கற்றல் ஒரு ஆற்றல் 25

க.பாலசுப்பிரமணியன்

பேசும் கலை – சில அடிப்படை திறன்கள்

education

எனது நண்பர் ஒருவரிடம் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தால் எப்போது நாம் அந்த இடத்தை விட்டுச் செல்வோம் என்ற எண்ணம் ஏற்பட்டு விடும்!

அவர் பேசத் தொடங்கிய சில நிமிடங்களில “நான் நெப்போலியனோடு பேசிக்கொண்டிருந்தபோது” என்று அவர் ஆரம்பிக்கும் பொழுது நமக்கு இந்த நெப்போலியன் யார்” என்ற வியப்பு ஏற்படும்.

முன்னாள் பிரான்ஸ் நாட்டு மன்னரைப் பற்றி அவர் வர்ணனை செய்யும் பொழுது அவர் ஏதோ பக்கத்து வீட்டுக்காரர் என்ற எண்ணத்தை உருவாக்குவார். தம்மிடம் பேசிக்கொண்டிருக்கும் அனைவரும் வடிகட்டிய முட்டாள்கள் என்ற நினைப்போடு பேசுவார்.  ஒரு பரிதாபமான நபர்.!

பேசும்பொழுது எதைப் பற்றிப் பேசுகிறோம், யாரைப் பற்றிப் பேசுகிறோம் எதற்காகப் பேசுகிறோம் – என்றெல்லாம் எண்ணிப் பேசுதல் அவசியம். பேசும் பொழுதில் கேட்பவரின் அறிவுத்திறனையோ, வாழ்க்கைத்தரத்தையோ, கல்வி அறிவையோ குறைத்தோ மட்டமாகவோ அல்லது இணையற்றதாகவோ மதிப்பீடு செய்யக்கூடாது. ஒருவரின் அறியாமையை கேலிக்கூத்தாகவோ அல்லது ஏழ்மையின் அறிகுறியாகவோ எண்ணுதல் மிகத் தவறு.

பேசும்கலையின் அடிப்படையை அழகாக விளக்கிய ஆங்கிலக் கவிஞர் செகப்பிரியர் (Shakespeare)”Brevity is the soul of Wit”- சுருங்கச் சொல்லுதலே அறிவின் உயிர். என்று கூறியுள்ளார். “சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் ஒரு அருமையான கலை.கற்றலில் பேசும் திறன்களைப் பற்றி அதிகமாகச் சொல்லிக் கொடுப்பதில்லை. இதன் முக்கியத்துவத்தை நாமும் நம் கல்வி வல்லுனர்களும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. உதாரணமாக ஒருவரிடம் பேசும்பொழுது

  1. நாம் எந்த நிலையில் நின்று பேசிக் கொண்டிருக்கின்றோம்?
  2. எவ்வளவு தூரத்தில் நின்று பேசிக் கொண்டிருக்கின்றோம் ?
  3. நம்முடைய உடல்மொழி எவ்வாறு உள்ளது?
  4. நம்முடைய குரல் எவ்வாறு உள்ளது?
  5. நம்முடய குரல் கேட்பவர்கள் வரை முறையாகச் செல்கின்றதா?
  6. நாம் அதிவேகமாகப் பேசுகின்றோமா அல்லது மிக மெதுவாகப் பேசுகின்றோமா?
  7. நாம் பேசுகின்ற மொழியும் நடையும் மற்றவர்களுக்குப் புரிகின்றதா?
  8. நாம் ஈடுபாடோடு பேசுகின்றோமா அல்லது கவனச்சிதறல் உள்ளதா?

இது போன்ற பல கேள்விகளுக்கு நமக்கு நாமே பதில் தேடிக் கொள்ளவேண்டும்.

  • பொதுவாக பேசும் பொது உணர்ச்சி வசப்படுதல்,
  • உணர்ச்சிகளை தரமின்றி வெளிப்படுத்துதல்,
  • கேவலமாகவோ புண்படுத்தும் வகையிலே பேசுவதையோ அவசியம் தவிர்க்க வேண்டும்.

நம்முடைய உடல்மொழி மற்றும் முகபாவங்கள் நாம் சொல்லும் கருத்துக்களின் அடிப்படையை மட்டுமின்றி கேட்பவரின் உளநிலையையும் பாதிக்கும்.

மோப்பக் குழையும் அனிச்சம் முகம் திரிந்து

நோக்கக் குழையும் விருந்து “ என்ற வள்ளுவர் வாக்கு இதற்கு ஒரு நல்ல முன்னுதாரணம்.

“நம்முடைய சொற்கள் நமது தூதர்கள்” என்று சொல்லுவார்கள். நம்முடைய குணாதிசயங்கள், உள்நோக்கங்கள், பழக்க வழக்கங்கள், சமூக நோக்கங்கள் ஆகியவற்றை அவை தெள்ளத்தெளிவாக வெளிப்படுத்துகின்றன..

ஆகவே பேசுபவருடைய சொல்லாண்மை, சொல்லாட்சி, சொல்லாடல் ஆகியவை அந்தத் திறனை வளர்ப்பதற்கு அடிப்படைத் தேவைகள்.

“கண்டேன் சீதையை ” என்று அனுமன் சொல்லுவதாக கம்பன் எழுதியது கவிஞனின் சொல்லாடலின் உச்சநிலையை உறுதியாக வெளிப்படுத்துகின்றது. நாமும் பேசும் முன்னே கொஞ்சம் யோசித்துப் பேசுவோமா?

நம் குழந்தைகளுக்கும் பேசும் கலையின் அடிப்படைகளை முறையாக சொல்லிக் கொடுத்தாலென்ன?

தொடருவோம்

Share

Comments

2 responses to “கற்றல் ஒரு ஆற்றல் 25”

  1. நீலமேகம் ராமலிங்கம் சஹஸ்ரநாமன்

    பேசும் கலையை சுருக்கமாக விவரித்தமைக்கும், மற்றும் நம்முடைய சொற்கள் நமது தூதர்கள்” என்று கூறிய நண்பர் திரு. க. பாலசுப்ரமணியனுக்கு எனது உளமார்ந்த பாராட்டுக்கள்.
    நன்றி வணக்கம்.

  2. க.பாலசுப்ரமணியன்

    தங்கள் அன்பான கருத்துக்கும் பாராட்டுக்கும் என் உளமார்ந்த நன்றி 

    க. பாலசுப்ரமணியன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *