அடியாரும் ஆன்மீகமும் (5) – விஞ்ஞானமும், மெய்ஞ்ஞானமும்!

3

பவள சங்கரி

சிகாகோ நகரின் அருங்காட்சியகத்தில் நம் நடராசர்!
சிகாகோ நகரின் அருங்காட்சியகத்தில் நம் நடராசர்!



இந்து மதத்தில், ஆன்மீகம் என்பது வெறும் பக்தி, வழிபாடு அல்லது மதம் சார்ந்த ஒரு விசயம் என்பதற்கும் மீறி, கூர்ந்து நோக்குங்கால் அறிவியல் சார்ந்த விசயமாகவும் காணமுடிகிறது. அதாவது மெய்ஞ்ஞானம் என்பது விஞ்ஞானம் சார்ந்ததே என்பதை உணர முடிகிறது. ‘இந்து’ என்ற வார்த்தைக்கு பல்வேறு பொருள்கள் உண்டு. அவைகளில் முக்கியமான ஒன்று, ‘ஒருவரை உற்சாகம் இழக்கச் செய்யும் அந்த ஒன்றை அழிப்பது’ என்பதாம். அந்த வகையில் நம்மை உற்சாகம் இழக்கச் செய்கிற அவநம்பிக்கை, சுயபச்சாதாபம், சோம்பல் போன்றவற்றை அழிக்கவல்லது என்று கொள்ளலாம். இதற்கு ஆதாரமாக இருப்பதே நடராசரின் திருமூர்த்தம். ஆம் நடராசரின் காலடியில் அமிழ்ந்து கிடக்கும் சூரன்தான் நம்மிடமிருந்து உற்சாகத்தைப் பறிக்கும் அந்த தீய சக்தி. ஆக, நடராசப் பெருமான் இந்து என்பதன் பொருளாகத் திகழ்பவர் என்று கொள்ளலாம் அல்லவா?

anatar

நடராசப் பெருமானின் தோற்றமே பல அதிசயங்களைக் கொண்டது. தில்லை நடராசர் ஆலயம் அமைந்திருக்கும் இடமே இதற்கு முதற்சான்றாக நிற்பது. இவ்வாலயம் இருப்பது உலகின் பூமத்திய ரேகையின் மையப் பகுதி என்று சொல்லப்படுகிறது. அதோடு மனித உடலை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலின் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் உள்ள 9 வாயில்களை குறிப்பனவாக கருதப்படுகின்றன . மேலும் நடராசப்பெருமானின் ஆனந்தத் தாண்டவம் என்ற கோலம் காஸ்மிக் நடனம் (cosmic dance) என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் விரும்பி அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

உலகின் ஐந்து பஞ்ச பூதங்களாவன: வானம், பூமி, காற்று, நீர், நெருப்பு ஆகியவை. பஞ்சபூத தலங்கள் என்று அறியப்படும் கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நட ராசர் ஆலயம், காற்றை குறிக்கும் திருக்காளத்தி ஆலயம், நிலத்தைக் குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேசுவரர் (தழுவக்குழைந்த நாதர்) ஆலயமும் ஒரே நேர்கோட்டில், சரியாக 79 டிகிரி, 41 நிமிடம் கிழக்கு தீர்க்க ரேகையில் அமைந்துள்ளது என்பது அதிசயத்தின் அடிப்படையில் குறிப்பிடத்தக்கது. வானத்தின் மேலிருந்து, வரைபடத்தின் உதவியுடன் பார்த்தால் இதன் துல்லியம் விளங்கும். ஆனால் பொறியியல், புவியியல் மற்றும் வானவியலின் உச்சகட்ட அதிசயமான இது பூமத்திய ரேகை பற்றிய அறிவியல் ஞானத்தின் விழிப்புணர்வு ஏற்படாத அந்த நாட்களில் கணிக்கப்பட்டது என்பதுதான் முக்கிய செய்தி.

