இலக்கியச்சித்திரம்- இனிய பிள்ளைத்தமிழ்- 15
மீனாட்சி பாலகணேஷ்
அசைந்தொசிகின்ற பசுங்கொடி!
மேகக்கூட்டங்கள் சாளரங்கள் வழியே எட்டிப்பார்த்துப் புன்னகைக்கும் நான்மாடக்கூடல் எனப்படும் மதுரைமாநகர். அங்கு மலயத்துவச பாண்டியனின் அழகுபொலியும் திருமாளிகை. நாமும் உள்ளேசென்று பார்க்கலாமா? அரசன் விரைந்து தன் பட்டத்தரசி காஞ்சனமாலையின் அந்தப்புரத்திற்குச் சென்றுகொண்டிருக்கிறான். ஆம்! தன் செல்வத்திருமகளைக் காணும் ஆவலில்தான் அங்கு செல்கிறான். தடாதகை எனும் அக்குழந்தை நவரத்தினங்கள் பதித்த தரையில் தவழ்ந்தாடிக் கொண்டிருக்கிறாள். கண்ணுற்ற மன்னனின் உள்ளம் உவகைப் பெருங்கடலில் நீந்துகிறது. கையை உயர்த்தி வளைத்து அக்குழந்தையை, “இங்கே என்னிடம் வா கண்ணே,” என்றழைத்தபடி, அன்னத்தூவியால் நிறைக்கப்பெற்ற ஒரு மென்மையான ஆசனத்தில் அமர்கிறான் மலயத்துவச பாண்டியன்.
குழந்தை தன் தந்தையிடம் தாவிக் குதித்தோடித் தவழ்ந்து செல்கிறாள். தன்வயிறு குளிர இன்னமுதூட்டிய தாயின் வயிறு குளிரும்படி, அமுதனைய இனிய தண்மையான பசுங்குதலை மழலைமொழியைப் பேசுகிறாள் குழந்தை மீனாட்சி. தன்னருகே தவழ்ந்தோடிவந்த அருமை மகளை வாஞ்சையுடன் வாரியெடுத்து மார்போடணைத்து உச்சிமுகருகிறான் அரசன். அவனுடைய திருமார்பில் தனது குட்டிப் பொற்பாதங்களைப் பதித்து நிற்கிறாள் இச்சிறு பெண்குழந்தை. அதனால் அவன் மார்பில் அணிந்துள்ள குங்குமக்குழம்பானது அந்தக் குட்டிப்பாதங்களில் படிகின்றது. காணும் அரசி காஞ்சனமாலைக்கும், மற்றும் பணிப்பெண்டிருக்கும் உள்ளமும் உடலும் ஒருங்கே சிலிர்க்கின்றன. பாடலைப் பயிலும் நமக்கே மெய்ப்புளகம் உண்டாகின்றது எனில் அருகே இருந்து பார்த்து அனுபவித்தவர் எவ்வளவு பெரியதவம் புரிந்தவராவர் என அறியவொண்ணுமோ?
மலயத்துவச பாண்டியன் பெரிய வலிமைவாய்ந்த தோள்களை உடையவன்; அரச கம்பீரம் மிக்கவன்; அவனுடைய நீண்ட கைகள் முழங்கால்கள்வரை படிகின்றன; அந்தக் கரத்தைப் பற்றியவண்ணம் மீனாட்சி எழுந்து நிற்கிறாள். அமர்ந்திருக்கும் தந்தையின் மார்பின் குங்குமச்சேற்றினை அளைந்து, அவன் கரத்தைப்பிடித்து எழுந்துநின்று அவனுடைய தோள்களில் ஏறமுயல்கிறாள். அவை எத்தகைய தோள்கள்? இசை (புகழ்) உலவுகின்ற தமிழாலாகிய மாலையை அணிந்துள்ள பருத்ததோள்! ஆகா! எத்தனை கருத்துச்செறிந்த சொற்கள் இவை!
தமிழுக்கு அன்னை மீனாட்சி; முத்தமிழ் வளர்ந்தது மதுரையம்பதியில்; முச்சங்கம் வைத்துத் தமிழை வளர்த்தவர்கள் பாண்டியமன்னர்கள். ஆகவே பாண்டிய மன்னனான மலயத்துவசனின் தோள் புகழ்மிக்க தமிழாலாகிய மாலைகளை அணிந்த தடந்தோள் எனப் புலவர்பெருமானார் குமரகுருபரரால் பெருமையுடன் வருணிக்கப்படுகின்றது.
