சமூகப் பொறுப்பு அவசியம்

1

பவள சங்கரி

13528672_1078659385522191_3450249930793537970_nசென்ற வெள்ளியன்று (24/06/16) காலை 6.30 மணிக்கு வழக்கம்போல் செங்கல்பட்டு அருகே உள்ள பரனூர் மகேந்திரா சிட்டியில் உள்ள இன்போசிஸ் ஐடி நிறுவனத்தில் மென் பொறியாளராக தான் பணிபுரியும் அலுவலகத்திற்குச் செல்வதற்காக சென்னை நுங்கம்பாக்கம் இரயில் நிலையத்திற்கு தன் தந்தையுடன் வந்திருக்கிறார் சுவாதி. தினமும் மின்சார இரயிலில் பணிக்குச் செல்வது வழக்கம். மகளை இறுதியாகப் பார்க்கப்போவது அன்றுதான் என்ற எண்ணம் துளியும் இல்லாமல் அன்பு மகளை கொண்டுவந்து விட்டுவிட்டு கிளம்பிவிட்டார் அவர் தந்தை. மத்திய அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்ற சென்னை சூளைமேட்டை சேர்ந்த சந்தான கோபாலகிருஷ்ணன் என்பவரின் மகள் சுவாதி, 24 வயது இளம் பெண். மகளை இரயில் நிலையத்தில் விட்டுவிட்டு வீடு வந்து சேர்ந்த சில மணித்துளிகளில் அவர் இரயில் நிலையத்தில் கொலையான செய்தி கேட்டு துடிதுடித்து பதறி ஓடி வந்து இரத்த வெள்ளத்தில் அசைவற்றுக் கிடக்கும் உடலைப் பார்த்து தன் இரத்தம் உறைந்து அதிர்ச்சியில் நிற்கிறார். இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக அதே இடத்தில் நடைமேடையில், போவோர் வருவோருக்குக் காட்சிப் பொருளாக, பிரேதப் பரிசோதனைக்குக்கூட எடுத்துச் செல்லாமல் அங்கேயே வைத்து இருந்ததையும் சேர்த்தே விழுங்க வேண்டிய கொடுமையான சூழலில் ஒரு தந்தையின் நிலையை கற்பனை கூட செய்ய முடியவில்லை. சென்னை போன்ற ஒரு பெருநகரத்தில் இப்படியொரு நிலை சற்று வருத்தத்திற்குரியதுதான். அதுவும் கொலை செய்தவனைக் கண்டுபிடிப்பதற்கு ஏதுவாக சிசிடிவி கேமரா கூட இல்லை என்பதுதான் மேலும் வேதனைப்படச் செய்யும் விசயம்.

பட்டப்பகலில், மக்கள் நடமாட்டம் உள்ள இரயில் நிலையம் போன்ற பொது இடத்தில் இத்தனைக் கொடூரமாக ஒரு பெண்ணை வெட்டிக் கொன்றுவிட்டு கத்தியை தண்டவாளத்தில் தூக்கி வீசிவிட்டு சாவதானமாக ஒரு கொலைகாரன் தப்பிச் செல்லும் அளவிற்கா நம் காவல்துறையும், சமூகமும் இருக்கிறது? நினைக்கவே அச்சமாக இருக்கிறது. பாதுகாப்பு என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது. இதே நாளில் பல்வேறு இடங்களில் பல்வேறு விதமான கொலைகள் நடந்திருக்கின்றன என்றாலும் ஒரு பொது இடத்தில் ஒரு இளம் பெண் இப்படி பட்டப்பகலில் கொலை செய்யப்பட்டிருப்பது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏதோ சிறிய வாக்குவாதத்திற்குப் பிறகே அந்த இளைஞன் அப்பெண்ணை கொடூரமாகத் தாக்கிக் கொன்றிருக்கிறான் என்பது நேரில் கண்டவர்களின் வாக்குமூலம்.

சில நாட்களுக்கு முன்பு கால் டாக்சி ஓட்டுநரிடம் வாக்குவாதம் செய்து, அவர் பற்றி புகாரும் அளித்ததால் அவர் வேலையிலிருந்து நீக்கப்பட்டும் இருந்திருக்கிறார். இதுகூட கொலைக்கான காரணமாக இருக்குமோ என்ற நோக்கிலும் காவல்துறை விசாரணை இருந்திருக்கின்றது. ஆனாலும் தான் கொலை செய்யவில்லை என்று அந்த ஓட்டுநர் மறுத்திருக்கிறார். இன்னும் சரியான காரணம் புரிபடாத இந்நிலையில் ஊடகங்கள் தங்கள் மகளின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டாம் என்று குடும்பத்தினர் கேட்டுக்கொண்டிருக்கின்றனர். கொலைக்கான காரணம் சரியாக தெரியாதபோது மேலும் மேலும், புதிய புதிய கற்பனைக் கதைகளைச் சொல்லி வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதில் நியாயமில்லை. தேவையில்லாமல் சம்பவத்தை திசை திருப்புவதால் கொலையாளி தப்பிப்பதற்கும் அது வழிவகுத்துவிடும். ஊடகங்களும் பொது மக்களும் தேவையில்லாத விவாதத்தை நிறுத்தி, கொலைக்கான காரணமும், கொலையாளியும் பிடிபடும் வரை பொறுமை காப்பதே தற்போதைய தேவை.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “சமூகப் பொறுப்பு அவசியம்

  1. தங்கள் கருத்து முற்றிலும் உண்மையானது….. தேவையானது.

    க பாலசுப்ரமணியன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *