ஆய்வுக் கட்டுரைகள்இலக்கியம்

சங்க காலத்தில் பாலியல் வன்முறையும் தண்டனையும்

-பா. சிவக்குமார்

திருமணம் செய்வதாகக் கூறிப் புணர்தல், மானபங்கப்படுத்துதல், மயக்க மருந்து கொடுத்து, ஆயுதங்களைக் காட்டிப் பயமுறுத்திக் கற்பழித்தல், குழுவாகக் கற்பழித்தல் போன்ற பலவகையான பாலியல் வன்முறைகள் தற்காலத்தில் நிகழ்ந்து வருவதை நாளேடுகளிலும், ஊடகங்களிலும் பரவலாகக் காண்கிறோம். இந்தப் பாலியல் வன்மம் தொன்றுதொட்டே பெண்கள்மீது நிகழ்த்தப்பட்டு வந்துள்ளது.  இப்பாலியல் வன்முறை சங்கச் சமூகத்தில் எவ்விதம் ஊடுருவி இருந்துள்ளது என்பது குறித்து இக்கட்டுரை ஆய்கிறது.

பொதுவிடங்களில் பெண்கள்மீது நிகழ்த்தியவை:

தெருவில் தன் அன்னையுடன் நடந்து செல்லும் பெண்ணின் கையைப் பிடித்து  இழுக்கும் வன்செயலில் சங்ககாலத் தலைவன்  ஈடுபட்டுள்ளதை,

“இடைநெடுந் தெருவிற் கதுமெனக் கண்டென்
பொற்றொடி முன்கை பற்றினன் ஆக
அன்னாய் என்றெனன் அவன்கைவிட் டனனே…”           (அகம்.356:5-7)

என்ற பாடலிலிருந்து ஒரு பெண்ணின் அனுமதியின்றி நடுத்தெருவில் கையைப் பிடித்திழுக்கும் வன்செயலில் அக்காலத் தலைவன்  ஈடுபட்டுள்ளதை அறியமுடிகிறது.  மேலும், ஒரு பெண் (தலைவி) தன்னை விரும்பாத பொழுதும் ஆண் (தலைவன்) அவளது கையினைப் பிடித்துக் கட்டித்தழுவி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளதை குறிஞ்சிக்கலிப் பாடல் வெளிப்படுத்துகின்றது.  இதனை, கலி.62:1-11-ஆம் பாடலிலிருந்து பெண்ணின் விருப்பமின்றியே வன்புணர்வில் ஈடுபட்ட தலைவனின் வன்மம் வெளிப்படுகின்றது. நீர் அருந்துபவர்கள், நீர் தன் தாகத்தைத் தணிக்கும் என்று அருந்துவார்களே அன்றி நீருக்கு நன்று என்று நினைக்க மாட்டார்கள். அது போன்றே தலைவியைப் புணர்வதால் எனக்கு இன்பம் கிடைக்கும் என்பதால் புணர்ந்தேன் அவளது விருப்பம் தேவையில்லை என்று கூறும் தலைவனின் கூற்றிலிருந்து, பாலியல் வன்முறையில் ஈடுபடும் ஆண்களின் மனநிலை இப்பாடலில் பிரதிபலிப்பதைக் காணமுடிகின்றது. மேலும் நின்னை நெருங்க அணைத்துத் தழுவுதல் இனிதாக இருந்ததால் அவ்வாறு தழுவிக் கொண்டேன் என்று கூறும் தலைவனின் வார்த்தைகளிலிருந்து அவனின் ஆண் அதிகார  மையமும், தன் உடலியல் தேவை மட்டுமே மனதில் கொண்டு, பெண்ணை உணர்வற்ற பொருளாகவே பார்த்துள்ளமையையும் உணரமுடிகின்றது. அக்காலச் சமூகச் சூழலில் பெண்களுக்குப் போதுமான பாதுகாப்பற்ற நிலையினையே இப்பாடல் எடுத்துரைக்கின்றது.