தோளில் ஏறிக்குழந்தை தந்தையினுடைய பிடரியில் அழகுற அமர்ந்து கொள்கிறாளாம். இவ்வயதுக்குழந்தைகள் தந்தையின் கழுத்தினைக் கட்டிக்கொண்டு இவ்வாறமர்ந்தவண்ணம் ஆடுவார்கள். மீனாட்சியும் அவ்வாறே ஆடுகின்றாளாம்! அவளுடைய பச்சைப்பசேலென்ற மரகதத்தினையொத்த திருமேனியின் பசுமையான ஒளி ததும்பிநிறைந்து அந்த இடத்தையே, அறையையே, அரசமாளிகையையே நிறைக்கின்றது! கொற்கையின் முத்துக்கள் போல, அவளுடைய திருவாயில் சின்னஞ்சிறு பற்கள் முளைக்கத் துவங்கியுள்ளன. சிவந்தவாயில் தெளிந்தநிலா போலப் புன்னகை பரவியரும்புகின்றது. அழகாகத் தந்தையின் கழுத்திலமர்ந்து செங்கீரை ஆடுகிறாள் குழந்தை மீனாட்சி! அவள் தென்னன் எனும் புகழ்பெற்ற மலயத்துவச பாண்டியனுக்கும் அழகிய பொன்மலை எனப்படும் இமயத்தின் மன்னனான இமவானுக்கும் ஒப்பற்ற மகளாக விளங்குபவள்.
இவ்வாறெல்லாம் மீனாட்சியை அழகுற விளக்கிப் பாடுபவர் குமரகுருபரரே அல்லாது யாரால் இயலும்? கேட்பவர் உள்ளம்களிகூர, செவிகளில் அமுதம்னிறைய, சிந்தையில் அன்புமீதூரக் கண்களில் கொற்கையின் முத்துக்கள்போல் நீர்முத்துக்கள் பெருகிச் சொரியவைக்கும் அழகான செங்கீரைப்பருவப்பாடல் இதுவாகும்.
இன்றுவரையும் தனக்கு ஈடிணையற்ற அழகான பிள்ளைத்தமிழ்ப் பிரபந்தம் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் என்பதனால் ஒவ்வொரு தமிழனும் பெருமை கொள்ளவேண்டும்.
உண்ணிலா உவகைப் பெருங்களிதுளும்பநின்
றுன்றிருத்தாதைநின்னை
ஒருமுறைகரம்பொத்தி வருகென அழைத்திடுமுன்
ஓடித்தவழ்ந்துசென்று
தண்ணுலாமழலைப் பசுங்குதலை அமுதினிய
தாய்வயிறுகுளிரவூட்டித்
தடமார்ப நிறைகுங்குமச்சே றளைந்துபொன்
தாள்தோய்தடக்கைபற்றிப்
பண்ணுலா வடிதமிழ்ப் பைந்தாமம்விரியும்
பணைத்தோள்எருத்தமேறிப்
பாசொளிய மரகதத்திருமேனி பச்சைப்
பசுங்கதிர்ததும்பமணிவாய்த்
தெண்ணிலா விரியநின் றாடும்பசுந்தோகை
செங்கீரை ஆடியருளே
தென்னற்கும் அம்பொன்மலைமன்னற்கும் ஒருசெல்வி
செங்கீரை ஆடியருளே
(மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்- செங்கீரைப்பருவம்- குமரகுருபரர்)
*****
இந்த செங்கீரைப் பருவத்தில் சிற்றில் சிதைத்தல் நிகழ்ச்சியும் இடம் பெறுகின்றது. ஆச்சரியமாக இருப்பினும், அழகு திகழ அமைந்த இப்பாடல், சிறு குழந்தைகளுக்கிடையேயான ஒரு விளையாட்டைப் பாடும்முகமாக, உலகியல், மானுட உளவியல், தெய்வத் தத்துவம், உலக உருவாக்கம் எனும் தொடர்ந்து நடக்கும் பிரபஞ்சத்தின் இயற்கைச் சுழற்சி முதலியனவற்றை உட்பொருளாகக் கொண்டு திகழ்கின்றது.
