Author: பவள சங்கரி

  • என்றும் இன்சொல் பேசுவோம்!

    பவள சங்கரி

    ஒரு பிடியும் எழு களிரும்!

    புறநானூறு

    பாடியவர்: ஆவூர் மூலங்கிழார்.
    பாடப்பட்டோன் : சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்.
    திணை :பாடாண். துறை : செவியறிவுறூஉ.

    நீயே, பிறர் ஓம்புறு மறமன் னெயில்
    ஓம்பாது கடந்தட்டு, அவர்
    முடி புனைந்த பசும் பொன்னின்
    அடி பொலியக் கழல் தைஇய
    வல் லாளனை, வய வேந்தே!
    யாமே, நின், இகழ் பாடுவோர் எருத்தடங்கப்,
    புகழ் பாடுவோர் பொலிவு தோன்ற,
    இன்றுகண் டாங்குக் காண்குவம், என்றும்
    இன்சொல் எண்பதத்தை ஆகுமதி; பெரும!
    ஒருபிடி படியுஞ் சீறிடம்
    எழுகளிறு புரக்கும் நாடுகிழ வோயே!

    உரை: பகைவர்கள் பாதுகாத்துவந்த அரண்களை ஒருபொருட்டாக சிறிதும் மதியாது, அவையனைத்தையும் அழித்து, பகைவர்தம் முடியில் சூடிய பொன்மகுடங்களை உருக்கி அவைகளை உன் கால்களில் வீரக் கழல்களாக அணிந்த வலிய ஆண்மையுடைய வேந்தே! ஒரு பெண்யானை படுக்கும் சிறிய இடத்தில் ஏழு யானைகளுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் விளையும் நாட்டுக்கு உரியவனே! தலைவனே! நீ இன்சொல் உடையவனாகவும் காட்சிக்கு எளியவனாகவும் இருப்பாயாக. உன்னை இகழ்ந்து பாடுவோர் தலைகுனியவும், உன்னைப் புகழ்ந்து பாடுவோர் பெருமிதத்தால் தலை நிமிர்ந்து நிற்கவும், இன்று கண்டதுபோன்றே என்றும் காண்போமாக.

    ஒரு சென் கதை பார்ப்போமா

    விழுதுகள் புடைசூழ தழைத்தோங்கிய ஒரு பெரிய ஆலமரம். அதன் அடியில் கண் பார்வையற்ற துறவி ஒருவர் அமர்ந்திருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வழிப்போக்கன், ” ஏய் கிழவா, யாராவது இந்த வழியாக சென்றார்களா?” என்று சற்றும் மரியாதை இல்லாமல் அதிகாரத்துடன் கேட்டான். அதற்கு அத்துறவி “அப்படி யாரும் சென்றதாக தெரியவில்லையே” என்று பதிலளித்தார். சிறிது நேரத்திற்குப் பிறகு, மற்றொருவர் வந்து “ஐயா, இதற்கு முன் யாராவது இந்தப்புறம் சென்றார்களா?” என்று கேட்டார். அதற்கு அத்துறவியார் “ஆம், சற்று முன் இதே கேள்வியைக் கேட்டுக்கொண்டு ஒருவன் சென்றான்” என்றார். மீண்டும் சற்று நேரம் கழித்து இன்னொருவர் வந்தார். அவரும் அத்துறவியிடம் “வணங்குகிறேன், துறவியாரே. இதற்கு முன் இந்த வழியாக யாராவது செல்லும் சப்தம் தங்களுக்குக் கேட்டதா சுவாமி?” என்று பணிவுடன் கேட்டார். உடனே அத்துறவி “மாமன்னரே, வணக்கம். இவ்வழியாக முதலில் ஒரு வீரன் சென்றான், அடுத்ததாக ஓர் அமைச்சர் சென்றார். இருவருமே தாங்கள் கேட்ட அதேக் கேள்வியை கேட்டுச் சென்றனர்.” என்றார். அப்போது ஆச்சரியத்துடன் மன்னர் “துறவியாரே, உங்களுக்குத் தான் பார்வை இல்லையே. பின்னர் எப்படி முதலில் வீரனும், அடுத்ததாக அமைச்சரும் கேட்டுச் சென்றார்கள் என்பதைச் சரியாக சொல்கிறீர்கள்” என்று கேட்டான். அதற்கு அத்துறவி “இதை அறிவதற்கு பார்வை தேவையில்லை அரசே. அவரவர் பேசுவதை வைத்தே, அவர் யார், அவரது தகுதி என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்” என்று சொல்லி, “முதலில் வந்தவன் சற்றும் மரியாதையின்றி பேசினான். அடுத்து வந்தவரின் பேச்சில் அதிகாரம் இருந்தது. தங்களது பேச்சில் மட்டுமே பணிவும் தென்பட்டது” என்று எடுத்துக் கூறினார்.

    இன்சொல் பேசுபவரே பெரியோர்!

    Share
  • சுட்டும் விழிச்சுடர்!

    பவள சங்கரி

    545543_362907083797923_2088759971_n

    நெஞ்சுரமும், நேர்மைத் திறமும்!

    Take-My-Hands-Image2

    வாழ்க்கையில் ஒருவருக்கு எந்த நேரமும் துன்பங்களும், துயரங்களும், அபாயங்களும் நேரலாம். இதில் ஆண் என்ன பெண் என்ன… இதற்கெல்லாம் நாம் எப்போதும் தயாராக இருக்க முடியாது என்றாலும், நம் குழந்தைகளுக்கு இளம் வயது முதலே அதற்கான துணிவையும், மன உறுதியையும் ஊட்டி வளர்க்க வேண்டியது ஒரு பெற்றோரின் கடமையாகிறது. எங்கு பார்த்தாலும், வன்முறைகள் கொடி பிடித்து ஆட்டம் காட்டும் இன்றைய காலகட்டத்தில் இது போன்ற தெளிவை நம் குழந்தைகளுக்கு ஏற்படுத்த வேண்டியது அவசியமாகிறது! ஆனாலும் ஒரு பெண் என்றால் இரும்பைப் போன்ற நெஞ்சுரமும், எதையும் தாங்கும் இதயமும், கடுமையான உழைப்பும், அன்பான குணமும், விடாமுயற்சியும் சற்று அதிகமாகவே இருப்பது இயல்பு. அதற்கான தேவையும், சமயமும், சந்தர்ப்பமும், சூழ்நிலையும் அமையும்போது அதை அவள் வெளிப்படுத்தத் தயங்குவதில்லை. இதற்கான அருமையான ஒரு உதாரணம்தான் மாரிசெல் அபாதன் என்ற இந்தப் பெண். அவளுடைய கதையைக் கேட்டால் நமக்குள்ளும் ஒரு உத்வேகம் பிறப்பது நிச்சயம்! வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் தம் இரண்டு கைகளும், பத்து விரல்களுமே மூலதனம் என்பார்கள். ஆனால் இச்சிறு தேவதைக்கு இரண்டு கரங்களும், அந்தப் பத்து விரல்களும் கூட இல்லை! ஆனாலும் உறுதியை இழக்கவில்லை அவள். மருத்துவர்கள் பொதுவாகச் சொல்கிற ஒரு விசயம், மருந்து மற்றும் மருத்துவத்தின் பங்கு 50 சதவிகிதம் என்றால் ஒரு நோயாளியின்  நம்பிக்கையும், பிழைக்க வேண்டும் என்ற மன உறுதியும், மீதம் 50 சதவிகிதம் இருந்தால்தான் அவர் பிழைக்க முடியும் என்பார்கள். அதற்கும் ஒரு எடுத்துக்காட்டு இச்சிறுமி.

    2000 வது ஆண்டு, செப்டம்பர் மாதம் 25ம் நாள், சாம்போயங்கா (பிலிப்பைன்சு – Zamboanga) எனும் இடத்தில், மாரிசெல் அபாதன் என்ற ஒரு பதினொரு வயது சிறுமி தன் தந்தையுடன், தண்ணீர் எடுத்து வருவதற்காக தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தாள். திடீரென்று வழியில் நான்கு தடியன்கள் நீண்ட கத்தியுடன் அவர்களை மடக்கி, அப்பெண்ணின் தந்தையை சரமாரியாக வெட்டிக் கொன்றனர். அதிர்ச்சியில் உறைந்துபோன மாரிசெல், அச்சத்தில் கண்மண் தெரியாமல் ஓட ஆரம்பித்தாள். இத்தனைக்கும் அவர்கள் அவளுடைய அண்டை வீட்டுக்காரர்கள்தான். எப்படியும் தப்பித்து விடவேண்டும் என்று வேகமாக ஓடியவள், “என்னை கொன்று விடாதீர்கள், கொஞ்சமாவது இரக்கம் காட்டுங்கள்” என்று நடுக்கத்துடன் கதறினாள். ஆனால் ஈவு இரக்கமற்ற அந்த மிருகங்கள் அச்சிறுமியையும் கழுத்தில் வெட்டினர். மாரிசெல் மயங்கிச் சரிந்தாள். அந்த கொலைகாரப் பாவிகள் என நினைத்தார்களோ அத்தோடு விட்டுவிட்டு ஓடி விட்டனர். மயக்கம் தெளிந்தவுடன், மாரிசெல் தம் பலம் அனைத்தையும் திரட்டி மெல்ல எழுந்து தம் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஓட ஆரம்பித்தாள். ஆனால் வழியில் செல்லும்போதே தமது இரு முன்கரங்களும் விழுவதை உணர்ந்தாள். கைகளும் வெட்டுப்பட்டிருப்பதை அப்போதுதான் அறிகிறாள்.

    கத்திக்கொண்டே ஓடிக்கொண்டிருக்கிறாள். வழியில் சில முறைகள் மயங்கியும் விழுகிறாள். மீண்டும் சமாளித்து எழுந்து ஓடுகிறாள். வீட்டினருகில் வந்தவுடன் சத்தம் போட்டு தாயை அழைக்கிறாள். இரத்தத்தில் நனைந்து வந்திருக்கும் மகளைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போனவர், அவசர அவசரமாக துணியைச் சுற்றி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்கிறார். புறநகர் பகுதியில் இருக்கும் அவர்கள் வீட்டிலிருந்து மருத்துவமனை செல்வதற்கு 12 கி.மீ. நடந்தே செல்ல வேண்டும். மருத்துவமனையில் அச்சிறுமியைக் கண்ட மருத்துவர்கள், அவள் பிழைப்பது அரிது என்று தெரிவித்தும் விட்டனர். ஆனால் 5 மணி நேர அறுவை சிகிச்சை, 25 தையல்கள் என அனைத்தும் முடிந்து மாரிசெல் பிழைத்துவிட்டாள். ஆம், அவள் உள்ள உறுதி அவளை பிழைக்க வைத்தது என்றுதான் சொல்லவேண்டும்! ஆனால் அவளுடைய இரு கைகளையும் இழக்க வேண்டிவந்தது. அடுத்த நாள் தன்னுடைய 12 வது வயதில் அடி எடுத்து வைக்கப்போகும் அச்சிறுமிக்கு இரு முன்னங்கைகளும் இழந்து வாழ வேண்டிய துர்பாக்கிய நிலை. ஆனால் அதோடு அவள் துன்பம் முடியவில்லை. வீட்டிற்கு திரும்பி வந்த தாய், மகளுக்கு மற்றொரு அதிர்ச்சி காத்திருந்தது. ஆம், அவர்கள் வீடு சூறையாடப்பட்டு, தீயினால் எரிக்கவும்பட்டிருந்தது. மிகவும் ஏழ்மையில் இருந்த மாரிசெல் குடும்பம் மருத்துவமனைச் செலவைக்கூட ஏற்க முடியாத நிலையில் இருந்ததைக் கண்டு அவர்களுடைய உறவினர்கள் பரிதாபப்பட்டு மருத்துவமனை செலவை ஏற்றதோடு, குற்றவாளிகளை நீதி மன்றத்தில் நிறுத்தவும் உதவி செய்தனர்.

    Maricel-apatan-chef-graduation

    maricel-apatan

    Maricel-apatan2

    Maricel-apatan4

    ஆனால் இவையனைத்தையும்விட அதிசயம், மாரிசெல் அதற்குப் பிறகு வீட்டில் முடங்கிப்போய்விடவில்லை. வாழ்க்கையை எதிர்த்து ஓட ஆரம்பித்தாள். முன் கைகள் இரண்டும் வெட்டுண்டதால் எதுவுமே செய்ய முடியாதே என்று துவண்டு விடவில்லை மாரிசெல். அவள் தற்பொழுது தன் மணிக்கட்டின் மூலம் பல வேலைகள் செய்யப் பழகிவிட்டாள். இன்று ஊனமுற்றவர் பள்ளியின் மிகச்சிறந்த சமர்த்துப் பெண்ணாகவும், கணினி வல்லுநராகவும், உலகமே பாராட்டும் வகையில் மரியாதைக்குரியவராகவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். 2008ம் ஆண்டில் சொகுசு விடுதி மற்றும் உணவக மேலாண்மைக் கல்வியில் பட்டம் பெற்றுவிட்டாள். அதோடு கலை மற்றும் கைவினைப் பொருட்கள் பயிற்சியில் தங்கப் பதக்கமும் பெற்று, 2011ம் ஆண்டில் தம் சமையல் பணி கல்வியையும் (செஃப்) முடித்து பட்டம் பெற்றார். எந்தத் தடையும் இச்சிறுமியின் கனவை கலைக்க முடியவில்லை. இன்று தம் சுய கால்களில் நிற்கிறாள் மாரிசெல்! விதியையே ஓட ஓட விரட்டியவள் இந்த புதுமைப்பெண்!

    Maricel-apatan7Maricel-apatan8

     

    படங்களுக்கு நன்றி : இணையம்

    Share
  • பரமம்!

    பவள சங்கரி

    BHUDDHA GAYA

    எஞ்ஞான்றும் மகிழ்ச்சி
    நிலைக்கும் சூக்குமம்
    சூழ்நிகழ்வுகளை நாட்டமுடன்
    நயந்தொழுகும் நற்பண்பும்
    வீணர்களின் வேடிக்கையை
    வீசியெறியா மனப்பாங்கும்
    நிலையில்லாக் கூத்தின்
    நிசமறியும் வானகமும்
    ஏதிலார் இன்சொலால்
    தீதில்லா திட்பமும்
    சூறைக்காற்றாய் சுதந்திரம்
    பறிக்கும் சூலநாசமும்
    அமிழ்தே பெறினும்
    உள்ளொன்று வைத்து புறத்தே
    பொய்யுரையை நாடாமையும்
    ஔவியம் கொண்டோரை
    திடமாய் ஒதுக்கியும்
    உளம் புரத்தல்
    கவ்வுடை பரமமே!