index_06

பிரபஞ்சத்தின் இதய பாகம் என்று ஆன்றோர்களால் வர்ணிக்கப்பெறும் சிதம்பரம் நகரின் மையத்தில் உள்ள நடராசர் சந்நிதியில் நடராசப் பெருமானாரின் ஊன்றிய காலுக்குக் கீழேதான் பிரபஞ்சம் தோன்றும்போது ஏற்பட்ட வெற்றிடம் உள்ளதாகவும், இந்த மையப் புள்ளியின் மீது நின்று தான் நடராசர் இடைவிடாது நாட்டியமாடியபடி, ஐந்தொழில்களையும் புரிகிறார் என்பது ஐதீகம். நடராசப் பெருமானின் வலது திருக்கையிலுள்ள “உடுக்கை” சிவனின் படைத்தல் தொழிலையும், உயர்த்திக் காட்டப்பட்ட “அபய கரம்”, அஞ்சேல் என்ற அபயம் காட்டி காத்தல் தொழிலையும், இடது கரத்தில் ஒளிரும் “அக்கினி” அழித்தல் தொழிலையும், முயலகன் எனும் அரக்கனை மிதித்து “ஊன்றிய திருவடி” மறைத்தல் தொழிலையும் மற்றும் “உயர்த்திய இடது திருவடி” அருளலையும் குறிக்கின்றனவாம்.

விரிந்திருக்கும் சடைமுடி , உலக இயக்கத்தில் ஈடுபட்டு உயிர்களின் விடுதலைமீது கொண்ட நாட்டத்தையும் புலப்படுத்துகிறது. நடராசரின் இடையில் உள்ள பாம்பு, காலம் என்னும் கட்டுப்படாத தத்துவத்தைச் சுழற்றுவது தாமே என்னும் அவருடைய மேலாண்மையைக் குறிக்கிறது. காலடியில் கிடக்கின்ற “முயலகன்” என்னும் அரக்கன் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களின் மீது அவர்தம் கட்டுப்பாட்டையும் வெளிப்படுத்துகிறது. 64 உருவத் திருமேனிகள் உடையவர் என்று சொல்லப்படுகிற சிவபெருமானின் இலிங்கத் திருமேனி, அருவுரு வடிவமாகும். இந்த 64 திருமேனிகளும் கலையம்சங்களோடு, அற்புதமான தத்துவங்களையும் பிரதிபலிப்பதே, நம் அடியார்கள் தம் அறிவியல் ஞானத்திற்கு சான்றாகும். குறிப்பாக நடராசப் பெருமானின் திருமேனி மிக நுண்ணிய கருத்தாக்கங்களைக் கொண்ட சைவ சித்தாந்தத்தின் பிரதிபலிப்பாக விளங்குகிறது.

‘சிதம்பர இரகசியம்’ என்ற மாபெரும் தத்துவம் இன்றும் பல சிந்தைகளை உருவாக்கிக்கொண்டேயிருப்பவை என்றால் அது மிகையில்லை..

Chidambara Rahasiyam‘சிதம்பர இரகசியம்’ உள்ளது என்று குறிப்பிடப்படும் அந்த இடத்தின் திரை விலக்கப்பட்டதும், அங்கு காட்சி ஏதும் இல்லாத, பொன்னால் ஆன வில்வதள மாலை மட்டும் தொங்கும். இதன் ரகசியம், இறைவன் இங்கு ஆகாய உருவில் இருக்கிறார் என்பதை உணர்த்துவதேயாகும். அகண்ட பெருவெளியில் நிறைந்திருக்கும் அந்த இறைவனை வெட்டவெளியையே காட்டி வழிபட வகை செய்யப்பட்டுள்ள அதுவே சிதம்பர ரகசியம் என அனைவராலும் போற்றி வழிபாடு செய்யப்படுகிறது. நான்கு வேதங்களின் விழுப்பொருளை, அண்ட சராசரங்களின் முழுமுதற்பொருளை குறிப்பது தான் “அருவ நிலை”. இங்கே நம் ஊனக் கண்களுக்குப் புலப்படும் நிலையில் தங்க வில்வ மாலைகள் சார்த்தப்பட்டிருக்கிறது. சர்வம் சிவமயமாகத் திகழும் இறைவனை, அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவனின் அருளை வெட்ட வெளியிலும் உணரலாம். அதாவது உலகப் பற்று, அறியாமை ஆகியவற்றுடன் வாழ்பவர்கள், அவற்றிலிருந்து விலகி மெய்ப்பொருளை உணரும் நிலையைப் பெறுவதற்கு மூடிய திரையினுள்ளே இருக்கிற சிவப்பரம்பொருள் அருள்பாலிப்பதாக ஐதீகம்! இதனை ஆழ்ந்த பக்தியால் மட்டுமே உணரமுடியும். இறைவன் அஞ்ஞானத்தில் இருக்கிற நமக்கு மெய்ஞ்ஞானத்தை உணர்த்தும் தருணமும் அதுதான்!

திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகமாட்டார் என்று ஏன் சொல்கிறார்கள்? அதன் அழகு சந்தம் மட்டுமா? இல்லவே இல்லை.. உதாரணமாக, இந்த திருவாசகப் பாடலைப் பாருங்கள்:

மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்-திருவண்டப் பகுதி

பாடல் எண் : 1

“அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி
ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின்
நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன
இன்னுழை கதிரில் துன்அணுப் புரையச்
சிறிய வாகப் பெரியோன் தெரியின்”

இதன் விளக்கம்:
பிரபஞ்சம் உருண்டையாகத்தான் தோன்றியுள்ளது. நூற்றியொரு கோடிக்கும் அதிகமான கிரகங்களும் விண்மீன்களும் பூமிகளும் சூரியன்களும் சந்திரன்களும் அதனுள் இறைந்து கிடக்கின்றன. அவையனைத்தும் ஒன்றுக்கு ஒன்று தத்தமது ஒளியால் எழில் கொடுக்கின்றன. சூரியனின் துல்லியமான அணுக்கதிர்கள் தாக்குவதாலேயே ஏனைய ஒளியற்ற கிரகங்களும் கூட சற்றே மின்னுகின்றன. அதாவது, அண்டம் என்றால் கோழி முட்டை என்று பொருள் . பிறக்கம் என்றால் தொகுதி ,குவியல் என்று பொருள் . இவை தொகுதி தொகுதியாக வானில் உள்ளன என்று மாணிக்கவாசகர் கூறியிருக்கிறார். “ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின்” – அதாவது ஒரு கோள் இன்னொரு கோளை,ஒரு அண்டம் இன்னொரு அண்டத்தை இழுத்துக்கொண்டு நின்றன என்றார். அவர் சொல்கிற அந்த ஆதாரமும் ஈர்ப்பு விசையாகத்தானே இருக்க முடியும்? 14 ஆம் நுற்றாண்டின் பின் வந்த நியூட்டன்தான் புவி ஈர்ப்புச்சக்தியை கண்டுபிடித்தார். ஆனால் இதை நம் மாணிக்கவாசகப் பெருமான் கண்டுசொன்னதோ 9 ம் நூற்றாண்டில்…..!