சிறு குழந்தைகள் வளர்ந்து வரும் பருவத்தில், ஆண் குழந்தைகள் சிலர் முரட்டுத்தனமான விளையாட்டுகளை விளையாடுவர். மற்றக் குழந்தைகளின் விளையாட்டுப் பொருள்களை உடைப்பது, அவர்கள் கட்டும் மணல் அல்லது சிறு மண்வீட்டைக் காலால் எற்றி உதைத்துச் சிதைப்பது, அவர்கள் பின்னலைப் பிடித்திழுத்து அவர்களைத் துன்புறுத்துவது என்பன இவற்றுள் சில.
உளவியல் ரீதியாக இதைக் காணப் போனால், நாம் வாழும் மானிட சமுதாயத்தை ஆதாரமாகக் கொண்டே இவை நிகழ்கின்றன எனலாம். அன்னையர் சமைப்பது, வீட்டிற்குரிய பணிகளைச் செய்து வீட்டை நன்முறையில் பராமரிப்பது, தமது குழந்தைகளைப் பேணுவது போன்றவற்றை நோக்கியே சிறுமியரும் தாய்மாரின் அடிச்சுவட்டில் சிற்றில் இழைத்து மணல் சோறாக்கி, குழந்தைகளைப் பேணும் விளையாட்டை விளையாடுவர். சிறுவர்களும் தந்தை, அண்ணன் முதலானோர் உடல் வலிமை தேவைப்படும் செயல்களைச் செய்வது போலத் தாமும் செய்ய முயல்வர். இவையே, சிற்றில் சிதைத்தல், சிறுபறை முழக்குதல், சிறுதேர் உருட்டல், என்ற விளையாட்டுகளாகப் பரிணமித்ததோ என்னவோ!
உலகங்களையே சிறிய வீடாக உருவாக்கி விளையாடும் சிறுமியாக மீனாட்சியன்னை உருவகிக்கப் படுகிறாள். இவ்வாறு அவள் பெருமையைப் பேசுமிடத்து, சிற்றில் சிதைத்தல் நிகழ்ச்சி இடம் பெற்றுள்ளது. அன்னை உருவாக்கும் அழகிய சிற்றிலையும் ஒருவன் சிதைக்க இயலுமா? அவ்வாறு செய்யத் துணிந்த அவன் யார்? அவன் ஒரே ஒருவன் தான்- அவனே அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் நிறைந்த தலைவனான சிவபிரான்.
இந்தப் பாட்டைக் கண்டு மகிழலாமா?
சிறுமி மீனாட்சி சிற்றில் இழைக்கின்றாள்; எவ்வாறு? முதலில், நெடிய சக்கரவாள மலையை எல்லா உலகங்களையும் வளைத்து நிற்கும் சுவராக அமைக்கிறாள். எட்டுத் திக்கிலும் எட்டு மலைகளை இந்தச் சுவர்களுக்குப் பொருத்தமான அடைசுவர்களாக நிறுத்துகிறாள். அடுத்து மேருமலை எனப்படும் தூணை நடுவில் நிலைநிறுத்துகின்றாள். ஆகாயமாகிய விண்ணின் உச்சியை மூடி, சூரியன், சந்திரன் ஆகிய இரண்டு ஒளிவிளக்குகளைப் பொருத்திவிடுகிறாள். முழுதும் எழுந்தெழுந்து மோதும் ஊழிக்கால வெள்ளத்தில் கழுவப்படும் புவனங்களே அவளுடைய பழைய பாத்திரம் பண்டங்கள்; அவற்றை வரிசையாக அடுக்கி வைத்து, புதுக்கூழான இனிய அமுதத்தைச் சமைக்கிறாள். இவ்வாறு பலமுறை தாயாகிய மீனாட்சி சலிப்பின்றிச் செய்து வருகிறாள்.
அவற்றை அழித்த வண்ணமாக இருக்கிறான் பித்தனான சிவபிரான். அவன் ஒரு முற்றவெளியான தில்லையில், சிதம்பரத்தில் திரிகின்றவன்; ஊமத்தம்பூவை அணிந்திருக்கும் பெரும்பித்தன்; கூத்தன் அவன் அழித்ததுடன் நில்லாது மீனாட்சியின் முன்நின்று கூத்தாடுகின்றானாம்!