    Share
  • தமிழனென்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!

    amuthe_thamilile

    Rasul_Gamzatovடாகெசுதான் என்றொரு நாடு இருக்கிறது. அங்கு முப்பதுக்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகிறதாம். அதில் ஒன்று, ‘அவார்’ எனும் மொழி. இந்த மொழியின் மீப்பெரும் கவிஞர் ரசூல் கம்சடோவ் (Rasul Gamzatov)என்பவர். தம் மொழியின் மீது நம் பாரதிக்கு ஈடாக ஆழ்ந்த காதல் கொண்டிருந்தவனாம் ரசூல். ‘ஒருவேளை இந்த அவார் மொழி நாளை இறந்துவிடும் என்ற நிலை வந்தால், நான் இன்றே இறந்துவிடுவேன்’ என்றானாம் அக்கவி! கம்சடோவ் இத்தாலி நகரில் இருந்தபோது, தம் நாட்டினர் ஒருவரைச் சந்தித்தாராம். இந்தச் சந்திப்பு குறித்து தாம் தம் தாய்நாடான டாகெசுதான் திரும்பியவுடன் தாம் சந்தித்த அந்த நபரின் தாயிடம் சென்று குறிப்பிட்டபோது, அவருடைய அன்னையார் அவரிடம் முதலில் கேட்ட கேள்வி, ‘என் மகன் தங்களுடன் அவார் மொழியில்தானே பேசினான்?’ என்பதுதானாம். அதற்கு ரசூல் கம்சடோவ், ‘இல்லையே அம்மா, தங்கள் மகன் பிரெஞ்சு மொழியில்தான் பேசினார். ஏன் என்று எனக்கும் விளங்கவில்லை’ என்றாராம். உடனே அந்தத்தாய் என்ன செய்தார் தெரியுமா? அவர் தாம் அணிந்திருந்த துணியை எடுத்து தம் தலையின்மீது போட்டுக்கொண்டாராம். ஆம், அந்த நாட்டின் கலாச்சார மரபின்படி ஒருவர் இறந்துவிட்டால், அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் தலையில் துணியை போட்டுக்கொள்வார்களாம். தம் மகன் தமது தாய் மொழியில் பேசவில்லை என்பதால் அவனை இறந்தவனாகக் கருதிய அந்தத் தாயின் மொழிப்பற்றை என்னென்று சொல்வது! நம் நாட்டு மற்றும் புலம்பெயர் தமிழ் தாய்மார்களும் இதனை கருத்தில் கொண்டு குழந்தைகளை வழி நடத்தினால் நம் தமிழ் மொழி இன்னும் பல கோடி காலங்கள் நிலைத்து நிற்காதா?

    தமிழனென்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!

    Share
  • நட்பின் இலக்கணம். . .?

    பவள சங்கரி

    images (3)
    கிரேக்க நாட்டு பேரறிஞர் சாக்ரடீசு மிகப்பெரும் தத்துவவாதியும் கூட. ஒரு நாள் ஏற்கனவே பரிச்சயமான ஒருவர் சாக்ரடீசிடம் வந்து,

    “உங்கள் நண்பரைப் பற்றி நான் கேள்விப்பட்ட ஒரு செய்தியை சொல்லவா?” என்றார்.

    “ஒரு நிமிடம் பொறுங்கள்”, என்றார் சாக்ரடீசு. “என்னிடம் நீங்கள் எதுவும் சொல்வதற்கு முன்னால் ஒரு சிறு சோதனை உங்களுக்கு. முச்சல்லடை சோதனை என்று பெயர் இதற்கு, சரியா”

    “முச்சல்லடை சோதனையா?”

    “ஆம், அதேதான்” என்றவாறு தொடர்ந்தார் சாக்ரடீசு. “என் நண்பரைப்பற்றி என்னிடம் பேசும் முன்னர் ஒரு நொடி சிந்தித்து நீங்கள் சொல்லப்போவதை வடிகட்டி சொன்னால் நலம். அதைத்தான் நான் முச்சல்லடை சோதனை என்றேன். அந்த முதல் வடிகட்டி உண்மை என்பது. அதாவது, நீங்கள் என்னிடம் சொல்லப்போகிற அந்த விசயம் முற்றிலும் உண்மை என்ற உத்திரவாதம் உள்ளதா?”

    “இல்லை” என்றார் அவர். “உண்மையில் நான் கேள்விப்பட்டதைத்தான் சொல்ல. . . . .”

    “சரி, சரி”. என்றவர், “அப்படியானால், இந்த விசயம் உண்மையா இல்லையா என்று உங்களுக்கு உறுதியாகத் தெரியாது. இப்போது அந்த இரண்டாவது வடிகட்டியை சோதிக்கலாமா, அதாவது நன்மை எனும் வடிகட்டி. என் நண்பரைப் பற்றி நீங்கள் சொல்லப் போவது ஏதாவது நல்ல விசயமா?”

    “இல்லை, அதற்கு மாறானது”.

    “அப்படியானால்” என்று இழுத்தவர், “அவரைப் பற்றிய ஏதோ கெட்ட செய்தியை என்னிடம் சொல்ல விரும்புகிறீர்கள், ஆனால் அது உண்மை என்ற உறுதியும் இல்லை. சரி எப்படியானாலும், இன்னொரு சோதனை இருக்கிறதே. நீங்கள் அதிலாவது வெல்லக்கூடும்; அடுத்தது பயன்படும்தன்மை குறித்த வடிகட்டி. அதாவது, என் நண்பரைப் பற்றி நீங்கள் கூற விரும்பும் செய்தி எனக்கு எந்த வகையிலாவது பயனளிக்கக் கூடியதா?”

    “இல்லை. உண்மையில் இல்லை”.

    “நல்லது, நீங்கள் என்னிடம் சொல்ல விரும்பும் செய்தி உண்மையும் இல்லை, நன்மையும் இல்லை அல்லது பயனளிக்கப்போவதும் இல்லை எனும்போது என்னிடம் எதற்கு அதை நீங்கள் சொல்ல வேண்டும்?” என்று கேட்டு அந்தப் பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்தார் சாக்ரடீசு!

    Share
  • அடியாரும் ஆன்மீகமும் (5) – விஞ்ஞானமும், மெய்ஞ்ஞானமும்!

    பவள சங்கரி

    சிகாகோ நகரின் அருங்காட்சியகத்தில் நம் நடராசர்!
    சிகாகோ நகரின் அருங்காட்சியகத்தில் நம் நடராசர்!



    இந்து மதத்தில், ஆன்மீகம் என்பது வெறும் பக்தி, வழிபாடு அல்லது மதம் சார்ந்த ஒரு விசயம் என்பதற்கும் மீறி, கூர்ந்து நோக்குங்கால் அறிவியல் சார்ந்த விசயமாகவும் காணமுடிகிறது. அதாவது மெய்ஞ்ஞானம் என்பது விஞ்ஞானம் சார்ந்ததே என்பதை உணர முடிகிறது. ‘இந்து’ என்ற வார்த்தைக்கு பல்வேறு பொருள்கள் உண்டு. அவைகளில் முக்கியமான ஒன்று, ‘ஒருவரை உற்சாகம் இழக்கச் செய்யும் அந்த ஒன்றை அழிப்பது’ என்பதாம். அந்த வகையில் நம்மை உற்சாகம் இழக்கச் செய்கிற அவநம்பிக்கை, சுயபச்சாதாபம், சோம்பல் போன்றவற்றை அழிக்கவல்லது என்று கொள்ளலாம். இதற்கு ஆதாரமாக இருப்பதே நடராசரின் திருமூர்த்தம். ஆம் நடராசரின் காலடியில் அமிழ்ந்து கிடக்கும் சூரன்தான் நம்மிடமிருந்து உற்சாகத்தைப் பறிக்கும் அந்த தீய சக்தி. ஆக, நடராசப் பெருமான் இந்து என்பதன் பொருளாகத் திகழ்பவர் என்று கொள்ளலாம் அல்லவா?

    anatar

    நடராசப் பெருமானின் தோற்றமே பல அதிசயங்களைக் கொண்டது. தில்லை நடராசர் ஆலயம் அமைந்திருக்கும் இடமே இதற்கு முதற்சான்றாக நிற்பது. இவ்வாலயம் இருப்பது உலகின் பூமத்திய ரேகையின் மையப் பகுதி என்று சொல்லப்படுகிறது. அதோடு மனித உடலை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலின் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் உள்ள 9 வாயில்களை குறிப்பனவாக கருதப்படுகின்றன . மேலும் நடராசப்பெருமானின் ஆனந்தத் தாண்டவம் என்ற கோலம் காஸ்மிக் நடனம் (cosmic dance) என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் விரும்பி அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

    உலகின் ஐந்து பஞ்ச பூதங்களாவன: வானம், பூமி, காற்று, நீர், நெருப்பு ஆகியவை. பஞ்சபூத தலங்கள் என்று அறியப்படும் கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நட ராசர் ஆலயம், காற்றை குறிக்கும் திருக்காளத்தி ஆலயம், நிலத்தைக் குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேசுவரர் (தழுவக்குழைந்த நாதர்) ஆலயமும் ஒரே நேர்கோட்டில், சரியாக 79 டிகிரி, 41 நிமிடம் கிழக்கு தீர்க்க ரேகையில் அமைந்துள்ளது என்பது அதிசயத்தின் அடிப்படையில் குறிப்பிடத்தக்கது. வானத்தின் மேலிருந்து, வரைபடத்தின் உதவியுடன் பார்த்தால் இதன் துல்லியம் விளங்கும். ஆனால் பொறியியல், புவியியல் மற்றும் வானவியலின் உச்சகட்ட அதிசயமான இது பூமத்திய ரேகை பற்றிய அறிவியல் ஞானத்தின் விழிப்புணர்வு ஏற்படாத அந்த நாட்களில் கணிக்கப்பட்டது என்பதுதான் முக்கிய செய்தி.

    index_06

    பிரபஞ்சத்தின் இதய பாகம் என்று ஆன்றோர்களால் வர்ணிக்கப்பெறும் சிதம்பரம் நகரின் மையத்தில் உள்ள நடராசர் சந்நிதியில் நடராசப் பெருமானாரின் ஊன்றிய காலுக்குக் கீழேதான் பிரபஞ்சம் தோன்றும்போது ஏற்பட்ட வெற்றிடம் உள்ளதாகவும், இந்த மையப் புள்ளியின் மீது நின்று தான் நடராசர் இடைவிடாது நாட்டியமாடியபடி, ஐந்தொழில்களையும் புரிகிறார் என்பது ஐதீகம். நடராசப் பெருமானின் வலது திருக்கையிலுள்ள “உடுக்கை” சிவனின் படைத்தல் தொழிலையும், உயர்த்திக் காட்டப்பட்ட “அபய கரம்”, அஞ்சேல் என்ற அபயம் காட்டி காத்தல் தொழிலையும், இடது கரத்தில் ஒளிரும் “அக்கினி” அழித்தல் தொழிலையும், முயலகன் எனும் அரக்கனை மிதித்து “ஊன்றிய திருவடி” மறைத்தல் தொழிலையும் மற்றும் “உயர்த்திய இடது திருவடி” அருளலையும் குறிக்கின்றனவாம்.

    விரிந்திருக்கும் சடைமுடி , உலக இயக்கத்தில் ஈடுபட்டு உயிர்களின் விடுதலைமீது கொண்ட நாட்டத்தையும் புலப்படுத்துகிறது. நடராசரின் இடையில் உள்ள பாம்பு, காலம் என்னும் கட்டுப்படாத தத்துவத்தைச் சுழற்றுவது தாமே என்னும் அவருடைய மேலாண்மையைக் குறிக்கிறது. காலடியில் கிடக்கின்ற “முயலகன்” என்னும் அரக்கன் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களின் மீது அவர்தம் கட்டுப்பாட்டையும் வெளிப்படுத்துகிறது. 64 உருவத் திருமேனிகள் உடையவர் என்று சொல்லப்படுகிற சிவபெருமானின் இலிங்கத் திருமேனி, அருவுரு வடிவமாகும். இந்த 64 திருமேனிகளும் கலையம்சங்களோடு, அற்புதமான தத்துவங்களையும் பிரதிபலிப்பதே, நம் அடியார்கள் தம் அறிவியல் ஞானத்திற்கு சான்றாகும். குறிப்பாக நடராசப் பெருமானின் திருமேனி மிக நுண்ணிய கருத்தாக்கங்களைக் கொண்ட சைவ சித்தாந்தத்தின் பிரதிபலிப்பாக விளங்குகிறது.

    ‘சிதம்பர இரகசியம்’ என்ற மாபெரும் தத்துவம் இன்றும் பல சிந்தைகளை உருவாக்கிக்கொண்டேயிருப்பவை என்றால் அது மிகையில்லை..

    Chidambara Rahasiyam‘சிதம்பர இரகசியம்’ உள்ளது என்று குறிப்பிடப்படும் அந்த இடத்தின் திரை விலக்கப்பட்டதும், அங்கு காட்சி ஏதும் இல்லாத, பொன்னால் ஆன வில்வதள மாலை மட்டும் தொங்கும். இதன் ரகசியம், இறைவன் இங்கு ஆகாய உருவில் இருக்கிறார் என்பதை உணர்த்துவதேயாகும். அகண்ட பெருவெளியில் நிறைந்திருக்கும் அந்த இறைவனை வெட்டவெளியையே காட்டி வழிபட வகை செய்யப்பட்டுள்ள அதுவே சிதம்பர ரகசியம் என அனைவராலும் போற்றி வழிபாடு செய்யப்படுகிறது. நான்கு வேதங்களின் விழுப்பொருளை, அண்ட சராசரங்களின் முழுமுதற்பொருளை குறிப்பது தான் “அருவ நிலை”. இங்கே நம் ஊனக் கண்களுக்குப் புலப்படும் நிலையில் தங்க வில்வ மாலைகள் சார்த்தப்பட்டிருக்கிறது. சர்வம் சிவமயமாகத் திகழும் இறைவனை, அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவனின் அருளை வெட்ட வெளியிலும் உணரலாம். அதாவது உலகப் பற்று, அறியாமை ஆகியவற்றுடன் வாழ்பவர்கள், அவற்றிலிருந்து விலகி மெய்ப்பொருளை உணரும் நிலையைப் பெறுவதற்கு மூடிய திரையினுள்ளே இருக்கிற சிவப்பரம்பொருள் அருள்பாலிப்பதாக ஐதீகம்! இதனை ஆழ்ந்த பக்தியால் மட்டுமே உணரமுடியும். இறைவன் அஞ்ஞானத்தில் இருக்கிற நமக்கு மெய்ஞ்ஞானத்தை உணர்த்தும் தருணமும் அதுதான்!

    திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகமாட்டார் என்று ஏன் சொல்கிறார்கள்? அதன் அழகு சந்தம் மட்டுமா? இல்லவே இல்லை.. உதாரணமாக, இந்த திருவாசகப் பாடலைப் பாருங்கள்:

    மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்-திருவண்டப் பகுதி

    பாடல் எண் : 1

    “அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
    அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி
    ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின்
    நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன
    இன்னுழை கதிரில் துன்அணுப் புரையச்
    சிறிய வாகப் பெரியோன் தெரியின்”

    இதன் விளக்கம்:
    பிரபஞ்சம் உருண்டையாகத்தான் தோன்றியுள்ளது. நூற்றியொரு கோடிக்கும் அதிகமான கிரகங்களும் விண்மீன்களும் பூமிகளும் சூரியன்களும் சந்திரன்களும் அதனுள் இறைந்து கிடக்கின்றன. அவையனைத்தும் ஒன்றுக்கு ஒன்று தத்தமது ஒளியால் எழில் கொடுக்கின்றன. சூரியனின் துல்லியமான அணுக்கதிர்கள் தாக்குவதாலேயே ஏனைய ஒளியற்ற கிரகங்களும் கூட சற்றே மின்னுகின்றன. அதாவது, அண்டம் என்றால் கோழி முட்டை என்று பொருள் . பிறக்கம் என்றால் தொகுதி ,குவியல் என்று பொருள் . இவை தொகுதி தொகுதியாக வானில் உள்ளன என்று மாணிக்கவாசகர் கூறியிருக்கிறார். “ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின்” – அதாவது ஒரு கோள் இன்னொரு கோளை,ஒரு அண்டம் இன்னொரு அண்டத்தை இழுத்துக்கொண்டு நின்றன என்றார். அவர் சொல்கிற அந்த ஆதாரமும் ஈர்ப்பு விசையாகத்தானே இருக்க முடியும்? 14 ஆம் நுற்றாண்டின் பின் வந்த நியூட்டன்தான் புவி ஈர்ப்புச்சக்தியை கண்டுபிடித்தார். ஆனால் இதை நம் மாணிக்கவாசகப் பெருமான் கண்டுசொன்னதோ 9 ம் நூற்றாண்டில்…..!

    24-1437720168-gorgeous-nasa-photo-captures-earth-from-1-million-miles-away1-600

    சமீபத்தில் அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் பூமியைப் போலவே உயிர்கள் வாழக்கூடிய 3 கிரகங்கள் உள்ளதை கண்டுபிடித்துள்ளனர். இவை பூமியிலிருந்து 21 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளன. பூமியை விட சுமார் 60 சதவீதம் பெரிய அளவில் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்ற இந்த மூன்று கிரகங்களும் பூமியைப் போலவே மிகப் பெரிய நட்சத்திரம் ஒன்றை நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகின்றன. வெப்பம் மிக அதிகமாக தாக்கக்கூடிய தொலைவான, சூரியனுக்கு வெகு அருகிலோ அல்லது பனியால் உறையச் செய்கின்ற தொலைவான சூரியனுக்கு வெகு தூரத்திலோ இல்லாமல் உயிர்கள் வாழத் தகுந்த தொலைவில் பூமியைப் போன்றே இந்த 3 கிரகங்களும் அமைந்துள்ளன என்பதால், அங்கு மனிதர்கள் வாழ்த் தேவையான நீர், காற்று போன்றவைகளும் இருக்கக்கூடிய வாய்ப்பு அதிகம் என்கின்றனர். இந்தப் புதிய கோளானது 6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியிருக்க வேண்டும் என்றும், இந்த புதிய பூமியின் சூரியன் நம்முடைய சூரியனை விட 1.5 பில்லியன் ஆண்டுகள் பழமையானது என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மேலும், இரவில் வெறும் கண்களாலேயே காணக்கூடிய அளவிற்கு மிகுந்த வெளிச்சத்துடன் உள்ள இந்த கிரகங்களில் பூமியைப் போன்றே மேற்பரப்பும், அடர்த்தியும் காணப்படுவதாகவும் விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். இசுபெயின் நாட்டில் உள்ள ஒரு தீவில் அமைக்கப்பட்டுள்ள ‘ஹார்ப்ஸ் -என்’ என்ற அதிநவீன தொலை நோக்கி மூலம் இந்த 3 கிரகங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். மேற்கண்ட பாடலையும் இந்த செய்தியையும் சம்பந்தப்படுத்திப் பாருங்கள்… இன்றைய அறிவியல் இன்னும் கடக்க வேண்டிய தொலைவு அதிகம் என்பதும் விளங்கும்.

    வான்காணா மறைகாணா மலரோன் காணான்
    மால்காணான் உருத்திரனும் மதித்துக் காணான்
    நான்காணா இடத்ததனைக் காண்பேம் என்று
    மான்காணா உளக்கமல மலர்த்தா நின்ற
    வான்சுடரே ஆனந்த மயமே ஈன்ற
    ஆன்காணா இளங்கன்றாய் அலமந் தேங்கும்
    அன்பர்தமைக் கலந்துகொள்ளும் அமலத் தேவே.
    –இராமலிங்க அடிகள்

    உரை:
    வானும் மறையும் மலரோனும் மாலும் உருத்திரனும் காணானாயினும் “நான்” என்ற தற்போதம் காணாவிடத்து அதனைக் காணலாம் என்று நல்லோர் நவிலும் நலமாய், உளக்கமலம் அலர்த்தா நின்ற வான்சுடராய், ஆனந்தமயமாய், அன்பர்களைக் கலந்து கொள்ளும் அமலமாய் இலங்குபவன் மகாதேவன்.

    ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல, விஞ்ஞானமே மெய்ஞ்ஞானமாக இருக்கும் நம் ஆன்மீகத் தத்துவச் சாகரங்களின் ஒரு துளியே இது.. ‘உள்ளம் பெருங்கோயில், ஊனுடம்பு ஆலயம்’ என்று சொல்லிச் சென்றுள்ள திருமூலரின் பாடல்களின் சாரத்தைச் சுவைக்க ஆரம்பித்தோமானால், அதன் அதிசய அறிவியல் மற்றும் வாழ்வியல் தத்துவங்களை முழுமையாக உணர நம் வாழ்நாளே போதாது என்பதே சத்தியம்!

    அடியும், முதலும் இல்லாதவன் இறைவன் என்கின்றன வேதங்கள். முதலும், முடிவும் இல்லா இயற்கையும், இறைவனும் ஒன்று என்றால், இயற்கையே இறைவன் என்றாகிறதல்லவா…..

    ஒரு ஜென் கதையைப் பார்க்கலாமா..

    அந்த ஊரில் பல ஆண்டுகளாக பருவ மழை பொய்த்துவிட்டதால் நிலமெல்லாம் வறண்டு பயிர்களெல்லாம் அழிந்து ஊரே கட்டாந்தரையானது. அந்த ஊருக்கு ஒரு நாள் ஒரு சென் துறவி வந்தார். மழை இல்லாமல் தாங்கள் படும் துயரை அந்த சென் துறவியிடம் வேதனையுடன் முறையிட்டனர் மக்கள். மக்களின் துயரைத் துடைப்பது என்று முடிவெடுத்த துறவி, ஊரின் மையப் பகுதியில் தாம் அமர்ந்து தியானம் செய்வதற்குரிய ஏற்பாட்டை செய்யும்படி கேட்டுக்கொண்டார். அவரும் அமைதியாக அமர்ந்து தியானம் செய்ய ஆரம்பித்தார். ஐந்தாவது நாள் வானத்தைப் பிளந்துகொண்டு மழை கொட்ட ஆரம்பித்தது. பேரானந்தத்தில் மக்கள் அந்தத் துறவியை நெருங்கி இது எப்படி சாத்தியமாயிற்று என்று ஆச்சரியத்துடன் வினவினர். அந்தத் துறவியும்,

    “நான் தியானம் செய்தபோது என் மனதில் நல்ல அமைதி குடிகொண்டது. அதனால் என் உடலில் ஒரு சமன்நிலையும் ஏற்பட்டது. இதன் காரணமாக என்னைச் சுற்றியிருந்த காற்று மண்டலமும் சமன்நிலை அடைந்தது! அதாவது பல ஆண்டுகளாக தகித்துக் கொண்டிருந்த வெப்பம் ஒரு கட்டுக்குள் வந்தது என்பதோடு, மழையும் பொழிந்தது!” என்றார். அறிவியல்பூர்வமான இந்த உண்மை மக்களின் மனதில் ஆழப்பதிந்தது. அவர்களின் சிந்தனையில் தெளிவு ஏற்பட்டது என்பதையும் சொல்லவும் வேண்டுமோ?

    சுடர்விடும் தீபத்தின் ஒளியில் ஒரு சீடனுக்கு பாடம் எடுத்துக்கொண்டிருந்தார் குரு. தீடீரென அதன் ஒளியை இழந்த தீபத்தைப் பார்த்து அந்த சீடன், ‘குருவே, இந்த தீபஒளி சட்டென எங்கே மறைந்தது?’ என்று கேட்டான்.

    அதற்கு குருவும், ‘அது எங்கிருந்து வந்ததோ அங்கேயே திரும்பிச் சென்றுவிட்டது’ என்றார்.

    கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்ற வாதங்களில் கவனம் செலுத்துவதைவிட நம்முள் உறைந்திருக்கும் இறை சக்தியை உணர்ந்து, தன்னம்பிக்கையுடன் நம்மை வளப்படுத்திக்கொண்டால், ஆக்கப்பூர்வமான வெற்றி நிச்சயம்.

    Share
  • உயிரிறகு!

    பவள சங்கரி

    நட்பு என்பது இனிமையான பொறுப்பேயன்றி
    அருமையான வாய்ப்பன்று! – கலீல் கிப்ரான்

    frienship

    நாடிச்சென்று
    நயந்துகட்டும் வாய்ப்பின்றி
    அமைந்துவிடுகிறது
    சிறுவிதயங்களைப்
    பிணைக்குமந்த
    நட்பெனும்
    பொற்சரடுகள்
    கடந்ததை உணர்ந்ததாக
    வரப்போவதில் நம்பிக்கையாய்
    அன்றைய நிலையை
    அவ்வண்ணமே
    ஏற்றுக்கொள்ளல்.

    புரிதலே இதன் பொருள்
    புரிந்துணர்வு ஒப்பந்தமல்ல
    மன்னிப்பதே இதன் மகத்துவம்
    மறப்பதல்ல இதன் தத்துவம்
    பொற்சரடின் பிணைப்பு
    தளர்வடைந்தாலும்
    நிலைத்தேயிருப்பது

    பேசவும் கேட்கவும்
    உணர்ந்து
    இடுக்கண் களையவும்
    இயலாத
    பொற்சிகரமாயினும்
    வெற்றுமண்ணே இதன்முன்
    ஆயினும்
    அனைத்தும் உயிராய்
    உன்னத
    உணர்வாய் கனிவாய்
    கேடயமாய்
    சிறகுவிரிக்குமந்த
    பந்தம்
    நட்பெனும் மகரந்தம்!!

    Share
  • அடியாரும், ஆன்மீகமும் – 4 – பூசலாரும், ராமானுசரும்!

    பவள சங்கரி

    ஒருவரின் செயல்திட்பம் சரியாக அமைய வேண்டுமாயின் அவருக்கு நற்சிந்தைகளுடனான நிலையான மனத்திட்பம் அவசியமாகிறது. அந்த வகையில் அடியார்களின் மனத்திட்பத்தின் மகிமை பெரிதும் சிந்தித்து உணர்ந்து போற்றத்தக்கது. தாயுமானவரின், “காடுங் கரையும் மனக்குரங்கு கால்விட்டோட அதன்பிறகே ஓடுந் தொழிலாற் பயனுளதோ” என்ற பதத்தின் மூலமும் இதனை அறியலாம். ஆணித்தரமான அத்தாட்சிச் சாதனங்களைப் பெற்றுள்ள திருத்தொண்டர் புராண வரலாறுகளுள் முக்கியமானதாகக் கருதப்படுவது பூசலார் நாயனார் வரலாறு.

