Category: ஆய்வுக் கட்டுரைகள்

ஆய்வுக் கட்டுரைகள்

  • அறவியல் நோக்கில் இரட்டைக்காப்பியங்கள்

    –து.கார்த்திகேயன் 

    தமிழ்மொழியில் தோன்றிய முதற்காப்பியம் சிலப்பதிகாரம். அதனைத்தொடர்ந்து தோன்றியது மணிமேகலை. இவை இரண்டுமே ஒன்றுடன் ஒன்று மிக நெருங்கிய தொடர்பு கொண்டனவாகும். இரண்டு என்பதற்கும் இரட்டை என்பதற்கும் வேறுபாடு உண்டு. இரண்டு என்பது வெவ்வேறான இரண்டைக்குறிக்கும். இரட்டை என்பது மிக நெருங்கிய ஒற்றுமையுடைய இரண்டைக் குறிக்கும். உலகியலிலும் ‘இரட்டை வாழைப்பழம்’ என்ற வழக்கை நன்கு அறியலாம். ஆகவே சிலம்பும் மணிமேகலையும் கதைத் தொடர்ச்சி மட்டுமல்லாமல் வாழ்வியலுக்குத் தேவையான நல்லறங்களைச் சொல்வதிலும் ஒன்றுபட்டு நிற்கின்றன. சமய நோக்கில் மட்டுமே இவை இரண்டும் வேறுபடுகின்றனவே தவிர மற்றபடி அறவியல் நோக்கில் இவை ஒன்றுபட்டே விளங்குகின்றன. நற்சொல், நற்செயல், நன்னடத்தை ஆகியவற்றைப் பல்லாற்றானும் இவ்விரட்டைக்காப்பியங்கள் விளக்குகின்றன.

    பிற உயிர்களுக்குத் தீங்கு செய்யாத – நினைக்காத வாழ்க்கையே பண்பட்ட வாழ்க்கையாகும். அதற்கு அடிப்படையாக அமைவது நற்சொல், நற்செயல், நன்னடத்தை ஆகிய மூன்றும் ஆகும். இம்மூன்றும் சரிவர ஒருவனுக்கு வாய்க்கப்பெற்றால், அவன் வீட்டின்பத்தைப் பெறும் வாய்ப்பைப் பெறுகிறான். அத்தகைய நல்லறங்களைப் பற்றி விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

    மனித வாழ்வும் பயனும்:

    மண்ணுலகில் மனிதராய்ப் பிறப்பெடுத்த எல்லா உயிர்களின் நோக்கமும் இனிப்பிறவாப் பெருநிலை அடைய வேண்டும் என்பதே! ஆனால், உயிர்களோ அதனை அறியாது அறியாமையில் உழன்று அல்லற்பட்டு நிற்கின்றன. இவ் வுயர் நோக்கத்தை உணர்ந்து மனித உயிர்கள் உய்யவேண்டும் என்பதையே திரு நாவுக்கரசர்,

    “வாய்த்தது நந்தமக் கீதோர் பிறவி மதித்திடுமின்”  (திருமுறை:4: பாடல்: 784)

    என்றார். ஆனால் மனித உயிர்களோ உலகியலில் மூழ்கிச் சிற்றின்பச் சேற்றில் திளைத்து மகிழ்கின்றன. இவ்வாறு பெண்வழிச் சேரலும், உண்டி பெருக்கி உடலை ஓம்பலும் மனிதர்க்குத் துன்பத்தையே தருகின்றன. இதனைச் சிலப்பதிகாரம்,

    “பெண்டிரும் உண்டியும் இன்பம் என்று உலகின்
    கொண்டோர் உறூஉம் கொள்ளாத் துன்பம்” (சிலம்பு: ஊர்காண் காதை.3940)

    என எடுத்துக் காட்டுகின்றது. பிறப்பின் நோக்கத்தை உறுதிபட  உணராமல் அறவழிப்பட்ட மனையற வாழ்வியலை வகுத்துச் சிற்றின்பத்தை நாடித் திரிந்தான் கோவலன். மனைவியோடுகூடி மனையறம்  காக்கும் உயர்வினை மறந்தான்; அறிவுமயங்கி, ஐம்புல நுகர்ச்சியினை விரும்பினான். இறுதியில் களவுப்பழி ஏற்று உயிரை இழந்தான். மக்கள் அருந்தவம் உடையோர் என்றாலும் அவர்களின் முன்வினைப் பயன்களால் கீழ்நிலை ஏற்படும். அப்போது அவர்கள் மேற்கொள்ளும் அறவாழ்வு ஒன்றே, அரணாக நின்று காக்கும். அப்படி இல்லாது அறத்திலிருந்து மாறுபடுகின்றபோது – அறவாழ்வைத் தவிர்க்கும்போது, முந்தைய நல்வினைகூடக் காவலாகாது என்பதைச் சிலப்பதிகாரம்,

    “உம்மை வினைவந்து உருத்த காலைச்
    செம்மையில் லோர்க்குச் செய்தவம் உதவாது” (சிலம்பு-கட்டுரை காதை.171-172)

    என உரைக்கிறது. எனவே ஐம்புலன்களை நல்வழிப்படுத்தி நல்லறம் புரியும் நல்வாழ்க்கையே நன்னிலை நல்கும் என்பதை இதன்வழி உணரலாம்.

    நற்சொல் நவிலல்:

    சொற்கள் மிகுந்த வலிமை மிக்கன. சொற்களால் பகை நட்பாகலாம்; நட்புகூடப்  பகையாகலாம். நல்லசொற்கள் அன்பை மலரச்செய்யும், நட்பை வளரச்செய்யும், உறவை நிலைபெறச் செய்யும், ஆறுதலைத் தரும், மாறுதலைத் தரும். இப்படி, பலவாறாகப் பயன்பாட்டில் உள்ளன நற்சொற்கள். அதனாலேயே இன்மொழி உரைத்தலை மக்கட்பண்புகளில் ஒன்றாகவே எடுத்துக்காட்டினார் வள்ளுவர்.

    “தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
    நாவினால் சுட்ட வடு” (குறள்-129)

    என்பார் வள்ளுவப் பெருந்தகை. தீயசொற்களைச் சொல்லிவிடின் அவை ஏற்படுத்தும் காயம் நிலைபெற்றுவிடும். எனவே தீச்சொற்களைத் தவிர்க்க வேண்டும்.

    கவுந்தியடிகளோடு கோவலனும் கண்ணகியும் மதுரைக்குப் பயணித்தார்கள். இடைவழியில் ஒரு பரத்தையும், காமுகனும் அவர்களிடம் வந்தனர். கோவலன், கண்ணகியைப் பார்த்து இவர்கள் யாவர் என அடிகளிடம் வினவினர். கவுந்தியடிகள் ‘இவர்கள் என்மக்கள்’ என விடைபகர்ந்தார்.’ அதைக்கேட்ட அவர்கள் “இவர்கள் உமது மக்களாயின் உடன்பிறந்தோர் கணவனும் மனைவியுமாக வாழ இயலுமோ?” என்றனர். இத்தீச் சொற்களைச் செவியுற இயலாது பெரிதும் நடுக்குற்றாள் கண்ணகி. இதனைக் கண்ட கவுந்தியடிகள்,  அக்கீழ்மக்களைச் சினந்து முள்ளுடைக் காட்டில் முதுநரிகளாகத் திரியும்படி சாபமிட்டார்.

    “உடன்வயிற் றோர்கள் ஒருங்குடன் வாழ்க்கைக்
    கடவதும் உண்டோ! கற்றறிந்தீர் எனத்
    தீமொழி கேட்டுச் செவியகம் புதைத்துக்
    காதலன் முன்னர்க் கண்ணகி நடுங்க
    எள்ளுநர் போலும் இவர்என்பூங் கோதையை
    முள்ளுடைக் காட்டின் முதுநரி ஆக எனக்
    கவுந்தி இட்டது தவந்தரு சாபம்” (சிலம்பு: நாடுகாண் காதை.227-233)

    என்னும்  அடிகள் தீச்சொல் உரைத்தமையால் வரும் அவலநிலையை உணர்த்துகின்றன.

    ஒருவனைக் கண்ட அளவில் அவர்தம் குடிப்பிறப்பு, கல்வி, ஒழுக்கம், செல்வம், உருவம், பருவம் ஆகிய திறங்களை உய்த்துணர்ந்து தமக்கும் அவர்க்கும் தீமைதராத  சொற்களை உரைத்தலே திறனறிந்து உரைத்தலாகும். ஒருவரது திறனறிந்து அவரிடத்தில் நற்சொல் உரைத்தலைக் காட்டிலும் வேறு சிறந்த அறமும் பொருளும் இல்லை என்கிறார் வள்ளுவர்.

    “திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
    பொருளும் அதனினூஉங் கில்”  (குறள்-644)

    எனவே திறனறிந்து பேசுதல் என்ற தன்மை இல்லாமையால் விளைந்த அவலம் சிலப்பதிகாரத்தின் வழி அறியப்படுகின்றது. 

    நற்செய்கை புரிதல்:

    அறம்,பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கும் உயிர்க்கு உறுதிப்பொருளாகும். உயிர்கள் தம் பிறவிப் பயனே வீடுபேறாகும். அவ்வீடுபேற்றினை அடைய வேண்டுமானால் பற்றறுத்தல் வேண்டும். ’அற்றது பற்றெனில் உற்றது வீடு’ என்னும் ஆன்றோர் வாக்கு இங்கு நினையத் தகும். பற்று நீக்கமும் அதன்வழியிலான நற்செயலாக்கமும் வீடுபேற்றுக்கு அழைத்துச் செல்லும் கருவிகளாகும். உலகியல் இன்பத்திற்கு காரணமான இளமை, செல்வம், யாக்கை போன்றவற்றிலிருந்து பற்று நீங்குதலே பற்றறுத்தல் எனப்படும். வாழ் நாள் படாமல் ஒருவன் நற்செயல் புரிந்தால் அதுவே அவனது பிறவியின் பெருவாயிலை அடைக்கும் கல் என்றார் வள்ளுவப் பேராசான்.

    “வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
    வாழ்நாள் வழியடைக்குங் கல்” (குறள்-38)

    என்ற திருக்குறள், நற்செயல்களே வாழ்வின் பிறவித்துன்பங்களைப் போக்கும் அருமருந்து என்பதை எடுத்துக்காட்டுகிறது.

    பிறர்வாழ நற்செயல் புரியும் நல்லறச் சிந்தனையை கண்ணகி மூலம் சிலப்பதிகாரம் இவ்வுலகிற்கு வழங்குகிறது. கண்ணகி, தன் கணவன் பிரிந்து சென்றபோது இல்லற இன்பங்களை நுகரவில்லையே என வருந்தவில்லை. அறவோர்க்கு அளித்தல், அந்தணர் ஓம்பல், துறவோரைக் காத்தல், விருந்தோம்பல் செய்தல் போன்ற அறச்செயல்களைப் புரியஇயலாமற் போயிற்றே என வருந்துகிறாள்.

    “அறவோர்க் களித்தலும் அந்தண ரோம்பலும்
    துறவோர்க்கு எதிர்தலும் தொல்லோர் சிறப்பின்
    விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை” (சிலம்பு.கொலைக்களக்காதை:71-73)

    என்னும் அடிகள் சிற்றின்பத்தைக் கடந்து பேரின்பத்திற்கு வழிகோலும் அறச்செயல்கள் புரிகின்ற உயர்வாழ்வியலை உணர்த்துகின்றன. இல்லற வழியமைந்த நல்லறச் செய்கைக்கும் சிலப்பதிகாரத்தின் இவ்வடிகள் சான்று பகர்கின்றன.

    துறவறத்தின் வழியமைந்த அறச்செய்கைக்கு மணிமேகலை வாழ்வைச் சான்றாகக் கொள்ளலாம். அறத்தால் வருவதே இன்பம் என்பதை உணர்ந்த மணிமேகலை, பிறப்பு, மூப்பு, பிணி என்பனவற்றையுடைய கொள்கலனாக விளங்குவது மக்கள் யாக்கை என்பதையும் நன்றாக உணர்ந்திருந்தாள்.

    “மண்டிணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்
    உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே” (மணிமேகலை:பாத்திரம் பெற்றகாதை.95-96)

    என்னும் அறக்கோட்பாட்டை நிறுவி, பாரினில் உள்ளோரின் பசிப்பிணி அகற்றும் அறச்செயல் புரிந்தாள். அதன்வழி பேரின்பப் பெருவாழ்வு பெற்றாள்.

    தொகுப்புரை:

    மனித வாழ்க்கை ஒரு வரம். அதன்மூலம் பிறவியின் வேரறுத்துப் பிறவாநிலை எய்த மனித உயிர்கள் முயலல்வேண்டும். அத்தகைய நிலைக்கு அடிப்படை இயல்புகளாக விளங்குவன பண்பட்ட நன்னடத்தையும், அருளுணர்வோடு பிறக்கும் நற்சொற்களும், தன்னலம் மறந்து பிறர்க்காக முயலும் நற்செயல்களும் ஆகும். அத்தகைய இயல்புகளை மக்கள் சமுதாயம் எய்துகின்றபோது தீயவை தானாக அழிந்துபோகும். மனித வாழ்க்கை மாண்புடையதாக மலரும். அதன்வழி, பேரின்பப் பெருவாழ்வை மக்கள் அடைய இயலும் என்பதையே இவ் விரட்டைக் காப்பியங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

    ***

    து.கார்த்திகேயன்,
    முனைவர் பட்ட ஆய்வாளர்
    உதவிப்பேராசிரியர்,
    தருமபுரம் ஆதினம் கலைக்கல்லூரி,
    தருமபுரம்–மயிலாடுதுறை
    tamilkarthik82@gmail.com

     

     

    Share
  • ஆண்டாளும் வடநாட்டு வைணவத்தலங்களும்

    முனைவர் மு.பழனியப்பன்

    தமிழ்த்துறைத்தலைவர்

    அரசு கலைமற்றும் அறிவியல் கல்லூரி

    திருவாடானை

    images (1)

     பக்தி இலக்கியகாலத் தமிழகத்தில் சைவசமயம், வைணவ சமயம் ஆகிய இரண்டும் இலக்கிய இயக்கமாகவும் சமுதாய நல இயக்கமாகவும் செயல்பட்டுவந்தன என்பது எல்லாரும் அறிந்தது. இதே காலத்தில் வடநாட்டில் வைணவ சைவ சமய வளர்ச்சிகள் எப்படி இருந்தன என்ற கேள்விக்குத் தமிழ் இலக்கியங்களில் பதில் இருக்கிறதா என்பதைத் தேடினால் கண்டறிந்து பெறமுடிகின்றது. தென்னகக் கோயில்கள் போலவே வடநாட்டுக் கோயில்களையும் பக்தி இலக்கிய பெருமக்கள் பாடியுள்ளனர். சைவப் பெருமக்கள் வடநாட்டின் தலைப்பகுதியான கைலாயம் என்பதை எட்டவும் தொழவும் முயற்சி செய்ததை திருநாவுக்கரசர், காரைக்காலம்மையார் வழி பெறமுடிகிறது. வைணவ சமய வளர்ச்சி வடநாட்டில் இருந்த தன்மையை ஆண்டாளின் பனுவல்கள் வழி பெறமுடிகின்றது. ஆண்டாள் தன் பாடல்களில் வடநாட்டு வைணவத் திருத்தலங்கள் பற்றிய குறிப்புகளைத் தருகின்றார். அவர் பெண் என்பதால் தானிருந்த திருவில்லிப்புத்தூர், மற்றும் திருவரங்கம் ஆகிய இடங்களுக்குப் பயணிக்க முடிந்தது. ஆனால் வட நாட்டு வைணவத் தலங்களைப் பயணித்துப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஆண்டாளிடம் இருந்துள்ளது. மேலும் வடநாட்டில் வைணவத் தலங்கள் சிறப்புற்று விளங்கியதால் அவை பற்றிய குறிப்புகளைச் செவிவழிச்செய்திகளாகக் கேட்டு ஆண்டாள் பதிவு செய்துள்ளார் என்பதும் தெரியவருகிறது.

    andal-painting

                ஆண்டாளின் நாச்சியார் திருமொழியில் பன்னிரண்டாம் திருமொழி கண்ணன் இருக்குமிடம் கொண்டு செல்வீர் என்ற தலைப்பில் அமைகின்றது. இத்திருமொழியில் ஆண்டாள் வட நாட்டு வைணவத் தலங்களைக் குறிப்பாக கண்ணன் சார்புடைய தலங்களைக் குறித்துப் பாடியுள்ளார். கண்ணன் வாழ்ந்த வடநாட்டு ஊர்களுக்கு என்னைக் கொண்டு சேருங்கள் என்பது அப்பாடலின் பொதுப்பொருள். ஆண்டாள் தானாகப்போக இயலாத நிலையில் கண்ணன் மீதான காதல் அதிகரிக்கும் சூழலில் தன்னைச் சார்ந்தவர்களைக் கண்ணன் இருப்பிடங்களுக்கு அழைத்துச்செல்லக் கோருவதுபோல இப்பாடல்கள் பாடப்பெற்றுள்ளன.

    வடமதுரை

                கண்ணனின் நகரமான வடமதுரையில் இத்திருமொழி தொடங்குகின்றது.

    ~~பெற்றிருந்தாளை ஒழியவே, போய்ப் பேர்த்தொருதாய் இல் வளர்ந்த நம்பி, மற்பொருந்தாமல் களமடைந்த மதுரைப் புறத்தென்னை உயத்திடுமின்|| ( 617)

    என்று மதுரா நகரத்தை எண்ணுகிறார் ஆண்டாள். மதுரா நகரில் கண்ணன் பிறந்த இடம் குறிக்கத்தக்க நினைவுச் சின்னமாக இன்னமும் பாதுகாக்கப்பெற்று வருகிறது.  கண்ணன் பிறந்த இடம் பற்றிய செய்திகள் ஆண்டாளுக்கு ஆதி முதல் உணர்த்தப்பெற்றது என்பதற்கு இப்பாடல் சான்றாகின்றது. வடமதுரை நூற்றியெட்டு திவ்யதேசங்களில் நூற்றியிரண்டாம் இடத்தில் வைத்துப் போற்றப்பெறுகிறது.

    ஆய்ப்பாடி

                கண்ணன் நண்பர்களுடன் சுற்றித் திரிந்த இடம் ஆய்ப்பாடி ஆகும்.

    ~~ஆணையால் நீர் என்னைக் காக்கவேண்டில் ஆய்ப்பாடிக்கே என்னை உய்த்திடுமின்||  (618)

    என்று ஆய்ப்பாடியைக் குறிக்கின்றார் ஆண்டாள். நூற்றியெட்டு திவ்யதேசங்களில் நூற்றிமூன்றாம் இடத்தில் வைத்துப் போற்றப்பெறுகிறது. வடமதுரையில் இருந்து எட்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஊர் ஆய்ப்பாடி ஆகும். வடமதுரையும் நில அளவிலும், கண்ணன் உலவிய அளவிலும் அருகருகு இருப்பது கண்ணன் வரலாற்றில் இருக்கும் உண்மைத்தன்மையை வெளிப்படுத்துவதாக உள்ளது.

    யமுனை நதிக்கரை

                யமுனை நதிக்கரையில் அமைந்துள்ள நகரம் வடமதுரை ஆகும். இந்த நதிக்கரை கண்ணன் திருப்பாதங்கள் பட்ட நதிக்கரை என்பதால் இவ்விடத்திற்கு வருவதற்கு ஆண்டாள் பிரியப்படுகிறார்.

    ~இங்குத்தை வாழ்வை ஒழியவே போய் யமுனைக் கரைக்கென்னை உய்த்திடுமின்|| (620) என்று யமுனை நதிக்கரையில் விளையாட எண்ணம் கொள்கிறார் ஆண்டாள்.

                யமுனை ஆற்றில் வாழ்ந்த காளிங்கள் என்ற பாம்பினை அடக்கியவன் கண்ணபிரான். ஆண்டாள் தன் நிலையைக் கண்டு கலக்கமடைவதை விட்டுவிட்டு காளிங்களை அடக்கிய யமுனைக் கரைக்கு அழைத்துச் செல்லுங்கள் என்று வேண்டுகோள் வைக்கிறார். ~~நீர்க்கரை நின்ற கடம்பை ஏறிக் காளியன் உச்சியில் நட்டம் பாய்ந்து போர்க்களமாக நிருத்தம் செய்த பொய்கைக் கரைக் கென்னை உய்த்திடுமின்||(621) என்று பாடும் ஆண்டாளின் கண்ணன் குறித்தான வேட்கை குறிக்கத்தக்கது.

    பத்த விலோசனம்

                கண்ணனுக்கும், அவன் தோழர்களுக்கும்  முனிபத்தினிகள் பசிக்கும் போது நாள்தோறும் உணவு கொடுத்த இடம் இதுவாகும். இவ்விடத்திற்குத் தன்னை அழைத்துப்போகச் சொல்லுகிறாள் ஆண்டாள்.  ~வேர்த்துப் பசித்து வயிறசைந்து வேண்டு அடிசில் உண்ணும்போது, ஈதென்று பார்த்திருந்து நெடுநோக்குக் கொள்ளும் பத்த விலோசனத்து உய்த்திடுமின்|| (622) என்ற ஆண்டாளின் வாக்கு கண்ணனின் மற்றொரு வட மாநில இருக்கையைக் காட்டுவதாக உள்ளது. மதுராவிற்கு அருகில் இவ்விடம் உள்ளது.

    பாண்டிவடம்

                மதுராவிற்கு அருகில் உள்ள மற்றொரு இடம் பாண்டிவடம் ஆகும். பரசுராமன் பிரலம்பாசுரனை அழித்த இடம் பாண்டீரமாகும். அந்த பாண்டீரத்தில் உள்ள ஆலமரத்திற்குத் தன்னை அழைத்துப்போக ஆண்டாள் வேண்டுகிறாள்.

    ~~பண்ணழியப் பலதேவன் வென்ற பாண்டிவடத் தென்னை உய்த்திடுமின்|| (623) என்ற ஆண்டாளின் வருகை பாண்டிவடம் என்ற மற்றொரு கண்ணன் தலத்தைக்; காட்டுகிறது.

    கோவர்த்தன மலை

                ~~கொற்றக் குடையாக ஏந்தி நின்ற Nகுhவர்த்தனத் தென்னை உய்த்திடுமின் || (624) என்று கோவர்த்தனகிரியை கண்ணன் தலமாகக் காண்கிறார் ஆண்டாள்.

    துவாரகை

                கண்ணன் உருவக்கிய நகரம் துவாரகை ஆகும். குஜராத் மாநிலத்தில் உள்ள முக்கியமான தலம் இதுவாகும்.

    ~~சூட்டுயர் மாடங்கள் சூழ்ந்து தோன்றும் துவராபதிக்கு என்னை உய்த்திடுமின்|| (625)

    என்று ஆண்டாள் இந்நகர் பற்றிக் குறிப்பிடுகிறாள். துவராகை என்பதற்கு பல வழிகள் கொண்ட ஊர் என்று பொருள். ஆண்டாள் மாடங்கள் சூழ்ந்த நகரம் என்று இதனைப் பாடுகிறார்.

                இவ்வாறு வடமதுரையில் கண்ணன் பிறந்தது முதல் கண்ணன் தனக்கான நகரம் உருவாக்கிய துவாரகை வரையான தலங்களில் தன்னை நிறுத்தச் சொல்லி வெண்டுகோளை வைக்கிறார் ஆண்டாள்.