வழக்கமாக இத்தருணத்தில் சிறுமியர் என்னசெய்வார்கள்? “எமது சிற்றிலைச் சிதையேலே,” என வேண்டுவார்கள்.
(உ- ம்) திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ்.
‘கூவிப் பரிந்து முலைத்தாயர்…
…………………………………..
ஆவித்துணையே வழியடிமை
அடியேம் சிற்றில் அழியேலே
அலைமுத் தெறியும் திருச்செந்தூர்
அரசே சிற்றில் அழியேலே,’ என வேண்டுவர் சிறுமியர்.
அல்லது சினம்கொண்டு கூச்சலிடுவார்கள்; இல்லாவிடில் அழுவார்கள். ஆனால் மீனாட்சி என்னசெய்கிறாளாம்? இவ்வாறெல்லாம் செய்யும் கூத்தனான சிவபிரானை வெறுக்காது, நாள்தோறும் மீண்டும்மீண்டும் அவற்றை எடுத்துப் பொறுமையாக வரிசையாக அடுக்கி, பெரிய பழைய அண்டத்தை மூடுகின்ற சிறுவீடு கட்டிவிளையாடிய வண்ணம் இருக்கிறாளாம்! இவ்வாறு விளையாடுகின்ற ஒப்பற்ற இளமையுடன் கூடிய பச்சைப் பெண்பிள்ளையே! செங்கீரை ஆடி அருளே!’ என வேண்டுகிறார் குமரகுருபரர்.
தாயான மீனாட்சி (பராசக்தி) உலகத்தை அடிக்கடி ஆக்குதலையும் அவற்றைச் சிவபிரான் அடுத்தடுத்து அழித்தலையும் ஆகியசெய்கைகள் சிறுமியர் சிற்றில்இழைத்தலும். சிறுவர்கள் அவற்றை அழித்தலும் ஆகிய செய்கைகளாக உருவகித்துக்கூறப்பட்டன. மானிடப்பெண்கள் வீட்டிற்கு வேண்டியவற்றைச் செய்வதுபோல, எல்லா உலகங்களையும் படைக்கும் பராசக்தியும் தன் கடமைகளாக இவற்றைச்செய்கின்றாள். அவற்றைத் திரும்பத்திரும்ப அழித்துத் திருவிளையாடல் புரிகிறான் சிவபெருமான்.
எற்றுபுனல் என்பது அலைமோதும் ஊழிப்பெருவெள்ளமாகும். இதில் அண்டங்களைக் கழுவிஎடுத்து அன்னை புதுக்கூழாகிய இன்னமுதைப் படைக்கின்றாள். இவ்வாறாக உலகை உருவாக்குவதையே மீனாட்சி சிற்றில்இழைப்பதாகப் புலவர் கற்பனை செய்கிறார். உன்மத்தம்கொண்டு பித்தனாகிய கூத்தபிரான் மீண்டும்மீண்டும் சிதைக்கிறான். இவ்வாறு உலகஉருவாக்கமும் அழிவும் மாறிமாறி வருவது சுட்டப்படுகிறது. அவை மீனாட்சி அம்மையின் சிற்றில்உருவாக்கமாகவும் ஈசனின் சிற்றில்சிதைத்தலாகவும் அமைந்துள்ளன.
ஆண்பால் பிள்ளைத்தமிழில் ஒரு தனிப்பருவமாகப் பாடப்பெறும் சிற்றில்பருவம் இப்பாடலில் குறிப்பிடப்படுகின்றது.
இறைவனின் படைத்தலும் காத்தலும் கரத்தலும் அழித்தலும் அருளுதலும் ஆகிய ஐந்தொழில்கள் ஓயாது நடை பெறுவதை தத்துவ விளக்கமாக இப்பாடல் அழகுறக் காட்டுகிறது. அதுவும் சிவபெருமான் தான் செய்யும் திருவருள் தொழில்களைத் தனது திருமேனியாக விளங்கும் சக்திமூலமாகவே செய்தருள்கிறான் என்பது மறைபொருளாக விளங்குகிறது எனக் கொள்ளலாம்1. சிவபிரான் சிற்றில் சிதைப்பது என்ற சிறு விளையாட்டை பிரபஞ்சப் பெருநடனத் தத்துவத்தைப் பொதிந்து நமக்கு குமரகுருபரனார் அருளியுள்ளார் என்றே தோன்றுகிறது. படிக்கப் படிக்கப் புதுக் கருத்துக்களைச் சிந்தையில் ஊற்றெடுக்க வைக்கும் தெய்வப் பாடல்கள் இவை.