    G_T3_646

    பொருவருந்தண் டகநாட்டு நின்ற வூர்வாழ்
    பூசுரர்கோப் பூசலார் பந்தி யாலே
    யிருநிதியந் தேடியா லயமு மாக்கி
    யெழுந்தருளப் பண்ணுவதா வெண்ணுங் காலை
    யரனதனைக் காடவர்கோற் கருள மன்ன
    னந்நகர மணைந்தவ்வா றறிந்து தாழ
    விரவுமனக் கோயிலுற விருத்தி யங்கண்
    வேண்டுவகொண் டிறைஞ்சியருண் மேவி னாரே.

    apoosalar

    திருநின்றவூர் எனும் திருத்தலத்தில் வேதியர்கள் மரபிலே தோன்றியவரான பூசலார் நாயனார் என்பவர் சிறந்த சிவபக்தராகவும், அடியார் சேவையில் திளைத்து இருந்ததோடு ஆகம வேத, சாஸ்திர நெறிகளைக் கற்றுத் தேர்ந்தவராகவும் இருந்தவர். இறைவன் மீதுகொண்ட ஆழ்ந்த பக்தியானல், அவருக்கு மிகப்பெரும் ஆலயம் எழுப்ப வேண்டும் என்ற பேராவல் கொண்டிருந்தார். ஆனால் அவருடைய ஏழ்மை நிலை அதற்கு இடம் கொடுக்கவில்லை. அறிந்தோரிடம் உதவி கேட்டும் பெற இயலாத நிலையில் பெரிதும் உளம் நொந்தார். பெருஞ்செல்வம் நிதியாகப் பெறுமளவிற்கு வாய்ப்பு அமையாத பூசலார் நாயனார், புறத்தே அமைக்க முடியாத பிரம்மாண்ட ஆலயத்தை அகத்தே அமைக்கும் மனத்திட்பம் பெற்றார். அதற்குத் தேவையான பொருட்களான, கருங்கல், மரம், சுண்ணாம்பு, மண், கருவி, கரணங்கள் என அனைத்தையும் மனத்திலே கொண்டு சேர்த்துக் கொண்டார். அடுத்து ஆலயம் அமைக்கும் பணி துவங்கியது. தனியாக ஒரு இடத்தில் அமர்ந்து, ஐம்புலன்களையும் கட்டுக்குள் நிறுத்தி, ஆகம முறைப்படி மனத்தினுள்ளே கோயில் எழுப்பத் தொடங்கினார். இரவு பகலாக கோயில் அமைப்பதைக் காட்டிலும் வேறு சிந்தையேதும் கொண்டாரில்லை. அகத்தே எழும்பிய ஆலயத்தில், ஆச்சாரப்பூர்வமாக, மூலவருக்கான தனியறை, கொடி மரம், அர்த்த மண்டபம் , மகா மண்டபம் , பிரம்மாண்டமான மதில்கள், திருக்குளம், திருக்கிணறு, யாகசாலை , அலங்கார மண்டபம், ராசகோபுரம் போன்ற அனைத்தையும் அற்புதமாக உருவாக்கி முடித்தார்.

    பூசலார் நாயனார் இத்தகைய மனக்கோயில் அமைத்த காலம், “காடவர் கோமான் கச்சிக் கற்றளி யெடுத்து முற்ற, மாடெலாஞ் சிவனுக்காகப் பெருஞ்செல்வம் வகுத்தல் செய்த” காலம் என்கின்றனர் ஆன்றோர். ஆம், அதே காலகட்டத்தில், காஞ்சி மாநகரிலும், கி. பி. 685 – 720 வரை ஆண்ட பல்லவ மன்னன் காடவர்கோன் ராஜசிம்மன் என்ற அரசனால் மிகச் சிறந்த கட்டிடக்கலையுடன் பெரும் சிவாலயம் ஒன்று உருவாகிக்கொண்டிருந்தது. அதற்கான அனைத்து கட்டுமானப் பொருட்களும் பல்வேறு இடங்களிலிருந்து வரவழைக்கப்பட்டு, தேர்ந்த சிற்பிகள் மூலம் அற்புதமான சிற்பங்களும், ஏனைய கலைப்படைப்புகளும் உருவாகிவிட்ட நிலையில், கயிலைநாதனுக்கு தாம் எழுப்பியுள்ள அழகு நயம் வாய்ந்த கற்கோவிலுக்கு குடமுழுக்கு வைபவம் செய்யும் நாளைக் குறிக்க தேர்ந்த வேதியரை அழைத்தான் மன்னவன். அதற்கான நாளும் குறிக்கப்பட்டு, ஊரே விழாக்கோலம் பூண்டு, மக்கள் ஆலயத் திறப்பு விழாவிற்காக ஆவலுடன் காத்திருந்தனர். விடிந்தால் குடமுழுக்கு நிகழ்ச்சி என்ற நிலையில், பல்லவ மன்னன் மனமெல்லாம் பூரிப்புடன் மஞ்சத்தில் கண்ணயர்ந்திருந்தான். அப்போது ஆழ்நித்திரையில் ஆண்டவனார் தோன்றி,

    நின்றவூர்ப் பூசல் அன்பன்
    நெடிதுநாள் நினைந்து செய்த
    நன்றுநீ டால யத்து நாளை
    நாம் புகுவோம் நீயிங்கு
    ஒன்றிய செயலை நாளை
    ஒழிந்துபின் கொள்வாய் என்று
    கொன்றைவார் சடையார் தொண்டர்
    கோயில் கொண்டருளப் போந்தார்.

    அதாவது, அன்பர் பூசலார் நீண்ட நாட்களாக நினைந்து உருவாக்கியுள்ள ஆலயத்திற்குள் நாளைப்புக முடிவெடுத்துள்ளோம். அதனால் உன் நிகழ்ச்சியை பின்னொரு நாளில் தள்ளி வைத்துக்கொள்வாயாக.. என்று சொல்லிப் போனார்.

    சங்கரனார் மேல் கொண்ட ஆழ்ந்த பக்தியினால் எழுப்பிய உள்ளக் கோயிலுக்கு ஈடாக பொன்னும், பொருளும் கொண்டு பேரரசனால் கட்டப்பட்ட கோயில் எந்த அளவிலும் இணையாகாது என்பதை உணரச் செய்தார்.

    சேக்கிழார் திருவாக்கில், “சாதனத்தோடு தச்சர் தம்மையும் மனத்தால் தேடி நாதனுக் காலயஞ்செய் நலம்பெறு நன்னாட் கொண்டே ஆதரித் தாகமத்தா லடிநிலை பாரித்தன்பாற் காதலிற் கங்குற்போதுங் கண்படா தெடுக்க லுற்றார்” என்பதையும் அறியலாம்.

    நித்திரையிலிருந்து சட்டென விழித்த மன்னனுக்கு பேராச்சரியம். ஆண்டவன் வாக்கு பொய்யாகாதே. ஆயினும் தாம் எழுப்பியுள்ள ஆலயத்தைக்காட்டிலும் சிறந்ததொரு ஆலயம் எப்படி தன் கவனத்திற்கு வராமல் போனது என்று அதிசயித்தவாறு, உடனே அப்படிப்பட்ட ஆலயத்தைக் காண வேண்டும் என்று தேடிச் சென்றான் பல்லவ மன்னன். வழியில் கண்ட ஒரு விவசாயியிடம் இதுபற்றி விசாரித்தபோது, ‘இலுப்பை மரத்தடியில் பித்தர் ஒருவர் கோயில் கட்டுவதாக பிதற்றிக் கொண்டிருந்தார் , அவரைப் போய் கேளுங்கள்’ என்று சொன்னார். அவரைச் சென்று பார்த்த மன்னன் அதிர்ந்து போனான்.

    வேதியரை வீழ்ந்து வணங்கினான் வேந்தன். பின் பூசலாரின் எண்ணமும், அவர்தம் பக்தியின் ஆழமும் அறிந்த மன்னன், அவர் விருப்பப்படி ஆலயம் எழுப்பினான். இதயத்தில் கோவில் கொண்ட ஈசுவரருக்கு இருதயாலீசுவரர் என்ற திருநாமமும் அமைந்தது. பின்னர் மன்னர் காஞ்சி சென்று, தாம் அமைத்த கைலாசநாதர் ஆலயத்திற்கு மகிழ்ச்சியுடன் குடமுழுக்கு செய்வித்தார். வரலாற்றில் தனக்கென ஒரு தனியிடத்தைக் கொண்டுள்ள திருநின்றவூர் இருதயாலீசுவரர் சந்நிதியின் கருவறையில் ஈசன் இலிங்கத் திருமேனியின் அருகே பூசலார் நாயனாரின் திரு உருவமும் காட்சியளிப்பது சிறப்பு!

    ஈசனார் மீது பூசலார் நாயனார் கொண்ட மெய்யன்பு திருமந்திரத்தில், “ஈசன் அறியும் இராப்பகலுந் தன்னைப் பாசத்துள் வைத்துப் பரிந்தறிவார்களைத் தேசுற்றறிந்து செயலற்றிருந்திடில் ஈசன்வந்தெம்மிடை ஈண்டி நின்றானே” என்பதற்கு ஈடாகும். கைலாசநாதர் கோயில் அதே காடவ மன்னன் அமைத்தது என்பதற்கு வரலாற்றுச் சான்றாக, கல்வெட்டுகளில், “அவன் அசரீரி கேட்டான். அவன் இக்கலியுகத்தில் அசரீரி கேட்டது வியப்பே இவன் கலியுகத்தின் வானொலி கேட்டான்” “அவன் சிறந்த சிவபக்தன்”, “ஆகமப்பிரியன்” என்னும் புகழாரங்களும் இருத்தல் பூசலார் நாயனார் திருத் தொண்டின் பெருமையை நிலைநாட்டுவதாம்.

    இதன் விளக்கமாக, ஐயன் வள்ளுவனின் குறள் காண்போம்;

    குறள் 665:

    வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்
    ஊறெய்தி உள்ளப் படும்.

    தமது எண்ணம், செயல் திறன் ஆகியவற்றால் சிறப்புற்று மாட்சிமைப்பட்டோரின் வினைத் திட்பமானது, நாட்டை ஆளும் அரசரிடமும் சென்றடைந்து மதித்துப் போற்றப்படும்.

    குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் வண்ணம்….

    ramanujarஸ்ரீராமானுசர் ஒரு முறை உஞ்சவிருத்தி செய்தபடி தெரு வழியே சென்று கொண்டிருந்தார். அப்போது தெருவோரத்தில் இருந்த ஒரு பெரிய மரத்தடியில் சில குழந்தைகள் மணல் கோயில் கட்டி விளையாடிக்கொண்டிருந்தனர். அக்குழந்தைகள் கட்டிக்கொண்டிருந்த ஆலயத்தில் கொடிமரம், அர்த்த மண்டபம், கருவறை, முன் மண்டபம், சுற்றுச் சுவர் போன்ற அனைத்தும், சிறு குச்சிகள், கோடுகள், பொடிக்கற்கள் போன்றவைகளால் உருவாக்கப்பட்டிருந்தது. அதோடு அந்த மரத்தின் இலையில், அதே மண்ணை வைத்து, பிரசாதமாக நைவேத்தியமும் வைத்து வழிபட்டனர். இதை கவனித்துக் கொண்டிருந்த ஸ்ரீராமானுசருக்கு மெய் சிலிர்த்ததோடு அவர் கண்ணிமைக்காது நின்றிருந்தார். மூலவருடன் மிக விளையாட்டாக கட்டப்பட்டிருந்த கோவிலாக இருந்தாலும், அக்குழந்தைகளின் பக்தியில் எந்த குறைபாடும் இருக்கவில்லை. அதே ஆழ்ந்த பக்தியுடன், ராமானுசரிடம் நெருங்கி வந்த குழந்தைகள் அன்பொழுக, ‘சாமி இந்தாங்க உங்களுக்கும் பிரசாதம்’ என்று கொடுத்தனர். கள்ளங்கபடமில்லாத அக்குழந்தைகள் அளித்த பிரசாதத்தை தம் உஞ்சவிருத்தி சொம்பில் மகிழ்வுடன் பெற்றுக்கொண்டார். இறைவனை உள்ளத்தில் உணர்வுப்பூர்வமாகக் காணும் திருக்கோலமே உண்மையான இறைத் திருமேனி. உளமாற போற்றிப்பாடும் வார்த்தைகளே அவர்தம் திருநாமம். மகிழ்ச்சியால் பெரிதும் பூரிப்படைந்திருந்த ராமானுசர் அக்குழந்தைகளின் உருவத்தில் பெருமாளையேக் காண்கிறார்.

    தமருகந்த தெவ்வுருவம் அவ்வுருவம் தானே,
    தமருகந்த தெப்பேர்மற் றப்பேர், – தமருகந்து
    எவ்வண்ணம் சிந்தித் திமையா திருப்பரே,
    அவ்வண்ணம் அழியா னாம்.

    என்ற பொய்கையாழ்வார் பாசுரத்திற்கு விளக்கமாகவே இக்குழந்தைகளின் செயலைக் கண்டார் ராமானுசர்!

    நின்றவூர்ப் பூசல் அன்பன்
    நெடிதுநாள் நினைந்து செய்த
    நன்றுநீ டால யத்து நாளை
    நாம் புகுவோம் நீயிங்கு
    ஒன்றிய செயலை நாளை
    ஒழிந்துபின் கொள்வாய் என்று
    கொன்றைவார் சடையார் தொண்டர்
    கோயில் கொண்டருளப் போந்தார்.

    அதாவது, அன்பர் பூசலார் நீண்ட நாட்களாக நினைந்து உருவாக்கியுள்ள ஆலயத்திற்குள் நாளைப்புக
    முடிவெடுத்துள்ளோம். அதனால் உன் நிகழ்ச்சியை பின்னொரு நாளில் தள்ளி வைத்துக்கொள்வாயாக.. என்று சொல்லிப்
    போனார்.

    சங்கரனார் மேல் கொண்ட ஆழ்ந்த பக்தியினால் எழுப்பிய உள்ளக் கோயிலுக்கு ஈடாக பொன்னும், பொருளும் கொண்டு
    பேரரசனால் கட்டப்பட்ட கோயில் எந்த அளவிலும் இணையாகாது என்பதை உணரச் செய்தார்.

    சேக்கிழார் திருவாக்கில், “சாதனத்தோடு தச்சர் தம்மையும் மனத்தால் தேடி நாதனுக் காலயஞ்செய் நலம்பெறு நன்னாட்
    கொண்டே ஆதரித் தாகமத்தா லடிநிலை பாரித்தன்பாற் காதலிற் கங்குற்போதுங் கண்படா தெடுக்க லுற்றார்”
    என்பதையும் அறியலாம்.

    நித்திரையிலிருந்து சட்டென விழித்த மன்னனுக்கு பேராச்சரியம். ஆண்டவன் வாக்கு பொய்யாகாதே. ஆயினும் தாம்
    எழுப்பியுள்ள ஆலயத்தைக்காட்டிலும் சிறந்ததொரு ஆலயம் எப்படி தன் கவனத்திற்கு வராமல் போனது என்று
    அதிசயித்தவாறு, உடனே அப்படிப்பட்ட ஆலயத்தைக் காண வேண்டும் என்று தேடிச் சென்றான் பல்லவ மன்னன். வழியில் கண்ட ஒரு விவசாயியிடம் இதுபற்றி விசாரித்தபோது, ‘இலுப்பை மரத்தடியில் பித்தர் ஒருவர் கோயில் கட்டுவதாக பிதற்றிக் கொண்டிருந்தார் , அவரைப் போய் கேளுங்கள்’ என்று சொன்னார். அவரைச் சென்று பார்த்த மன்னன் அதிர்ந்து போனான்.