                ~~மன்னுமதுரை தொடக்கமாக வண்துவராபதி தன்னளவும்

                 தன்னைத் தமர் உய்த்துப் பெய்யவேண்டித் தாழ்குழலாள் துணிந்த துணிவைப்

                 பொன்னியல் மாடம் பொலிந்து தோன்றும் புதுவையர்கோன் விட்டுச் சித்தன் கோதை

                 இன்னிசையால் சொன்ன செஞ்சொல்மாலை ஏத்த வல்லார்க்கு இடம் வைகுந்தமே||                                                                                                                                    (626)

    என்ற பாடலில் ஆண்டாள் பாடிய வடநாட்டுத் தலங்கள் அனைத்தும் குறிப்பிடப்பெற்றுள்ளன. இத்திருமொழி வழி ஆண்டாள் காலத்தில் கண்ணன் பிறந்த இடம், வளர்ந்த இடம், உருவாக்கிய இடம் ஆகியன பற்றிய தகவல்கள் தென்னிந்தியாவில் பரவி இருந்தது என்பதற்குச் சான்றாக உள்ளது. இலக்கியங்கள் வழியாக வடநாட்டையும் தென்னாட்டையும் சமயச்சான்றோர்கள் இணைத்து தேச ஒற்றுமையைக் காத்துள்ளனர் என்பதாகவும் இதனைக் கொள்ளலாம். ஆண்டாள் குறிப்பிட்ட இத்திருத்தலங்களில் தமிழ்ச் சமுதாய வம்சாவழியினர் வாழ்ந்துவருகின்றனர் என்பதற்கு பல சான்றுகள் உள்ளன. இவர்கள் தமிழகத்தில் இருந்து வடநாடு சென்று தமிழ்ப்பண்பாட்டுடன் வாழ்ந்து வருகிறார்கள் என்பதும் குறிக்கத்தக்க செய்தியாகும். இவ்வகையில் சமயங்கள் இடங்கள் கடந்து மக்களை ஒற்றுமைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்தன என்பதை உணரமுடிகின்றது.

    Share
  • சிலம்பும் உரிச்சொற்களும்

    –து.கார்த்திகேயன்

    முன்னுரை:

    தமிழ் மொழியின் அமைப்பைப் புரிந்துகொள்ள  உதவும் சொல்லிலக்கண நூல்களிலேயே  முதன்மையானது தொல்காப்பியம் ஆகும். தொல்காப்பியச் சொற்பாகுபாடுகளுள் முதன்மையானவை பெயர்ச்சொல்லும் வினைச்சொல்லும் ஆகும். இவற்றைச் சார்ந்து இயங்குவன இடைச்சொல்லும் உரிச்சொல்லுமாம். தனித்து இயங்கும் ஆற்றல் இல்லை எனப்பெற்றாலும் இசை, பண்பு, குறிப்புப் பொருளுக்கு உரியனவாகவும், பெயர், வினைச் சொற்களுக்கு அடையாகவும் சில வேளைகளில் பெயர், வினைச் சொற்களாகவும் உரிச்சொற்கள் செய்யுள்களில் முதன்மைப் பங்காற்றுகின்றன. அந்த வகையில் தொல்காப்பியர் குறிப்பிடும் உரிச்சொற்களின் மரபுகளைக் காப்பிய இலக்கியமாகிய சிலப்பதிகாரத்தில் ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

    தொல்காப்பியம் காட்டும் உரிச்சொல்:

    தமிழ் இலக்கண நூல்களுள் தொல்காப்பியம், நன்னூல், இலக்கண விளக்கம், நேமிநாதம், தொன்னூல் விளக்கம் ஆகியன உரிச்சொலுக்கென  தனி இயல் வகுத்துள்ளன. இவை பெரும்பாலும் தொல்காப்பிய உரிச்சொல் மரபுகளையே பின்பற்றியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. தொல்காப்பியர் குறிப்பிடும் உரிச்சொல் இலக்கணத்தை அடிப்படையாகக் கொண்டு வடிவநிலை மற்றும் பொருள்நிலையில் உரிச்சொற்களின் ஆறு நிலைகளை அறியமுடிகிறது. 

    வடிவநிலை:

    1.எழுத்துப் பிரிந்து இசையாப் பண்பு (தொல்.சொல்.297)

    2.பெயரினும் வினையிலும் மெய்தடுமாறல் (தொல்.சொல்.297)

    3.நெறிப்பட வாராக் குறைச்சொற் கிளவி

    பொருள்நிலை:

    1.இடையினும் பண்பினும் குறிப்பினும் தோன்றல் (தொல்.சொல்.297)

    2.ஒருசொல் பலபொருள் தோன்றல் (தொல்.சொல்.297)

    3.பல்சொல் ஒருபொருள் தோன்றல் (தொல்.சொல்.297)

    வடிவநிலை உரிச்சொற்கள்:

    தொல்காப்பிய எழுத்ததிகாரத்திலேயே உரிச்சொல்லைப் பற்றித் தொல்கப்பியர் குறிப்பிடுகின்றார். “புள்ளியும் உயிரும் இறுதியாகி நெறிப்பட வாரா குறைச்சொற்கிளவி (தொல்.எழு.421)” என உரிச்சொற்களை குறைச்சொற்கள் என அறிமுகப்படுத்துகிறார் தொல்காப்பியர்.

    சால,மழ,குழ போன்ற சொற்கள் முழுச்சொற்கள் அல்ல; குறை வடிவங்களே. இவை நேரடியாகப் பெயரையோ வினையையோ குறிப்பிடவில்லை. மாறாக இலக்கியத்தில் பெயர், வினைகளைச் சார்ந்து வந்தே பொருள் தருகின்றன. இத்தன்மையினாலேயே அவற்றைக் குறைச்சொல் என்றார் தொல்காப்பியர். எடுத்துக்காட்டாக கயமலர் (சிலம்பு:2,10), மழவிடை (சிலம்பு:22,15), வயப்புலி (சிலம்பு:12,27), கவவுக்கை (சிலம்பு:1,61), மதகரி (சிலம்பு:25,49) என்பன போன்ற சொல்லாட்சிகளில் கய,மழ, வய, கவவு, மத ஆகிய குறைச்சொல் வடிவங்கள் பெயரடைகளாக வழங்குகின்றன.

    உரிச்சொற்கள் பெயரினும் வினையினும் மெய்தடுமாறி வருகின்றன. மெய்தடுமாறி என்பதற்கு சேனாவரையர் இசை, பண்பு, குறிப்பு என்னும் பொருளாய்ப் பெயர், வினை போன்றும் அவற்றிற்கு முதனிலையாயும் தடுமாறியும் என்று விளக்கமளிக்கிறார். உரிச்சொற்களின் வடிவ நிலையிலான தடுமாற்றத்தை இது உணர்த்துகிறது. அலமரல் என்னும் உரிச்சொல் சிலப்பதிகாரத்தில் அலமந்து (சிலம்பு-21,44) என வினையெச்ச வடிவமாகப் பயின்று வந்துள்ளது. இலம்பாடு என்னும் உரிச்சொல் இலம்பாடு  நாணுத்தரும் (சிலம்பு:9,97) என்ற தொடரில் வறுமைப் பொருளைத் தருகின்றது. எனவே உரிச்சொற்கள் சொல் நிலையில் பெயர்களாகவும், வினை வடிவில் குறைச்சொற்களாகவும் (அடையாக) இயங்க வல்லன என உணரலாம்.

    பொருள் நிலையிலான உரிச்சொற்கள்:

    உரிச்சொற்கள் இசை, பண்பு குறிப்பு பண்புகளில் தோன்றும் எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகின்றது. உரையாசிரியர், சேனாவரையர், ”உரிச்சொற்கு இலக்கணமாவது இசை, பண்பு, குறிப்பென்னும் பொருட்குரியவாய் வருதலேயாம்” என விளக்கம் தருகிறார்.

    தமக்கியல்பில்லாத இடைச்சொற்களைப் போன்று அல்லாது இசை, பண்பு குறிப்புப் பொருட்குத் தாமே உரியவாதலின் உரிச்சொல்லாயிற்று எனவும் உரிச்சொல்லின் இயல்பு எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ள 120 உரிச்சொற்களையும் உரையாசிரியர்கள் இசை, பண்பு, குறிப்பு ஆகிய மூன்று நிலைகளில் அடக்கிக் காட்டியுள்ளனர். சேனாவரையர் உரைப்படி, 9 சொற்கள் இசைப்பொருளையும் 15 சொற்கள் பண்புப்பொருளையும் எஞ்சிய 96 சொற்கள் குறிப்புப்பொருளையும் உணர்த்துவன. இவற்றுள் தொல்காப்பியம் கூறும் பொருள்மரபிலேயே சிலம்பில் பயின்று வருவனவாக இயம்பல், கலி ஆகிய இசைச்சொற்களையும், நளி, துணைவு போன்ற சொற்கள் குறிப்புச் சொற்களையும் எடுத்துக்காட்டாக கலிகெழு கூடல் (சிலம்பு:3.125) என்ற தொடரில் கலி என்பது அரவப்பொருளையே தருகிறது. செழுமை என்னும் பண்பு உரிச்சொல் செழுங்குலை (சிலம்பு:25,46), செழுமுத்தம் (சிலம்பு:29.1) ஆகியவற்றில் முறையே, தொல்காப்பியர் குறிப்பிட்ட வளன், கொழுப்பு ஆகிய பொருளில் கையாண்டுள்ளார் இளங்கோவடிகள்.

    நளிமலர் (சிலம்பு:2.56), துணைந்து சென்று(சிலம்பு:8.114) ஆகிய தொடர்களில் செறிவு, வரைவு எனக் குறிப்புப்பொருளில் ஆளப்பட்டுள்ளன. எனவே இவ்வாறு பொருள் நிலையில் உரிச்சொற்களை ஆராயும்இடத்து ஒருசொல் பலபொருள், பலசொல் ஒருபொருள் என்ற நிலையில் சிலப்பதிகாரத்தில் மிகுதியும் கையாளப்பட்டுள்ளது. 

    முடிவுரை:

    சிலப்பதிகாரத்தின் சொற்கூறுகளில் உரிச்சொல் நிலைகளை ஆராய்ந்த இக்கட்டுரையின் வாயிலாக உரிச்சொற்களின் இயல்புகள் இலக்கணங்களை அறிய முடிகின்றது. உரிச்சொற்கள் ஒரு சொல் பலபொருள் நிலையிலும், பலசொல் ஒருபொருள் நிலையிலும், குறைச்சொற்களாகிய அடைச்சொற்களாக பெயர், வினைகளுக்கு முன்னேயும், அவற்றைச் சார்ந்தும், பெயர், வினைகளாகவே சில இடங்களிலும் இயங்க வல்லன என அறியலாம்.

    ***

    து.கார்த்திகேயன்
    முனைவர் பட்ட ஆய்வாளர்
    உதவிப்பேராசிரியர்,
    தருமபுரம் ஆதினம் கலைக்கல்லூரி,
    தருமபுரம்–மயிலாடுதுறை
    tamilkarthik82@gmail.com

     

     

    Share
  • நாணுடைமை சான்றோர்க்கணி!

    -முனைவர் இராம. இராமமூர்த்தி

    ”அரிது அரிது மானிடராய்ப் பிறத்தலரிது”, என்பார் ஔவையார். இறைவன் படைப்புக்களுள் மனிதப்பிறவியே சிறப்புடையது. மனிதன் மட்டுமே நன்மை தீமைகளைப் பகுத்துணரும் ஆற்றல் பெற்றவன். இத்திறனையே பகுத்தறிவென்றும், ஆறாமறிவென்றுங் கூறுவர். ஏனைய உயிரினங்களினின்றும் மனிதனை வேறுபடுத்துவது இவ்வாறாம் அறிவேயாகும். இதனாலேயே தொல்காப்பியரும், “மக்கள் தாமே ஆறறி வுயிரே”, எனக் கூறுவாராயினர். இப்பகுத்தறிவின் பயனால் அமைவதுவே நற்பண்புகள், நற்செயல்கள் எல்லாம். நற்பண்புகளையே மனிதப் பண்புகளெனப் புகழ்ந்துகூறுவர்.

    திருக்குறள் பல நற்பண்புகளைப் பட்டியலிடுகின்றது. ஒட்டுமொத்தமாகப் ’பண்புடைமை’ என்ற பெயரானேயே நற்பண்பு சுட்டப்பெறுகின்றது. நற்பண்புகளுள் ஒன்றாக நாணம் சுட்டப்பெறுகின்றது. அதுவே ’நாணுடைமை’ என்ற தலைப்பில் அமைந்துள்ளது. நாணமென்றால் என்ன? மகளிரின் இயல்பாக அச்சம், மடம், நாணம், பயிர்ப்பென நாற்குணங்களைச் சுட்டுவர். மகளிரின் குணமாகிய நாண் என்பதற்குக் “காமக்குறிப்பு நிகழ்ந்தவழிப் படுவதோர் உள்ளவொடுக்கம்” என்பர் நச்சினார்க்கினியர்.

    ஆனால் நாம் இங்குக் கூறவந்த நாணம் மகளிர்க்கு மட்டும் உரியதன்று; ஆடவர் பெண்டிர் இருவர்தம் நல்வாழ்விற்கும் தேவைப்படுமொன்றாம்.  நாணம் என்ற சொல்லிற்குத் ’தமக்குப் பழிவருஞ் செயல்களைச் செய்யாமை’ என்பர் இளம்பூரணர். இதனையே திருவள்ளுவர் ஈண்டுக் கையாளுகின்றார். நல்லமனிதர் பழிச்செயல்களைச் செய்யப் பெரிதும்  அஞ்சுவர். பழிபாவங்கட்கு நாணுவதே – செய்ய விரும்பாமையே பெரியோர் செயலாகும். மிகப்பெரிய செல்வமே கிடைப்பதாயினும் – ஏன் இவ்வுலகமே தமக்குப் பரிசாகக் கிடைப்பதாயினும் – பழிவருவதற்குக் காரணமான இழிசெயல்களைச் சான்றோர் ஒருநாளும் செய்யமாட்டார். புறநானூற்று அரசப்புலவரான கடலுள்மாய்ந்த இளம்பெருவழுதி, சான்றோரின் இக்குணத்தையே, “புகழெனின் உயிருங் கொடுக்குவர், பழியெனின் உலகுடன் பெறினுங் கொள்ளலர்” எனக் கூறுவார். ”கழியக் காதல ராயினுஞ் சான்றோர் பழியொடு வரூஉம் இன்பம் வெஃகார்” என்பது ஆவூர் கிழாரின் அமுதமொழி.

    பழிச்செயலை மேற்கொள்ளவோ செய்யவோ பெரியோர் நாணுவர். இத்தகைய நாணமே, வள்ளுவர் கூறும் நாணுடைமையில் இடம்பெறுவதாகும். மனிதர்க்குச் சிறப்புத் தருவது அவரணியும் ஆடம்பரமான உடைகளோ, அறுசுவை உணவோ அல்ல. இதனையே நாலடியார்,
    குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும் மஞ்சளழகும் அழகல்ல என அழுந்தக் கூறும். புறத்தில் மேற்கொள்ளப்படும் ஆடம்பரத்தால் ஒருவர் சிறப்பெய்துவதில்லை. அவரது நற்பண்பே அவருக்குப் பெருமை தரும். அண்ணல் காந்தியடிகளுக்கு அவரது ஆடை அணிகலன்களாப் புகழைத் தந்தன? அவரை அரைநிர்வாணப் பக்கிரி (half naked fakir) எனக் கேலிமொழி பேசியவர்கள் உண்டு. அண்ணல் காந்தியடிகளின் நயத்தக்க நாகரிகப் பண்பே அவரை மகாத்மாவாக மாற்றியது; உலக உத்தமர் என்ற பாராட்டைப் பெற்றுத்தந்தது.

    சாதாரண மனிதனை நாடுபாராட்டும் சான்றோனாக்க நாணுடைமையே – பழியஞ்சும் மனப்பான்மையே – மிகப்பெரிய காரணம் எனத் திருக்குறள் கூறுவது இயல்புதானே?

    அதனாற்றான்,
    “அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையோ
    டைந்துசால் பூன்றிய தூண்”, எனக் கூறுமாற்றான் சான்றாண்மைக்குத் தேவைப்படும் நற்பண்புகளுள் நாணுடைமையும் ஒன்றாக வலியுறுத்தப்படுகின்றது.  இதனாலேயே, பண்டைநாளை மன்னர்களும் தவறாது அறச்செயல்களைச் செய்துவந்தனர். மனுநீதிச்சோழன் வரலாறும், பொற்கைப்பாண்டியன் வரலாறும் அம்மன்னர் பெருமக்கள் பழிக்கு அஞ்சித் தன்மகனைத் தேரூர்ந்தமையும், தன்கை குறைத்த செயலையும் எடுத்தியம்புகின்றன அல்லவா? நெடுங்கிள்ளி, போருக்கும் வாராமல் கோட்டையையும் திறவாமல் இருந்த செயலைக்கண்ட புலவர் கோவூர் கிழார், இச்செயல் நாணுத் தகவுடைத்து – நாணத்திற்குரிய செயல் – எனக்கூறி யிடித்துரைக்கவில்லையா?

    அது மட்டுமா? திருவிளையாடற் புராணத்தில் “பழியஞ்சின படலம்” என்ற தலைப்பில் ஒரு திருவிளையாடலமைந்துள்ளது. அப்படலத்தில் பாண்டிய மன்னன் ஒருவனுக்கு வரவிருந்த பழியை இறைவன் காத்தருளிய அருட்செயலே எடுத்துரைக்கப்படுகின்றது. அற்றைநாளில், செய்யத்தகாத செயல்களென, பழிதரூஉஞ் செயல்களென ஒருபட்டியலே தரப்பட்டுள்ளது. அவற்றுள், மது உண்ணுதல், புறங்கூறுதல், பொய்ச்சாட்சி கூறல், பிறனில் விழைதல், போரிற் புறமுதுகிட்டோடல் போல்வன சிலவாம். சிலப்பதிகாரத்தின் இறுதிப் பகுதியாகிய வரந்தரு காதையில் கொள்ளவேண்டியவை, தள்ளவேண்டியவை குறித்து இளங்கோவடிகள் ஒரு நெடிய பட்டியலை யமைத்துள்ளார். ”பொய்யுரை யஞ்சுமின்; புறஞ்சொல் போற்றுமின்; ஊனூண் துறமின்; உயிர்க்கொலை நீங்குமின்; தீநட்பு இகழ்மின்; பொய்க்கரி போகன்மின்” என நீளுகின்றது அப்பட்டியல்!

    இதனை நோக்க, செய்யத்தக்க செயல்கள், செய்யத்தகாத செயல்களென அவர்கள் பிரித்திருந்த தன்மையை யறியலாம். “செய்தக்க அல்ல செயக் கெடும்” எனத் திருவள்ளுவர் மொழிவதும் இஃதே!

    ஆகவே, நல்வாழ்வு வாழ, நற்செயல்களைச் செய்யும் பண்பு வேண்டும்; பழிச்செயல்களைத் தவிர்க்கும் பண்பு அதனினும் வேண்டும் என்பதனைத் தமிழ்ப்பெருமக்கள் நன்கறிந்திருந்தனர். அறிந்ததோடமையாமல், அச் செயல்களைத் தம் வாழ்விற் பின்பற்றியும் வாழ்ந்தமையால் வசையின்றி இசையோடு இலங்கியது அவர்தம் வாழ்வு!

    எனவே நண்பர்களே! வாழ்வு சிறக்கப் போற்றிப் பாதுகாக்க வேண்டிய கருவூலம் நாணுடைமை எனும் நற்பண்பாகும். அப் பண்பின் பெற்றியை விளக்கும் குறள்மணிகள் சில…

    அணியன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல்
    பிணியன்றோ பீடு நடை. (1014)

    நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்
    நாண்துறவார் நாணாள் பவர்.
    (1017)

    நாணகத் தில்லார் இயக்கம் மரப்பாவை
    நாணால் உயிர்மருட்டி யற்று.
    (1020)

    குறள்காட்டும் இச்சீரிய கருத்துக்கள் ஞானச்சுடரை நம்முள் ஏற்றட்டும்! ஞாலம் போற்றும் நல்வாழ்வை நமக்கு நல்கட்டும்!

     

     

    Share
  • திருமந்திரம் – 3

    -பா.மஞ்சுளா

     

    திரைவிலகட்டும்!

    திருமூலர் (1)

     

    ஒன்பது தந்திரப் பகுப்புமுறைகள்

    திருக்குறளும் திருமந்திரமும் பல இடங்களில் ஒன்றுபடுகிறது. திருமந்திரத்தின்  தந்திரங்களை அதிகாரங்களாகப் பகுத்து

    முதல்தந்திரத்தில் 24அதிகாரங்களாகவும்,
    இதுவும் குறளைபோன்று புலால் மறுத்தல், கொல்லாமை, ஆட்சிமுறை, வான்சிறப்பு, அன்புடைமை, கல்வி, கல்லாமை போன்ற நீதிநூல்களில் பேசப்படும் செய்திகள் உள்ளன.

    இரண்டாம் தந்திரம் 25 அதிகாரங்கள். இதில்
    புராணங்களைப்  புதிய அணுகுமுறையுடன் நாடியிருப்பதும், வேண்டுதல் ,வேண்டாமை இல்லாத இறைவழிபாட்டு முறையே புதிய
    பொருள் விளக்கத்துடன் மிளிர செய்கிறது.

    மூன்றாம் தந்திரம் 21 அதிகாரம். அட்டாங்க யோகம், யோக சாதனைகளை விளக்கிப் பின் ஆன்மீக பயிற்சியில் ஒருவனை ஈடுபடுத்துகிறது. இதுவே மனிதனின் உடம்பைக் சிதையாமல் பாதுகாக்கும் வழி எனக் கூறுகிறது.

    நான்காம் தந்திரம் 13 அதிகாரங்களை கொண்டது. மந்திரங்களை வடிவமைக்கும் சக்கரங்களின் அமைப்பும், அவற்றை வழிபடும் முறையும்  அதனாலே கிடைக்கும் நன்மைகள் பற்றியும் ஆராய்ந்து பேசுகிறது.

    ஐந்தாம் தந்திரம் 20 அதிகாரங்களை உடையது.
    இதுவே இந்நூலுக்கு உயிர்நாடி. முன்னும் பின்னுமாக அமைந்திருக்கும் முதல் நான்கு தந்திரங்களுக்கும், இறுதி நான்கு தந்திரங்களுக்கும் ஐந்தாம் தந்திரமே வழியும், பயனுமாக அமைந்தது. இதிலே சரியை,
    கிரியை, யோகம், ஞானம் ஆகிய நால்வகை
    நெறிகளும் அதற்கான தாசமார்க்கம், சற்புத்திர
    மார்க்கம், சகமார்க்கம், சன்மார்க்கம் ஆகிய
    நான்கு மார்க்கத்தின் உண்மைகள்மூலம் சைவத்தின் பெருமை உணர்த்தப்படுகிறது.

    ஆறாம்தந்திரம் 14 அதிகாரங்கள். உண்மைகளை அறிந்து சிந்தித்து முற்றுணர்வு பெறுவதற்கு வேண்டிய சாதனங்களைக் கூறும்.

    ஏழாம் தந்திரம் 38 அதிகாரங்கள். இது ஐம்பொறிகளையும்
    அடக்கும் முறை, சிவநெறியில் நிற்போர்
    அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய நல்லுரைகளைத் தாங்கி நிற்கிறது.

    எட்டாம் தந்திரம் 45 அதிகாரங்கள் கொண்டது.
    சிவனது கூடுதல் என்னும் சிவயோக நிலையை
    உணர்த்துவது.

    ஒன்பதாம் தந்திரம் 27 அதிகாரங்கள். சிவனை
    அடைவதால் ஏற்படும் வீடுபேற்று நிலையைக் கூறுகிறது. இதில் இடம் பெறும் ’சூனிய சம்பாதனை’ என்ற பகுதி விடுகதைபோல மறைபொருள்கள் பற்றிய பாடல்கள் அமைப்பை கொண்டது. மொத்தம் 227 அதிகாரங்களில் 3000 பாடல்களைக்  கொண்டது.

    பண்டைய தமிழகம் பெளத்தம், சமணம் முதலிய சமயங்களின் பிடியில் இருந்த  இருண்ட காலத்தில் சமயங்களை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்னும் தீப்பொறியை  மூலன் போட, அது பக்தி இயக்கத்தால் ஊதிப் பற்றவைக்கப்பட்டது. சைவத்தால் தமிழை மீட்டெடுக்க முதல் விதையைத் தமிழ்மண்ணில் திருமூலர் விதைத்தார்.

       ” என்னை நன்றாக இறைவன் படைத்தனன் 
        தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே”

    என்று தனது படைப்பின் நோக்கத்தைக் கூறுகிறார்.
    சேவல்கள் காலமறிந்து கூவ வேண்டும்; காலமல்லாத காலத்தில் கூவும் கூவல்களை யாரும் பொருட்படுத்துவதில்லை. அப்படிக் காலம் அறிந்து கூவிய முதல் தமிழரது கூவலே திருமந்திரம்.