( 1சிவபிரான் சிதைத்த சிற்றில்- மீனாட்சி பாலகணேஷ்- 8 அக்டோபர் 2014- தமிழ் ஹிந்து இணையதளம்)
சுற்றுநெடு நேமிச் சுவர்க்கிசையஎட்டுச்
சுவர்க்கால் நிறுத்திமேருத்
தூணொன்று நடுநட்டு வெளிமுகடுமூடியிரு
சுடர்விளக் கிட்டுமுற்ற
எற்றுபுன லிற்கழுவு புவனப்பழங்கலம்
எடுத்தடுக் கிப்புதுக்கூழ்
இன்னமுத முஞ்சமைத் தன்னைநீபன்முறை
இழைத்திட அழித்தழித்தோர்
முற்றவெளி யில்திரியும் மத்தப்பெரும்பித்தன்
முன்னின்று தொந்த மிடவும்
முனியாது வைகலும் எடுத்தடுக்கிப்பெரிய
மூதண்ட கூடமூடும்
சிற்றில்விளை யாடுமொருபச்சிளம் பெண்பிள்ளை
செங்கீரை ஆடியருளே
தென்னற்கும் அம்பொன்மலைமன்னற்கும் ஒருசெல்வி
செங்கீரை ஆடியருளே
(மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்- செங்கீரைப்பருவம்- குமரகுருபரர்)
*****
ஒருகாலை மடக்கி, மற்றொருகாலை நீட்டி, இருகைகளையும் தரையில்பதித்தபடி, குழந்தை தவழ்ந்தாடுகிறது. இளஞ்செடியொன்று தென்றலில் ஆடுவதுபோல அழகுற ஆசைந்தாடுகிறாள் குழந்தை. பார்ப்பவர் உள்ளங்கள் பாசத்திலும் பரவசத்திலும் தாமும் இசைந்தாடுகின்றனவே!
குழந்தையின் முகம் வெண்ணிலவுபோல அழகானமுகம்; அதில் புன்னகை எனும் நிலாக்கீற்று தோன்றி அசைந்தாடுகிறதாம்; படுத்துக்கிடந்த ஒரேநிலையிலிருந்து குழந்தை புரண்டெழுந்து இப்பொழுது மெல்ல நகரக் கற்றுக்கொண்டு விட்டது. ஆகவே உற்சாகமாக அறையின் எல்லாப்பக்கங்களிலும் செங்கீரையாடித் தவழ்ந்தோடி வருகின்றது. அக்குழந்தை செங்கீரையாடும்போதில் என்னவெல்லாம் ஆடியதாம் பார்க்கலாமா?
தாய் குழந்தையின் தலைமயிரை வாரிமுடித்து உச்சிக்கொண்டையாக்கிக் கட்டியுள்ளாள்; அந்த முடிச்சூழியமனது அதிலணிந்த அணியுடன் ஆடுகிறது. வளைந்த அழகிய புருவங்கள்- ஒருபெண் வளர்ந்தபின் அழகுமங்கையாகத் திகழப்போகிறாள் என்பதனை அவளுடைய பச்சிளம் பருவத்திலேயே கூறிவிட இயலும். அவ்வாறே மீனாட்சியின் புருவங்கள் கொடிபோல் வளைந்து காணப்படுகின்றன. அதனுடன் அவளுடைய நெற்றியில் அணிவிக்கப்பட்ட சுட்டியும் நெறிந்து அசைந்தாடுகின்றது; அடுத்து மீன்களின் போரைக் காண்கிறோம்- போர்செய்கின்ற கண்களாகிய மகரமீன்கள், அவற்றுடன் பொருதும் மகரவடிவிலான இரு காதணிகளுடன் ஆடுகின்றன.
அன்னையின் இக்கண்கள் செய்யும் போரைப்பற்றி எல்லாக் கவிஞர்களும் வகைவகையாகப்பாடி வைத்துள்ளனர். அதைப்பற்றியே ஒரு ஆய்வுக்கட்டுரை எழுதிவிடலாம்! இப்போதைக்கு ஒன்றே ஒன்று- ‘கட்கணை துரக்கும் கரும்புருவ வில்லொடொரு கைவில் குனித்து நின்ற’ எனும் ஊசற்பருவத்துப்பாடல் வரிகளை நினைவுகூர்வோம்2. கையில் வில்லேந்தி சிவபிரானை இமயாசலத்தில் போருக்கழைத்தவள் தடாதகையான மீனாட்சி. அவர் நேரில்வந்ததும், ‘இவரே தன்கணவன்,’ என்றறிந்து நாணமடைகிறாள். ஓரக்கண்களால் கணைதொடுக்கும் நோக்கினைச் செலுத்தியவண்ணம் கையிலேந்திய வில்லினைத் தாழ்த்திப்பிடித்து தலைகுனிந்து காதலன்முன்பு நிற்கிறள். மிக அழகான பாடல் இது.
செங்கீரையாடும் குழந்தை மீனாட்சியிடம் திரும்ப வருவோம். அவள் நூபுரம் எனும் அணிஇடப்பெற்ற காலை நீட்டி, மற்றொருகாலை மடக்கித் தவழுவதால் காலில் உள்ள கிண்கிணி எனும் மற்றோர்அணி ‘கிண்கிண்’ எனும் இனியஒலியை எழுப்புகிறதாம். ஆடை அணிவிக்கப்பட்டுள்ள கொடிபோலும் இடையானது துவண்டு தளர்ந்து ஆடுகிறதாம். வயிறு சரிகின்றது; கொப்பூழ் மறைந்துவிளங்கும் கருக்கொண்ட ஆலிலைபோலும் வயிற்றில் உலகிலுள்ள அசையும், அசைவற்ற பொருட்கள் அனைத்தும் ஆடுமாறு செங்கீரை ஆடுக! உலகம் உய்ய முடிசூடியருளிய மீனாட்சியம்மையே செங்கீரையாடுக! என அன்னையர் வேண்டிக் கொள்வதாக இப்பாடல் அமைந்துள்ளது.
அன்னை பராசக்தி எல்லாப்பொருட்களிலும் கலந்துறையும் தெய்வம். அசையும் அசையாப்பொருட்கள் அனைத்தும் அவளாலேயே அவளாணைப்படி இயங்குகின்றன. ஆகவே அவள் செங்கீரையாடும்பொழுதில் அனைத்தும் ஆடுகின்றன. இது பேரானந்தம் பெருகப் பக்தியில் விளைந்த பாடல். குழந்தையும் தெய்வமும் இரண்டறக் கலந்துவிட்ட பாடல். அன்னை பராசக்தி புலவர்வாக்கில் நின்று தானே இயற்றிவைத்ததெய்வப்பாடல்.
( 2 இலக்கியச்சித்திரம்-4- வல்லமை மின்னிதழ்).
முகமதி யூடெழு நகைநில வாட
முடிச்சூ ழியமாட
முருபுரி வக்கொடி நுதலிடு சுட்டி
முரிப்பொ டசைந்தாட
இகல்விழி மகரமும் அம்மகரம்பொரும்
இருமக ரமுமாட
இடுநூ புரவடி பெயரக் கிண்கிண்
எனுங்கிண் கிணியாடத்
துகிலொடு சோர்தரு கொடிநுண்மருங்குல்
துவண்டு துவண்டாடத்
தொந்தி சரிந்திட உந்திகரந்தொளிர்
சூலுடை யாலடைமற்
றகில சராசரம் நிகிலமோ டாடிட
ஆடுக செங்கீரை
அவனி தழைந்திட மவுலிபுனைந்தவள்
ஆடுக செங்கீரை
(மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்- செங்கீரைப்பருவம்- குமரகுருபரர்)
*****
மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
{முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
தமிழ்த்துறைத் தலைவர்.}
______________________________________
தேன் தமிழில்
தித்திக்க தித்திக்க
தென்னவன் மகளை
எத்தனைமுறை படித்தாலும்
திகட்டவே திகட்டாதே.
மீனாளை எழுதிய மீனாட்சிக்கு நன்றி.
தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. எல்லாம் அவள் அருட்கொடை.