    வேதியரை வீழ்ந்து வணங்கினான் வேந்தன். பின் பூசலாரின் எண்ணமும், அவர்தம் பக்தியின் ஆழமும் அறிந்த மன்னன், அவர் விருப்பப்படி ஆலயம் எழுப்பினான். இதயத்தில் கோவில் கொண்ட ஈசுவரருக்கு இருதயாலீசுவரர் என்ற திருநாமமும் அமைந்தது. பின்னர் மன்னர் காஞ்சி சென்று, தாம் அமைத்த கைலாசநாதர் ஆலயத்திற்கு மகிழ்ச்சியுடன் குடமுழுக்கு செய்வித்தார். வரலாற்றில் தனக்கென ஒரு தனியிடத்தைக் கொண்டுள்ள திருநின்றவூர் இருதயாலீசுவரர் சந்நிதியின் கருவறையில் ஈசன் இலிங்கத் திருமேனியின் அருகே பூசலார் நாயனாரின் திரு உருவமும் காட்சியளிப்பது சிறப்பு!

    ஈசனார் மீது பூசலார் நாயனார் கொண்ட மெய்யன்பு திருமந்திரத்தில், “ஈசன் அறியும் இராப்பகலுந் தன்னைப் பாசத்துள் வைத்துப் பரிந்தறிவார்களைத் தேசுற்றறிந்து செயலற்றிருந்திடில் ஈசன்வந்தெம்மிடை ஈண்டி நின்றானே” என்பதற்கு ஈடாகும். கைலாசநாதர் கோயில் அதே காடவ மன்னன் அமைத்தது என்பதற்கு வரலாற்றுச் சான்றாக, கல்வெட்டுகளில், “அவன் அசரீரி கேட்டான். அவன் இக்கலியுகத்தில் அசரீரி கேட்டது வியப்பே இவன் கலியுகத்தின் வானொலி கேட்டான்” “அவன் சிறந்த சிவபக்தன்”, “ஆகமப்பிரியன்” என்னும் புகழாரங்களும் இருத்தல் பூசலார் நாயனார் திருத் தொண்டின் பெருமையை நிலைநாட்டுவதாம்.

    இதன் விளக்கமாக, ஐயன் வள்ளுவனின் குறள் காண்போம்;

    குறள் 665:

    வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்
    ஊறெய்தி உள்ளப் படும்.

    தமது எண்ணம், செயல் திறன் ஆகியவற்றால் சிறப்புற்று மாட்சிமைப்பட்டோரின் வினைத் திட்பமானது, நாட்டை ஆளும் அரசரிடமும் சென்றடைந்து மதித்துப் போற்றப்படும்.

    குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் வண்ணம்….

    ஸ்ரீராமானுசர் ஒரு முறை உஞ்சவிருத்தி செய்தபடி தெரு வழியே சென்று கொண்டிருந்தார். அப்போது தெருவோரத்தில் இருந்த ஒரு பெரிய மரத்தடியில் சில குழந்தைகள் மணல் கோயில் கட்டி விளையாடிக்கொண்டிருந்தனர். அக்குழந்தைகள் கட்டிக்கொண்டிருந்த ஆலயத்தில் கொடிமரம், அர்த்த மண்டபம், கருவறை, முன் மண்டபம், சுற்றுச் சுவர் போன்ற அனைத்தும், சிறு குச்சிகள், கோடுகள், பொடிக்கற்கள் போன்றவைகளால் உருவாக்கப்பட்டிருந்தது. அதோடு அந்த மரத்தின் இலையில், அதே மண்ணை வைத்து, பிரசாதமாக நைவேத்தியமும் வைத்து வழிபட்டனர். இதை கவனித்துக் கொண்டிருந்த ஸ்ரீராமானுசருக்கு மெய் சிலிர்த்ததோடு அவர் கண்ணிமைக்காது நின்றிருந்தார். மூலவருடன் மிக விளையாட்டாக கட்டப்பட்டிருந்த கோவிலாக இருந்தாலும், அக்குழந்தைகளின் பக்தியில் எந்த குறைபாடும் இருக்கவில்லை. அதே ஆழ்ந்த பக்தியுடன், ராமானுசரிடம் நெருங்கி வந்த குழந்தைகள் அன்பொழுக, ‘சாமி இந்தாங்க உங்களுக்கும் பிரசாதம்’ என்று கொடுத்தனர். கள்ளங்கபடமில்லாத அக்குழந்தைகள் அளித்த பிரசாதத்தை தம் உஞ்சவிருத்தி சொம்பில் மகிழ்வுடன் பெற்றுக்கொண்டார். இறைவனை உள்ளத்தில் உணர்வுப்பூர்வமாகக் காணும் திருக்கோலமே உண்மையான இறைத் திருமேனி. உளமாற போற்றிப்பாடும் வார்த்தைகளே அவர்தம் திருநாமம். மகிழ்ச்சியால் பெரிதும் பூரிப்படைந்திருந்த ராமானுசர் அக்குழந்தைகளின் உருவத்தில் பெருமாளையேக் காண்கிறார்.

    தமருகந்த தெவ்வுருவம் அவ்வுருவம் தானே,
    தமருகந்த தெப்பேர்மற் றப்பேர், – தமருகந்து
    எவ்வண்ணம் சிந்தித் திமையா திருப்பரே,
    அவ்வண்ணம் அழியா னாம்.

    என்ற பொய்கையாழ்வார் பாசுரத்திற்கு விளக்கமாகவே இக்குழந்தைகளின் செயலைக் கண்டார் ராமானுசர்!

    Share
  • அடியாரும், ஆன்மீகமும் (3)

    பவள சங்கரி

    அடியார்கள் எந்த நிலையிலும் மனம் கலங்கி நிற்கமாட்டார்கள். போற்றுவார் போற்றலும், தூற்றுவார் தூற்றலும் ஒன்றேபோல் பாவித்து அன்பும், பக்தியும் தம் இரு கண்களென வாழ்க்கை நெறியில் சற்றும் தடம் புரளாமல் வாழ்ந்து காட்டுபவர்கள். எக்காலத்தும், எஞ்ஞான்றும் சிவபிரானை வழுவாமல் வாளாக் கிடந்து வாடி நிற்கமாட்டார்கள்.

    அன்பும் சிவமும் இரண்டு என்பர் அறிவிலார்
    அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
    அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
    அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே
    (திருமந்திரம் : -270)

    அன்பும், சிவமும் இரண்டும் ஒன்றே என்று உணரும் உணர்வில் இறைமைப் பேறு வாய்ப்பதாக திருமூலர் அருள்கிறார்.

    imagesஅதுகாறும் தருமசேனர் என்ற நாமத்துடன் சமணர்களுக்கு குருவாக இருந்து அவர்தம் வாழ்க்கையை நெறிப்படுத்தியவர், நாவுக்கரசராக சைவ சமயத்திற்கு மாறி, சிவத்திருக்கோலத்துடன் வலம் வருவதைக் கண்டு வெகுண்ட சமணர்கள் அவரை அடி பணியச் செய்ய முடியாமல், ஒரேயடியாக கொல்வதற்கு மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளில் ஒன்றாக அவரை நீற்றறையிலிட அரசன் கட்டளையிட்டான். ஆனால், அப்பரடிகளோ வீரட்டானேசுவரரைத் தியானித்தபடி “மாசில் வீணையும் மாலை மதியமும்” என்னும் திருக்குறுந்தொகையைப் பாடி அருளியபோது அவரை அடைத்து வைத்திருந்த நீற்றறை குளிர்ந்ததாம். ஏழு நாட்களுக்குப் பின்னும் எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல், இன்முகத்தோடு வெளிவந்தார். சமண சமயத்து மந்திரங்கள் அனைத்தையும் கற்றவர் என்பதை அறிந்திருந்தும், சமணர்கள் நாவுக்கரசருக்கு கொடிய நஞ்சு கலந்த உணவை உண்ணச் செய்தபோதும் இறையருளால் உயிர் பிழைத்தார். அடுத்து, யானைக்காலில் இடறச் செய்ய எத்தனித்தபோது, “சுண்ண வெண்சந்தனச் சாந்து” என்னும் பதிகம் பாடிய அவரை, பெரும் சீற்றத்துடன் வந்த யானை, வலம் வந்து மண்டியிட்டு வணங்கிப் பின் அதே கோபத்துடன், கூட்டத்திலிருந்த சமணத் துறவிகளைத் துதிக்கையால் தாக்கியும், தரையில் அடித்தும் கால்களில் மிதித்தும் கொன்றது.

    Thingalur Appar

    பல்லவ மன்னன், மகேந்திரவர்மன் (கி.பி. 600 -630) சமணர்களின் பேச்சைக் கேட்டு, நாவுக்கரசரை கல்லுடன் கட்டி கடலில் தள்ளியபோது, கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும், நற்றுணை யாவது நமச்சி வாயவே, என்ற கீழ்கண்ட பதிகம் பாடித் துதிக்க, அக்கல்லே தெப்பமாக மாறி கடலில் மிதந்து வந்து திருப்பாதிரிப்புலியூர் அருகே கரை சேர்த்தது. நகர மக்கள் அனைவரும் அதிசயித்து அப்பரடிகளை வாழ்த்தினர். இன்றும் அப்பரடிகள் கரையேறிய அந்த இடம் ‘கரையேறவிட்ட குப்பம்’ என்ற திருப்பெயரால் சிறந்து விளங்குகிறது.

    “சொற்றுணை வேதியன் சோதி வானவன்
    பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
    கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
    நற்றுணை யாவது நமச்சி வாயவே”
    (நான்காம் திருமுறை – 11 வது பதிகம்)

    அதாவது, புனிதமான சொற்கள் கொண்ட வேதங்களுக்குத் துணையாக இருந்து அவற்றை அருளியவனும், சோதி வடிவாக இருந்து நமக்கு வழிகாட்டுபவனுமாக இருக்கும் சிவபெருமானின் பொன் போன்று பொலிவுற்றிருக்கும் ஐயனின் திருவடிகளை நமது மனத்தினில் இருக்கச்செய்து, கையால் தொழுது வழிபட்டால், நம்மை கல்லுடன் பிணைத்து கடலில் வீசினாலும், சிவபெருமானின் திருநாமமாகிய நமச்சிவாயம், எனும் திருவைந்தெழுத்தே நமக்கு பெருந்துணையாக இருந்து நம்மைக் காக்கும் என்பதாம்.

    மாப்பிணை தழுவிய மாதோர் பாகத்தன்
    பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ
    நாப்பிணை தழுவிய நமச்சி வாயப்பத்
    தேத்தவல் லார்தமக் கிடுக்க ணில்லையே.
    இதுவும், சமணர்கள் கற்றூணிற்கட்டிக் கடலிலே வீழ்த்தியபோது ஓதியருளியது.

    மான் கன்றினை இடக்கையில் ஏந்தியும், இடப்பாகத்தில் உமையம்மையை ஏற்றுக் கொண்டும் காட்சியளிக்கும் சிவபெருமானின் திருவடிகளை நமது மனத்தினில் பொருத்தி, மலர்கள் தூவி வழிபடுவதாலும், நமச்சிவாயப் பதிகத்தினை நாவாரப்பாடி தொழ வல்லவர்களை எத்தைகைய துயரங்களும் அண்டாது.

    ஒரு ஜென் கதையைப் பார்ப்போமா:

    மன உறுதி இல்லாதவரால் எந்த ஒரு காரியத்தையும் சாதிக்க முடியாது.

    மிகவும் புகழ் பெற்ற வில் வித்தைக்கார சென் துறவி ஒருவர் இருந்தார். அவருடன் போட்டியிட்டு எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்துடன், திறமைசாலியான ஒரு இளம் வில் வித்தைக்காரர் அந்த சென் துறவியைத் தேடி வந்தார். அத்துறவிக்கு சவால் விடக்கூடியவராய் இருந்த அந்த இளம் வீரர் போட்டிக்கான நாளைக் குறித்தார். மக்கள் முன்னிலையில் போட்டி ஆரம்பமானது. பல கட்டங்களாக நடந்த அப்போட்டியில் இருவரும் சமமாக வென்று முன்னேறிக் கொண்டிருந்தனர்.

    தொலைவில் இருந்த ஒரு மாட்டு பொம்மையின் கண்ணில் கச்சிதமாகத் தமது முதல் அம்பால் அடித்தும், பின் அடுத்த அம்பால், முதலில் அடித்த அந்த அம்பையே இரண்டாகப் பிளந்து காட்டியும் சாதனை செய்தார் அந்த இளம் வீரர்.

    ‘அருமை’ என்று அந்தத் துறவி பாராட்டியதோடு, ‘என்னுடன் நான் சொல்கிற வேறு ஒரு இடத்துக்கு வா. அங்கு வந்து உன் திறமையைக் காட்டு பார்ப்போம்’ என்றார்.

    அந்த இளம் வீரரும், அப்படிப்பட்ட இடம் எதுவாக இருக்கும் என்ற அடக்க முடியாத ஆவலுடன் துறவியைப் பின் தொடர்ந்து சென்றார். ஒரு பெரிய மலைச் சிகரத்தில் ஏறிய துறவி, மிக உயரமான இரண்டு மலைகளுக்கு இடையே நடந்து செல்வதற்காகப் போடப்பட்டிருந்த சின்னஞ் சிறு மரப்பாலத்தில் நடந்து அதன் நடுவில் சென்று நின்றார். அந்தப் பாலமோ ஒருவர் மட்டுமே நடந்து செல்லக் கூடியதாக இருந்தது. கீழே அதள பாதாளம். சற்றே சறுக்கினாலும் மரணத்திலிருந்து தப்பிக்க இயலாது.

    தன் வில்லை எடுத்த துறவியாரோ, அம்பைத் தொடுத்து தொலைவில் இருந்த ஒரு மரத்தின் கனியில் மிகச் சரியாகக் குறி பார்த்து வீசினார். குறி தப்பாமல் வென்றும்விட்டார்.