    Share
  • சங்ககால ஔவையாரும்  கம்பனும்

    –புலவர் இரா. இராமமூர்த்தி

    தமிழின் தொன்மையையும், பெருமையையும் உலகிற்கு உணர்த்தும் ஆதாரங்களுள்  சங்க இலக்கியங்கள் முதலிடத்தைப்பிடிக்கின்றன!    இந்தச் சங்க இலக்கியங்கள்,  பத்துப்பாட்டு, எட்டுத்தொகை  என்ற இருவகைகளிலும், சங்கம்  மருவிய நூல்கள்,  பதினெண் கீழ்க்கணக்கு என்ற வகையிலும் பகுக்கப் பெற்றன. எட்டுத்தொகை நூல்களில், ஔவையார் இயற்றிய  59  பாடல்கள் இடம் பெற்றுள்ளன. பிற்காலப் புலவர்கள் பலரும் சங்க இலக்கியங்களில் தாம்பெற்ற பயிற்சியைத்  தாமியற்றிய  நூல்களில் நாமறியும் வகையில் புலப்படுத்தி  விடுகின்றனர். வள்ளுவரின் திருக்குறளையும், அதன் கருத்துக்களையும் எடுத்தாளுவதை  ஒரு தனித்தகுதியாகக் கருதிய புலவர் பலர் அவ்வாறே தம் நூல்களை எழுதியுள்ளனர். அவ்வகையில் கம்பர் தம் இராமாயணத்தில் முன்னோர் மொழிந்த  சொல், பொருள் ஆகியவற்றைப் போற்றித் தம் பாடல்களில் அமைத்து விடுவார்.  சங்க இலக்கியங்களில் சிறந்த புலமைபெற்ற கம்பர் தம் ‘இராமகாதை’யில் பல பாடல்களைச்  சங்க இலக்கியங்களின்  சாயலில் படைத்து அவற்றைக் கம்பராமாயணத்தில்  ஒளிவீசித் திகழ வைத்தார்!

    அவ்வையார் பாடிய பாடல்கள் சங்க இலக்கியங்களில் குறுந்தொகையில் 15, நற்றிணையில் 7, அகநானூற்றில் 4,புறநானூற்றில் 33 என்ற எண்ணிக்கையில்  அமைந்துள்ளன.  தம்மை அன்புடன் ஏற்றுக்கொண்டு,  நெடுங்காலம்  தம்  அரசவையிலேயே ஔவையாரை  அமர்த்தி அவர் புலமையை மதித்தவன் அதியமான் நெடுமான் அஞ்சி ஆவான். அவர் சற்றுச் சினத்துடன் முதலில் பாடிய பாடலில் ”எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே!” என்று பாடியதைக் கேட்டு அவர் சினத்தை ஆற்றும் வகையில் பேரன்பு காட்டி, அவரது நைந்துபோன பாசிச்செடியின் வேர் போன்று நூல்நூலாகத் தொங்கும் மண்தின்ற ஆடையை நீக்கி,  நுண்மையான நூலால்  நெய்யப்பெற்ற கெட்டிக் கரையை உடைய பட்டாடையை அணிவித்தான்.   உடனே தேள் கொட்டியது போன்று சுவைக்கும்  பழைய  கள்ளினைப் பொற் கிண்ணத்தில்  நிரப்பிப்  பருகத் தந்தான். பின்னர் முறைப்படி உணவு வகைகளைப் படைத்தான்.

    avayarஇந்தப்பாடலில்  ஔவையார், “மரம் தேடிக் காட்டுக்குச் செல்லுகின்ற தச்சன், நல்ல கருவிகளுடன் உடன்வரும் திறமைபெற்ற பணியாளர்களுடன் சென்றால் அவனுக்கு எல்லாவகை  மரங்களும் கிட்டும். அதுபோல  நாங்கள் உலகின் எத்திசை நோக்கிச் சென்றாலும்சோறு கிட்டும்! ” என்று  பாடியதன் பொருளைக் கற்றறிந்து கொண்ட கம்பன்,   தம் மைந்தன் காரணமாகத்  தன்னை  இகழ்ந்த   சோழ மன்னன் மேல் சினங்கொண்டு அவன் நாட்டை விட்டு நீங்கும் போது,

    மன்னவனும்   நீயோ?  வளநாடும்   நின்னதோ?
    உன்னையறிந்  தோதமிழை  ஓதினேன்? – என்னை
    விரைந்தேற்றுக்  கொள்ளாத  வேந்துண்டோ;  உண்டோ
    குரங்கேற்றுக்  கொள்ளாத  கொம்பு!

    என்று பாடினார்.   இது கம்பனுக்கு ஔவையார் தந்த தன்னம்பிக்கை ஆகும்.   இவ்வாறு கம்பனுக்கு நல்லுணர்ச்சி நல்கிய ஔவையாரின் பாடல்கள் மேலு சில உள்ளன.

    ஔவையார் பாடிய அகநானூற்றுப் பாடல் ஒன்றில், ”தன்னை விட்டு நீங்கி, பொருள் தேடிச்சென்ற காதலர் வரவேண்டிய காலம் கடந்த பின்னும் வாராமையால்,   காதலியின் மேனியில் சிறு முளை போன்ற பசலை நோய் தோன்றியது.  பிரிவுத் துன்பத்தால் மிக வாடிய நெஞ்சத்தில் படர்ந்தது. அதனைக் கண்ட  ஊரார் மெல்ல மெல்லத்  தமக்குள் இக்காதலைப் பற்றிப் பேசினர். அம்பல் என்ற வதந்திக் கிளைகள் பரவின. பின்னர், குறையாத காதலால் தளிர்கள் நிறைந்தன. நிலமெங்கும் நிழல் பரப்பிய மரமாய்  வளர்ந்தது! ” என்ற பொருளில்,

    ”தலை வரம்பறியாத் தகைவரல்  வாடையொடு
    முலையிடைத்  தோன்றிய  நோய் வளர் இளமுளை
    அசைவுடை  நெஞ்சத்து  உயவுத்திறன் நீடி
    ஊரோர்  எடுத்த  அம்பல்  அம்சினை
    ஆராக்  காதல்  அவிர்தளிர்   பரப்பி,
    புலவர் புகழ்ந்த  நாணில் பெருமரம்
    நிலவரை  எல்லாம்   நிழற்றி
    அலர்அரும்பு  ஊழ்ப்பவும் வாரா  தோரே!”

    என்று பாடுகிறார். இப்பாடலில் விதை, முளை, சிறுகிளை, தளிர்கள், பெருமரம் என்ற முழுவளர்ச்சியும் முற்றுருவகமாக அமைந்துள்ளது.

    இவ்வாறு ஒரு முழுமரம் உயர்ந்து கனியும்  பழுத்த வகையைக் கம்பர் ஔவையாரின் வழியில் பாடுகிறார். அது,

    ”ஏகம்  முதல் கல்வி முளைத்தெழுந்து, எண்ணில்  கேள்வி
    ஆகும்  முதல்  திண்பணை  போக்கி, அருந்  தவத்தின்
    சாகம்  தழைத்து  அன்பு அரும்பி,  தருமம்  மலர்ந்து,
    போகம்  கனி ஓன்று பழுத்தது  போலும் அன்றே!”

    என்ற பாடலாகும்.   கல்வியாகிய விதை, கேள்வியாகிய அடிமரம், தவமாகிய இலைகள், அன்பு அரும்பு, தருமமாகிய மலர், போகமாகிய கனி பழுத்தது போன்ற நகர் என்ற முற்றுருவகம் ஔவையார் இட்ட அடித்தளத்திலிருந்து உருவானது தான் என்பதை நாம் எளிதில் புரிந்து கொண்டு மகிழ்கிறோம்.

    அடுத்து  ஔவையார் தன்  காதலைப் புரிந்து கொள்ளாமல் உறங்குகின்ற ஊரைக் கண்டு மிகுந்த கோபம் கொண்டு அந்த ஊர்மக்களைத் தாக்கி வீழ்த்தித் தன்னிலையைப் புலப்படுத்த முயல்கிறாள். அடக்கம்மிக்க ஒரு  பெண்ணுக்கே இவ்வாறு ஆத்திரம் பொங்கும் என்பது இயற்கை.   தன் நிலையை அறியாத மதுரை மக்களைக் கண்டு  ஆத்திரம் அடையும் கண்ணகியை நாம் சிலப்பதிகாரத்தில் கண்டு வியக்கின்றோம். நம் ஔவையார் காணும் பெண்மணி காதல் வேட்கை மிகுதியினால் ஊர்மக்களிடமே கோபம் கொள்கிறாள். தமிழ் நூல் களில் அகத்திணைத் துறையில் ஒரு பெண் சினங்கொண்டு ஊரையே எதிர்த்துக் குரல் கொடுப்பது இங்கு மட்டுமே. குறுந்தொகை  இதனை,

    ”முட்டுவேன்கொல்! தாக்குவேன் கொல்!
    ஓரேன்  யானும்; ஓர்  பெற்றி  மேலிட்டு
    ‘ஆஅ!  ஒல்‘  எனக் கூவுவேன் கொல்!
    அலமரல் அசைவளி  அலைப்ப, என்
    உயவுநோய்  அறியாது, துஞ்சும் ஊர்க்கே!”

    kambanஎன்று அப்பெண் பாடுவதாகக் குறுந்தொகை 28-ஆம் பாடல் கூறுகிறது.  இந்தப் புதுமையைக் கண்ட  கம்பர்  தம்முடைய இராமாயணத்தில், சீதையைப் பிரிந்து வருந்தும் போது, இராமன் உணர்ச்சிவசப்பட்டு, ”இந்த உலகங்கள்  அனைத்தையும் அழிப்பேன்!”  என்று   சடாயுவிடம் சூளுரைக்கின்றான். இது பிரிவின் வேதனையால் இராமன் உலகின்மீதே சினம் கொள்ளும் காட்சி.   இதனைக் கம்பர்,

    ”பெண்தனி  ஒருத்தி  தன்னைப்  பேதைவாள்  அரக்கன்  பற்றிக்
    கொண்டனன்   ஏக , நீ இக்   கோளுற , குலுங்கல்  செல்லா
    எண் திசை  இறுதியான  உலகங்கள்  இவற்றை,  இன்னே
    கண்டவா  னவர்க  ளோடும் களையுமாறு, இன்று காண்டி!”

    என்று இராமன் உலகங்களையும் , கண்டும் வாளாவிருந்த தேவர்களையும் கொன்றழிப்பேன்! ” என்று கோபத்துடன் கூறியதை நன்றாக உற்று நோக்கினால் , பிரிவுத் துன்பம் , நற்பண்பு மிக்க ,பொறுமைமிக்க இராமனையும் பாதித்த சூழ்நிலை நமக்குப் புரியும்! இந்தச்சினம் இராமனுக்கு வந்தது குறுந்தொகைப் பாடல் உண்டாகிய தாக்கத்தால்தான், என்பது நமக்குப் புரியும்!

    தாரகை  உதிரு  மாறும் தனிக்கதிர்  பிதிரு மாறும்
    பேரகல்  வானம்  எங்கும் பிறங்கெரி பிறக்கு மாறும்,
    நீரொடு  நிலனும் காலும், நின்றவும் , திரிந்த  யாவும்
    வேரொடு  மடியு  மாறும், விண்ணவர்  விளியு மாறும்,
    இக்கணம்  ஒன்றில்  நின்ற  ஏழினோடு  ஏழு  சான்ற
    மிக்கன   போன்று  தோன்றும் உலகங்கள்  வீயு  மாறும்,
    திக்கொடும்  அண்ட  கோளப்  புறத்தவும்   தீந்து, நீரின்
    மொக்குளின்   உடையு  மாறும்,  காண்”

    என  இராமன் முனிந்தான்.    திருமணம் நடக்கும் வரை  பொறுத்துக் கொள்ள இயலாத அளவுக்குக் காதல் கைம்மிக்க போது எல்லாருமே உணர்ச்சிவசப்படுவது இயல்பு. ஆனால் பொறுமையின் எல்லைவரை அமைதியாகவே இருக்கக் கற்பிக்கப் பெற்ற தலைவி, எல்லையைக் கடக்கும் சூழ்நிலையில் மிகவும் சினம் கொண்டு ”முட்டுவேன். தாக்குவேன்! ”  என்று கூறுவது சற்று மிகையான செயல்தான். இதனை ஔவையார்  கற்பனையாகப் பாடி  நம் கவனத்தை ஈர்ப்பதைக் கற்றறிந்த கம்பர், இராமபிரான் தம் மனைவியின் பிரிவினைப் பொறுத்துக் கொள்ள  இயலாத சூழ்நிலையில் உணர்ச்சிவசப்பட்டு ” உலகையே  அழிப்பேன்” என்று சினத்துடன் பேசும் செயலைக் காப்பிய மரபின் புதுவகை  உத்தியாகக் கம்பன் கூறுவதை நாம் புரிந்து கொள்கிறோம்.

    இரண்டு செயல்களையும் ஒரேவகைப்  பிரிவுணர்ச்சியே கொண்டுசெல்வதைச் சங்க  இலக்கியமும் , கம்பகாவியமும் ஒரே விதமாகக்  காட்டும்போது ஔவையாரின் வழியில் கம்பன் பாடுவதை உணர்ந்து மகிழ்கிறோம்.

    குறுந்தொகையில்  மற்றொரு பாடல்.  தலைமகன் தலைவியைத் தன்னுடன் அழைத்துச் செல்லக் கருதுகிறான். அதே நேரத்தில்,  ‘அவளால் பாலை நிலத்தின் வெம்மையைத் தாங்க இயலாதே’, என எண்ணித் தயங்குகிறான். அப்போது தோழி, தலைவனிடம் ”தலைவி உன்னுடன் செல்லும்போது கடுமையான காட்டின் வெம்மையையும் பொறுத்துக் கொள்வாள்” என்கிறாள். இதே சூழ்நிலையைக்  கம்பரும் தம் காவியத்தில் உருவாக்குகிறார்.

    ”வல் அரக்கரின்   மால்வரை   போய்விழுந்து
    அல்  அரக்கின்  உருக்கு அழல் காட்டு அதர்க்
    கல் அரக்கும்  கடுமைய  அல்ல, நின்
    சில் அரக்குண்ட சேவடிப் போது!”

    என்கிறான் இராமபிரான். அப்போது சீதை, ” நின் பிரிவினும் சுடுமோ, பெருங்காடு?” என்று கூறி உடன்போகத் துணிகிறாள். குறுந்தொகைத் தோழி தலைவனிடம்,  ”குளம் நிறைந்த நீரில் முளைத்து மேலே தலைநீட்டி மலரும் குவளை மலர் ,   கோடைக் காலத்தில்    நீர் வற்றிய போதும் காய்ந்து கிடந்தது, அடுத்து நீர் வரும் காலத்தில்  மீண்டும் முளைத்து மலரும்.  அதுபோல் உன்னுடனே   இருக்கும்  மகிழ்ச்சியில் வாட்டத்தை உணராமல் உள்ளே  உயிர்ப்புடன் தலைவி இருப்பாள்! ” என்கிறாள். இதனைக் குறுந்தொகையின் 

    ”நீர்கால்   யாத்த  நிரைஇதழ்க்  குவளை
    கோடை ஒற்றினும்   வாடா தாகும்!”

    என்ற பாடற்பகுதி குறிக்கிறது.

    கம்பராமாயணத்தில், ”காட்டின் கடுமையை இராமனுடன் செல்லும் பிரிவில்லாத சூழ்நிலையில் சீதை தாங்கிக் கொள்வாள்!” என்று இலக்குவன் கூறுகிறான். நீர் நிரம்பிய குளத்தில் மீனும், குவளை மலரும் உயிர்ப்புடன்  இருப்பதுபோல் நானும் சீதையும் உயிர்ப்புடன் விளங்குவோம். அதுவும் சீதை உன்னைச் சற்றுப் பிரிந்தாலும் குவளை மலர்கள்  நீரின்றி வாடி மீண்டும் நீர் வரும்போது உயிர்த்து எழுவதுபோல், மேலே வாடினாலும் உள்ளே உயிர்ப்புடன் இருப்பாள்!”   என்று இலக்குவன் கூறுகிறான். இதில் மிகவும் நுட்பமாக இராவணன் செயலால் சீதை பிரிந்தாலும்,  அங்கே தன்னைக்  காத்துக்கொண்டு அங்கிருந்து,  மீண்டும் இராமனிடம் சேரும்போது ,உயிர்ப்படைவாள்!  (ஆனால் குளத்து  மீன், நீரில்லையேல் உடனே உயிர் விடுவது போல் நான் மாள்வேன்!)  என்று இலக்குவன் கூறும் பாடல், ஔவையாரின் குறுந்தொகைப் பாடலின் வழியில் அமைந்து, கம்பரின் சங்க நூற்பயிற்சியைக்  காட்டுகிறது. இதனை,

    ”நீருள  எனின் உள  மீனும்  நீலமும்
    பாருள  எனின் உள  யாவும், பார்ப்புறின்
    நாருள   தனுவுளாய்    நானும் சீதையும்
    ஆருளர்   எனினுளேம்  அருளுவாய் என்றான்!”

    என்று கம்பர்  பாடுகிறார்.  இப்பாடலில்,ஔவையாரின் நீர்க்குளம் , குவளை மலர் ஆகியவை கம்பனுக்கு வழிகாட்டியாக அமைந்த அழகை நாம் சுவைத்து மகிழ்கிறோம்.   இவ்வாறே சங்கத்தமிழில் கம்பன் தன்னையே  பறிகொடுத்த சிறப்பை  அடுத்து எழுதுவேன்.

     

     

    Share
  • சங்க இலக்கியத்தில் மொழிசார் வன்முறை

    -பா.சிவக்குமார்                                                                                   

    கி.பி. 21ஆம் நூற்றாண்டில் ஒன்றுபட்ட ஜனநாயகக் குடியரசான இந்தியாவில் வாழும் மக்களிடையே முல்லைப் பெரியாறு அணைநீரைப் பெறுவதற்கும், காவிரிநீரைப் பெறுவதற்கும் வழக்குமன்றத்தை நாடவேண்டியுள்ளது. மேக்கே தாட்டு (மேகதாது) எனும் இடத்தில் காவிரியின் குறுக்கே கர்நாடகத்தினர் அணைகட்டத் தீர்மானித்த நிலையிலேயே தமிழ், கன்னடம் என இருவேறு மொழி பேசுவோர் என்ற அடிப்படையில் கடையடைப்பு, பேருந்து நிறுத்தம் போன்ற அமைதியான வழிகளில் எதிர்ப்புத் தெரிவிக்கும் பொழுதுகூட பல நேரங்களில் கல்லெறிதல், கடை உடைப்பு, பேருந்தை எரித்தல், இருவேறு மொழி பேசுபவர்கள் அடித்துக் கொள்ளல், போன்ற வன்முறைகள் நிகழ்ந்துள்ளதைக் காணநேரிட்டது. முல்லைப் பெரியாறு பிரச்சனையின்போது சபரிமலைக்குச் சென்ற ஐயப்ப பக்தர்கள் மீது மலையாள மக்கள் வன்முறை நிகழ்த்தியுள்ளனர். இலங்கையில் சிங்களர்கள், தமிழர்கள் இடையே இன்றும் ஒற்றுமை ஏற்படாமல் ஆளும் வர்க்கம் அதிகாரத்தால் அடக்கியாளும் நிலையினையே கண்கூடாகக் காண்கிறோம். இது போன்ற மொழிசார் வன்முறை சங்கச் சமூகத்திலும் ஊடுருவி இருந்துள்ளமையை வெளிப்படுத்துவதாக இக்கட்டுரை அமைகிறது.

    tamil

                    சேர, சோழ, பாண்டியர் எனும் மூவேந்தர்களும் தமக்குள் சண்டையிட்டுக் கொண்டாலும் இம்மூவரின் நாடுகளிலும் பேசப்படும் மொழி தமிழ்மொழியாகும். ஆனால், இம்மூவேந்தர்களும் வேற்றுமொழி பேசும் நாட்டினரைப் போர் வன்முறையால் அழித்து, மிரட்டி அவர்களிடம் திறை பெற்றுள்ளமையைக் காணமுடிகின்றது. இதனை,

    “………………………………வென்றியொடு
    வில்லலைத் துண்ணும் வல்லான் வாழ்க்கைத்
    தமிழ்கெழு மூவர் காக்கும்
    மொழிபெயர் தேஎத்த பன்மலை இறந்தே
    ”         (அகம்.31:12-15)                             

    எனும் அகநானூற்றுப் பாடல் சான்று பகர்கின்றது. பிறமொழி பேசும் மக்களின் உழைப்பால் வந்த பொருட்களையும், அவர்களின் உரிமைகளையும் சுரண்டும் வன்செயல்களில் மூவேந்தர்களும் ஈடுபட்டிருந்தனர் என்பதை அறியமுடிகின்றது.

                    வேற்றுமொழிப் பேசுபவர்களைத் தன் ஆதிக்கத்தின் கீழ் அடிபணிய வைக்க வேலேந்திச் சென்றதனை,

    “விலங்குஇருஞ் சிமையக் குன்றத்து உம்பர்,
    வேறுபல் மொழிய தேஎம் முன்னி,
    வினைநசைஇப் பரிக்கும் உரன்மிகு நெஞ்சமொடு
    புனைமாண் எஃகம் வலவயின் ஏந்தி
    ”                                       (அகம். 215:1-4)    

    என்ற பாடல் எடுத்தியம்புகின்றது. வேற்றுமொழி பேசுபவர்களைத் தன் ஆதிக்கத்தின் கீழ் அடிபணிய வைக்கும் பொருட்டுத் தமிழ்அரசர்கள் கரிய கேடயத்தை ஏந்திப் படைநடத்திச் சென்றுள்ளதை அகம். 67:12-14ஆம் பாடல் வெளிப்படுத்துகின்றது.

    மொழி அடிப்படையில் வேற்படையையுடைய ’கட்டி’ என்பவனுடைய நாட்டை ‘நல்லநாடு’ என்றும், வேற்றுமொழி பேசுபவர்களைப் பகைவர் நாடு என்றும் புலவர்கள் பதிவு செய்துள்ளமையை,

    “குல்லைக் கண்ணி வடுகர் முனாஅது
    பல்வேற் கட்டி நன்னாட் டும்பர்
    மொழிபெயர் தேஎத்த ராயினும்
    ”                                 (குறுந்.11:5-7)                               

    என்ற பாடல் வழி அறிந்து கொள்ளலாம். இவ்வாறு புலவர்களும் வேற்றுமொழி பேசுபவர்களைப் பகைவர்களாகப் பார்க்கும் நிலையினைச் சங்கப்பாக்களின் வழி அறியலாம்.

    ஐ.நா.சபை போன்ற உலக சமாதான அமைப்பு, இந்திய தேசம் என்ற ஒருமைப்பாடு உள்ள நிலையிலேயே மொழிசார்  வன்முறைகள் நிகழ்கின்ற பொழுது சுமார் இருபது நூற்றாண்டுகளுக்குமுன் எத்தகைய வன்முறைகள் நிகழ்ந்திருக்கும் என்பதனைக் கற்பனைசெய்து பார்க்கமுடியாத அளவில் இருந்திருக்கும் என்பது உண்மை. அதனையே மேற்கண்ட பாடல்கள் வழி உணரமுடிகின்றது.

    ***

    பா.சிவக்குமார்,
    முனைவர்பட்ட ஆய்வாளர்,
    தமிழ்த்துறை,
    பாரதியார் பல்கலைக்கழகம்,
    கோவை, 641 046.

     

     

    Share
  • குறுந்தொகையும், குறிஞ்சியும்

    -க. பிரகாஷ் 

    கடல்கோள்களால் அழிவுற்றனபோக எஞ்சியவற்றைப் பாண்டிய, சேர அவையங்களில் புலவா்களைக்கூட்டித் திட்டமிட்டுத் தொகுத்துத் தந்தவையே பழந்தமிழ் இலக்கியப் பாடல்களாகும். அவையே பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்களாகும். தமிழ் இலக்கியம் – பண்பாடு, நாகரிகத்தின் ஊற்றுக்கண்ணாகும்.

