமைக்காரர்களுக்கு ஒரு கற்பனையான அடையாளம் மட்டுமே என்ற வகையில், ‘ஆறு மில்லியன் யூதர்களைக் கொன்று புதைத்த அடால்ஃப் ஹிட்லர், விஷ வாயுவிலும் மற்ற வழிகளிலும் பல்லாயிரம் பேரைக் கொன்று குழியில் மூடிய சதாம் ஹுசேன் போன்ற அரக்க வர்கத்தினர் உலகில் ஒவ்வொரு யுகத்திலும் பிறந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அந்த அரக்கர் அனைவரும் முழுக்க முழுக்க மனித உருக்கொண்டவரே’ என்ற ஆசிரியரின் நச்சென்ற குறிப்பின் மூலம் தெளிவாக்கப்படுகிறது. அந்த வகையில் ஆசிரியரின், ‘பத்து தலைகள், வெளியே நீட்டிய பற்கள், குரங்கு வாய்கள், வானர வால்கள் ஆகியவற்றை வடிகட்டி, முக்கிய கதாபாத்திரங்களை மனிதராகக் கருதி கதை ஓட்டத்தை மானிட நிகழ்ச்சிகளாக மாற்றினால் இராம கதை இனியதாய் சுவைக்கக் கூடிய, நம்பக்கூடிய ஓர் இதிகாசக் காவியமாகப் புத்துயிர் பெற்று எழுகிறது’ என்ற அவருடைய மாற்றுக்கோணமும் நாடகத்தின் போக்கை முழுமையாக உணர்ந்துகொள்ள வழியமைக்கிறது. இப்படி இராம காதையை ஒரு சாதாரண இதிகாசக் காவியமாக எடுத்துக்கொள்ளும் பட்சத்தில் அடுத்து வரும் புதிய தலைமுறைகளில் மதப்போராட்டம் படிப்படியாய் குறைவதற்கு வாய்ப்பிருக்கிறது என்று அவர் குறிப்பிடும் மற்றொரு கருத்தும் முக்கியமாக சிந்திக்கத்தக்கது.

புத்தரைப்போல, மகாவீரர் போல இராமன் இந்து மதத்தையோ அல்லது வேறு எந்த மதத்தையோ பரப்பவில்லை என்ற வகையில் இராமனை தெய்வீக நாயகனாகப் போற்றுவதற்குரிய எந்த சிறப்பான அம்சமும் அவன் வரலாற்றில் இல்லை என்ற யதார்த்த வாதத்தையும் முன்வைக்கிறார். அசோக மன்னன் புத்த மதத்தை உலகெங்கும் பரப்பியதைப்போல இராமன் இந்து மதத்தை பரப்ப எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்கிறார். குறைந்தபட்சம் சிந்திக்கத்தக்க, பொறிக்கத் தகுந்த பொன்மொழிகளோ அல்லது செம்மொழிகளோ கூட பேசியதில்லை என்பதையும் சுட்டிக்காட்டுகிறார். இறைவனே நேரடியாக வந்து பகவத்கீதையைப் படைத்தார் என்பதும் வாதத்திற்குரிய ஒரு வரலாற்றுத் தகவல் என்கிறார் இந்த அறிவியல் விஞ்ஞானி. உலக மாகாவியமான மகாபாரதத்தைப் படைத்த வியாசரே கீதையையும் படைத்திருக்க வேண்டும் என்கிற தமது முடிவையும் ஆணித்தரமாக முன்வைக்கிறார்.
புராண காலத்தில், அக்காலச் சூழலில் நடந்த உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட சுவையானதொரு காவியம் இதுவே தவிர இதற்கு வேறு எந்த இறை முலாம் பூச வேண்டியத் தேவை இல்லை என்பதை பல எடுத்துக்காட்டுகளுடன் தெளிவாக அறுதியிட்டுக் கூறுகிறார் ஆசிரியர்.

இவர்தம் பார்வையில் இராவணன் பாத்திரப் படைப்பைப் பற்றிச் சில வரிகள் :

தங்கை சூர்ப்பணகையை இலக்குவன் அவமானம் செய்ததால், இராவணன் சீதையைக் களவாடிச் சென்று, பலிவாங்கித் தண்டிக்கப் பட்டான்.