    ‘இப்போது உன் முறை’ என்றபடியே பாலத்தில் இருந்து வெளியே வந்து மலைப்பகுதிக்குச் சென்று நின்று கொண்டார்.
    அந்த இளம் வீரருக்கோ அச்சத்தில் கை, கால்களனைத்தும் உதறலெடுக்க ஆரம்பித்தது. அதனால் அக்கனியை சரியாகக் குறி பார்க்க முடியவில்லை. தன் இலக்கையும் அடைய முடியவில்லை அந்த இளைஞனால்.

    வருந்திய அவ்வீரரை அணைத்து, அவரது முதுகைத் தடவிக் கொடுத்த துறவி, ‘உன் வில்லில் இருக்கும் உறுதி, உன் மனதில் இல்லை. அதுதான் பிரச்சனை’ என்றார்.

    மனம் வலிமை உடையதாக இருந்தால் மட்டுமே உடலும் வலிமையுடன் இருக்கும். மன உறுதி உடையவர்கள் மட்டுமே நினைத்ததை நினைத்தவாறு அடையமுடியும். அதற்கு குழப்பமில்லாத தெளிவான சிந்தனையும், மன அமைதியும் அவசியம். அப்படிப்பட்ட மன உறுதி இல்லாதவர்கள் துன்பத்தில் உழல்வதுடன், பிறருக்கு உதவும் மனப்பான்மையையும் இழந்து, அதனால் மற்றவர்களால் ஒதுக்கப்படவும் செய்கிறார்கள். ஆக ,மன உறுதி இல்லாதவர்களால் எந்த சாதனையும் செய்ய முடியாது என்பதை உணர்ந்து கொண்டார் அந்த வீரர்!

    குறள் 666:
    எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார்
    திண்ணியர் ஆகப் பெறின்.

    தாம் செய்ய எண்ணிய செயலைச் செய்து முடிப்பதற்கு ஏற்ற மனஉறுதியை உடையவராக இருந்தால் மட்டுமே தாம் அடைய நினைத்தவற்றை எல்லாம் தம் எண்ணப்படியே அடைவார்.

    படங்களுக்கு நன்றி

    Share
  • அடியாரும் ஆன்மீகமும் (2)

    பவள சங்கரி

    1382426_823390031082957_239293274964935666_n

    12914_823390161082944_8842537095226880754_n

    ஆன்மீக நெறியில் நயந்து இருப்போரின் உள்ளம் என்றும் எதைக்கண்டும் அஞ்சுவதில்லை. எம்மைக் காக்கும் ஈசன், பரம்பொருள் எம்மை வழிநடாத்துவான் என்ற இறுமாப்பு கொண்டோர்களாகவே, தன்னம்பிக்கையின் சிகரமாக வலம் வருகின்றனர். அந்த வகையில் அப்பரடிகளின் பாடல்கள் அனைத்தும் பெரும்பாலும் சுதந்திர உணர்வுமிக்க எழுச்சிப் பாடல்களாகவே அமைந்துள்ளன எனலாம். உழவாரப்படை கொண்டு சமூகப் பணியையும் குறைவிலாது நிறைவேற்றியவர். சாதி, குலம், மதம் என எந்தவித வேறுபாடும் இன்றி, ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்ற தூய நெறியில் வாழ்ந்தவர். இந்த தன்னம்பிக்கையே இவருக்கு பல்லவ மன்னனையே துணிந்து எதிர்க்கும் வல்லமையைப் பெற்றுத்தந்தது. சமூக நலன் கருதி தம் வாழ்க்கையையே அர்ப்பணித்த புரட்சிக் கவிஞர் இவர் என்றால் அது மிகையாகாது!

    நாமார்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம்;
    நரகத்தில் இடர்ப்படோம்; நடலை இல்லோம்;
    ஏமாப்போம்; பிணியறியோம்; பணிவோம் அல்லோம்;
    இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை.

    ‘நான் யாருக்கும் அடிமையில்லை; எமனுக்கு கூட அஞ்ச மாட்டேன்…’ என்ற பொருள்படும் வகையில், “நாமார்க்கும் குடியல்லோம் நமனையஞ்சோம்” என்ற மறுமாற்றத் திருத்தாண்டகத்தில், அப்பர் பெருமானின் உயரிய இறுமாப்பு பல்லவப் பேரரசனையும் பணிய வைத்த சிறப்பைக் காணலாம்.

    அதாவது எவரும் தம்மைக் கட்டுப்படுத்தவோ, அத்து இடவோ முடியாது. எமனுக்கும் கூட அஞ்சமாட்டோம். எமக்கு மரணத்தைக் கண்டும் அச்சமில்லை. ஒருவேளை நரகத்திற்கே செல்ல நேர்ந்தாலும் யாம் அங்கே இடர் பட மாட்டோம். அதையே சொர்க்கமாக எண்ணவும் எம் மனம் அறியும். ஏமாற மாட்டோம். பிணியுற்றாலும், அதனால் துவண்டு, அடிபணிய மாட்டோம். இறையருளால், எமக்கு எந்நாளும் இன்பமேயன்றி துன்பம் என்பதே இல்லை.

    அப்பரடிகள், தருமசேனராக இருந்தபோது சூலைநோய் எனும் வயிற்று வலியால் மிகவும் துன்பப்பட்ட நேரத்தில்
    “ஏமாப்போம் பிணியறியோம் பணிவோமல்லோம் இன்பமே ஒருநாளும் துன்பமில்லை..” என்று மன உறுதியோடு அந்த
    நிலையிலும் பூரண சரணாகதியுடன் இறை நம்பிக்கை கொண்டிருந்தவர்.

    பேரரசர் அலெக்சாண்டரின் அழைப்பையே ஏற்க மறுத்த ஒரு திகம்பரர் குறித்த வரலாறும் உண்டு. பின்னர் அம்மன்னரே தாமே நேரில் சென்று அத்திகம்பரரின் தரிசனம் பெற்றதாகவும் வரலாறு கூறுகின்றன.

    ஐயன் வள்ளுவனின் குறள் நெறியைப் பார்ப்போம்:

    குறள்:497
    அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை
    எண்ணி இடத்தால் செயின்

    செய்ய வேண்டியவைகளை குறைவில்லாமல் எண்ணித் தக்க இடத்தில் பொருந்திச் செய்தால், அஞ்சாமை அல்லாமல்
    வேறு துணையும் நாட வேண்டியதில்லை. அதாவது எந்த ஒரு செயலுக்கும் தம் திண்மை அன்றி வேறு ஒரு துணை வேண்டுவதில்லை.

    ஒரு ஜென் கதையைப் பார்ப்போமா..

    பேரரசன் ஒருவன் இருந்தான். இந்த உலகிலேயே தனக்கு இணை எவருமே இல்லாத மாபெரும் வீரன் தான் மட்டுமே என்று இறுமாப்புடன் இருந்து வந்தான். அவனைச் சுற்றி இருந்த ஒத்து ஊதும் கூட்டமும், புகழில் மயங்கிக் கிடக்கும் அரசனை எப்படியும் கவிழ்த்துவிட முடியும் என்ற பேராசையில் அவனை தகுதிக்கு மீறிய புகழ் போதையில் மயக்கி வைத்திருந்தனர். இதையறியாத அரசனும் ஒருவரையும் மதிக்காமல் ‘தான்’ என்ற அகந்தையில் திரிந்து கொண்டிருந்தான். நாட்கள் செல்லச் செல்ல, நண்பர்களும், சுற்றமும் விட்டு விலகிச் செல்ல ஆரம்பிக்க அரசனுக்கு ஏதோ ஒரு வெறுமை குடிகொள்ள ஆரம்பித்தது. அவனுடைய செயல்பாடுகளிலும் தொய்வு ஏற்பட ஆரம்பித்தது. ஒரு ஜென் துறவியைச் சந்தித்து ஆசி பெற்றால் தம் மனம் தெளிவடையும் என்று நினைத்த அரசன், அந்த ஊரில் இருந்த ஒரு ஜென் துறவியிடம் சென்று, தம் வீரதீர பராக்கிரமங்களையெல்லாம் எடுத்துச் சொல்லி, தமக்கு ஆசி வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். ஆனால் அந்த அரசன் சொன்ன எதையும் காதில் வாங்கியதாகவே தெரியாதது போல் இருந்த ஜென் துறவி, ‘நான்’ செத்த பிறகு வா, இப்போது இந்த இடத்தை காலி செய்’ என்று மட்டும் சொன்னார். அந்த அரசனோ,

    ‘என்ன இது, நீங்கள் செத்த பிறகு வந்து நான் என்ன செய்வது’ என்று கேட்டான்.

    அப்போதும் அந்தத் துறவியார், ‘நான், செத்த பிறகு வா.. போ இங்கிருந்து’ என்றார்.

    அரசனும் மேலும் பல முறை கேட்டும், அவரிடமிருந்து இதைத் தவிர வேறு எந்த பதிலும் வரவில்லை. அரசன் உடனே கோபமாக வாளை உருவினான். சுற்றியிருந்த சீடர்களோ, அவரைத் தடுத்து நிறுத்தி, அவருடைய நிலையை புரியச் செய்து, அந்த மகானிடம் அமைதியாகச் சென்று, பணிவுடன், ஆசி வழங்குமாறு கேட்குமாறு எடுத்துச் சொன்னார்கள். கோபம் சற்று குறைந்த அரசன், தன் நிலை உணர்ந்தவனாக பணிவாக, அந்தத் துறவியிடம் சென்று ஆசி வழங்கும்படி கேட்டான். அப்போதும் அவர் அதே பதிலை மட்டுமே கூறினார். ஆனால் அந்த அரசனுக்கு, ‘தான்’ என்ற அகந்தையை அழித்துவிட்டு வந்தால்தான் ஆசி பெற முடியும் என்பது தெளிவாகவே புரிந்தது!

    Share
  • அடியாரும் ஆன்மீகமும்! (1)

    பவள சங்கரி

    aaa

    ‘பெரிய புராணம்’ எனும் தெய்வீக நூலில், அடியார்களைப் பற்றிப் பாடும்போது சேக்கிழார் பெருமான்,

    கேடு மாக்கமுங் கெட்ட திருவினார்
    ஒடுஞ் செம்பொனு மொக்கவே நோக்குவார்
    கூடு மன்பினிற் கும்பிட லேயன்றி
    வீடும் வேண்டா விறலின் விளங்கினார்.

    குறைவதும் மிகுவதும் இல்லாத நிலைத்த ஐசுவரியத்தை உடையவர்கள், பிச்சைபுக்கு மண் ஓட்டையும் பசும் பொன்னையும் ஒன்று போலவே காண்பவர்கள். இறைவனை இதயக்கூட்டிலே கட்டி வைக்கும் அன்பு மேலீட்டினால் அவனை வழிபடும் பிறப்பு ஒன்றேயன்றி வீட்டையும் விரும்பாத வன்மையுடையார்.

    அதாவது, வறுமையை எவரும் வெறுப்பர்; செல்வத்தை அனைவரும் விரும்புவர். ஆயின் அடியவர்கள் இவ்வாறன்றி இவ்விரண்டு நிலையிலும் மனம் மாறாது ஒன்று போலவே நின்று தம்பணிசெய்து நிற்பர்.

    சிவனைத் தவிர வேறு சிந்தனையற்றவராய் தன் கொள்கையில் நிலைநின்றவராய் இருந்த தம் பக்தியியக்கத்தைச் சாதி வேறுபாடற்ற, பொருள் ஏற்றத்தாழ்வற்ற, ஒன்றே சிவம் என எண்ணுகின்ற மக்களைக் கொண்டதாக அமைக்க விரும்பியவர் அப்பரடிகள்.

    சாத்திரம் பலபேசும் சழக்கர்காள் கோத்திரமும்
    குலமும் கொண்டென் செய்வீர்
    பாத்திரம் சிவமென்று பணிதிரேல்
    மாத்திரைக்கு ளருமாற் பேறரே

    அறப்போராளியின் உன்னத தன்மையான, பகைவர்கள் தமக்குச் செய்யும் தீங்குகளைப் பொறுத்தலும் தீங்கு செய்த பகைவர்களுக்கு மனத்தாலும் தீங்கு செய்யாதிருத்தலும் தலையாயக் கடமையாகக் கொள்பவர்கள்.

    “எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
    மாணாசெய் யாமை தலை” (குறள்-317)
    என்ற ஐயன் வள்ளுவனின் வாக்கின்படி நடந்து மக்களுக்கு பல நன்மைகளையும் செய்தவர்கள் அடியார்கள்.

    ஆனால் இன்று அனைத்துமே வணிக மயமாகிவிட்டது. ஆடிக்காற்றிலே அம்மியே பறப்பது போல இன்று பக்தியும் கூட வர்த்தகமாகிவிட்டது. விளம்பரமும், பிரச்சாரமும் வேண்டி நிற்கிறது.

    ஒரு ஜென் கதையைப் பார்ப்போம்;

    ஒரு ஜென் குரு தன் வழியே போய்க்கொண்டிருந்தவரை சீடர் ஒருவர், கட்டாயப்படுத்தி, மன்றாடி தன் இல்ல விருந்திற்கு அழைத்துச் செல்கிறார். மிகப்பிரம்மாண்டமான விருந்து அது. செல்வச் சீமான்களின் படாடோபமான செயல்பாடுகளில் அரங்கமே பொன்னாக மின்னிக் கொண்டிருந்தது. அத்தனை பெரிய விருந்தை தம் வாழ்நாளில் அதுவரைக் காணாதவர், கண்ணிமைப்பதையும் மறந்து பிரம்மிப்பாக பார்த்துக்கொண்டிருந்தார். அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பிலும், மரியாதையிலும் ஒரு கணம் தம்மை மறந்துதான்விட்டார். விருந்துபச்சாரம் முடிந்தவுடன், அவருக்காகக் காத்திருந்த தம் அடியார்களைச் சந்திக்கச் செல்லாமல் விரைவாக எங்கோ சென்று கொண்டிருந்தவரைத் தொடர்ந்து சென்ற அவருடைய அடியார்களிடம், தாம் குருவாக இருக்கும் தகுதியை இழந்துவிட்டதாகக் கூறி, மீண்டும் ஒரு குருவிடம் சென்று பத்து ஆண்டுகள் மாணவராக பாடம் பெற்று, அதன் பிறகே மற்றவர்களுக்கு குருவாக பாடம் கற்பித்தாராம்….

    Share
  • நிலை மாறும் உலகில்……..