    குறுந்தொகையென்னும் நூல் பூரிக்கோ என்பவரால் தொகுக்கப்பட்டது. இதில் நான்கடிச் சிற்றெல்லைமுதல் எட்டடிப் பேரெல்லைவரை அமைந்த நானூறு பாடல்கள் அடங்கியுள்ளன. அடியளவால் குறுகிய இப்பாடல்களில் முதல், கருப்பொருளைவிட உரிப்பொருளே சிறப்பிடம் பெற்றுள்ளது.

    scan0004

    குறுந்தொகையில் தலைவன், தலைவி:

    ஊழ்வயத்தாலே ஒன்றுபடும் தலைவன் தலைவியரது வாழ்விலே ஏற்படுகின்ற கட்டங்கள் பல.  அவை, இயற்கைப் புணர்ச்சி, இடந்தலைப்பாடு, பாங்கற்கூட்டம், பாங்கியற் கூட்டம், பகற்குறி, பகற்குறி இடையீடு, இரவுக்குறி, இரவுக்குறியிடையீடு, வரைவுகடாதல், வரைபொருட் பிரிதல், அறத்தொடு நிற்றல், பொருள்வயிற் பிரிதல், பிரிவிடைத் தலைவனும், தலைவியும் ஒருவரையொருவா் நினைத்து புலம்பலும், ஏங்கலும், பிரிந்தவர் ஒன்றுபடுதல், பரத்தையரை நாடித் தலைமகன் பிரிதல், அவன் பழையபடி தலைவியோடு வந்து கூடுதல் என்னும் இவை போன்ற பலவாகும். இவர்களிடைத் தோன்றும் உள்ள நெகிழ்ச்சிகளையெல்லாம் நயம்பட அமைத்துக்காட்டுகின்றன இக்குறுந்தொகைச் செய்யுட்கள்.

    தமிழில் தொன்மையுடையது சங்க இலக்கியமே என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடில்லை. தொல்காப்பியர் அகத்திணை ஏழு என்பா். அவை, முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை, பெருந்திணை, கைக்கிளை என்பவனாகும். இவற்றிற்கு ஏற்பப் புறத்திணையையும் ஏழு வகையாகக் குறிப்பிடுகிறார். அவை, வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் என்பனவாகும். இதில் தொல்காப்பியா் அகத்திற்கே முதன்மைதந்து புறத்தைச் சார்புபடுத்தி விளக்குகிறார்.

    அக்காலத்தில் திணைப்பாடல்கள் வட்டாரப் பாடல்களாகத் திணைதோறும் வழங்கிவந்தன. நிலமே அதன் அடிப்படைப் பாகுபாட்டிற்கு காரணமாகும்.

    “அவற்றுள்
    நடுவண் ஐந்திணை நடுவண தொழியப்
    படுதிரை வையம் பாத்திய பண்பே” – (948)

    எனவும்,

    மாயோன்மேய காடுறை உலகமும்
    சேயோன்மேய மைவரை உலகமும்
    வேந்தன்மேய தீம்புனல் உலகமும்
    வருணன்மேய பெருமணல் உலகமும்
    முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்…….(தொல்: 951) 

    எனக் கூறப்படும் தொல்காப்பிய நூற்பாக்களால் நிலவழியாக வளா்ந்த திணைப் பாங்கினை உணரலாம். நிலம், பொழுது, கருப்பொருள்களை வைத்தே முதற்கண் ஒரு பாடல் இன்ன திணையென உணரப்படுகிறது. முதல் என்பது நிலமும், பொழுதுமாகும். பொழுது என்பது சிறுபொழுது, பெரும்பொழுது என இருவகைப்படும். கருப்பொருள்கள் என்பது அவ்வகை நிலப்பாகுபாட்டையும், அதிலுள்ள தெய்வம், பறவை, விலங்கு, உணவு, யாழ் உள்ளிட்டவற்றையும் குறிக்கும்.

    ஐவகை நிலத்தினர்:

    குறிஞ்சி நிலத்தவரே அளவளாவி இன்புறுவரென்பதும், முல்லைநில மகளிரே தலைவரைப் பிரிந்து ஆற்றியிருப்ப ரென்பதும், மருதநில மகளிரே தலைவருடன் ஊடிப்பிணங்கி இருப்பரென்பதும், நெய்தல்நில மகளிரே இரங்குவரென்பதும், பாலைநில மகளிரே பிரிவை நினைந்து புலம்புவரென்பதுமான ஒரு வரையறை உலகவாழ்வில் இல்லாதிருப்பினும், புலவா்கள் யாத்தமைக்கச் செய்யுட்களிலே இவ்வரையறைகள் காணப்படுகின்றன. இவற்றை நாடக வழக்கெனவும், நாடகப் புலவன் தானமைக்க நினைக்கும் காட்சிக்கேற்பக் களத்தைப் புனைந்தமைத்துக் காட்டுமாறு போலவே, புலவர்களும் காட்டிச் செல்கின்றனா். சிறுபான்மை உலகியலையும், பெரும்பான்மை புனைந்துரைகளையும் கொண்டு விளக்குவனவாகவே இச்செய்யுட்கள் அமைந்துள்ளன.

    திணை:

    திணை என்பது ஒழுக்கம் என்று பொருள்படும். ஐந்திணை என்பது ஐவகையான ஒழுக்கங்கள். இவை ஐந்தும் இல்வாழ்மக்கள் கடைப்பிடித்து ஒழுகவேண்டிய ஒழுக்கமுறையே ஆகும்.

    குறுந்தொகையும் குறிஞ்சியும்: 

    “கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
    காமஞ் செப்பாது கண்டது மொழிமோ….” (குறுந்: 2)

    இயைற்கைப்புணர்ச்சி புணர்ந்தவழி, தலைமகனை இயற்கைப் புணர்ச்சிக்கண் இடையீடுபட்டு நின்ற தலைமகன், தலைமகளை நாணின் நீக்குதன் பொருட்டு மெய்தொட்டுப் பயிறல் முதலியன அவள்மாட்டு நிகழ்த்திக்கூடி தனது அன்புதோன்ற நலம் பாராட்டியது. இறையனார் என்பது இங்குச் சிவபெருமானைக் குறிக்கும். சிவபெருமான் ஒரு புலவராய்த் தோன்றி, தருமி என்னும் அந்தணன் பொருட்டுப் பாடியது இப்பாடல்.

    மணமுடைய தேனை ஆராய்ந்து உண்டுவாழும் அழகிய சிறகுகளையுடைய தும்பியே! முற்பிறப்பில் பயின்றது இப்பிறப்பின் உரியதாகிய நட்பினையுடைய மயில் போன்ற சாயலினையும், வரிசையாய்ச் செறிந்துள்ள பற்களையும் கொண்ட இந்த அரிவையின் கூந்தல் நறுமணம் போன்றதொரு ஒப்பற்றமணம் நீ அறிந்த மலர்களில் உள்ளனவோ? பல மலா்கள்தோறும் சென்று அவற்றின் மணத்தை அறிந்துள்ள நீ, எனக்கின்பமான ஒன்றைக்கூறாது நீ துய்த்து அருந்திய மணமுடைய மலா் ஒன்று இருக்குமாயின் கூறுவாயாக.

    “நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
    நீரினும் ஆரளவின்றே சாரல்……( குறுந்: 3) 

    தலைமகன் சிறைப்புறமாக, அவன் வரைந்துகொள்வது வேண்டித் தோழி இயற்பழித்தவழித் தலைமகள் இயற்பட மொழிந்தது இப்பாடல் ஆகும். கரிய கொம்பினையுடைய குறிஞ்சிப் பூக்களைக்கொண்டு மிகுதியான தேனைத்தொடுக்கும் மலைப் பக்கத்தையுடைய நாட்டைச் சேர்ந்தவனோடு உண்டாகிய அரிய நட்பானது, சொல்லப்புகின் நிலத்தைக் காட்டிலும் அகலத்தால் பெரியது; நினைத்துப் பார்த்தால் வானத்தைக் காட்டிலும் உயா்வில் உயர்ந்தது. உள்ளே புகுந்து எல்லைகாணப்புகின் கடலைக் காட்டிலும் ஆழத்தால் அரிய அளவினது.     பெருந்தேன் இழைக்கும் குறிஞ்சி நிலத் தலைவனின் நட்பு, தலைவன் பிரிந்திருத்தலால் பயனில்லாது கழிவது குறித்துத் தோழி இயற்பழித்தவழி, தலைமகள் அதனை மறுத்துத் தலைமகனின் நட்பின் சிறப்பை உயர்த்திக் கூறினாள். (நிலத்தினும், வானினும், நீரினும் – உயர்வு சிறப்பும்மைகள்).

    “யாரும் இல்லைத் தானே களவன்
    தானவன் பொய்ப்பின் யான் எவன் செய்கோ…” (குறுந்: 25)

    வரைவு நீட்டித்தஇடத்துத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது.

    தலைமகன் வரைந்துகொள்ளாது களவினை நீட்டித்தவிடத்து ஆற்றாத தலைகள், ”தோழி! உணா்வார் எவருமிலர்; அவன் கூறிய சூளுரையை அவன் பொய்ப்பின் யான் என் செய்வேன்? அவன் மணந்தஅன்று ஆரலைப் பார்க்கும் குருகு இருந்தது எனக் கூறுதல்.”

    தலைமகளிடம் அவன் கலந்தநாளில் வேறு எவருமில்லை… தலைவன் தானே நிகழ்ச்சி நடந்த இடத்துச் சான்றாவான். அவன், தான்கூறிய அச்சூளுரையிலிருந்து பொய்ப்பின் நான் என்ன செய்வேன்? அவன் மணந்த அன்று தினையினது தாளைப் போன்ற சிறிய பசுமையான கால்களையுடைய கொக்கு, இடையறாது ஒழுகும் நீரின்கண் நீந்தும் ஆரல்மீனை உணவாகக் கொள்ளுவதற்குக் காத்திருக்கும்.

    சங்கஇலக்கிய நூல்களில் ஒன்றாகவும், பதினெண் மேல்கணக்கு நூல்களுள் ஒன்றாகவும் விளங்கும் குறுந்தொகை, சிறந்த நூலாகவும், குறுகிய நூலாகவும், தலைவன், தலைவி பற்றி செய்திகளை அழகாக எடுத்து இயம்பக்கூடியதாகவும் திகழ்கின்றது.

    பார்வை நூல்கள்:

    • குறுந்தொகை – புலவா் துரை. இராசாராம்
    • குறுந்தொகை ஒரு நுண்ணாய்வு – மனோன்மணி           சண்முகதாஸ்
    • புதியநோக்கில் தமிழ் இலக்கியவரலாறு – தமிழண்ணல்
    • தமிழ் இலக்கிய அறிவுக் களஞ்சியம் – இலக்கிய வித்தகர்                      செந்துரையான்
    • குறுந்தொகை மூலமும் உரையும் – புலியூர் கேசிகன்

    ***

    க.பிரகாஷ் எம்.ஏ, எம்பிஃல்,
    தமிழ்த்துறை
    தொழில்நுட்பக் களஆய்வுப் பணியாளர்
    பாரதியார் பல்கலைக்கழகம்
    கோயம்புத்தூர் – 46

     

    Share
  • நைல் நதி நாகரீகம், பிரமிடைக் காண வந்த பிரெஞ்ச் போர்த் தளபதி நெப்போலியன், சூயஸ் கால்வாய்த் திட்டம் – 10

     

    image1

     

    -சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா 

    பிரமிடுகள் காலத்தில் தோன்றிய கால்வாய்
    பெரோஸ், பெர்ஸியர் தோண்டிய கால்வாய்
    கிரேக்கர், ரோமர் கைவிட்ட கால்வாய்
    நெப்போலியன் திட்டம் துவங்கிய கால்வாய்
    பிரெஞ்ச் நிபுணர் இறுதியில் பூர்த்தி செய்த
    பெருநீளக் கடல்மட்ட சூயஸ் கால்வாய்.

    ++++++++

    ‘மகா பிரமிட் கூம்பகம் நான்கு திசை முனைகளுக்கு [Four Cardinal Points: North, South, East & West] ஒப்பி நேராகக் கட்டப் பட்டிருந்தது! கூம்பு வழியாக வரையப்படும் நேர்குத்து அச்சு [Meridian] பிரமிடை இணையாகச் சரி பாதி பிரித்தது! மேலும் அக்கோடு நைல் நதி பாயும் சங்கம அரங்கையும் [Nile River Delta Region] சரி பாதியாகப் பகுத்தது. ‘

    நெப்போலியன் தளவியல் வரைவுக் குழு [Napolean Survey Team (1798)]

    image2

     

    முன்னுரை: கி.மு.2650 ஆண்டு முதலே எகிப்தின் வல்லமை படைத்த கல் தச்சர்கள் பிரமிடுகள் [Pyramids] மற்றும் பலவித பிரம்மாண்டமான சிற்பப் பொறியியல் அற்புதங்களைப் படைத்ததற்குச் சான்றுகள் இப்போதும் அங்கே உள்ளன! நைல் நதியின் மேற்குக் கரையில் கட்டப்பட்ட பிரமிக்கத் தக்க பிரமிடுகள், இறந்தவரைப் புதைக்க அமைத்த கற்கோபுரங்கள்! நாற்புறச் சம கோணச் சாய்வு வடிவான பிரமிடுகள் கல் தச்சர்களின் வரைக் கணித ஞானத்தையும் [Geometrical], கூரிய நிபுணத்துவத்தையும் காட்டுகின்றன. சிற்பக் கலையும், ஓவியக் கலையும் உன்னத நிலையில் இருந்ததற்கு எகிப்தின் பிரமிட் கோபுரங்கள், கால வெள்ளம் அடித்துச் செல்லாதபடி நிலைத்த சரிதைகளாய் நிமிர்ந்து நிற்கின்றன! ஆனால் பெரோ மன்னர்கள் முதலில் தோண்டிய கடல் இணைப்புக் கால்வாய் பலமுறைச் சிதைந்து, பல்வேறு வல்லுநர்களால் பலவித வடிவங்களில் பலமுறை மாற்றமாகி இப்போது புது உருவம் பெற்றுள்ளது!

    image3

     உலகிலே நீண்ட சூயஸ் கால்வாயிக்கு நெப்போலியன் திட்டம்

    முதல் நைல் நதிக் கால்வாய் மூன்றாம் துத்மோஸிஸ் [Tuthmosis III] மன்னரால் தோண்டப் பட்டாலும், கி.மு. ஆறாம் நூற்றாண்டில் ஆண்ட மன்னன் பெரோ நெக்கோ [Pharaoh Necho] கட்டியதாகத்தான் சரித்திரச் சான்றுகள் கிடைத்துள்ளன. பின்னால் எகிப்தைக் கைப்பற்றிய பெர்ஸிய மன்னன் முதலாம் தாரியஸ் [Darius I] வெட்டப்பட்ட கால்வாயை முடிக்குமாறு உத்தரவிட்டதாக அறியப் படுகிறது. அந்தக் காலத்தில் கட்டிய கால்வாய், இரட்டை அமைப்பாடுகளைக் கொண்டது. முதலாவது, பெரிய பிட்டர் ஏரியை [Bitter Lake] சூயஸ் வளைகுடாவுடன் இணைத்தது; இரண்டாவது கட்டத்தில் பிட்டர் ஏரியை நீள நைல் நதிச் சங்கமப் பிரிவுகள் ஒன்றுடன் சேர்ப்பது. கால்வாயைக் கட்டும் பணியில் சுமார் 120,000 எகிப்திய பாமரர் மாண்டதாக அறியப்படுகிறது! புகழ்பெற்ற டாலமி காலத்தில் [Ptolemaic Era (323-30 B.C.)] கால்வாய் நீளமாக்கப்பட்டுச் சீரிய முறையில் இருந்ததாக வரலாறுகளில் உள்ளது. அதன் பின்னால் கால்வாய் சிதைவுற்றதை ரோமாபுரிப் பேரரசர் டிராஜன் [Roman Emperor Trajan (A.D.98-117)] சீர்ப்படுத்தினார்! பிறகு அரேபிய மன்னர் அமர் இபன்-அல்-ஆஸ் [Amr Ibn-Al-Aas] கால்வாயைச் செம்மைப் படுத்தினார்.

    image4

    எட்டாம் நூற்றாண்டுக்குப் பிறகு கால்வாய் மறுபடியும் செப்பமிட முடியாத நிலையில் சிதைந்து கிடந்தது! 1671 இல் புகழ்பெற்ற ஜெர்மன் கணித மேதை லெப்னிட்ஸ் [Leibnitz (1646-1716)] தனது எகிப்து விஜயத் திட்டத்தின் போது, பிரென்ச் மன்னர் பதினான்காம் லூயியிடம் [Louis XIV] கடல்களை இணைக்கும் அத்தகைய கால்வாயைப் பற்றி உரையாடியதாகத் தெரிகிறது. தற்போதைய கால்வாய் முயற்சியில் சுல்தான் மூன்றாம் முஸ்தபா [Sultan Mustafa III (1757-1773)], அடுத்து நெப்போலியன் ஆரம்பிக்க தள ஆய்வு வேலைகள் ஆரம்பமாயின. அவ்வாறு எகிப்து நாகரீகத்தில் பிறந்து, பல மன்னர்களின் வசப்பட்ட ஒரு பண்டைக் கால்வாய், பல்லாயிரம் ஆண்டுகள் தாண்டி கி.பி.1869 ஆம் ஆண்டில் பிரென்ச் நிபுணர்களால் புத்துயிர் பெற்றுப் பூர்த்தியானது ஒரு சுவையானப் பொறியியல் வரலாறு! ஈரோப்பிற்கும் இந்தியாவுக்கும் எகிப்து கால்வாய் வழியாக சுருக்குப் பாதை அமைக்க முதன்முதல் ஆலோசனை கூறியவர் பிரென்ச் அதிபதி நெப்போலியன்! நூறு மைல் நீளம், 200 அடி அகலமுள்ள சூயஸ் கால்வாய், ஐரோப்பாவில் ஏற்பட்ட தொழிற்புரட்சியின் விளைவாகப் பத்தொன்பதாம் நூற்றாண்டில், மனிதரால் படைக்கப் பட்ட மகத்தான ஒரு பொறியியல் பூதக் கால்வாயாகக் கருதப்படுகிறது!

    image5

    image6

    கி.மு.1920 ஆண்டில் எகிப்து பெரோஸ் மன்னர்கள் [Pharaos] காலத்திலே மத்தியதரைக் கடலையும், செங்கடலையும் கால்வாய் மூலம் இணைக்கும் முன்னோடிப் பணிகள் முதலில் ஆரம்பிக்கப் பட்டன என்று எகிப்து சூயஸ் கால்வாய்ப் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் டாக்டர் மம்தோவ் ஹம்ஸா [Dr.Mamdouh Hamza] அறிவிக்கிறார். டாக்டர் ஹம்ஸா நிலவியல் யந்திரப் பொறியியல் நிபுணர் [Civil Engineer, Soil Mechanics]. நீள நைல் நதியின் கடல் சங்கமப் பகுதியில் ஒரு கால்வாயை வெட்டி, இரண்டு கடல்களையும் சேர்த்ததாக வரலாறுகளில் அறியப் படுகிறது. முற்காலத்தில் ஈரோப்பிலிருந்து இந்தியாவுக்கு வர நைல் நதியின் வழியாகக் கப்பல்கள் முதலில் பயணம் செய்து, கால்வாய் மூலமாகக் கடலை அடைந்ததாகத் தெரிகிறது. அதன் பின்பு கால்வாய் கவனிப்பாரற்று அடுத்து கிரேக்க, ரோமாபுரி வேந்தர்களால் பல தடவைத் தோண்டப் பட்டு மீண்டும் புறக்கணிக்கப் பட்டது! எகிப்து நாடு அரேபியர் கைவசம் ஆன பிறகு, மறுபடியும் கால்வாய் தோண்டப்பட்டு, நிரப்பப் படாமல் பல்லாண்டுகள் கிடந்தது! பின்னால் கால்வாயில் நீர் நிரப்பப்பட்டது.

    image7

    எகிப்த் மீது படையெடுத்த நெப்போலியன்

    1798 மே மாதம் 19 ஆம் தேதி பிரெஞ்ச் மாவீரன் நெப்போலியன் போனபார்ட் தென் பிரான்ஸின் டொவ்லான் [Toulon] கடற்கரையிலிருந்து 328 கப்பல்களில் 35,000 படைவீரர்களுடன் எகிப்தைக் கைப்பற்றும் நோக்கத்துடன் கிளம்பினார். அப்போது நெப்போலியனுக்கு 29 வயது! பிரிட்டாஷ் இந்தியாவை அடுத்துப் பிடிக்க ஓர் பாதை அமைக்கவே நெப்போலியன் எகிப்தை முதலில் தன்வசப் படுத்தப் போர்தொடுத்ததாகத் தெரிய வருகிறது! மேலும் பிரெஞ்ச ஆதிக்கம் உலக அரங்கில் பட்டொளி வீசிப் பறக்க வேண்டும் என்ற பேராசையில் புறப்பட்டதாகும் வரலாறு கூறுகிறது! அந்தக் காலத்தில் எகிப்த் நாடு ஐரோப்பிய பேராசைப் போர்வாதிகளுக்கு ஒரு முக்கிய குறிவைப்பு நாடாகக் கருதப் பட்டது! பிரிட்டனுக்கும், இந்தியாவுக்கும் நடுப்பட்ட ராணுவக் குறுக்கு நாடாக எண்ணப் பட்டது! சிறப்பாக அப்படை எடுப்புக்கு சாவந்த் [Savants] எனப்படும் பிரெஞ்ச் ஞானிகள் 175 பேரைத் திரட்டி நெப்போலியன் தயார் செய்தார் என்று அறியப் படுகிறது! அவர்கள் யாவரும் எகிப்தின் பூர்வீக நாகரீகக் கலாச்சாரத்தை ஆழமாக அல்லது ஓரளவு அறிந்தவாராக இருந்தனர்! அவர்கள் மகா பிரமிட்கள், மற்ற எகிப்தின் பூர்வீகக் களஞ்சியங்களைத் தோண்டிக் காணும் பணிக்கு அழைத்து வரப்பட்டவர்!

    image8

    image9

    அப்போது எகிப்தை துருக்கியின் சுலதான் ஆண்டு வந்தார். ராணுவக் கண்ணோட்டத்தில் ஆராய்ந்தால், நெப்போலியன் எகிப்தியப் படையெடுப்பு ஒரு படுதோல்வி முயற்சி என்று சொல்லப் படுகிறது. பாலை வனத்தின் மணல் மீது தாங்க முடியாத தீப்பறக்கும் நடு வேனிற் காலத்தில் பிரெஞ்ச் படை போய் இறங்கியது! பிரமிடை நெருங்கிய பிரெஞ்ச் படையினரைச் சுமார் 10,000 எகிப்தியக் குதிரை வீரர்கள் [Mameluke Horsemen] தாக்கினர். அதே எகிப்தியப் படைகள்தான் கெங்கிஸ் கானுடன் [Genghis Khan] போரிட்டு எதிர்த்து நின்றவர். ஆனால் அந்த உள்நாட்டுப் படை வீரர்கள், பிரெஞ்ச் வீரர்கள் கூரிய துப்பாக்கி ரவைகள் முன்பு தாக்க முடியாமல் அடிபட்டுப் போயின! இரண்டு மணி நேரத்திற்குள் 10,000 எகிப்தியர் சுடப்பட்டு மடிந்தனர்! வடக்கே மேற்புறத்தில் வெற்றி பெற்றாலும், நெப்போலியன் படை தெற்கே கீழ்ப்பகுதியில், மாமிலூக் குதிரை வீரர்கணின் கொரில்லாச் சூழ்ச்சிப் போரில் தோற்றுக் கைதி செய்யப் பட்டார்! அதே சமயத்தில் பிரெஞ்சின் பெரிய கடற்படை பிரிட்டன் கடற்படைத் தளபதி நெல்ஸனால் பேரளவு சிதைந்து போய், நெப்போலியன் சிறைப் பட்டார்! 1801 ஆம் ஆண்டில் எகிப்த் பிரெஞ்ச் வசமிருத்து மீட்கப் பட்டது!

    image10

    நெப்போலியன் படையெடுப்பு எகிப்தின் புதையல் ஆய்வுகளுக்கு வழியிட்டது!