24-1437720168-gorgeous-nasa-photo-captures-earth-from-1-million-miles-away1-600

சமீபத்தில் அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் பூமியைப் போலவே உயிர்கள் வாழக்கூடிய 3 கிரகங்கள் உள்ளதை கண்டுபிடித்துள்ளனர். இவை பூமியிலிருந்து 21 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளன. பூமியை விட சுமார் 60 சதவீதம் பெரிய அளவில் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்ற இந்த மூன்று கிரகங்களும் பூமியைப் போலவே மிகப் பெரிய நட்சத்திரம் ஒன்றை நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகின்றன. வெப்பம் மிக அதிகமாக தாக்கக்கூடிய தொலைவான, சூரியனுக்கு வெகு அருகிலோ அல்லது பனியால் உறையச் செய்கின்ற தொலைவான சூரியனுக்கு வெகு தூரத்திலோ இல்லாமல் உயிர்கள் வாழத் தகுந்த தொலைவில் பூமியைப் போன்றே இந்த 3 கிரகங்களும் அமைந்துள்ளன என்பதால், அங்கு மனிதர்கள் வாழ்த் தேவையான நீர், காற்று போன்றவைகளும் இருக்கக்கூடிய வாய்ப்பு அதிகம் என்கின்றனர். இந்தப் புதிய கோளானது 6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியிருக்க வேண்டும் என்றும், இந்த புதிய பூமியின் சூரியன் நம்முடைய சூரியனை விட 1.5 பில்லியன் ஆண்டுகள் பழமையானது என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மேலும், இரவில் வெறும் கண்களாலேயே காணக்கூடிய அளவிற்கு மிகுந்த வெளிச்சத்துடன் உள்ள இந்த கிரகங்களில் பூமியைப் போன்றே மேற்பரப்பும், அடர்த்தியும் காணப்படுவதாகவும் விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். இசுபெயின் நாட்டில் உள்ள ஒரு தீவில் அமைக்கப்பட்டுள்ள ‘ஹார்ப்ஸ் -என்’ என்ற அதிநவீன தொலை நோக்கி மூலம் இந்த 3 கிரகங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். மேற்கண்ட பாடலையும் இந்த செய்தியையும் சம்பந்தப்படுத்திப் பாருங்கள்… இன்றைய அறிவியல் இன்னும் கடக்க வேண்டிய தொலைவு அதிகம் என்பதும் விளங்கும்.

வான்காணா மறைகாணா மலரோன் காணான்
மால்காணான் உருத்திரனும் மதித்துக் காணான்
நான்காணா இடத்ததனைக் காண்பேம் என்று
மான்காணா உளக்கமல மலர்த்தா நின்ற
வான்சுடரே ஆனந்த மயமே ஈன்ற
ஆன்காணா இளங்கன்றாய் அலமந் தேங்கும்
அன்பர்தமைக் கலந்துகொள்ளும் அமலத் தேவே.
இராமலிங்க அடிகள்

உரை:
வானும் மறையும் மலரோனும் மாலும் உருத்திரனும் காணானாயினும் “நான்” என்ற தற்போதம் காணாவிடத்து அதனைக் காணலாம் என்று நல்லோர் நவிலும் நலமாய், உளக்கமலம் அலர்த்தா நின்ற வான்சுடராய், ஆனந்தமயமாய், அன்பர்களைக் கலந்து கொள்ளும் அமலமாய் இலங்குபவன் மகாதேவன்.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல, விஞ்ஞானமே மெய்ஞ்ஞானமாக இருக்கும் நம் ஆன்மீகத் தத்துவச் சாகரங்களின் ஒரு துளியே இது.. ‘உள்ளம் பெருங்கோயில், ஊனுடம்பு ஆலயம்’ என்று சொல்லிச் சென்றுள்ள திருமூலரின் பாடல்களின் சாரத்தைச் சுவைக்க ஆரம்பித்தோமானால், அதன் அதிசய அறிவியல் மற்றும் வாழ்வியல் தத்துவங்களை முழுமையாக உணர நம் வாழ்நாளே போதாது என்பதே சத்தியம்!

அடியும், முதலும் இல்லாதவன் இறைவன் என்கின்றன வேதங்கள். முதலும், முடிவும் இல்லா இயற்கையும், இறைவனும் ஒன்று என்றால், இயற்கையே இறைவன் என்றாகிறதல்லவா…..

ஒரு ஜென் கதையைப் பார்க்கலாமா..