    பவள சங்கரி

    வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும். ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும் என்பது இதுதானோ!!

    images (2)

    ஒரு காலத்தில், இந்தியா உள்பட தெற்காசிய கண்டத்தில் உள்ள பல நாடுகளை பிரிட்டன் ஏகாதிபத்தியம் அடிமைப்படுத்தி வைத்திருந்தது. இன்று நிலைமையைப் பாருங்களேன்…. இதைச் சாத்தியமாக்கிய அத்துனை இந்தியர்களுக்கும் உளமார்ந்த பாராட்டுகள்!

    இந்திய கோடீசுவரர்கள் அனைவரும் பிரிட்டனில் வீடு மனை விற்பனைத் துறையில் முதலீடு செய்வதில் அதிக ஆர்வமுடன் உள்ளனர். பிரிட்டனில் ஆடம்பர பங்களா வாங்குவதற்காக, அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியர்கள் சார்பில் ரூ.12 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்பட உள்ளது’ என, உலகின் முன்னணி வீடு மனை வர்த்தக நிறுவனமான ஜோன்ஸ் லாங் லாசல்லா நடத்திய ஆய்வில் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கோடீசுவரர்கள் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சராசரியாக ஆண்டுக்கு 7.3 சதவீதமாக உள்ளது. இதனால், புதிய பணக்காரர்கள் உருவாகி வருகின்றனர். உலகின் பெரும் கோடீசுவரர்கள் பட்டியலில் இந்தியாவின், இலண்டன்வாழ் லட்சுமி மிட்டல், முகேஷ் அம்பானி மற்றும் அனில் அம்பானி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்திய கோடீசுவரர்கள் அனைவரும் பிரிட்டனில் வீடு மனை விற்பனை (ரியல் எஸ்டேட்) துறையில் முதலீடு செய்வதில் அதிக ஆர்வமுடன் உள்ளனர். பிரிட்டனின் லண்டன் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஆடம்பர பங்களாக்களை வாங்கவும் திட்டமிட்டுள்ளனர். இதன்படி சராசரியாக, அடுத்த 10 ஆண்டுகளில் இதற்காக இந்தியர்கள் சார்பில் ரூ.12 ஆயிரம் கோடிக்கும் அதிகமான தொகை முதலீடு செய்யப்பட உள்ளது.

    உலக பணக்காரர்கள் அதிகம் உள்ள நாடுகள்குறித்த விவரத்தை ஹூரன் குளோபல் ரிச் அறிக்கை வெளியிட்டுள்ளது. 2014-ஆம் ஆண்டில் இந்தியாவில் கோடீசுவரர்கள் எண்ணிக்கை 97 ஆக உயர்ந்தது. பல வருடமாக 3 வது இடத்தில் இருந்த உருசியாவை, இந்தியா இந்த வருடம் 4-ஆம் இடத்திற்கு தள்ளி உள்ளது. உலகத்தில் இருக்கும் பாதி கோடீசுவரர்கள் அமெரிக்கா மற்றும் சீனாவில் தான் உள்ளனர் என இந்த ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது. மேலும் இந்தியா கோடீசுவரர்கள் அதிகம் கொண்ட நாடுகளின் பட்டியலில் முதல் முறையாக முதல் 3வது இடத்திற்கு வந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது!

    “நம் நாட்டு அரசியலில் தற்போது பிரிட்டிஷ் இந்தியர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மேலும் அதிக அளவில் நாடாளுமன்ற மேலவை, கீழவை ஆகியவற்றிலும் அரசிலும் இடம்பெறுவதைக் காண விரும்புகிறேன். பிரிட்டனுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவை மேம்படுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்வோம். இது வலுவான உறவாகும். நமது பொருளாதார உறவுகள் குறித்து இரு தரப்பிலும் ஆர்வம் காணப்படுகிறது. இதர ஐரோப்பிய நாடுகள் அனைத்திலும் மேற்கொள்ளும் முதலீட்டை விட, பிரிட்டனில்தான் இந்தியா அதிக அளவில் முதலீடு செய்கிறது. அதே போல், இந்தியாவில் அதிக அளவில் முதலீடு செய்யும் 3 நாடுகளில் ஒன்றாக பிரிட்டன் விளங்குகிறது” – 2013 நவம்பரில் பிரிட்டன் பிரதமர் கேம்ரூன் அவர்களின் அறிக்கை இது.

    Share
  • அவர் ஏன் பெருந்தலைவர்?

    பவள சங்கரி

    இன்று பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள். அவர் ஏன் பெருந்தலைவர்?

    kamaraj-lalbahardur

    தன் தாய்க்கு மாதம் 120 ரூபாய் சாப்பாட்டு செலவிற்குக் கொடுப்பாராம். ஒரு முறை அவருடைய தாயார், மகனிடம், செலவிற்கு பணம் போதவில்லை கொஞ்சம் சேர்த்து கொடுக்கும்படி கேட்டாராம். ஆனால் நம் தலைவரோ முடியாது என்று மறுத்துவிட்டாராம். முதல் அமைச்சரின் தாயார் என்பதால் அடிக்கடி அவரைக் காண வருபவர்களுக்கு காபி, தேநீர் கூட கொடுக்க முடியவில்லையே என்று அன்னை வருந்தியிருக்கிறார். அப்போது காமராஜரைப் பார்த்து அவருடைய நண்பர் ஒருவர், ‘நீங்கள்தான் சம்பளம் வாங்குகிறீர்களே. அதையெல்லாம் என்ன செய்கிறீர்கள்?’ என்று கேட்க, அவரும் உடனே, ‘என் தாயாருக்கு சாப்பாட்டு செலவுக்கு பணம் அனுப்பி வைக்கிறேன். என்னுடைய சாப்பாட்டு செலவுகள் போக, அடிக்கடி கட்சி வேலைகளுக்காக புதுடெல்லிக்குப் போவதால், சம்பளப் பணம் செலவழிந்து போகிறது. முதலமைச்சராகப் போனால் மட்டும்தான் அரசாங்கச் செலவு. நம் கட்சி வேலைகளுக்காகப் போனால் என் சொந்தப் பணத்திலேதான் சென்று வருகிறேன்’ என்று பதில் வந்துள்ளது. எத்தனை பெருந்தன்மை! இவரல்லவோ சிறந்த தலைவர்!

    Share
  • நாடகத் துறையில் ஒரு மைல்கல்!

    பவள சங்கரி

    நம் சங்கத் தமிழ் என்பது இயல், இசை, நாடகம் என முத்தமிழையும் உள்ளடக்கியது. இயற்றமிழ் இன்று மெல்ல, மெல்ல உருமாறிக் கொண்டிருக்கிறதோ என்ற அச்சம் நம் தமிழ் வல்லுநர்கள் மத்தியில் பரவலாகப் பேசப்படுகிறது. கர்நாடக இசை, மெல்லிசைப் பாடல்கள், பக்தி இலக்கியம் போன்றவைகள் மூலமாக இசைத்தமிழ் காப்பாற்றப்பட்டு, தம் நிறம் இழக்காமல் இருக்கிறது. தம் எண்ணங்களை தமது உடல்மொழியின் வாயிலாக இயல்பாக வெளிப்படுத்தி, புறத்தார்க்குப் புலனாக நடித்துக் காட்டுதற்கு ஏற்றவாறு அமைந்த மொழிநடை நாடகத் தமிழ் என வழங்கப்படுகிறது. ஆனால் வீரம், காதல், பக்தி, வாழ்க்கை நெறி, வாழும் முறை என அனைத்தையும் உள்ளடக்கிய நம் தமிழ் கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் பிரதிபலிக்கும் நாடகக் கலை இன்று வருங்கால சந்ததியினருக்கு முழுமையாகச் சென்றடையுமா என்பது ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது. தற்பொழுது திரு. கிரேசி மோகன், திரு ஒய்.ஜி. மகேந்திரன், திரு. எஸ்.வி. சேகர் போன்ற குறிப்பிட்ட சிலரே நாடகவியலை கட்டிக்காத்துக்கொண்டு வரும் சூழலில் சமீபத்தில் திரு.கிரேசி மோகன் அவர்களின், ‘சாக்லேட் கிருஷ்ணா’ என்ற நாடகம், நகைச்சுவையும், ஆன்மீகமும் கலந்த கலவையாக, பிரகாசித்துக் கொண்டிருக்கும் மேடை நாடகம் தன்னுடைய 777 வது நிகழ்ச்சியை வெகு சிறப்பாகக் கொண்டாடியுள்ளது. போகிற போக்கில் தம் யதார்த்தமான வசனம் மூலம், சகோதரர் மாது பாலாஜி மற்றும் தம் நாடகக் குடும்பத்துடன் உலகின் பல பகுதிகளில், வெகு சிறப்பாக நடந்து வரும் மேடை நாடகம் இது. திரையுலகிலும், எழுத்து, வசனம் என அனைத்திலும் தம் முத்திரையைப் பதித்துள்ள மூத்த எழுத்தாளர், திருமிகு சித்ராலயா கோபு, உலக நாயகர் திருமிகு கமலஹாசன், திருமிகு நல்லி குப்புசாமி அவர்கள் முன்னணியில், சென்னை மயிலை நாரத கான சபாவில், அரங்கு நிறைந்த காட்சியாக மிகச் சிறப்பாக நடந்தேறியது. இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது, மிகப்பெரிய தொகைக்கு நுழைவுச் சீட்டு விற்பனை ஆகியுள்ளதுதான். மக்களிடம் நல்ல நாடகங்களைக் காணும் ஆவல் அதிகமாக இருப்பதையே இது உணர்த்துகிறது.

    acraz

    திரு.நல்லி குப்புசாமி அவர்கள் கமலஹாசன் அவர்களின் சமீபத்திய வெற்றிப்படமான ‘பாபநாசம்’ திரைப்படத்தை பாராட்டிப் பேசியவர், அப்படத்தில் பல காட்சிகளில் தாம் வெளியில் வந்து நின்று கொண்டதைக் கண்ட நண்பர்கள் காரணம் கேட்டபோது, தாம் ஏற்கனவே மலையாளத்தில் வந்த, மோகன்லால் படத்தை பார்த்திருந்ததால், போலீசார் அவரை அடிக்கும் காட்சி வரும் நேரத்தில் அதைக் காணச்சகிக்காது, வெளியில் வந்துவிட்டதாகச் சொன்னார்.

    DSCN1029

    அடுத்து பேசிய சித்ராலயா கோபு கமல் ஆரம்பத்தில் நடித்த ‘உணர்ச்சிகள்’ என்ற படத்திலேயே பிற்காலத்தில் ஒரு பெரிய நடிகராக வரக்கூடிய தகுதி படைத்தவர் என்று சொன்னதாகவும், இன்று அதைவிட பலப்படிகள் கடந்து உலக நாயகராக உயர்ந்து நிற்பதாகக் கூறினார். கூடிய விரைவில் மிகச் சிறந்த இயக்குநராகவும் ஆகப்போகிறவர் என்றும் பாராட்டினார். திரு கிரேசி மோகன் அவர்களின் இந்த மாபெரும் வெற்றியை பாராட்டிப் பேசியவர், அதற்கான காரணம் அவருக்குத் தூணாகத் துணையிருக்கும் சகோதரர் மாது பாலாஜி மற்றும் பல ஆண்டுகளாக தொடர்ந்து அவரோடு இணைந்திருக்கும் நாடகக் குடும்பமும்தான் என்றார். மாது பாலாஜியை பல முறை திரைப்படத்தில் நடிக்க அழைத்தும், தம் குடும்பத்தார் அதை விரும்பவில்லை, நாடகம் மட்டுமே போதும் என்று தெளிவாக இருப்பதைக் குறிப்பிட்டபோது இந்த ஆழ்ந்த ஈடுபாடு இக்குழுவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என்ற எண்ணம் தோன்றியது. கிரேசி கிரியேஷன்ஸ் குழும நண்பர்கள் அனைவரும் ஒரே குடும்பமாக செயல்படுவதும், நறுக்கு தெறித்தாற்போன்ற வசனங்களும், நேரத்திற்கு ஏற்ற நகைச்சுவையும், வசனமும் என்று பல்வேறு காரணங்களை தம் அனுபவ மொழிகளில் அழகாகச் சொல்லிச்சென்றார் அந்த 84 வயது இளைஞர். காதலிக்க நேரமில்லை என்ற மிகச் சிறந்த நகைச்சுவை படத்திற்கு வசனம் எழுதியவரின் மதிப்பீடு கருத்தில் கொள்ளத்தக்கது.

    crazy

    திரு கிரேசி மோகன் அவர்கள் தங்கள் நாடகம் 777 வது நிகழ்ச்சியாக சாதனை புரிவதற்கு உறுதுணையாக இருக்கும் அனைவரையும் உள்ளம் நெகிழ நன்றி பாராட்டினார். திரு கமலஹாசன் அவர்களின் நட்பு தனக்கு பெரிய பலம் என்பதைச் சுட்டிக்காட்டினார். தன்னுடைய பல நினைவலைகளை பகிர்ந்துகொண்டார்.

    crazkamal

    நிகழ்ச்சி துவங்கும் முன்னரே, கௌதமி மற்றும் அவருடைய மகளுடன் வந்தவர், 1000 வது நிகழ்ச்சியின் வெற்றி விழாவும் விரைவில் நடைபெறும் என்றும் அதிலும் தாம் பங்கு பெறுவது உறுதி என்றும் நம்பிக்கையோடு கூறினார். கிரேசி மோகன் அவர்கள் நகைச்சுவை படைப்புகளே அதிகம் வழங்கினாலும், மற்ற அனைத்து விதமான படைப்புகளும் சர்வ சாதாரணமாகச் செய்யக்கூடிய சகலகலா வல்லவர் என்றாலும், ஏனோ பல முறை சொல்லிய பின்பும், அவர் நகைச்சுவையை விட்டு வெளிவராமல் அதையே தம் குறிக்கோளாகக் கொண்டிருக்கிறார் என்று பாராட்டினார். வழக்கம் போல நறுக், சுருக்கென்று தம் உரையை முடித்துக்கொண்டார். திரு கிரேசி மோகனின் அடுத்த வெளியீடு விரைவில் காணப்போவதையும் தானும் ஆவலாக எதிர்பார்த்திருப்பதாகக் கூறினார்.