    பல நூற்றாண்டுகளாய் எகிப்தின் கலாச்சார நாகரீகம் ஐரோப்பியருக்கு ஒரு பெரும் புதிராகவே இருந்து வந்தது. பொதுவாக கிறிஸ்துவர்கள் எகிப்தில் அந்தக் காலங்களில் வரவேற்கப் படுவதில்லை! ஐரோப்பிய அறிஞர்கள் எகிப்தில் கால்வைப்பதற்கு முன்பு, கிரேக்க ரோமானியர் எகிப்தின் களஞ்சியங்களை எடுத்துச் சென்று, துல்லியமற்ற அறிக்கைகளை வெளியிட்டனர்! நெப்போலியன் எகிப்த் நாடு முழுவதையும் கைப்பற்ற முடியாமல் போனாலும், அவர்தான் பூர்வீக எகிப்தியக் கலாச்சார நாகரீகத்தை வெளி உலகுக்கு முதன்முதல் அறிவித்தவர்! அதன் பிறகுதான் விஞ்ஞான முறையில் எகிப்தியர் பிரமிட்களும், ஆலயங்களும் ஆராயப் பட்டன! எகிப்தின் படை யெடுப்பைத் திட்டமிட்ட நெப்போலியன்தான், அதன் நாகரீகம் சரிவர ஆராய்ந்து பதிவு செய்யப் படவில்லை என்று கண்டறிந்தவர்! நெப்போலியன் அழைத்துச் சென்ற சாவந்த் ஞானிகள், படைவீரர் நுழைந்து சென்ற தளங்கள் எல்லாம் பின்தொடர்ந்து, பூதளவியல், வரலாறு, கலாச்சாரம், தொல்பொருள் சம்பந்தப் பட்ட, ஏராளமான தகவல்கள் [Description de l ‘Egypte] சேர்த்ததாக அறியப் படுகிறது! 12 நூலடுக்குகள் [Volumes] கொண்ட அவற்றில் ஏராளமான படங்கள் (910 Plates) வரையப் பட்டிருந்தன! 1809-1828 ஆண்டுகளில் அவை யாவும் சீரிய முறையில் பதிப்பில் வந்தன.

    image11

     

    (முற்றும்)
    https://youtu.be/Zj4O560cHaU
    https://youtu.be/MJ85Fkz-VaE

    தகவல்:

    1. Guide to Places of the World Egypt By: Reader ‘s Digest (1987)
    2. Atlas of the World History By: Harper Collins (1998)
    3. The Ancient World, Quest for the Past (1984)
    4. How in The World By: Reader ‘s Digest (1990)
    5. Age of the Pyramids, Egypt ‘s Old Kingdom By: National Geographic (January 1995)
    6. Finding A Pharaoh ‘s Funeral Bark & Riddle of the Pyramid Boats By: National Geographic (April 1988)
    7. The History of Art for Young People By: H.W. Janson.
    8. Ancient Egypt, Who Built the Pyramids, How old Are the Pyramids, PBS & WGBH Web Site (1997)
    9. The Sphinx of Egypt – The Great Sphinx [www.nmia.com/~sphinx/egyptian_sphinx.html] (May 23, 2002)
    10.  Ramesses II Temple & Nafertari Temple at Abu Simbel Egypt [Several Web Sites]
    11.  The New American Desk Encyclopedia, Abu Simbel (1989)
    12.  Britannica Concise Encyclopedia, Abu Simbel Temples (2003)
    13.  Egyptian Art & Paintings [Several Websites]
    14.  Egypt: Art & Architecture [Several Websites]
    15.  Egyptian Art [ http://www.artchive.com/artchive/E/egyptian.html%5D From ‘The Story of Art ‘ By: Ernest Hans Gombrich.
    16.  History of Western Art, Nature in Egyptian Art By: Lynn Salerno University of North Carolina [http://home.sprynet.com/~bdsalern/egyptart.htm]
    17.  Egyptian Dancers [From Websites].
    18. The Art of the Amarna Period By: Magaera Lorenz.
    19. Egyptian Architecture: Pyramids, Tombs, Temples, Statues & Monuments. [Articles: 1992, 1996]
    20. Egyptian Architecture, Pyramids & Temples [www.oldandsold.com/articles10/fameous_buildings-1.shtml]
    21. The Geometry & Mathematics of the Great Pyramid By: Karl-H [Homann ‘s Manuscript (1996)]
    22. Secrets of the Great Pyramid By: Peter Tompkins (1978)
    23. History Topic: An Overview of Egyptian Mathematics.
    24. The Ancient Egyptian Number System By: Caroline Seawright (March 19, 2001)
    25. Parameter A & The Egyptian Decans By: Andrew Bourmistroff.
    26. The Great Pyramids – The Library of Xalexandria.
    27. Ancient Egyptian Astronomy By: David Noll.
    28. Time, The Egyptians & The Calendar By: Deborah Houliding.
    29. Napoleon ‘s Expedition to Egypt [1798]
    30. The Age og Enlightment: Napoleon ‘s Invasion of Egypt (Secrets of the Great Pyramids) By: Peter Tomkins.
    31. Suez Canal Thinnai Article [http://www.thinnai.com/sc0422043.html] By the Author.
    1.  http://napoleon.lindahall.org/learn.shtml
    2.  http://www.historyofwar.org/articles/wars_french_egypt.html
    3.  https://en.wikipedia.org/wiki/French_campaign_in_Egypt_and_Syria[April 16, 2016]

    **************************

    1. Jayabarathan [jayabarathans@gmail.com]  (April 19, 2016)  [R-1]

     

    Share
  • சங்க காலத்தில் பாலியல் வன்முறையும் தண்டனையும்

    -பா. சிவக்குமார்

    திருமணம் செய்வதாகக் கூறிப் புணர்தல், மானபங்கப்படுத்துதல், மயக்க மருந்து கொடுத்து, ஆயுதங்களைக் காட்டிப் பயமுறுத்திக் கற்பழித்தல், குழுவாகக் கற்பழித்தல் போன்ற பலவகையான பாலியல் வன்முறைகள் தற்காலத்தில் நிகழ்ந்து வருவதை நாளேடுகளிலும், ஊடகங்களிலும் பரவலாகக் காண்கிறோம். இந்தப் பாலியல் வன்மம் தொன்றுதொட்டே பெண்கள்மீது நிகழ்த்தப்பட்டு வந்துள்ளது.  இப்பாலியல் வன்முறை சங்கச் சமூகத்தில் எவ்விதம் ஊடுருவி இருந்துள்ளது என்பது குறித்து இக்கட்டுரை ஆய்கிறது.

    பொதுவிடங்களில் பெண்கள்மீது நிகழ்த்தியவை:

    தெருவில் தன் அன்னையுடன் நடந்து செல்லும் பெண்ணின் கையைப் பிடித்து  இழுக்கும் வன்செயலில் சங்ககாலத் தலைவன்  ஈடுபட்டுள்ளதை,

    “இடைநெடுந் தெருவிற் கதுமெனக் கண்டென்
    பொற்றொடி முன்கை பற்றினன் ஆக
    அன்னாய் என்றெனன் அவன்கைவிட் டனனே…”           (அகம்.356:5-7)

    என்ற பாடலிலிருந்து ஒரு பெண்ணின் அனுமதியின்றி நடுத்தெருவில் கையைப் பிடித்திழுக்கும் வன்செயலில் அக்காலத் தலைவன்  ஈடுபட்டுள்ளதை அறியமுடிகிறது.  மேலும், ஒரு பெண் (தலைவி) தன்னை விரும்பாத பொழுதும் ஆண் (தலைவன்) அவளது கையினைப் பிடித்துக் கட்டித்தழுவி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளதை குறிஞ்சிக்கலிப் பாடல் வெளிப்படுத்துகின்றது.  இதனை, கலி.62:1-11-ஆம் பாடலிலிருந்து பெண்ணின் விருப்பமின்றியே வன்புணர்வில் ஈடுபட்ட தலைவனின் வன்மம் வெளிப்படுகின்றது. நீர் அருந்துபவர்கள், நீர் தன் தாகத்தைத் தணிக்கும் என்று அருந்துவார்களே அன்றி நீருக்கு நன்று என்று நினைக்க மாட்டார்கள். அது போன்றே தலைவியைப் புணர்வதால் எனக்கு இன்பம் கிடைக்கும் என்பதால் புணர்ந்தேன் அவளது விருப்பம் தேவையில்லை என்று கூறும் தலைவனின் கூற்றிலிருந்து, பாலியல் வன்முறையில் ஈடுபடும் ஆண்களின் மனநிலை இப்பாடலில் பிரதிபலிப்பதைக் காணமுடிகின்றது. மேலும் நின்னை நெருங்க அணைத்துத் தழுவுதல் இனிதாக இருந்ததால் அவ்வாறு தழுவிக் கொண்டேன் என்று கூறும் தலைவனின் வார்த்தைகளிலிருந்து அவனின் ஆண் அதிகார  மையமும், தன் உடலியல் தேவை மட்டுமே மனதில் கொண்டு, பெண்ணை உணர்வற்ற பொருளாகவே பார்த்துள்ளமையையும் உணரமுடிகின்றது. அக்காலச் சமூகச் சூழலில் பெண்களுக்குப் போதுமான பாதுகாப்பற்ற நிலையினையே இப்பாடல் எடுத்துரைக்கின்றது.

    பாலியல் வன்புணர்வு:

    சங்க இலக்கியத்தில் தலைவன் ஒருவன், தான் மணந்து கொள்வதாகக் கூறி யாருக்கும் தெரியாமல் இன்பம் துய்த்துவிட்டு, பின்பு தலைவியை யாரென்றே தெரியாது என்று கூறியுள்ளதை, குறுந். 25ஆவது பாடல் விளக்குகிறது. மேலும், தற்போது இருப்பது போன்று உடற்பரிசோதனை, விந்தணுப் பரிசோதனை, மரபணுக்கள் (ஜீன்கள்) மூலமாகக் குழந்தையின் தந்தையினை அடையாளம் காணும் அளவிற்கு அக்காலத்தில் மருத்துவ வளர்ச்சி இல்லையாதலால் சாட்சிகள் மூலமே குற்றங்களுக்குத் தீர்வு வழங்கியுள்ளனர். எனவேதான் தலைவி தாங்கள் இன்புறும் இடத்தில் ‘குருகுமுண்டு’ என்று குருகினைச் சாட்சியாக்குகிறாள். ஆனால், அக்குருகும் ஒழுகுநீரில் ஆரல்மீன்களைப் பிடிக்கும் தன் வேலையில் கவனமாக இருந்தது. ஆகையால் தலைவன் என்னுடன் பேசிய மொழிகளையோ புணர்ந்ததையோ கண்டு, கேட்டிருக்க வாய்ப்பில்லை. ஒரு வேளை கண்டு, கேட்டு இருந்திருந்தாலும் அதனால் பேசமுடியாது. சாட்சிகள் யாரும் இல்லையாதலால், இனி தலைவன் தானே தன் குற்றத்தை ஏற்றுக் கொண்டு தண்ணளி செய்ய வேண்டுமே தவிர எனக்கு வேறுவழியில்லை என்று புலம்புவதிலிருந்து சங்கச் சமூகத்தில் பெண்களைப் புணர்ந்து மணம் செய்ய மறுத்த பாலியல் வன்செயல்கள் நடந்துள்ளதைக் காணமுடிகின்றது.

    நச்சினார்க்கினியர் இப்பாடலை, “அவன் புணர்வு மறுத்தல்” என்னும் தொல்காப்பியக் களவியல் சூத்திரத்திற்குச் சான்றாக்கியுள்ளார். தன்னை ஏமாற்றிய தலைவனைச் ‘சான்றோன் இல்லை’ என்று அவனிடம் கூறிவருவோம் என்று தோழியை அழைப்பதாக நற். 365 ஆவது பாடல் அமைகிறது. செவிலித்தாய், தன் மகளின் காதலன் வேறு யாரையாவது மணந்துவிடுவானோ என்று ஐயுற்ற நிலையினை ஐங். 109ஆவது பாடல் எடுத்துரைக்கின்றது. எனவே சங்கச் சமூகத்தில் பாலியல் வன்முறைகள் இருந்துள்ளமை தெளிவாகிறது.

     பாலியல் வன்செயல்கள் பெருகியதால் ஏற்பட்ட சிக்கல்களும் பிரச்சினைகளும் திருமணம் எனும் கரணச்சடங்கைச் செய்யும் வழக்கத்தை ஏற்படுத்தியுள்ளதை,

    “பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்,
    ஐயர் யாத்தனர் கரணம் என்ப”

    என்ற தொல்காப்பிய நூற்பா அக்காலச் சமூகத்தில் நிலவியிருந்த பாலியல் வன்முறைக்குச் சான்று பகர்கின்றது.

    பாலியல் வன்புணர்வும் தண்டனையும்:

    சங்ககாலத்தில் பாலியல் வன்புணர்வில் ஆடவர்கள் ஈடுபட்டுத் தண்டனை பெற்றதற்கான பதிவு சங்க இலக்கியத்தில் உள்ளது. ஒரு அழகிய பெண்ணின் நலத்தைக் கெடுமாறு கவர்ந்து இன்பம் துய்த்துவிட்டுச் சென்ற அறம் அற்றவனைச் சபையோர் முன்பு தலைவி நிறுத்துகின்றாள். அவன் இவளை யாரென்றே தெரியாது என்று பொய்யுரைக்கின்றான். அவன் உரைப்பது பொய் என்பதைத் தகுந்த சாட்சிகளின் வாயிலாக அறிந்த ஊர்ப்பெரியவர்கள் அப்பெண்ணின் நலத்தை அழித்த அவனை மரத்தில் கட்டிவைத்து தலையில் நீற்றினை (சுண்ணாம்பு நீர்) ஊற்றுமாறு தண்டனை வழங்கியுள்ளதை,

    “திருநுதற் குறுமக ளணிநலம் வவ்விய
    ………………………………………
    ………………………………………
    வீறுசா லவையத்து ஆர்ப்பினும் பெரிதே”                   (அகம்.256:16-21)

    என்ற பாடலின் வழி சங்கச்சமூகத்தில் நிலவியிருந்த பாலியல் வன்புணர்வினையும் அதற்கு அளித்த தண்டனையும்  அறியமுடிகிறது.

    தொல்காப்பியர் பெருந்திணையின் குறிப்புகளாக, ஏறிய மடல் திறம், இளமைதீர் திறம், தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம், மிக்க காமத்து மிடல் (தொல். அகத். 51) என நான்கினைக் குறிப்பிடுவார். இந்நூற்பாவிற்கு ஷாஜகான் கனி “ஒருத்தியின் காதலைப் பெறாத ஒருவன் ஊரறிய மடலேறி அவளுக்குப் பழி ஏற்படுத்தி வலிந்து அவளை இணங்க வைக்கும் சூழ்ச்சித் திறம், தனக்கு இளமைப் பாலியலுணர்வு தீர்ந்து போய்விட்ட மலட்டு நிலையிலும் ஒருத்தியைப் பாலியலாகத் துன்புறுத்துதல், பிறன் மனைமீது தேற்றமுடியாத காமத்தில் வேட்கையுறுதல், மிக்க காமத்தில் காணும் பெண்களிடமெல்லாம் வன்புணர்ச்சியை நாடுதல் ஆகிய நான்கும் பெருந்திணையின் அடையாளம் ஆகும் என்பது இந்நூற்பாவின் உண்மைப் பொருளாகும். இந்நான்கு வகைப் பெருந்திணையும் பாலியல் வன்முறை (sexual violence) எனத் தோன்றுகிறது” என்பதிலிருந்தும்  பாலியல் வன்முறை சங்கச் சமூகத்தில் ஊடுருவி இருந்துள்ளது என்பது தெளிவாகிறது.

    ***

    துணை நின்ற நூல்கள்

    1. சிவலிங்கனார், ஆ., (தொ.ஆ.), தொல்காப்பியம் உரைவளம் – பொருளதிகாரம், களவியல், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 1994.
    2. சுப்பிரமணியன், ச.வே., தொல்காப்பியம்; (விளக்கவுரை), மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், 2008.
    3. சோமசுந்தரனார், பொ.வே., (உ.ஆ.), குறுந்தொகை, கழகவெளியீடு, சென்னை, 2007.
    4. நச்சினார்க்கினியர், (உ.ஆ.), கலித்தொகை, கழக வெளியீடு, 2007.
    5. துரைசாமிப்பிள்ளை, ஒளவை. சு. (உ.ஆ.), ஐங்குறுநூறு, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், 1978
    6. பின்னத்தூர் நாராயணசாமி அய்யர், நற்றிணை, கழக வெளியீடு, சென்னை, 2007
    7. வேங்கடசாமி நாட்டார், ந.மு., வேங்கடாசலம் பிள்ளை. ரா., அகநானூறு, மணிமிடைப்பவளம், கழக வெளியீடு, 2007
    8. வேங்கடசாமி நாட்டார், ந.மு., வேங்கடாசலம் பிள்ளை. ரா., அகநானூறு, நித்திலக்கோவை, கழக வெளியீடு, 2008
    9. ஷாஜகான் கனி, முனைவர், வெ.மு., திணை வரலாறு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 2012

    ***

    பா. சிவக்குமார்,
    முனைவர்பட்ட ஆய்வாளர்,
    தமிழ்த்துறை,
    பாரதியார் பல்கலைக்கழகம்,
    கோவை, 641 046.

     

     

     

    Share
  • சங்ககாலப் பெண் புலவர்களின் படைப்புத்திறன்

    பா. மஞ்சுளா

    images (1)

    சங்க இலக்கியம் உலகின் செம்மொழித் தகுதிபெற்ற உயர்வான இலக்கியம். அதில் காணப்படும் கருத்து வளம், கற்பனைச் சிறப்புத்தன்மை பொருந்திய பாடல்களின் செறிவு படிப்போர் உள்ளத்தைக் கவரும் வண்ணம் எக்காலத்திலும் அழியாப் புகழ்பெற்றது.

    ” இயற்கையிலே கருத்தாங்கி இனிமையிலே
    வடிவெடுத்து “…. என்று .திரு.வி.க. கூறுவார்.

    சங்கம் என்ற சொல்லுக்கு அவையம், புணர், கூட்டு, தொகை, கழகம், தமிழ்நிலை, என அகராதி விளக்கம் தரும். சங்க காலத்தில் வாழ்ந்த புலவர்கள் பல்வேறு காலகட்டத்தில் பாடல்களை இயற்றியுள்ளார். அக்காலத்தில் பெண்பாற் புலவர்கள் பலர் இருந்தனர். அவர்களின் புலைமைச் சிறப்புமிக்கது. வெள்ளிவீதியார், ஔவையார், நப்பசலையார் போன்றவர்கள் குறிப்பிட வேண்டிய பெண்பாற் புலவர்கள்.

    வெள்ளிவீதியாரின் பிரிவாற்றாமை பாடல்…

    தலைவியின் மனநிலை:

    தலைவி தலைவன் தன்னோடு இல்லாத அந்த மாலைப்பொழுதில் அவனுடைய நினைவால் வாடுகிறாள். தன்னுடைய மனத்தை வெளிப்படுத்த முடியாமல் துன்புறுவதை

    சோறு சொரி குடவயின் கூம்புமுகை அவிழ

    வளிபரந்து ஊட்டும் விளிவில் நாற்றமொடு

    மையிரும் பனைமிசைப் பைதல உயவும்

    அன்றிலும் என்புறம் நரலும்… (நற்றிணை – 335)

    என்னும் பாடலில் மூலம் சந்திரன் விண்ணகத்து தோன்றும். அலையினை உடைய கடலும் அடங்காது முழங்கும். கடல்நீர் கரையில் மோதிப் பெயரும் பலவகையான பூக்களை உடைய கடற்கரைச் சோலையில் தாழை முள்ளை உடைய இலையுடன் விளங்குகிறது. அது சோற்றைச் சொரிகின்ற கூம்பிய அரும்பினை மலரச் செய்யும். காற்று அப் பூமடலுள் புகுந்து மணத்தைப் பரப்பும். கரிய பெரிய பனைமரத்தில் இருந்து அன்றில் ஒலிக்கும். இவையன்றி விரலால் தடவி வருத்தமுற விருப்பதைச் செய்யும் நல்ல யாழும் நடுச்சாமத்தில் என் உயிர் உய்யாத நிலையில் இசைத்து நிற்கும். இவற்றில் எனது அன்புநோய் மிகப் பெரியது. அதனை நீக்க எனது காதலர் அருகில் இல்லையே என புலம்புவதாக அருமையான பிரிவாற்றாமைப் பாடல் பாடியுள்ளார் .

    வள்ளுவர் இதனை…

    காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
    மாலை மலரும்இந் நோய்.

    என்னும் குறளில் பிரிவால் வருகின்ற நோய் காலையிலே அரும்பாக இருந்து பகல் எல்லாம் மொட்டாக முதிர்ந்து பின்பு மாலையில் மலர்கின்றது என்கிறார்.

    நாரையைத் தூது விடுதல்…

    சிறு வெள்ளாங் குருகே! சிறு வெள்ளாங் குருகே!

    துறைபோக அறுவைத் தூமடி அன்ன

    நிறங் கிளர்தூவிச் சிறுவெள்ளாங் குருகே (நற்றிணை ….70)

    என்னும் வரிகள் வெண்மையான நாரையே! நீ
    எங்கள் ஊரில் உள்ள நீர்த்துறைகளுக்குச் சென்று
    கெளிற்று மீனைத் தின்னுகிறாய். என்னுடைய
    தலைவன் இருக்கும் ஊருக்குச் சென்று வருகிறாய்.
    அவர் பிரிவால் நான் வாடுகிறேன் என்று சொல்லலாம்.
    ஆனால், எங்கள்மீது அன்பு இருந்தும் மறந்து விடுகிறாய்
    என்று தலைவன் பிரிவால் தலைவி நாரையைத் தூது
    விடுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

    வெள்ளிவீதியார் கணவனைப் பிரிந்து வாழ்ந்தவர்.
    கணவனைப் பல இடங்களில் தேடி அலைந்தவர்.
    இதனை…

    ஆதிமந்தி போலப் பேதுற்று
    அலந்தனென் உழல்வென் கொல்லோ… (அகநானூறு …..45)

    என்னும் பாடலில் தோழியிடம் தலைவர் தன்னை விட்டுப்பிரிந்து, வாகைமரத்தின் முற்றிய காய் நெற்றுகள் கூத்தரின் பறைபோல விட்டுவிட்டு ஒலிக்க, வெப்பம் மிகுதியான பெரிய காட்டுவழியாக மக்கள் நடமாட்டம் இல்லாத நிலையில் யானைகளைக் கொல்லும் புலி திரிகின்ற வழியைக் கடந்துசென்றார். அவர் பிரிவால் என்மீது பசலை பரவியது. காவல் மரமாகிய புன்னையை அன்னி என்பவன் வெட்டி வீழ்த்தியபோது ஆரவாரம் ஏற்பட்டது. அதைக்காட்டிலும் ஊர்மக்கள் எழுப்பிய அலர் எங்கும் பரவியது. ஆட்டனத்தியின் காதலனைக் கடல்கொண்டு சென்றபோது அவள்பெற்ற துன்பம்போல நானும் பெற்றேன் .

    பசந்தாள் இவள்என்பது அல்லால் இவளைத்
    துறந்தார் அவர்என்பார் இல் (குறள்.1188)

    தலைவன் பிரிவால் பசலை நிறம் அடைந்தாள் என்று பழி சொல்வது அல்லாமல், இவளைத் தலைவன் விட்டுப் பிரிந்தான் என்று கூறுபவர் ஊரில் இல்லையே… என்று வருந்துகின்றாள்.

    தொல்காப்பியர் பிரிவின் நிலைகளைக் கூறும்போது,

    ஓதல் பகையே தூதிவை பிரிவே (தொல்-971:பொருள்) என்கிறார்.

    இக்காலத்தில் பெண்பாற் புலவர்கள் தங்களின் எண்ணக் கருத்துகளையும் தலைவன்மீது கொண்ட காதலையும் அழகியமுறையில் பதிவுசெய்து உள்ளார்கள். இதில் வெள்ளிவீதியார் பாடல்களின் மூலம் பழங்கால மக்களின் பழக்கவழக்கம் மற்றும் ஆட்டனத்தி ஆதிமந்தி வரலாற்று நிகழ்வுகளை அறியும் வாய்ப்பாக பாடல்கள் அமைந்துள்ளன. ஒருபெண் என்பவள் தலைவன் தன்னை விட்டுப்பிரியும் நேரத்தில் அவள்படும் துயரத்தைப் பாடல் மூலமாகக் கொண்டுவந்து பசலைநோயின் தன்மையைக் கண்முன்னே கொண்டுவரும் அவரது வாழ்வியல் அனுபவத்தை விளக்கும்விதம் மிகவும் அருமையான ஒன்றாகும்.