பாலியல் வன்புணர்வு:

சங்க இலக்கியத்தில் தலைவன் ஒருவன், தான் மணந்து கொள்வதாகக் கூறி யாருக்கும் தெரியாமல் இன்பம் துய்த்துவிட்டு, பின்பு தலைவியை யாரென்றே தெரியாது என்று கூறியுள்ளதை, குறுந். 25ஆவது பாடல் விளக்குகிறது. மேலும், தற்போது இருப்பது போன்று உடற்பரிசோதனை, விந்தணுப் பரிசோதனை, மரபணுக்கள் (ஜீன்கள்) மூலமாகக் குழந்தையின் தந்தையினை அடையாளம் காணும் அளவிற்கு அக்காலத்தில் மருத்துவ வளர்ச்சி இல்லையாதலால் சாட்சிகள் மூலமே குற்றங்களுக்குத் தீர்வு வழங்கியுள்ளனர். எனவேதான் தலைவி தாங்கள் இன்புறும் இடத்தில் ‘குருகுமுண்டு’ என்று குருகினைச் சாட்சியாக்குகிறாள். ஆனால், அக்குருகும் ஒழுகுநீரில் ஆரல்மீன்களைப் பிடிக்கும் தன் வேலையில் கவனமாக இருந்தது. ஆகையால் தலைவன் என்னுடன் பேசிய மொழிகளையோ புணர்ந்ததையோ கண்டு, கேட்டிருக்க வாய்ப்பில்லை. ஒரு வேளை கண்டு, கேட்டு இருந்திருந்தாலும் அதனால் பேசமுடியாது. சாட்சிகள் யாரும் இல்லையாதலால், இனி தலைவன் தானே தன் குற்றத்தை ஏற்றுக் கொண்டு தண்ணளி செய்ய வேண்டுமே தவிர எனக்கு வேறுவழியில்லை என்று புலம்புவதிலிருந்து சங்கச் சமூகத்தில் பெண்களைப் புணர்ந்து மணம் செய்ய மறுத்த பாலியல் வன்செயல்கள் நடந்துள்ளதைக் காணமுடிகின்றது.

நச்சினார்க்கினியர் இப்பாடலை, “அவன் புணர்வு மறுத்தல்” என்னும் தொல்காப்பியக் களவியல் சூத்திரத்திற்குச் சான்றாக்கியுள்ளார். தன்னை ஏமாற்றிய தலைவனைச் ‘சான்றோன் இல்லை’ என்று அவனிடம் கூறிவருவோம் என்று தோழியை அழைப்பதாக நற். 365 ஆவது பாடல் அமைகிறது. செவிலித்தாய், தன் மகளின் காதலன் வேறு யாரையாவது மணந்துவிடுவானோ என்று ஐயுற்ற நிலையினை ஐங். 109ஆவது பாடல் எடுத்துரைக்கின்றது. எனவே சங்கச் சமூகத்தில் பாலியல் வன்முறைகள் இருந்துள்ளமை தெளிவாகிறது.

 பாலியல் வன்செயல்கள் பெருகியதால் ஏற்பட்ட சிக்கல்களும் பிரச்சினைகளும் திருமணம் எனும் கரணச்சடங்கைச் செய்யும் வழக்கத்தை ஏற்படுத்தியுள்ளதை,

“பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்,
ஐயர் யாத்தனர் கரணம் என்ப”

என்ற தொல்காப்பிய நூற்பா அக்காலச் சமூகத்தில் நிலவியிருந்த பாலியல் வன்முறைக்குச் சான்று பகர்கின்றது.

பாலியல் வன்புணர்வும் தண்டனையும்:

சங்ககாலத்தில் பாலியல் வன்புணர்வில் ஆடவர்கள் ஈடுபட்டுத் தண்டனை பெற்றதற்கான பதிவு சங்க இலக்கியத்தில் உள்ளது. ஒரு அழகிய பெண்ணின் நலத்தைக் கெடுமாறு கவர்ந்து இன்பம் துய்த்துவிட்டுச் சென்ற அறம் அற்றவனைச் சபையோர் முன்பு தலைவி நிறுத்துகின்றாள். அவன் இவளை யாரென்றே தெரியாது என்று பொய்யுரைக்கின்றான். அவன் உரைப்பது பொய் என்பதைத் தகுந்த சாட்சிகளின் வாயிலாக அறிந்த ஊர்ப்பெரியவர்கள் அப்பெண்ணின் நலத்தை அழித்த அவனை மரத்தில் கட்டிவைத்து தலையில் நீற்றினை (சுண்ணாம்பு நீர்) ஊற்றுமாறு தண்டனை வழங்கியுள்ளதை,

“திருநுதற் குறுமக ளணிநலம் வவ்விய
………………………………………
………………………………………
வீறுசா லவையத்து ஆர்ப்பினும் பெரிதே”                   (அகம்.256:16-21)

என்ற பாடலின் வழி சங்கச்சமூகத்தில் நிலவியிருந்த பாலியல் வன்புணர்வினையும் அதற்கு அளித்த தண்டனையும்  அறியமுடிகிறது.