    DSCN1038

    நம் இந்திய நாட்டிற்கென்று தனிப்பட்ட பண்பாடும், கலாச்சாரம் இருப்பது போன்று பெரும்பாலான நாடுகளுக்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. பிரித்தானிய நாட்டின் கலாச்சாரமே அமெரிக்க நாட்டு மக்களால் பின்பற்றப்படுகிறது. அப்படிப்பட்ட நம் கலாச்சாரத்தைக் கட்டிக்காக்கும் இது போன்ற நாடகங்கள் அழிவென்பதே அறியாதவாறு போற்றிப்பாதுகாக்கப்பட வேண்டியதும் உறுதியாகிறது. பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகும் இன்றும் இலண்டன் மாநகரில் ஷேக்ஸ்பியர் நாடகங்கள் நடத்தப்படுவது போல, ‘சாக்லேட் கிருஷ்ணா’ போன்ற நல்ல தமிழ் மேடை நாடகங்கள் பல நூறு ஆண்டுகளுக்கு நடக்க வேண்டும் என்று வாழ்த்துவோம். அதற்கான முயற்சியை, அதாவது தங்களுக்கான நல்ல கலையுலக வாரிசுகளை உருவாக்க வேண்டியது திரு கிரேசி மோகன் போன்ற அனுபவம் வாய்ந்த நல்ல படைப்பாளர்களின் முக்கிய கடமையாகிறது என்பதும் உறுதி.

    படங்களுக்கு நன்றி: திரு. திருநாவுக்கரசு

    Share
  • திருக்கருகாவூர் – தல புராணம்

    பவள சங்கரி

    கருணை மழை பொழியும் கருகாவூர் கற்பக நாயகி!

    11698584_861438480611445_8838361490820937760_n
    திருக்கருகாவூர் – திருத்தாண்டகம்

    குருகாம் வயிரமாங் கூறு நாளாங்
    கொள்ளுங் கிழமையாங் கோளே தானாம்
    பருகா அமுதமாம் பாலின் நெய்யாம்
    பழத்தின் இரதமாம் பாட்டிற் பண்ணாம்
    ஒருகா லுமையாளோர் பாக னுமாம்
    உள்நின்ற நாவிற் குரையா டியாங்
    கருவா யுலகுக்கு முன்னே தோன்றுங்
    கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே. – [திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
    (ஆறாம் திருமுறை)]

    முத்தி லங்குமுறு வல்லுமை யஞ்சவே
    மத்த யானைமறு கவ்வுரி வாங்கியக்
    கத்தை போர்த்தகட வுள்கரு காவூரெம்
    அத்தர் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே. – [திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
    திருக்கருகாவூர் தேவாரத் திருப்பதிகம் – (மூன்றாம் திருமுறை 46வது திருப்பதிகம்)]

    நம் நாட்டில் மூவரின் பாடல் பெற்று சிறப்புற்று விளங்கும் தேவாரத் திருத்தலங்கள் மொத்தம் 275. அவற்றுள் திருக்கருகாவூர் என்ற இத்திருத்தலம் காவிரியின் தென் கரையில் அமைந்துள்ள 18ஆவது சிவத்தலம்.

    தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களின் பட்டியல்

    திருக்காருகாவூர் எனும் இத்திருத்தலத்தை, திருக்களாவூர், முல்லை வனம், மாதவி வனம், கர்ப்பபுரி என பல பெயர்களில் நூல்கள் குறிக்கின்றன. முல்லைக்கொடியை தல விருட்சமாகக் கொண்டதால் இத்தலம் முல்லைவனம் என்றும், இறைவன் முல்லை வன நாதர், என்றும் மாதவீவனேசுவரர் என்றும் அழைக்கப்பெறுகிறார்.

    நாற்புறமிருந்தும் எளிதாக வந்துபோகும் வகையில், சோழ வள நாட்டின் செழிப்பான தஞ்சை மாவட்டத்தில், பாபநாசம் எனும் ஊரின் தெற்கே ஆறு கிலோமீட்டர், கும்பகோணத்திற்கு தென்மேற்கில், வடக்கில் 20 கிலோ மீட்டர் மற்றும் சாலியமங்கலத்திற்கு வடக்கில் 10 கிலோமீட்டரில் இத்திருத்தலம் அமையப் பெற்றுள்ளது. தஞ்சாவூருக்கு வடக்கில் 20 கிலோமீட்டரில், வெட்டாற்றின் தென்கரையில் இக்கோவில் உள்ளது.

    இக்கோவிலில் சிவபெருமான், கற்பக விநாயகர் என அழைக்கப்பெறும் தல விநாயகர் , நந்தி என மூவரும் சுயம்பு மூர்த்திகளாகவும், சுவாமி ஆலயத்தின் பின்புறம் இருக்கும், லிங்கோத்பவரின் குடவரையில் அர்த்தநாரீசுவரர், அமைந்திருப்பது சிறப்பு. முல்லை வனத்தில் சுயம்புவாக, புற்றுருவில் தோன்றியதால் இலிங்கத் திருமேனியில் முல்லைக்கொடி படர்ந்து, வடுவை ஏற்படுத்தியிருப்பதை இன்றும் காணலாம். இறைவன் இன்றும் புற்றுருவிலேயே காட்சியளிப்பதால், வழமையான அபிடேகங்கள் ஏதுமின்றி, புனுகு மட்டுமே சாத்தப்படுகிறது.

    10665717_861438130611480_5514288486832340212_n

    இம்மண்ணில் தோன்றும் அனைத்துயிர்களின் ஆதியாய், கருவைக் காத்தருளும் கர்ப்பரட்சகியாய், கருகாத்த நாயகியாய், கரும்பானையாள் எனும் அன்னையாய் அழகே உருவாய் எழுந்தருளியிருக்கிறார். பிள்ளைப்பேறு வேண்டி வரும் பக்தர்களுக்கு வேண்டிய வரம் அருளுபவள் அன்னை. அன்னையின் திருவடியில் வைத்து பூசித்து வழங்கப்படும் பசு நெய் உண்டவர்களுக்கு பிள்ளை வரம் கிடைப்பதாக பக்தர்கள் தீவிர நம்பிக்கை கொண்டுள்ளனர். எண்ணெய் வைத்து பூசை செய்து, அதை கர்ப்பிணிப் பெண்கள் வயிற்றில் பூசிவர சுகப்பிரசவம் ஆகிறது என்றும் பக்தர்கள் நம்புகிறார்கள்.

    இங்கு உள்ள மூலவராகிய முல்லைவனநாதர் சந்நதி, கர்ப்பகரட்சகி அம்மன், இடையில் அமைந்துள்ள ஆறுமுகர் சந்நதி ஆகிய மூன்றும் ஒரே வரிசையில் உள்ளபோது தரிசிப்பது பெரும் பேறு என்கின்றனர். அதாவது, சோமாசுகந்தர் அமைப்பில் இருக்கும் மூன்று சந்நதிகளையும் ஒரு சேர வலம் வந்து தரிசிப்பவர்களுக்கு. புத்திரப் பேறும், கருவை நன் முறையில் காத்து அருளும் பேறும் வாய்க்கப் பெறுவது உறுதி. அதற்கான அமைப்பில் சுற்றுப் பிரகாரம் இருப்பதும் சிறப்பு. கோவிலுக்கு முன்னால் அமைந்துள்ள பாற்குளம் காமதேனு என்ற தெய்வப் பசு தம் காலால் உருவாக்கிய குளம் என்றும் சிவராத்திரிக் காலங்களில் பெருமான் இங்கு தீர்த்தம் அருளுவதாகவும் நம்பிக்கை உள்ளது.

    11692672_861439787277981_6858674562650678376_n

    கோவில் அமைப்பு : மிகப் பழமையான இக்கோவில் நான்கு வீதிகளுக்கு இடையில் அழகான வடிவமைப்பில் அமைந்துள்ளது. 460 அடி நீளமும், 284 அடி அகலமும் உடையது. கோவிலின் தென்புறம் நுழைவு வாயிலும், கிழக்கு புறம் இராசகோபுரமும் அமைந்துள்ளது. ஆலயத்தினுள் நுழைந்தவுடன் வடக்குபுறம் வசந்த மண்டபம் உள்ளது. அடுத்து முதலில் உள்ள பெரிய பிரகாரத்தில் முல்லைவனநாதரும், இடப்பக்கம் கர்ப்பகரட்சாம்பிகை கோவிலும் தனித்தனி பிரகாரத்தில் உள்ளது.

    ஈசனின் ஆலயத்தின் முன்னால் கொடி மரம், பலி பீடம், நந்தி ஆகியவையும், தென்கிழக்கில் மடப்பள்ளி, அறுபத்து மூன்று நாயன்மார்களும், வட கிழக்கில் நடராசர் சபா முன் மண்டபமும், யாக சாலையும் இருக்கின்றன. மேற்புறம் சுவாமிக்கு வடகிழக்கில் நடராசர் சந்நதியும், நவக்கிரகங்களும், தென்பக்கம் சோமாசுகந்தர் சந்நதியும், அருகில் தென்கிழக்கில் தல விநாயகர் கற்பகப் பிள்ளையார் சந்நதியும் உள்ளன. உட்பிரகாரத்தில் நடராசருக்கு எதிரில் சேக்கிழார், சந்தனாச்சாரியார், நால்வர் சந்நதிகளும், தென்புறம் தட்சிணாமூர்த்தி, நிருதிவிநாயகர் சந்நதிகளும், மேல்புறம் அர்த்தநாரீசுவரர், மகாலட்சுமி சந்நதிகளும், வடபுறம் ஆறுமுகர், பிரம்மன், துர்க்கை, சண்டேசுவரர் மற்றும் தல விருட்சமாகிய முல்லைக்கொடியும் அமைந்துள்ளன.

    துலாபாரப் பிரார்த்தனை மற்றும் தங்கத்தொட்டில் பிரார்த்தனை ஆகியவை இங்கு பிரசித்தம்.

    இத்திருக்கோவில் கல்வெட்டில், திருக்கருகாவூர் , மகாதேவர் திருக்கருகாவூர் ஆழ்வார், திருமுல்லைவனமுடைய மகாதேவர் என்று குறிக்கப் பெற்றுள்ளது.

    திருக்கருகாவூர் கல்வெட்டுகள் குறித்து குடவாயில் பாலசுப்பிரமணியன் எம்.ஏ., எம்.பில். அவர்களின் தொகுப்பு:

    இத்திருக்கோவிலில் உள்ள கல்வெட்டுகளில் இதுவரை 31 கல்வெட்டுகள் படி எடுக்கப்பட்டுள்ளன. அவை முதல் பராந்தக சோழன் காலத்திலிருந்து பிற்காலச் சோழர் ஆட்சிக்காலம் முடியும் வரை உள்ள கால எல்லையில் வெட்டுவிக்கப் பெற்றவையாகும். இத்திருக்கோயில் முதல் பராந்தக சோழனின் காலத்தில் (கி.பி. 907 – 953) கற்றளியாக புதுப்பிக்கப் பெற்றதோடு அப்பெருவேந்தனின் 17 கல்வெட்டுகளும் அங்கு சாசனமாக இடம் பெற்றுள்ளன. இவற்றை அடுத்து உத்தம சோழனின் கல்வெட்டு ஒன்றும், இராச இராச சோழனின் கல்வெட்டுகள் இரண்டும், விக்கிரம சோழனின் கல்வெட்டு ஒன்றும் இராஜகேசரி என்ற பட்டப் பெயர் பொறிக்கப்பட்ட சோழன் கல்வெட்டுகள் நான்கும், பரகேசரி என்ற பட்டத்துடன் உள்ள கல்வெட்டுகள் மூன்றும் உள்ளன.

    ஊர்த்தவ மகரிஷியின் சாபத்தால் நித்துவரின் மனைவி வேதிகைக்கு ஏற்பட்ட கருச்சிதைவை இறைவன் மருத்துவம் பார்த்து அவள் கருவைக் காத்ததால் – கருகாவூர் என்று பெயர் பெற்றது என்பது போன்று புராணக் கதைகள் அதிகம் இருந்தாலும், தட்ச சாபத்தால் இன்னலுற்ற சந்திரன் ஒரு பங்குனி மாத பௌர்ணமியில் இத்தலத்தில் சிவபூசை செய்து நற்கதி அடைந்ததன் விளைவாக, ஒவ்வொரு பங்குனி பௌர்ணமி நாளிலும் நிலவொளி இறைவன் திருமேனியில் பிரகாசிப்பதைக் காணலாம் என்பது ஆதாரமாக விளங்குகிறது.

    கர்ப்பிணிப் பெண்கள் சுகப்பிரசவம் பெற்று நன்மக்கட்பேறு பெற, கீழ்கண்ட இந்த சுலோகத்தை 108 முறை பாராயணம் செய்வது நலம்.

    ஹிமவத்யுத்தரே பார்ஸ்வே சுரதா நாம யலிஷீனி
    தஸ்யா ஸ்மர்ண மாத்ரேணா விசல்யா
    கர்ப்பிணிபவேது

    திருமணம் கூடிவர, குழந்தை உண்டாக பிரார்த்தனை சுலோகம்:

    தேவேந்திராணி நமஸ்துப்யம்
    தேவேந்திர பிரியபாமினி
    விவாக பாக்யம் ஆரோக்யம்
    புத்ரலாபம்ச தேஹிமே
    பதிம் தேஹி சுதம் தேஹி
    சௌபாக்யம் தேஹிமே சுபே
    சௌமாங்கல்யம் சுபம் ஞானம்
    தேஹிமே கர்ப்பரஷகே
    காத்யாயிணி மஹாமாயே
    மஹாயோகின்யதீஸ்வரி
    நந்த கோப சுதம் தேவி
    பதிம் மே குருதே நம

    சுகப்பிரசவம் வேண்டி

    ஹே சங்கர ஸ்மரஹர பிரமதாதி நாதரி
    மன்னாத சாம்ப சசிசூட
    ஹரதிரிசூலின் சம்போஸூகபிரசவ க்ருத்பவமே
    தயாளோ ஹேமாதவி வனேச பாளையமாம் நமஸ்தே.

    ஓம் கருகாக்கும் நாயகியே போற்றி
    ஓம் கர்ப்ப ரக்‌ஷாம்பிகையே போற்றி
    ஓம் கருகாவூர்தேவியே போற்றி
    ஓம் கஷ்டங்கள் தீர்ப்பாய் போற்றி

    Share