    ஔவையின் விநாயகர் அகவல்: 

    சித்தர் இலக்கியத்தில் குறள் தனியானதோர் பெருமை பெற்று விளங்குவது போலவே, அவ்வை இயற்றிய விநாயகர் அகவலும் பெருமைபெற்று விளங்குகிறது. குறட்பாவை ஆசான் என்றும் அகவலை அன்னை என்றும் அழைப்பது சித்தர் மரபாகும். இரண்டு நூல்களுமே சித்தர்களின் ஞானத்தை உள்ளடக்கிய கவிக்களஞ்சியங்களாக இருப்பினும் முன்னதை உபதேசிக்கிற குரு என்றும் பின்னதைப் பக்திஅமுதம் ஊட்டும் அன்னை என்றும் சித்தர்கள் போற்றி வந்திருக்கிறார்கள்.

    பகுப்பு முறைகள்:

    அகவல் 72 வரிகள் உடையது. தோத்திர வழிபாடு செய்யும் பக்தர்களில் பலரும் தங்கள் பாராயணத்தில் முக்கிய இடத்தை விநாயகர் அகவலுக்குத் தருகிறார்கள். இது ஒரே பாடலாக யாக்கப்பட்டு, தொடக்கம்முதல் முடிவுவரைத் துதி்ப்பாடலுக்குள்ளே ஞானத்தைக் குழைத்துத் தருகிறது. அகவல் எனினும் மனம் ஒடுங்கிய நிலையில் ஓதுதல் எனப் பொருள்படும். சொல்லுதல் அல்லது மொழிதல் என்பதைவிட அகவுதல் என்ற சொல்லுக்கு இப்படி ஒரு சிறப்பு உண்டு.

    சிறப்பு:

    விநாயகருடைய பெருமையை எடுத்துச் சொல்வதோடு, யோகிகள் வழிபடுகின்ற ஞானச் சின்னங்களை வரையறைசெய்து வகுத்துக்கூறுவது விநாயகர் அகவலின் தனிப்பெரும் சிறப்பாகும்.

    திருமுருகாற்றுப்படை என்னும் நக்கீரர் படைப்பிலும் இந்த நுட்பங்கள் நன்கு பயின்றுவருவதையும் புலவர் உலகம் நன்கு அறியும்.

    சித்தர்களின் ஞான நுட்பம் அகவலில் இருந்தாலும், வேறு தனிச்சிறப்பான தன்மையும் இதற்கு உண்டு.

    முதலாவது சிறப்பு மொழிஎளிமை; இரண்டாவது இசைப்பண்பாகும்; மூன்றாவது அதனுடைய மந்திர ஆற்றலாகும்.

    சீதக் களபச் செந்தாமரைப்பூம்
    பாதச் சிலம்பு பலஇசை பாட

    திருவடியைச் செந்தாமரை என்று அழைப்பது ஓர்
    உயர்ந்த தமிழ் மரபாகும். தாமரை சேற்றில் மலர்வது;
    சேற்றில் மலர்ந்தாலும் செம்மலராகப் பூப்பது இம்மலரின்
    சிறப்பாகும். இதுவே வெண்டாமரையாகும்போது
    சின்னமான வெண்மையாக மலர்கிறது. அழுக்கிலிருந்து அழகும், அள்ளலிருந்து தூய்மையும் பிறக்கின்றது என்பது தத்துவம். இதன் உட்பொருள், எல்லா அழகும் அழகின்மையிலிருந்து உதித்து மேலெழுந்து நிற்கிறது என்ற தத்துவம் உள்ளடக்கம் உடையது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். இந்த ஒரு வரியே இவ்வளவு சிறப்புடையது என்றால் முழுவதும் எவ்வளவு அழகான உட்பொருள் கொண்டது!

    விநாயகர் அகவல் பிறந்த கதை:

    ஔவையார் விநாயகருக்குப் பூசை செய்யும்போது இடையில் சேரமான் பெருமாள்நாயனார் வெள்ளை யானையின் மீது திருக்கயிலாயம் போகும்போது ஔவையார் மீது கொண்ட பற்றின் காரணமாக அவரையும் அழைக்க, அவர் நான் விநாயகர் வழிபாடு முடிந்துதான் வருவேன் என்று கூற அவர்கள் இவரை விட்டுவிட்டுச் சென்றார்கள். ஆனால் அகவலை முழுவதும் கேட்ட விநாயகர், ஔவையாரைத் தனது துதிக்கை மூலம் தூக்கி ஒரே நிமிடத்தில் கயிலை சேர்த்து விட்டார். நாயனாருக்கு முன்பே ஔவையார் கயிலாயம் சென்றார்.

    நிறைவாக…

    சங்க காலப் பெண்களின் படைப்புகள் காதல் மட்டுமன்றி ஞானத்தையும் உள்ளடக்கமாய் உடையவை. அறம், பொருள், இன்பம், வீடுபேறு உடையது நமது தமிழர் இலக்கியம். அதில், காதலைப் போற்றும் பெண்புலவர்கள் ஞானத்தையும் வியப்பூட்டும் ஒன்றாகப் படைத்து, அதில் மெய்ஞ்ஞானமாகிய பக்தியைப் படைத்தவிதம் மிகவும் அருமையான ஒன்றாகும்.

    Share
  • இலக்கியச்சித்திரம்- இனிய பிள்ளைத்தமிழ்- 16

    மீனாட்சி பாலகணேஷ்

    சதுரானனனைச் சிறையிட்ட சதுரன்

    மாலை மயங்கி இரவு வந்துற்றது. கதிரவன் மேற்குத்திசையில் மலையின்பின் மறைந்தும்விட்டான். ஆகாயவீதியில் சின்னஞ்சிறு முல்லையரும்புகள் கொடிகளில் மலர்வதனைப்போல் விண்மீன்கள் மின்னிமின்னி முகிழ்த்தன. முழுநிலவு கதிரவனிடத்திலிருந்து தான் இரந்துபெற்ற ஒளியால் மஞ்சள்நிற மதியமலராகத் தானும் பூத்து நிற்கின்றது. சூரியனிடமிருந்து காந்தி பெற்ற சூரியகாந்திப் பூப்போல காணப்படுகிறது எனலாமா? இவற்றினாலெல்லாம் உவகைகொண்ட இயற்கையன்னை தன் இளம் குழந்தையான தென்றலை மலர்களின் நறுமணத்தை ஏந்தி, எங்கணும் ‘குறுகுறு’ நடையிட்டு உலவிவரச் செய்கின்றாள்!

    இதனால் முன்னிரவு தொடங்கியமை அனைவராலும் உணரப்படுகின்றது! உலகமே ஒடுங்கி அமைதியாகத் துயில் கொள்ளும் பொழுது இதுவாம். இன்னும் முதிர்ச்சியடையாத பறவைக்குஞ்சுகள், பகற்பொழுதெல்லாம் ஓடியாடித் தாய்ப்பறவைகள் கொண்டுவந்த உணவினை ஆவலாக வாய்திறந்து திறந்து உண்ணுகின்றன. தாய்ப்பறவைகள் இரவு துயில்கொள்வதற்காக முடங்கும் கூடுகளில் இவ்விளம் பார்ப்புகளும் தாய்ப்பறவைகளுடைய சிறகுகளினடியில் பாதுகாப்பாகச் சேர்ந்து ஒடுங்குகின்றனவாம். பகல்பொழுது தோறும் இன்னிசை முழங்கும் வரிகளையுடைய வண்டுகளும் துயிலச்சென்றன- எங்கு தெரியுமா? தாமரைமலர்களின் கதவுகளை அடைத்துக்கொண்டு அவை உறங்கச்சென்றனவாம்- (முளரிக் கதவமடைத்து வரிவண்டும் துயின்றன)! உலகமே இரவுப்பாடகனின் தாலாட்டிற்குச் செவிசாய்த்து மயங்கி உறங்கலாயிற்று.

    மாலை வந்துற்றதென்று ‘எதிராசர்களெ’ன அறியப்படும் முனிபுங்கவர்கள் அந்திநேரத்திற்கான மந்திரங்களையோதி தாம் செய்யவேண்டிய அந்திக்கடன்களையும் வழிபாடுகளையும் இயற்றினர். பகலும் இரவும் சந்திக்கும் மாலைப்பொழுது ‘சந்தி’ என ஆன்றோர்களால் கூறப்பட்டது; அந்த (சந்தி)அந்திப்பொழுதினில் வேதமந்திரங்களை ஓதி முனிவர்கள் இறையை வழிபட்டனர். இதனை சந்திக்கும்நேரத்து வழிபாடு- ‘சந்தியாவந்தனம்1’ எனப் பெரிதும் போற்றுவர். அதுமட்டுமல்லாது, அம்முனிவோர், இறைவனையே தமது இதயக்கமலமாம் உள்ளத்திலும் இருத்திச் சிந்தித்தவாறே கண்ணிமைகளை மூடி உடலால் செய்யத்தக்க நடவடிக்கைகளை ஒடுக்கி, துயிலத்துவங்கினர்.

    இந்த முருகன். ஆற்றல்மிக்கவன் எனக் கருதப்பட்ட பிரமனையே பிரணவ மந்திரத்தின் பொருளை அவன் அறிந்திராமையால், சிறையிலிட்டான். ஆகவே அவன் சதுரானனுக்கும் சதுரனாகின்றான். இந்த எட்டிக்குடிவாழ் முருகன் உறங்காமல் விழித்தபடிக்குத் தொட்டிலில் கிடக்கிறான். அவளை உறங்குமாறு வேண்டித் தாலாட்டுக்கூறுகின்றாள் அன்னை என்கிறார் புலவர்.

    யாரிந்தப் புலவர் பெருமகனார்? இவர் தாம் கோவைக் கவியரசு நடேச கவுண்டர். அவர் இயற்றியது சொல்நயமும் பொருள்நயமும் அணிநலமும் மிகுந்த எட்டிக்குடி முருகன் பிள்ளைத்தமிழாகும். அதிலமைந்த ஒரு தாலப்பருவத்துப் பாடலிதுவாம்.

    ராகம்- நீலாம்பரி:

    கதிரோன் குடபால் மலைமறைந்தான்
    ககனத் தடத்திலுடு வரும்பின
    கதிர்மா மதிய மலர்பூத்துக்
    கமழ்பூந் தென்றலுல விடுமால்
    முதிரா விளம்பார் பினந்தாயர்
    முடங்குஞ் சிறையி லொடுங்கினபூ
    முளரிக் கதவ மடைத்து
    வரிமுழங்கும் வண்டுந்துயின்ற னவால்
    எதிரா சர்களந்தியின் மறைக
    ளியம்பிக் கடன்க ளியற்றியபின்
    இதயக் கமலத் துணையிருந்தி
    இமைகள் பொருந்தி யொடுங்கினர்காண்
    சதுரா னனனைச் சிறையிட்ட
    சதுரா தாலோ தாலேலோ
    தமிழா கரவெட் டிக்குடிவாழ்
    தலைவா தாலோ தாலேலோ
    (எட்டிக்குடி முருகன் பிள்ளைத்தமிழ்- தாலப்பருவம்- கவியரசு நடேச கவுண்டர்)

    அழகான சித்திரம்போன்ற இயற்கை வருணனைகள். தாமரை கூம்புவதையும் வண்டின் இயக்கம் நிற்பதையும் அவை உறக்கத்திலாழ்வதெனக்கூறி அழகுறப் புனையப்பெற்ற பாடல்வரிகள் உள்ளத்தில் களிப்பை மிகுவிக்கின்றன. பறவைப்பார்ப்புகள் தாயின் சிறகிலொடுங்கி உறங்குவதை நாம் மனக்கண்ணில் கண்டே இன்புறலாம்! ‘முளரிக் கதவமடைத்து வண்டுகளும் உறங்குகின்றன’ என்பதும் மிக நயமான மிகைப்படுத்தப்படாத சொற்பிரயோகம். இவ்வாறு பிள்ளைத்தமிழ் பாடும் இக்கவிஞர்களை வித்தாரகவி என அழைப்பது முற்றிலும் பொருத்தமானதே!

    ‘மலர்ந்து மலராத பாதிமலர்போல வளரும் விழிவண்ணமே’ எனப்பாடிய கவிஞரும் இவர்களில் சேர்த்திதானல்லவா?

    c47b71c7-9b48-4902-8b13-1a8b7b7983fe
    (1இந்துக்களில் ஒரு சாரார் ஒருநாளில் மூன்றுமுறை சந்தியாவந்தனம் செய்வார்கள்; மந்திர உச்சாடனம், பிராணாயாமம், மனதை ஒருமைப்படுத்தும் தியானம் ஆகிய மூன்று முக்கியமான செய்கைகளைக்கொண்டது சந்தியாவந்தனம். மந்திர உச்சாடனமாக காயத்திரி மந்திரம் உச்சரித்தல் புத்திக்கூர்மையை வளர்க்கும்; பிராணாயாமம் மன அழுத்தத்தினைக் குறைக்கும்; காலையில் மித்திரனையும், பகலில் சூரியனையும், மாலையில் வருணனையும் குறித்துச் சந்தியாவந்தனம் செய்யப்படும்).

    *****

    தொட்டிலில் கண்வளர்த்தப்பட்ட குழந்தை உறங்காமல், உறங்கப் பிடிக்காமல் சிணுங்குகின்றது; அழுகின்றது. தாய், தாலாட்டு எனும் விதத்தில் அக்குழந்தை வளர்ந்து பெரியவனாகிச் செய்யப்போகும் அரும் பெருஞ்செயல்களையும், அவனுடைய தற்போதைய குறும்புகளையும் இன்னும் பல நிகழ்வுகளையும் பற்றிப்பாடுகிறாள்.

    இவ்வுலகை முறையாக, அழகாக, திருத்தமாக ஈன்றவள் அன்னை பராசக்தி; அவள் தன்னுடைய குழந்தையான முருகனுக்கு முலைப்பால் அருத்துவிக்கிறாள்; பாலுண்ட குழந்தையின் வயிறு நிரம்பியுள்ளது; அதனால் அவன் உள்ளத்தில் மகிழ்ச்சி நிரம்பியுள்ளது; அவனை அலைகள் நிறைந்த கடலில் சேரும் சரவணப்பொய்கையில் உள்ள அழகான ஒரு பூந்தொட்டிலில் கண்வளரக் கிடத்தினாள் அன்னை!

    6f2ecd0a-5704-4cba-a806-f633a1f299a1
    ஆனால் என்னாவாயிற்று? குழந்தை உதடுகள் நெளிய, சிறியதாகத் துவங்கி, பெருங்குரலெடுத்து அழவாரம்பித்து விட்டான்! ஏனெனில், ஆறுமுகப்பெருமானான அவன் ஆறுதாமரை மலர்களில் ஆறுகுழந்தைகளாக வளர்ந்தவன்; ஆறு கார்த்திகைப்பெண்டிர் அவனுக்குப் பாலூட்டி வளர்த்தனர். அவர்கள் ஊட்டிய பால் மருந்தினைவிட இனியதாம். அன்னை பாலூட்டியது போதாதென இக்குழந்தை இப்போது அந்த அறுவரின் முலைப்பாலிற்காக ஏங்கி அழுகின்றானாம்;

    இக்குழந்தை சாமானியக் குழந்தையல்லவே?

    அவன் அழுதால் வானவர்கள் எனும் தேவர்களின் பகைவனான சூரபதுமன் முதலான அரக்கர்களும் உடன் அழுகின்றார்களாம்!! இது என்ன புதுக்கதை? அதாவது முருகன் இவர்களை வதைத்த காரணத்தால் அச்சங்கொண்டு சூரர்கள் அழுகின்றனர் எனக் கொள்ளவேண்டும். மாயங்கள் நிறைந்த ஒரு பெரிய மலையும் அழுகின்றதாம்; அதுவென்ன? கிரவுஞ்சமலையை வேலெறிந்து சிதைத்தவன் அன்றோ நமது குமரப்பெருமான்? ஆகவே குமரனின் குரல்கேட்ட போதிலேயே அம்மலையான அரக்கன் அச்சங்கொண்டு ஓலமிட்டுக் கதறுகின்றான் எனப்புலவர் கற்பனை செய்துள்ளார். அழகாக இல்லை?

    இவர்கள் அனைவரையும், மலை, அரக்கர்கள் அனைவரையும் விருப்பம்கொண்டு இவ்வுலகில் படைத்த மாயையும் அவர்களுக்கு முருகனின் கையால் நேர்ந்த கதியினைக் கண்டு வருந்தி அழுகின்றாளாம்.

    இந்தச் செயல்களெல்லாம் செய்த குமரனான பச்சிளம்மகவோ விம்மி விம்மி அழுகின்றதாம். இது அவன் செய்யும் மாயை!! அன்னையின் அணைப்புக்காக ஏங்கி அழும் மானுடக்குழந்தைகள் போலவே முருகப்பிரானான இக்குழந்தையும் ஏங்கியழுகின்றானாம்! அறுவர் முலைப்பாலுக்கு ஏங்கியழும் குழந்தையாகக் கற்பனை செய்து ‘அழாதே குழந்தாய்’ எனக் கூறுகிறார் புலவர்.

    மேலும் இக்குழந்தை ‘வேதன்’ எனும் வேதங்களை ஓதும் பிரமனையும் சினந்து அவனது அறியாமைக்காகத் தலையில் குட்டி தளைபூட்டிச் சிறையிலிட்டு மிகுந்த காவலில் வைத்து அழவைத்தவனல்லவோ? ‘ இவனை இவ்வுலகுக்குத் தந்த தந்தையாகிய சிவபிரானுக்கும் குருவாகி பிரணவத்தின் பொருள் கூறி உபதேசித்த சுவாமிநாதன் அல்லவா இவன்? தாலேலோ; இவன் குமரன்- தமிழ்த்தெய்வமான, தமிழனான முருகன்- அழகன்- எட்டிக்குடிவாழ் தலைவன்; தாலேலோ,’ எனப் போற்றுகிறார் கவியரசு நடேச கவுண்டர் அவர்கள்.

    திருந்தப் புவனங்கள் ஈன்றவள்தன்
    திருமா முலையுண்டு அகங் குளிர்ந்து
    திரைவாரி திசேர் சரவணத்தில்
    செவ்விப் பூந்தொட்டிலில் அமர்ந்து
    மருந்திலினிய அறுவர்முலை
    மாந்த விரும்பி வாரியழ
    வானோர் பகையாம் சூரரழ
    மாயம் பெருத்த குன்றமழ
    விரும்பிப் படைத்த மாயையழ
    விம்மிவிம்மி யழுங் குழந்தாய்
    வேதனழ வன்றளை பூட்டி
    மிகுங்கா வலிடை விட்டவனே
    தருந்தந் தைக்குக் குருமொழிசொல்
    சாமி தாலோ தாலேலோ
    தமிழா கரவெட் டிக்குடிவாழ்
    தலைவா தாலோ தாலேலோ
    (எட்டிக்குடி முருகன் பிள்ளைத்தமிழ்- தாலப்பருவம்- கவியரசு நடேச கவுண்டர்)

    இதே கருத்தினைக் கொண்ட ஒரு பாடல் அருணகிரிநாதரின் திருப்புகழிலும் காணப்படுகிறது. இவ்வழகிய கருத்துக்களை உள்வாங்கித் தமது பாடல்களிலும் வெளிப்படுத்தியுள்ளார் கவியரசு அவர்கள்.

    திருந்தப் புவனங்கள் ஈன்றபொற் பாவை திருமுலைப்பால்
    அருந்திச் சரவணப் பூந்தொட்டில் ஏறி அறுவர்கொங்கை
    விரும்பிக் கடலழக் குன்றழச் சூரரழ விம்மியழும்
    குருந்தைக் குறிஞ்சிக் கிழவனென்று ஓதும் குவலயமே
    (அருணகிரிநாதர்- கந்தரலங்காரம்- 5ம் பாடல்)

    பெரும் புலவோர்கள், காலத்தால் வேறுபட்டாலும், ஒரேவிதமான கருத்துக்களைத் தமது பாடல்களில் வெளிப்படுத்துவர்; இது அவர்களின் கல்வி, கருத்து, சிந்தையின் மேன்மையைப் புலப்படுத்துகின்றது. பிற்காலத்தில் தமிழை விரும்பிப் பயிலும் நமக்கெல்லாம் கருத்திற்கினிய விருந்தாகி எண்ணங்களையும் ஏற்றப்படுத்துகின்றது. உயர்ந்த இலக்கியத்தின் தன்மை இதுதான் என அறுதியிட்டுக் கூறலாம்.

    இன்னும் தொடர்ந்து இதுபோலும் பாடல்களைப் படித்து மகிழலாம்.

    மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
    {முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
    கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
    நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
    தமிழ்த்துறைத் தலைவர்.}

    *****

    Share
  • இலக்கியச்சித்திரம்- இனிய பிள்ளைத்தமிழ்- 15

    மீனாட்சி பாலகணேஷ்

    அசைந்தொசிகின்ற பசுங்கொடி!

    52b4e2a2-574f-4199-bdde-3b4d4e5a0038

    மேகக்கூட்டங்கள் சாளரங்கள் வழியே எட்டிப்பார்த்துப் புன்னகைக்கும் நான்மாடக்கூடல் எனப்படும் மதுரைமாநகர். அங்கு மலயத்துவச பாண்டியனின் அழகுபொலியும் திருமாளிகை. நாமும் உள்ளேசென்று பார்க்கலாமா? அரசன் விரைந்து தன் பட்டத்தரசி காஞ்சனமாலையின் அந்தப்புரத்திற்குச் சென்றுகொண்டிருக்கிறான். ஆம்! தன் செல்வத்திருமகளைக் காணும் ஆவலில்தான் அங்கு செல்கிறான். தடாதகை எனும் அக்குழந்தை நவரத்தினங்கள் பதித்த தரையில் தவழ்ந்தாடிக் கொண்டிருக்கிறாள். கண்ணுற்ற மன்னனின் உள்ளம் உவகைப் பெருங்கடலில் நீந்துகிறது. கையை உயர்த்தி வளைத்து அக்குழந்தையை, “இங்கே என்னிடம் வா கண்ணே,” என்றழைத்தபடி, அன்னத்தூவியால் நிறைக்கப்பெற்ற ஒரு மென்மையான ஆசனத்தில் அமர்கிறான் மலயத்துவச பாண்டியன்.

    குழந்தை தன் தந்தையிடம் தாவிக் குதித்தோடித் தவழ்ந்து செல்கிறாள். தன்வயிறு குளிர இன்னமுதூட்டிய தாயின் வயிறு குளிரும்படி, அமுதனைய இனிய தண்மையான பசுங்குதலை மழலைமொழியைப் பேசுகிறாள் குழந்தை மீனாட்சி. தன்னருகே தவழ்ந்தோடிவந்த அருமை மகளை வாஞ்சையுடன் வாரியெடுத்து மார்போடணைத்து உச்சிமுகருகிறான் அரசன். அவனுடைய திருமார்பில் தனது குட்டிப் பொற்பாதங்களைப் பதித்து நிற்கிறாள் இச்சிறு பெண்குழந்தை. அதனால் அவன் மார்பில் அணிந்துள்ள குங்குமக்குழம்பானது அந்தக் குட்டிப்பாதங்களில் படிகின்றது. காணும் அரசி காஞ்சனமாலைக்கும், மற்றும் பணிப்பெண்டிருக்கும் உள்ளமும் உடலும் ஒருங்கே சிலிர்க்கின்றன. பாடலைப் பயிலும் நமக்கே மெய்ப்புளகம் உண்டாகின்றது எனில் அருகே இருந்து பார்த்து அனுபவித்தவர் எவ்வளவு பெரியதவம் புரிந்தவராவர் என அறியவொண்ணுமோ? 

    மலயத்துவச பாண்டியன் பெரிய வலிமைவாய்ந்த தோள்களை உடையவன்; அரச கம்பீரம் மிக்கவன்; அவனுடைய நீண்ட கைகள் முழங்கால்கள்வரை படிகின்றன; அந்தக் கரத்தைப் பற்றியவண்ணம் மீனாட்சி எழுந்து நிற்கிறாள். அமர்ந்திருக்கும் தந்தையின் மார்பின் குங்குமச்சேற்றினை அளைந்து, அவன் கரத்தைப்பிடித்து எழுந்துநின்று அவனுடைய தோள்களில் ஏறமுயல்கிறாள். அவை எத்தகைய தோள்கள்? இசை (புகழ்) உலவுகின்ற தமிழாலாகிய மாலையை அணிந்துள்ள பருத்ததோள்! ஆகா! எத்தனை கருத்துச்செறிந்த சொற்கள் இவை!

