பழமொழி கூறும் பாடம்

தேமொழி.

 

பழமொழி: பசி பெரிது ஆயினும் புல் மேயாதாகும் புலி

 

ஒற்கந்தாம் உற்ற விடத்தும் உயர்ந்தவர்
நிற்பவே நின்ற நிலையின்மேல் – வற்பத்தால்
தன்மேல் நலியும் பசிபெரி தாயினும்
புன்மேயா தாகும் புலி.

(முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

பதம் பிரித்து:
ஒற்கம் தாம் உற்ற இடத்தும், உயர்ந்தவர்
நிற்பவே, நின்ற நிலையின்மேல்;-வற்பத்தால்
தன்மேல் நலியும் பசி பெரிதுஆயினும்,
புல் மேயாது ஆகும், புலி.

பொருள் விளக்கம்:
வறுமை தனக்கு ஏற்பட்ட பொழுதும், உயர் பண்புள்ள சான்றோர், சற்றும் மாறாது நிற்பார் தாம் கொண்ட நற்பண்பின் நிலையிலேயே. (இப்பண்பானது) பஞ்சகாலத்தில் தனது உடலை நலிவடையச் செய்யும் பசி பெரிதும் வருத்தினாலும் புல்லை உண்ணாத புலியின் பண்பினை ஒத்ததாகும்

பழமொழி சொல்லும் பாடம்:
சான்றோர் எத்தகைய நிலையிலும் தனது நற்பண்பை இழக்கமாட்டார். வறுமை நேரினும் அதற்காகத் தனது தரம் தாழ்ந்து போகமாட்டார். “புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது” என்று இந்நாளும் வழக்கில் இருக்கும் இந்தப் பழமொழி விளக்குவது போல, தனது வாழ்வே சீரழிந்து போயிருப்பினும், நற்பண்பின் இருப்பிடமானோர் சிறுமை தரும் ஒழுக்கமற்ற செயல்களைச் செய்யவும் முற்படுவதில்லை. இத்தகைய  நற்பண்பின் இருப்பிடமானவரின் பண்பை கூற வரும் வள்ளுவர்,

அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர். (குறள்: 954)

கோடி கோடியாக செல்வத்தைக் கொட்டிக் கொடுத்தாலும் நற்பண்பு கொண்ட சான்றோர் சிறுமை தரும் கீழ்த்தரமான செயல்களைச் செய்யார், எத்தகைய சூழலிலும் நற்பண்பைக் கைவிடுவது சான்றோர் இயல்பு அல்ல என்று சுட்டிக் காட்டுகிறார்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *