பவள சங்கரி

ஒரு பிடியும் எழு களிரும்!

புறநானூறு

பாடியவர்: ஆவூர் மூலங்கிழார்.
பாடப்பட்டோன் : சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்.
திணை :பாடாண். துறை : செவியறிவுறூஉ.

நீயே, பிறர் ஓம்புறு மறமன் னெயில்
ஓம்பாது கடந்தட்டு, அவர்
முடி புனைந்த பசும் பொன்னின்
அடி பொலியக் கழல் தைஇய
வல் லாளனை, வய வேந்தே!
யாமே, நின், இகழ் பாடுவோர் எருத்தடங்கப்,
புகழ் பாடுவோர் பொலிவு தோன்ற,
இன்றுகண் டாங்குக் காண்குவம், என்றும்
இன்சொல் எண்பதத்தை ஆகுமதி; பெரும!
ஒருபிடி படியுஞ் சீறிடம்
எழுகளிறு புரக்கும் நாடுகிழ வோயே!

உரை: பகைவர்கள் பாதுகாத்துவந்த அரண்களை ஒருபொருட்டாக சிறிதும் மதியாது, அவையனைத்தையும் அழித்து, பகைவர்தம் முடியில் சூடிய பொன்மகுடங்களை உருக்கி அவைகளை உன் கால்களில் வீரக் கழல்களாக அணிந்த வலிய ஆண்மையுடைய வேந்தே! ஒரு பெண்யானை படுக்கும் சிறிய இடத்தில் ஏழு யானைகளுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் விளையும் நாட்டுக்கு உரியவனே! தலைவனே! நீ இன்சொல் உடையவனாகவும் காட்சிக்கு எளியவனாகவும் இருப்பாயாக. உன்னை இகழ்ந்து பாடுவோர் தலைகுனியவும், உன்னைப் புகழ்ந்து பாடுவோர் பெருமிதத்தால் தலை நிமிர்ந்து நிற்கவும், இன்று கண்டதுபோன்றே என்றும் காண்போமாக.

ஒரு சென் கதை பார்ப்போமா

விழுதுகள் புடைசூழ தழைத்தோங்கிய ஒரு பெரிய ஆலமரம். அதன் அடியில் கண் பார்வையற்ற துறவி ஒருவர் அமர்ந்திருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வழிப்போக்கன், ” ஏய் கிழவா, யாராவது இந்த வழியாக சென்றார்களா?” என்று சற்றும் மரியாதை இல்லாமல் அதிகாரத்துடன் கேட்டான். அதற்கு அத்துறவி “அப்படி யாரும் சென்றதாக தெரியவில்லையே” என்று பதிலளித்தார். சிறிது நேரத்திற்குப் பிறகு, மற்றொருவர் வந்து “ஐயா, இதற்கு முன் யாராவது இந்தப்புறம் சென்றார்களா?” என்று கேட்டார். அதற்கு அத்துறவியார் “ஆம், சற்று முன் இதே கேள்வியைக் கேட்டுக்கொண்டு ஒருவன் சென்றான்” என்றார். மீண்டும் சற்று நேரம் கழித்து இன்னொருவர் வந்தார். அவரும் அத்துறவியிடம் “வணங்குகிறேன், துறவியாரே. இதற்கு முன் இந்த வழியாக யாராவது செல்லும் சப்தம் தங்களுக்குக் கேட்டதா சுவாமி?” என்று பணிவுடன் கேட்டார். உடனே அத்துறவி “மாமன்னரே, வணக்கம். இவ்வழியாக முதலில் ஒரு வீரன் சென்றான், அடுத்ததாக ஓர் அமைச்சர் சென்றார். இருவருமே தாங்கள் கேட்ட அதேக் கேள்வியை கேட்டுச் சென்றனர்.” என்றார். அப்போது ஆச்சரியத்துடன் மன்னர் “துறவியாரே, உங்களுக்குத் தான் பார்வை இல்லையே. பின்னர் எப்படி முதலில் வீரனும், அடுத்ததாக அமைச்சரும் கேட்டுச் சென்றார்கள் என்பதைச் சரியாக சொல்கிறீர்கள்” என்று கேட்டான். அதற்கு அத்துறவி “இதை அறிவதற்கு பார்வை தேவையில்லை அரசே. அவரவர் பேசுவதை வைத்தே, அவர் யார், அவரது தகுதி என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்” என்று சொல்லி, “முதலில் வந்தவன் சற்றும் மரியாதையின்றி பேசினான். அடுத்து வந்தவரின் பேச்சில் அதிகாரம் இருந்தது. தங்களது பேச்சில் மட்டுமே பணிவும் தென்பட்டது” என்று எடுத்துக் கூறினார்.

இன்சொல் பேசுபவரே பெரியோர்!

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “என்றும் இன்சொல் பேசுவோம்!

  1. ஒரு பிடியும் எழு களிறும்…ம்..சென் கதையும் சூப்பர். அதில் உங்களின் வல்லமை தெரிகிறது.
    வாழ்த்துக்கள்.
    பரிமேலழகன். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.