    தமிழுக்கு அன்னை மீனாட்சி; முத்தமிழ் வளர்ந்தது மதுரையம்பதியில்; முச்சங்கம் வைத்துத் தமிழை வளர்த்தவர்கள் பாண்டியமன்னர்கள். ஆகவே பாண்டிய மன்னனான மலயத்துவசனின் தோள் புகழ்மிக்க தமிழாலாகிய மாலைகளை அணிந்த தடந்தோள் எனப் புலவர்பெருமானார் குமரகுருபரரால் பெருமையுடன் வருணிக்கப்படுகின்றது.

    தோளில் ஏறிக்குழந்தை தந்தையினுடைய பிடரியில் அழகுற அமர்ந்து கொள்கிறாளாம். இவ்வயதுக்குழந்தைகள் தந்தையின் கழுத்தினைக் கட்டிக்கொண்டு இவ்வாறமர்ந்தவண்ணம் ஆடுவார்கள். மீனாட்சியும் அவ்வாறே ஆடுகின்றாளாம்! அவளுடைய பச்சைப்பசேலென்ற மரகதத்தினையொத்த திருமேனியின் பசுமையான ஒளி ததும்பிநிறைந்து அந்த இடத்தையே, அறையையே, அரசமாளிகையையே நிறைக்கின்றது! கொற்கையின் முத்துக்கள் போல, அவளுடைய திருவாயில் சின்னஞ்சிறு பற்கள் முளைக்கத் துவங்கியுள்ளன. சிவந்தவாயில் தெளிந்தநிலா போலப் புன்னகை பரவியரும்புகின்றது. அழகாகத் தந்தையின் கழுத்திலமர்ந்து செங்கீரை ஆடுகிறாள் குழந்தை மீனாட்சி! அவள் தென்னன் எனும் புகழ்பெற்ற மலயத்துவச பாண்டியனுக்கும் அழகிய பொன்மலை எனப்படும் இமயத்தின் மன்னனான இமவானுக்கும் ஒப்பற்ற மகளாக விளங்குபவள்.

    இவ்வாறெல்லாம் மீனாட்சியை அழகுற விளக்கிப் பாடுபவர் குமரகுருபரரே அல்லாது யாரால் இயலும்? கேட்பவர் உள்ளம்களிகூர, செவிகளில் அமுதம்னிறைய, சிந்தையில் அன்புமீதூரக் கண்களில் கொற்கையின் முத்துக்கள்போல் நீர்முத்துக்கள் பெருகிச் சொரியவைக்கும் அழகான செங்கீரைப்பருவப்பாடல் இதுவாகும்.

    இன்றுவரையும் தனக்கு ஈடிணையற்ற அழகான பிள்ளைத்தமிழ்ப் பிரபந்தம் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் என்பதனால் ஒவ்வொரு தமிழனும் பெருமை கொள்ளவேண்டும்.

    உண்ணிலா உவகைப் பெருங்களிதுளும்பநின்
    றுன்றிருத்தாதைநின்னை
    ஒருமுறைகரம்பொத்தி வருகென அழைத்திடுமுன்
    ஓடித்தவழ்ந்துசென்று
    தண்ணுலாமழலைப் பசுங்குதலை அமுதினிய
    தாய்வயிறுகுளிரவூட்டித்
    தடமார்ப நிறைகுங்குமச்சே றளைந்துபொன்
    தாள்தோய்தடக்கைபற்றிப்
    பண்ணுலா வடிதமிழ்ப் பைந்தாமம்விரியும்
    பணைத்தோள்எருத்தமேறிப்
    பாசொளிய மரகதத்திருமேனி பச்சைப்
    பசுங்கதிர்ததும்பமணிவாய்த்
    தெண்ணிலா விரியநின் றாடும்பசுந்தோகை
    செங்கீரை ஆடியருளே
    தென்னற்கும் அம்பொன்மலைமன்னற்கும் ஒருசெல்வி
    செங்கீரை ஆடியருளே

    (மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்- செங்கீரைப்பருவம்- குமரகுருபரர்)

    *****

    இந்த செங்கீரைப் பருவத்தில் சிற்றில் சிதைத்தல் நிகழ்ச்சியும் இடம் பெறுகின்றது. ஆச்சரியமாக இருப்பினும், அழகு திகழ அமைந்த இப்பாடல், சிறு குழந்தைகளுக்கிடையேயான ஒரு விளையாட்டைப் பாடும்முகமாக, உலகியல், மானுட உளவியல், தெய்வத் தத்துவம், உலக உருவாக்கம் எனும் தொடர்ந்து நடக்கும் பிரபஞ்சத்தின் இயற்கைச் சுழற்சி முதலியனவற்றை உட்பொருளாகக் கொண்டு திகழ்கின்றது.

    சிறு குழந்தைகள் வளர்ந்து வரும் பருவத்தில், ஆண் குழந்தைகள் சிலர் முரட்டுத்தனமான விளையாட்டுகளை விளையாடுவர். மற்றக் குழந்தைகளின் விளையாட்டுப் பொருள்களை உடைப்பது, அவர்கள் கட்டும் மணல் அல்லது சிறு மண்வீட்டைக் காலால் எற்றி உதைத்துச் சிதைப்பது, அவர்கள் பின்னலைப் பிடித்திழுத்து அவர்களைத் துன்புறுத்துவது என்பன இவற்றுள் சில.

    உளவியல் ரீதியாக இதைக் காணப் போனால், நாம் வாழும் மானிட சமுதாயத்தை ஆதாரமாகக் கொண்டே இவை நிகழ்கின்றன எனலாம். அன்னையர் சமைப்பது, வீட்டிற்குரிய பணிகளைச் செய்து வீட்டை நன்முறையில் பராமரிப்பது, தமது குழந்தைகளைப் பேணுவது போன்றவற்றை நோக்கியே சிறுமியரும் தாய்மாரின் அடிச்சுவட்டில் சிற்றில் இழைத்து மணல் சோறாக்கி, குழந்தைகளைப் பேணும் விளையாட்டை விளையாடுவர். சிறுவர்களும் தந்தை, அண்ணன் முதலானோர் உடல் வலிமை தேவைப்படும் செயல்களைச் செய்வது போலத் தாமும் செய்ய முயல்வர். இவையே, சிற்றில் சிதைத்தல், சிறுபறை முழக்குதல், சிறுதேர் உருட்டல், என்ற விளையாட்டுகளாகப் பரிணமித்ததோ என்னவோ!

    உலகங்களையே சிறிய வீடாக உருவாக்கி விளையாடும் சிறுமியாக மீனாட்சியன்னை உருவகிக்கப் படுகிறாள். இவ்வாறு அவள் பெருமையைப் பேசுமிடத்து, சிற்றில் சிதைத்தல் நிகழ்ச்சி இடம் பெற்றுள்ளது. அன்னை உருவாக்கும் அழகிய சிற்றிலையும் ஒருவன் சிதைக்க இயலுமா? அவ்வாறு செய்யத் துணிந்த அவன் யார்? அவன் ஒரே ஒருவன் தான்- அவனே அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் நிறைந்த தலைவனான சிவபிரான்.

    இந்தப் பாட்டைக் கண்டு மகிழலாமா?

    சிறுமி மீனாட்சி சிற்றில் இழைக்கின்றாள்; எவ்வாறு? முதலில், நெடிய சக்கரவாள மலையை எல்லா உலகங்களையும் வளைத்து நிற்கும் சுவராக அமைக்கிறாள். எட்டுத் திக்கிலும் எட்டு மலைகளை இந்தச் சுவர்களுக்குப் பொருத்தமான அடைசுவர்களாக நிறுத்துகிறாள். அடுத்து மேருமலை எனப்படும் தூணை நடுவில் நிலைநிறுத்துகின்றாள். ஆகாயமாகிய விண்ணின் உச்சியை மூடி, சூரியன், சந்திரன் ஆகிய இரண்டு ஒளிவிளக்குகளைப் பொருத்திவிடுகிறாள். முழுதும் எழுந்தெழுந்து மோதும் ஊழிக்கால வெள்ளத்தில் கழுவப்படும் புவனங்களே அவளுடைய பழைய பாத்திரம் பண்டங்கள்; அவற்றை வரிசையாக அடுக்கி வைத்து, புதுக்கூழான இனிய அமுதத்தைச் சமைக்கிறாள். இவ்வாறு பலமுறை தாயாகிய மீனாட்சி சலிப்பின்றிச் செய்து வருகிறாள்.

    அவற்றை அழித்த வண்ணமாக இருக்கிறான் பித்தனான சிவபிரான். அவன் ஒரு முற்றவெளியான தில்லையில், சிதம்பரத்தில் திரிகின்றவன்; ஊமத்தம்பூவை அணிந்திருக்கும் பெரும்பித்தன்; கூத்தன் அவன் அழித்ததுடன் நில்லாது மீனாட்சியின் முன்நின்று கூத்தாடுகின்றானாம்!

    வழக்கமாக இத்தருணத்தில் சிறுமியர் என்னசெய்வார்கள்? “எமது சிற்றிலைச் சிதையேலே,” என வேண்டுவார்கள்.

    (உ- ம்) திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ்.
    ‘கூவிப் பரிந்து முலைத்தாயர்…
    …………………………………..
    ஆவித்துணையே வழியடிமை
    அடியேம் சிற்றில் அழியேலே
    அலைமுத் தெறியும் திருச்செந்தூர்
    அரசே சிற்றில் அழியேலே,’ என வேண்டுவர் சிறுமியர்.

    அல்லது சினம்கொண்டு கூச்சலிடுவார்கள்; இல்லாவிடில் அழுவார்கள். ஆனால் மீனாட்சி என்னசெய்கிறாளாம்? இவ்வாறெல்லாம் செய்யும் கூத்தனான சிவபிரானை வெறுக்காது, நாள்தோறும் மீண்டும்மீண்டும் அவற்றை எடுத்துப் பொறுமையாக வரிசையாக அடுக்கி, பெரிய பழைய அண்டத்தை மூடுகின்ற சிறுவீடு கட்டிவிளையாடிய வண்ணம் இருக்கிறாளாம்! இவ்வாறு விளையாடுகின்ற ஒப்பற்ற இளமையுடன் கூடிய பச்சைப் பெண்பிள்ளையே! செங்கீரை ஆடி அருளே!’ என வேண்டுகிறார் குமரகுருபரர்.

    தாயான மீனாட்சி (பராசக்தி) உலகத்தை அடிக்கடி ஆக்குதலையும் அவற்றைச் சிவபிரான் அடுத்தடுத்து அழித்தலையும் ஆகியசெய்கைகள் சிறுமியர் சிற்றில்இழைத்தலும். சிறுவர்கள் அவற்றை அழித்தலும் ஆகிய செய்கைகளாக உருவகித்துக்கூறப்பட்டன. மானிடப்பெண்கள் வீட்டிற்கு வேண்டியவற்றைச் செய்வதுபோல, எல்லா உலகங்களையும் படைக்கும் பராசக்தியும் தன் கடமைகளாக இவற்றைச்செய்கின்றாள். அவற்றைத் திரும்பத்திரும்ப அழித்துத் திருவிளையாடல் புரிகிறான் சிவபெருமான்.

    எற்றுபுனல் என்பது அலைமோதும் ஊழிப்பெருவெள்ளமாகும். இதில் அண்டங்களைக் கழுவிஎடுத்து அன்னை புதுக்கூழாகிய இன்னமுதைப் படைக்கின்றாள். இவ்வாறாக உலகை உருவாக்குவதையே மீனாட்சி சிற்றில்இழைப்பதாகப் புலவர் கற்பனை செய்கிறார். உன்மத்தம்கொண்டு பித்தனாகிய கூத்தபிரான் மீண்டும்மீண்டும் சிதைக்கிறான். இவ்வாறு உலகஉருவாக்கமும் அழிவும் மாறிமாறி வருவது சுட்டப்படுகிறது. அவை மீனாட்சி அம்மையின் சிற்றில்உருவாக்கமாகவும் ஈசனின் சிற்றில்சிதைத்தலாகவும் அமைந்துள்ளன.

    ஆண்பால் பிள்ளைத்தமிழில் ஒரு தனிப்பருவமாகப் பாடப்பெறும் சிற்றில்பருவம் இப்பாடலில் குறிப்பிடப்படுகின்றது.

    இறைவனின் படைத்தலும் காத்தலும் கரத்தலும் அழித்தலும் அருளுதலும் ஆகிய ஐந்தொழில்கள் ஓயாது நடை பெறுவதை தத்துவ விளக்கமாக இப்பாடல் அழகுறக் காட்டுகிறது. அதுவும் சிவபெருமான் தான் செய்யும் திருவருள் தொழில்களைத் தனது திருமேனியாக விளங்கும் சக்திமூலமாகவே செய்தருள்கிறான் என்பது மறைபொருளாக விளங்குகிறது எனக் கொள்ளலாம்1. சிவபிரான் சிற்றில் சிதைப்பது என்ற சிறு விளையாட்டை பிரபஞ்சப் பெருநடனத் தத்துவத்தைப் பொதிந்து நமக்கு குமரகுருபரனார் அருளியுள்ளார் என்றே தோன்றுகிறது. படிக்கப் படிக்கப் புதுக் கருத்துக்களைச் சிந்தையில் ஊற்றெடுக்க வைக்கும் தெய்வப் பாடல்கள் இவை.

    ( 1சிவபிரான் சிதைத்த சிற்றில்- மீனாட்சி பாலகணேஷ்- 8 அக்டோபர் 2014- தமிழ் ஹிந்து இணையதளம்)

    சுற்றுநெடு நேமிச் சுவர்க்கிசையஎட்டுச்589b9f74-8541-4f10-b0ff-9400a1312f52
    சுவர்க்கால் நிறுத்திமேருத்
    தூணொன்று நடுநட்டு வெளிமுகடுமூடியிரு
    சுடர்விளக் கிட்டுமுற்ற
    எற்றுபுன லிற்கழுவு புவனப்பழங்கலம்
    எடுத்தடுக் கிப்புதுக்கூழ்
    இன்னமுத முஞ்சமைத் தன்னைநீபன்முறை
    இழைத்திட அழித்தழித்தோர்
    முற்றவெளி யில்திரியும் மத்தப்பெரும்பித்தன்
    முன்னின்று தொந்த மிடவும்
    முனியாது வைகலும் எடுத்தடுக்கிப்பெரிய
    மூதண்ட கூடமூடும்
    சிற்றில்விளை யாடுமொருபச்சிளம் பெண்பிள்ளை
    செங்கீரை ஆடியருளே
    தென்னற்கும் அம்பொன்மலைமன்னற்கும் ஒருசெல்வி
    செங்கீரை ஆடியருளே
    (மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்- செங்கீரைப்பருவம்- குமரகுருபரர்)

    *****

    9e840919-9334-41f2-a810-22874180b793
    ஒருகாலை மடக்கி, மற்றொருகாலை நீட்டி, இருகைகளையும் தரையில்பதித்தபடி, குழந்தை தவழ்ந்தாடுகிறது. இளஞ்செடியொன்று தென்றலில் ஆடுவதுபோல அழகுற ஆசைந்தாடுகிறாள் குழந்தை. பார்ப்பவர் உள்ளங்கள் பாசத்திலும் பரவசத்திலும் தாமும் இசைந்தாடுகின்றனவே!

    குழந்தையின் முகம் வெண்ணிலவுபோல அழகானமுகம்; அதில் புன்னகை எனும் நிலாக்கீற்று தோன்றி அசைந்தாடுகிறதாம்; படுத்துக்கிடந்த ஒரேநிலையிலிருந்து குழந்தை புரண்டெழுந்து இப்பொழுது மெல்ல நகரக் கற்றுக்கொண்டு விட்டது. ஆகவே உற்சாகமாக அறையின் எல்லாப்பக்கங்களிலும் செங்கீரையாடித் தவழ்ந்தோடி வருகின்றது. அக்குழந்தை செங்கீரையாடும்போதில் என்னவெல்லாம் ஆடியதாம் பார்க்கலாமா?

    தாய் குழந்தையின் தலைமயிரை வாரிமுடித்து உச்சிக்கொண்டையாக்கிக் கட்டியுள்ளாள்; அந்த முடிச்சூழியமனது அதிலணிந்த அணியுடன் ஆடுகிறது. வளைந்த அழகிய புருவங்கள்- ஒருபெண் வளர்ந்தபின் அழகுமங்கையாகத் திகழப்போகிறாள் என்பதனை அவளுடைய பச்சிளம் பருவத்திலேயே கூறிவிட இயலும். அவ்வாறே மீனாட்சியின் புருவங்கள் கொடிபோல் வளைந்து காணப்படுகின்றன. அதனுடன் அவளுடைய நெற்றியில் அணிவிக்கப்பட்ட சுட்டியும் நெறிந்து அசைந்தாடுகின்றது; அடுத்து மீன்களின் போரைக் காண்கிறோம்- போர்செய்கின்ற கண்களாகிய மகரமீன்கள், அவற்றுடன் பொருதும் மகரவடிவிலான இரு காதணிகளுடன் ஆடுகின்றன.

    அன்னையின் இக்கண்கள் செய்யும் போரைப்பற்றி எல்லாக் கவிஞர்களும் வகைவகையாகப்பாடி வைத்துள்ளனர். அதைப்பற்றியே ஒரு ஆய்வுக்கட்டுரை எழுதிவிடலாம்! இப்போதைக்கு ஒன்றே ஒன்று- ‘கட்கணை துரக்கும் கரும்புருவ வில்லொடொரு கைவில் குனித்து நின்ற’ எனும் ஊசற்பருவத்துப்பாடல் வரிகளை நினைவுகூர்வோம்2. கையில் வில்லேந்தி சிவபிரானை இமயாசலத்தில் போருக்கழைத்தவள் தடாதகையான மீனாட்சி. அவர் நேரில்வந்ததும், ‘இவரே தன்கணவன்,’ என்றறிந்து நாணமடைகிறாள். ஓரக்கண்களால் கணைதொடுக்கும் நோக்கினைச் செலுத்தியவண்ணம் கையிலேந்திய வில்லினைத் தாழ்த்திப்பிடித்து தலைகுனிந்து காதலன்முன்பு நிற்கிறள். மிக அழகான பாடல் இது.

    செங்கீரையாடும் குழந்தை மீனாட்சியிடம் திரும்ப வருவோம். அவள் நூபுரம் எனும் அணிஇடப்பெற்ற காலை நீட்டி, மற்றொருகாலை மடக்கித் தவழுவதால் காலில் உள்ள கிண்கிணி எனும் மற்றோர்அணி ‘கிண்கிண்’ எனும் இனியஒலியை எழுப்புகிறதாம். ஆடை அணிவிக்கப்பட்டுள்ள கொடிபோலும் இடையானது துவண்டு தளர்ந்து ஆடுகிறதாம். வயிறு சரிகின்றது; கொப்பூழ் மறைந்துவிளங்கும் கருக்கொண்ட ஆலிலைபோலும் வயிற்றில் உலகிலுள்ள அசையும், அசைவற்ற பொருட்கள் அனைத்தும் ஆடுமாறு செங்கீரை ஆடுக! உலகம் உய்ய முடிசூடியருளிய மீனாட்சியம்மையே செங்கீரையாடுக! என அன்னையர் வேண்டிக் கொள்வதாக இப்பாடல் அமைந்துள்ளது.

    அன்னை பராசக்தி எல்லாப்பொருட்களிலும் கலந்துறையும் தெய்வம். அசையும் அசையாப்பொருட்கள் அனைத்தும் அவளாலேயே அவளாணைப்படி இயங்குகின்றன. ஆகவே அவள் செங்கீரையாடும்பொழுதில் அனைத்தும் ஆடுகின்றன. இது பேரானந்தம் பெருகப் பக்தியில் விளைந்த பாடல். குழந்தையும் தெய்வமும் இரண்டறக் கலந்துவிட்ட பாடல். அன்னை பராசக்தி புலவர்வாக்கில் நின்று தானே இயற்றிவைத்ததெய்வப்பாடல்.
    ( 2 இலக்கியச்சித்திரம்-4- வல்லமை மின்னிதழ்).

    முகமதி யூடெழு நகைநில வாட
    முடிச்சூ ழியமாட
    முருபுரி வக்கொடி நுதலிடு சுட்டி
    முரிப்பொ டசைந்தாட
    இகல்விழி மகரமும் அம்மகரம்பொரும்
    இருமக ரமுமாட
    இடுநூ புரவடி பெயரக் கிண்கிண்
    எனுங்கிண் கிணியாடத்
    துகிலொடு சோர்தரு கொடிநுண்மருங்குல்
    துவண்டு துவண்டாடத்
    தொந்தி சரிந்திட உந்திகரந்தொளிர்
    சூலுடை யாலடைமற்
    றகில சராசரம் நிகிலமோ டாடிட
    ஆடுக செங்கீரை
    அவனி தழைந்திட மவுலிபுனைந்தவள்
    ஆடுக செங்கீரை
    (மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்- செங்கீரைப்பருவம்- குமரகுருபரர்)
    *****

    மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
    {முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
    கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
    நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
    தமிழ்த்துறைத் தலைவர்.}

    ______________________________________

    Share
  • சிவாகமங்களும் திருமுறைகளும் புலப்படுத்தும் வாழ்வியல் (2)

    எம்.ஜெயராமசர்மா B.A (Hons) Dip. in Edu , Dip. in Soc , M.Phil Edu ,SLEAS  

       முன்னாள் கல்வி இயக்குனர் … மெல்பேண் .. அவுஸ்த்திரேலியா )

        

    திருமுறைகள் வாழ்வியலுடன்

         திருமுறைகள் கண்டெடுக்கப்பட்ட இடமே திருக்கோவில்தானே ! திருமுறைகள் பாடப்பட்ட இடமும் திருக்கோவில்கள் தானே ! திருமுறை பாடிய அருளாளர்களை இறைவன் ஆட்கொண்ட இடமும் கோவில் அல்லவா? எனவே கோவிலின் இன்றியமையாமை திருமுறைகளால் தெட்டென வெளிப் படுகிறதல்லவா?

         பக்தி இயக்கத்தின் ஊற்றுக் கண்ணே வாழ்வியலோடுதான் இணைகின் றது.அடியார்களை அரவணைத்து நாயன்மார்கள் ஊர்கள் தோறும் சென்று அங்குள்ள கோவில்களைத் துப்பரவு செய்து அங்குள்ள இறைவனைத் துதி பாடிப் பக்தியையும் பக்தி இயக்கத்தையும் வளர்த்தார்கள் அல்லவா?சமூக மயப்படுத்தலில் சம்பந்தப் பெருமானும் , அப்பர் சுவாமிகளும், சுந்தரப் பெருமானும் ஈடுபடாவிட்டால் எங்கள் சமயம் இந்தளவு உயர்ச்சியைப் பெற்றிருக்குமா? எங்களது திருக்கோவில்களும் இன்றுவரை நிலை பெற்றிருக் கத்தான் முடியுமா ? இவை யாவற்றுக்கும் காரணம் சமயத்தையும் கோவிலை யும் வாழ்வியலோடு இணைத்தமை என்பது குறிப்பிடத் தக்கதாகும்.

          ” தோடுடைய செவியன் ” என்னும் முதல் வாக்கைச் சம்பந்தப் பெருமான் வாயிலிருந்து வரச் செய்த இடமே சீர்காழியில் அமைந்த தோணியப்பர் கோவில்தானே ! ” பித்தாப் பிறை சூடி ” எனச் சுந்தரரை இறைவன் பாடுமாறு பணித்த இடமும் திருக்கோவில் அல்லவா ? ” கூற்றாயின வாறு விலக்ககலீர்” என அப்பரைப் பாடவைத்த இடமும் திருக்கோவில்தானே ! எனவே திருமுறை கள் கோவிலை மைய மாகக்கொண்டே வந்திருக்கின்றன. அதுமட்டுமல்ல  கோவிலை சமூக நிறுவனமாக்கி வாழ்வியலோடு இணைத்த வகையிலும் திருமுறைகளின் பங்கு மிகவும் முக்கியமானதென்றே கொள்ளவேண்டும்.