தொல்காப்பியர் பெருந்திணையின் குறிப்புகளாக, ஏறிய மடல் திறம், இளமைதீர் திறம், தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம், மிக்க காமத்து மிடல் (தொல். அகத். 51) என நான்கினைக் குறிப்பிடுவார். இந்நூற்பாவிற்கு ஷாஜகான் கனி “ஒருத்தியின் காதலைப் பெறாத ஒருவன் ஊரறிய மடலேறி அவளுக்குப் பழி ஏற்படுத்தி வலிந்து அவளை இணங்க வைக்கும் சூழ்ச்சித் திறம், தனக்கு இளமைப் பாலியலுணர்வு தீர்ந்து போய்விட்ட மலட்டு நிலையிலும் ஒருத்தியைப் பாலியலாகத் துன்புறுத்துதல், பிறன் மனைமீது தேற்றமுடியாத காமத்தில் வேட்கையுறுதல், மிக்க காமத்தில் காணும் பெண்களிடமெல்லாம் வன்புணர்ச்சியை நாடுதல் ஆகிய நான்கும் பெருந்திணையின் அடையாளம் ஆகும் என்பது இந்நூற்பாவின் உண்மைப் பொருளாகும். இந்நான்கு வகைப் பெருந்திணையும் பாலியல் வன்முறை (sexual violence) எனத் தோன்றுகிறது” என்பதிலிருந்தும்  பாலியல் வன்முறை சங்கச் சமூகத்தில் ஊடுருவி இருந்துள்ளது என்பது தெளிவாகிறது.

***

துணை நின்ற நூல்கள்

 1. சிவலிங்கனார், ஆ., (தொ.ஆ.), தொல்காப்பியம் உரைவளம் – பொருளதிகாரம், களவியல், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 1994.
 2. சுப்பிரமணியன், ச.வே., தொல்காப்பியம்; (விளக்கவுரை), மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், 2008.
 3. சோமசுந்தரனார், பொ.வே., (உ.ஆ.), குறுந்தொகை, கழகவெளியீடு, சென்னை, 2007.
 4. நச்சினார்க்கினியர், (உ.ஆ.), கலித்தொகை, கழக வெளியீடு, 2007.
 5. துரைசாமிப்பிள்ளை, ஒளவை. சு. (உ.ஆ.), ஐங்குறுநூறு, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், 1978
 6. பின்னத்தூர் நாராயணசாமி அய்யர், நற்றிணை, கழக வெளியீடு, சென்னை, 2007
 7. வேங்கடசாமி நாட்டார், ந.மு., வேங்கடாசலம் பிள்ளை. ரா., அகநானூறு, மணிமிடைப்பவளம், கழக வெளியீடு, 2007
 8. வேங்கடசாமி நாட்டார், ந.மு., வேங்கடாசலம் பிள்ளை. ரா., அகநானூறு, நித்திலக்கோவை, கழக வெளியீடு, 2008
 9. ஷாஜகான் கனி, முனைவர், வெ.மு., திணை வரலாறு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 2012

***

பா. சிவக்குமார்,
முனைவர்பட்ட ஆய்வாளர்,
தமிழ்த்துறை,
பாரதியார் பல்கலைக்கழகம்,
கோவை, 641 046.

 

 

 

Print Friendly, PDF & Email
Share

Comments (1)

 1. Avatar

  துணிவான சிந்தனை வெளிப்பாடு! பாராட்டும் வாழ்த்தும்! 

  சங்கப்பாடல்களில் காதலின் வெற்றியை, தலைவனும் தலவியும் ஒன்றாக இணைந்து வாழும் இல்லறவாழ்வை, காட்டும் நிலை மிக அரிது. ஒருவருடன் ஒருவர் இணைய முயலும் முயற்சியையே பெரும்பாலான அகப்பாடல்கள் காட்டுகின்றன. இந்த நிலையை மேற்கொண்டு எடுத்துச்சென்ற பக்திப்பாடல்களில் இந்த “ஒருதலைக்காதல் நிலை” அல்லது “நிறைவேறாக் காதல் நிலை”யே வெளிப்படுகிறது. எல்லாமே நெய்தல் புலம்பல்கள்!

  முனைவர்பட்ட ஆய்வு சிறப்பாக நடக்க வாழ்த்து!
  http://www.letsgrammar.org
  http://mytamil-rasikai.blogspot.com
  http://viruntu.blogspot.com

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க