அந்த ஊரில் பல ஆண்டுகளாக பருவ மழை பொய்த்துவிட்டதால் நிலமெல்லாம் வறண்டு பயிர்களெல்லாம் அழிந்து ஊரே கட்டாந்தரையானது. அந்த ஊருக்கு ஒரு நாள் ஒரு சென் துறவி வந்தார். மழை இல்லாமல் தாங்கள் படும் துயரை அந்த சென் துறவியிடம் வேதனையுடன் முறையிட்டனர் மக்கள். மக்களின் துயரைத் துடைப்பது என்று முடிவெடுத்த துறவி, ஊரின் மையப் பகுதியில் தாம் அமர்ந்து தியானம் செய்வதற்குரிய ஏற்பாட்டை செய்யும்படி கேட்டுக்கொண்டார். அவரும் அமைதியாக அமர்ந்து தியானம் செய்ய ஆரம்பித்தார். ஐந்தாவது நாள் வானத்தைப் பிளந்துகொண்டு மழை கொட்ட ஆரம்பித்தது. பேரானந்தத்தில் மக்கள் அந்தத் துறவியை நெருங்கி இது எப்படி சாத்தியமாயிற்று என்று ஆச்சரியத்துடன் வினவினர். அந்தத் துறவியும்,

“நான் தியானம் செய்தபோது என் மனதில் நல்ல அமைதி குடிகொண்டது. அதனால் என் உடலில் ஒரு சமன்நிலையும் ஏற்பட்டது. இதன் காரணமாக என்னைச் சுற்றியிருந்த காற்று மண்டலமும் சமன்நிலை அடைந்தது! அதாவது பல ஆண்டுகளாக தகித்துக் கொண்டிருந்த வெப்பம் ஒரு கட்டுக்குள் வந்தது என்பதோடு, மழையும் பொழிந்தது!” என்றார். அறிவியல்பூர்வமான இந்த உண்மை மக்களின் மனதில் ஆழப்பதிந்தது. அவர்களின் சிந்தனையில் தெளிவு ஏற்பட்டது என்பதையும் சொல்லவும் வேண்டுமோ?

சுடர்விடும் தீபத்தின் ஒளியில் ஒரு சீடனுக்கு பாடம் எடுத்துக்கொண்டிருந்தார் குரு. தீடீரென அதன் ஒளியை இழந்த தீபத்தைப் பார்த்து அந்த சீடன், ‘குருவே, இந்த தீபஒளி சட்டென எங்கே மறைந்தது?’ என்று கேட்டான்.

அதற்கு குருவும், ‘அது எங்கிருந்து வந்ததோ அங்கேயே திரும்பிச் சென்றுவிட்டது’ என்றார்.

கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்ற வாதங்களில் கவனம் செலுத்துவதைவிட நம்முள் உறைந்திருக்கும் இறை சக்தியை உணர்ந்து, தன்னம்பிக்கையுடன் நம்மை வளப்படுத்திக்கொண்டால், ஆக்கப்பூர்வமான வெற்றி நிச்சயம்.

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on "அடியாரும் ஆன்மீகமும் (5) – விஞ்ஞானமும், மெய்ஞ்ஞானமும்!"

  1. ஆஹா, பவளா, அற்புதமான பதிவும் விளக்கமும்.

    பாடல்கள் ஏற்கெனவே இருப்பதை எடுத்து பொருளை இனிதே விளக்கி உள்ளீர்கள்!

  2. ஒவ்வொறு மனிதரின் மனத்தில்லும் இறைவன் இருக்கின்றார்

  3. அடியாரும், ஆன்மிகமும் 
    விஞ்ஞானமும்  மெய்ஞானமும் 

    எடிட்டர் பவழ சங்கரி அவர்களுக்கு,

    மேலே குறிபிட்ட தலையங்கம்  மிகவும் நன்றாக உள்ளது. மறைந்த 
    குடியரசு தலைவர்  ஏ பி ஜே . அப்துல்கலாம் அவர்கள் அணுகுண்டு 
    ஆராய்ச்சியை  நடராஜர் சிலையை வைத்து வெற்றிகரமாக முடித்தார்.
    இதனை இங்கு நினைவு கூற விரும்புகின்றேன். இதுவே, மெய்ஞானமும் 
    விஞ்ஞானமும்  ஒருங்கிணைந்து நடந்த அதிசயமாகும். 

    தங்கள் கட்டுரை மிகவும் அருமை.

    ரா.பார்த்தசாரதி    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.