          ” நிலை பெறுமாறு எண்ணுதியேல் நெஞ்சே நீவா

              நித்தலும் எம்பிரானுடைய கோயில் புக்கு ” ஒவ்வொரு நாளும் கோவிலுக்குச் சென்றால் நிலை பெறலாம் என்னும் உறுதியை அப்பர் வாழ்வியல் கருத்தாகக் கோவிலுடன் இணைத்துக் காட்டியிருப்பது நோக்கத் தக்கதாகும்.

          ” மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும் ” என்று மக்களுக்கு நம்பிக்கை தருமாறு கூறி – அதற்கு ” கழுமல வளநகர் ” பெருமானை வழிபட வேண்டும்.அவரே என்றும் துணையிருப்பார் என அக்கோவிலையே காட்டி நிற்கிறார் சம்பந்தப் பெருமான்.

          இவையெல்லாம் உளவியல் சார்ந்த வாழ்வியலாகக் கோவிலுடன் இணைகிறதல்லவா?

         அன்றாடம் வீட்டைப் பெருக்குகின்றோம்.கழுவிச் சுத்தம் செய்கின்றோம். வீட்டில் விளக்கு ஏற்றி மகிழ்கின்றோம். பூக்களை பறிக்கின்றோம்.அவற்றை மாலையாக்கிச் சூடி இன்பம் அடைகின்றோம்.இவையெல்லாம் வாழ்வோடு ஒன்றிவிட்ட சம்பவங்கள். இவற்றையெல்லாம் இறைவன் உறைகின்ற கோவிலை நோக்கித்திருப்பினால் எப்படி இருக்கும் என அப்பர் நினைத்தார். அந்த நினைப்புத்தான் சரியைத் தொண்டாகி திருமுறை வாயிலாக மக்கள் வாழ்வியலுடன் இணைந்து வந்தது.

          நிலைபெறுமா றெண்ணுதியேல் நெஞ்சே நீவா

               நித்தலுமெம் பிரானுடைய கோயில் புக்குப்

          புலர்வதன்முன் அலகிட்டு மெழுக்கு மிட்டுப்

               பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்து பாடித்

           தலையாரக் கும்பிட்டுக் கூத்து மாடிச்

                  சங்கரா சயபோற்றி போற்றி யென்றும்

            அலைபுனல்சேர் செஞ்சடையெம் ஆதீயென்றும்

                ஆரூரா என்றென்றே அலறா நில்லே

     

         இது வாழ்வியலைக் கோவிலுடன் சேர்த்துவிட்ட மிகச்சிறந்த உத்தி எனலாம்.இந்த உத்தியை யார் வேண்டுமானாலும் கடைப்பிடிக்கலாம். எவராலும் செய்யக்கூடிய இலகுவான வழிபாட்டு முறையும் நல்லதொரு சரியைத் தொண்டும் எனலாம்.இதற்கு எந்தவிதமான படிப்பபோ, அறிவு   நுணுக்கமோ தேவையில்லை.

         மனத்தை உடையவன் மனிதன்.அந்த மனிதனுக்கு நண்பனும் எதிரியும் அவனுடைய மனம்தான்.இதனால் மனத்தை ஒருநிலைப் படுத்தினால் வாழ்வு சிறப்படையும் என்பது உளவியலாகும்.இந்த உளவியல் மக்களது வாழ்வியல்

    ஆகும்.மன ஒருநிலைப் பாட்டுக்குக் கோவில்கள் முக்கியம் என்பதை திரு முறைகள் வாயிலாக அருளாளர்கள் கூறியிருப்பது நோக்கத்தக்கது.

            இசை மனிதனை இசைவிப்பது. அந்த இசையினைக் கோவில்கள் தோறும் அரூளாளர்களான திருமுறை தந்தவர்கள் பரப்பினார்கள். இறைவனை இசைவடிவினனாகக் கண்டார்கள்.இதனால் திருமுறைகளைப் பண்ணோடு கோவில்கள் தோறும் பாடிப்பரவினார்கள்.தாம் பாடியதோடு மட்டுமே நின்று விடாமல் தம்மோடு மக்களையும் இணைத்துக்கொண்டே பாடினார்கள். இசையொடு பாடப் படும்பொழுது மனமானது அந்த இடத்திலேயே லயித்து நின்றுவிடும். இந்த உளவியலைத் திருமுறையாளர்கள் உணர்ந்து கோவிலுடன் இசையை இணைத்து அதனை வாழ்வியல் நெறியாக்கி விட்டனர்.                                                                              

         ” ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே “

         ” இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால் – இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால் “

       ” குழல் ஒலி யாழ் ஒலி கூத்தொலி ஏத்தொலி – எங்கும் குழாம் பெருகி ”       ” சலம்பூவொடு தூபம் மறந்தறியேன் – தமிழோடிசை பாடல் மறந்தறியேன் ” “விழவோடொலி மிகு தகுமாடக சாலை – முழவோடிசை நடமுன் செயு ” “வலம் வந்த மடவார்கள் நடமாட முழவதிர ” –    என்றெல்லாம் இசையோடு கோவில் வழிபாட்டை இணைத்து அதற்குள் மக்களையும் உள்வாங்கிய திருமுறைகளின் வாழ்வியல் நோக்கானது வியந்து போற்றத் தக்கதாக இருக்கிறதல்லவா ?                                                                        வாழ்வியலுடன் ஆகமங்களும் திருமுறைகளும் இணையும் பாங்கு                                              

        பக்தி இலக்கியம் என்பது தமிழ் மொழியைத் தவிர வேறு எந்த மொழி யிலும் நாம் கண்டுகொள்ளமுடியாது.அந்தப் பக்தி இலக்கியமானது கோவிலையும் , வழிபாட்டையும் , இறைவனது அருட்திறத்தையும் புலப் படுத்தி நிற்பதாகும். இந்தப் பக்தி இலக்கியத்தில் திருமுறைகளின் பங்கு மிகவும் இன்றியமையாததாகும்.திருமுறைகளின் பெரும்பங்கு கோவிலை மையப்படுத்தியே வந்திருக்கிறது. திருமுறைகள் யாவுமே கோவிலையும் வழிபாட்டையும், மனித ஒழுக்கத்தையும், வாழும் விதத்தையும், இல்லறத்தின் தன்மையையும், சமூகக் கட்டமைப்பையும், எடுத்துக் காட்டுகின்றன என்பது முக்கிய அம்சமாகும். இவை யாவும் வாழ்வியலின் இன்றியமையாத அங்கங்கள் என்பது மனங்கொள்ளத்தக்கதே.

       கோவில் என்பது வெறுமனவே வழிபடும் இடமாக மட்டும் விளங்கவில்லை. கோவில்களை ஆறுதல் தரும் இடமாக அடியவர்கள் கண்டார்கள். அப்பர் , சம்பந்தர், சுந்தரர் , மணிவாசகர் யாவரும் – கோவிலை மையமாக வைத்துக் கொண்டே … பல தொண்டுகளைத் தொடக்கி இருக்கிறார்கள். இவற்றை எல்லாம் திருமுறைகளின் வாயிலாக நாம் கண்டு கொள்ளுகின்றோம்.

       செல்லும் வழியெல்லாம் யாருக்கு என்ன நேரிடினும் அவர்களுக்குத் தங்களால் இயன்ற உதவிகளை இறையருளாலும், மற்றவர் உதவி பெற்றும் அருளாளர்கள் ஆற்றியிருக்கிறார்கள் என்னும் செய்திகளையெல்லாம் திருமுறைகளின் வாயிலாக அறிகின்றோம்.

        கோவில்களும் வழிபாட்டு முறைகளும் சமூகத்தில் வாழும் மக்களின் நலன்களை முன்னிட்டே ஏற்படுத்தப்பட்ட ஏற்பாடுகள் என்று எடுப்பதும் பொருத்தமானதே.மனிதனைப் பண்படுத்தவும், மனித நேயச் சிந்தனைகளை வளர்க்கவும், பொதுநல உணர்வை நிலைபெறச் செய்யவும், கோவில்களும் வழிபாடும் துணைசெய்தன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.உண்மையான வழிபாட்டு உணர்வின் முதிர்ச்சி சமூகத்துக்கு உதவுவதே ஆகும்.இதனால் த்தான் கோவில் என்பது வாழ்வியலாகிவிட்டது.

          திருமுறைகள் கோவிலை மையமாக வைத்துக்கொண்டே பணிகள் பலவற்றை ஆற்ற வழிப்படுத்தியதைக் காண்கின்றோம்.

       ” என்கடன் பணி செய்து கிடப்பதே ” என்னும் அப்பரின் வாக்கு திருமுறையின் நிலையைக் காட்டுகிறதல்லவா ?

     பசிப்பிணி போக்க உதவியமை, முத்தியில் கூட தான் மட்டுமே பெற்றுக் கொள்ளாமல் மற்றவர்களும் இடமளித்தமை, தனியாகவும் கூட்டாகவும் மக்கள் மத்தியில் துன்பம் நிகழ்ந்த பொழுது உதவி துயர் துடைத்தமை, சமரச நோக்கத்தைக் கடைப்பிடித்து சமநிலையைக் காட்டியமை, ” ஒன்றே குலம் ஒருவனே தேவன் ” என்றபடி செயற்பட்டமை இவையெல்லாம் கோவிலை மையமாக வைத்தே ஆற்றப் பட்டிருக்கின்றது என்பதைத் திருமுறைகள் வாயிலாக அறிகின்ற பொழுது திருமுறைகள் என்பது தனியே வெறும் பாடல்களாக இல்லாமல் சிறந்த வாழ்வியல் நெறியாகவும் விளங்கி இருக்கிறது என்பதை மறுதுரைக்க முடியாதல்லவா ?

        ஆகமங்களில் கூறப்பட்ட சரியை, கிரியை, யோகம், ஞானம், பற்றி திருமுறைகளும் விளக்கி நிற்கின்றன.ஆகமங்களில் கூறப்பட்ட கோவில் அமைப்புக்களின் பெயர்கள் வித்தியாசப் பட்டாலும் – திருமுறைகளும்  கோவில்களைப் பற்றியும் அவற்றின் அமைப்புப் பற்றியும் விளக்கி நிற்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

      ஆகமங்களும் திருமுறைகளும் சைவத்தின் இரண்டு கண்கள். இரண்டையும் பிரித்து வித்தியாசம் காண்பது பொருத்தமற்றதே.

      ” ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க ” என்னும் மணிவாசகப் பெருமானின் இக்கூற்றே இதற்கு அரண்செய்து நிற்கிறதல்லவா?

        ஆகமங்கள் சமஸ்கிருத மொழியில் இருக்கின்றன. திருமுறைகள் தெள்ளிய தமிழில் அமைந்திருக்கின்றன. ஆகமங்களை இறைவனே அருளினார் என்பதே நம்பிக்கை.அதேவேளை திருமுறைகளும் இறைவனது அருள்பெற்ற அடியார்க ளின் வாக்குகளே என்பதும் நோக்கத்தக்கது.எனவே திருமுறைகளும், சைவ ஆகமங்களும் இறைவனது அருளினைத் தாங்கி நிற்பன என்பதில் பெருமை இருக்கிறதல்லவா ?

       இறைத்தன்மை பெற்ற சிவாகமங்களும் திருமுறைகளும் கோவிலைப் பற்றிக் கூறிய அனைத்தும் மக்களுக்கும் சமூகத்துக்கும் ஏற்ற வகையிலேயே இருக்கின்றன அல்லவா? இவற்றை மனக்கொண்டு பார்க்கும் பொழுது கோவில் என்பது வாழ்விய லோடு இணைந்தே இருக்கிறது என்பது வெள்ளிடைமலையாகி நிற்கிறது

       இவற்றை எல்லாம் நோக்குமிடத்து சிவாகமங்களும், திருமுறைகளும் கோவிலையும் அவைசார்ந்த விஷயங்களையும் வாழ்வியலாகவே கருதி இருக்கின்றன என்பது புலனாகின்றது.

                               ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~                                      

     

    Share
  • பொ.வே.சோவின் உரையில் இலக்கிய மேற்கோளாட்சி

    பொ.வே.சோவின் உரையில் இலக்கிய மேற்கோளாட்சி
    (சிறப்புப்பார்வை – முல்லைப்பாட்டு)

    ம.மோ.கீதா

    சங்க இலக்கியப் பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று முல்லைப்பாட்டு ஆகும். இந்நூலிற்கு உரையாசிரியர்கள் உரை எழுதியவண்ணம் உள்ளனர். அவர்களில் ஒருவராகப் பெருமழைப் புலவர் பொ.வே.சோமசுந்தனார் விளங்குகின்றார். இவர், தம் உரையில் கையாண்டுள்ள இலக்கிய மேற்கோளாட்சிகளைப் பற்றி இக்கட்டுரையின் வாயிலாக அறியலாம்.

    உரை:
    உரை என்பது ஒன்றினைப் புதிதாக உருவாக்குவதாகும். இலக்கியம் இலக்கணம் என்று எல்லாவற்றினையும் விளக்கிக் காட்டும் ஒரு கண்ணாடி போன்றது உரையாகும். இவ்வுரையினைப் பற்றித் தொல்காப்பியம்,

    ”பாட்டிடை வைத்த குறிப்பினாலும்
    பாவின்று எழுந்த கிளவியானும்
    பொருளோடு புணரப்பொய்ம் மொழியானும்
    பொருளோடு புணர்ந்த நகை மொழியானும்”

    என்ற செய்யுளியல் நூற்பாவின் வாயிலாக உரை குறித்துத் தொல்காப்பியர் கூறும் கருத்தை அறிய முடிகிறது.

    உரையின் வகைகள்:
    உரையின் வகையினை ஆசிரியர்கள் பல்வேறு காலக்கட்டமாகப் பிரித்து இறுதியாக இன்றுவரையில் 17 நிலையாகப் பிரித்துக்காட்டியுள்ளனர். அவை:
    இலக்கியஉரை, இலக்கணஉரை, சைவத்தத்துவஉரை, வைணவஉரை, காண்டிகையுரை, விருத்தியுரை, செய்யுள்வடிவஉரை, மறுப்புரை, பொழிப்புரை, கருத்துரை, பதவுரை, தொகுப்புரை, விளக்க உரை, விசேட உரை, வினா விடை போக்குரை என உரையின் வகையினை இன்று பல வகையாகப் பகுத்து அமைத்துள்ளனர்.

    உரையின் இயல்புகள்:
    உரையின் இயல்புகள் எவ்வாறுஇருக்கவேண்டுமெனில், எளிமையாகவும், அனைவருக்கும்புரியும்வகையிலும், பல்துறைப்புலமையுடனும், இலக்கிய நயம், இலக்கண நயம், மேற்கோளாட்சி, சிறப்பு,விளக்கம், எல்லாத் தரப்பு உரையாசிரியர்களும் ஏற்றுக்கொள்ளும் தன்மையுடையதாக இருத்தல் வேண்டும்.

    உரையின் அமைப்புகள்:
    உரையானதுதெளிவுடனும் பல்துறை அறிவுடனும் நடைச்சிறப்பு ,தொடரமைப்பு, வினா விடைப் போக்கு, சொற்பொருள், பாடவேறுபாடு, கருத்து விளக்கம், இலக்கண இலக்கிய விளக்கம், உரையின் மரபு, நூலாசிரியரின் கருத்து வெளிப்படுத்தும் திறன், சொற்பொருள் தருதல், மேற்கோள் காட்டுதல், தொடர் பொருள் நயம் ஆகியவை அமைந்திருத்தல் வேண்டும்.

    முல்லைப்பாட்டு

    பத்துப்பாட்டு நூல்களுள் ஐந்தாவதாக அமைந்திருப்பது முல்லைப்பாட்டு ஆகும். இது நப்பூதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டது. பத்துப்பாட்டுள் மிகச் சிறிய நூல் இதுவாகும். முல்லை நிலத்தலைவியினுடைய கற்பின் மாண்புகளையும், கார்காலத்தின் அழகிய வர்ணனைகளையும், பாவை விளக்கு ஏற்றும் பெண்களின் நிலையினையும், வீரர்களின் சிறப்புக்களையும் கற்பனை நயத்துடன் மிக அழகாகப் பேசும் நூல் இம்முல்லைப்பாட்டாகும்.

    முல்லைப்பாட்டின் அமைப்புமுறை:
    இந்நூல் 103 அடிகளையுடைய ஒரு சிறிய நூல் ஆகும்.இருப்பினும் மற்ற நூல்களினைக் காட்டிலும் இது ஒரு கலைக் களஞ்சியமாகவும், கற்பனைக் களஞ்சியமாகவும் முல்லைப்பாட்டு விளங்குகிறது. அன்றைய கால மகளிர் முல்லை மலருடன் நெல்லைக் கலந்து தூவித் தெய்வத்தினை வணங்கி நற்சொல் கேட்டனர் என்பதை இந்நூலின்மூலம் அறிய முடிகிறது. மேலும்,வீரர்கள் தங்கும் படை வீட்டின் அமைப்புமுறை, இடையர்களின் வாழ்வியல் கூறுகள், நாழிகைக் கணக்கர் செயல்பாடுகள், தலைவன் திரும்பி வரும் கார்காலத்தில் காடு அழகுபெற்று விளங்கியமை ஆகியவற்றினைப் புலவர் தம் நுட்பமான கற்பனை நயத்துடன் மிக அழகாக வெளிப்படுத்தியுள்ளார். இச்செய்திகளுக்கு மேலும் சிறப்புச் சேர்க்கும் வகையில் பிற நூல்களின் செய்திகளையும் தொகுத்து பொ.வே.சோ. தம்முடைய உரையில் ஒப்பிட்டுக் காட்டிய விதம் இந்நூலிற்கு மேலும் சிறப்பைத் தருவதாக அமைந்துள்ளது.

    பொ.வே.சோ.:
    சோமசுந்தனாரின் உரை என்பது சற்றுக் கடினமான உரை என்றாலும் பிற உரையாசிரியர்களுடன் இவரது உரையினைப் பொருத்திப் பார்த்தால் இவரது உரையே சிறந்த உரை என்று கூறலாம். ஏனெனில், மற்ற உரையாசிரியர்கள் மூலம், விளக்கவுரை, திணை, துறை போன்றவற்றினைக் கூறியிருப்பர்.ஆனால், இவர் மூலத்தினை முதலிலேயே தந்துவிட்டு அவற்றிற்குத் திணை, துறை, அகலவுரை, விளக்கம், பாடல் பாடப்பட்ட சூழல் போன்ற செய்திகளையும் பாடலின் முடிவில் தருவதே இவரின் உரை நோக்கமாகக் காணலாம்.

    பொ.வே.சோ. உரை அமைப்பும் சிறப்பும்:
    சோமசுந்தனாரின் உரை என்பது அனைவருக்கும் பயனுடைய உரையாக அமைந்துள்ளது. இவர், கூறவரும் செய்திக்கு நேரடியாக வராமல் பாடலின் அடி, பொருள், கருத்தினைக்கூறி அது மேலும் புரியுமாறு செய்யும் மிக நீண்ட தொடரமைப்புமுறை, அதற்கு இணையாக இலக்கண இலக்கிய மேற்கோள்கள் பிற நூல்களின் உரையுடன் தனது உரையினை மிக நேர்த்தியாகப் பொருத்திக் காட்டும் பாங்கே இவரது உரையின் சிறப்புக் கூறாகும். பிற உரையாசிரியர்களின் மேற்கோள்களையும் இவர் சுட்டிக்காட்டும் விதம் மிகவும் சிறப்பானதாகும்.

    பொ.வே.சோ. உரையில் இலக்கிய மேற்கோளாட்சி:
    பெருமமழைப் புலவரின் உரையினைக் குறிப்பிடும்பொழுது அதற்கு இணையாகப் பல இலக்கியங்களிலிருந்து விளக்கிக்கூறும் மாண்பினையுடையவர். இவர்அகநானூறு, கலித்தொகை சிலப்பதிகாரம், மணிமேகலை, திருக்குறள், சீவகசிந்தாமணி, கம்பராமாயணம், பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பட்டினப்பாலை போன்ற இலக்கியங்களிலிருந்து முல்லைப்பாட்டு உரையில் மேற்கோள்கள் காட்டியுள்ளார்.

    பொருண்மை நோக்கு:
    பொ.வே.சோவின் உரையில் தான் சொல்ல வந்த கருத்தின் பொருளுக்கேற்ப அதை இன்னும் உயர்த்திக்காட்டி, அது எந்த அளவிற்கு ஏற்புடையது என்பதனை ஆராய்ந்து அதற்குப் பிற இலக்கியங்களினை மேற்கோள்களாகக் காட்டியுள்ளார்.

    அக்காலத்தில் பெண்கள் இறைவனை எவ்வாறு வழிபட்டனர் என்றும்,கார்காலச் செய்தியினையும் விளக்கும் வகையில் திருக்குறள்,சிலப்பதிகாரம்,சீவகசிந்தாமணி ஆகியவற்றை மேற்கோள்களாகக் காட்டியுள்ளார். தான் கூறும் பொருளுக்கு ஏற்புடையதாக இருக்க வேண்டுமெனில், இம்முறையினைக் கைக்கொள்வதே சரியென இவர் கையாண்டுள்ளார்.

    சோமசுந்தரனார் முல்லைப்பாட்டிற்கு எழுதிய உரையில் திருக்குறள்-5,களவழி நாற்பது-1, அகநானூறு-4, கம்பராமாயணம்-2, சீவகசிந்தாமணி-3 பாடல்களும் பட்டினப்பாலை-1, சிறுபாணாற்றுப்படை-1, பெரும்பாணாற்றுப்படை-1, சிலப்பதிகாரம்-5, மணிமேகலை-1 முறையும் பொருத்தமுடன் மேற்கோள்களாக எடுத்தாண்டுள்ளார். இவர், திருக்குறளினை அதிக இடங்களில் கையாண்டுள்ளதிலிருந்து இவர் திருக்குறளின் மீதுகொண்ட பற்று புலனாகிறது.

    கருத்துப் புலப்பாடு:
    பொ.வே.சோவின் கருத்துப்புலமை என்பது மிகவும் ஆழமான செய்திகளைக் கூறக் கூடியவை. இவர்,உரையினை நோக்கினால் இயல்பான செய்தியினைக்கூட மிகவும் சுவையுடையதாக மாற்றிக் கூறக்கூடிய புலமையுடையவர் எனக் காட்டும். தலைவியின் துயரநிலையினைக் கருதி நற்றாய் இறைவனிடம் வேண்டும் செய்தியுடன் இடையர்கள் கூறும் செய்தியினையும் புகுத்தி ஒப்பீட்டுக்காட்டியுள்ளார். இச்செய்திக்குச் சிலப்பதிகாரம், திருக்குறள், சிறுபாணாற்றுப்படை ஆகிய நூல்களைப் பொருத்திக்காட்டித் தான் சொல்ல வந்த செய்திகளை மிக நேர்த்தியாகப் பொருத்திக் காட்டும் திறனைப் பார்க்கும்பொழுது பொ.வே.சோ. கருத்தாழமிக்கவர் என்பதை மெய்ப்பித்துள்ளார்.

    சொல்லாட்சி மேற்கோள்:
    பொ.வே.சோமசுந்தரனார் சொல்லாட்சித் திறனைப் பார்த்தால் மற்ற உரைகளைவிட இவரது உரை சற்று வேறுபட்டு விளங்குவதை அறிய முடிகிறது. சான்றுக்குத் தலைவன் வருகையினைக் கூறும்பொழுது அதற்குச் சிறுபாணாற்றுப்படை பாடலின் அடியினை எடுத்துக்கூறி மேற்கோள் காட்டியுள்ளார்.பொ.வே.சோவின் உரை ஓர் அடிக்கு பல சொற்களை மட்டுமல்லாது பல்வேறு தொடர்களைச் சுட்டிக்காட்டியுள்ளதை உணர முடிகிறது.

    முடிவுரை:
    சங்க இலக்கிய நூல்களுக்கு இன்று பலவிதமான உரைகள் வந்திருந்தாலும், பல்வேறு சிறப்புகளையுடைய உரை பெருமழைப்புலவரின் உரையே அனைவரும் கூறும் அளவிற்கு அது காணப்படுகிறது. போற்றத்தக்க வகையில் பல்வேறு இலக்கிய மேற்கோளாட்சியைப் பெற்றுத் திகழும் ஒரே உரை இவருடையதே ஆகும்.

    ___________________________________________________

    திருமதி ம.மோ.கீதா
    உதவிப் பேராசிரியர்
    அ.வ.அ.கல்லூரி(தன்.)
    மன்னம்பந்தல்-609 305
    மயிலாடுதுறை.

    Share