சீதாயணம் பற்றிய தெளிவு:

இராமகதை உண்மையாக நிகழ்ந்தது என்பதற்கான உறுதி இருப்பினும், கம்பரும், பின்னால் இந்தி மொழியில் எழுதிய துளசிதாசரும் மூலக்கதையை சற்று மாற்றியுள்ளதாக இராஜாஜி குறிப்பிடுகிறார். வால்மீகி இராமனைக் கடவுளின் அவதாரமாகச் சித்தரிக்கவில்லை என்றும், இராமன் தன்னை ஒரு அவதார தேவனாகக் கருதவில்லை என்றும் இராஜாஜி எழுதியுள்ளதை குறிப்பிடுகிறார்.

இராமாயணம், மகாபாரதம் போன்ற நமது புராணக் கதைகள் அனைத்தும் ஆணாதிக்க வழிபாடுகளையே, பல்லாயிரம் ஆண்டுகளாகப் பறைசாற்றி வருகின்றன.

இராமன் சீதைக்குச் செய்த கொடுமையால் மனம் நொந்து, இறுதியில் ஆற்று நீரில் மூழ்கித் தன்னுயிரை மாய்த்துக் கொண்டான்.
பெண்கள் ஆணாதிக்க உலகில்தான் அன்று தொட்டு வாழ்கிறார். சங்க காலத்திலும் சரி, இராமன் காலத்திலும் சரி, இந்தக் காலத்திலும் சரி, ஆடவர் பெண்ணை இரண்டாந்தரப் பிறவியாய்த்தான் நடத்தி வருகிறார். இராமன் முழுக்க முழுக்க ஓர் ஆணாதிக்க மன்னன். சீதா அவனுக்கு இணையான மனைவியன்று; ஒரு சேவகி !

கடவுள் படைப்பிலே நுட்ப ஞானமுள்ள, தாய்மைக்கான நுணுக்க உறுப்புள்ள பெண்ணே முதலில் உருவாக்கப் பட்டு, ஆணை அவளுக்கு உதவும் ஒரு கருவியாய் பிறகு வடிவாக்கியது. ஆனால் நடந்ததென்ன, நடப்பதென்ன ?
ஆணின் கைப் பொம்மையாகப் பெண் தன்னிலை மறந்து, வல்லமை இழந்து, உரிமையற்று ஆடி வருகிறாள்.

சீதாயணத்தின் அறிவிப்பு இதுதான் என்று இந்நூல் ஆசிரியரும், அறிவியல் விஞ்ஞானியுமான திரு ஜெயபாரதன் குறிப்பிடுவது ஆழ்ந்து சிந்திக்கத்தக்கது.

சீதாயணம் எனும் இந்நூல் பெண்ணினத்திற்குப் பெருமை சேர்க்கும் ஒரு வித்தியாசமான சிந்தையை ஊக்குவிக்கும் ஒரு நூல் என்றே கூற முடிகிறது. ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்வது மட்டுமே எக்காலத்திற்கும் பொருந்தும் ஒரு நடைமுறை என்றாலும், ஆணாதிக்கம் மலிந்துவிட்ட ஒரு சமூகத்தில் ஒரு பெண்ணின் பாதுகாப்பு என்பது பல வகையில் கேள்விக்குறியாகவே இருந்துகொண்டிருக்கிறது. இது அரச குமாரிக்கும் பொருந்தும் என்றே இந்நூல் நிரூபிக்கிறது. பெண்ணியம் என்ற பெயரில் பெண் தன் விருப்பம்போல் எப்படியும் வாழலாம், மூத்தோர் சொல் பழமைவாதம், பெண் என்பவள் எந்தக் கட்டுப்பாடும் இன்றி தன்னிச்சையாக எதையும் பேசி, எப்படியும் வாழலாம் என்ற போக்கை எவ்விடத்தும் கிஞ்சித்தும் வெளிப்படுத்தாமல், வெகு இயல்பாக ஒரு பெண்ணின் கோணத்திலிருந்து தன்னிலையை உணர்த்தும் ஒரு உன்னத கோணத்தில் நடுநிலையுடன் படைக்கப்பட்டிருப்பதே இந்நூலின் வெற்றி என்றே எண்ணத் தோன்றுகின்றது. அந்த வகையில் பெண்ணினம் போற்றும் ஒரு சிறந்த நூலாசிரியர் என்ற பட்டியலில் ஆசிரியர் திரு ஜெயபாரதன் நிலைத்த இடம் பிடிக்கிறார் என்பதே நிதர்சனம்.

சீதாயணம் நாடகம் மின்னூல் வடிவில் இங்கே காணலாம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *